அத்தியாயம் 31: அழைப்பு-இணைப்பு
ஜேம்ஸின் மொபைல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்ததால் டேவிட் வீட்டு விசாரணையில் முழுமனதோடு அவனால் ஈடுபட முடியாது போனது. அவன் உடனே அங்கு இருந்த அவன் டிப்பார்ட்மென்ட் ஆட்களிடம் சில விவரங்களை சேகரித்து அவனது மொபைலுக்கு அனுப்புமாறு உத்தரவு இட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
ஜேம்ஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் சக்தியும் அவள் வீட்டிற்குள் சென்று கதவை தாழ் இட்டாள். வீட்டினுள் நுழைந்த சக்தி முன், சுட சுட ஒரு கப் காபியுடன் வந்து நின்ற ப்ளூ, அதை அவளிடம் கொடுத்தது. அவளும் காபியை எடுத்துக் கொண்டு ப்ளூவிடம் நன்றி கூறி அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள். அப்போது ப்ளூ அவளருகே சென்று
சக்தி ஏன் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வாசலுக்கு சென்றாள்?
அவளை பார்க்க வந்த நபர் யார்?
ஏன் டேவிட் வீட்டில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது?
என்று பல கேள்விகளை கேட்டு பதிலுக்காக சக்தியை பார்த்து நின்றிருந்தது.
ப்ளூ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இரண்டே வரிகளில் பதிலளித்தாள்.
“தோணிச்சு போனேன். கதவு தொறந்து இருந்துது…சோ… போலிஸை வர வச்சேன்.”
என்று கூறி குடித்த காபி கப்பை அங்கிருந்த காஃபி டேபிளில் வைத்து விட்டு தனது அறைக்கு செல்ல எழுந்தாள். அப்போது ப்ளூ மீண்டும் அவளிடம்,
“மிஸ்ஸர்ஸ் டேவிட் அவங்க வீட்டுல இல்லையே! அப்புறம் எப்படி கதவு தொறந்திருந்தது?”
“அதை கண்டு பிடிக்க தான் போலிஸ் கிட்ட சொல்லிருக்கேன். அவா கண்டுபிடிச்சுப்பா.”
“ஸோ… உன் கூட பேசிட்டு இருந்தது போலிஸா?”
“ஆமாம். சரி ப்ளூ நான் என் ரூமுக்கு போறேன். பை. ஐ வில் கம் ஃபார் டின்னர் அட் எய்ட். ஓகே.”
“ஓகே தீ. டேக் ரெஸ்ட்”
என்று ப்ளூ கூறியதும் சக்தி அவளது அறை கதவை மூடினாள். பின் உடைகளை மாற்றி ஃபிரெஷ் ஆனா பின் படுக்கையில் படுத்துக் கொண்டே தனது மொபைலை எடுத்து விஷாலுக்கு கால் செய்தாள். ஆனால் விஷால் எடுக்கவில்லை. மீண்டும் முயற்சித்தாள். கால் வாய்ஸ் மெயிலுக்கு சென்றது. உடனே தான் தான் அழைப்பதாகவும் அன்று நடந்த சிலவற்றை பற்றி பேச வேண்டுமென்றும், டைம் கிடைக்கும் போது திருப்பி அழைக்க சொல்லிவிட்டு வாய்ஸ் மெயிலை துண்டித்தாள். பின்பு சில ஆஃபிஸ் ஈமெயில்களுக்கு பதில் அனுப்பிவிட்டு அப்படியே சற்று அசந்து தூங்கிப் போனாள்.
அவள் வலதுபுறமாக திரும்பி படுத்திருந்த மெத்தையில் அவளின் இடுப்புக்கு அடியில் புஸ்… புஸ்…. புஸென அவளின் மொபைல் அதிர்ந்ததில் விருட்டென எழுந்து மொபைலை துழாவி தேடியெடுத்துப் பார்த்தாள். அவள் எதிர் பார்த்த கால் விஷால் இடமிருந்து ஆனால் அழைப்பு வந்ததோ அவள் பெற்றோரிடமிருந்து. கண்களை நன்றாக கசக்கி தூக்கத்தை கலைத்து கொண்டே அவளின் பெற்றோரை மொபைலில் வீடியோ காலில் அழைத்தாள். அவளின் அழைப்புக்காக காத்திருந்த நவீனம் மிருதுளாவும் உடனே வீடியோ காலில் இணைந்தனர்.
வழக்கமான நலம் விசாரிப்புகள் முடிந்ததும். கல்யாண தலைப்பை வாசிக்க ஆரம்பித்தனர் நவீன் மற்றும் மிருதுளா. அதை கேட்ட சக்தி அவர்களிடம்
“அப்பா அன்ட் அம்மா…கல்யாண விஷயத்துல ஏதாவது அப்டேட் இருந்தா நானே உங்களுக்கு சொல்லுவேன். சோ…நீங்க அதுக்காக கால் பண்ணி கேட்க வேண்டாம். ஓகே வா.”
“சரி மா. இனி நீயா சொல்லற வரைக்கும் நாங்க அதை பத்தி ஒன்னும் கேட்க மாட்டோம். போறுமா.”
“தாங்க்ஸ் மா.”
“அப்பறம் உங்க ஆஃபிஸ் ல, உன் பக்கத்து வீட்டு அம்மா மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டுல எல்லாம் என்ன விஷேஷங்கள்.”
“ஆங்! ஏன் கேட்கற அப்பா? உனக்கு பேச வேறெதுவும் இல்லையா “
“பின்ன என்ன நீ! நாங்க உன் கிட்ட வேற எதைப் பத்தி தான் பேசறது? உன் கல்யாணத்த பத்தி பேசக்கூடாதூன்னுட்ட!”
“அப்பா! ஓகே ஓகே! ஆஃபிஸ் வேலை எல்லாம் நல்லா போறது. அப்புறம் நம்ம பக்கத்தாத்து மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் ரெண்டு பேருமே எங்கயோ ஊருக்கு போயிருக்கா.”
“இன்னைக்கு அவங்க வீட்டு கதவு கூட திறந்து கிடந்தது மிஸ்டர் நவீன். அப்போ நம்ம தீ தான் போலிஸுக்கு கால் செஞ்சு அவங்களை வர வச்சு இப்போ விசாரணை போயிட்டிருக்கு.”
உடனே காலை ம்யூட் செய்த சக்தி ப்ளூவைப் பார்த்து
“ஹே ப்ளூ இதை ஏன் இப்போ அவங்க கிட்ட சொன்ன?”
“ஏன் சொன்னா என்ன தீ?”
“அவங்க பயந்துட மாட்டாங்களா ப்ளூ!”
“ஹலோ! ஹலோ தீ! நீ இருக்கயா?”
“நவீ… ஒரு வேளை நம்ம இன்டர்நெட் கட் ஆகியிருக்கோ என்னவோ.”
ஃபோனை அன்மியூட் செய்த சக்தி
“ஆங்… அப்பா…அம்மா என் சைட்ல தான் ஏதோ ப்ராப்ளம். இப்போ சரி ஆயிடுத்து.”
“சரி கால் கட் ஆகறதுக்கு முன்னாடி ப்ளூ ஏதேதோ சொல்லித்தே! அங்க என்ன ஆச்சு? மிஸ்ஸர்ஸ் டேவிட்டும் அவ ஆத்துக்காரரும் நன்னா இருக்காளோனோ!”
“அதுதானே! அப்படி கேளுங்கோ நவீ. இவ என்னடான்னா அவா ஊருக்கு போயிருக்கான்னு சொன்னா… ஆனா ப்ளூ என்னடான்னா…”
“அம்மா! அம்மா! உடனே உன்னோட கற்பனா சக்தியை எல்லாம் இங்க கொண்டு வந்து உன்னையும் குழப்பி அப்பாவையும் குழப்பிடாதமா.”
“அப்படின்னா என்ன நடந்ததுன்னு சொல்லு.”
என்று மிருதுளா கேட்டதும் சக்தி அன்று மாலை ஆஃபிஸில் இருந்து வந்ததில் இருந்து அப்போது அவர்களுடன் போனில் பேசக் கொண்டிருந்தது வரை கூறி முடித்தாள். அதை முழுவதுமாக கேட்ட நவீன் மிருதுளா தம்பதியினர் அதிர்ச்சிக்குள்ளாகி ஏதும் பேசாது இருந்தனர். அப்போது சக்தி அவர்களிடம்
“அப்பா…அம்மா… இருக்கேங்களா? இப்போ உங்களுக்கு என்ன ஆச்சு?”
” ம்…இருக்கோம் இருக்கோம். ஏன் மா தீ…”
“சொல்லுப்பா”
“அந்த ஊரு நல்ல சேஃபான ஊருன்னு இல்ல நெனச்சேன்!”
“இப்போ என்ன ஆச்சுப்பா?”
“இப்படி எல்லாம் நடக்கறதே!”
“அப்பா…அது ஏன் நடந்ததுன்னு போலிஸ் விசாரிச்சு நாளைக்கு சொல்லிடுவாப்பா. சோ கவலை படாதே.”
“அது சரி டி. ஆனா நீ எப்படி போலிஸுக்கெல்லாம் ஃபோன் பண்ணி வர சொன்ன?”
“ஏன் மா. நான் சொல்லக் கூடாதுன்னு மெட்ஸ் கவர்மென்ட் ஏதாவது ரூல்ஸ் போட்டிருக்கா என்ன?”
“அதுக்கில்லடி…நாளை பின்ன அந்த திருடனுக்கு நீ தான் போலிஸுக்கு போனன்னு தெரிஞ்சுதுன்னா?”
“அம்மா கவலையே வேண்டாம் அந்த போலிஸ்காரர் ஜேம்ஸ் எனக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சவர் தான்.”
“என்னது! அது எப்படி போலிஸ்காரரை உனக்கு தெரிய வந்தது.”
பேச்சுவாக்கில் ஜேம்ஸ் பற்றி சக்தி கூறியதும் அதைப் பிடித்துக் கொண்டனர் நவீனும் மிருதுளாவும். தான் தேவையில்லாமல் ஜேம்ஸ் பெயரை கூறிவிட்டோமே என்று எண்ணிய சக்தி சட்டென
“ஊப்ஸ்!…”
என்று தனக்குத் தானே சொல்லியதை கேட்ட நவீன் அவளிடம்
“ஹே தீ! நீ ஏதாவது எங்க கிட்டேந்து மறைக்கறீயா?”
“ஏன் பா அப்படி கேட்கற?”
“இல்ல இவ்வளவு வருஷமா நீ அங்க வேலைப் பாக்கற! ஆனா இப்போ நீ அந்த விஷாலை பார்க்க பாரிஸ் போனது லேந்து… அங்க என்ன நடக்கறதுன்னே எங்களுக்கு தெரிய மாட்டேங்கறது. ஏதேதோ நடக்கறதாகவும் நாங்க சங்கட படக்கூடாதூன்னுட்டு நீ எங்ககிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்கறதாகவும் சதா சர்வநேரமும் உன் அம்மாவோட புலம்பலை தான் கேட்டுண்டே இருக்கேன். இப்போ நீ சொன்னது எல்லாத்தையும் வச்சுப் பார்த்தா…அவ சொல்லறதுலேயும் ஏதோ இருக்கறா மாதிரின்னா இருக்கு!”
“அச்சோ! அப்பா. ஜேம்ஸ் என்னோடு புது ஃப்ரெண்டுப்பா.”
“அது எப்படி போலிஸ்காரர் உனக்கு ஃப்ரெண்ட் ஆனார்? நீ எதுக்காவது அவர் கிட்ட போயிருந்தா தானே உனக்கு அவரை தெரிய வாய்ப்பிருக்கு.”
“அது தானே! உன் அம்மா சொல்லறதும் சரிதானே!”
“சென்ட் பர்சன்ட் கரெக்ட் தான் மா. ஆனா நான் அவர்கிட்ட எதுக்கும் போகலை.”
“பின்ன எப்படி டி உனக்கு அவர் ஃப்ரெண்ட் ஆனார்?!”
“அம்மா…என்னை பேச விடுமா. அப்போ தானே நான் சொல்ல முடியும்.”
“ம்…சரி சொல்லு.”
“நீ முந்தி மாதிரி இல்லமா. உன் பொறுமை எல்லாம் எங்க போச்சு?”
“ம்…அதை எல்லாம் தோச்சு காயப்போட்டிருக்கேன் போதுமா.”
“ஹீ ஹீ ஹீ! உன் ஜோக்குக்கு சிரிச்சுட்டேன் ஓகே வா. சரி சரி ஜோக்ஸ் அப்பார்ட். ஜேம்ஸ் விஷாலோட ஃப்ரெண்ட்… சோ… அவர் எனக்கும் ஃப்ரெண்ட். தட்ஸ் ஆல்”
“இதை முன்னாடியே சொல்லிருக்கலாமே தீ மா”
“அப்பா எங்க நீங்க ரெண்டு பேரும் என்னை சொல்ல விட்டேங்கள்.”
“அவர் நம்ம ஊர் காரறா? இல்ல அந்த ஊர் காரறா?”
“அப்பா…அவர் நம்ம ஊர் காரர் ஆனா பொறந்து வளர்ந்தது எல்லாம் இந்த ஊர்ல தான். சோ… 95% இந்த ஊர் காரர் தான்.”
“சரி சரி எதுவா இருந்தா என்ன…எதுக்கும் நீ கொஞ்சம் அந்த போலிஸ் காரர்ட்டேந்து தள்ளியே இரு.”
“ஓகே மா. சரி நான் வச்சுடட்டுமா. வி கால் பண்ணறான்.”
“ஓகே டா. டேக் கேர். பை”
“பை ப்பா.”
“நாங்க சொன்னதெல்லாம் மனசுல வச்சுக்கோடி.”
“சரி மா. பை பை.”
“ம்…சரி பை.”
என்று பெற்றோரின் அழைப்பை துண்டித்து விட்டு விஷாலின் அழைப்பை ஏற்ற சக்தி அவனிடம் அன்று நடந்த விவரங்களை கூறி முடித்தாள். அவள் கூறியதனைத்தையும் கேட்டு முடித்த விஷால் சக்தியிடம்,
“தீ… ஜேம்ஸ் ஏன் அவன் கிட்டேந்து எதையாவது மறைக்கிறியான்னு கேட்கணும்?”
“இது எல்லா போலிஸ் காராலும் கேட்கற வழக்கமான கேள்வி தானே வி.”
“தீ…நீ ஒண்ணு கவனிச்சியா?”
“என்னது வி”
“ஜேம்ஸ் கிட்ட நாம காலேஜ் லாஸ்ட் டே நடந்த விவரங்களை சொல்லாம விட்டுட்டோம்.”
“என்னது நீ என்னை ப்ரப்போஸ் பண்ணிணதையா?”
“இல்ல தீ. அதுக்கப்புறம் நீ வெளிய போனது. அந்த ப்ரொபஸர் சேவியரை பார்த்தது. உன் மொபைலை காரில் தொலைத்தது. இதெல்லாம் நீ ஜேம்ஸ் கிட்ட சொல்லலையே!”
“ஆனா…அதெல்லாம் எப்பவோ நடந்தது வி. அதை ஏன் நான் ஜேம்ஸ் கிட்ட இப்போ சொல்லணும்? அதுவுமில்லாம ப்ரொபஸர் இன்னும் இருக்காரா இல்லையான்னு கூட தெரியாது.”
“அதுனால என்ன தீ. எனக்கென்னவோ நீ ஜேம்ஸ் கிட்ட அன்னைக்கு நடந்தது எல்லாத்தையும் சொல்லிருக்கணும்ன்னு தோணறது.”
“ஆனா எனக்கென்னவோ அன்னைக்கு நடந்ததுக்கும் இப்போ நடக்கறதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லைன்னு தான் தோணறது.”
“எதுக்கும் அதை அவன்ட்ட சொல்லிட்டா அவனும் ஏதாவது லிங்க் இருக்கான்னு விசாரிப்பான் இல்ல தீ.”
“ம்…அதை பத்தி விசாரிக்கணும்னா ஒண்ணு அவர் ப்ரொபஸர் சேவிரை மீட் பண்ணணும்… இல்லாட்டி… அந்த பீட்டரை மீட் பண்ணணும். இதுல ப்ரொபஸர் உயிரோட இருக்காரா இல்லையான்னு தெரியாது. அந்த பீட்டர் எங்க இருக்கான்னோ இல்ல இருக்கானா இல்லையான்னே தெரியாது. எப்படி? எதை? வச்சு ஜேம்ஸ் லிங்க் பண்ணுவார்?”
“ஏய் தீ! தட் இஸ் ஹிஸ் ஜாப். யார் கண்டா இதுவே கூட அவனுக்கு வேற ஏதாவது ஒரு நல்ல லீட் கிடைக்க வாய்ப்பா அமையலாம் இல்ல.”
“ம்…சரி நான் இப்போ என்ன பண்ணனும்?”
“நாளைக்கு மொதோ வேலையா நீ ஜேம்ஸுக்கு கால் செஞ்சு நடந்ததை அவன்கிட்ட சொல்லிடு.”
“ஓகே. டன்.”
“என்ன தீ இது! நாம கல்யாணம் பண்ணிக்க போறவா மாதிரியா பேசிக்கறோம். ஏதோ டிடெக்டிவ்ஸ் டிஸ்கஷன் மாதிரின்னா இருக்கு.”
“ஹா…ஹா…ஹா… அப்படின்னா நான் நான்சி அன்ட் நீ ஷெர்லாக் ஓகே வா.”
“விளையாடாதே தீ.”
“சரி சரி…நீ உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசினியா? நான் எப்போ அவாள்ட்ட பேசறது?”
“ம்... நான் பேசினேன்.
நான் டே ஆஃப்டர் டுமாரோ மெட்ஸ் வரேன் இல்லையா…அப்போ நீயும் அவாள்ட்ட பேசலாம். ஓகே வா.”
“டபுள் ஓகே.
சரி சரி ரொம்ப நேரமாயிடுத்து வி.
நான் காலை கட் பண்ணட்டும்மா?”
“ம்… அதுக்குள்ளேயே வா.”
“அதுதான் நாளன்னைக்கு நீ இங்க வரப்போறயே பின்ன என்ன. அப்போ பேச மிச்சம் மீதி ஏதாவது வை. இப்போ பை.”
“சரி சரி உன்கிட்ட வேற எதை எதிர்ப்பார்க்கறது.”
“எல்லாத்தையும்… கல்யாணத்துக்கு அப்புறமா நீ எதிர்பார்க்காததையும்…”
“ஆமாம் இப்படி எல்லாம் பேசிட்டு வை. அப்புறம் எங்கேந்து நான் தூங்க.
சரி சரி பை ஃபார் நவ்”
என்று விஷால் கூறியதும் அழைப்பை துண்டித்தாள் சக்தி. பின் சற்று நேரம் அவனையும் அவன் கடைசியாக கூறியதையும் மனதில் அசைப்போட்ட சக்தி புன்னகைத்துக் கொண்டே மொபைலை பார்த்தாள். அதில் ஜேம்ஸிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்ததை அப்போது தான் கவனித்தாள். உடனே அதை திறந்து படித்தாள். அதில் மிஸ்ஸர்ஸ் டேவிட் பற்றி விஷயங்கள் பெரிய லெவலில் இருப்பதாகவும், அதைப் பற்றி டிஸ்கஸ் செய்யவும், அவர்கள் வீட்டிற்குள் வந்தது யார் என்ற விவரங்களை
கூறவும், மறுநாள் காலை அவள் வீட்டிற்கு வருவதாகவும், அவள் வீட்டில் இருப்பாளா என்றும் ஜேம்ஸ் கேட்டிருந்தான்.
அதைப் படித்ததும் சக்தி, தான் வீட்டில் இருப்பாள் என்றும் தனக்கும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தாராளமாக வரலாம் என்றும் ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தியில் அழைப்பு விடுத்தாள்.
உண்மையில் மிஸ்ஸர்ஸ் டேவிட் யார்?,
ஜேம்ஸின் அந்த ஒரு கேள்வி…,
சக்தி ஜேம்ஸிடம் கூற தவறியதாக விஷால் சுட்டிக்காட்டிய விஷயம்,
காலேஜ் கடைசி நாள் நடந்த சம்பவங்கள்,
சக்தியின் அந்த மர்ம இரவு சம்பவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறதா? என்ற குழப்பத்தில்…
தொடர்வாள்….