மழை

மண்ணின் தாகம்! வருணனின் தானம்.

இந்த மண்ணுக்கு ஏன் இவ்வளவு தாகம்?
அந்த வருணனுக்கு ஏன் இவ்வளவு பாசம்?

மண்ணின் தாகம்
வருணனின் பாசம்
மழை தானம்.

வருணன் மண்ணின் மீது கொண்ட அதீத அன்பை மழையாய் பொழிகிறார்.
அவர்களுக்குள் இருக்கும் பரஸ்பர அன்பு பரிமாற்றத்திற்கு பெரும் தடையாய் மனிதர்களை நினைக்கிறார்!

மண்ணின் தாகம்
வருணனின் தானம்
இடையில் இந்த ஜனம்!

ஏரி, குளம், குட்டை, மண் சாலை என அனைத்தும் ஆனது கான்கிரீட் நந்தவனம்!
மண்ணை தேடி அவர் செல்ல வேண்டி இருக்கிறது தொலைதூரம்!
அதனால் வருணன் மனதில் எழுந்தது கோபம்.

மண்ணின் தாகம்
வருணனின் தானம்
தடைகளால் எழுந்த கோபம்!

செல்லும் வழியெல்லாம் குப்பைக் கூடம்
மக்காத குப்பைகளும் அதில் அடக்கம்!
மண்ணின் தாகத்தை தணிக்க வருணன் செய்த பாச தானம்
தடையாக இருந்த கான்கிரீட் நந்தவனம்
குவியலாக இருந்த மக்காத குப்பைக் கூடம்
அடித்து சென்றார் அனைத்தையும்
அனைத்தும் குடியேறியது ஒவ்வொரு வீட்டின் நடுக்கூடம்.

மண்ணின் தாகம்
வருணனின் தானம்
பெருக்கெடுத்து ஓடும்!

நடு வீட்டிற்குள் நுழைந்தது மழைநீர் மற்றும் குப்பைக்கூடம்
மக்களின் ஐயோ அம்மா அலறல் சப்தம்
ஒலித்தது எட்டுத்திக்கும்
அதை கேட்டு கலங்கியது வருணனின் மனம்
உடனே அங்கிருந்து வெளியேற துடித்தது அவர் உள்ளம்
வேறு வழி ஏதும் இல்லாததால் கடல் மற்றும் கூவத்தில் ஆனார் ஐக்கியம்.

மண்ணின் தாகம்
வருணனின் தானம்
வீணாகிறது வருடாவருடம்!

இப்போது சேமித்து வைக்காத ஒவ்வொரு கனம்
அடுத்து வரும் கோடை காலம் தண்ணீருக்காக அண்டை நாட்டவரிடம்
கையேந்தும் நிலை உருவாகும்
திருந்தாத ஜனம்!
மண்ணும் மழையும் என்ன செய்ய முடியும்! பாவம்!

இயற்கையின் தானத்தை ஏற்று, மதித்து, பாதுக்காக்க தெரியாத மனிதம்!
நிலைமையை புரிந்துக்கொண்டு விழிப்பது எக்காலம்!

மண்ணின் தாகம்
வருணனின் பாசம்
மழை தானம்
வீணாய் போனது இப்போதும்.

Leave a comment