
தீவிர ரஜினி ரசிகையான நான் எப்போதும் போலவே அவருக்காகவே/அவரை திரையில் பார்ப்பதற்காகவே இந்த படத்தை பார்க்க சென்றேன். அவரும் எப்போதும் போலவே என்னைப் போன்ற ரசிகர்/ரசிகைகளை ஏமாற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆமாங்க யாரு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லட்டும் இந்த வயசுலையும் அவரு திரையில் வந்தா அங்க வேற யாரையும் நம்ம கண் பார்க்காது. படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை விசில் சத்தமும், கைத்தட்டல்களும், தலைவா என்ற கோஷமும் தான் திரையரங்கம் முழுவதும் ஒலித்தது. என்னைப் பொறுத்தவரை எழுபத்து ரெண்டு வயதிலும் இப்படி ஒரு வரவேற்பு, இனி எந்த நடிகருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.
வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகலன்னு நீலாம்பரி இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்னால் சொன்னது இரண்டாயிரத்து இருபத்தி மூன்றாம் ஆண்டான இன்றும் இந்த படத்தில் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது.
சரி, இப்போ நம்ம இயக்குனர் திரு. நெல்சன் அவர்களின் ஜெயிலர் தியைப்படத்திற்கு வருவோம்.
இந்தப் படத்தில் ரஜினியின் ஆரம்ப காலத்திலிருந்து அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் பலவற்றின் பிரதிபலிப்பு இருக்கிறது. அபூர்வ ராகங்கள் படத்தில் கேட்டை திறந்துக் கொண்டு வரும் பாண்டியன், ஆறிலிருந்து அறுபது வரை சந்தானம், தம்பிக்கு எந்த ஊரு பாலு, அண்ணாமலை என அடுக்கிக்கொண்டே போகலாம்.
தாத்தாவும் பேரனுமாக அடிக்கும் லூட்டி காண்போரை ரசிக்க வைக்கிறது. பேரனாக நடிக்கும் சிறுவன் ரித்விக் மிக அருமையாக நடித்திருக்கிறார். இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறார்.
தனது மகன் இனி இல்லை என்று அறிந்த அந்த தருணம் தலைவர் நடிப்பு தனித்துவம். மேலும் அதனால் உறக்கமின்றி பழிவாங்க புறப்படும் அப்பா அபாரம். யோகிபாபுவுடனான காம்பினேஷன் கலக்கல். இறுதியில் தப்பு யார் செஞ்சாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை எடுத்துரைக்கும் காட்சியில் அவரின் நடிப்பில், தான் செய்தது சரி என்றும் அதே நேரம் பாசத்தின் வெளிபாடும் கலந்து வெளிப்பட்டதும் அரங்கத்தில் கரகோஷம் அடங்கவே சற்று நேரம் எடுத்தது.
அனிருத் இசை அரங்கை அதிர வைக்கிறது.
இடைவேளை வரை விருவிருவென நகர்ந்த படம் அதன் பின் சற்று இழுபறியாக இருக்கிறது என்பது எனது கருத்து. படத்தில் தலைவரின் ஃபிளாஷ் பேக் மிக அழகாகவும் சுருக்கமாகவும் காட்டப்பட்டிருக்கிறது. ஃபிளாஷ் பேக்கில் ரஜினியின் மேக் கப் பிரமாதம்.
கதை என்னவோ மகனின் இழப்புக்கு பழிவாங்கும் தந்தையின் கதை போல் தான் நகரும். ஆனால் அதன் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது. அந்த ட்விஸ்ட்டை இன்னும் கொஞ்சம் ஆழமாக பதிய வைத்திருக்கலாம் ஆனால் அதை மேலோட்டமாக காண்பித்து முடித்து விட்டுவிட்டது ஏதோ கதையில் பெரும் தவறு போல் தோன்றுகிறது. மொத்தத்தில் கதையில் ஆங்காங்கே சில கேள்விகள் எழத்தான் செய்கிறது.
அனைத்து ஹீரோக்களையும் வைத்து படம் எடுக்கணும்…
ஆனா தனித்தனியா இல்ல ஒரே கதையில் எல்லாரும் வரணும் அப்படீங்கறத்துக்காகவே கதை பின்னப்பட்டிருக்கிறது அப்பட்டமாக தெரிகிறது. மார்வெல் படங்களில் வருவது போல…
திரு. ஜாக்கி ஸ்ராப், திரு. ஷிவ ராஜ்குமார் மற்றும் திரு. மோகன்லால் ஆகியோர் சிறிய வேடங்கள் ஏற்று நடித்திருந்தாலும் அவர்களுள் திரு. லால் தான் மனசில் நிற்கிறார்.
திரு. யோகிபாபு அவர்களின் நடிப்பு எதார்த்தம் மற்றும் எகத்தாளம் நிறைந்ததாக இருக்கிறது. அவர் பாரதியார் சொன்னதாக சொல்வது காமெடியாக இருந்தாலும் அவரை எப்படி அப்படி சொல்ல விட்டார் இயக்குனர் என்று எண்ணி முடிக்கும் போது அதற்கு தக்க பதில் கொடுக்கிறார் தலைவர். அப்போது வாயை மூடும் யோகிபாபு அதன் பின் பாரதியை தொந்தரவு செய்யவில்லை.
வில்லனாக வரும் வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் திரு. வினாயகன் நடிப்பு சிறப்பு. தரமான வில்லன் தர்மம் கேட்டு பத்து ரூபாய் வாங்கி நிமிர்ந்து பார்க்கும் பார்வையில் வெளிப்படுத்தும் வஞ்சம் அபாரம்.
ஒரே ஒரு பாடலுக்காகவும், மூன்று சீன்களுக்காகவும் மட்டுமே வரும் தமன்னா அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை குறையேதுமின்றி சிறப்பாக செய்துள்ளார். இருந்தும் பாவம் படத்தோடு ஒட்டவில்லை.
இங்கு நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா…
இந்த படம் வெளிவருவதற்கு முன்னால் தமன்னா வரும் அந்த பாடல் “காவாலயா” பெரும் ஹிட் ஆச்சு இல்லையா. அப்போ ஒரு தோழர் அந்த பாடலையும் அதில் திரு ரஜினி அவர்களின் டான்ஸையும் கேலி செய்து ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். ஆக்சுவலி ஏன் ரஜினி அப்படி ஒரு ஸ்டெப் போடுகிறார் என்றும் அந்த பாட்டில் ஏன் அவர் அப்படி ஒட்டாது இருக்கிறார் என்றும் படத்தைப் பார்த்தால் நமக்கு புரியும்.
ரம்யா கிருஷ்ணன் இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு எப்படின்னு படம் பார்த்தவர்கள் பதிவிடுங்கள். வேற ஒன்னும் சொல்லுறதுக்கில்ல.
ரஜினியின் மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவியும் என்னைப் பொருத்தவரை அந்த கதாபாத்திரத்தில் ஒட்டவில்லை.
திரு சரவணன் மிக அனாயாசமாக அவர் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். ஆனால் அவர் அந்த சிலை கடத்தல் கூட்டத்திற்கு கொடுக்கும் பில்ட் அப் கொஞ்சம் கதையிலும் இருந்திருக்கலாம். கதையை மேலோட்டமாக சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ளும் படி இல்லை… சரி என்ன செய்ய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நபர்களுக்கு முக்கியத்துவம் குடுக்க வேண்டுமெனில் சற்று கதையை மேலோட்டமாக தான் காட்ட முடியும் போல!
விடிவி கணேஷ் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக செய்துள்ளார். ஆனால் அவர் வரும் இடத்தில் கதை தான் நம்பும் படி இல்லை. மேலும் ரஜினியின் குடும்பத்தினர் எந்த கேள்வியும் கேட்காது இருந்தது நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. நடந்தே பெங்களூர் சென்றுவிட்டதாக கூறுவதையும், வில்லன் வந்து கதவை தட்டி பத்து ரூபாய் பிட்சை கேட்டதையும் எவ்வித கேள்வியும் எழுப்பாமல் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்! இப்படியுமா இருப்பார்கள்!
படம் என்ன சொல்ல வருகிறது
மகனின் இழப்புக்கு பழிவாங்கும் தந்தையை பற்றியா
சிலை கடத்தல் கும்பல் பற்றியா
ஆந்திரா கோவிலில் இருக்கும் அந்த கிரீடத்தின் வரலாறு பற்றியா
பக்கத்து மாநிலங்களின் ஹீரோக்கள் பற்றியா
இல்லை ஜெயிலர் ஆக இருந்தால் அனைத்து பெரும் ரவுடிகளுடன் எளிதாக கனெக்ட் ஆக முடியும் என்பது பற்றியா?
மொத்தத்தில் திரு நெல்சன் எழுதி இயக்கிய ஜெயிலரிடம்
லாஜிக் இருக்கு ஆனா இல்ல!
கட்டாயம் மேஜிக் இருக்கு
அந்த மெஜிஷியன் நம்ம தலைவர் தான்.
ஏன்னா மூன்று மணிநேரம் போனதே தெரியலையே!
இது போல் இனி வரும் படங்களில் முக்கிய குணசித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்து அதில் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களுடன் இணைந்து திரு அமிதாப் போல் நடித்து வந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.
ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற ஐயம் இனி இயக்குனர்களுக்கு துளியும் வேண்டாம். நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். தாத்தாவாக காண்பித்தும் ஏற்றுக் கொண்டு விட்டோமே பின்பு எதற்கு ஐயம்.
தாத்தா ஆனாலும் சரி கொள்ளு தாத்தா ஆனாலும் சரி தலைவர் எப்பவுமே தலைவர் தான். அவருக்கு நாங்க எப்பவுமே ரசிகர்கள் தான்.
ஜெயிலர் ஜெயிப்பார்.
-நா. பார்வதி