மையின் சாரல்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். எனது இந்த புத்தக வெளியீட்டு விழாவின் போதும், அதன் பின் குறுஞ்செய்தி மற்றும் கைப்பேசியில் என்னை அழைத்தும், “இழுக்கும் மாயோள்” அப்படின்னா என்ன? என்றும் அதை ஏன் கதைக்கு தலைப்பாக வைத்திருக்கிறீர்கள்? என்றும் சிலர் என்னிடம் கேட்ட கேள்வியை எனது முகநூல் நண்பர் ஒருவர் எனது முகநூல் பக்கத்தில் இன்று கேட்டுள்ளார். அது மட்டுமல்ல கதைக்கு ஏன் எழுத்தாளர் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளார்? என்றும் எதனால் அப்படி ஒரு தலைப்பு வைத்திருக்கக் கூடும் என்றும் முனைவர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்களே கேள்வியும் கேட்டு அதற்கான பதிலும் சொல்லி, அதுவாக தான் இருக்கும் என்று நினைப்பதாக விழாவில் கூறினார். அவரது கணிப்பு சரி தான்.(பிழையாக வாய்ப்பு உண்டா என்ன?) என்றாலும் அதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டிய கடமை கதையை எழுதிய எனக்கு இருக்கிறதல்லவா. இதோ அதற்கான எனது விளக்கம்…
“இழுக்கும் மாயோள்” – மாயன், மாயோன் என்ற பெயர்கள் எல்லாம் கிருஷ்ணர், கண்ணன் அல்லது திருமாலை குறிக்கும் பெயர்கள் இல்லையா. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். எனது கதையில் மாயோன் செய்த மாயைகளை மாயோள் செய்கிறாள். எனது நண்பரை போலவே மாயோள் ன்னா? அப்படின்னு கேட்டவர்களும் உண்டு. மாயோள் என்றால் பெண், கருநிறமுடையவள் என்று பொருள்படும்.
அதாவது கருங்கல்லில் ஒளிந்திருக்கும் சிற்பத்தை வெளிக்கொண்டு வரும் வித்தகன் போல் வெளிவர முடியாதவாறு மறைந்திருக்கும் உண்மையை/ ஓர் அழகிய சிற்பத்தை ஒரு புத்தகம் மூலம் வெளிக்கொண்டு வருவதே எனது மாயோள் செய்யும் மாயம்.
அவளின் மாயையில் வாசகர்கள் இழுத்துச் செல்லப்படுவது நிச்சயம்.
கதைக்கு இந்த தலைப்பை தேர்ந்தெடுத்ததற்கான விளக்கத்தை விளக்கி அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறேன்
என்ற நம்பிக்கையில்
உங்கள் சகோதரி…
நா. பார்வதி
🙏நன்றி🙏