
தாம்பரம் நால்ரோடு சிக்னல் ரெட்டுக்கு மாறு…
பச்சை நிறம்: ஏய் ரெட் ரெமோ உன்ன தான் சொல்லுறாங்க
மஞ்சள் நிறம்: அடேய் சிவப்பு! சீக்கிரமா எழுந்திரிடா இல்லாட்டி இந்த மக்கா போயிட்டே இருப்பாங்க…அப்புறம் ஏதாவது ஏடா கூடமா ஆயிடும்.
பச்சை நிறம்: அப்புறம் உன்னால நம்மள அப்படியே கழட்டிட்டு போய் வேற எங்கேயாவது போட்டுட்டு… வேற ஒரு கும்பல கொண்டு வந்து ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க!! ம்…சீக்கிரம்.
மெல்ல வெளிச்சமிட்டு காட்டியது சிவப்பு நிற விளக்கு. ஆனால் அதில் அவ்வளவாக பிரகாசம் இருக்கவில்லை.
பச்சை நிறம்: டேய் ஏன்டா இப்படி? கொஞ்சம் பிரைட்டா எரிஞ்சாதானே மக்களுக்கு தெரியும். நீ ஏன் வரவர ரொம்ப சோர்வாவே இருக்க?
சிவப்பு நிறம்: ஆமா!! நான் பிரைட்டா எரிஞ்சா மட்டும் நின்னுடவா போறாங்க?!!! அட போ பச்ச பரிமளம்!!
தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு
பச்சை நிறம்: ஆங்!! ஆங்!! இதோ.
தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…
பச்சை நிறம்: அப்பாடா கரெக்ட்டா எரிஞ்சுட்டேன் இல்ல!!! சரி உன் கதைக்கு வருவோம். சொல்லுடா ரெட் ரெமோ.
சிவப்பு நிறம்: நம்மளோட பேட்ச்ல இருந்த அந்த அடையாறு சிக்னல் சிவப்பு சிக்கல்நாதன் அட்ரா சிட்டி தாங்க முடியல!!
பச்சை நிறம்: அவன் என்ன பண்ணினான். சிவப்பு சிக்கல்நாதன் எங்கயாவது தப்பாகிப்பா கண்ணடிச்சு சிக்கிக்கிட்டானா?
தாம்பரம் நால்ரோடு சிக்னல் சிவப்புக்கு மாறு…
மஞ்சள் நிறம்: அங்க அவன் அவனோட அந்த பச்சை பாரிஜாதத்தோடையும் மஞ்சள் மங்களத்தோடையும் ஜாலியா ரோட்டுல, அழகான வண்டிகளுக்கு சிவப்பு நிறக் கண்ணடிக்கறானோ இல்லையோ அவனோட கேர்ள் பிரண்ட்ஸுக்காக ஒழுங்கா கண்ணடிச்சுக்கிட்டிருப்பானே!! சந்தோஷமா இருப்பாங்க! ம்….
பச்சை நிறம்: என்ன மஞ்ச மருது! ரொம்ப வருத்தப்படறா மாதிரி தெரியுதே!!! ஏன் என்னைய பாத்தா கேர்ள் மாதிரி தெரியலையோ. நீ ஒரு மஞ்ச காமாலக்காரன்.. நான் என்னத்த பண்ண!!!
மஞ்சள் நிறம்: அச்சச்சோ!! நீங்க அக்கா கா!!
பச்சை நிறம்: ஏன் அக்கா எல்லாம் கேர்ள்ஸ் இல்லையா என்ன?
மஞ்சள் நிறம்: அது வேற! இது வேறக்கா!!
பச்சை நிறம்: என்னடா வேற வேற?
தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு
மஞ்சள் நிறம்: சரி சரி அதை விடுக்கா. நீ நல்லாவே எரியிறக்கோய்! சிவப்பண்ணே நீ கண்டின்யூ பண்ணு.
சிவப்பு நிறம்: அதை ஏன் கேட்குறீங்க! நான் சோர்வா இருக்கேன்னு என்னை சரி செய்ய நேத்து கழட்டிட்டு போனாங்க இல்ல!!!
தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…
பச்சை நிறம்: அட ஆமா! அந்த செந்தில்நாதன் தான் உன்னைய எடுத்துட்டு போய்…சரி செஞ்சாருன்னு சொன்னாரு…ஆனா எனக்கு… நீ சரி ஆனா மாதிரி ஒண்ணும் தெரியலை!
சிவப்பு நிறம்: இந்த காலத்துல முக்கால் வாசி பேரும் அப்படி தான் பண்ணறாங்க. ஒருத்தரும் அவங்க வேலைய சரியாவே பண்ணறதில்ல. என்ன பண்ண. நான் சொல்ல வந்தது செந்தில பத்தி இல்ல.
தாம்பரம் நால்ரோடு சிக்னல் சிவப்புக்கு மாறு…
மஞ்சள் நிறம்: அட பாவிங்களா!! தம் புடிச்சு எவ்வளவு நேரம் பளிச்சுன்னு எரிஞ்சேனே!! கொஞ்சமாவது பாத்து போனாங்களான்னு பாரு! பச்சை அக்கா உன்னைய பார்த்தா மாதிரி இல்ல பறக்குறாங்க.
பச்சை நிறம்: அட ஆமா மஞ்ச மருது! என்னத்த சொல்ல போ! இந்த ஊருக்கெல்லாம் எதுக்கு நம்ம மூணு பேருன்னே தெரியல!!
தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு
சிவப்பு நிறம்: அதைச் சொல்லு பச்சைக்கா.
தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…
பச்சை நிறம்: டேய் ரெட் ரெமோ, நீ சொல்ல வந்ததை அப்படியே விட்டுட்டியே! மேல சொல்லு.
சிவப்பு நிறம்: ஆங்!! எங்க விட்டேன். ஆங்… அங்க என்னைய சரி செஞ்சுகிட்டே… அங்க இருந்தவங்க எல்லாருமா பேசிகிட்டு இருந்தாங்க.
தாம்பரம் நால்ரோடு சிக்னல் சிவப்புக்கு மாறு
பச்சை நிறம்: ரெட் நீ அப்படியே எரிஞ்சுகிட்டே உன் கதையை சொல்லு.
சிவப்பு நிறம்: ஆங்! இதோ.
பச்சை நிறம்: ம்…ஹும்…உன்னைய அந்த செந்தில்நாதன் மறுபடியும் கழட்டிட்டு போவாருன்னு நெனைக்கிறேன். சுத்தம். உசுரு போறா மாதிரியே ஏரியிற. ம்…சரி சரி மேல சொல்லு.
சிவப்பு நிறம்: அவங்க சொன்னாங்க நம்ம அடையார் சிக்னல் சிவப்பு சிக்கல்நாதன் கொஞ்சம் கூட ஓய்வு இல்லாம இத்தனை வருஷம் உழைச்சும் எந்த விதத்திலும் பழுதாகாம இன்னமும் ப்ரைட்டா இருக்கானாம். ஆனா நான் அடிக்கடி வர்க்ஷாப்புக்கு விசிட் அடிக்கிறேனாம்!! அது எப்படி அவனால மட்டும் அப்படி ஃபிட் அன்ட் ஃபைனா இருக்க முடியுது. ஒவ்வொரு வருஷம் கூட கூட ஒவ்வொரு வயசும் ஏறிக்கிட்டே தானே போகும். அவனுக்கு மட்டும் கொறஞ்சுக்கிட்டே வருதா என்ன?
தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு…
மஞ்சள் நிறம்: இனி கொஞ்ச நேரத்துக்கு பச்ச பரிமளம் அக்கா வாயத் திறக்க மாட்டாங்களே!!!
சிவப்பு நிறம்: ஆங்! எப்பவும் என்னைய மட்டும் எரிஞ்சுக்கிட்டே சொல்லும்பாங்க ஆனா அவங்க வேலைன்னு வந்துட்டா பேச மாட்டாங்களே!!
மஞ்சள் நிறம்: என்ன ரெட் ரெமோண்ணே! என்னமோ புதுசா நடக்கறா மாதிரி சொல்லுறீங்க? பச்சை பரிமளம் அக்கா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரி ஆக்கும்! சரி நீங்க அக்கா கிட்ட மட்டும் தான் சொல்லுவீங்களோ!! எங்க கிட்ட சொன்னா என்ன ஆயிடுமா!!
தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…
மஞ்சள் நிறம்: இதோ அழைப்பு வந்துடுச்சு. என்னைய நீங்களும் மதிக்கறது இல்ல!! மக்களும் மதிக்கறதில்ல!! என்னத்த சொல்ல.
பச்சை நிறம்: ம்…என்ன சொன்ன ரெட்டு!! ஆங்!! நம்ம சிக்கல்நாதனுக்கு வயசு கொறஞ்சுகிட்டே வருதான்னு கேட்ட இல்ல!!
தாம்பரம் நால்ரோடு சிக்னல் சிவப்புக்கு மாறு…
சிவப்பு நிறம்: இதோ வந்திடுறேன்க்கா!
பச்சை நிறம்: சரி ரெட் ரெமோ. நீ போய் உன் வேலையை பாத்துக் கிட்டே என் பதில கேளு. அந்த அடையாறு சிக்னல சர்வீஸ் செய்யறவரு நம்ம கந்தசாமி ஐயா. அவருக்கு வயசு ஐம்பத்தி எட்டு. இன்னும் ஒரு வருஷமோ இல்ல ரெண்டு வருஷமோ அப்புறம் ரிட்டையர் ஆயிடுவார். ஆனா அவரோட இந்த முப்பத்தெட்டு வருஷ சர்வீஸ்ல அவரு சரி பார்த்த டிராஃபிக் லைட்ஸ் எதுவுமே சீக்கரத்துல பழுதானதா சரித்திரமே இல்ல. அப்படி ஒரு பொறுப்பான வேலை ஆள்.
தாம்பரம் டிராஃபிக் சிக்னல் பச்சைக்கு மாறு…
சிவப்பு நிறம்: அப்படியாக்கா? அப்போ ஏன் நம்மள மட்டும் இந்த செந்திலுக்கிட்ட விடுறாங்களாம்!! நல்ல வேலை தெரிஞ்ச, நல்லா வேலை செய்யுற கந்தசாமி ஐயா கிட்டயே கொடுத்து சரி செய்ய சொல்லலாம் இல்ல…நானும் அந்த சிவப்பு சிக்கல்நாதன் மாதிரியே எப்பவும் யூத்தா இருப்பேன்ல்ல.
தாம்பரம் டிராஃபிக் சிக்னல் மஞ்சள் நிறத்துக்கு மாறு…
பச்சை நிறம்: என்ன பண்ண ரெட் ரெமோ! அவரு அந்த ஏரியா சர்விஸ் மேன். நமக்கு வாச்சிருக்கறது இந்த செந்தில் தான். ஆனா ரொம்ப மக்கர் பண்ணற விளக்கு எல்லாம் கடைசியில் அவரு கிட்ட தான் கொண்டு போவாங்க. உன்னைய பாத்தா எனக்கென்னவோ அடுத்த தடவை உன்னைய கந்தசாமி ஐயா கிட்ட தான் கூட்டிட்டு போவாங்கன்னு நெனைக்கிறேன்.
தாம்பரம் டிராஃபிக் சிக்னல் சிவப்புக்கு மாறு…
தாம்பரம் டிராஃபிக் சிக்னல் சிவப்புக்கு மாறு….ம்…சிவப்புக்கு மாறு…
மஞ்சள் நிறம்: அய்யய்யோ!! பச்ச பரிமளம் அக்கா!! இவன் என்ன முழுசா அணஞ்சுட்டான். சுத்தம்…அதோ அங்க பாருங்க அந்த டிராஃபிக் போலிஸ் அண்ணே ஓடி வராரு.
பச்சை நிறம்: கொஞ்சம் கீழே பாரு மஞ்ச மருது. நம்ம ரெட் ரெமோவ கழட்டிட்டு போக ஆளு வந்தாச்சு.
மஞ்சள் நிறம்: அட ஆமா! இந்த தடவையாவது அவனை அந்த கந்தசாமி ஐயா கிட்ட கொண்டு போகட்டும்.
பச்சை நிறம்: இனி கொஞ்ச நேரத்துக்கு நமக்கு வேலையில்லை.
மஞ்சள் நிறம்: ஏன்க்கா எல்லா மக்களும் இந்த கந்தசாமி ஐயா மாதிரி அவங்க அவங்க வேலையை ஒழுங்கா செஞ்சா எந்த வித பிரச்சினையுமே வராது இல்ல. அப்புறமும் ஏன் சிலர் தனக்கான வேலையை சரியாவே செய்ய மாட்டேங்கறாங்க? இந்த செந்தில் நாதன போல!!
பச்சை நிறம்: நாம மூணு பேருமே டிராஃபிக் சிக்னல் தான் ஆனா நம்ம மூணு பேருக்கும் வித்தியாசம் இருக்கு தானே!
மஞ்சள் நிறம்: என்ன பெரிய வித்தியாசம் நீங்க பச்சை நிறம், நான் மஞ்சள் நிறம் அப்புறம் நம்ம ரெமோ சிவப்பு நிறம்…மத்தபடி நாம ஒரே மாதிரி தானே இருக்கோம். ஒரே வேலையை தானே செய்யறோம்!
பச்சை நிறம்: ஏதோ ஒரு வித்தியாசமாவது இருக்கு தானே!
மஞ்சள் நிறம்: ஆமாம் இருக்கு.
பச்சை நிறம்: பொதுவா பார்த்தா நாம டிராஃபிக் சிக்னல் ஆனா நமக்குள்ளேயே வித்தியாசம் இருக்கும்போது, மனுஷங்களுக்குள்ள இருக்காதா என்ன? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி. சிலர் அவங்க வேலையில் சின்சியறா இருப்பாங்க, சிலர் அப்படி இருக்கறதில்ல. என்ன பண்ண மஞ்ச மருது?
மஞ்சள் நிறம்: அக்கா அக்கா! பச்சை பரிமளம் அக்கா! அங்க பாரு. நம்ம ரெட் ரெமோவை எடுத்துட்டு வராங்க.
பச்சை நிறம்: ஏய் இந்த தடவ வேற யாரோ வர்றாங்க போல! அடேய் இது நம்ம செந்தில் இல்லையே டா!
மஞ்சள் நிறம்: அட ஆமாக்கா!! இவரு புதுசு போல. அவரு சட்டையில பேரு ஏதோ ராமசாமின்னு போட்டுருக்குக்கா. அப்பாடா அந்த சொதப்பல் செந்தில் நாதன்ட்டேந்து நமக்கு விடுதலை. அக்கா சிவப்பு அண்ணனை பொறுத்தராருக்கா. இறங்கிட்டாருக்கா.
தாம்பரம் டிராஃபிக் சிக்னல் சிவப்புக்கு மாறு…
மஞ்சள் நிறம்: பச்சை பரிமளம் அக்கா முன்ன விட இப்போ எவ்வளவு பளிச்சுனு எரியுறான் பாருங்க அக்கா!!
தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு…
சிவப்பு நிறம்: ஹாய்! ஐ ஆம் ரெட் ரகு. அன்ட் யூ!
மஞ்சள் நிறம்: பச்ச பரிமளம் அக்கா சாச்சுப்புட்டாங்கக்கா!!!
தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…
பச்சை நிறம்: என்னடா மஞ்ச மருது! நான் தான் அப்பவே சொன்னேன் ல நமக்குள்ளேயும் வித்தியாசம் இருக்குன்னு!! நம்ம ரெட் ரெமோ அவன் வேலையை பாக்காம அந்த அடையாறு சிவப்பு சிக்கல பத்தியே நெனைச்சுட்டு கோட்டை விட்டுட்டான். அடுத்தவனை பத்தி நினைக்காம ஒழுங்கா அவன் வேலையில மட்டும் கவனம் செலுத்தி இருந்தா இங்கேயே நம்ம கூடவே இருந்திருப்பான்! ஆனா அவன் அப்படி செய்யல அதுதான் ரெமோ இடத்துல இப்போ ரகு! அதே மாதிரி தான் அந்த செந்தில் நாதனும் அதுனால தான் செந்திலுக்கு பதில் ராமசாமி. தட்ஸ் ஆல். வெஹிக்கிள் மே கம் வெஹிக்கிள் மே கோ பட் சிக்னல் ஹாஸ் டூ கோ ஆன் ஃபார் எவர்! ஹாய் ரெட் ரகு! ஐ ஆம் பச்சை பரிமளம். வெல்கம் டூ தாம்பரம் நால்ரோடு சிக்னல்.
❤️முற்றும்❤️
நா. பார்வதி