காளான் 🍄

“நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்”

பழைய மொழி என்றாலும் இப்போது நம்மூர் உணவகங்களின் உணவுப்பட்டியல் அட்டையில்  முளைத்திருக்கும் இதன் வகைகளை பார்க்கும் போது “அட ஆமாம்” என்று தான் சொல்ல தோன்றுகிறது.

ஒரு பத்து வருடங்களுக்கு முன் தேங்காய் சட்டினி என்றால் அதில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சைமிளகாய் மற்றும் உப்பு தான் இருந்தது. மெல்ல அதில் பூண்டு சேர்க்கப்பட்டது. இப்போது நம்மூரில் இருக்கும் பெரும்பாலான   உணவகங்களில் இந்த பூண்டு தேங்காய் சட்டினி தான் எல்லா பதார்த்தங்களுக்கும் பரிமாறப்படுகிறது. அதை நம்மவர்கள் பெருமிதத்தோடு ஏற்றுக்கொண்டு விட்டார்களா? இல்லை வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களா!

பின்பு மெல்ல வட இந்திய உணவான சென்னா மசாலா உள் நுழைந்தது. அதனை தொடர்ந்து சாட் ஐட்டம்ஸ், சப்ஜி, ரொட்டி, நான் வகைகள் என பின்னாளில் அதுவே நமது உணவகங்களின் உணவுப்பட்டியல் அட்டையை ஆக்கிரமிப்பு செய்தது. இப்போது உணவகங்கள் மட்டுமின்றி பல திருமண நிகழ்வுகளில் கூட இவைகளே வழங்கப்படுகிறது.

ஆனால் நாம் வட இந்தியாவிற்கு சென்றோமேயெனில் ஒரு சில நகரங்களை தவிர மற்ற எங்குமே நமது தென்னிந்திய உணவு கிடைப்பது மிக மிக அரிதான ஒன்றாகும். எங்கு சென்றாலும் அவர்கள் ஊர் பதார்த்தங்கள் தான் கிடைக்கும். அதே போல் அவர்கள் திருமண விழாக்களில் நமது தென்னிந்திய உணவு வகைகளை புகுத்தாது அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளையே இன்றளவும் வழங்கி வருகிறார்கள். அவ்வாறு அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளை வழங்குவதில் அவர்கள் யாரும் கௌரவ குறைச்சல் என்று எண்ணாததால் தான் இன்றளவும் மாறாமல் இருக்கிறார்களோ? சிந்திக்க வேண்டிய விஷயம்…

வட இந்திய உணவை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் இடம்பெற ஆரம்பித்த இந்த “காளான்”, தனது முதல் அடியை சூப்பில் இருந்து துவங்கியது. பின் அதற்கான தனி இடத்தை உணவகங்களின் உணவு பட்டியலில் பெற்றது. இப்போது எங்கும் “காளான்” எதிலும் “காளான்” என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. சென்ற மாதம் நமது சென்னையில் பல கிளைகள் வைத்து இயங்கி வரும் பிரசித்தமான உணவகம் ஒன்றில் மத்திய உணவு உண்ண சென்றிருந்தோம். அனைவருக்கும் மீல்ஸ் ஆர்டர் செய்து காத்திருந்தோம். மீல்ஸ் வந்தது. அதில் ஒன்றில் இந்த மஷ்ரூம் எனப்படும் காளான் இருந்தது. உடனே அந்த ஹோட்டல் மேலாளரை அழைத்து “முதலில் தேங்காய் சட்டினியில் பூண்டு சேர்த்தீர்கள் , பின் வட இந்திய உணவுகளை திணித்தீர்கள் அவைகளை தட்டிக் கேட்காததால்  இந்த காளானை இணைக்க துவங்கியுள்ளீர்களா?” என்று  கேட்டதற்கு, “காளான் ஒரு வெஜிடபிள் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது அதனால் தான் நாங்கள் உணவில் சேர்த்தோம்” என்றார்.

இது என்ன அந்நியாயம்? இதை யாரும் கேட்கவில்லையா? பூண்டு, வட இந்திய உணவு, காளான் ஆகிய உணவு வகைகளை சாப்பிடக் கூடாது என்றோ அல்லது அவை உணவகங்களில் விற்பனை செய்யக்கூடாது என்றோ நான் கூறவில்லை. ஆனால் அவற்றை சேர்ப்பதற்கு முன் உணவருந்த வருபவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு பறிமாறலாமே என்று தான் சொல்ல விழைகிறேன்.

இன்னமும் நமது தென்னிந்திய பாரம்பரிய உணவு வகைகளை மதிப்பவர்களும், உண்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அந்த மேலாளரிடம் சொல்லிவிட்டு உண்ணாமல் எழுந்து வந்தோம். இதை, பூண்டு உள் நுழைந்ததும் செய்திருக்க வேண்டுமோ? 

கண்ட இடத்தில் கண்டபடி வளர்ந்து வந்த காளானுக்கு கை கால் முளைக்கச் செய்து சமையலில் ஒரு அந்தஸ்த்தை கொடுத்து கௌவுரவப்படுத்தி வருகின்றனர் நம்ம ஊர் உணவகங்கள். காளான் வளரும் இடத்தை வைத்து அதற்கு வட இந்தியர்கள் வைத்திருக்கும் பெயர் “குக்குர்முத்தா” (இதன் அர்த்தம் தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சுக்கோங்க).

நமது நாட்டில் நல்ல‌ காய்கறிகளுக்கு பஞ்சம் வந்துவிட்டதா? இல்லை நம்மூர் காய்கறிகள் உண்டு அலுத்து விட்டதா? நாம் ஏன் நமது பாரம்பரிய உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்? இல்லை நமது பாரம்பரிய உணவு உட்கொள்வதை கௌரவ குறைச்சலாக நினைக்க வேண்டும்? 

பாரம்பரிய உணவுகளையும், முறைகளையும், கலாச்சாரத்தையும் மாற்றி அமைத்துக் கொள்ள முயன்றால் அங்குமில்லை இங்குமில்லை என்ற திரிசங்கு நிலைமை தான் உருவாகும்.(அது உருவாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன என்று உங்கள் உள்ளக் குமுறல் கேட்கிறது) அதற்காக இவைகளை உண்ணக்கூடாது என்றோ இல்லை சுவைக்க கூடாதென்றோ நான் கூறவில்லை. அதை எல்லாருக்கும் திணிக்காதீர்கள் என்று தான் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அந்தந்த ஊர் அதன் சீதோஷ்ண நிலை எல்லாம் வைத்துதான் அந்தந்த ஊருக்கான உணவு பழக்கவழக்கங்களை நம் முன்னோர் வகுத்து வைத்துள்ளனர்.  நாகரீகம் என்ற பெயரில் முன்னோர் வாக்கு, முன்னோர் பழக்கவழக்கங்களை புறக்கணித்து விட்டு இப்போது குதிரைவாலி அரிசி, ராகி என்று கட்டிப்புறல்வதும் ஏனோ! அவற்றை விளம்பரபடுத்தி அதிலும் கலப்படம் செய்ய முயல்வதும் ஏனோ!

தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்ட இந்த “காளான்” நமது உணவகங்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பது நல்லதா?

வீட்டு உணவே மருந்து. அதை வீட்டில் சமைத்து உண்பதே அருமருந்து.

Leave a comment