ஓர் புதிய பயணம்

துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவது என்பது ஒரு மாபெரும் சாதனை புரிவதற்கு இணையானதாகும் என்று அனைவரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது எவ்வளவு உண்மை என்று இங்கிருக்கும் மக்கள் அனைவரும் நன்கறிந்த விஷயமாகும். இந்தியாவில் கார் ஓட்டி பழக்கம் இருப்பதால் முதன்முதலில் துபாய் வந்த போது இங்கேயும் ஓட்டுனர் உரிமம் எடுத்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது. எனது இந்த விருப்பத்தை நண்பர்களிடம் சொன்ன போது, இங்கு கார் ஓட்டுவது சுலபம், ஏனெனில் லேன் சிஸ்டம். ஆனால் அதற்கான உரிமம் பெறுவது என்பது மிக மிக கடினமான செயல்முறை என்றும், மேலும் பலர் ஒரு வருட காலம் எல்லாம் பயிற்சி பெற்றும் ஓட்டுனர் உரிமம் பெற முடியாமல் உள்ளனர் என்றும் அவர்கள் கூற கேட்டதும் மனதிற்குள் ஓர் அச்சம் எழுந்தது உடனே அந்த எண்ணத்தை ஒத்தி வைத்தேன். முதலில் என் கணவர் கார் ஓட்டுனர் உரிமத்தை பெற்றார். இருபது வருடங்கள் கார் ஓட்டி பழக்கம் இருந்தாலும், அவரை இருபது மணிநேரம் வகுப்பு எடுத்தாக வேண்டும் என்று கூறிவிட்டனர் துபாயின் சாலை போக்குவரத்து ஆணையம். அவரின் அலுவலக பணிக்கு இடையே அவற்றை பூர்த்தி செய்து அவர் அந்த ஓட்டுனர் உரிமத்தை பெற ஐந்து மாதங்கள் எடுத்தது. அதற்கே நண்பர்கள் பலர் “பலே” என்று கூறினர். அப்போதும் என்னடா ஒரு ஓட்டுனர் உரிமம் பெறுவதில் என்ன இருக்கிறது! அதுவும் இந்தியாவில் பல வருடங்களாக கார் ஓட்டி பழக்க இருப்பவர்களுக்கு! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது என்று கணவரும் கூற கேட்டதும், முதலில் ஒத்தி வைத்த நான் பின்பு வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டேன்.

எங்காவது சென்று வர வேண்டுமெனில் டாக்ஸி/ மெட்ரோ வில் சென்று வந்தேன். சில நேரங்களில் கணவர் அழைத்து செல்வார் அல்லது நண்பர்கள் அழைத்து செல்வார்கள். பின்பு மகன் அழைத்துச் சென்றான். இப்படியே ஏழு ஆண்டுகள் உருண்டோடின. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக வேலை நிமித்தம் அடிக்கடி வெளியே சென்று வர வேண்டியிருப்பதால் கணவர் மற்றும் நண்பர்களை தொந்தரவு செய்ய கஷ்டமாக இருந்தது. நானும் ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும் என்று முடிவெடுத்தேன். கடந்த டிசம்பர் மாதம் கார் ஓட்டுனர் வகுப்பில் சேர்ந்தேன். சேர்ந்ததும் முதலில் RTA அங்கீகாரம் பெற்ற கண் பரிசோதனை மையம் சென்று கண்களை பரிசோதனை செய்துக் கொள்ள சொன்னார்கள். நானும் சென்றேன் பரிசோதனை முடிந்ததும் அவர்கள் சிஸ்டத்தில் அப்டேட் செய்தனர். தானாக அது RTA ஆப் இல் அப்டேட் ஆனது. மீண்டும் அதே சென்டருக்கு சென்று, கார் ஓட்டி அனுபவம் இருப்பதாக கூறி எனது இந்திய ஓட்டுனர் உரிமத்தை காட்டினேன். இருந்தாலும் வகுப்புகள் எடுத்தாக வேண்டும் என்று கூறினர். நாம் தான் இந்தியாவில் ஓட்டி இருக்கிறோமே! பார்த்துக்கலாம்! என்ற நினைப்பில் தைரியமாக இருந்தேன்.

முதலில் ஆன்லைனில் தியரி கிளாஸ் எட்டு மணிநேரம் எடுத்தாக வேண்டும் என்றனர். சரி என்று அந்த வகுப்பில் கலந்துக் கொண்டேன். அது முடிந்ததும் அதற்கான பரீட்சை தேதி மற்றும் நேரத்தை முடிவு செய்து அதற்கு பதிவும் செய்தேன். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் துபாய் RTA அலுவலகம் சென்றேன். பெண்கள் அமர்ந்துக் கொள்வதற்தான இடத்தில் அமர்ந்தேன். எனது பெயரை அழைத்தனர். உள்ளே சென்றேன். அங்கே குட்டி குட்டியாய் நிறைய அறைகள் இருந்தன (நம்ம ஊரில் முன்பெல்லாம் இருந்த எஸ்.டி.டி பூத் மாதிரி) அதில் ஒரு அறைக்குள் என்னை அமர்ந்து பரீட்சையை கணினியில் எடுக்கச் சொன்னார்கள். நான் சென்று அமர்ந்து காதில் ஹெட் ஃபோனை வைத்து ஸ்டார்ட் பட்டனை அழுத்தியதும் துவங்கியது பரீட்சை‌. அரை மணி நேர பரீட்சை, நாற்பது கேள்விகள். பன்னிரண்டு கேள்விகளுக்கு மேல் தவறான பதில் அளித்தால் அந்த நபர் தோல்வி அடைந்து விட்டார் என்று மீண்டும் வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள். நான் பரீட்சையை முடித்து அந்த கூண்டிற்குள் இருந்து வெளியே வந்ததுமே அங்கு அமர்ந்திருந்த RTA ஊழியர் (பெண்மணி) ஒருவர் வாழ்த்துகள் நீங்கள் ஹை ஸ்கோர் செய்துள்ளீர்கள் என்று சொல்லி ஒரு காகிதத்தை என்னிடம் நீட்டினார். நானும் மகிழ்ச்சியில் நன்றி தெரிவித்து அதை கையில் வாங்கிப் பார்த்தேன். நாற்பதுக்கு முப்பத்தி எட்டு என்றும் தியரி டெஸ்ட் பாஸ் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. உடனே அதை கைபேசியில் படம் பிடித்து கணவருக்கும் மகனுக்கும் வாட்ஸ்அப் இல் அனுப்பி வைத்தேன்.

அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அங்கிருந்த வரவேற்பாளரை கேட்டேன். அவர் ஓர் அறையை காட்டி அங்கு சென்று அடுத்ததாக ஓட்டுனர் பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்ய சொன்னார். நானும் சென்றேன். ஆனால் வகுப்புகள் இரண்டு வாரம் தள்ளி தான் உள்ளதாக கூறினர். சரி பரவாயில்லை என்றேன். அடுத்து, உங்களுக்கு பெண் பயிற்றுவிப்பாளர் வேண்டுமா இல்லை ஆண் பயிற்றுவிப்பாளர் வேண்டுமா என்று கேட்டனர். ஆங்!! யாராக இருந்தாலும் சரி நான் சீக்கிரம் லைசென்ஸ் பெற வேண்டும் அவ்வளவு தான் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே பதிவு செய்து விட்டதாகவும், வகுப்பு அட்டவணை மெஸேஜில் வரும் என்றும் கூறி வேறு எதாவது தெரிந்துக் கொள்ள வேண்டுமா என்றார். மனதிற்குள் அவரின் சிரிப்புக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்றெண்ணிக் கொண்டே… இல்லை அவ்வளவு தான் நன்றி என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்.

அவர்கள் கூறியது போலவே வகுப்பு அட்டவணை மெஸேஜ் வந்தது. இரண்டு வாரம் கழித்து வகுப்புக்கு சென்றேன். பயிற்றுவிப்பாளருக்கு காலை வணக்கம் சொன்னேன். காரில் அமரும்படி சொன்னார். எனக்கு கார் ஓட்டி பழக்கம் இருப்பதால் முதல் வகுப்பில் எனது பயிற்றுவிப்பாளர் என்னை சற்று நேரம் காரை ஓட்டி காண்பிக்க சொன்னார். நானும் ஓட்டினேன். நிறுத்த சொன்னார். நிறுத்தினேன். “காரில் உள்ள கண்ணாடிகளை பார்க்கும் பழக்கமே இல்லையா? எப்படி நீங்கள் உங்கள் ஊரில் கார் ஓட்டினீர்கள்?” என்று கேட்க, சற்றும் தயங்காமல் “அடுத்தவர் அதை தட்டி உடைத்து விடுவார்கள் என்று எங்கள் ஊரில் நாங்கள் காரின் கண்ணாடிகளை மடக்கி கொண்டு காருக்குள் இருக்கும் சென்டர் மிரரை மட்டும் பார்த்து வண்டி ஓட்டுவோம்.” என்று பதிலளித்தேன். அதைக் கேட்டவர் என்னை பார்த்து, “இங்கே நீங்கள் காரின் வலது, இடது புற கண்ணாடிகள், சென்டர் மிரர், ஷோல்டர் செக் இதெல்லாம் பார்த்து ஒட்டவில்லை என்றால் உங்களுக்கு லைசென்ஸ் கிடைக்காது” என்றார். ஆக இப்படிப்பட்ட சுப வார்த்தைகளால் ஆரம்பித்தது எனது கார் ஓட்டுனர் வகுப்பு.

பயணம் தொடரும்…..