
புதுமைப்பித்தன் கதைகள்
“செல்லம்மாள்”
கதையின் நாயகியான செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனதும்
உற்றார் உறவினருக்கு ஐநூறு மைல் தூரத்தில் தன்னந்தனியாக அவளின் உயிரற்ற உடலுடன் இருந்த
பிரமநாயகத்துக்கு வியர்வை மழை போல் மேனி முழுவதும் பொழிந்தது
அது பெருக்கெடுத்து ஏரியை உடைத்து பாய்ந்து வரும் ஆறாகவும் மாறியது
இருந்தாலும் அதை துடைத்துக் கொண்டு
சகதர்மிணியின் மரணப் பிரிவினால் நிலைகுலையாது
தன்னவளுக்கு அவளின் துன்பச் சுமையில் இருந்து விடுதலை கிடைத்ததை எண்ணி அவர் மனம் நிம்மதி பெருமூச்சு விட்டது.
அப்படி என்ன அவளின் துன்பச் சுமை? எதனால் அவர் அவ்வாறு எண்ணுகிறார்? என்பதை விளக்கும் கதை தான் செல்லம்மாள்.
அவ்வாறு எண்ணி நிம்மதியடைய பிரமநாயகம் யோகியோ அல்லது போதி மரத்தடியின் ஞானியோ அல்ல
வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை கடந்து வந்ததில் அவருக்கு ஏற்பட்ட மன பக்குவம்
அவரை அந்நிலையிலும் நிலை குலையாமல் இருக்கச் செய்துள்ளது.
கதை மெல்ல பிரமநாயகத்தின் குடும்ப விவரங்களை விவரிக்கிறது.
குடும்பத்தில் நான்காவது பிள்ளையான பிரமநாயகம் படிப்பில் சுட்டி என துவங்கி அவரது பால்ய பருவத்தை சற்றே மேற்கோளிட்டு காட்டி அப்படியே செல்லம்மாளை கரம் பிடித்த நாளுக்கு நகர்கிறது.
திருமணமான சில நாட்களில் பிரமநாயகத்தின் தகப்பனார் இறைவனடி சேர்கிறார். சொத்தை பங்குப்பிரித்தல் என எக்காலத்திலும் நடக்கக்கூடிய விஷயங்களை ஒரே பத்தியில் மிக அழகாக விளக்கி, அவர் செல்லம்மாளுடன் சென்னை வந்து சேர்ந்ததும் பிரமநாயகத்தின் பிறந்த வீட்டின் கதை அத்துடன் நிறைவுறுகிறது.
அதன் பின் பிரமநாயகம் செல்லம்மாள் தம்பதியரின் சென்னை வாழ்க்கை, அதில் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், துன்பங்கள், ஏற்ற தாழ்வுகள் மற்றும் செல்லம்மாளின் வியாதி என அனைத்தும் ஒரு சேர அவர்களை அக்னி பரீட்சை செய்ததாக எழுத்தாளர் ஒவ்வொரு விஷயங்களையும் சம்பவங்களையும் குறிப்பிட்டு இருப்பதை வாசிக்க வாசிக்க வாசகர்களும் அவ்விருவரின் உணர்வுகளை உணரும் விதமாக கதை இருக்கிறது.
அதனை தொடர்ந்து, நோய்வாய் பட்டிருக்கும் தன் மனைவியின் எண்ண ஓட்டங்கள் அவர்களுக்குள்ளே நடக்கும் பேச்சு வார்த்தைகள், கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் உபசரனைகள், கணவனுக்கு எதுவும் செய்ய முடியாது இப்படி நோய்வாய்ப்பட்டு கிடக்கிறோமே என்கிற செல்லம்மாளின் மனத்தவிப்பு, அதெல்லாம் ஒன்றுமே இல்லை உனக்கு நான் இருக்கிறேன் என்று அந்த கணவனின் கவனிப்பு வாசிப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.
பிரமநாயகத்தின் முதலாளி மற்றும் அவர் பிரமநாயகத்துக்கு செய்யும் உதவிகள் பற்றிய விவரங்களையும், மருத்துவர் வருகை, அந்த காலத்தில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எப்படி ஊசி போடுவார்கள் போன்ற தகவல்களையும் இக்கதை நமக்கு உரைக்கிறது.
செல்லம்மாள் என்ற பெண்ணை அக்னியை வலம் வந்து மண முடித்த நாளில் இருந்து அவள் தலைக்கு மேல் அக்னி விளகொன்று ஏற்றி வைத்து,
அவள் உயிருடன் இருந்த போதும் அவளுக்கான பணிவிடைகளை செய்த பிரமநாயகம் அவள் உயிரற்ற உடலுக்கும் செய்யவேண்டிய உன்னதமான பணிவிடைகளை செவ்வனே செய்து
அன்று வரை அனைத்தும் அவளென அவளுக்காக வாழ்ந்து
கதையின் தலைப்பையும் செல்லம்மாளுக்கு தாரைவார்த்து கொடுத்தாலும்
வாசகர்கள் மனதில் பிரமநாயகம் தான் பிரம்மிப்பூட்டும் வகையில் இடம்பெற செய்துள்ளார் எழுத்தாளர்.
மேலும், ஒரு பெண்ணை திருமணம் செய்து அவள் வாழ்வு நறுமணமாவதற்கு ஒவ்வொரு ஆணும் வெளியே அவர்கள் படும் பாட்டையும் அதை மனைவியிடம் வெளிப்படுத்திக் கொள்ளாது அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நினைக்கும் அவர்களின் மனதையும்
அந்த பயணத்தில் அவர்களுக்கு ஏற்படும் ஏற்ற தாழ்வுகளையும்
அவற்றை எதிர்கொள்வதனால் அவர்கள் மனம் அடையும் பக்குவத்தையும்
அதனால் அவளுக்கு அவன் செய்யும் பணிவிடைகளையும்
அது அவளின் இறுதி காலம் வரை நிலைத்திருப்பதையும் மிக மிக அழகாக எழுதி சிறப்பான சிறுகதையாக நமக்கு வழங்கி நமது வாசிப்பை ஓர் உணர்வு பிரவாகமாக மாற்றும் நம் புதுமைப்பித்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றேன்.
இந்த கதையை படிப்பவர்களின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீராவது நிச்சயம் வரும். இந்த காலத்து பிள்ளைகள் இதை படித்தல் நல்லது. ஏனெனில் இந்த கதை அவர் எழுதியது 1933 டூ 1948க்குள் இருக்கும். அந்த காலத்திலேயே ஒரு பெண்ணை/ மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் கதை இது. இது நிச்சயம் அவர் அறிவுரையாக சொல்வது போல் கதைப் படித்த எனக்கு தெரியவில்லை. அந்த காலத்தில் இப்படித்தான் நடத்தியிருப்பார்கள் அதை பார்த்ததால் தான் அவர் இவ்வாறு எழுதி இருப்பார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
இந்த காலத்திலும் அதாவது 2024 ல் கூட மனைவியை எப்படி நடத்த வேண்டும் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்றெல்லாம் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. பகிர்ந்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த கதை எழுதி சுமார் 75 அல்லது 90 ஆண்டுகள் ஆகிறது. அப்போதே தன்னை நம்பி கரம் பிடித்தவளை
இயற்கை பிரிக்கும் வரையும்
அவளை
இயற்கையோடு இணைக்கும் வரையும்
அவளை மணமுடித்தவன் நடந்துக்கொள்ளும் பாங்கை மிக எளிய உரைநடையில் சில வர்ணனைகளுடன் ஓடைநீர் போல் அமைதியாக அவ்வப்போது சில சலசலப்புடன் நகரும் கதை இது.
வாசித்தால் நேசிக்க வைக்கும்.
பாசத்தால் யோசிக்க வைக்கும்.
யோசித்தால் தற்கால நடப்புகளை எண்ணி வருந்த வைக்கும்.
வருந்தினால் மனம் திருந்த வைக்கும்.
திருந்தினால் வாழ்க்கையை சிறக்க வைக்கும்.
என்று புதுமைப்பித்தன் கதைகள் என்ற நூலில் இருந்து நான் படித்த செல்லம்மாள் என்ற கதையை பற்றிய என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளேன். படித்து பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்வது
உங்கள் சகோதரி நா. பார்வதி.
🙏நன்றி🙏