அத்தியாயம் 99: பிச்சுமணி வீட்டு விசேஷம்

தங்கள் காரிலேயே திருமண மண்டபம் சென்றடைந்தனர் நவீனும் மிருதுளாவும். மாலை டிபன் சாப்பிட்டுவிட்டு மாப்பிள்ளை அழைப்பில் கலந்துக் கொள்ள மண்டபத்தின் முதல் தளத்திற்கு சென்றனர். அங்கே அனைத்து சொந்த பந்தங்களும் அமர்ந்திருந்தனர். மிருதுளாவின் கண்கள் தன் குடும்பத்தைத் தேடியது. ஆனால் ப்ரவீன் துளசி ஒரு மூலையிலும், பவின் பவித்ரா ஒரு மூலையிலும், கஜேஸ்வரி வழக்கம் போல அங்குமிங்குமாக ஏதோ வேலை செய்வது போல பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்தாள். மூத்த தம்பதியர் ஓர் இடத்திலுமாக அமர்ந்திருந்தனர். இதில் யார் அருகே சென்று அமர்வது என்ற குழப்பத்தில் மெல்ல நடந்துச் சென்றாள். நவீன் தன் பெரியப்பா அருகில் அமர்ந்து பேச்சில் மும்முரமானான். துளசி அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து வந்து மிருதுளாவோடு வந்துக் கொண்டிருந்த சக்தியைப் பார்த்து

“என்ன சக்தி எப்படி இருக்க? படிப்பெல்லாம் எப்படி போறது?”

“ஆங் நல்லா இருக்கேன் சித்தி. நல்லா படிக்கறேன்”

“மன்னி எப்படி இருக்கேங்கள்?”

“நல்லா இருக்கேன் துளசி. நீ எப்படி இருக்க? குழந்தைகள் எங்கே?”

“அவா எங்கேயாவது விளையாடிண்டு இருப்பா.”

“ஏன் எல்லாரும் ஒவ்வொரு மூலையில உட்கார்ந்திருக்கேங்கள்?”

“அதெல்லாம் அப்படித்தான் மன்னி.”

என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பவித்ரா வந்தாள்

“ஹாய் மிருதுளா மன்னி எப்படி இருக்கேங்கள்?”

“ஆங் நல்லா இருக்கேன். நீ பவின் குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்கேங்கள்?”

“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்.”

“மன்னி நீங்க உங்க புது வீட்டுக்கு மாறிட்டேங்களா?”

“இல்ல துளசி. வேலை நடக்கறது. இன்னும் ஒரு ரெண்டு வாரத்துல ஷிஃப்ட் பண்ணிடுவோம்.”

“சரி மன்னி நீங்க பேசிண்டிருங்கோ. நான் வரேன். அப்புறமா பேசுவோம்”

“சரி பவித்ரா அப்புறம் பார்ப்போம். வா துளசி உட்காரு”

“இல்ல மன்னி நானும் போய் என் புள்ளகள தேடி டிபன் சாப்பிட வைக்கணும். நானும் வரேன்”

“ஓகே போயிட்டு வா”

என்று கூறிவிட்டு விசேஷத்துக்கு வந்திருந்த மற்றவர்களிடமெல்லாம் நலம் வகசாரித்தப் பின் பெரியவர்களுக்காக சிறியவர் இறங்கி செல்வதில் தவறில்லை என்றெண்ணி ஈஸ்வரன் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று நலம் விசாரிக்கும் போது

“அப்பா எப்படி இருக்கேங்கள்?”

“ஆங் நல்லா இருக்கேன் மா. வா வா உட்காரு. எப்போ வந்தேங்கள்? நவீன் எங்கே?”

“அதோ அங்க உட்கார்ந்துண்டு பெரியப்பாவோட பேசிண்டிருக்கார்.”

“ஓ!! சரி சரி சரி. என்ன நீங்க உங்க புது வீட்டுக்கு குடிப் போயாச்சா?”

“இல்லப்பா. இரண்டு வாரம் கழிச்சு போவோம்.”

“உனக்கு தெரிஞ்சிருக்குமே.!”

“என்னதுப்பா?”

“எல்லாம் கவின் கஜேஸ்வரி வீடு விஷயம் தான்”

“ஆங் கஜேஸ்வரி ஃபோன் போட்டு சொன்னாப்பா. நீங்களும் அவளுமா நாளைக்கு போறேங்களாமே?”

“ஆமாம் ஆமாம்!! உங்க மைசூர் வீட்டைப் பார்த்துட்டு வந்ததுலேந்து பேயாட்டம் ஆடிட்டாமா கஜேஸ்வரி.”

என்று ஈஸ்வரன் முதல் முறையாக மனம் விட்டு பேச ஆரம்பித்தது மிருதுளாவுக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தாலும் அதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பமும் இருந்தது ஏனெனில் அவர்கள் கஜேஸ்வரி பிடியிலிருப்பவர்களாயிற்றே!! பவித்ராவிடம் வேண்டுமென்றே தன்னைப் பற்றி குற்றம் சொல்லச் சொல்லி மாமியாரிடமிருந்து போட்டு வாங்க செய்தவளாயிற்றே! அதே போல் இம்முறை மாமனாரை வைத்து ஏதோ செய்ய நினைக்கிறாளோ எதுவானாலும் தான் ஜாக்கிரதையாக இருந்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே

“என்ன சொல்லறேங்கள்?”

“அட அமாம்மா…அவளால இப்போ என் மச்சினன் பிச்சுமணியோட எனக்கு மனஸ்தாபம் ஆகிடுத்து. மொதல்ல நானும் பர்வதமும் அவ கூட போறதாயிருந்தது. அப்புறமா சரி பர்வதமாவது அவ தம்பிப் பொண்ணுக் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணட்டும்னு இருக்கச் சொல்லிட்டேன்…. நான் கூட சொன்னேன் ஏன் இப்போ அகலக்கால் வைக்கணும்னு. மைசூர்ல வாங்கின வீடே இன்னும் கைக்கு வந்தபாடில்லை..‌இதுல நாங்க இப்போ இருக்குற வீடும் ஏதோ ரோட்டு மேல வர்றதுன்னும் அதை இடிக்கணும்னும், கோவில் நிலம்னும் ஏதேதோ சொல்லறா…ஸோ இதுவும் பிரச்சினையில இருக்கு…இந்த நேரத்துல எதுக்கு இன்னொரு வீடுன்னு!! ஆனா கேட்கலையே!! என் வேலையை மட்டும் பார்த்துண்டு இருக்கச் சொல்லிட்டா”

“கவின் ஒண்ணும் சொல்லலையா?”

“அவனும் வேண்டாம்னு தான் சொன்னான். இவ விடலையே. அவளோட ஃப்ரெண்ட்ஸ், அவனோட ஃப்ரெண்ட்ஸ் னு எல்லார்கிட்டயும் ஏதேதோ பேசி அவாளை எல்லாம் கவின் கிட்ட பேச வச்சு வாங்க வச்சுட்டாளே!!! அவனும் அவளோட தொல்லை தாங்காம வாங்கிட்டான். ஆனா ரிஜிஸ்ட்ரேஷன் வரை லீவு எடுக்க முடியாதுனுட்டு புறப்பட்டு குவைத் போயிட்டான்.”

“சரி…ஏன் கஜேஸ்வரி அந்த வீட்டை வாங்க அவ்வளவு பிடிவாதம் பிடிச்சா?”

“ம்…உங்களுக்கு முன்னாடி மைசூர்ல வீடு வாங்கினாளாம் ஆனா நீங்க அதுக்கு அப்புறமா வாங்கி கிரகப்பிரவேசமும் செஞ்சு குடியும் போக போறேளாம்”

“அதுக்கு!”

“அவளும் கிரகப்பிரவேசம் பண்ணணுமாம். அதுவும் இந்த வருஷமே பண்ணணுமாம். அதுனால எண்பது சதவிகிதம் முடிஞ்ச வீட்டை வாங்கிருக்கா”

“ஓ!!! அப்படியா.”

என்று மிருதுளா வெளியே கூறினாலும் மனதிற்குள்

“ஏன் இப்போ உங்க மாட்டுப்பொண்ணுட்ட சொல்ல வேண்டியது தான்…. இங்க வந்தா நான் வச்சது தான் சட்டம்னு..”

என்று நினைத்ததை கேட்க வாய் வரை வந்தது…ஆனால் மீண்டும் அவள் மனது அவளிடம்

“அவரே வேதனையில பொலம்பறாரு…இப்போப் போய் ச்சே…கேட்கக் கூடாது. அது தப்பு”

என சொன்னதும் அப்படியே சொல்ல திறந்த வாயை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அப்போது ஈஸ்வரன்

“என்ன சொன்ன?”

“ஒண்ணும் சொல்லலையே!!”

“இல்லையே ஏதோ சொன்னா மாதிரி இருந்ததே!”

“இல்லைப்பா …சரி அவ யார்கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு சொன்னாலே நீங்க பாட்டுக்கு இப்படி பொலம்பறேங்கள்?”

“ஆமாம்!! அவளுக்கு வேற வேலையில்லை…அவ கிடக்கா….அதுவுமில்லாம இங்க நாம மட்டும் தானே உட்கார்ந்துண்டிருக்கோம் ஸோ நோ ப்ராப்ளம்”

“அப்போ நீங்க யார்கிட்டேயும் உண்மையை சொல்லலை”

“இல்லை. எதுக்கு நமக்கு வம்புனுட்டு நான் பாட்டுக்கு இருக்கேன்”

இதைக் கேட்டதும் மிருதுளா மெல்ல தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். பின்னாலிருந்து நவீன் அழைத்தான். உடனே தன் மாமனாரிடம்

“சரிப்பா நவீன் கூப்பிடறார் நான் போயிட்டு வரேன். நாங்க டின்னர் ஆனதும் ஹேட்டலுக்கு போயிடுவோம். நாளைக்குப் பார்ப்போம்”

“நாளைக்கு நான் தான் கஜேஸ்வரிக்கூட போகணுமே!!!”

“சாயந்தரம் நலங்குக்கு வந்திடுவேங்கள் இல்லையா”

“ஆங் வந்திடுவோம்னு நினைக்கறேன்…தெரியாதுமா”

“சரிப்பா பார்ப்போம்”

என்று கூறிவிட்டு நவீனிடம் சென்றாள். அங்கே நவீன் சில தூரத்து சொந்தங்களை அறிமுகம் செய்து வைத்தான். பின் அவன் அவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் சக்தியும் மிருதுளாவும் அவன் அருகே அமர்ந்திருந்தனர். அதைப் பார்த்த கஜேஸ்வரி நேராக மிருதுளாவிடம் வந்து

“ஹலோ மன்னி எப்படி இருக்கேங்கள்? எப்போ வந்தேங்கள்?”

“நீ எப்பவும் போல பிஸியா அங்கேயும் இங்கேயுமாக மும்முரமா வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாயே அப்போதே வந்துட்டோம்.”

“ஆமாம் மன்னி அம்பிகா மாமி என்னைப் பிடிச்சுண்டுட்டா …என்னப் பண்ண? சரி மன்னி நான் இப்போ சாப்டுட்டு ஆத்துக்கு கிளம்பிடுவேன்..ஏன்னா நாளைக்கு விடியற் காலையில கிளம்பணும். நாங்க வாங்கப் போற அப்பார்ட்மெண்ட்… உங்க வீடு மாதிரி சிட்டி ஒதுக்குப் பறமா எல்லாம் இல்லை மதுரை சிட்டி சென்டர்ல இருக்கு. என் ஃப்ரெண்டும் அதுல வாங்கியிருக்கா.”

“யாரு அந்த மைசூர் வீட்டை வாங்கிட்டு ஆறே மாசத்துல கைமாத்திவிட்டவளா?”

“ச்சே ச்சே!! அவ இல்ல மன்னி இவ வேற ஒரு ஃப்ரெண்டு. அநேகமா இந்த வருஷத்துலேயே நாங்க ரெண்டு கிரகப்பிரவேசம் வைப்போம்னு நினைக்கறேன்”

“ரெண்டா?”

“அட ஆமாம் மன்னி ஒண்ணு மைசுர்ல இன்னொன்னு மதுரையில. நாங்க எல்லாம் ரெண்டு வீட்டுக்கும் ஒரே நேரத்துல கிரகப்பிரவேசம் பண்ணுவோம் மன்னி”

“ஆமாம் ஆமாம் செஞ்சாலும் ஆச்சர்யப்படறதுக்கு ஒண்ணுமில்லமா”

“சரி மன்னி வர்றேளா சாப்பிட?”

“இதோ நவீ பேசிட்டு வந்தா சாப்பிட கிளம்பணும். ஆமாம் ஏன் எல்லாரும் ஒவ்வொரு மூலையில உட்கார்ந்திருந்தேங்கள்? துளசிய கேட்டா அது அப்படித் தான்னு சொல்லறா…நீ சொல்லேன்”

“அவளைப் பத்தி மட்டும் என்கிட்ட பேசாதீங்கோ மன்னி. எனக்கு அவளைப் பார்த்தாளே பத்திண்டு வரும். அவளும் அவ பேச்சும். வேலைக்கு போறாளாம் வேலைக்கு!! மகாராணி….நீங்களும் தானே வேலைக்கு போனேங்கள் ….ஆனாலும் இவ ஆடுற ஆட்டம் ரொம்பத் தான்…அதெல்லாம் நீங்க வந்துப் பார்க்கணும் அப்போ தான் தெரியும்…சரி மன்னி நான் வரேன்”

என்று மிருதுளாவிடம் கூறிவிட்டு ஈஸ்வரனிடம்

“என்ன உட்கார்ந்துண்டே இருக்கேங்கள் மாமா? ம்…எழுந்து சாப்பிட்டுட்டு வாங்கோ ஆத்துக்கு போவோம். காலையில சீக்கிரம் கிளம்பணும் இல்லையா. ம்..ம்..வாங்கோ”

என்று கஜேஸ்வரி கூறியதும் பொட்டிப்பாம்பாக அவள் பின்னால் ஈஸ்வரன் சென்றதைப் பார்த்த மிருதுளாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அன்றிரவு உணவருந்தியதும் நவீனும் மிருதுளாவும் அவர்கள் புக் செய்திருந்த ஹோட்டலுக்குச் சென்றனர். மிருதுளா ஈஸ்வரன் சொன்னதையும் கஜேஸ்வரியுடனும் துளசியுடனும் மற்ற சொந்தங்களுடனுமான பேச்சு வார்த்தைகளை நவீனுடன் பகிர்ந்தாள். அனைத்தையும் கேட்ட நவீன்

“இருக்கட்டும் இருக்கட்டும். ஒரு இடத்துல ரொம்ப ஆடினா இன்னொரு இடத்துல அடங்கித் தான் போகணும்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்…இப்போ கேட்டும் தெரிஞ்சுண்டுட்டேன். பேசாம வந்து படு மிருது.”

என்று சற்று நேரம் நடந்தவைகளைப் பற்றி பேசி விட்டு உறங்கினார்கள் மூவரும்.

மறுநாள் விடியற் காலையில் எழுந்து கல்யாணத்துக்கு ரெடியாகிச் சென்றனர். மண்டபம் சென்றதும் அனைவருடனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு மணமக்களை வாழ்த்திப் பரிசளித்து சாப்பிடச் சென்றனர். அவர்களுடன் ப்ரவீன் துளசியும் சேர்ந்துச் சென்றனர். அப்போது நவீன்

“என்னடா ப்ரவீன் எப்படி இருக்க? எங்காத்து கிரகப்பிரவேசத்துக்கு ஏன் நீ வரலை?”

“ஆங் நல்லா இருக்கேன். அது துளசியோட ஆஃபீஸ் ல ஆடிட்டிங் இருந்தது அதுதான் லீவு கிடைக்கலை”

“ஜூன் மாசத்துல ஆடிட்டிங்கா சரி சரி நம்பிட்டேன் நம்பிட்டேன்”

“விடுங்கோளேன் நவீ….அவா வரலைன்னா அதுக்கு ஆயிரம் காரணமிருக்கும் அதை எல்லாம் உங்ககிட்ட சொல்லவா முடியும். நான் துளசி கிட்ட கேட்டேனா ஏன் வரலைன்னுட்டு….விடுவேங்களா…. நீ போப்பா ப்ரவீன் துளசி கிட்ட உட்கார்ந்து சாப்பிடு.”

என்று அவர்கள் வராததை தான் கேட்கக் கூட விரும்பவில்லை என்பதை நாசுக்காக உணர்த்தினாள் மிருதுளா. சாப்பிட்டதும் மண்டபத்தின் நடுவில் அமர்ந்து சித்தி சித்தப்பாக்கள், பெரியம்மா, பெரியப்பாக்களுடன் பேசிக்கொண்டிருந்தனர் நவீனும் மிருதுளாவும். பர்வதம் துளசியின் மகளையும் மகனையும் பார்த்துக் கொள்வதிலேயே முழுநேரமும் ஓரிடத்தில் உட்கார்ந்து பேசக்கூட முடியாது இருந்தாள். அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு நவீன் முன் தினம் இரவு சொன்னது ஞாபகம் வந்தது. பிச்சுமணி மாமாவும் அம்பிகா மாமியும் சற்று ஃப்ரீ ஆனார்கள் அப்போது நவீனும் மிருதுளாவும் மாமாவிடமும் மாமியிடமும் வாழ்த்துக்களைத் தெரிவித்து சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கையில் பர்வதம் ஏதோ சாப்பாட்டுப் பொருளை எடுத்து வந்து பிச்சுமணியிடம் நீட்டி சாப்பிடச்சொன்னாள் அதற்கு பிச்சுமணி பர்வதத்திடம் ஏதும் சொல்லாது வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டார். அதைப் பார்த்த மிருதுளா அதிர்ந்துப் போனாள். அவர்கள் பேசிவிட்டுச் சென்றதும் நவீனிடம்

“நீங்க உங்க மாமாவை கவனிச்சேங்களா நவீ!”

“ஏன் கேட்குற மிருது”

“மாமா உங்க அம்மாட்ட முகம் கொடுத்துப் பேசவேயில்லை”

“ஆங் ஆங் அதையா…கவனிச்சேன் கவனிச்சேன்”

“எப்படிப்பா ஆருயிர் தம்பி ஆச்சே அவர். அவா அக்காவை எப்படி இப்படின்னு எனக்கு ஷாக் ஆயிடுத்து”

“அவர் வீட்டுல ஆல்ரெடி அந்த லேடி பிரச்சினை பண்ணிருக்கா…இப்போ இந்ல கல்யாணத்துல என்னத்தைப் பண்ணிணாலோ என்னமோ…அதுதான் மாமா அப்படி பிஹேவ் பண்ணிருக்கார்”

“அது என்ன அந்த லேடின்னு!!!”

“சரிமா உன் மாமியார்…போதுமா”

என்று பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியாது அமர்ந்திருந்தனர். அடுத்து நலங்கு ஆரம்பிக்க பத்து நிமிடங்கள் தான் இருப்பதாக சொல்லி அனைவரையும் அதற்கு தயாராகச் சொன்னார் பிச்சுமணி மாமா. உடனே எல்லோரும் எழுந்துச் சென்று கிளம்பினார்கள். நவீனும் மிருதுளாவும் அமர்ந்திருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தனர். அதை கவனித்த அம்பிகா மாமி மிருதுளாவிடம் வந்து

“ஏய் நவீன் மிருது ஏன் இங்கேயே உட்கார்ந்துண்டு இருக்கேங்கள்? போய் ரெடியாகுங்கோ”

“அதுதான் ரெடியா இருக்கோமே மாமி”

“என்னடி விளையாடறையா? டிரெஸ் மாத்தலையா?”

“இல்ல மாமி இப்படியே நலங்கு அட்டெண்ட பண்ணிட்டு ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கோம்”

“நீங்க ரெண்டு பேரும் வந்தது ரொம்ப சந்தோஷம் பா…நல்ல வேளை உனக்கு நாத்தனார்கள் இல்லை மிருது.‌‌…தப்பிச்ச…எனக்கு ஆறு பேரு நினைச்சுப் பாரு. நேத்தேலேந்து ஒரே பிரச்சினை சண்டை தான் போ…எப்படியாவது என் பொண்ணுக் கல்யாணம் நல்லபடியா நடந்தா போறும்னு ஆயிடுத்துமா”

“விடுங்கோ விடுங்கோ மாமி…எல்லாம் நல்லதுக்கே.”

“இப்படியே விட்டுக் கொடுத்துண்டே இருந்ததால தான் இவ்வளவு ஆட்டம் போட்டா தெரியுமா….அதெல்லாம் பெரிய கதை அப்புறமா ஆத்துக்கு வரும்போது சொல்லறேன். சரி நான் வரேன் மிருது”

“சரி மாமி போயிட்டு ரெடியாகி நலங்குக்கு வாங்கோ. எதுக்கும் டென்ஷன் ஆகாதீங்கோ”

என்று பேசி தன் மனக்குமுறலை மிருதுளாவிடம் பகிர்ந்துக் கொண்டு சென்றாள் அம்பிகா. அதை கவனித்த நவீன் மிருதுளாவிடம்

“என்ன மிருது இது….நேத்து உன் மாமானார் உன் கிட்டப் புலம்பினார்…இன்னைக்கு மாமி புலம்பிட்டுப் போறா….இவாளுக்கெல்லாம் என்ன ஆச்சு?”

“எவ்வளவு நாள் தான் எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே வச்சுப்பா நவீ…என்னைக்காவது யார்கிட்டயாவது சொல்லத்தான் தோணும். அது யாரா இருந்தாலும்…”

“ஆனா ஒண்ணு கவனிச்சயா?”

“என்ன?”

“மாமி புலம்பிட்டுப் போறா ஆனா இந்த சித்திகளும் பெரியம்மாக்களும் ஒண்ணுமே நடக்காதது போலவே இருக்காளே அது எப்படி?”

“ம்…படுத்தறவா அப்படித் தான் நடந்துக்குவா!! சாமர்த்தியம் போதாம படறவா தான் புலம்புவா. ஏன் நம்ம கூட்டமும் அப்படி தானே! செய்றதை எல்லாம் செவ்வெனே செய்திட்டு அதுக்கும் அவாளுக்கும் சம்மந்தமே இல்லாததுப் போல நடந்துண்டதில்லையா? இல்ல நடக்கறதில்லையா?”

“ஆமாம் ஆமாம்!!! சரி சரி எல்லாரும் நலங்குக்கு வர ஆரம்பிச்சிட்டா.. வா நாமளும் அடெண்ட் பண்ணிட்டு ஒரு ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிடலாம். சரியா”

“ஓகே டன்.”

நலங்கு தொடங்கிய சற்று நேரத்தில் கஜேஸ்வரியும் ஈஸ்வரனும் மண்டபத்துக்கு வந்தனர். மிருதுளாவும் துளசியும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். கஜேஸ்வரி நேராக மிருதுளாவின் வலதுபுறம் அமரந்து

“என்ன மன்னி எல்லாரும் எங்களைக் கேட்டாளா? நீங்க நான் சொன்ன மாதிரி தானே சொன்னேங்கள்?”

“யாருமே கேட்கலை கஜேஸ்வரி.”

“என்னது யாருமே கேட்கலையா?”

“ஆமாம். கடவுள் எங்களை பொய் சொல்ல வைக்கக்கூடாது என்பதாலோ என்னவோ எங்க கிட்ட உங்களைப் பத்தி யாருமே விசாரிக்கலைமா”

என்று மிருதுளா சொன்னதும் ஏதோ ப்ளானிங்கில் சொதப்பலாகிவிட்டதோ என்ற முகபாவனையுடன்

“சரி மன்னி நான் போய் டிபன் சாப்படுட்டு வந்திடறேன். சரி பசி”

“ம்…ஓகே”

என்றதும் கஜேஸ்வரி எழுந்து டைனிங் ஹாலுக்குச் சென்றாள். அப்போது துளசி மிருதுளாவிடம்

“மன்னி நீங்க ரிஜிஸ்ட்ரேஷன் பத்தி கேப்பேங்கள்னு தான் தயங்கி நின்னா கஜேஸ்வரி”

“அப்படியா! எனக்கு தோணலையே!! அதுவுமில்லாம நான் கேட்கப் போய் .‌.என்னால தான் எல்லாருக்கும் தெரியவந்ததுனு பிரச்சினையாகறதுக்கா….வேண்டாமா வேண்டவே வேண்டாம். நிறையப் பட்டாச்சு”

கீழே சாப்பிடச் சென்ற கஜேஸ்வரி மீண்டும் மேலே வந்தாள்

“என்ன கஜேஸ்வரி அதுக்குள்ள சாப்டுட்டயா?”

“ஆங் ஆச்சு மன்னி. நான் தான் சொன்னேனே சரிப் பசி. டிபன் போன வேகம் தெரியலை.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் நவீனின் ஒண்ணு விட்ட சித்தப்பா மருமகள் வந்து பேச்சில் கலந்துக் கொண்டாள். அப்போது சம்மந்தமே இல்லாமல் திடீரென கஜேஸ்வரி மிருதுளாவிடம்

“மன்னி நீங்க ஏன் டையட்டிங் பண்ணக்கூடாது”

“ஏன் பண்ணணும்?”

“இல்ல கொஞ்சம் உடம்பு குறையுமேனுட்டு சொன்னேன்”

என்று கஜேஸ்வரி கூறியதும் மிருதுளாவுக்கு கோபம் தலைக்கேறியது. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு சிரித்தப்படியே

“அதை நவீன் சொல்லட்டும். நான் செய்கிறேன். அவருக்கு நான் அழகாக தெரியும் பட்சத்தில் நான் ஏன் குறைக்கணும் ….அதுவுமில்லாம நான் உன்னை மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி குச்சி மாதிரி இருந்துட்டு அதுக்கு அப்புறம் புஸ்ஸுனு ஆகலையே….எங்க கல்யாணத்துல எப்படி இருந்தேனோ அப்படியே தானே இருக்கேன்….என்ன கஜேஸ்வரி அப்படிதானே…துளசிக்குத் தெரியாது ஆனா நீ தான் எங்க கல்யாணத்துக்கும் வந்திருந்தயே…உனக்கு அது நல்லாவே தெரியுமே இல்லையா”

“ம்….ஆமாம் மன்னி… சரி இருங்கோ அந்த மாமிய விசாரிச்சுட்டு வந்துடறேன்”

என ஏதோ திட்டமிட்டு எதுவும் நடக்காமல் போனதில் குழம்பி ஏதாவது வம்பு வளர்க்க எண்ணி அதிலும் ஏமாற்றத்தையே சந்தித்து செய்வதறியாது அங்கிருந்து சென்றாள் கஜேஸ்வரி.

நலங்கு நல்லப்படியாக நடந்தேறியது. அன்றிரவு உணவை சாப்பிட்டுவிட்டு அனைவரிடமும் சொல்லிக் கொண்டு மைசூருக்குப் புறப்பட்டுச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.

இந்த விசேஷத்தில் மிருதுளாவுக்கு பர்வதப் பஞ்ச் ஏதும் இல்லாமல் போனதற்கு துளசியின் இரண்டு குழந்தைகளே காரணமெனலாம் …..அதே நேரம் தனது அந்த உத்தமமான வேலை தனது மருமகள் கஜேஸ்வரி எடுத்துக் கொண்டதால் விலகியிருக்கலாம்….என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். கஜேஸ்வரியும் ஏதேதோ ப்ளான் செய்தும் எதுவும் மிருதுளாவிடம் பலிக்கவில்லை. கடவுள் இருக்காரு கஜேஸு என்பதே உங்கள் மைன்ட் வாயிஸாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

தொடரும்…….


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s