
நான் பகிர்ந்துள்ள கருத்துக்கள் அனைத்தும் நான் நேற்றுப் பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி என் மனதில் தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே.
இப்போ நாம திரு. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் கதை மற்றும் கதாபாத்திரங்களுக்குள் செல்வோம்.
நான் முப்பதாம் தேதியிலிருந்து இந்த திரைபடத்தின் விமர்சனங்கள் எல்லாவற்றையும் படித்து வந்தேன். புத்தகம் வாசிக்காதவர்களுக்கு படம் புரியாது, குழப்பமாக இருக்கும் அப்படி இப்படி என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தது. ஆனால் உண்மையில் அப்படி எதுவுமே இல்லை. படம் நன்றாக தெளிவாக தான் எடுத்திருக்கிறார்கள். காட்சிகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்தது. வந்தியத்தேவனும், ஆழ்வார்கடியானும் மறைந்திருந்து சூழ்ச்சியை பார்க்கும் காட்சி புத்தகத்தில் வந்ததைப் போலவே காட்சியாக்கப்பட்டிருந்ததாக தான் நான் கருதுகிறேன். இது போல சில காட்சிகளை சொல்லலாம். ஆனால் என்றுமே புத்தகத்தில் வந்த ஒரு கதை திரைப்படமாக்கப்பட்டால் அதில் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். அவர்களே அதை பொறுப்பு துறப்பில் சுவாரஸ்யத்திற்காக சில காட்சிகளை மாற்றி அமைத்திருக்கிறோம் என்று எழுதிக் காட்டுகிறார்களே! அதற்கு பின்பும் நாம் கல்கியின் கதையை அப்படியே திரையில் எதிர்பார்ப்பது முறையல்ல.
இப்படி நமது சோழ வரலாற்றையே மறந்துப்போக கூடிய ஒரு சந்ததி உருவாகும் என்று அந்த பகவான் எண்ணியதாலோ என்னவோ அதை மறந்திடாது வாழ்ந்த மக்கள் இருந்த காலங்களில் எல்லாம் அதை பல முறை முயற்சித்தும் படமாக்க முடியாது போயிற்று போல!! என்று தான் நினைக்கத்தோன்றுகிறது. ஒரு திரைப்படம் நமது சோழ வரலாற்றின் மீது ஓர் ஈர்ப்பை இப்போதிருக்கும் சந்ததியினருக்குள் புகுத்தியுள்ளதை நான் வரவேற்கிறேன். அதுவும் தமிழர்கள் மட்டுமல்லாது உலகளவில் நமது சோழர்கள் பற்றி பறைசாற்றும் விதமாக இப்படம் அமைந்துள்ளது அம்மண்ணில் பிறந்த நமக்கும் பெருமை சேர்க்கத்தான் செய்கிறது.
இசை எடுபடவில்லை. ஓரிரு இடங்களைத் தவிர காட்சிகளுடன் சேர்ந்து பயணிக்காது அது பாட்டுக்கு தனி டிராக்கில் ஓடிக்கொண்டிருந்தது வருத்தத்தை அளிக்கிறது. இளையராஜா இசையமைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமோ என்ற யோசனையை வரவழைக்கிறது.
வசன உச்சரிப்பில் கவனம் செலுத்தாது சற்று வருத்தத்தை அளிக்கிறது. உதாரணத்திற்கு “சோழ நாடு” என்பதை சோள நாடு என்று உச்சரிப்பது கேட்போரை முகம் சுளிக்க வைக்கிறது.
திரைப்படத்தில் நடித்த ஆண் நடிகர்கள் தொன்னூற்று ஒன்பது சதவீதம் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல கச்சிதமாக இருந்தனர் ஆனால் வானதி, நந்தினி கதாபாத்திரத்திற்கு ஒட்டவே இல்லை.
ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக இருக்கலாம் ஆனால் நந்தினியாக அவர்களை மனம் ஏற்கவில்லை. ஏன்னெனில் அவர் ஒரு அழகு பதுமை போல வலம் வந்தாரே அன்றி திரு. மணிரத்னம் அவர்கள் வடிவமைத்த வில்லிக்கேத்த முகபாவங்கள் ஒன்றுமே திரையில் பிரதிபலிக்கவில்லை. அரியணையை பார்க்கும் காட்சியை தவிர வேறெந்த காட்சியிலும் அவர் நடிக்க முயற்சிக்கக்கூட இல்லை என்பது வேதனையளிக்கிறது.
துளியும் பாவம் இல்லா முகம் அது
அதில் வில்லத் தனத்தை நாம் எங்கு தேடுவது? (வாசமில்லா மலரிது பாடல் போல பாடித்தான் பாருங்களேன்😜)
பாண்டியனுடன் நந்தினியை பார்த்ததும் கரிகாலரின் நடிப்பு சபாஷ் போட வைக்கும் ஆனால் எந்த உணர்ச்சியும் இல்லாத நந்தினியின் நடிப்பு அந்த முழுக் காட்சியையும் நூலறுந்த காற்றாடி போல சுவாரஸ்யத்தை குன்றச் செய்துள்ளது.
நந்தினி வந்த காட்சிகள் எதுவுமே திரைப்படத்தின் மற்ற காட்சிகளோடு துளியும் ஒட்டவில்லை. அவர் வந்த காட்சிகளில் எல்லாம் ஏதோ ஒரு பெரிய குறை இருப்பதை படம் பார்ப்பவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.
பழுவேட்டரையர்கள் இருவருமே பக்காவாக பொருந்தி இருந்தனர். ஆனால் பெரிய பழுவேட்டரையர் நந்தினியை கட்டியணைக்கும் போது ஏதோ கடனே என்று செய்ததைப் போல் இருந்தது. அதில் உணர்ச்சி துளியும் இருக்கவில்லை.
ஆழ்வார்கடியான் நம்பியாக நடித்த ஜெயராம், சொல்லிக்கொடுத்தை அப்படியே செய்திருக்கிறார். அவர் நடை உடை பாவனை எல்லாமே நன்றாக இருந்தது. மேலும் அவர் நந்தினியிடம் ஒரு செய்தியை தனக்காக கூறும் படி வந்தியத்தேவனிடம் கூறுவதாக தான் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அடுத்த காட்சியில் இருவரும் மீண்டும் சந்திக்கும் போது வந்தியத்தேவன் நம்பியிடம் ஓலைச்சுவடி பற்றி கேட்பான். அந்த இடம், காட்சி மற்றும் வசனத்தில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றியது. இதை மறுபடியும் பார்த்து தெளிவுபெற வேண்டுமென என் மனதின் எதிரொலி எனக்கு கேட்டது . பார்ப்போம் அதற்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டியது தான். திரு. ஜெயராம் போன்ற சிறந்த நடிகரை இன்னும் நன்றாக உபயோகித்துக் கொண்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
குந்தவையையும் அழகு பதுமையாகவே காட்டப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே நடிப்பும் எட்டிப்பார்க்க முயற்சித்துள்ளது என்பதில் மகிழ்ச்சியே. நந்தினி – குந்தவை சந்திப்பில் குந்தவைக்கே என் மதிப்பெண்கள். மேலும் குந்தவையாக நடித்தவர் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ கதாபாத்திரத்தோடு ஒத்துப் போகிறார். அந்த ஒற்றுதல் நந்தினியிடம் மிஸ்ஸிங்.
பூங்குழலியாக நடித்தவரும் நன்றாக நடித்துள்ளார்.
வந்தியத்தேவனாக கார்த்தி, கொடுத்த கதாபாத்திரத்திற்கேற்ப நன்றாக நடித்துள்ளார். ஆகவே குறை ஒன்றுமில்லை வந்தியத்தேவா. உன் புன்முறுவலும், கேலி, கிண்டலும் ரசிக்கும் படியாகவே இருந்தது.
ஆதித்த கரிகாலனாக நடித்த திரு விக்ரம் நடிப்பில் நம்மை சபாஷ் போட வைக்கிறார் என்றால் அது மிகையாகாது. நம்பி, அன்னியன், ரெமோ, கிருஷ்ணாவுக்கு இந்த கதாபாத்திரமும் மிகப் பொருத்தமாக இருந்தது. அவரும் அதற்கான நியாயத்தை நடிப்பின் மூலம் வழங்கியுள்ளார். ஆனால் அவர் முன்னாள் கதையை சொல்லும் போது தேவையில்லாமல் கேமிராவை ஆட்டோ ஆட்டென்று அட்டியதாக நான் உணர்ந்தேன். அதை தவிர்த்திருக்கலாமோ!!
இப்போது நமது ஹீரோகிட்ட வருவோம். பொன்னியின் செல்வரும் கைத்தட்டும் விதம் அவரது கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருந்தார். சும்மா அவரைப் பார்த்ததால் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். உண்மையிலேயே அவர் வந்த காட்சிகளில் எல்லாம் அவரைச்சுற்றி பலர் இருந்தும் நம் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்துள்ளார்.
இதெல்லாம் சரிங்க இதுல ஹைலைட்டே எனக்கு வந்த சந்தேகம் தான். திரு. கல்கி அவர்கள் எழுதி நான் படித்த பொன்னியின் செல்வன் கதையில் வந்த நம்ம பொன்னியின் செல்வன் பெயர் அருள்மொழி வர்மன் என்று படித்ததாக தான் ஞாபகம். ஆனால் படத்திலும் சரி அதன் கீழே ஓடிக்கொண்டிருந்த ஆங்கில வசன வரிகளிலும் சரி அருள்மொழி என்று திரு. கல்கி அவர்கள் வைத்த பெயரை அருண்மொழி என்று தான் கூறுகிறார்கள் எழுதியும் காட்டுகிறார்கள்! அது ஏன்? என்று நான் எங்களுடன் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வரிடமே இடைவேளை நேரத்தில் கேட்டேன். எனது அந்த கேள்வி சில மணித்துளிகள் அவருடன் உரையாட ஓர் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதற்குள் திரையரங்கிற்கு அவர் வந்திருப்பதை அறிந்த பலர் புகைப்படம் எடுக்க கூடினர். உடனே நான் அவரைப் பார்த்து அத்துனை நேரம் என்னோடு உரையாடியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு
“வேயிட்டிங் ஃபார் யூவர் என்ட்ரி” என்று நான் கூறியதும் உடனே அவர்
“இடைவேளை முடிந்ததும் நான் வருவேன் மிஸ் பண்ணாம பாருங்க” என்றார்.
அதற்கு நானும் “ஷுவர் ஷுவர்” என்று கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். ஆனால் அதன்பின் என் மனம் திரையில் இல்லை. என்னடா நாம படிச்சப்போ அருள்மொழி வர்மனா இருந்தவரு திரைபடத்துல நடிச்சதும் அருண்மொழி என்று மற்ற நடிகை நடிகர்களுக்கு இயக்குனர்கள் திரைப் பெயர் வைப்பதைப் போல செய்து விட்டாரோ இயக்குனர்!! என்ற எண்ணம் என்னை ஆட்கொண்டது. உடனே கூகுளில் தேடினேன். எல்லா இடங்களிலும் அருள்மொழி வர்மன் என்று தான் பதிவிடப்பட்டிருந்தது. அப்போது நான் படித்தது சரிதான் என்ற முடிவுக்கு வந்து திரையை நிமிர்ந்துப் பார்த்தால் அருள்மொழி மன்னிக்கவும் திரு மணிரத்னத்தின் அருண்மொழி வர்மன் வந்தியத்தேவனுடன் மும்முரமாக வாள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
அதன் பின் முழு படத்தையும் பார்த்துவிட்டு ஜெயம் ரவி அவர்களுக்கு ஒரு தம்ஸ்அப் காட்டிவிட்டு திரையரங்கில் இருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை என் கணவரிடம் அந்த பெயர் மாற்றத்தைப் பற்றியே புலம்பிக்கொண்டு வந்தேன்.
வீட்டிற்கு வந்ததும் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து பெயரை சரி பார்த்தேன். அப்பாடா நாம சரியாதான் கேட்டு இருக்கோம். ஆனால் இயக்குனர் ஏன் அப்படி அருண்மொழி என்று திரையில் கூறியிருக்கிறார் என்ற குழப்பம் எழ உடனே மீண்டும் கூகுள் பாட்டியிடம் கேள்வியை மாற்றிக் கேட்டேன் அவளோ “அருண்மொழி /அருள்மொழி பெயர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர் மணிரத்னம்” என்ற தலைப்பை பளிச்சிட்டாள். ஓ!!! இது ஏற்கனவே கேட்கப்பட்டுவிட்டதா!!! நாம் தான் கவனிக்காம படிக்கத் தவறிட்டோமென்று எண்ணிக்கொண்டே… அப்படி அவர் என்ன தான் சொல்லி இருக்கிறார் என்று படித்துப் பார்த்தேன். அவர் எதோ சோழர் செப்புத்தகடில் அருண்மொழி வர்மன் என்று தான் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தான் அவ்வாறு வைத்துள்ளார் என்றும் மேலும் அவர் அளித்த விளக்கத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. இதை சரி பார்க்க என்னால் ரூபாய் நாற்பதாயிரம் செலவழித்துக்கொண்டு இந்தியா வந்து ஆராய்ச்சி செய்ய இப்போது தோதுபடாது🙂 அப்படியே வைத்துக்கொண்டோமே/ ஏற்றுக்கொண்டோமே என்றால் திரு. கல்கி அவர்கள் அருள்மொழி என்று எழுதியிருப்பது தவறா!!!! இல்லை அவர் கதையை அச்சடித்து புத்தகமாக தந்தவர்கள் மீது தவறா? இதை யாரிடம் கேட்பது? யாம் அறியோம் பராபரமே!!
இயக்குனரான அவர் அதற்கான என்ன விளக்கம் அளித்திருந்தாலும் சரி, திரு. கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினக் கதா நாயகன், நான் படித்த அருள்மொழி வர்மன் என்ற பெயர் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதுவே மனதிலும் நிலைத்திருக்கிறது. கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மன் வாழ்க வாழ்க!!
ஒரு திரைப்படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் இது போன்ற கதைகளை திரைக்கு கொண்டு வருவதென்பது இமாலய முயற்சி. அதை நன்றாகவே செய்திருக்கிறார் இயக்குனர். அப்படிப்பட்ட முயற்சிக்கு பலே என்று தான் சொல்ல வைத்திருக்கிறது திரைப்படம்.
– நா. பார்வதி