அத்தியாயம் 95: வேனுவின் வருகை

பவின் பவித்ரா வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு மூன்றே நாட்கள் தான் இருந்தன. அப்போது நவீனுக்கு நல்ல சளி ஜுரம் பிடித்து அவதிப்பட்டான். அன்று மாலை நவீனைக் கூட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றாள் மிருதுளா. அங்கே நவீனுக்கு ப்ளட் டெஸ்ட் எல்லாம் எடுத்தனர். பின் டாக்டர் அவர்களிடம் நவீனுக்கு வந்திருப்பது வைரல் ஃபீவர் என்றும், ஐந்து நாட்களுக்கு இருக்கும் என்றும் கூறி மருந்து மாத்திரைகள் எழுதிக் குடுத்தார். அவர்களும் அவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இரண்டு நாட்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டும், மிருதுளா வைத்துக் கொடுத்த கஞ்சி, மிளகு ரசம் என்று சாப்பிட்டதில் நவீனின் உடம்பு சற்று தேறியது. அப்போது நவீன் மிருதுளாவிடம்

“நாளைக்கு பவின் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு நாம வரமுடியாதுன்னு ஃபோன் பண்ணி சொல்லிட்டு அப்படியே டிக்கெட்டையும் கேன்சல் பண்ணிடு மிருது”

“எதுக்கு நவீ? உங்களுக்கும் சக்திக்கும் வேண்டியதெல்லாம் செய்து வச்சுட்டு நான் இன்னைக்கு நைட்டு போய் காலையில விசேஷத்தை அடெண்ட் பண்ணிட்டு மத்தியானம் டிரெயின் பிடிச்சு வந்துடறேன்.”

“சொன்ன கேட்க மாட்டியா மிருது!! அவமானப்படறது உனக்கு சந்தோஷத்தைத் தர்றது போல!! அதுதான் அதையே தேடி தேடிப் போற”

“அப்படி இல்ல நவீ. அதெல்லாம் சொன்னா உங்களுக்குப் புரியாது விடுங்கோ. சரி நான் பவித்ராட்ட ஃபோன் பண்ணி சொல்லறேன் …நான் மட்டும் தான் வரேன்னும், நேரா அவா ஆத்துக்கே வந்துடறேன்னும்.”

“என்னமோ பண்ணு. கடவுளே எனக்கு உடம்பு முடியாம செய்து அங்க போக வேண்டாம்னு சொல்லியும் நீ கேட்க மாட்டேங்கற இல்ல….அப்புறம் என் கிட்ட வந்து புலம்பக்கூடாது சொல்லிட்டேன்”

“சரி …சரி… ரிங் போறது கொஞ்ச நேரம் குவைட்டா இருங்கோ ப்ளீஸ். ஆங் பவித்ரா நான் மகருதுளா பேசறேன்”

“ஹலோ மன்னி சொல்லுங்கோ. இன்னைக்கு நைட் தானே அங்கேந்து கிளம்பறேங்கள்”

“ஆங்…ஆமாம். அதைப் பத்திப் பேச தான் ஃபோன் பண்ணினேன்”

“என்ன சொல்லுங்கோ”

“இங்கே நவீனுக்கு வைரல் ஃபீவர். இரண்டு நாள் ஆச்சு. இப்போ கொஞ்சம் பரவாயில்லை ஆனா டாக்டர் அவரை ட்ராவல் பண்ணக்கூடாதுனு சொல்லிட்டார். அதுனால அவர் வர முடியாது. அதுதான் நான் மட்டும் வரலாம்னு இருக்கேன்”

“ஓ! அப்படியா? ஓகே வாங்கோ”

“எதுக்கு நான் ஃபோன் பண்ணினேன்னா? நாங்க வர்றதா இருந்தப்போ நேரா எங்க சென்னை ஆத்துக்குப் போயிட்டு ஃப்ரெஷ் ஆகி அப்படியே உங்காத்து கிரகப்பிரவேசத்துக்கு வரலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம். ஆனா இப்போ நான் மட்டும் தனியா வரதுனால அங்க எல்லாம் போகாம நேரா உங்காத்துக்கே வரலாம்னு இருக்கேன். காலையில ஒரு நாலரை மணிக்கு டிரெயின் சென்னை ரீச் ஆகிடும் நான் ஆட்டோப் பிடிச்சு உங்காத்துக்கு ஒரு அஞ்சு மணிக்கெல்லாம் வந்திடுவேன் அதை உன் கிட்ட சொல்லத்தான் கூப்பிட்டேன்”

“ம்…அப்படியா? ஆனா மன்னி நாங்க எல்லாரும் அஞ்சு மணிக்கெல்லாம் புது வீட்டுக்குப் போயிடுவோமே!!”

“ஓ!! ஓ!! ஒருத்தர் கூட அப்போ ஆத்துல இருக்க மாட்டாளா?”

“இல்ல மன்னி யாருமே இருக்க மாட்டோம். ஆங்…இதோ வரேன். சரி மன்னி நான் ஃபோனை வைக்கறேன். எனக்கு வேலையிருக்கு”

என்று சரியான பதிலளிக்காமல் வெடுக்கென பேசிவிட்டு ஃபோன் காலைத் துண்டித்தாள் பவித்ரா. அவள் அப்படி பேசி வச்சதும் மிருதுளா முகம் வாடியது. அனைத்தையும் கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த நவீன் மிருதுளாவிடம்

“இது தேவையா? நீ சொல்லுற தனியா வருவன்னு ஆனா அவ பேச்சுக்காவது நீங்க வாங்கோ வேணும்னா யாரையாவது இங்க இருக்கச் சொல்லறேனு சொன்னாளா? இல்ல வேற ஏதாவது வழியாவது சொன்னாளா? மூஞ்சில அடிச்சா மாதிரி யாரும் இருக்க மாட்டோம்னு சொல்லிட்டு இப்படி வச்சுட்டாளே இதுக்கு அப்புறமும் நீ போகணுமா? ஒருத்தர் ஃபோன் பண்ணி வரேன்னு சொல்லும் போது அவாளை வாங்கோன்னு சொல்லி அவாளுக்கு ஏதாவது வழியில் ஹெல்ப் பண்ணணும்னு தோனறதா பாரு!!! இதே இடத்துல நீ இருந்துருந்தேனா என்ன பண்ணிருப்ப தெரியுமா? அவளை வரச்சொல்லிட்டு அவளுக்காக வீட்டில யாரையாவது இருக்க சொல்லி அவ வந்து ரெடியானதும் புது வீட்டுக்குக் கூட்டிண்டு வரச் சொல்லிருப்ப…கரெக்ட்டா!!”

“ஆமாம்….”

“என்ன ஆஆமாம்னு இழுக்கற?”

“நீங்க சொல்லறது எல்லாமே கரெக்ட்டு தான். சாரி! இப்ப என்ன பண்ணணும்னு சொல்லறேங்கள்”

“இப்ப இல்ல அவா வந்துட்டு போனதிலேந்தே சொல்லறேன் நாம போக வேண்டாம்னும், டிக்கெட்டை கேன்சல் பண்ணிடலாம்னும் எங்க கேட்ட? இப்பவாவது கேன்சல் பண்ணிட்டு வேற வேலையைப் பாரு. நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்”

“ம்….சரி நவீ. கேன்சல் பண்ணிடறேன்”

என்று தனது லேப்டாப்பை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டாள். அவள் அதின் உள் நுழைவதற்குள் நவீன் உறங்கிப் போனான். அவள் புக் செய்திருந்த டிக்கெட்டை கேன்சல் செய்து மடிக்கணினியை மூடி டேபிள் மீது வைத்து அந்த அறையின் கதவை மெல்ல சாத்தி விட்டு ஹாலுக்கு வந்தாள். பின் தனக்குள்

“நவீன் சொல்லறது எல்லாமே கரெக்ட்டா தான் இருக்கு !!ஆனா!!! அவரை மாதிரி ஏதும் பேசாம எதையும் கண்டுக்காம எப்படி இருக்கறது? என்ன அவர்கிட்டயா கேட்கப்போறா எல்லாரும் என்கிட்ட தானே கேட்பா!! அவருக்கென்ன? ஆனாலும் இந்த பவித்ரா பண்ணினது டூ மச் தான். பார்ப்போம் ! பார்ப்போம்! எல்லாரும் இவ்வளவு சமத்து சாமர்த்தியம் விட்டேத்தித்தனத்தோட எல்லாம் என்ன ஆகறான்னு? அது ஒண்ணுமே இல்லாத நாம என்ன ஆகறோம்னு?”

என்று பேசிக் கொண்டிருந்தாள் அப்போது நவீன் இருமும் சத்தம் கேட்டதும் வேகமாக எழுந்து ஒரு கிளாஸ் வெந்நீர் எடுத்துச் சென்றுக் குடுத்தாள். அப்போது நவீன்

“என்ன மிருது கேன்சல் பண்ணிட்டயா இல்ல இன்னமும் போகுற ஐடியால இருக்கயா?”

“நோ வே!! நவீ. எனக்கும் அவ பேசினது பிடிக்கலை. நீங்க சொன்னது தான் சரி. அதுனால கேன்சல் பண்ணிட்டேன்.”

“இது தான் எனக்குப் பிடிக்கலை.”

“என்னது வெந்நீரா?”

“ஜோக்கு!!! நான் முன்னாடி சொல்லும் போதே கேட்டு அதுபடி நீ கேன்சல் பண்ணிட்டு அவளுக்கு ஃபோன் பண்ணி வரமுடியாதுனு சொல்லியிருக்கலாம் இல்லையா? அதை விட்டுட்டு அவகிட்ட கேட்டு அதுக்கு அவ பெரிய இவ மாதிரி இப்படி சொல்லி….தேவையா இதெல்லாம்?”

“சரி சரி….தூங்கறதுக்கு முன்னாடியே இதை எல்லாம் சொல்லிட்டேங்கள்…அதுக்கு நானும் சாரி கேட்டுட்டேன். இப்போ எழுந்ததுக்கு அப்புறம் மறுபடியும் அதையே சொல்லறேங்களே நவீ. இனி உங்க ஃபேமிலியைப் பொருத்தவரை நீங்க என்ன சொன்னாலும் அது படியே நடந்துக்கறேன். ஓகே வா!. இவ்வளவு நேரமா அதைப் பத்தித் தான் யோசிச்சிண்டிருந்தேன். ”

“ம்..ம்…பார்ப்போம்”

“சரி கொஞ்சமா ரசம் சாதம் கரைச்சு எடுத்துண்டு வரவா”

“ம்…சரி மிருது.”

என்று நவீன் கூறியதும் மிருதுளா அவனுக்கு சாப்பாடு குடுத்து மத்தியம் சாப்பிடவேண்டிய மாத்திரைகளையும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டாள். நவீன் மாத்திரைகள் சாப்பிட்டதும் மீண்டும் உறங்கலானான். மாலை சக்தி ஸ்கூலில் இருந்து வருவதற்குள் அவளுக்கு டிபன் செய்து வைக்க துவங்கினாள். அந்த வேலை முடிந்ததும் அடுப்படியை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வந்தமர்ந்தாள். அப்போது மிருதுளாவின் தம்பி வேனு லண்டனிலிருந்து கால் செய்தான். அவன் ஊருக்கு வரப்போவதாக கூறினான்‌. மிருதுளாவுக்கு ஒரே குஷியானது. படிக்கச் சென்ற வேனு அங்கேயே வேலைப் பார்த்துக் கொண்டு தான் படிப்புக்கு பட்ட கடனை அடைத்து விட்டு பல ஆண்டுகளுக்கு பின் ஊருக்கு வருகிறான். அவன் பேசி முடித்து ஃபோனை வைத்ததும் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து

“அம்மா இப்போ தான் வேனு ஃபோன் பண்ணினான். அவன் ஊருக்கு வரும் வியாழக்கிழமை வரானாம்.”

“ஆமாம் எங்கள்ட்டேயும் கொஞ்சம் முன்னாடி பேசினான் மிருது. அப்போ உன்கிட்டேயும் பேசப்போறதா சொன்னான். அவன் ஃபோனை வச்சதும் நான் உனக்கு ட்ரைப் பண்ணினேன் ஆனா என்கேஜ்டாவே இருந்தது…சரி நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறேங்கள்னு விட்டுட்டேன். சரி அவன் வரும் போது நீயும் வந்து ஒரு வாரம் இருந்துட்டுப் போயேன்”

“எங்க மா வர்றது!! சக்திக்கு பரீட்சை வர்றதே!! பாரப்போம். சரி உன்கிட்ட இன்னொன்னு கேட்கணுமே”

“என்னது கேட்கணும்?”

“உனக்கு பவின் ஆத்து கிரகப்பிரவேசப் பத்திரிகை வந்துதா?”

“ஆங் நேத்து வந்தது. பவின் ஃபோன்ல பேசினான்”

“என்ன சொன்னான்?”

“விசேஷத்துக்கு அழைச்சான் அப்புறம் அவன் சொன்னான்…அவா பத்திரிகை அனுப்பினாலாம் ஆனா நீ தான் பத்திரிகை வரலைன்னு சொன்னையாம் அதுனால தான் மறுபடியும் குரியர்ல அனுப்பினாளாம் ஆனாலும் உனக்கு வரலைன்னு சொன்னயாமே!! ஏன் எனக்கு நேத்தே வந்துடுத்தே”

“அமாம் அவன் சொன்னா அது உண்மையாகிடுமா!! அட போம்மா…. உனக்கு அனுப்பச் சொல்லி பவித்ரா அவ அப்பாகிட்ட ஃபோன்ல சொன்னா அதைக் கேட்டேன். எங்களுக்கெல்லாம் யாரும் ஒண்ணும் அனுப்பவுமில்லை தரவுமில்லை”

“ஏன்டி இவா இப்படி எல்லாம் பண்ணறா? ஒரு விசேஷம் நாள் கிழமைன்னா எல்லாருமா வந்திருந்து வாழ்த்தணும்னு நினைக்கவே மாட்டாளா?”

“அதெல்லாம விடு நீ என்ன போகப்போறயா?”

“நான் எங்கேந்து போறது?”

“ஏன் என்ன ஆச்சு?”

“உங்க அப்பாவோட ஒண்ணு விட்ட சித்தப்பாவோட புள்ள பைக் ஆக்சிடெண்ட்ல இறந்து போயிட்டானாம் நேத்து தான் ஃபோன் வந்தது. அவா ஃபோன் பண்ணி வச்சதும் பவின் ஃபோன் பண்ணினான். அவன் கிட்ட இந்த மாதிரி விஷயம் அதுனால நாங்க வர முடியாதுன்னு சொல்லிட்டோம். அவனும் சரின்னு சொல்லிட்டான்”

“ஓ!! அப்படியா!! இந்த விஷயத்தை நீ ஏன் நேத்தே எனக்கு சொல்லலை?”

“உனக்கு தெரிஞ்சு என்ன ஆகப்போறது! எதுக்கு உன்னையும் சங்கடப்பட வைக்கணும்னு தான் சொல்லலை”

“ம்…ஓகே !! பார்த்தயா அந்த கடவுளே நம்மளை அந்த விசேஷத்துக்கு போக விடாம பண்ணிட்டா?”

“ஏன் நீங்களும் போகலையா?”

“எங்கேந்து நவீனுக்கு வைரல் ஃபீவர். சரி நான் மட்டும் ஒரே நாள்ல வந்துட்டு திரும்பிடலாம்னு நினைச்சேன். ஆனா நம்மாத்துக்கு வந்துட்டு அங்கேந்து அவா புது வீடு இருக்கற இடத்துக்குப் போக ஒன் அவர் ஆகிடுமேன்னு நேரா அவா இப்போ இருக்குற வீட்டுக்கே வரேன்னு சொன்னேன் அதுக்கு அவா யாருமே அங்க இருக்க மாட்டாளாம். காலங்காத்தாலேயே கிளம்பி புது வீட்டுக்குப் போயிடுவாளாம். அப்புறம் நான் எங்க போய் குளிச்சு ரெடி ஆகுவேன்!! அதுனால போகலை.”

“அப்படியா!! சரி அதுவும் நல்லது தான் இந்த மாதிரி நேரத்துல நீ உன் ஆத்துக்காரரை அவனிச்சுண்டு அங்கேயே இரு.”

“ம்…சரி மா சக்தி ஸ்கூல்லேந்து வந்துட்டா நான் போய் அவளுக்கு டிபன் குடுக்கட்டும்.”

“ஏய் மிருது ஃபோனை சக்திக் கிட்ட குடுடி.”

“ம் சரி சரி…சக்தி இந்தா உன் அம்பு பாட்டி உன்கிட்ட பேசணுமாம். பேசிட்டு யூனிபார்ம் எல்லாம் மாத்திட்டு, முகம் கைக் கால் எல்லாம் அலம்பிட்டு டிபன் சாப்பிட வா”

“ம்..சரி சரி மா… ஹலோ பாட்டி”

“ஹலோ சக்தி மா எப்படி இருக்க?”

“நல்லாருக்கேன் பாட்டி. நீ எப்படி இருக்க? தாத்தா எப்படி இருக்கா?”

“நாங்க ரெண்டு பேரும் நன்னா இருக்கோம் டா தங்கம். உன் மாமா வேனு வர்ற வியாழக்கிழமை ஊருக்கு வர்றான். அம்மாவோட நீ இந்த வெள்ளிக்கிழமை நைட்டு கிளம்பி வர்றயா?”

“ஐய்யா ஜாலி ஜாலி. ம்…சரி பாட்டி அம்மாவோட வர்றேன்.”

“ஓகே டா தங்கம். நீ போய் ட்ரெஸ் எல்லாம் மாத்திட்டு டிபன் சாப்பிடு கண்ணா. பை “

“ஓகே பாட்டி பை பை”

என்று ஃபோனை வைத்ததும் சென்று யூனிபார்மை மாற்றி கைக் கால் அலம்பி விட்டு டைனிங் டேபிளுக்கு வந்து அமர்ந்து

“அம்மா வேனுமாமா வர்றாளாமே! பாட்டிச் சொன்னா”

“ஆமாம் சக்தி இந்த தர்ஸ்டே வர்றா.”

“அம்மா பாட்டி நம்மளை ஃப்ரைடே அங்க வரச்சொல்லிருக்கா”

“ஆமாம் என்கிட்டேயும் சொன்னா…உனக்கு அடுத்த வாரம் பரீட்சைத் தொடங்கப் போறதில்லையா அதுதான் யோசிச்சிண்டிருக்கேன்”

“அம்மா நான் படிச்சுக்கறேன். நாம இந்த ஃப்ரைடே போயிட்டு சன்டே ஈவ்னிங் வந்துடலாமே…எக்ஸாம் நெக்ஸ்ட் ஃப்ரைடே தான் ஆரம்பிக்கறது…ப்ளீஸ் மா”

“சரி சரி அப்பா எழுந்துக்கட்டும் கேட்கலாம்.”

என்று நவீன் எழும் வரை காத்திருந்து அவன் தூக்கத்திலிருந்து எழுந்ததும் மிருதுளாவும் சக்தியும் விவரத்தைச் சொல்லி போகலாமா வேண்டாமா என்று கேட்டனர். அதுக்கு நவீன் தான் மிகவும் வீக்காக இருப்பதாக சொன்னான். உடனே மிருதுளா

“உங்களை வரச்சொல்லலையே நாங்கள். எனக்குத் தெரியாதா உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு. நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்கோ நான் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் தோசை/இட்லி மாவு அரைத்து, வெங்காயச் சட்னி, கொத்துமல்லி சட்னி, ரசம், சாம்பார், பொறியல்கள்ன்னு எல்லாமே செய்து ஃப்ரிட்ஜில வச்சுட்டு போயிட்டு வரேன். என்ன சொல்லறேங்கள்?”

“ம்…சரி சரி பத்திரமா போயிட்டு சன்டே வந்திடுங்கோ.”

“ஓகே!! சக்தி டிரெஸெல்லாம் பேக் பண்ணுவோம் வா”

“அம்மா ரெண்டு நாள் தான் போகப்போறோம் அதுக்கெல்லாம் பேக்கிங் ஆ!!”

“மிருது வேனுவைக் கேட்டதா சொல்லு. நான் ஃபோன்ல அவன்ட்ட பேசறேன். பேசாம நீங்க ரெண்டு பேரும் வரும்போது அவனையும் கூட்டிண்டு வந்திடுங்கோளேன்”

“நல்ல ஐடியா தான் சொல்லிப் பார்க்கறேன்”

என்று பேசிக் கொண்டே ரொம்ப மாதங்களுக்குப் பின் தன் அம்மா வீட்டுக்கு மிருதுளா செல்லப் போவதை எண்ணி மகிழ்ச்சியிலிருந்தாள். அப்போது ஃபோன் அடித்தது. மிருதுளா எடுத்தாள்

“ஏய் மிருது எப்படி இருக்க? நவீன் எப்படி இருக்கான்? என்னமா நாங்க எல்லாம் டில்லிலேந்து சென்னைக்கு விசேஷத்தை அட்டெண்ட் பண்ண வந்திருக்கோம் நீங்க இதோ இருக்குற மைசூர்லேந்து வரலையே ஏன்? வந்திருந்தா உங்களையும் நாங்க பார்த்திருப்போமில்லையா?”

“ஹலோ சித்தி மெதுவா மெதுவா…இப்படி கேள்விகளா அடுக்கிண்டே போனேங்கள்னா எப்படி நாங்க பதில் சொல்லறது. நாங்க நல்லா இருக்கோம் சித்தி. அது தான் வந்தா எல்லாரையும் பார்க்கலாமேனு தான் நினைச்சோம் ஆனா என்னப் பண்ண சித்தி நவீனுக்கு உடம்புக்கு முடியாம போயிடுத்து. சரி நான் மட்டுமாவது வரலாம்னு பார்த்தா …அஞ்சு மணிக்கு தான் பவித்ரா ஆத்துக்கு வந்து சேர முடியும் அதுக்குள்ள அவா எல்லாரும் புது வீட்டுக்கு போயிடுவாளே!! அப்புறம் நான் எப்படி எங்கே குளிச்சு ரெடியாகறதுன்னு யோசிச்சு தான் சரின்னு டிக்கெட்டைக் கேன்சல் பண்ணினேன்! என்ன பண்ண?”

“அட நீ வேற எல்லாரும் பவித்ரா ஆத்துலேந்து கிரகப்பிரவேச வீட்டுக்கு கிளம்பினதே அஞ்சேமுக்கால் ஆறாயிடுத்து. அங்கே போனா வாத்தியார் வர்றதுக்கு லேட் அகி அப்புறம் ஒரு வழியா கிடுகிடுன்னு முடிச்சா. நீ வந்திருக்கலாமே மிருது.”

“ஓ!! அப்படியா!! சரி என்ன பண்ண விடுங்கோ சித்தி. ஏன் இப்போ நீங்க மைசூர் வந்தாலும் நாம சந்திச்சுக்கலாமே.”

“இல்ல மா நான் குழந்தைகளை சித்தப்பாட்ட விட்டுட்டு வந்திருக்கேன். இன்னிக்கு நைட்டே கிளம்பறேன். அடுத்தத் தடவைப் பார்ப்போம்”

“ஷுவர் சித்தி. அடுத்த ஏதாவது விசேஷத்துல சந்திக்கலாம் ஆர் நாங்க டில்லி வர்றோம்”

“தாராளமா வாங்கோ. யூ ஆர் மோஸ்ட் வெல்கம்.”

“ஹலோ சித்தி நான் நவீன் பேசறேன்”

“ஹேய் நவீன் மிருது சொன்னா. இப்போ எப்படி இருக்க?”

“இப்ப கொஞ்சம் பரவாயில்லை சித்தி. சித்தப்பாவையும் குழந்தைகளையும் கேட்டதா சொல்லுங்கோ”

“சரி டா சொல்லறேன் நீங்களும் பத்திரமா இருங்கோ நவீன் உடம்பைப் பார்த்துக்கோ. பை வச்சுடட்டுமா?”

“ஓகே!! சித்தி பை”

என்று ஃபோனை வைத்ததும் நவீன் மிருதுளாவிடம்

“பார்த்தயா சித்தி சொன்னதை அவா எத்தனை மணிக்கு கிளம்பியிருக்கான்னு!! இனியாவது அவாளை எல்லாம் கண்மூடித்தனமா நம்புறதை நிப்பாட்டு”

என்று மிருதுளா புரிந்துக் கொள்ளவில்லை என்றெண்ணி நவீன் சொல்ல அதற்கு மிருதுளா

“நவீன் கண்மூடித்தனமா எல்லாம் நான் நம்பலை. எனக்கும் புரியாம இல்ல. ஆனாலும் மனுஷா வேணும் இல்லையா”

“ஏன் அதே நினைப்பு அவாளுக்கிருந்ததா? இருந்திருந்தா அவா அப்படி நடந்திண்டிருப்பாளா? மறுபடியும் சொல்லறேன் ஜாக்கிரதையா இரு”

என்று கூறிவிட்டு சென்றான் நவீன். வெள்ளிக்கிழமை வந்தது. மிருதுளாவும் சக்தியுமாக ஊருக்குக் கிளம்பினார்கள். அப்போது நவீன்

“இங்கே பாரு மிருது நீ உங்காத்துக்கு மட்டும் போயிட்டு வா அவ்வளவு தான் சொல்லுவேன். சும்மா மாமனார் மாமியாருன்னுட்டு போனயோ”

“சரி சரி டென்ஷன் ஆகாதீங்கோ நாங்க போகலை.”

என்று கூறிவிட்டு தங்கள் காரிலேயே ஊருக்குச் சென்றனர். அங்கே வேனுவைப் பார்த்ததும் சந்தோஷத்தில் மிதந்தாள் மிருதுளா. வேனுவும் அத்துனை வருடங்கள் கழித்து தன் அக்காவையும் அவள் மகளையும் பார்த்ததில் அகமகிழ்ந்துப் போனான். வேனு தன் அக்காவுக்காவும், அத்திம்பேருக்காகவும், சக்திக்காகவும் வாங்கி வந்த பொருட்கள் அனைத்தையும் கொடுத்தான். பின் அனைவருமாக ஒன்றாக இரவு உணவு அருந்தியப் பின் வேனு தன் அத்திம்பேருக்கு ஃபோன் போட்டுப் பேசினான். அதன் பின் பழங்கதைகளை எல்லாம் பேசிக் கொண்டே உறங்கிப் போனார்கள். மறுநாள் காலை எழுந்ததும் அவரவர் வேலைகளில் மூழ்கினர். அன்று ஒன்பது மணி ஆகியும் சக்தி எழுந்திரிக்காமல் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த மிருதுளா தன் அம்மாவிடம்

“என்ன இன்னைக்கு என் பொண்ணு இவ்வளவு நேரம் தூங்கறா? இரு எழுப்பறேன் அவளை”

“விடேன்டி கொழந்த தூங்கட்டுமே”

“ம்…என்னையும் என் தம்பியையும் அந்த வயசுல இப்படி தூங்க விட்டேங்களா? காலங்காத்தால ஃபேனை ஆஃப் பண்ணிட்டுப் போனேங்களே!! அப்போ தோனலையோ கொழந்தகள் தூங்ட்டும்னு!!”

“அது தானே. சரியா சொன்ன மிருதுக்கா. எழுப்பிட்டு எழுந்திரிக்கலைன்னா ஃபேனை ஆஃப் பண்ணிடுவா இல்ல எனக்கும் ஞாபகம் இருக்கு.”

“நீங்கள் என் புள்ளகள். ஆனா இப்போ தூங்கறது என் பேத்தியாச்சே!!”

“பார்ரா!! இங்கே ஒரு பஞ்சாயத்தே போறதா இவ அசையாம தூங்கறதை. அடியே சக்தி எழுந்துக்கோ மணி ஒனப்தாகறது.”

என்று மிருதுளா இரண்டு முறை சொன்னதும் எழுந்தாள் சக்தி. படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூமுக்குச் சென்றாள் அப்போது சக்தியின் டிரெஸில் லேசான ரத்தக் கறை இருந்ததைப் பார்த்த மிருதுளா வேகமாக அடுப்படியிலிருந்த தன் அம்மாவிடம் ஓடினாள்

“அம்மா அம்மா !! நம்ம சக்தி டிரெஸ்ல ரத்தக் கறை இருந்தது மா. நான் நினைக்கறேன்…”

என்று மிருதுளா தன் தாயிடம் சொல்லி முடிப்பதற்குள் சக்தி பாத்ரூமிலிருந்து

“அம்மா!! அம்மா!! அம்…மா… சீக்கிரம் இங்கே வாயேன்”

என்று அழைக்க மிருதுளா விரைந்து சென்றாள். அவள் பின்னாடியே அடுப்பை அனைத்து விட்டு அம்புஜமும் சென்றாள்.

தொடரும்……









Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s