அத்தியாயம் 67: பிறந்தாள் மகள்

இரவு முழுவதும் வலி வந்து வந்து போக தூங்க முடியாமல் சிரமப்பட்டாள் மிருதுளா. டெலிவரிக்கு முன்  நவீனை ஒரு முறையாவது பார்த்துவிடமாட்டோமா என்ற ஏக்கம் அவளை வாட்டியது. இது எல்லாப் பெண்களுக்கும் வரக்கூடிய எண்ணமே. அதுவும் முதல் பிரசவம் என்பது மறுபிறப்பு போன்றதாயிற்றே. இதற்கிடையில் அவள் கண்முன் இரண்டு கர்ப்பிணிகள் வலியில் துடிப்பதையும், டாக்டர்கள் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டே ஒரு பெண்ணிற்கு அபார்ட் ஆகிடிச்சு என்று பேசிக்கொண்டதையும் கேட்டதில் மிருதுளாவுக்கு பயம் அதிகமானது. பயம் அதிகமானதில் அவளின் இரத்தக் கொதிப்பும் அதிகரித்தது. அன்றிரவு சீக்கரம் கடந்து விடாதா என்ற எண்ணம் அவளை வாட்டியது. காலை ஆறு மணியானது மிருதுளாவுக்கு பிரசவம் பார்க்கும் டாக்டர் வந்தார். அவர்கள் மிருதுளாவிடம் சென்று


“என்னமா மிருதுளா? என்ன? நல்லா ஏசி ல அம்மாவும் பிள்ளையும் கம்முன்னு இருக்கீங்க. நேத்து உன் குழந்தை உள்ளேயிருந்து வெளிய வந்திடும் என்று பார்த்தா உன் வயித்துக் குள்ளயே சொகுசா இருக்குன்னு பேசாம இருகிறதோ? உங்க அம்புஜம் பாட்டி என்னடான்னா காலையில அஞ்சு மணிலேந்து கிரிக்கெட் ரன்னிங் கமெண்ட்ரி கேட்குறா மாதிரி என்னைப் பார்த்தாலே ஓடி வந்து கேட்குறாங்க!!!ஏய் குட்டி போதும் உன் அம்மா வயித்துல இருந்தது வா வா.”

என்று அவளின் வயிற்றை செல்லமாக தட்டி குழந்தையை அழைத்தார் டாக்டர். அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு சரிப்பு வர அதற்கு டாக்டர்

“உங்க அம்மாவுக்கு சிரிப்பப் பாருடா!!”

என மிருதுளாவுக்கு பிபி செக்கப் செய்தார். இரத்தக் கொதிப்பு நூற்றி எழுபதைத் தாண்டியது. உடனே டாக்டர் நர்ஸிடம் ஏதோ சொல்லிவிட்டு வெளியே வந்து அம்புஜத்தைக் கூப்பிட்டார். அவர் கூப்பிட்டதும் அம்புஜம், ராமானுஜம், நவீன், வேனு நால்வரும் சென்றனர். அவர்களிடம்

“மிருதுளாவுக்கு பிபி ரொம்ப ஹையா இருக்கு. ஒன் செவன்டியைத் தாண்டிடுச்சு. இனியும் காத்திருப்பது குழந்தைக்கும் தாயிக்கும் நல்லதில்லை. ஸோ சிசேரியன் பண்ணவேண்டியிருக்கலாம்ன்னு சொல்லிக்கறேன். பேயின் வரதுக்கு இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். எனிவே இன்னும் ஒரு இரண்டு மணிநேரம் வெயிட் பண்ணிப் பார்ப்போம் அப்பவும் பிபி குறையாம பேயினும் வராம இருந்ததுனா அப்பறம் நமக்கு நோ அதர் ஆப்ஷன். இதை எக்ஸ்ப்ளேயின் பண்ணத் தான் உங்களை வரச்சொன்னேன். வலி வந்தாலும் சரி வராட்டாலும் சரி இதே பிபி ரீடிங் இருந்ததுன்னா நிச்சயம் எட்டு மணிக்கு ஆப்ரேஷன் செய்திடுவோம். எதற்கும் தயாராக இருங்க ப்ளீஸ்”

“டாக்டர் நான் மிருதுளாவைப் பார்க்கலாமா?” என்று நவீன் கேட்டான்

“இல்லை இப்போ அவங்களை அங்கிருந்து ஷிஃப்ட் பண்ண மாட்டோம். ஸப்போஸ் ஆப்ரேட் பண்ணணும்னு இருந்தா அவங்களை இந்த வழியே தான் ஆப்ரேஷன் தியேட்டருக்குக்  கூட்டிட்டுப் போவாங்க அப்போ நீங்க பார்க்கலாம்”

“தாங்கஸ் டாக்டர்”

என்னதான் முந்தின நாள் விட்டுவிட்டுச் சென்றாலும் நவீனின் மனதும் மிருதுளாவின் மனம் போலவே தன் மனைவியை ஒரு முறையாவது பார்த்திட மாட்டோமா என்றேங்கியது. ராமானுஜம் நவீனிடமும் வேனுவிடமும்..

“இந்தாங்கோ சாவி நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குப் போய் குளிச்சுட்டு வாங்கோ. அதுதான் இரண்டு மணிநேரமாகும்ன்னு டாக்டர் சொல்லறாளே. இங்கே நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்”

இரவு முழுவதும் நவீனும், வேனுவும் ஹாஸ்பிடலிலேயே இருந்ததால் அவர்கள் வேகமாக வீட்டுக்குச் சென்றனர். இருவரும் குளித்து ரெடியாகிய பின் அருகில் இருந்த ஹோட்டலுக்குச் சென்று காலை உணவருந்திவிட்டு அம்புஜத்திற்கும் ராமானுஜத்திற்கும் வாங்கிக் கொண்டு  ஹாஸ்பிடல் சென்றனர்.

அம்புஜம் தனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு ஒரு பென்ச்சில் அமர்ந்து கண்களை மூடி அம்மனிடம் தன் பொண்ணும், பேரக் குழந்தையும் நல்லபடியா இருக்கணும்ன்னு வேண்டுக்கொண்டே இருந்தாள். ராமானுஜம் நவீனிடம்

“உங்க அப்பா அம்மாக்கு சொன்னேங்களா?”

“ஓ!! சொல்லலை மறந்துட்டேன். ஆனா அவா காலையில ஹாஸ்பிடல் வரதா சொல்லியிருக்கா. ஸோ அவா வந்துக்குவா”

“அப்போ சரி. மணி எட்டாக இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு. அதோ உங்க அப்பா அம்மா எல்லாரும் வந்துண்டிருக்காளே. வாங்கோ மாமா. வாங்கோ மாமி”

“என்ன குழந்தை பொறந்திருக்கு?”

“இன்னும் பொறக்கலை மாமி. எட்டு மணி வரை வெயிட் பண்ணிப் பார்க்கலாம்ன்னு சொல்லிருக்கா”

“விடியற் காலையிலேயே பொறந்திடும்ன்னு டாக்டர் சொன்னதா நவீன் நீ சொன்னயே!!”

“ஆமாம் சொன்னேன் ஆனா மிருதுக்கு வலி தொடர்ந்து வரலை விட்டு விட்டு வந்ததால இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிப் பார்க்கறா”

“ஆமாம் அம்புஜம் மாமி எங்கே? காணமே!!”

“மாமி அதோ அவ அங்க உட்கார்ந்துண்டு இருக்கா பாருங்கோ. நீங்களும் போய் அங்கே உட்கார்ந்துக்கோங்கோ. இன்னும் எட்டு நிமிஷமிருக்கு”

பர்வதம் அம்புஜத்தின் அருகே சென்று அமர்ந்தாள்‌. அவள் அமர்ந்ததுக் கூட தெரியாமல் அம்புஜம் வேண்டிக்கொண்டிருந்தாள். அப்போது பர்வதம்

“என்ன மாமி உட்கார்ந்துண்டே தூங்கறேங்களா?”

என அம்புஜத்தின் தோளில் கையை வைத்தாள். உடனே அம்புஜம் அப்போதுதான் சுயநினைவு வந்தவள் போல ஆங் ஆங் குழந்தைப் பொறந்தாச்சா?? என்று கேட்டாள். அதற்கு பர்வதம்


“மாமி தூங்கினதும் இல்லாம கனவு வேறயா!!! பேஷ்”

“வாங்கோ பர்வதம் மாமி நீங்க எப்போ வந்தேங்கள்? நான் தூங்கலை அம்பாளை வேண்டிண்டு இருந்தேன் அது தான் எதையுமே கவனிக்கலை மன்னிச்சுடுங்கோ”

வேனு வேகமாக ஓடி வந்து

“அம்மா அம்மா!! நம்ம மிருதுவ ஆப்ரேஷன் தியேட்டருக்குக் கூட்டிண்டு போகப் போறாளாம் வா மா வா”

என்று கூற அம்புஜம் உடனே எழுந்து வேகமாக நடந்தாள். பர்வதம் அவள் பின்னாலே சென்றுக் கொண்டே

“ஏன் ஆப்பரேஷன்? அப்போ சுகப் பிரசவமில்லையா?”

என்று கேட்டதும் அம்புஜம் சற்று பதற்றமடைந்தாலும் பர்வதத்திற்கு பதிலளிக்காமல் வேகமாக சென்றாள். லேபர் வார்டிலிருந்து மிருதுளாவை ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சரில் லேபர் வார்டு முன் படுக்கவைத்திருந்ததை அனைவரும் தூரத்திலிருந்து பார்த்தனர். சற்று நேரத்தில் வார்டு பாய்ஸ் மிருதுளா படுத்திருந்த ஸ்ட்ரெச்சர் வண்டியை தள்ளிக் கொண்டே ஆப்ரேஷன் தியட்டரை நோக்கி வந்தனர். ஆப்ரேஷன் தியேட்டர் வராண்டாவில் வரிசையாக நின்றிருந்தனர் அவள் சொந்தங்கள். அந்த வண்டி அவர்களை நெருங்கியதும் அம்புஜமும், நவீனும் ஓடிச் சென்று அரை மயக்கத்திலிருந்த மிருதுளாவைப் பார்த்து நவீன்

“கவலைப் படாதே மிருது இன்னும் கொஞ்ச நேரம் தான் நமக்கு பாபா பொறந்திடும். நான் உனக்காகவும் பாபாக்காகவும் இங்கேயே இருப்பேன் சரியா. பி போல்டு.”

“மிருதுமா ஒண்ணுமில்லை டா கண்ணா. நீயும் குழந்தையுமா இன்னும் கொஞ்ச நேரத்துல வெளிய வந்திடுவேங்கள் சரியா. அம்மா உங்களுக்காக வேண்டிண்டே இருப்பேன். நாங்க எல்லாரும் இங்கே தான் இருக்கிறோம் பயப்படாதே”

என்று வண்டியுடனே நடந்துக் கொண்டே சொன்னார்கள். அரை மயக்கத்திலிருந்தாலும் நவீனைப் பார்த்ததில் மிருதுளாவுக்கு தெம்பு வந்தது. அவள் ஏதும் பேசாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டே சென்றாள். கதவு மூடப்பட்டது. சற்று நேரத்தில் எல்லாம் குழந்தையின் அழுகுரல் கேட்டது மிருதுளாவுக்கு. மயக்கத்திலும் தன் குழந்தையைப் பார்க்க ஆவாலாக இருந்தவளிடம் டாக்டர்

“மிருதுளா குட். உனக்கு அழகான பெண் குழந்தைப் பொறந்திருக்கு இதோப் பார் என்று காட்டினார்.”

குழந்தை சற்று மங்கலாக தான் தெரிந்தது மிருதுளாவிற்கு ஆனால் தன் வயிற்றினுள் பத்து மாதங்கள் உருண்டு பிரண்ட குழந்தையை ரத்தமும் சதையுமாக பார்த்ததில் அவள் வானில் மிதப்பதைப் போல உணர்ந்தாள். குழந்தையை குளிப்பாட்டி டவலில் சுற்றி முகம் மட்டும் தெரியும்படி வெளியே காத்திருந்த மிருதுளா சொந்தங்களுக்கு காட்டினார் நர்ஸ். அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளினர். நவீன் தன்னிடம் குழந்தையைத் தரும்படி கூற அதற்கு நர்ஸ்

“இல்ல சார் சிசேரியன்ங்கறதுனால குழந்தையை மூன்று நாட்கள் இன்க்யுபேட்டரில் வைக்கணும். அதுவுமில்லாம குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் ஆகக்கூடாதில்லையா!!! உங்களுக்கு காட்ட தான் கொண்டு வந்தேன்.”

என்று கூறி சற்று நேரம் காட்டிவிட்டு உள்ளே எடுத்துச் சென்றாள். அப்போது வேனு…

“அம்மா இன்க்யுபேட்டர்ல நிறைய குழந்தைகள் இருக்குமே நம்ம மிருதுக்கா பாப்பாவை மாத்திட மாட்டாளே!! அது வேற முட்ட முட்ட கண்ணை வச்சுட்டு முழிச்சு முழிச்சுப் பார்க்கறது.”

என்று சந்தோஷத்தில் அழுதுக் கொண்டிருந்த அம்புஜம்  நார்மலாக வேண்டி சொன்னான். அதைக் கேட்டதும் அனைவரும் சிரித்தனர். ராமானுஜம் உடனே சென்று ஒரு கிலோ சாக்லேட் வாங்கி வந்து அனைவருக்கும் கொடுத்தார். ஒரு அரை மணி நேரத்தில் மிருதுளாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து வார்டுக்கு கொண்டு செல்ல வண்டியைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தனர் அப்போதும் அம்புஜமும், நவீன் வண்டியின் அருகில் சென்று நடந்துக் கொண்டே நவீன்

“மிருது கங்கிராட்ஸ் நமக்கு பொண்ணுப் பொறந்திருக்கா. குழந்தை நல்லா அழகா இருக்கு. முழிச்சு முழிச்சுப் எங்களை எல்லாரையும் பார்த்தா. நீ நிம்மதியா இரு ஓகே நான் இங்கேயே தான் இருப்பேன் எங்கேயும் போக மாட்டேன்”

என்றான் அப்போது வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்த வார்டு பாய் நவீனிடம்

“சார் அவங்க மயக்கத்துல இருக்காங்க. இன்னும் குறைந்தது மூணு மணி நேரமாகும் அவங்களுக்கு மயக்கம் தெளிய”

அதை கேட்டும் அம்புஜம் மிருதுளாவிடம்

“மிருதுமா குழந்தை அழகா இருக்கா. நிறைய முடியிருக்கு. நீங்க ரெண்டும் பேரும் ஆரோக்கியமா இருக்கேங்கள்னு டாக்டர் சொல்லிட்டா. நீ எதுக்கும் இனி கவலைப் படாதே சரியாமா”

என்று பேசி முடிக்கவும் வார்டுக்குள் வண்டி சென்றதும் அந்த அறையின் கண்ணாடிக் கதவு மூடப்பட்டது. மிருதுளாவை ஸ்ட்ரெச்சரிலிருந்து பெட்டிற்கு மாற்றி சலைன் ஏற்றினர். கண்ணாடி கதவு வழியாக நவீனும் அம்புஜமும் பார்த்துக் கொண்டே இருந்தனர். பின் இருவரும் மற்ற அனைவரும் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டு விட்டு ராமானுஜம் வீட்டுக்கு சென்றனர். நவீனும் வேனுவும் மட்டும் ஹாஸ்பிடலிலேயே இருந்தனர்.

காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாத அம்புஜம் வீட்டிற்கு அனைவருமாக வந்ததும் எல்லோருக்கும் முதலில் டீப் போட்டுக் கொடுத்து தானும் ஒரு பெரிய டம்பளர் நிறைய டீயைக் குடித்தாள். பின் மடமடவென விருந்து சாப்பாடு சமைத்தாள். அனைவருக்கும் சாப்பாடு பறிமாறினாள். எல்லோரும் சாப்பிட்டதும் ஈஸ்வரனும் பர்வதமும் கிளம்புவதாக சொல்ல ராமானுஜம் ஆட்டோவை வரவழைத்தார். அவர்கள் இருவரும் அதில் ஏறி அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்.

ஹாஸ்பிடலில் நவீனிடம் நர்ஸ்..

“சார் நீங்க இனி இங்க இருக்க வேண்டிய அவசியமில்லை இனி நாளை மறுநாள் தான் உங்க வைஃப்பை நார்மல் வார்டுக்கு மாத்துவாங்க அதுவரை நீங்க அந்த கண்ணாடி கதவு வழியா தான் அவங்களைப் பார்க்க முடியும். ஸோ எதுக்கு சும்மா இங்கேயே இருக்கீங்க நீங்க ரெண்டு பேருமே வீட்டுக்குப் போகலாம்.”

“சிஸ்டர் அப்போ மிருதுக்கு சாப்பாடு?”

“மூணு நாளும் சலைன் தான் சாப்பாடு சார். அதுவரை சாப்பாடு கொடுக்கக் கூடாது. நார்மல் வார்டுக்கு மாத்தினதுக்கப்பறம் சாப்பாடு நீங்க கொண்டு வந்தும் கொடுக்கலாம் இல்லாட்டி ஹாஸ்பிடலேயும் எழுதிக் கொடுக்கலாம். நாங்களே டைமுக்குக் கொடுத்திடுவோம். நீங்க யோசிச்சு சொல்லுங்க. இதுக்கு மேல இங்க இருந்தீங்கன்னா அப்புறம் டாக்டர் எங்களைத் திட்டுவாங்க சார் ப்ளீஸ் கிளம்புங்க. மிருதுளாவை நாங்க பத்திரமா பார்த்துப்போம்”

என்று நர்ஸ் சொல்லிவிட்டுச் சென்றதும் மீண்டும் ஒரு முறை மிருதுளாவை கண்ணாடி கதவு வழியாக பார்த்தான் நவீன் அவள் அசையாமல் ஆடாமல் படுத்திருந்தாள். அவளை அப்படிப் பார்த்ததும் நவீனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. வேனு பின்னாலிருந்து “அதிம்பேர் கிளம்பலாமா” என்று கேட்டதும் கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப மனசில்லாமல் வேனுவுடன் புறப்பட்டு வீட்டுக்குச் சென்றான் நவீன்.

அங்கே அம்புஜம் பேத்திப் பிறந்ததற்காக சமைத்த விருந்து சாப்பாட்டை இருவருக்கும் வாழை இலையில் பறிமாறினாள். நவீனுக்கு சாப்பாடு இறங்கவில்லை‌. ஏதோ சாப்பிடனுமே என்று சாப்பிட்டு எழுந்தான். அனைவரும் இரண்டு நாட்கள் அடைந்த பதற்றத்தில் சரியாக தூங்காததால் உணவருந்தியதும் படுத்துக் கொண்டனர். நன்றாக உறங்கினர். ஆனால் நவீனுக்கு உறக்கம் வரவில்லை அவன் மனம் முழுவதும் மிருதுளா தான் இருந்தாள். அவள் பேசிக் கேட்பதற்கும், அவளை நார்மலாக பார்ப்பதற்கும் காத்திருந்தான்.

தொடரும்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s