அத்தியாயம் 28: சூழ்ச்சியா! சூழ்நிலையா!

ருத்ரா சொன்னதை மனதில் ஆசைப் போட்டப்படியே அங்கிருந்து கிளம்பி ஸ்டேஷன் சென்ற ஜேம்ஸுக்கு ஏதோ தோன்ற

“ஓ! ஓ! இந்த ருத்ரா நினைப்புல எப்படி அதை செய்யாம விட்டுட்ட! எப்படிடா ஜேம்ஸ்! “

என்று  தனக்குத்தானே கூறிக்கொண்டே உடனே வண்டியை திருப்பி மீண்டும் சக்தியின் ஆஃபிஸுக்கு சென்று பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்த செக்யூரிட்டியிடம் சக்தியை மீண்டும் பார்க்க வேண்டுமென்று கூறினான். செக்யூரிட்டியும் சக்தியை ஃபோனில் தொடர்பு கொண்டு விவரம் கூறி அனுமதி கேட்டான். அவரை உள்ளே விடும்படி சக்தி கூறியதும் செக்யூரிட்டி ஜேம்ஸை உள்ளே போக அனுமதித்தார். அப்போது ஜேம்ஸ் அங்கிருந்த செக்யூரிட்டியிடம்

“நீங்க இங்க எவ்வளவு வருஷமா வேலை பார்க்கறீங்க?”

“நான் பத்து வருஷமா வேலை பார்க்கறேன் சார்”

“குட். வெரி குட். ஆமாம் ஜூன் 17 ஆம் தேதி உங்க ஆஃபிஸுக்கு யாராவது… ம்…வழக்கமா வரவங்களை தவிர்த்து…புது ஆட்கள் வந்திருந்தாங்களா?”

“இல்ல சார். அப்படி யாரும் வரலைங்களே! வழக்கமா வரவங்க தான் வந்தாங்க. இருங்க எதுக்கும் சிஸ்டத்துல செக் பண்ணி சொல்லறேன்.”

“சரி நீங்க செக் பண்ணி நோட் பண்ணி வையுங்க. நான் திரும்பி போகும் போது உங்ககிட்ட விவரம் கேட்டுக்கறேன். சரியா”

“சரி சார்.”

என்று செக்யூரிட்டியிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்ற ஜேம்ஸ் சக்தியை சந்திக்க அவள் கேபினுக்கு சென்று அவனுக்கும் சக்திக்கும் இடையே தடையாக இருந்த கண்ணாடி கதவை தட்டினான். நிமிர்ந்து பார்த்த சக்தி புன்னகைத்து உள்ளே வரச் சொன்னாள். ஜேம்ஸும் உள்ளே சென்று

“ஹாய் சக்தி சாரி டூ இன்டரப்ட் யூ”

“இட்ஸ் ஓகே ஜேம்ஸ். சொல்லுங்க.”

“உங்க ஆஃபிஸ் கேன்டீனை நான் கொஞ்சம் பார்க்கணும். போகலாமா?கூட்டிட்டு போறீங்களா? இல்ல உங்களுக்கு முக்கியமான வேலை இருந்தா நீங்க அதைப் பாருங்க. எனக்கு பர்மிஷன் வாங்கித் தாங்க நானே போயிட்டு வரேன்.”

“நோ ப்ராப்ளம் ஜேம்ஸ். வாங்க நானே கூட்டிட்டு போறேன். ஜஸ்ட் கிவ் மி டூ மினிட்ஸ் இந்த ஈமெயில் மட்டும் அனுப்பிட்டு வரேன்.”

“ஓகே நான் வெளியே வெயிட் பண்ணறேன். நீங்க முடிச்சிட்டு வாங்க நாம போவோம்.”

“ஷுவர்.”

ஜேம்ஸ் சக்தி கேபினுக்கு வெளியே வந்து அந்த ஆஃபிஸையும் அங்கு வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு எதிரே நடந்து சென்றாள் ருத்ரா. அழகான க்ளிப் கொண்டு  கருமையும் பிரௌன் நிறமும் கலந்திருந்த கூந்தலை ஒன்றாக தூக்கி  தலை உச்சியில் கிளிப் செய்திருந்தாள். ஜேம்ஸ் பார்க்கும் போது அதிலிருந்து ஒற்றை முடி அவளின் நெற்றிமுன் சரிந்தது. அதை அவளின் அழகான வெண்ணிற விரலால் நகர்த்தி விட்டதைப்
பார்த்ததும் ஜேம்ஸ் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பட்பட்டென பறக்க ருத்ராவின் அழகில் சொக்கிப் போய் நின்றிருந்தவனை சட்டென யாரோ பின்னால் இருந்து

“ஜேம்ஸ்! ஜேம்ஸ்! ஜேம்….ஸ்”

என்ற அழைப்பு கேட்டதும் மனதில் வட்டமடித்துக் கொண்டிருந்த அந்த வண்ணத்துப் பூச்சிகளை ஊதி கலைத்த குரல் யாருடையது என்று திரும்பிப் பார்த்தான். இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி. உடனே தான் எதற்கு எங்கு வந்திருக்கிறோம் என்ற நினைவுக்கு திரும்பி வந்த ஜேம்ஸ் அவளிடம்,

“ஹாய் சக்தி. நீங்கதானா!”

“வேற யாரை எதிர்ப்பார்த்தீங்க ஜேம்ஸ்?”

“இல்ல இல்ல அப்படி எல்லாம் யாரையும் எதிர்ப்பார்க்கலை. சரி சரி உங்க வேலை ஆச்சா? நாம கேன்டீன் போகலாமா?”

“ம்….போகலாம் வாங்க.”

என்று சக்தி கூறியதும் இருவரும் கேன்டீனுக்கு சென்றனர். அங்கிருந்த காஃபி மெஷினில் இருந்து இரண்டு காஃபியை எடுத்துக் கொண்டு வந்த சக்தி ஒன்றை ஜேம்ஸிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை அவள் அருந்த ஆரம்பித்தாள். அப்போது ஜேம்ஸ் சக்தியிடம்

“சக்தி உங்களுக்கு இந்த கேன்டீன் ஸ்டாஃப் எல்லாரையும் தெரியுமா?”

“ஆங்! ஓரளவுக்கு எல்லாரையும் தெரியும் ஜேம்ஸ். ஏன் கேட்கறீங்க?”

“நீங்க பாரிஸ் போன அன்னைக்கு உங்களுக்கு சான்ட்விச் கொடுத்த நபர் யாருன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

“ஓ! ஜான் தான் எனக்கு அன்னைக்கு சான்ட்விச் செய்து தந்தார். அவர் ரொம்ப நல்ல ஜாலி டைப்”

“ம்…சரி நீங்க
பொறுமையா காபி குடிச்சிட்டு இருங்க.
நான் அங்க போய் ஏதாவது க்ளூ கிடைக்குமான்னு பார்த்துட்டு வரேன்‌”

என்று சொல்லி விட்டு தனது காபி கப்புடன் நேராக அங்கிருந்த கிட்சன் பக்கமாக சென்றான். அப்போது அங்கிருந்த ஒரு ஊழியர் ஜேம்ஸை தடுத்து நிறுத்தி

“சார் இது ஸ்டாஃப் ஓன்லி ஏரியா. நீங்க இதுக்கு மேலே உள்ள போகக் கூடாது.”

“ம்…ம்….ஓகே ஓகே. சரி இங்க எத்தனை பேர் வேலை பார்க்கறீங்க?”

“இந்த கேன்டீன்ல…நாங்க ஒரு நூறு பேர் ஷிப்ட் போட்டு வேலை பார்க்கிறோம். ஏன் கேட்கறீங்க?”

“இல்ல போன சனிக்கிழமை காலையில ஒரு பதினோரு மணிக்கு என் தோழி சக்தி ஒரு சான்ட்விச் வாங்கித் தந்தா அது அவ்வளவு சூப்பரா இருந்துச்சு. அது யார் செய்ததுன்னு அவகிட்ட கேட்டபோது…அவ கூட யாரோ ஜா…ன்னு ஆரம்பிக்கிற பெயர் ஏதோ சொன்னா…”

“அது நம்ம ஜான் தான் சார்.”

“அது எப்படி அவ்வளவு தீர்க்கமா சொல்லுறீங்க?”

“போன சனிக்கிழமை அவன் தான் சார் சான்ட்விச் டியூட்டில இருந்தான். அதுனால தான் நான் சொன்னேன்.”

“சரி அவரு இப்ப இங்க இருக்காறா? நான் பார்க்கலாமா?”

“இன்னைக்கு அவனுக்கு எங்க டியூட்டின்னு தெரியலையே!”

“உங்க சூப்பர்வைசரை நான் பார்க்கலாமா?”

“ஓ! தாராளமா. வாங்க நான் கூட்டிட்டுப் போறேன்.”

“ம்…தாங்க்ஸ்”

“நீங்க யாரு சார். நியூ ரெக்ரூட்டா?”

“ம்…பார்த்தா அப்படி தெரியுதா!  அப்படியே வச்சுக்கோங்க ஜார்ஜ்!”

“என் பெயர்… எப்படி சார்?”

“உங்க சட்டையில குட்டியா ப்ரின்ட் ஆகியிருக்கும் உங்க பெயரை படிக்க சீக்ரெட் ஏஜென்ட் எல்லாம் வேண்டாம் ஜார்ஜ்… கண்ணு நல்லா தெரிஞ்சாலே போதும்.”

“நீங்க நல்லா பேசுறீங்க சார். இதோ இது தான் எங்க சூப்பர்வைசர் மிஸ்டர் வால்ட்டன் கேபின். நீங்க இங்கேயே இருங்க இதோ வந்துடறேன். சார் மே ஐ கம் இன்.”

என்று அனுமதி கேட்டு உள்ளே சென்ற ஜார்ஜ் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து ஜேம்ஸை உள்ளே அழைத்துச் சென்று அவனது சூப்பர்வைசரிடம் அறிமுகம் செய்து வைத்தான். உள்ளே சென்றதும் ஜார்ஜுக்கு நன்றி தெரிவித்து இனி தானே பார்த்துக் கொள்வதாக கூறி வெளியே சென்று வேலையைப் பார்க்க சொன்னார் சூப்பர்வைஸர். ஜார்ஜும் ஜேம்ஸிடம் விடைப்பெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான். ஜேம்ஸை அமரச் சொன்ன சூப்பர்வைசர் வால்ட்டன். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஜேம்ஸ் வந்த விவரம் பற்றி விசாரித்தார். அப்போது ஜேம்ஸ் தான் யார் என்பதை விவரித்து அங்கு வேலை செய்யும் ஜான் பற்றி விசாரித்தான். சிறிது நேரம் கழித்து சூப்பர்வைசர் கேபினில் இருந்து வெளியே வந்த ஜேம்ஸ் நேராக சக்தி அம்ர்ந்திருந்த டேபிள் அருகே சென்று அவளுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவன் முகத்தில் ஏதோ குழப்பம் தெரிந்ததை கண்ட சக்தி அவனிடம்

“என்ன ஜேம்ஸ் என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”

“ம்…அது ஒண்ணுமில்லை சக்தி. சரி நான் கிளம்பறேன்.”

“என்னாச்சு ஜேம்ஸ்? ஏதோ விசாரிக்கணும்னு போனீங்க. இப்போ நீங்க பாட்டுக்கு கிளம்பறேன்னு சொல்றீங்க! ஏதாவது க்ளூ கிடைச்சுதுதா?”

“ம்…கிடைச்சிருக்கு சக்தி.”

“என்னது அது?”

“இந்த கேன்டீன்ல அந்த ஜானை உங்களுக்கு எவ்வளவு நாளா தெரியும்?”

“அவரை கேன்டீன்ல வேலைக்கு சேர்த்து விட்டதே நான் தான் ஜேம்ஸ்.”

“ம்…சூப்பர்வைசர் சொன்னாரு. அது தான் கேட்கறேன் உங்களுக்கு அந்த ஜானை எவ்வளவு நாளா தெரியும்? எப்படி தெரியும்”

“எனக்கு ஜானை…ஒரு ஆறு மாசம் முன்னாடி…நான் எப்பவும் போற லீ கார்னர் ரெஸ்டாரன்ட் வாசல்ல இந்த ஜான் வேலை கேட்டுட்டு நின்னுட்டு இருந்தார். ரெண்டு மூணு தடவ அங்க பார்த்திருக்கேன். நான் பார்த்த போதெல்லாம் அவர் வேலை கேட்டு நிக்கறதும் அந்த ரெஸ்டாரன்ட் காரங்க வேலை ஏதும் இல்லன்னு சொல்லி ஜானை அங்கேந்து நகர்ந்து போக சொல்லறதும்ன்னு இருந்தது. அப்போ அவரை பார்க்கவே பாவமா இருந்ததால நான் எங்க கேன்டீன் சூப்பர்வைசர் கிட்ட ஏதாவது வேலை இருக்கான்னு விசாரிச்சேன். அவரும் ஒரு ஓப்பனிங் இருக்குன்னு சொல்ல உடனே நான் லீ கார்னர் ரெஸ்டாரன்ட் போனேன். ஆனா அன்னைக்கு ஜான் அங்க வரவே இல்லைன்னு ரெஸ்டாரன்ட் ஆட்கள் சொன்னாங்க. அப்போ அவங்க கிட்ட என் கார்ட கொடுத்து ஜான் வந்தால் என்னை வந்து பார்க்க சொல்லுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஒரு இரண்டு நாள் கழிச்சு ஜான் என்னைத் தேடி எங்க ஆஃபிஸுக்கு வந்தார். நான் அவரை எங்க கேன்டீன் சூப்பர்வைசர் கிட்ட கூட்டிட்டு போய் அறிமுகப் படுத்தினேன். அவர்கள் வைத்த ஏதேதோ டெஸ்ட்டில் பாஸ் ஆகி இங்கேயே வேலையில் சேர்ந்துட்டார். சோ கடந்த ஆறு மாசமா இங்க தான் வேலை செய்யறார். ஏன் இப்போ ஜானை பத்தி கேட்கறீங்க?”

“ம்…சொல்லறேன். அந்த ஜான் இப்போ இங்க வேலை செய்யலங்கற விஷயம் உங்களுக்கு தெரியுமா?”

“அப்படியா? எனக்கு தெரியாதே! ஏன் லீவுல இருக்காறா?”

“லீவ் எல்லாம் இல்ல சக்தி. உங்களுக்கு நடந்த அந்த மர்ம சம்பவத்தன்னைக்கு வேலைக்கு வந்தவன்  ஹாஃப் டே லீவ் போட்டுட்டு போனவன் தானாம். இன்னை வரைக்கும் வேலைக்கு வரலையாம்‌. அவன் மொபைலும் நாட் ரீச்சபுளாம்.”

“அய்யோ! அப்படியா? ஏன் அவர் எங்க போனாராம்? ஓ! மொபைல் ரீச் ஆகலன்னு சொன்னீங்க இல்ல. அப்படீன்னா! சோ! அவரு அன்னைக்கு எனக்கு தந்த அந்த சான்ட்விச் ல தான் ஏதாவது இருந்திருக்குமோ?”

“இருந்திருக்கலாம். இல்லாமையும் இருக்கலாம். அதுக்கு அந்த ஜானை பிடிச்சு கேட்டா தான் தெரியும். ஆனா இப்போதைக்கு என்னோட யூகம் என்னன்னா… அவன் உங்களை ஆறு மாசமா ஃபாலோ பண்ணிருக்கான். உங்க நடவடிக்கைகளை வாட்ச் பண்ணிருக்கான்.”

“அப்போ! ஜான் தான் என்னை கடந்திருக்கானா? ஏன் கடத்தனும்? கடத்திட்டு பின்ன ஏன் மறுபடியும் என்ன அப்படியே திருப்பி கொண்டு வந்து இருந்த இடத்திலேயே விடணும்? ஒண்ணுமே புரியலையே!”

“சக்தி! சக்தி! ரிலாக்ஸ் ப்ளீஸ். நான் சொன்னது எல்லாமே என்னோட யூகம்  தான். சோ… அந்த ஜானை பிடிச்சு விசாரிச்சா தான் உண்மை என்னன்னும், நமக்கு ஒரு தெளிவும் கிடைக்க வாய்ப்பு இருக்கு.”

“பாவம்ன்னு நெனச்சு யாருக்குமே உதவி செய்யக்கூடாது போல! என்னத்த சொல்ல!”

“இப்படி எல்லாம் சட்டுன்னு ஒரு கன்க்ளூஷனுக்கு வந்துடாதீங்க. இதை இங்கேந்து எப்படி நகர்த்தணும்னு எனக்கு தெரியும் அதை நான் பார்த்துக்கறேன். மொதல்ல நாம மறுபடியும் அந்த சிசிடிவி கேமராஸை பார்க்கலாம் வாங்க.”

“ம்…ஓகே வாங்க போகலாம். இனி இந்த கேன்டீன்ல ஒரு டம்பளர் தண்ணீ குடிக்கக்கூட பயமா இருக்கும். சரி வாங்க உள்ளே போகலாம்.”

என்று ஜேம்ஸை மீண்டும் சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்து பளிச்சிட்டு காட்டும் அறைக்குள் அழைத்துச் சென்றாள் சக்தி.

மர்ம சம்பவத்தன்று சக்திக்கு சான்ட்விச் செய்து கொடுத்த ஜான் அதன் பின் வேலைக்கு வராதது ஏன்? சூழ்ச்சியாலா இல்லை சூழ்நிலையாலா! பதிலை தேடி…

தொடர்வாள்…

Leave a comment