கடவுளின் அருள், பெரியவர்களின் ஆசி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்த்து என அனைத்தும் ஒன்று சேர்ந்து “இழுக்கும் மாயோள்” புத்தக வெளியீட்டு விழாவை சிறப்புற செய்தது என்பதை எனது வலைத்தள வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயற்தமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என முத்தமிழும் ஒன்றாக இணைந்திருந்த மேடையில் நான் நின்று பேசுவதற்கே என்றோ எங்கோ மாதவம் செய்திருக்க வேண்டும். இதில் முத்தமிழின் முத்துக் கரங்களால் எனது புத்தகம் வெளியிடப்பட்டது என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடந்தேறியது என்றால் அதற்கான அனைத்து சிறப்புகளும் விழாவுக்கு வருகை தந்து புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றிய சிறப்பு விருந்தினர்களையே சேரும்.
கலைமாமணி திருமதி. பாரதி திருமகன், கல்லூரி முதல்வர் முனைவர் திரு. திருமகன், முனைவர் திரு. கலைமகன் மற்றும் அவர் குழுவினர் என அனைவரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்து, “இழுக்கும் மாயோள்” கதைக்கு ஓர் கதை இயற்றி, கதையில் வரும் கதாபாத்திரங்களில் திருமதி பாரதி திருமகன் அவர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்தை விவரித்து, அதில் அவர் மனதை தொட்ட விஷயங்களையும், ரசித்த பக்கங்களையும், கதை சொல்லாமல் சொன்ன கருத்துக்களில் அவர் விரும்பிய கருத்துக்களையும் மிக அழகாக வில்லுப்பாட்டில் இசைத்து, பாடி, வாழ்த்தி பார்வையாளர்களை நெகிழ வைத்ததோடு, மகிழ்ச்சியில் என் கண்களையும் நனைய செய்தார்.
கலைமாமணி முனைவர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் கதையின் உரைநடை வடிவம் பற்றியும், கதையில் அவருக்கு மிகவும் பிடித்த வரிகளையும், கதையை முடித்திருந்த விதத்தையும், தலைப்பை பற்றியும் சில பிரபலமான சிறுகதைகளை அதற்கு எடுத்துக்காட்டாக கூறி, அத்துடன் சில விமர்சனங்களையும் எடுத்துரைத்து அனைவரும் ரசிக்கும் படியாக சிறப்புரையாற்றினார். இத்தகைய மேதையின் சொற்பொழிவுகளை நேரில் கேட்க வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் சில மணி துளிகள் என்றாலும் அவரின் சிறப்புரையை அரங்கில் இருந்து கேட்கும் நல் வாய்ப்பு கிடைத்ததற்கும், எனது “இழுக்கும் மாயோள்” புத்தகத்திற்கு ஓர் சிறந்த மனிதரிடம் இருந்து சிறப்புரை கிடைத்ததற்கும், நானும் என் புத்தகமும் பாக்கியம் செய்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
நாடக எழுத்தாளர், இயக்குனர் தயாரிப்பாளர், கோமல் தியேட்டர் நிறுவனர் திருமதி. தாரிணி கோமல் அவர்கள், “இழுக்கும் மாயோள்” புத்தக வாசிப்பு அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்துக் கொண்டார். புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்ததும் கீழே வைக்க விடாது முழுவதும் வாசிக்கச் செய்த கதையின் விறுவிறுப்பு தன்மையையும், கதையின் இறுதி ட்விஸ்ட் பற்றியும், அதில் வந்த கருப்பு நிற பட்டாம்பூச்சிகள் அன்று இரவு முழுதும் அவர் கனவில் வந்ததையும், இழுக்கும் மாயோள் கதை நல்ல வெப் சீரிஸ் எடுக்கத் தக்கதாக இருப்பதாகவும் கூறி வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நெறியாளுநர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செய்து தந்தார் டாக்டர் திருமதி பிரபா குருமூர்த்தி. பல விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் சொந்தகாரரும், நமது கலைமாமணி திரு. டி. ஆர். மகாலிங்கம் ஐயா அவர்களின் பேத்தியுமான திருமதி பிரபா குருமூர்த்தி அவர்கள் நடத்தி வரும் சூரியா ஸ்கூல் ஆஃப் மியூசிக் (ஃபார் ஸ்பெஷலி ஏபுள்டு சில்ரன்) மாணவர்களின் மெல்லிசை நிகழ்ச்சியோடு இந்த புத்தக வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது.
முத்தமிழின் மூன்று முத்துக்கள்
மூன்று முத்துக்களின் முத்தான சிறப்புரைகள்
அரங்கு நிறைந்த பார்வையாளர்கள்
அவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணங்கள்
என அனைத்தும் சேர்ந்த அழகிய பூங்கொத்து
எனது “இழுக்கும் மாயோள்” புத்தக வெளியீடு.
எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏