இரட்டைவால் குருவி / கரிக்குருவி எனப்படும் குருவி மட்டுமே கழுகின் மீது அமர்ந்து பயணிக்கும் தைரியம் உள்ள ஒரே பறவை இனம். இவை பயமறியா பறவை இனம். இது தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட  தாக்கும் குணம் கொண்டது.

ஆம் இந்த வகைக் பறவை கழுகின் மீது பயணிப்பதோட நின்றிடாது. அது கழுகின் கழுத்தில் அமர்ந்து சவாரி செய்வதோடு கழுகின் கழுத்தை தனது சிறிய கூர்மையான அலகால் கொத்தி கொத்தி புண்ணாக்குமாம். அது தான் அதன் பொழுதுப் போக்கு போல(சில மனிதர்களைப் போல்).  சிரமப்படாமல் தன் சிறகுகளுக்கு அதிக வேலைக் கொடுக்காமல் இலவச வான்வழிப் பயணத்துடன் கொத்திக் கொத்தி விளையாடும் விளையாட்டும் கிடைத்தால் கசக்குமா கரிக்குருவிக்கு?

தன் மீது சொகுசு பயணம் மேற்கொள்வதோடு தன்னை ரணமாக்கும் அந்த கரிக்குருவியை கழுகார் ஒன்றுமே செய்ய மாட்டார். அந்த சின்னக் குருவியுடன் சண்டைப் போட்டு தன் நேரத்தையோ தனது சக்தியையோ வீணாக்க அவருக்கு விருப்பமில்லை. அதனால் என்ன செய்வார் தெரியுமா? தனது நீளமான சிறகுகளை வான் முழுவதுமாக விரித்து மெல்ல மெல்ல உயரத்தை அதிகரித்து வானில் உயர்ந்துப் பறப்பாராம். அது தானே அவர் வலிமையே!! 

ஆம் மற்றப் பறவைகளைக் காட்டிலும் அதிக உயரம் பறக்கக் கூடியது கழுகு மட்டுமே. கழுகு தனது தனித்திரனால் உயர உயர பறந்து, அதிகமான உயரத்தை எட்டுவதிலேயே அதன் கவனம் இருக்குமாம். சாதாரணமாக மழைக்கு காற்று வீசினாலே மரக்கிளைகளில் ஒதுங்கும்  பறவை இனத்தில் நமது கழுகார் புயலிலும் ஜம்பமாக மேகத்தைக் கிழித்துக் கொண்டு பறக்கவே ஆசைப்படும் தனித்துவம் வாய்ந்த பறவை இனமாகும். மற்றப் பறவைகள் அனைத்தும் கூட்டமாகவே பறக்கும். ஆனால் கழுகள் மட்டுமே தனித்தனியாக பறக்கக்கூடியவை. 

இவ்வளவு தனித்துவம் வாய்ந்த கழுகின் கழுத்தைக் கொத்திக் கொண்டிருக்கும் குருவியிடம் சண்டையிடாமல் அது தனது உயரத்தை உயர்த்திக் கொண்டே சென்று குருவியையும் கூடவே கூட்டிச் செல்ல ஒரு கட்டத்தில் கரிக்குருவியால் கழுகின் உயரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் பிராணவாயு குறைவினால் கழுகின் மீதிருந்து வீழ்ந்திடுமாம். 

இந்த சிறிய கரிக்குருவி மற்றும் கழுகிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது. கழுகைப் போல் தன்னம்பிக்கை உடையவர்கள் வாழ்வின் சவால்களை அவர்களாகவே சந்திப்பார்கள் கூட்டம் சேர்க்க மாட்டார்கள்.  பலவீனமானவர்களே கூட்டத்துடன் அதிகம் காணப்படுவார்கள். மன ஒருமைப்பாடு மற்றும் துல்லியமான இலக்கு இவையே கழுகுகள் தங்கள் இரையை எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அதை அடையும் சக்தியைக் அதற்கு கொடுக்கிறது. 

அது போல நாமும் நமது இலக்கை நோக்கி,  மன ஒருமைப்பாட்டுடன் உயர்ந்துக் கொண்டே சென்றோமேயானால் கரிக்குருவியைப் போல நமக்கு இடையூறுகள் செய்ய பலர் வந்தாலும் அவர்கள் எல்லாம் நமது உயரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போயிவிடுவர். எல்லா வாதங்களுக்கும் நாம் பிரதிவாதம் வைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா விமர்சகர்களுக்கும் நாம் பதிலளிக்க வேண்டிய அவசியமுமில்லை. நாம் நமது குணத்தை, தன்னபிக்கையை, தரத்தை எல்லாவகையிலும் உயர்த்திக் கொள்வோம். 

எதிரிகள், நமக்கு தீங்கிழைக்கக் காத்திருப்பவர்கள், கரிக்குருவி கழுகைக் கொத்துவதுப் போல நமக்குப் பின்னாலிருந்து என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், செய்துக் கொள்ளட்டும் அதைப் பற்றி சிந்தித்து கவலைக் கொள்ளல் வேண்டாம், அப்படிப் பட்டவர்கள் இருக்க வேண்டிய இடம் அதுதான் என்று விட்டுத்தள்வோம்.

நாம் நமது பயணத்தை மட்டும் கவனத்துடன் மேற்கொண்டு உயரப்பறப்போம்.

❤️நன்றி❤️

நமது நண்பர்கள் அல்லது சொந்தக் காரர்கள் சிலர் வீடுகளுக்குச் சென்றால் பல மணி நேரம் அமர்ந்து பேசிக்கொண்டே இருக்கத் தோன்றும். வெகு நேரம் கழித்து கடிகாரத்தைப் பார்த்து “ஓ நேரம் இவ்வளவு ஆகிவிட்டதா” என்று கடிகாரம் பார்த்தால் தான் உணர்வோம். கிளம்புகிறோம் என்று சொல்ல ஆரம்பித்ததிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்தும் கிளம்பாமல் பேசிக்கொண்டே இருப்போம். அப்படிப் பட்ட வீடுகளுக்கு எப்போது போக நினைத்தாலும் உடனே கிளம்பி விடுவோம். எந்த வித சாக்கு போக்கும் சொல்லத் தோணாது. எப்போது மறுபடியும் அவர்கள் வீட்டுக்கு போகலாம் என்று உள்ளம் எதிர்ப்பார்த்திருக்கும்.

அதே நாம் சில நண்பர் அல்லது சொந்தக்காரர் வீடுகளுக்கு செல்வதற்கே மிகவும் யோசிப்போம். அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டுமென்று இருந்தாலும் அடுத்தவாரம் பார்ப்போம் இல்லையெனில் அடுத்த மாதம் போய்க் கொள்வோம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். அப்படியே சென்றாலும் அவர்கள் வீட்டிற்குள் சென்றதுமே நம் மனதில் அமைதி குறைந்ததுப் போலவும் ஒரு வகையான சங்கடமும் நம்மை ஆட்கொள்ளும். ஏதோ இனம் புரியாத ஒரு பதற்றம் அங்கிருந்து கிளம்பும் வரை இருந்துக் கொண்டே இருக்கும். சற்று நேரம் அமர்ந்து பேசியதுமே கிளம்பிவிடுவோம். அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் நமக்குள் ஒரு வகையான மனநிம்மதியும், ஏதோ ஒரு பிடியிலிருந்து விடுப்பட்டது போல தோன்றும். 

இது நம்முள் பெரும்பாலானோர் அனுபவித்த உணர்வு என்றாலும் அதை எத்தனைப் பேர் நினைத்து அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துள்ளீர்கள்? ஏன் அப்படி நம்முள் ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்பதைப் பற்றியது தான் இந்த கட்டுரை. ஏனெனில் இது மாதிரியான  நேர்மறை / எதிர்மறை உணர்வுகளை உணர்ந்ததாக பலர் சொல்லிக் கேட்டுள்ளேன். நானும் பல முறை உணர்ந்திருக்கிறேன். 

இந்தப் பதிவு  ஒருவர் வீட்டில் நமக்கு அளிக்கப்படும் உபசரிப்பினாலோ அல்லது அவர்கள் நமக்கு அளிக்கும் மரியாதை / மதிப்பினாலோ எழும்  மாற்றங்களைப் பற்றியது அல்ல. அந்த வீட்டினில் உள்ள ஆற்றல் /சக்தி எனப்படும் எனர்ஜி தான் எல்லாவற்றிற்கும் காரணமாகும்.

நாம் ஒருவர் வீட்டுக்கு செல்கிறோம் அவர்கள் நம்மை ராஜ உபசாரம் செய்கிறார்கள், நம் மீது அதீத மரியாதை மற்றும் மதிப்புடன் நம்மை நடத்துகிறார்கள் என்றாலும் நமக்கு ஒரு வகையான பதற்றம், சங்கடம், மனதில் அமைதியின்மை போன்ற உணர்வுகள் இருந்துக் கொண்டே இருக்கும். அதே சிலர் வீடுகளில் வெறும் தண்ணீர் குடித்தாலும் மனம் நிம்மதியடையும், மனதில் ஒரு வகையான மகிழ்ச்சிப் பொங்கும். இன்னும் சற்று நேரம் பேசிவிட்டுப் போவோம் என்று நம்மை தூண்டிலிட்டு அமர வைக்கும். இவை நேர்மாறாகவும் நடக்கலாம். அவை அனைத்தும் நாம் சந்திக்கும் நபரின் வீட்டினுள் உள்ள ஆற்றல்/சக்தி செய்யும் வேலையே!

அது என்ன ஆற்றல்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நம் வீட்டுப் பெரியவர்கள் அவர்கள் வீட்டை அவ்வளவு சீக்கிரம் விற்கவோ அல்லது இடித்து புதுபிக்கவோ விடமாட்டார்கள். அதற்கு காரணம் பெரும்பாலும் அது “அவர் கணவர்/மனைவி/அப்பா/ அம்மா வாழ்ந்த வீடு, அதிர்ஷ்டமான வீடு. ராசியான வீடு” என்று பலர் பலவகையாக கூறுவர். ஆனால் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் உள்ளது என்பது தான் உண்மையான காரணமாகும். ஆம் நமக்கு எப்படி நேர்மறை /எதிர்மறை எண்ணங்கள் /சிந்தனைகள் உள்ளதோ அதே போல நாம் வசிக்கும் வீட்டிற்கும் நேர்மறை/எதிர்மறை ஆற்றல் எனப்படும் பாஸிடிவ்/நெகடிவ் எனர்ஜி உள்ளது. 

அதைப் பற்றி பலர் பல விதமாக எழுதியும், காணொளியாகவும் பதிவிட்டுள்ளனர். அவைகளை இணையதளத்தில் பறக்கவிட்டு, தங்கள் வீட்டில் இது சரியில்லையோ, நம்ம வீட்டில் இது இருப்பதால் / இல்லாததால் தான் அது நடந்ததோ என்று எண்ணும் அளவிற்கு மக்களை கொண்டுச் சென்றுவிட்டனர்.  அதற்கு வாஸ்து சரி செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும், வீட்டில் இதை வாங்கி இந்த இடத்தில் வைத்தால், அதை வாங்கி அந்த இடத்தில் வைத்தால்  சரியாகிவிடும் என்றும் பலர் கூறி மக்களைக் குழப்பம் என்னும் குட்டையில் தள்ளிவிட்டு கலங்கச் செய்து அதில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் பல வழிகளில்.

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எல்லா திசைகளிலும் இருப்பார் நமது பிக் பாஸ் வீட்டினுள் உள்ள காமெராக்களைப் போல எங்கும் நிறைந்திருப்பார். அவரிடமிருந்து எவருமே ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்றிருக்கும் அவரையே நம்மக்கள் ஒரு குறிப்பிட்ட திசையை பார்த்து தான் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஏன்? எதற்கு?. ஒரு சிலர் கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு என்கிறார்கள், வட இந்தியாவில் மேற்குப் பார்த்து வைக்க வேண்டும் என்கிறார்கள். இதில் நான் படித்த ஒரு கட்டுரையை பற்றி உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். 

அந்த கட்டுரையில் ஒரு வீட்டின் பூஜை அறையை வடகிழக்கு / தென்கிழக்கு/ கிழக்கு/வடக்கு மூலைகளில் வைத்தால் தான் நமக்கு நல்லது நடக்கும் என்று கட்டுரையின் துவக்கத்தில் எழுதியிருந்தது. அதே கட்டுரையின் முடிவில் நான்கு திசைகளான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று எல்லா திசைகளிலும் பூஜை அறையை அமைக்கலாம் என்றும் பதிவிடப்பட்டிருந்தது. கட்டுரையை முழுவதும் படிக்காமல் முதல் மூன்று பத்திகளை மட்டும் படித்தால் நாம் நமது வீட்டின் பூஜை அறையை மாற்றி வைக்க வேண்டும் என்னும் அளவிற்கு நம் மனம் எண்ணத் துவங்கிவிடும், அப்படி இருந்தது அந்த கட்டுரையின் ஆரம்பத்திலிருக்கும் மூன்று, நான்கு பத்திகளும். இது நம் வீட்டின் எல்லா அறைகளுக்கும் நமது வீடு முழுவதுக்குமாக நாம் யோசிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயமாகும். இங்கே ஒரு உதாரணத்திற்காக பூஜை அறையை குறிப்பிட்டுள்ளேன்.  இவை எல்லாம் சொந்த வீடு வாங்கிய அல்லது இருக்கும் நபர்களுக்கு சரி, ஆனால் வாடகை வீட்டிலிருப்பவர்கள் எப்படி மாற்றி அமைக்க முடியும்? அப்போ அவர்கள் வீடுகளில் எப்பொழுதும் பிரச்சினை என்றோ அல்லது எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் என்றோ எடுத்துக்கொள்ள முடியுமா என்ன?

அவரவர் பின்பற்றும் முறைகள் அவரவர் தனிப்பட்ட விருப்பமே. அதில் எந்த வித கருத்தையோ/எண்ணத்தையோ/ அபிப்பிராயத்தையோ/பின்பற்றும் முறையையோ தவறென்றோ இல்லை குற்றமென்றோ கூற நமக்கு உரிமையில்லை.  ஆனால் எளிதாக சில மாற்றங்களை நம்முள் நாம் கொண்டுவந்தாலே போதுமானது என்று சொன்னால்!! அனைவரும் சற்று சிந்திக்கத் துவங்குவார்கள் இல்லையா? அது போல, சில மிகவும் எளிமையான விஷயங்கள், மாற்றங்கள் நமது வீட்டினில் உள்ள எதிர்மறை ஆற்றல் எனப்படும் நெகடிவ் எனர்ஜியை துறத்தியடிக்க வேண்டியவையாகும். அது சொந்த வீடானாலும் பொருந்தும் வாடகை வீடானாலும் பொருந்தும். 

நல்ல வெளிச்சம் மற்றும் காற்று ஆகிய இரண்டும் நம் வீட்டினுள் நிறைந்திருக்கும் படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவே மிக முக்கியமான தேவைகளில் ஒன்று.

மற்ற எல்லாவற்றையும் விட நம் வீட்டிலிருக்கும் எதிர்மறை ஆற்றலை துறத்த  மிக மிக முக்கியமான அவசியமான ஒன்று என்னவென்றால் அது நாம் தான். நமது வீடு நம்முடைய பிரதிபலிப்பே ஆகும். வீட்டில் வசதி இருக்கிறதோ இல்லையோ வாஸ்து படி அமைந்திருக்கிறதோ இல்லையோ அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சில மாதங்கள் நமது வீட்டில் ( சொந்த வீடோ/ வாடகை வீடோ) 

நாம் நல்ல எண்ணங்களை மட்டுமே எண்ணுவோம். 

வீட்டிலுள்ள அனைவரிடமும் அன்பாகவும் அமைதியாக பேசுவோம்.

நம் வீட்டிலுள்ள ஒரு நபர் சோர்வடைந்தாலும் மற்ற அனைவருமாக அந்த நபருக்கு தோள் கொடுத்து உற்சாகத்தை பரிசளிப்போம்.

கோபம், வெறுப்பு, போட்டி, பொறாமை, பொய், ஏமாற்றுதல், எரிச்சல், வன்மம் போன்றவைகளை நம்மிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு 

அமைதியை நமதாக்குவோம்.

வெறுப்பு மற்றும் வன்மத்தை வெல்ல அதை மறப்பதே ஆகும்.

மற்றவர்களை நமக்கு போட்டியாக எண்ணாமல் நம்மோடு  நாமே போட்டியிட்டு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.

பொறாமைக்கு ஆதார காரணம் அதீத ஆசை மற்றும் போட்டி. போட்டியைப் பற்றி புரிதல் ஆகிவிட்டது. இல்லையா? ஆசை பட வேண்டும். ஆனால் அது எதற்கு? ஏன்? என்று ஆராய்தலும் வேண்டும். ஆசை நியாயமானதாகவும் இருத்தல் வேண்டும்.  ஆரோக்கியமான ஆசைகளை, பொறாமையை தூண்டாத ஆசைகளை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.

நம்மால் முடிந்தால், நம்மால் முடிந்ததை, நாலு பேருக்கோ, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ உதவுவோம். எந்த வகை நல்லுதவி ஆனாலும் செய்வோம். அப்படி முடியாத பட்சத்தில் எவருக்கும் உபதிரவம்  செய்யாமல் இருப்போம். எவரும் நமக்கு தாழ்ந்தவர்களும் இல்லை, நம்மைவிட உயர்ந்தவர்களும் இல்லை அனைவரையும் ஒரே மாதிரியாக எண்ணுவோம், அதுபடியே நடத்துவோம். 

நமது வீட்டிற்குள் இருக்கும் நேர்மறை / எதிர்மறை ஆற்றல் நம்முள் இருந்து வந்ததே என்பதை உணர்ந்தால் போதும். அதற்கு என்ன செய்ய வேண்டும் / கூடாது என்று நமக்கே புரிந்து விடும். “ஆடத் தெரியாதவர் மேடைக் கோணல்” என்றார் என்பது போல நம்மை நாம்  மாற்றிக் கொள்ளாமல் வீட்டைக் குறை சொல்வானேன்!!!

நல்ல சிந்தனைகள், எண்ணங்கள், உண்மை, நம்பிக்கை, பொறுமை, மனநிறைவு ஆகியவைகளை நம் இல்லம் முழுவதும் விதைத்து வாழ்ந்துப் பாருங்களேன் எந்த திசை வீடாக இருந்தாலும் எல்லாப் பக்கங்களிலிருந்தும்  நேர்மறை ஆற்றலே நமக்கும் நம் வீட்டுக்கு வருவோருக்கும் மனமுழுவதும் நிறைந்து நம் இல்லம் இனிமையான அனுபவத்தையே தரும் சொர்க்கமாகும்.

❤️நன்றி❤️

குடும்பங்களும், நண்பர்களும், இப்பொழுது வாட்ஸ்அப் குழுக்களாக அமைந்து செவ்வனே செயல்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அம்மா வழி சொந்தங்கள், அப்பா வழி சொந்தங்கள் என்று பிள்ளைகளும், அவர் வழி உறவினர்கள், அவள் வழி உறவினர்கள் என்று தம்பதிகளும் மற்றும் அம்மா, அப்பா, மகன், மகள் தனித்தன்மையான ஒரு குடும்ப பெயருடன் ஒன்றும், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என்றும் பலவகை குழுக்கள் உள்ளன எல்லாருடைய அலைபேசியிலும்.

அனைவரது வாட்ஸ்அபிலும் தனி நபரின் எண்(எந்த குழுவிலும் இல்லாதவர்) கடைசியில் தான் வரும் அதுவும் ஏறிப்போனா ஒரு பத்து இருக்கும் அவ்வளவுதான் மிதமுள்ள அனைத்து எண்களும் பல தரப்பட்ட குடும்ப பெயர்கள் கொண்ட குழுக்களில் அல்லது நண்பர்களின் குழுக்களில் ஏதேனும் ஒன்றில் அடங்கும். சில சமயம் ஒரே நபர் பல குழுக்களிலும் இருப்பர். எல்லாருடைய விஷயங்களும் தெறிஞ்சுக்க வேண்டாமா அதுக்கு தான். அப்படிப்பட்ட ஆசாமிகள் ஒரு குழுவில் நடப்பதை அடுத்த குழுவினர்களுக்கு கொண்டு சேர்க்கும் இறக்கை இல்லா பறவை போல அங்கும் இங்குமாக மெஸேஜ்களை தட்டிவிடும் நவீன நாரதராவார்கள்.

இந்த குழுக்களில் பல சுவாரசியமான உரையாடல்கள் நடைப்பெறுவதும் உண்டு. வம்புகள் உருவாவதும் உண்டு.ஒரு குடும்ப வாட்ஸ்அப் குழுவிலிருந்து வெளியேறினால் ஏதோ குடும்பத்தை விட்டே வெளியேறியது போல ஒரு தாக்கத்தை கொடுத்து விடுவார் அந்த குழுவின் நிர்வாகி.

எவரேனும் ஒருவருக்கு மற்றொரு குழு உறுப்பினர் மீது மனஸ்தாபமோ, கோவமோ, வருத்தமோ, ஏன் வயித்தெரிச்சலாக கூட இருக்கலாம்..அப்படி இருக்கும் பட்சத்தில் பல தத்துவங்கள் ..யாரோ ஒரு புண்ணியவான் எழுதியதோ / படமாக்கப்பட்டதோ இணையதளத்தில் சுதந்திரமாக பறந்துக்கொண்டிருபதில் ஒன்றை அவர்கள் மனநிலைக்கேற்ப பகிர்ந்து எவருக்காக போடப்பட்டதோ அவரின் ரியாக்ஷனுக்காக… தூண்டில் போட்டு மீன் எப்போ வந்து மாட்டும் என்று மீன்பிடிப்பவர் தூண்டிலை அடிக்கடி தூக்கிப்பார்ப்பது போல் அலைபேசியை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டே காத்திருப்பதில் அவர்களுக்கு தனி சுகம் போலும். முன்பெல்லாம் ஏதாவது விஷேஷங்களில் ஒன்று கூடும்போது நடைபெறும் அரட்டை அதனால் விளையும் வம்புகள் இப்பொழுது அலைபேசியில் நடைபெற்றுவருகிறது.

எந்த நபருக்காக போடப்பட்டதோ அவர் அந்த தூண்டிலில் மாட்டினால் அன்று முழுவதும் குழுவில் தீபாவளி தான். அப்படியே அவர் கழுவுற மீனில் நழுவுற மீனாட்டம் இருந்தாலும்….சில நமத்து போச்சுன்னு எண்ணிக்கொண்டிருக்கும் ஊசி பட்டாசுகள் கூட மெதுவா பட் பட் என்று வெடிக்க ஆரம்பிக்கும் அதனுடன் ஓல வெடி மெல்ல சேர பின் லக்ஷ்மி வெடிகள் சரங்களாக மெஸேஜுகளைக் கோர்க்க… கடைசியில் இந்த சப்தத்தை எல்லாம் அடங்க செய்ய …நம்ம மீன்… ஆட்டம் பாம் போல ஒரு பெரிய மெஸேஜை தட்டிவிட…அதில் ஊசி வெடிகளும், ஓல வெடிகளும் தெறித்து ஓட, சமந்தமே இல்லாத சங்கு சக்கரங்களும், புஸ்வானங்களும் சரசரக்க, சில ராக்கெட்டுகள் குழுவிலிருந்து வெளியேற. தொட்டால் சுட்டு பொசுக்கிவிடும் அளவிற்கு சுட சுட குழு இருக்கும் போது மெதுவாக ஒரு ரோல் கேப் உள்ளேன் ஐயா என்று ரோலாகி வந்து முதலாவது மெஸேஜிலிருந்து பதிலளிக்க.. மீண்டும் அடுத்த ரவுண்டு தொடங்கும். அதில் சம்மந்தமே இல்லாத சில வெளிநாட்டு வெடிகள் உள்நுழைய அனைத்து சூடான உள்நாட்டு வெடிகளும் அவைகள் பக்கம் திரும்ப திரியைக்காணோம் காகிதத்தைக்காணோமென்று வெளிநாட்டு வெடிகளும் குழுவை விட்டு வெளியேற, குழுவின் சமாதானப் புறாக்களான பென்ஸில், மத்தாப்பு தனி தனியாக மெஸேஜ் செய்து தூது போக வெளியேரியவர்கள் அத்துனைபேரும் மீண்டும் குழுவில் சேர்க்கப்படுவர். காரணங்கள் வேறுப்பட்டாலும் இது பெரும்பாலும் எல்லா குழுக்களிலும் நடக்கும் ஒரு அத்தியாயம் ஆகும்.

இதில் உன்னித்து பார்த்தோமேயானால் மீனவன் ஒரே ஒரு தத்துவத்தை கவிதையாகவோ/ மெஸேஜாகவோ/ வீடியோவாகவோ தட்டிவிட்டுட்டு கம்முன்னு தீபாவளி வாணவேடிக்கையை ரசித்துக்கொண்டு இருப்பார். மீனும் தவிர்க்க முயன்று பின் சலசலப்பை அடக்க ஒரே ஒரு மெஸேஜை தட்டிவிட்டுட்டு மீதி எல்லாருடை மெஸேஜையும் படித்தவண்ணமே இருக்கும். இதை குழு உறுப்பினர்களில் சிலர் உணர்ந்து எல்லா நேரங்களிலும் புஸ்ஸான புஸ்வானம் போல பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். இன்னும் சிலர் சரவெடியில் முதலிலும் இறுதியிலும் மட்டும் வெடிக்ககூடிய ஊசிவெடிப்போல் காலை வணக்கம் மற்றும் இரவு வணக்கம் மட்டும் சொல்லிக் கொண்டே யார் யார் எப்படி வெடிப்பார்கள், ஏன் வெடிப்பார்கள், எதற்கு வெடிப்பார்கள் என்பதை எல்லாம் உலகநாயகனின் மகளிர்மட்டும் திரைப்படத்தில் வரும் தாத்தாப்போல அனைத்தையும் கிரகித்துக்கொண்டு ஊதுவத்தியாக சரியான நேரத்தில் சரியான பட்டாசை பத்தவைத்துவிடுவார்கள்.

ஆக இந்த தீபாவளி இவ்வளவு சிறப்பாக வாணவேடிக்கைகளுடன் நடந்து முடிந்ததற்கு காரணகர்த்தா யார்?

தூண்டிலிட்டுக்காத்திருந்த மீனவனா? தூண்டிலில் இருந்து நழுவப்பார்த்து பின் தானே போய் சிக்கிக்கொண்ட மீனா? இல்லை தேவையில்லாமல் வெடித்த இதர பட்டாசுகளா?

இதுபோன்ற  மீனவர்கள் வாட்ஸ்அபிலும், வாழ்க்கையிலும், இணையதளத்திலும் அவரவர் மனநிலைக்கேற்ப பலவித மெஸேஜை தூண்டிலாக இட்டு மீன்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் மீனாக தூண்டிலில் மாட்டாமலும் அனாவசியமாக இதர பட்டாசுகளை போல தேவையில்லாத இடங்களிலும் நேரங்களிலும் வெடிக்காமலும் இருந்தால் பல பிரச்சனைகளை மிக சுலபமாக கடந்து மன அமைதியுடன் வாழலாம்.

முதன் முதலில் பள்ளிக்கு எனது ஒரே மகனை அனுப்பியது இன்றும் என் கண்முன்னே இருக்கிறது. அது ஆகிவிட்டது பதினெட்டு வருடங்கள் ஆனாலும் இன்றும் பசுமையான நினைவுகளாக என் மனம் அசைப்போட்டுக்கொண்டே தான் இருகிறது.

பள்ளிக்கு சென்று அவனை வகுப்பறையில் அமரவைத்து நான் வெளியே வந்ததும் என் மகன் பின்னாலேயே ஓடிவந்து அம்மா…அம்மா….என்ன விட்டுட்டு போகாதே அம்மா….என்று கதறி அழுதது, அவனது ஆசிரியை என்னை அங்கு நிற்காமல் செல்லும் படி கூறியது, என்னைச் சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் நானும் என் மகனைப் பார்த்து அழுத வண்ணம் நின்றது எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கையில் மனதிற்குள் சிரிப்பு வருகிறது ஆனால் அன்று அந்த கணம் நான் நொறுங்கி போனேன்.

என் குழந்தை சாப்பிட்டதா? டாய்லட் போக அனுமதி கேட்க சொல்லிக்கொடுத்தேனே ஒழுங்கா கேட்க தெரியுமா இல்லை பயத்தில் கேட்காமல் உட்கார்ந்திருப்பானா, மற்ற குழந்தைகளுடன் விளையாடுவானா? என்றெல்லாம் பல கேள்விகள் உதித்து என் நிம்மதியை குலைத்தது. 

என் கணவரிடம் அடிக்கடி அவன் இன்னமும் அழுதுக்கொண்டிருப்பானா? சாப்பிட்டிருப்பானா? சண்டையிடாமல் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவானா? என்று தொனதொனக்க அவர் என் புலம்பல்கள் கேட்டு …..

“இதெல்லாம் நீ அந்த பள்ளில வேலை செய்தால் உன் புள்ள பக்கத்திலிருந்தே தெரிஞ்சுக்கலாம். என்ன கேட்டா நானும் உன்ன மாதிரி இங்க தானே இருக்கேன்.”

சாயங்காலம் அவன் வந்ததுக்கப்பரம் கேட்டு தெரிஞ்சுக்கலாம். இப்போ போய் வேற வேலைய பாரு என்று கடுப்படித்தார். பாவம் அவரும் பிள்ளை நினைப்பில் தான் இருந்திருப்பார் ஆனால் என்னைப்போல காட்டிக்கொள்ள வில்லை அவ்வளவுதான்.

ஆனால் அவர் சொன்னதில் ஒரு விஷயம் என் மனதில் பதிந்தது “நீ  அந்த பள்ளியில் வேலை செய்தால்” பிள்ளையை பிரிய மனமில்லாமல் அதே பள்ளியில் ஆரம்ப பள்ளி ஆசிரியை வேலைக்கு விண்ணப்பித்தேன்.  

இன்டர்வியூ நாள் வந்தது அங்கே என்னை நோக்கி பாய்ந்த முதல் கேள்வி….

“இது உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை அல்லவே… நீங்கள் போஸ்ட் கிராஜுவேட் முடித்துள்ளீர்கள் பின்பு ஏன் விண்ணப்பித்தீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாமா?” என்று கேட்டார்கள்.

என் மகனுக்காக! மகனுடன் இருப்பதற்காக சேர்ந்தேன் என்று கூறமுடியுமா!! ஏதோ ஆசிரியை ஆக ஆசை அது இது என்று சொல்லி ஒரு வழியாக என் மகன் பள்ளி செல்ல ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் நானும் ஆரம்ப பள்ளி ஆசிரியை ஆனேன். முன்னனுபவம் ஏதுமின்றி. அதுவும் எல்.கே.ஜி வகுப்பு எனக்கு தரப்பட்டது‌. என் மகனுக்காக ஆசிரியை ஆனாலும் அந்த பிஞ்சு முகங்களை தினமும் பார்ப்பதில் பேரானந்தமாக இருந்ததை உணர்ந்தேன். 

ஆசிரியை ஆயாச்சு என் மகனுடன் ஒன்றாக பள்ளிக்கு சென்று வரலாம் என்று எண்ணினேன். ஆனால் வேலையில்  சேர்ந்த பிறகு தான் தெரிந்தது ஆசிரியர்கள் பள்ளி முடிந்த நேரத்திலிருந்து ஒரு மணிநேரம் ஆன பின்னரே வீட்டுக்கு செல்ல முடியும் என்பது‌. அந்த ஒரு மணிநேரம் என் மகனை எங்கே விடுவது என்ற கேள்வி எழுந்தது.

பள்ளியில் அவனை சேர்க்க….. அவனை பிரிய மனமில்லாமல் நான் ஆசிரியையாக சேர….. பின் எனக்காக அவன் ஒரு மணிநேரம் பள்ளியில் காத்திருக்க வேண்டியிருந்தது. அவனுக்காக காலை மத்திய உணவு போக தனியாக மாலை உண்பதற்கு ஏதாவது தினமும் எடுத்து செல்வேன். இதோடு எல்லாம் முடிந்தது இனி சுபமே என்று பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த சிக்கல் வந்தது. 

என் மகன் தனது வகுப்பிலிருந்து ஓடிவந்து எனது வகுப்பில் அமர ஆரம்பித்தான்.  அம்மாவின் வகுப்பில் தான் அமருவேன் என்று ஒரே அழுகை வேறு. அந்த பள்ளி தலைமை ஆசிரியை முன் நானும் என் மகனும் நின்றோம். எங்கள் பிரச்சினையை முன் வைத்தோம். அவர் என் மகன் என் வகுப்பில் அமர அனுமதித்தார். அவன் என் வகுப்பில் அமர சில நிபந்தனைகளை நான் அவன் முன் வைத்தேன். நல்ல பிள்ளையாக அவை அனைத்தையும் கடைபிடித்து எனக்கு ஒத்துழைத்தான் என் மகன். 

வகுப்பில் மேடம் என்று தான் அழைப்பான் அம்மா என்று ஒருபோதும் அழைத்ததில்லை. தனது அம்மா தானே என்று எந்த வித சலுகைகளையும் அவனும் எதிர்ப்பார்க்கவில்லை நானும் கொடுக்கவில்லை. இப்படியே எல்.கே.ஜியும், யூ.கே.ஜியும் இருவரும் ஓன்றாக ஒரே வகுப்பறையில் படித்தோம். ஆம் அவன் படித்ததோ பாடப்புத்தகம் ஆனால் எனது வகுப்பில் இருந்த முப்பது குழந்தைகளும் என் மகன் உள்பட எனக்கு முப்பது வாழ்க்கை பாட புத்தகங்கள் ஆனார்கள்.

குழந்ததைகளுடன் நாம் இணைந்து பயணிக்கும் பயணத்தில் பல பாடங்களை நமக்கு மிக சுலபமாக கற்று தந்து விடுவார்கள்.

கவலை என்பது அடுத்த நிமிட நிகழ்வில் மறக்க வேண்டும்,

அழுதாலும் நம்மால் மற்றொருவரின் பேச்சைக்கேட்டு சிரிக்கவும் முடியும்,

ஒன்றாக இருந்தால் சந்தோஷம் பெருகும்,

ஏதேனும் மறந்தாலும் அதை அழகாக கதை போல சொல்லி கவர்வது,

வெளிப்படையாக போலித்தனமில்லாமல் பேசுவது என்று பலவற்றை நாம் அவர்களோடு இருந்தால் கற்றுக்கொள்ளலாம். நானும் கற்றுக் கொண்டேன். 

பெற்றோர்கள் என்னிடம் வந்து எங்கள் பிள்ளைகளுக்கு நீங்க ன்ன ரொம்ப பிடிக்கும் மேடம்…..எங்க மேம் அது சொன்னாங்க இது சொன்னாங்க என்று எப்ப பார்த்தாலும் சொல்லிக்கிட்டே இருக்காங்க என்று கூறும்போது சற்று சங்கோஜமாகவும் அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது. இதுவே என் முப்பது செல்வங்களும் எனக்களித்த முப்பது அவார்டாக கருதிக்கொண்டு இருக்கையிலே…. பிஞ்சுகளால் நான் அந்த ஆண்டின் பள்ளி ஆண்டுவிழாவில் சிறந்த ஆசிரியை பரிசுப்பெற்றேன். என் வகுப்பு பிள்ளைகளும் நிறைய போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றனர். 

எனது மகன் ஒன்றாம் வகுப்புக்கு தேர்ச்சி ஆனான். அவனின் பாதை நண்பர்கள், படிப்பு,  விளையாட்டு என்று மெல்ல மாற துவங்கியது. நானும் என் பாதையை மாற்றி அமைத்துக்கொண்டேன்.  +1 மற்றும் +2 வகுப்பு பிள்ளைகளுக்கு அக்கௌன்டன்ஸி மற்றும் காமர்ஸ் ஆசிரியையாக ஆர்மி ப்பளிக் பள்ளியில் நியமிக்கப்பட்டேன். என் படிப்பிற்கும் வேலைக்கும் அன்று சம்பந்தத்தை ஏற்ப்படுத்திக்கொண்டேன்.  அன்று யோசித்துப்பார்த்தேன்…. மகன் தான் சிறுப்பிள்ளை என்றால் நானும் சிறுப்பிள்ளை தனமாக இருந்ததை உணர்ந்தேன். என் சிறுப்பிள்ளை தனம் என்னை எனக்கே புரியவைக்க கடவுள் கொடுத்த ஒரு நல்ல, சிறந்த வாய்ப்பாக நான் கருதினேன்.

எனது இந்த உணர்வு எல்லா தாய் மார்களும் அவர்கள் பிள்ளைகள் பள்ளி செல்லும் முதல் நாள்  அனுபவித்திருப்பார்கள்.

இன்று என் மகன் வெளிநாட்டில் இஞ்சினியரிங் படித்து வருகிறார். அவரை கல்லூரியில் சேர்க்க  நானும் என் கணவரும் அவருடன்  சென்றிருந்தோம். ஒரு வாரம் ஹோட்டலில் தங்கியிருந்தோம். மூன்று நாட்கள் ஓரியன்ட்டேஷன் என்று ஓடியது. ஒரு நாள் காலேஜ் ஹாஸ்டல் ரூமை அவருக்கு செட் செய்து கொடுப்பதில் கழிந்தது. ஒரு நாள் ஊரை சுற்றிப்பார்ப்பதில் சென்றது. ஆறாவது நாள் கல்லூரி வகுப்புகள் ஆரம்பம் ஆனது.  

ஏழாவது நாள் நாங்கள் ஊருக்கு திரும்பும் நாள் ….காலை உணவு அருந்திவிட்டு நேராக கல்லூரிக்கு சென்று எங்கள் மகன் வகுப்பு முடிந்து வரும் வரையில் காத்திருந்தோம். அவர் வந்தார் நாங்கள் மூவரும் மத்திய உணவு ஒன்றாக அமர்ந்து அருந்தினோம். ஏதோ என் மனதில் ஒரு கலக்கம். முதல் முறையாக மகனை தூரதேசத்தில் விட்டுவிட்டு பிரியபோகிறோமே என்றா… சொல்ல முடியாத ஒரு தவிப்பு….அப்பாவும் மகனும் மும்முரமாக வகுப்புகள், லெக்சரர்கள், கல்லூரி, பாடம் பற்றி  பேசிக் கொண்டிருந்தனர். நான் என் மகனை பார்த்துக்கொண்டே இருந்தேன் ஏதும் பேசாமல்.  அவரும் என்னை அடிக்கடி பார்த்தார் ஆனால் பேசவில்லை. பின் கேட்டார் “என்ன அம்மா பார்த்துண்டே இருக்க?” 

நான் என் மகனைப்பார்த்து….

 “இப்போ உன்னுடன் உன் கல்லூரியில் தான் இருப்பேன், உன் வகுப்பறையில் தான் அமர்வேன் என்னை கூட்டிக்கொண்டு போகதான் வேண்டும்”

என்று நான் இப்போ அடம்பிடித்தால் என்ன ஆகும் என்றேன்.

மகன் பதில் அளிப்பதற்கு முன் என் கணவர் முந்திக்கொண்டு

“அம்மா தாயே விட்டா நீ உன் பையன் பின்னாடியே இஞ்சினியரிங் காலேஜ் லெக்சரரா போயிடுவ…..நான் ஒருத்தன் இங்கே இருக்கேன் மா…. மனமிறங்கி வா தாயீ”

என்றதும் மூவருக்கும் சிரிப்பு மழையில் அன்று  முழுவதும் ஊருக்கு கிளம்பும் வரையில் பழைய நினைவுகளால் நனைந்தோம். 

அன்றும் அழுதேன் என் மகனைப் பிரியும் பொழுது. அதே மாதிரி சிந்தனை பழக்கமில்லாத நாட்டில் மகனை தனியே விட்டுவிட்டு போகபோகிறோமே! என்ன செய்வாரோ!!!! என்றல்ல எங்கள் மகன் இன்று இவ்வளவு படித்து, பல திறமைகளை வளர்த்துக்கொண்டு,  இப்படி ஒரு கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்து அதை தைரியமாக ஏற்று தனித்திருந்து சாதிக்க போகிறார் என்ற பெருமிதத்தில் வந்த ஆனந்த கண்ணீர் ஆகும். 

முதன் முதலில் மகனை

பள்ளியில் சேர்த்தபோதும் கண்கள் கலங்கின

கல்லூரியில் சேர்த்தபோதும் கண்கள் கலங்கின

இரண்டு தருணங்களிலும் கண்களில் வடிந்தது கண்ணீர் 

முதலாவது முறை பரிதவிப்பினால்

இரண்டாவது முறை ஆனந்தத்தினால்

கண்ணீர் ஒன்று தான் 

ஆனால் காரணங்கள் வேறுபட்டது

பரிதவிப்பு என்னை ஆசிரியையாக மாற்றியது 

ஆனந்தம் என்னை எழுத்தாளராக மாற்றியது.

நமது தமிழ், நமது மொழி. மூன்றாம் பகுதி உங்களுக்காக ….

தமிழ் மொழி சாதாரணமாக ஒரு மொழியின் பெயர் மட்டுமல்ல.. அதற்கு அழகு, இனிமை, அமுது என்றெல்லாம் அர்த்தம் உள்ளது. தமிழை தனித்தன்மை வாய்ந்த மிருதுவான அமிழ்தம் என்றும் கூறுவர். தம்+இழ் தமது உடைமை என்றும் பொருள் கூறியுள்ளனர். தம்+இதழ்+மொழி தமிதழ் மொழி பின்னர் தமிழ் மொழி ஆனது என்றும் சிலர் கருதுகின்றனர்.

எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக் கூடிய எந்தச்சொல்லும் பெரும்பாலும் அழகையும் , இனிமையையும் குறிப்பதகாவே இருக்கிறது. உதாரணத்திற்கு மழலை,குழல்,அழகு,குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’வருகிற எல்லாமே நமக்கு விருப்பமானவை அல்லது பிடித்தவைகளே. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தன்னுள்ளே உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்பதும் ஒரு அழகான விளக்கமாக எனக்குப்பட்டதால் பகிர்ந்துள்ளேன்.

இனிமையான தமிழின் “ழ”கரம் வேறு எந்த மொழியிலும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது நமது மொழியிலிருந்து பெற்றவையாகும். இப்படி தனித்துவம் வாய்ந்த தமிழ் மொழி நமக்கு தெரியும் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

“ழ” என்ற எழத்தும், உச்சரிப்பும் நமக்கே உரித்தானது. இனி ஆங்கிலத்திலும் “Tamizh” என்றே நாம் எழுத பழக்கப்படுத்திக்கொள்வோம். இவ்வளவு பெருமைக்குரிய “ழ” வை “ல” என்று உச்சரிக்கும்போது எனது நெஞ்சுப் பொறுக்குதில்லையே….என்று பாரதி போல் சொல்ல தோன்றுகிறது.

அழை என்பதை அலை என்றால்
உழு என்பதை உளு என்றால்
எழு என்பதை எலு என்றால்
கழகம் என்பதை கலகம் என்றால்
கிழி என்பதை கிலி என்றால்
தமிழுக்கே “கிலி” பிடிக்கும்.

அலகும் அழகு
அளகும் அழகு
ஆனால் உண்மையான “அழகு” தமிழை அழகாக உச்சரிப்பதில் உள்ளது.
எனவே அழகு ..அலகு அல்லது அளகு ஆகவும் வேண்டாம்
தமிழ் ..தமில் ஆகவும் அனுமதிக்க வேண்டாம்.

“தமிழ் என்பது அழகு
அதை அழகாக உச்சரிக்க பழகு”

கற்போம்!!! கற்பிப்போம்!!!! வாரீர்…

வலைப்பதிவு வாசகர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும், தமிழ் பண்பாடும் எங்கெல்லாம் எவ்வாறெல்லாம்பயணித்துள்ளனர்/பயணித்துள்ளது என்பதை பற்றி போனபதிவில் எனக்கு தெரிந்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதற்கு  விருப்பம் மற்றும் பாராட்டு தெறிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் படித்து, கேட்டு, தெரிந்து கொண்ட நம் தமிழ் மொழியின் சுவாரசியமான விஷயங்களின் இரண்டாம் பகுதி இதோ உங்களுக்காக.  

உலகில் மிக பழமையான மொழிகளில் ஒன்று நமது தமிழ். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  அடிச்சநல்லூர் தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் படி பார்த்தால் நம் மொழி சுமார் கி.மு 500 வருடங்களுக்கு முன் தோன்றியது என்றால் ஆச்சர்யம் தொற்றிக்கொள்ளாதா என்ன!!!! கி.மு காலத்தில் வழக்கத்தில் இருந்திருந்தாலும் இன்றும் ஜீவித்திருக்கும் பழமையான மொழி நமது தமிழ் மொழியே. ஆதியில் தோன்றினாலும் மாய்ந்து போகாமல் இன்றும் உலகளவில் பேசப்படும் மொழியாக தமிழ் திகழ்வதில் ஒவ்வொரு தமிழரும் தோள் தட்டி கொள்வோம்.

அறிஞர்கள் தமிழ் மொழியை மூன்று காலக்கட்டங்களாக பிரித்துள்ளனர். பழைய தமிழ் (கிமு 300 – கிபி 700), இடைக்கால தமிழ் (700 – 1600) மற்றும் நவீன தமிழ் (1600 – இன்றுவரை) 

ஒரு கடவுளாக உருவகப்படுத்தப்பட்ட ஒரே மொழி நமது தமிழ் மொழி. அக்கடவுளை தமிழ் தாய் என்று அழைப்பர். தமிழ் தாய் கோயில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ளது. தமிழ்த்தாய்க் கோயிலின்  பரிவார தெய்வங்களாக,  வள்ளுவரும், இளங்கோவடிகளும், கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர். தமிழ்த்தாய்க் கோயிலின் நுழைவாயிலின் முன் துவார பாலகிகளாக ஒலித்தாய், வரித்தாய் நிறுவப் பெற்றிருக்கின்றனர். ஒரு மொழிக்கு முக்கியமான ஒலி மற்றும் வரி துவார பாலகிகளாக …ஆகா விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் நின்றேன்….என்ன அருமையான அமைப்பு. கருவறையில் தமிழ்த்தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில் விளங்குகின்றனர்.  தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள். சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களின் தமிழ்ப்பற்றை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ் தாய் வாழ்த்து தமிழ் தாயான நமது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமைந்திருக்கும். இப்பாடல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.  வேறு எந்த மொழிக்காவது இந்த சிறப்புகள் இருக்கிறதா?

நம் மொழியின் சிறப்புகள் என்னை முற்றுப்புள்ளி வைக்க தடை செய்வதனால் மீண்டும் அடுத்த பதிவில் நம் மொழியின் இன்னும் பல சுவாரசியமான தகவல்களுடன் சந்திப்போம். வாழ்க தமிழ்!!

ஒரு குழந்தை பிறந்து மூன்று மாதங்களில் கொடுக்கும் சப்தம் அ என்றே இருக்கும். குழந்தையின் தாய் சாதம் ஊட்டும் போதும் அ…அ…..அம் என்று சொல்லி தான் ஊட்டுவாள். நாம் முதலில் குழந்தையை அ…அ…அ‌‌…ம்மா என்றும் அ…அ…அ…அப்பா என்றும் தான்  சொல்ல கேட்டு மகிழ்கிறோம். சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளை முதல் மதலில் நெல்லை பரப்பி அதில் “அ” என்றே எழுதச்செய்வோம். நாமே எங்காவது இடித்துக்கொண்டாலோ அல்லது கீழே விழுந்தாலோ அம்மா என்று தான் முதலில் கூறுவோம். இப்படி நம் முதல் சப்த்தமும் சரி, எழுத்தும் சரி  அகரத்திலேயே  தொடங்குகின்றன. 

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டே தொடங்குகின்றன. சிறந்த இந்த தமிழ் மொழியானது எங்கெங்கெல்லாம் பயணித்துள்ளது எவ்வாறெல்லாம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம் வாரீர்….

நமது தமிழ் மொழி உலகில் பேசப்படும் மொழிகளில் 20ஆது இடத்தையும், நம் மொழி பேசுபவர்கள் 1.06% விகிதம் உள்ளார்கள் என்று விக்கிப்பீடியாவில் பதிவாகியுள்ளது. ஆனால் நம்முன்னோர்கள் கூற்றுப்படி கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழியாகும்.

கண்டெடுக்கப்பட்ட பல கல்வெட்டுகள் மற்றும் நாணயங்கள் வைத்து நம்மவர் எங்கெல்லாம் பயணித்து நம் மொழியையும் பயணிக்க செய்தனர் என்பதை நாம் தெறிந்து கொள்ள வேண்டும். நான் அறிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழானது ஆசியா, ஆப்பிரிக்கா, சீனா, கம்போடியா, எகிப்து மற்றும் இந்தோனேசியா வரை எட்டியுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் ஃப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலேயர் நம் தமிழ் மக்களை ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பல நாடுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் நம் மொழி மற்றும் கலாச்சாரம் இன்றளவும் பல நாடுகளில் காணமுடிகிறது. உதாரணத்திற்கு மலேசியாவில் இருபது லட்சத்திற்கும் மேலானவர்கள் தமிழ் மொழி பேசுபவர்கள் என்று பதிவாகியுள்ளது என்றால் பாருங்களேன். 

சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் நமது தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகும். ஃப்ரெஞ்ச் காரர்களால்  மொரீசியஸில் முதல் முதலில் குடியேறியவர்கள் நம் தமிழ் மக்களே. பின்பு ஆங்கிலேயர்கள் ஃப்ரெஞ்ச் காரர்களை வீழ்த்துவதற்கு மேலும் பல தமிழர்களை மொரீசியஸில் குடியேர செய்தனர். மொரீசியஸ் நாணயங்கள் தமிழ் மொழியில் இருக்கும். 

இவ்வாறு உலகம் முழுவதும் தமிழ் மொழியும், கலாச்சாரமும், பண்பாடும் வளர்ந்துள்ளது. நமது ஹரியானா மாநிலத்தில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ அங்கிகாரம் பெற்று திகழ்ந்தது 2010 ஆண்டு வரை. அதற்கு பின் பஞ்சாபியாக மாற்றப்பட்டது.

மேலும் தமிழ் மொழி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை  அடுத்த பதிவில் காண்போம்.

ஊரடங்கு உத்தரவுக்கு நன்றி 

 நீ எங்களை மறந்திடுவாய்

ஆனால் எங்களால் அது முடியுமா?

உன்னை நாடு முழுவதும் பிறப்பித்த போது

பலரின் கேலி, கிண்டல், மீம்ஸ், விவாதங்களுக்கு உள்ளாக்கப்பட்டு பின்பு எங்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கேற்றாய்

உன்னால் உணர்ந்தோம் எங்கள் குடும்பத்தினரை 

உன்னால் அறிந்துக்கொண்டோம் ஆடம்பரம் அவசியம் இல்லை என்று

உன்னால் தீயப்பழக்கம் உள்ளவர்கள் கூட ஒரு மாதம் தங்கள் பழக்கத்தை மறந்திருந்தனர்

உன்னால் தெரிந்தது அண்ணாச்சி கடைகளே நம்பகமானது என்று

உன்னால் உணர்ந்தோம் வீட்டு உணவின் அருமை

உன்னால் அறிந்தோம் நேரத்தின் முக்கியத்துவம்

உன்னால் தெரிந்துக்கொண்டோம் பலரின் வெளிவராத திறமைகளை

உன்னால் உணர்ந்தோம் திரைப்படம் மற்றும் திரைப்பட நடிகர்கள் வெரும் பொழுதுபோக்கிற்கே என்று

உன்னால் புரிந்துக்கொண்டோம் மருத்துவம்,  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், அனைத்து அரசாங்க ஊழியர்களின் அருமை பெருமைகளை 

உன்னால் தெரிந்துக்கொண்டோம் அவசியத்திற்கும், அநாவசியத்திற்குமான வித்தியாசம்

எங்களுக்கு இவ்வளவு உணர்த்திய உன்னை மறப்பது எளிதல்ல

உன்னை பிறப்பிக்க காரணமாக இருந்த எதுவானாலும் /எவரானாலும்…  அவைகள் / அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள நேரம் வந்துவிட்டது

ஏனெனில் நாங்கள் புத்துணர்ச்சியுடன், புதிய எண்ணங்களுடன், புதிய யுக்திகளுடன், மறந்துப்போன பழய பழக்கவழக்கங்களை புதுப்பித்து, புதிய வாழ்க்கை முறையை கையாண்டு புதுப்பொலிவுடன் மிளிர ஆயத்தம் ஆகிவிட்டோம்!!!!

மையின் சாரல்கள் பக்கம் வாசகர்களுக்கு எனது வணக்கங்கள். பல நேரங்களில் நமக்குள் பல கேள்விகள் உதித்து நம்மை அவற்றின் விடைகளை தேட வைக்கும். ஏன், எப்படி, என்று நமக்குள் நாமே கேட்டுக்கொண்டிருப்போம். இப்படி நம்முள்ளே பலருக்கும் விடை கிடைத்தும், கிடைக்காமலும் கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. இதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் கீழே பகிர்ந்துள்ள குட்டி கதையை படிக்க வேண்டுகிறேன். உங்கள் பதில்களை படிக்க ஆவலோடு காத்திருக்கும் உங்கள் தோழி.

ராமு ஒரு நாள் பத்து விதைகள் வாங்கி வந்தான். அவற்றை தனித்தனியாக நட்டு வைத்து நீர் விட்டு பராமரித்து வந்தான். சில நாட்களில் எட்டு செடிகள் முளைத்தது. முளை விடாத இரண்டு விதைகளை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து வேறு ஒரு இடத்தில் விதைத்தான். அவ்விரண்டு விதைகளும் செடியாக வளர்ந்தது. ராமு சந்தோஷமடைந்தான்.

முதலில் முளைவிடாத இரண்டு விதைகள் ராமு அவற்றின் இடத்தை மாற்றிய பின் செடியானது. இதிலிருந்து  நாம் எதை தெரிந்து கொள்வது…

விதைகள் செடியானது ….ராமுக்கு விதைகள் மேலிருந்த நம்பிக்கை காரணமா அல்லது

விதைகளின் இடம் மாற்றம் காரணமா?