ஜேம்ஸ் உடனான உரையாடலில் ரொம்பவே குழம்பி போன சக்தி எதை நம்புவது எதை நம்ப கூடாது என்று தவிப்புக்குள்ளானாள். அவள் குழம்பிப் போய் இருப்பதை அவளின் பதற்றத்தில் இருந்தே அறிந்துக் கொண்ட ஜேம்ஸ் அவளுக்கு தண்ணீர் எடுத்து வர அவர்கள் அமர்ந்திருந்த ஹாலின் இடது புறமாக இருந்த திறந்த சமையலறைக்குள் சென்று அங்கிருந்த ஃபிரிஜை திறந்து அதிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அதன் அருகே இருந்த கண்ணாடி தம்பளர் ஒன்றை எடுத்து அதில் அவன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி அதை சக்திக்கு குடுக்க அடுப்படியில் இருந்து ஒரு அடி முன் வைத்தனுக்கு அடுப்படிக்கு அருகே மூடி இருந்த கதவின் வழியே ஏதோ சத்தம் கேட்டது போல் இருந்தது. உடனே நடையை நிறுத்தி உன்னிப்பாக கேட்டான். ஆனால் இம்முறை சற்று முன் அவனுக்கு கேட்ட சத்தம் ஏதும் கேட்கவில்லை. முகத்தில் சந்தேகத்துடனும், கையில் தண்ணீர் தம்பளருடனும் சக்தி முன் நின்ற ஜேம்ஸ் அவளிடம் தண்ணீரை எடுத்துக் கொள்ளும்படி கூறி நின்றான். சக்தியும் அவன் குடுத்த தண்ணீரை குடித்துவிட்டு அவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே அவனின் முகத்தைப் பார்த்தாள். அவனோ பின்னால் திரும்பி சமையலறையையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
“என்ன ஜேம்ஸ்.
ஏன் கிட்சனையே பார்த்துகிட்டு இருக்கீங்க?”
“இல்ல…”
“என்னாச்சு?”
“உங்க கிட்சன் பக்கத்துல ஒரு டோர் இருக்கே அது…”
“அது பேஸ்மென்ட் போறதுக்கான டோர்.
ஏன் அந்த டோர்க்கு என்ன?”
“அந்த டோர்க்கு ஒண்ணுமில்ல ஆனா அதுக்குள்ளேந்து ஏதோ சத்தம் வந்தா மாதிரி இருந்தது.
அது தான்… யோசனையா இருக்கு.”
“ஏதாவது டப்பா ஆர் தட்டுமுட்டு சாமான்கள் விழுந்திருக்கும்.
வேறென்ன!”
“இல்ல அந்த சத்தம் அப்படி பொருள் கீழ விழும் சத்தம் இல்ல.
யாரோ நாலஞ்சு பேரு பேசிக்கறா மாதிரி கேட்டுச்சு.”
“என்னது என் வீட்டு பேஸ்மென்ட்ல நாலஞ்சு பேரு பேசறா மாதிரி கேட்டுச்சா!!
ஹா! ஹா! ஹா!
என்ன சொல்லுறீங்க ஜேம்ஸ்.”
“அட ஆமாங்க.
சத்தியமா கேட்டுச்சு.
எதுக்கும் நான் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடவா?”
“இல்ல இல்ல.
அதெல்லாம் வேண்டாம்.”
“அதுக்கு எதுக்கு நீங்க இப்படி டென்ஷன் ஆகறீங்க?”
“டென்ஷன் எல்லாம் ஒண்ணுமில்ல…
அப்படியே நீங்க சொல்லுறது மாதிரி நாலஞ்சு பேரு பேஸ்மென்ட் இருக்காங்கன்னே வச்சுகிட்டாலும்…
அவங்க எப்படி அங்க போயிருப்பாங்க.
நாம் இரண்டு பேரும் இங்கயே தானே உட்கார்ந்திருக்கோம்.
நம்மள தாண்டி இதுவரை யாரும் போனதா எனக்கு தோனலை.
உங்களுக்கு?”
“விளையாடாதீங்க சக்தி.
மறுபடியும் உங்க கிட்ட நான் கேட்கிறேன்.
நீங்க எதையாவது என் கிட்டேந்து மறைக்கறீங்களா?”
“இல்ல இல்ல இல்லன்னு எவ்வளவு தடவ சொல்லுறது ஜேம்ஸ்.”
“சரி அப்படின்னா உங்க வீட்டு பேஸ்மென்ட்ட பார்க்க அனுமதி குடுங்க சக்தி.”
“ஜேம்ஸ் ஆல்ரெடி இன்னைக்கு நீங்க சொன்ன விஷயங்களும் நான் சொன்னதும்ன்னு ரொம்பவே குழம்பி போய் இருக்கேன்.
ப்ளீஸ் இதுல நீங்க இன்னும் ஏதாவது சொல்லி என்னை பயமுறுத்தாதீங்க.”
“ஓகே ஓகே.
உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ ஒரு கால் செஞ்சு சொல்லுங்க.
சரியா.”
“நான் தான் ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டேனே!
மறுபடியும் சொல்லுங்கன்னா…
நான் என்னத்த சொல்ல?”
“என்ன சொல்லணும்னு தோணுதோ அதை.
சரி நான் இந்த சார்ல்ஸ் அன்ட் உங்க பக்கத்து வீட்டு விஷயங்களை நேருல சொல்லிட்டு போக தான் வந்தேன்.
சொல்லிட்டேன்.
மேலும் கூடுதல் தகவல்களை என்னை நம்பி என்னிடம் சொன்னதற்கு நன்றி.”
என்று கூறி சக்தியிடம் இருந்து விடைப்பெற்றுச் செல்ல இருந்த ஜேம்ஸுக்கு அவனின் கைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. கைபேசியை எடுத்து பார்த்தான். பார்த்ததும் அந்த அழைப்பை ஏற்று.
“அப்படியா!
சூப்பர்.
இதோ நான் உடனே வரேன்.”
என்று கூறிக்கொண்டே சக்தி வீட்டின் வாசற்கதவை திறந்தான். பின் அழைப்பை துண்டித்து விட்டு சக்தியிடம்
“சக்தி தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹாஸ்பிடாலிடி.
நான் இப்போ ஒரு முக்கியமான விஷயமா போகணும்.
சோ நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணுவோம்.
எங்க ஆளுங்க உங்க பக்கத்து வீட்டு சமாச்சாரத்தை பாரத்துப்பாங்க.
நீங்க இனி அதைப் பத்தி கவலை பட வேண்டாம்
டேக் கேர்.
பை.”
“பை ஜேம்ஸ்.
ஹாவ் எ நைஸ் டே.”
என்று சக்தி கூறியதும் அங்கிருந்து கிளம்பி தனது காரில் ஏறி அந்த தெரு முனையில் சர்ரென்று ஒரு யூ டர்ன் செய்து பறந்து சென்றான். ஜேம்ஸ் சென்றதும் வீட்டினுள் வந்து கதவை தாழிட்டு மீண்டும் சோஃபாவில் அமர்ந்தாள். தலையை அந்த சோபாவின் மேல் நன்றாக அழுத்தி சாய்த்துக் கொண்டு அமர்ந்த சக்தி, ஜேம்ஸ், சார்ல்ஸ் மற்றும் பீட்டரை பத்தி சொன்னதையும் மிஸ்ஸர்ஸ் டேவிட் பத்தி சொன்னதையும் மேலும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட எல்லா விஷயங்களையும் மனதில் அசை போட்டுப் பார்த்தாள். சட்டென பேஸ்மென்ட்டில் இருந்து ஏதோ ஒரு சப்தம் கேட்க உடனே சோஃபாவில் இருந்தபடியே திரும்பிப் பார்த்தாள். சப்தம் ஏதும் அதன் பின் கேட்கவில்லை. மீண்டும் சோஃபாவில் சாய்ந்தாள். அவள் சோஃபாவில் படுத்த சில நொடிகளில் மீண்டும் பேஸ்மென்ட்டில் இருந்து சப்தம் வந்தது. விருட்டென எழுந்து சக்திக்கு பேஸ்மென்ட்டில் இருந்து ஏதோ சப்தம் வந்ததாக ஜேம்ஸ் கூறியது நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து
“ப்ளூ…இப்ப நீ வரலாம்.
ஏய் ப்ளூ அங்க என்னத்த உருட்டுற?
நீ அப்படி எல்லாம் சத்தம் குடுக்குறவன் இல்லையே!
சரி சரி வா வா.
உன்கிட்ட நிறைய விஷயம் சொல்லணும்.
ப்ளூ”
என்று ப்ளூவை அழைத்து விட்டு அதன் வரவுக்காக காத்திருந்தாள். ஆனால் அழைத்து சற்று நேரம் ஆகியும் ப்ளூ ஹாலுக்கு வரவில்லை. ப்ளூ மேலே வராததால் சக்தி பேஸ்மென்ட் செல்ல முடிவெடுத்து சோஃபாவில் இருந்து எழுந்து பேஸ்மென்ட் கதவை நோக்கி ப்ளூ அழைத்துக் கொண்டே நடக்கலானாள். அப்போது அவளுக்கு ஏதோ மனதில் ஒரு அச்சம் எழ
“ஏய் ப்ளூ.
வேண்டாம்.
விளையாடாத.
இப்போ நீ இங்க வரலைன்னா நான் அங்க வந்துடுவேன்.
ப்ளூ.”
என்று கூறிக்கொண்டே பேஸ்மென்ட் கதவருகில் சென்றவள் மனதில் ஏதோ ஒரு வகையான நடுக்கத்தை உணர்ந்தாள். மெல்ல வலது கையால் அந்த கதவின் கைப்பிடியை பிடித்தாள். அவள் வலது கை நடுங்கியது. அதை நிறுத்த இடது கையை வலது கை மேல் வைத்து அழுத்தினாள். அப்போதும் நடுக்கம் அடங்கவில்லை. பின் இரண்டு கைகளையும் கைப்பிடியிலிருந்து எடுத்து மீண்டும் ஒரு முறை ப்ளூவை அழைத்துப் பார்த்தாள். பதிலேதும் வராததால் கீழே சென்று விடலாமென்று மனதில் இருந்த பயத்தை ஒரு ஓரத்தில் தள்ளி வைத்து, தைரியத்தை கேடயமாக கொண்டு கதவை திறந்தாள் சக்தி.
ஒரே கும்மிருட்டாக இருந்தது. முதற்படியின் வலது புறம் இருந்த லைட் சுவிட்சை அழுத்தினாள். ஆனால் பேஸ்மென்ட் லைட் எரியவில்லை. சுவிட்சை நன்றாக அழுத்தி பார்த்தாள். அப்போதும் லைட் ஆன் ஆகவில்லை. இருட்டில் செல்ல மனமில்லாது அந்த அறையிலிருந்து வெளியே வந்து எமர்ஜென்சி லைட்டை எடுத்துக் கொண்டு மீண்டும் பேஸ்மன்ட்டிற்குள் செல்ல ப்ளூவை அழைத்துக் கொண்டே முதற்படியில் கால் பதித்தாள். அப்போதும் ப்ளூவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
சக்தி வீட்டு பேஸ்மென்ட்டுக்கு செல்ல இருந்த படிக்கட்டுகளோ பத்து
அவற்றில் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து
கை விளக்கு ஏந்திய காரிகை போல் படிகளில் இறங்கி சென்றாள்.
பேஸ்மென்ட்டில் ப்ளூ எப்போதும் அமர்ந்திருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் அருகே சென்று பார்த்தவள் அதிர்ந்து போனாள். ஏனெனில் சார்ஜிங் ஸ்டேஷனில் ப்ளூ இருக்கவில்லை. உடனே கையில் இருந்த அந்த சிறிய விளக்கு கொண்டு சுற்றிப் பார்த்தாள். அவளால் ப்ளூவை பார்க்க முடியவில்லை.
உடனே ப்ளூ…ப்ளூ…ப்ளூ என்று மெதுவாக அழைத்தாள்.
அதற்கும் பதில் வரவில்லை.
தள்ளி வைத்த பயம் மீண்டும் வேதாளம் விக்கிரமாதித்தனை தொற்றிக்கொண்டது போல் தொற்றிக் கொண்டது.
சட்டென பேஸ்மென்ட் லைட் ஆன் ஆனது. எதிர்பார்க்காது லைட் எரிந்ததால் பயத்தில் கையில் இருந்த எமர்ஜென்சி லைட்டை கீழே தரையில் போட்டாள்.
அந்த அறையின் விளக்கு எரிவதை உணர்ந்ததும் நன்றாக பேஸ்மென்ட்டை சுற்றிப் பார்த்தாள். எல்லா பொருட்களையும் நகர்த்தியும் பார்த்தாள். ஆனால் ப்ளூ அங்கு இருக்கவில்லை. பின் மீண்டும் அந்த படிக்கட்டுகளில் ஏறி வெளியே அடுப்படிக்கு பக்கத்தில் இருக்கும் அந்த பேஸ்மென்ட் கதவு வழியாக வெளியே வந்து அந்த அறையின் கதவை சும்மா சாற்றி வைத்துவிட்டு அடுப்படிக்குள் சென்று அங்கிருந்த கிரானைட் மேடையில் சாய்ந்து கொண்டு ப்ளூ எங்க போயிருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளுக்கு சட்டென யாரோ பேஸ்மன்ட் படிக்கட்டுகளில் கடகடவென இறங்குவது போல் சப்தம் கேட்டதும் அடுப்படியில் இருந்தே எட்டி பார்த்தாள். பேஸ்மென்ட்டுக்கு செல்லும் கதவு திறந்துக் கிடந்ததை பார்த்து தனக்குதானே
“நான் அந்த கதவ சாத்திட்டு தானே வந்தேன்!
அப்புறம் எப்படி அது தொறந்து இருக்கு?”
என்று கூறிக்கொண்டே அந்த அறையின் வாசலுக்கு சென்றவள் உள்ளே செல்ல தயங்கி சற்று நேரம் வாசலிலேயே நின்றாள். பின் சென்று பார்த்துவிடலாம் என்று மனம் உரைத்ததை ஏற்று அதன் படியே மீண்டும் பேஸ்மென்ட்டுக்குள் நுழைந்தாள். படிக்கட்டுகளில் இறங்கி சென்றாள். அப்போது மீண்டும் அந்த அறையின் லைட் ஆஃப் ஆனது. அதே நேரம் அவள் காலடியில் எமர்ஜென்சி லைட் சர்… சர்… சர்… சரென ஆடிக்கொண்டிருந்தது. உடனே அதன் ஆட்டத்தை தனது காலால் நிறுத்தினாள். எமர்ஜென்சி லைட் ஆடுவது நின்றது. அதன் வெளிச்சம் நேராக ஓரிடத்தில் வீசியது. அந்த வெளிச்சம் சென்ற திசையிலேயே தனது பார்வையையும் வீசினாள் சக்தி. எமர்ஜென்சி லைட்டின் ஒளி சென்று முட்டி மோதி நின்றிருந்த இடத்தை சக்தியின் பார்வை சென்றடைந்ததும். அவள் அதிர்ச்சிக்குள்ளானாள்.
அதிர்ச்சியில் லைட்டை அழுத்திக் கொண்டிருந்த அவளின் கால் படிக்கட்டுகளை தேடி ஓட தயாரானதும் மீண்டும் அந்த லைட் சர்…சர்…சரென சப்தம் எழுப்பியது.
வேக வேகமாக படிக்கட்டுகளில் ஏறி பேஸ்மென்ட்டை விட்டு வெளியேறிய சக்தி அந்த அறையின் கதவை தாழிட்டு, அதிலேயே சாய்ந்தபடி உடல் முழுவதும் பயத்தால் வியர்த்து விட, பதற்றத்தில் கை கால் நடுநடுங்க, தனக்கு தானே ஏதேதோ கேள்விகளை கேட்டுக்கொண்டு அந்த கதவில் மெல்ல வழுக்கிக்கொண்டே தரையில் அமர்ந்தாள்.
அப்படி பேஸ்மென்ட்டில் சக்தி பார்த்தது என்ன? அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது எது? பேஸ்மன்ட் சார்ஜிங் ஸ்டேஷனில் இருக்க வேண்டிய ப்ளூ எங்கே?
போன்ற கேள்விகளுக்கான பதில்?
தொடர்வாள்…