“women empowerment” என்ற இந்த இரு சொற்கள் சமீப காலமாக எல்லா மேடைகளிலும், நிகழ்வுகளிலும் சந்திப்புகளிலும் பலரால் பேசப்படும் ஒன்று. அப்படியென்றால் என்ன? அதாவது மகளீரை சமுதாய மற்றும் பொருளாதார அடிப்படையில் மேம்படுத்துதல் என்று கூறி வருகிறார்கள். மகளீரை மேம்படுத்தவோ இல்லை அவர்களுக்கான மதிப்பு மரியாதையை அளிக்கவோ மற்றவர்கள் யார்? இல்லை அவற்றை ஏன் மகளீர் கேட்டு பெறவேண்டும்? மேடைகளில் பேசி பெற வேண்டும்? ஒரு பெண் தான் நடந்துக்கொள்ளும் விதத்திலும் பேசி பழகும் விதத்திலும் அவளுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் பெற வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவ்விடமிருந்து விலகி நிற்கும் தைரியமும் துணிச்சலும் வேண்டும்.
ஐந்து பெண்கள் கொண்ட குழு ஒன்றில் இந்த தலைப்பு பேசப்பட்டது. அதிலிருந்த பெண்கள் அனைவரும் ஒரு பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டுமென்றும் அது இருந்தால் அவள் எதையும் சாதிக்கலாம் என்றெல்லாம் பேசினார்கள். அதே போல வேறொரு நிகழ்வில் எழுத்தாளர் மற்றும் சமூக சேவகி ஒருவர் இதை போலவே எந்த பெண்ணும் நாலு காசு சம்பாதித்தால் அவளுக்கு அவள் வீட்டிலும் வெளியேவும் கிடைக்கும் மரியாதையே தனி என்றார். அதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. (அப்படியெனில் அவர்கள் யாரும் அவரவர் குடும்பத்தில் படிக்காத அம்மாக்களையோ அல்லது பெரியம்மாக்களையோ மதித்ததில்லையா!!) என்னது!! என்று எழுந்து கேட்க தோன்றியது. சபை நாகரீகம் கருதி ஏதும் பேசாது எழுந்து அவ்விடத்திலிருந்து வெளியேறினேன். எத்தனை எத்தனை பெண்கள் சுயதொழில் செய்தும், அலுவலகங்களில், பள்ளிகளில், கல்லூரிகளில் எல்லாம் பணிபுரிகிறார்கள். அவர்கள் அத்துனை பேரும் empowered women என்று கூறிவிட முடியுமா? மேலும் ஒரு பெண்மணி கூறுகிறார் “ஒரு பெண் சம்பாதிக்க ஆரம்பித்தால் அவள் எதற்கும் கணவனிடமோ தந்தையிடமோ நிற்க தேவையில்லை”. நல்லது. ஆனால் அவர்கள் யார்? நம் குடும்பத்தினர் தானே. நாம் வேறு எவரோ மூன்றாம் மனிதர்களிடமா கேட்கிறோம்?
இன்னொரு பெண்மணி கூறுகிறார், உலகத்திலேயே பிள்ளையைப் பெற்று வளர்ப்பது என்பது மிக சுலபமான வேலையாம் அதை விட கடினமானது பணம் சம்பாதிப்பதும் அதை சேமிப்பதுமாம். ஒரு பெண்ணுக்கு சம்பாதியம் இருந்தால் போதுமாம். அவளால் எதையும் சாதிக்க முடியுமாம். அடுத்து வளர்ந்து வரும் பெண் குழந்தைகளிடம், தானே சம்பாதித்து எதற்கும் யாரிடமும் நிற்க கூடாதென்று கற்றுக்கொடுக்க வேண்டுமாம். நல்லது தான். அதை ஏன் பணத்துடன் ஒப்பிட்டு சொல்லிக் குடுக்க வேண்டும்? பெற்றோர்களாகிய நாம் நமது அன்றாட வாழ்க்கையில் எதற்கும் எவரிடமும் சென்று உதவி கேட்டு நிற்காது வாழ்க்கையை வாழ்ந்து வந்தோமே என்றால் அதை நம் பிள்ளைகள் பார்த்து அவர்களாகவே கற்றுக்கொள்ள போகிறார்கள். இதற்கு, நீ சம்பாதித்து யாரிடமும் நிற்காதே என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே!
கேட்கவும் கூட்டத்தோடு கூட்டமாக கைத்தட்டவும் ஆட்கள் இருக்கும் வரை இது போன்றோர் பேச்சுக்கு மௌசு இருக்க தான் செய்யும்.
நான் சம்பாதிக்கிறேன் இது என்னுடையது நீ சம்பாதிக்கிறாய் அது உன்னுடையதும் என்னுடயதும். நான் எங்கு வேண்டுமானாலும் சென்று வருவேன் அது என் சுதந்திரம் அதில் நீ தலையிடக்கூடாது ஆனால் நீ எங்கு செல்வதாக இருந்தாலும் என்னிடம் கூறவேண்டும். நம் பிள்ளைகளை வாரத்தில் மூன்று நாட்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் இரண்டு நாட்கள் நீ பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் நான் வேலைக்கு போகிறேன். சமையலை நீ பார்த்துக் கொள் ஏனெனில் நான் வேலைக்கு போகிறேன் என்றெல்லாம் பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் அவர்களின் பொறுப்புகளில் இருந்து அவர்கள் தப்பிப்பதற்கு கூறும் காரணங்களாக தான் தோன்றுகிறது. ஏனெனில் அந்த காலத்திலும் பெண்கள் பலர் வேலைகளுக்கு சென்று வந்துள்ளனர். தம்பதிகள் பலர் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு குடும்ப ஒற்றுமைக்காக வளைந்துக் கொடுத்து (ஆணும் சரி பெண்ணும் சரி) வாழ்க்கை என்னும் சாகரத்தை கடந்து வந்துள்ளனர். (நடிகை, பேச்சாளர், பாடகி ரேவதி சங்கரன் அவர்களின் பேட்டியை பார்த்தால் புரியும்) இந்த காலகட்டத்தில் ஆண் பெண் இருவரும் சம்பாதித்தாக வேண்டுமென்பது காலத்தின் கட்டாயமாகி விட்டது என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். ஆனால் பணமிருந்தால் படைபலம் வரும் என்ற தவறான நம்பிக்கையை அடுத்த சந்ததியினரிடம் விதைக்காதிருங்கள். நல்ல குணமிருந்தால் மன நிம்மதியுடன் அமைதியான அழகான வாழ்க்கையை வாழலாம் என்றவிதையை தூவுங்கள், அவை வளமான செடி, மரங்களாகி மானிடம் உயிர்ப்பித்திருக்க ஏதுவாக இருக்கட்டும்.
ஆக பணம் அல்லது பொருளாதார சுதந்திரமிருந்தால் மட்டும் ஒரு பெண் அதிகாரம் பெற்றவள் அல்லது சக்தி பெற்றவளாகி விடுவாள் என்பது என்னை பொறுத்தவரை தவறான கருத்தாகும்.
இன்னொரு கூட்டத்தில் வெளிநாட்டில் ஒரு பணியில் இருக்கும் இந்திய பெண் கூறுவதாவது, நாம் எங்கு பணி புரிகிறோம் எந்த ஊரில் இருக்கிறோம் என்பதற்கு ஏற்றார் போல் உடையணிந்துக் கொள்ள வேண்டுமாம் இல்லையென்றால் நாம் ஒதுக்கி வைக்கப்படுவோமாம். இது என்ன அபத்தம். (குளிர், வெயில் அல்லது பனி பிரதேசத்துக்கு ஏற்றார் போல் உடை அணிந்து கொள்ள வேண்டும் என்றால் அதில் ஒரு அர்த்தம் உள்ளது) முதலில் நாம் நமது தேசிய உடைகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு அதன் அருமை பெருமை அறிந்திருக்க வேண்டும். நமக்கு நம்மீதும் நமது திறமை மீதும் நம்பிக்கை இருந்தால் உடை என்பது எப்போதுமே தடையாகாது. சில தருணங்களில் தடையாக மற்றவர் பார்வையில் தோன்றினாலும் அதை தகர்த்தெறிய வேண்டியது நாம் தான். நமது செயல் தான். ஒரு மேல் நாட்டு பெண் நம் நாட்டின் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் சில காலம் பணிப்புரிய வந்தாலும் அவர் என்றுமே நமது நாட்டு உடையை அணிந்து அலுவலகம் வருவதில்லையே!! அது ஏன்? அதை ஏன் நம் மக்கள் (குறிப்பாக பெண்கள்) விமர்சிப்பதில்லை. அவர்கள் பணி நிமித்தம் வந்திருப்பதோ இந்தியா! அப்படி இருந்தும் அவர்கள் ஏன் புடவையோ அல்லது சல்வாரோ அணிவதில்லை. ஆனால் நமது இந்திய பெண்கள் வெளிநாடுகளில் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதென்றாலே ஏதோ அவர்கள் பொறந்து வளர்ந்ததே அந்நாட்டில் தான் என்பதைப் போல உடை அணிந்துக் கொள்வார்கள். ஏன் வெளிநாடு வரை செல்ல வேண்டும் நமது இந்தியாவிலேயே இது தானே நடந்து வருகிறது. புடவையோ, சல்வாரோ அல்லது சுடிதாரோ அணிந்து செல்வதனால் எவ்விதத்திலும் நாம் எவருக்கும் குறைந்தவர்களாக போவதில்லை. உடை என்பது அவரவர் விருப்பம் என்றெல்லாம் கொடிப்பிடிப்போரே!!! அதை யாரும் மறுக்கவில்லை ஆனால் அதே நேரம் நமது நாட்டு உடைகள் அணிபவர்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை ஏளனமாக பார்ப்பதை தவிர்க்கலாமே!
ஆக women empowerment என்பது நாம் அணியும் ஆடைகளில் இல்லை. நாம் எவ்வித உடை அணிந்தாலும் அது எதற்கும் தடையாக இருக்க போவதும் இல்லை.
பெண்கள் கேட்டு பெறுவதில்லை “Women Empowerment” அவளுக்கென அவளே உருவாக்கி அல்லது செதுக்கிக் கொள்ளும் திறன்.
உன்னையும் என்னையும் இந்த பூமிக்கு கொண்டுவந்தவளே பெண் தானடா.
பின் அவளுக்கு அதிகாரம் கொடுப்பதற்கோ, மறுப்பதற்கோ இல்லை தட்டிப் பறிப்பதற்கோ நீ யாராடா.
பெண்ணே உன்னால் ஒரு உயிரை இந்த உலகிற்கு அளிக்க முடியுமெனில் உன்னால் இது/அது முடியாதென்பவர் மூடர்களே!
உனக்கான அதிகாரத்தை ஏன் வெளியில் தேடுகிறாய்? ஏன் மேடையில் முழக்கமிட்டு செவிடர்கள் காதில் சங்கு ஊதுவதைப் போல் உன் ஆற்றலை வீணடிக்கிறாய்? பெண்ணே உனக்கான அதிகாரம், சுதந்திரம் எதுவாக இருந்தாலும் அதை இந்த சமுதாயமோ பொருளாதாராமோ தந்துவிடாது. எனவே பெண்ணே தைரியத்தை வளர்த்துக் கொள். உனது எண்ணத்தை உரக்க சொல்ல பழகி கொள்.
தவராக இருந்தால் திருத்திக் கொள் இல்லையேல் மனத் திருப்த்திக் கொள்.
நமக்கு நாமே, உனக்கு நீயே என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொள். நீயே உனக்கான உனது முதுகெலும்பாவாய். எனவே பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்ற ஓட்டத்தில் உனது குடும்பத்தினரை விட்டுவிடாதே/தொலைத்து விடாதே. ஏனெனில் அவர்களும் முதுகெலும்பான உன்னை சேர்த்துப் பிடித்து நிமிர்த்த உதவும் சிறிய எலும்புகளாவார்கள் என்பதை நீ மறந்து விடாதே.
பெண் சக்தி என்பது இவை அனைத்தும் ஒருசேர இருப்பதே.
எனவே தனித்தனியாக பிரித்து அதில் எனக்கு அதிகாரம்/சுதந்திரம் வேண்டும், இதில் வேண்டுமென்றெல்லாம் எவரிடமும் கேட்காதே.
உன்னை நீயே குறைத்து மதிப்பிடாதே.
நமது பண்பு, குணம், கலாச்சாரம், அன்பு, பாசம், அக்கறை, தைரியம், மனோபலம் ஆகியவற்றை பெண் அதிகாரம்/சுதந்திரம் வேண்டி தொலைத்து விடாதே. இவ்வுலகில் சுதந்திர தேவிக்கு தான் சிலை உள்ளது எந்த சுதந்திர தேவனுக்கும் இல்லை என்பதை மறந்து விடாதே!
உனது சுதந்திரம் (அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி) அடுத்தவருக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தலாகாது என்பதை மட்டும் நினைவில் கொள். உனக்கே உரித்தான உனது பெண்மை என்ற சிறகுளை விரித்துடு, பறந்திடு.
🙏நன்றி 🙏