அத்தியாயம் 94: பவின், பவித்ரா பத்திரிகை

தாங்கள் இரண்டாம் முறையாக ஏமாற்றப்பட்டதை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்காமல், ஏமாற்றியவர்களுக்கு இனி அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காதிருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர் நவீனும் மிருதுளாவும்.

கவின் கஜேஸ்வரி மைசூருக்கு வந்து சென்று ஆறு மாதங்கள் ஆகின. ஒரு நாள் பவின் சென்னையில் வீடு வாங்கியிருப்பதாகவும் அதற்கு கிரகப்பிரவேசம் வைத்திருப்பதாகவும் ஃபோன் போட்டு சொன்னார்கள் பவினும் பவித்ராவும். அதைக் கேட்டதும் நவீனும் மிருதுளாவும் மிகவும் சந்தோஷப்பட்டனர். அவர்களை ஃபோனிலேயே வாழ்த்தினர். அப்போது பவின் பத்திரிகை அனுப்பவதாகவும் அண்ணா மன்னி அவசியம் வரவேண்டுமென்றும் அழைப்பு விடுத்தான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தில் இருந்தாள் மிருதுளா. அந்த ஃபோன் காலுக்குப் பிறகு பவித்ரா அடிக்கடி ஃபோனில் மிருதுளாவுடன் பேச ஆரம்பித்தாள். மிருதுளாவும் அன்று வரை ஏன் பேசவில்லை என்றோ, தனக்கு இரண்டு மன்னிகள் தான் என்று பவித்ரா சொன்னதையோ அவளிடம் கேட்காமலும் அப்படி ஒன்று நடந்தது என்றே இருவரும் காட்டிக் கொள்ளாமல் பழக ஆரம்பித்தனர்‌. அப்போது பவித்ரா எந்த இரண்டு மன்னிகள் தான் தனக்கு இருக்கிறார்கள் என்று சொன்னாளோ அவர்களைப் பற்றியே கதை கதையாக தன் மன்னி என்றே அறியாத மிருதுளாவிடம் கூறினாள். கூறினாள் என்பதை விட புலம்பித் தள்ளினாள் என்பதே மிக பொருத்தமாகும்.

ஒரு நாள் அப்படி ஃபோன் பேசும் போது பவித்ரா மிருதுளாவிடம்

“மன்னி எங்க அப்பா உங்க கிட்ட ஏதோ கேட்கணுமாம் குடுக்கட்டுமா”

பவித்ராவின் அப்பா பவித்ராவைவிட புலம்ப ஆரம்பித்தார்

“ஏம்மா நீயே சொல்லுமா..சென்னையில நீங்களும் வீடு வாங்கிருக்கேங்கள் இல்லையா!! எந்த பில்டர் மா ஜன்னல்களுக்கு எல்லாம் க்ரில், வுடன் வார்ட்ரோப் எல்லாம் செஞ்சு தர்றா?”

“எல்லாத்துக்கும் தனியா பேமெண்ட் பண்ணினா அதெல்லாம் செஞ்சுத் தருவா!!”

“ம்…இதைத் தான் நானும் சொன்னேன் மா. ஆனா அந்த குவைத்துல ரெண்டு பேர் இருக்கா பாரு அவா தான் எல்லாத்துக்கும் காரணம்.”

“மாமா என்ன ஆச்சு? நீங்க சொல்லறது எனக்கு ஒண்ணுமே புரியலை”

“அவா ஆத்துக்காரர் மிஸ்டர் கவின் மைசூருல வாங்கியிருக்கற வீட்டில் இதெல்லாம் வச்சுத் தர்றானாம் பில்டர். அவன் ஈரோடு வீட்டிலும் அப்படித்தானாம். அதுக்கெல்லாம் தனியா பணம் குடுக்க வேண்டாமாம். வீட்டு விலையிலேயே எல்லாமும் அடக்கமாம்…அப்படீன்னு எங்க மாப்பிள்ளை பவின்ட்டயும் அவர் அப்பா அம்மாட்டையும் சொல்லி ஏத்திவிட்டுருக்கா. அவர் என்னடான்னா நான் தான் ஏதோ வீடு வாங்கத் தெரியாம வாங்கிருக்குற மாதிரி பேசறாரு”

விவகாரம் புரிந்த மிருதுளா இதில் தான் பேச ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து

“மாமா இதெல்லாம் நீங்களாச்சு அவாளாச்சு. என்கிட்ட ஏன் சொல்லறேங்கள். அவா அப்படி தான் நாங்களும் நிறையப் பட்டுட்டு தான் விலகி இருக்கோம். நீங்க ஏதோ கேட்கணும்னு சொன்னதா பவித்ரா சொன்னாளே என்னது அது? அதைக் கேளுங்கோ அவாளை எல்லாம் விடுங்கோ”

“ஆமாம் பார்த்தயா அதை மறந்துட்டேன். சரி நீங்க ரெண்டு கிரகப்பிரவேசம் செஞ்சிருக்கேங்களே உங்களுக்கு புடவை அப்புறம் வேஷ்டி சக்திக்கு டிரெஸ் எல்லாம் யார் எடுத்துத் தந்தா?”

“என்னோட அப்பா அம்மா தான் எடுத்துத் தந்தா மாமா. இதுல என்ன உங்களுக்கு சந்தேகம்?”

“கரெக்ட் யூ ஆர் வெரி கரெக்ட். அப்போ உங்க அப்பா அம்மாவுக்கு எதிர் மரியாதை யார் செஞ்சா? அதாவது அவாளுக்கு புடவை வேஷ்டி எல்லாம் யார் எடுத்துக் குடுத்தா?”

“நாங்க தான் மாமா இதுல என்ன?”

“நாங்க தான்னா உங்க மாமனார் மாமியாரா இல்ல நீயும் நவீனுமா?”

“மாமானார் மாமியாரா?!!! நீங்க வேற மாமா அவா எங்கேந்து எடுப்பா! இல்ல எடுத்திருக்கா? நானும் நவீனும் தான் எடுத்தோம். அதைத்தான் எங்க மாமனார் மாமியார்ட்ட குடுத்து என் அப்பா அம்மாவுக்கு எதிர் மரியாதை செய்ய வச்சோம். அவா பசங்களுக்கு கல்யாணம் கூட பண்ணி வைக்கலை. ஆளா மட்டும் தான் வந்து நிண்ணுண்டா இதுல அவா எங்கேந்து என் அப்பா அம்மாவுக்கு எதிர் மரியாதை எல்லாம் செய்யறது?”

“அது எப்படி மா உன் அப்பா அம்மா எல்லா சீரும் செய்யணும் ஆனா அவாளுக்கு நீங்களே தான் திருப்பி செய்யணுமா?”

“வேற வழி என்ன மாமா?”

“அதையே நாங்க எங்க பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சீரு செய்யாம விட்டா உங்க மாமானார் மாமியார் விட்டிடுவாளா? சொல்லு?”

“நிச்சயம் விடமாட்டா. உங்க தலையை உருட்டு உருட்டுன்னு உருட்டிடுவா. இது தெரிஞ்சது தானே மாமா”

“அப்போ ஆவாளுக்குன்னா செய்யமாட்டா நாங்கன்னா மட்டும் செய்யணுமா?”

“அதை என்கிட்ட கேட்டு என்ன யூஸ் மாமா நீங்க அவா கிட்ட இல்லையா கேட்கணும்”

“எங்களுக்கு எதுக்கு எங்க மாப்பிள்ளையும் பொண்ணும் செலவழிச்சு எதிர் மரியாதை செய்யணும்ங்கறேன்?”

“மாமா எங்க மாமானார் மாமியாரால செய்ய முடியாதுங்கறது நாம எல்லாருக்குமே தெரிந்த விஷயம். பசங்களே அவா அவா கல்யாணத்தை அவா அவா சம்பாதிச்சு தான் செஞ்சுண்டா அதுவுமில்லாம நவீனையும் , கவினையும் படிக்கக் கூட வைக்கலை! அவா கிட்ட போய் இதை நீங்க தான் செய்யணும்னு நிலைமையை தெரிஞ்ச நாமளே எப்படி சொல்லறது?”

“ரைட் நீ சொல்லறது கரெக்ட். அவாளால செய்ய முடியாட்டி அவாளுக்கு அடுத்தப் படியா இருக்கறவா தானே செய்யணும். எதுக்கு என் மாப்பிள்ளையும் பொண்ணும் செய்யணும்ங்கறேன்?”

பவித்ராவின் தந்தை சுத்தி வளைத்து நவீன் மிருதுளா தான் செய்ய வேண்டுமென்பது போல பேச அதைப் புரிந்துக் கொண்ட மிருதுளா சட்டென அவரிடம்

“மாமா இவ்வளவெல்லாம் நானோ நவீனோ ஏன் என் அப்பா அம்மா கூட யோசிச்சதில்லை. எங்க மாமனார் மாமியார் நிலைமை புரிஞ்சிருந்ததால என் அப்பா அம்மாவும் அதை எல்லாம் பெரிசா எடுத்துக்கலை. இப்போ நீங்க சொல்லித் தான் இதை இவ்வளவு சீரியஸாக எடுத்துண்டிருக்க வேணுமோன்னு கூட நினைக்கத் தோனறது. அதுனால எங்க விசேஷத்துல இந்த பிரச்சினை எல்லாம் வரலை”

“அப்படி எல்லாம் விட்டுடக் கூடாது. நான் விட மாட்டேன்.”

“சரி மாமா அது உங்களுக்குள்ள. எனக்கு சக்தி ஸ்கூல்ல இருந்து வர்ற நேரமாச்சு. நான் டிபன் செய்யணும் ஃபோனை வச்சுடட்டுமா? நாளைக்கு பவித்ராட்ட பேசறேன்னு சொல்லிடுங்கோ. உங்களுக்கு எது சரின்னு படறதோ அதையே செஞ்சுக்கோங்கோ மாமா. நான் வச்சுடறேன் பை”

என்று ஃபோனை வைத்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டாள் மிருதுளா. பின் தனக்குத் தானே

“அம்மாடி எப்படி எல்லாம் கேட்கிறார். என் அப்பா அம்மாவும் இருக்காளே!!! அம்மா தாயே இப்படி எல்லாம் கூட யோசிப்பாளா!! அப்பப்பா”

என்று பேசிக்கொண்டே வேலையில் மும்முரமானாள். அன்று மாலை நவீன் வந்ததும் நடந்தவைகளை வழக்கம் போல ஒன்று விடாமல் கூறி முடித்தாள் மிருதுளா. அதை முழுவதுமாக கேட்டு முடித்த பின் நவீன்

“ஆமாம் என்னோட வீட்டையே தின்னுட்டு என்கிட்டயே ஏப்பம் விட்டுக் காட்டினவா!! இவரை எல்லாம் ஊதித் தள்ளிடுவா பாரு. ஆனாலும் அந்த மனுஷன் தன் பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்து இத்தனை வருஷத்துக்கு அப்புறம் அவா சம்மந்திகளுக்கு பதிலா நாம சீர் செய்யணும்னு சொல்ல எப்படி வாய் வந்தது?”

“அவர் டைரெக்ட்டா சொல்லலை நவீ”

“டைரெக்ட்டாவோ! இன்டைரெக்ட்டாவோ! அது எப்படி அவர் சொல்லலாம். ஏன் இதுக்கு முன்னாடி சீமந்தம் வளைகாப்பு பண்ணினா அப்போ நம்ம கிட்ட சொன்னாரா? இல்லை அதுக்கு அப்போ யார் சீர் செஞ்சாளாம்? இதை எல்லாம் நீ கேட்டிருக்கணும் மிருது. சும்மா விட்டிருக்கக் கூடாது”

“வேற வினையே வேண்டாம். யார் கண்டா நான் அப்படி கேட்கணும்னு தான் பேசினாளோ என்னவோ? அங்க நடக்கறது எதுவும் நம்ப நான் தயாரா இல்லைப்பா. ஏன்னா ஒரு நாள் ஃபோன்ல பேசும்போது இந்த பவித்ரா சொல்லறா ….அவளுக்கும் கஜேஸ்வரிக்கும் ஆகாதுன்னு உங்க அம்மாட்ட ரெண்டு பேருமா மாத்தி மாத்தி சொன்னாளாம். எதுக்குன்னு நான் கேட்டதுக்கு!! சொல்லறா….அப்படி அவா ரெண்டு பேரும் சொன்னா தான் உங்க அம்மா கஜேஸ்வரியைப் பத்தி பவித்ராட்டேயும், பவித்ரா பத்தி கஜேஸ்வரிட்டயும் அவாளோட உண்மையான அபிப்ராயத்தையும் ஏதாவது கம்ப்ளேயின்ட்டையும் இவா கிட்ட மனசு விட்டு சொல்லுவாளாம் அதை இவா ரெண்டு பேருமா டிஸ்கஸ் பண்ணிப்பாளாம்!! எப்படி இருக்கு பாருங்கோ? உங்க அம்மாவை இப்படி தான் முட்டாளாக்கணும். அவாளுக்கும் நல்லா வேணும். அதுனால இவா சொல்லறதை எல்லாம் நம்பி நான் பேச அது வேற விதமா போக…எதுக்கு? சொல்லறதை மட்டும் கேட்டுண்டேனா…நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்ப்பேன். அவர் சொல்லிட்டா நாம செய்யணும்னு ஒண்ணும் சட்டமில்லையே. நம்மளை மதிக்க மாட்டாளாம் ஆனா சீர் மட்டும் ப்ராம்ட்டா நாம செய்யணுமாக்கும். போதும் போதும் நாம செஞ்சதெல்லாம் போதும்ப்பா”

“பரவாயில்லையே மிருது !!தேறிட்ட!! எங்கடா நாமளே செய்திடுவோம்னு ஏதாவது சொல்லிடுவியோன்னும் அதுனால நமக்குள்ள பஞ்சாயத்து வந்திடுமோன்னு நினைச்சேன்…குட் இப்படியே இரு”

“அப்படி இருந்த என்னை இப்படி நினைக்க வச்சுட்டாளே நவீ!!! இதைத் தான் அடி மேல் அடி விழுந்தா அம்மியும் நகரும்ன்னு ஒரு பழமொழி சொல்லுவாளே அது போல!!”

என்று கூறிவிட்டு இரவு உணவு செய்ய அடுப்படிக்குள் சென்றாள்.

பவினின் கிரகப்பிரவேசமத்துக்கு செல்ல ட்ரெயினில் டிக்கெட் புக் செய்தனர் நவீனும் மிருதுளாவும். அவர்களின் கிரகப்பிரவேசத்திற்கு இரண்டே வாரங்கள் தான் இருந்தன. அப்போது ஒரு நாள் பவித்ரா மிருதுளாவுக்கு ஃபோன் செய்து

“ஹலோ மன்னி நாங்க மைசூருக்கு வர்றோம். எங்க கூட நம்ம மாமனார் மாமியாரும் வர்றா. அவா கூட எங்க ட்ரெயின் ல போனாலும் நான்ஏசி ல தான் டிராவல் பண்ணணும் என்ன பண்ண?”

“ஏன் அப்படி?”

“நம்ம மாமியாருக்கு தான் ஏசி வேண்டாமே அதுனால எல்லாருமே நான்ஏசில தான் எல்லா இடத்துக்கும் டிராவல் பண்ணிண்டிருக்கோம்ன்னா பார்த்துக்கோங்கோ. இப்போ மைசூருக்கும் அவா அம்மாக்காக நான்ஏசில தான் பவின் டிக்கெட் புக் பண்ணிருக்கார். என் பேச்செல்லாம் எடுபடுமா!! சொல்லுங்கோ. நான் என் பொண்ணை வச்சுண்டு நான்ஏசில டிராவல் பண்ணி பண்ணி கொசு எல்லாம் அவளை கடிச்சு ஒரே ராஷெஸ் ஆயிடுத்து. ஆனாலும் அவருக்கு அவர் அம்மாவின் சொல் தான் வேதவாக்கு.”

“அச்சச்சோ!! அது தான் கம்பளி குடுக்கறாளே அதைப் போர்த்திண்டு இருக்கலாமே!! ஒருத்தருக்காக நாலு பேரு நான்ஏசில டிராவல் பண்ணணுமா என்ன? இட்ஸ் டூ மச்”

“என்ன செய்ய !! அதெல்லாம் கேட்கவே கேட்காதீங்கோ”

“சரி சரி வாங்கோ வாங்கோ”

“எல்லாருக்கும் பத்திரிகை எல்லாம் அனுப்பியாச்சு மன்னி.”

“குட்.”

“சரி மன்னி வச்சுடறேன் மத்ததை நேர்ல பேசிப்போம் பை”

“ஓகே பை பவித்ரா”

என்று ஃபோனை வைத்தாள் மிருதுளா. அன்று மாலை நவீனிடம் பவித்ரா சொன்னதை சொல்லி…

“இதெல்லாம் டூ மச் இல்ல நவீ? ஆனாலும் உங்க அம்மா ரொம்ப தான் பண்ணறா”

“மிருது இவ்வளவு பட்டுட்டும் அவ சொல்லறதை நம்புறயே!!! உன்னை என்ன சொல்ல!!”

“ஏன் இதுல நம்பாம இருக்க என்ன இருக்கு?”

“அவ என்னமோ மாமியாருக்கு அடங்கின மாட்டுப்பொண் மாதிரி உன் கிட்ட நல்லாவே நடிச்சிருக்கா. அவ அப்பா கேட்ட கேள்வியை எல்லாம் கேட்டுட்டுமா அவளை நீ நம்புற!!! நீ வேணும்னா அவ வந்ததும் எல்லார் முன்னாடியும் கேளு அப்போ தெரியும் அவளோட வண்டவாளம்”

“அப்படியா சொல்லறேங்கள்!! அப்போ அவ என்கிட்ட பொய் சொல்லிருக்கானு சொல்லறேங்களா?”

“அப்படித் தான் எனக்கு தோனறது. நீ வேணும்னா அப்படி அட்ஜெஸ்ட் பண்ணிண்டிருப்ப!!! அவ எல்லாம் சான்ஸே இல்ல மிருது”

“உங்க அப்பா அம்மாவும் அவா கூட வர்றாளாம். வந்து மூணு நாள் தங்கப் போறாளாம்”

“இதுல ஏதோ இருக்கு ஆனா என்னன்னு தான் புரியலை. எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துப்போம். சரியா”

“பெத்தவாளும் கூடப்பிறந்தவாளும் நம்ம ஆத்துக்கு வந்தா சந்தோஷமா இருக்கணும் அதை விட்டுட்டு…. இப்படி நம்மளை நினைக்க வச்சுட்டாளே நவீ”

“என்ன பண்ண மிருது? நான் வாங்கிண்டு வந்த வரம் அப்படி”

“நாம நல்லதையே நினைப்போம். நமக்கு நல்லதே நடக்கும்”

“ம்…ம்… பார்ப்போம்”

இரண்டு நாட்களில் பவின், பவித்ரா, அனுஷா, ஈஸ்வரன், பர்வதம் ஆகியோர் டிரெயினில் வந்து இறங்கி டாக்ஸி பிடித்து நவீன் வீட்டிற்கு விடியற் காலையில் வந்து சேர்ந்தனர். அவர்களை வரவேற்று அவர்களுக்கு காபி போட்டுக் குடுத்தாள் மிருதுளா. அப்போது பர்வதம் ஒரு பையை மிருதுளாவிடம் கொடுத்தாள். அதில் கொஞ்சம் பழங்களும் சுவீட்டும் இருந்தது. அதை அடுப்படியில் வைத்து விட்டு மீண்டும் ஹாலுக்கு வந்து நவீன் சொன்னா மாதிரியே பவினிடம்

“ஏன் பவின் நான்ஏசில தானே வந்தேங்கள்”

“இல்லையே ஏசில தான் வந்தோம். எப்படி நாங்க நான்ஏசில வர்றது மன்னி?”

என்று பவினை முந்திக்கொண்டு பதிலளித்தாள் பவித்ரா. அவளின் பதிலைக் கேட்டு அதிர்ந்துப் போய் நவீனைப் பார்த்தாள் மிருதுளா. நவீன் தன் கண்களாலேயே “நான் சொன்னேன் இல்லையா” என்று சொல்ல …தான் மீண்டும் முட்டாளாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத மிருதுளா பவித்ராவிடம்

“என்னது ஏசியா? என்ன பவித்ரா அன்னைக்கு என்கிட்ட ஃபோன் ல என்னவோ மாமியாருக்கு ஏசி ஆகாது அதுனால எல்லா இடத்துக்கும் நான்ஏசி புக் பண்ணி தான் போக வேண்டிருக்குன்னும்…மைசூருக்கும் நான்ஏசி பெர்த்தில் தான் பவின் புக் பண்ணிருக்கார்ன்னும் சொன்னயே”

என்று சொன்னதும் பவின்

“இல்லையே நாங்க எல்லா இடத்துக்கும் ஏசில தான் டிராவல் பண்ணினோம்”

என்று கூறிக்கொண்டே என்ன நடக்கிறது என்பது போல முகத்தை சுளித்தவாரு பவித்ராவைப் பவின் பார்க்க உடனே பவித்ரா

“நானா சொன்னேன்!!! என்ன மன்னி நான் எதுக்கு அப்படி சொல்லப் போறேன்!!”

மிருதுளா மனதிற்குள் “அடிப் பாவி” என்று கூறிக்கொண்டே வெளியே பவித்ராவிடம்

“நீ சொன்னாய். அப்படி நான்ஏசிலயே டிராவல் பண்ணிணதால உன் பொண்ணுக்குக்கூட ராஷெஸ் வந்திடுத்துன்னு சொன்னயே!! இப்ப என்னமோ சொல்லாத மாதிரி நடந்துக்கற”

என்றதும் அதை கொஞ்சமும் காதில் விழாததுப் போல பவித்ரா சட்டென பவினிடம்

“பவின் நான் போய் அனுஷாவை குளிப்பாட்டிட்டு அப்படியே நானும் குளிச்சிட்டு ரெடி ஆகிடறேன் நாம போயிட்டு வந்திடலாம். மன்னி பாத்ரூம் எங்க இருக்கு”

என்றதும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு அங்கே என்று தன் கையை நீட்டிக் காட்டிவிட்டு அடுப்படிக்குள் சென்றாள். மற்ற அனைவரும் குளிக்க ஒவ்வொரு பாத்ரூமிற்குள் சென்றனர். அப்போது நவீன் மிருதுளா பின்னாடியே அடுப்படிக்குள் சென்றான். அவனைப் பார்த்ததும் மிருதுளா அவனிடம்

“நீங்க சொன்னது கரெக்ட் நவீ. எப்படி பொய் பேசறா அவ. அய்யோ அவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்ப்பா.!!! ச்சே இப்படியுமா பொய் சொல்லுவா”

“நான் சொன்னதை ஞாபகம் வச்சுக்கோ. என்நேரமும் எச்சரிக்கையா இருந்துக்கோ. அவ்வளவு தான்”

“ம்…ம்…ஆள் எப்படின்னு தெரிஞ்சுண்டுட்டேன் இல்லையா !!! இனி நான் பார்த்துக்கறேன். சரி லஞ்ச் ரெடி எல்லாத்தையும் டேஸ்ட் பார்த்துடுங்கோ. மத்தியானமா சாதம் மட்டும் வச்சா போதும். டிபனும் ரெடி ஆகிடும். நீங்களும் குளிச்சிட்டு வாங்கோ”

“ம்…சரி சரி …இனி எதுவும் அதைப் பத்தி நீ பேசிக்காத சரியா”

“என்ன மன்னி டிபன் பண்ணறேங்களா”

“ம்…ஆமாம். எல்லாம் ரெடி. நீங்க எல்லாரும் குளிச்சாச்சா?”

“நானும் அனுவும், மாமாவும், மாமியும் ரெடி. பவின் தான் குளிச்சிண்டிருக்கார்”

“ஆமாம் அப்பா அம்மான்னு கூப்பிடறதை விட்டுட்டு நீ ஏன் மாமா மாமின்னு கூப்பிடற?”

“எனக்கு என் அப்பா அம்மா தான்… அப்பா அம்மா… இவாளை எல்லாம் நான் அப்படி கூப்பிட மாட்டேன்.”

“ஓ!! சரி தான்!! சரி நம்ம சொந்தக்காரா எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்தாச்சா?”

“ம்..‌எல்லாருக்கும் போஸ்ட்ல அனுப்பியாச்சு மன்னி”

“ஃபோன் பண்ணி எல்லாரையும் இன்வைட் பண்ணியாச்சா?”

“நான் எங்காத்துக்காராள்ட்ட மட்டும் தான் பேசுவேன்… பேசினேன்.. இன்வைட்டும் பண்ணினேன். பவின் சைடு ஆட்களை எல்லாம் அவன் தான் கூப்பிட்டான். அவன் சைடு எல்லாம் நான் இன்வைட் பண்ணமாட்டேன்னு அவன்ட்ட சொல்லிட்டேன். அவன் வீட்டு சைடுலேந்து நான் இன்வைட் பண்ணிருக்கறது உங்களை மட்டும் தான் மன்னி”

“ஓ!!! அப்படியா!!! ரொம்ப பெரிய மனசு மா உனக்கு!! அப்போ பவின் உங்க ஆத்து மனுஷாளை இன்வைட் பண்ணலையோ!!”

“ம்…அது எப்படி மன்னி? அவன் கூப்பிடாமா எப்படி எங்காத்து மனுஷா வருவா? அவனும் தான் எங்காத்துக்காரளை இன்வைட் பண்ணினான்.”

“ம்…சூப்பர்!! சரி! சரி எங்கயோ கிளம்பணும்னு சொன்னயே எங்கே?”

“அதுவா எங்க சொந்தக்காரா அன்ட் ப்ரெண்ட்ஸ் நிறைய பேரு இங்க மைசூர்ல இருக்கா…அவாளுக்கெல்லாம் பத்திரிகை கொடுக்கணும் அதுதான் கிளம்பணும்னு சொன்னேன். அவா எல்லாரும் எங்காத்துல வந்து தங்குங்கோ! எங்காத்துல வந்து தங்குங்கோன்னு சொன்னா”

“போயிருக்கலாமே”

“இல்ல…பவின் தான் இங்க தங்கணும்ன்னு சொன்னான் அதுதான் வந்தோம்”

“ஓ!! ஓகே! ஓகே!”

“என்ன மன்னி நம்பாத மாதிரியே பேசறேங்கள்”

“நம்பிட்டேம்மா நம்பிட்டேன். உன்னை நம்பாமலா. சரி சரி வா எல்லாருமா டிபன் சாப்பிடுங்கோ.”

என்று எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக டைனிங் டேபிளில் கொண்டு வைத்தாள் மிருதுளா. அத்தனை ஐட்டங்களையும் பார்த்த பவித்ரா மெல்ல மிருதுளாவிடம்

“ஏன் மன்னி இதுகளுக்கு போய் இவ்வளவு எல்லாம் செட்சிருக்கேங்கள்? நாலு இட்லி மட்டும் போட்டா போதாது!!”

என்று ஈஸ்வரனையும் பர்வதத்தையும் படு கேவலமாக பேசினாள் பவித்ரா.

“நான் எல்லாருக்காகவும் தான் செய்தேன் பவித்ரா. நீங்களும் அவா கூட தானே வந்திருக்கேங்கள்!!”

என்று தன் மாமனார் மாமியாரை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் மகருதுளா.

“அவா தான் எங்க கூட ஒட்டிண்டு வந்திருக்கா மன்னி”

“சரி சரி வா வா”

என்று அனைவருக்கும் பறிமாறினாள். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரன் தன் பேத்தி அனுஷாவிடம்

“பார்த்தயா அனு குட்டி உன் பெரியம்மா எவ்வளவு செஞ்சிருக்கானு. எல்லாம் உன் அப்பா அம்மா வந்திருக்கானு தான் செய்திருக்கா தெரியுமா”

என்று ஏதோ அவர்களுக்காக செய்யாததுப் போல குத்திப் பேச. அதைக் கேட்டதும் மிருதுளாவின் மனம் வேலைக்காரன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் தன் தாத்தாவை “கிழவா கிழவா” என்று சொல்வாரே அதே போல சொல்ல….மேலும்

“இதுக்கு முன்னாடி நீங்க வந்தப் போதெல்லாம் நல்லா தானே சமைத்துப் போட்டேன்….உங்களுக்கெல்லாம் பவித்ரா தான் சரி. அவ உங்களை நடத்தறது தான் கரெக்ட். இவ்வளவு ஆசையா செஞ்சுக் குடுத்தா…பேச்சப் பாரு பேச்சை”

என்று சொல்லிக்கொண்டே நல்லா வேணும் என்பது போல தலையை ஆட்டினாள். அதை கவனித்த பவித்ரா

“என்ன மன்னி தானா தலையை ஆட்டறேங்கள்”

“ம்…அது ஒண்ணுமில்லை பவித்ரா”

என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள். அப்போது பர்வதம் மருதுளாவை அழைத்து

“எனக்கு இது எதுவுமே வேண்டாம் ஒரு கிளாஸ் மோர் மட்டும் தா போதும்”

என்று மிருதுளா செய்து வைத்த எதையுமே சாப்பிடவில்லை. மிருதுளாவும் ஏன்? என்ன ஆயிற்று? என்று ஏதும் கேட்காமல் ஒரு கிளாஸ் மோர் மட்டும் கொடுத்துவிட்டு சக்தியை ஸ்கூலுக்கு அனுப்பி வைத்தாள். சற்று நேரத்தில் எல்லாம் பவினும், பவித்ராவும் கையில் ஒரு கட்டு பத்திரிகைகளுடன் புறப்பட்டு அனுவையும் கூட்டிக் கொண்டு சென்றனர். அவர்கள் சென்றதும் பர்வதமும் ஈஸ்வரனும் ஹாலில் டிவிப் பார்த்துக் கொண்டிருந்தனர். நவீன் மிருதுளாவை அவன் அறையிலிருந்து அழைத்தான்

“என்ன நவீ என்ன வேணும்?”

“இங்க வா மிருது. கவனிச்சயா?”

“என்னத்த?”

“அவா ரெண்டு பேரும் கை நிறைய பத்திரிகையை எடுத்துண்டு கிளம்பினதை”

“ஆமாம் பார்த்தேன்”

“நாம இங்க இருக்கோம். நம்ம ஆத்துக்கு வந்துருக்கா. நம்மாத்தேந்தே மத்தவாளுக்கெல்லாம் பத்திரிகை குடுக்க போயிருக்கா ஆனா நமக்கு ஒரு பத்திரிகை தரலைப் பாரு”

“விடுங்கோ கிளம்பறதுக்கு முன்னாடி தருவாளாருக்கும்.”

என்று கூறி விட்டு குக்கரில் சாதம் வைக்க அடுப்படிக்குச் சென்றாள்.

அன்று மத்தியம் உணவருந்த வீட்டிற்கு வந்தனர் பவினும் பவித்ராவும். அதன் பின் எங்கும் செல்லவில்லை. அன்றிரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுத்துறங்கச் சென்றனர் ஈஸ்வரனும் பர்வதமும். ஆனால் நவீன், பவீன், மிருதுளா, பவித்ரா நால்வருமாக பேசிக் கொண்டிருந்ததில் கவின் கஜேஸ்வரி, ப்ரவீன் துளசி பற்றி கதை கதையாக சொன்னார்கள் பவினும் பவித்ராவும். பவின் அதிகாரத்தினாலும் ப்ரவீன் பணத்தினாலும் பாடாய் படுத்தியுள்ளார்கள் என்று கூறினர். ப்ரவீன் பவினின் பைக்கை பவின் ஊருக்கு சென்றிருந்த சமயம் அவனுக்கே தெரியாமல் விற்று காசாக்கியிருக்கிறான் என்று கூறினார்கள். அதுவுமில்லாமல் பவின் தன் தந்தைக்கு அவர் செலவுக்காக குடுத்திருந்த ஏ.டி.எம் கார்டை ப்ரவீன் உபயோகித்திருக்கிறான் என்றும் அதைக் கேட்க போய் பெரிய சண்டையானது என்றும் கூறினர். அனைத்தையும் கேட்டுக் கொண்டு மட்டும் அமர்ந்திருந்தனர் நவீனும் மிருதுளாவும். அதில் ஒரு விஷயம் இருவருக்கும் ஒத்துப் போனது. அது என்னவென்றால்…நவீனை எப்படி குழந்தைப் பிறந்தவுடன் வேலையை விட்டு குவைத் வந்து வேலைத் தேடச் கவின் சொன்னானோ அதே போல பவினிடமும் அவன் குழந்தை அனு பிறந்தவுடன் வேலையைவிட்டு விட்டு குவைத் வரச் சொல்லியிருக்கிறான். பேசிப் பேசி மணி ஒன்று ஆனதும் எழுந்து உறங்கச் சென்றனர். நவீனும் மிருதுளாவும் சென்று படுத்துக் கொண்டதும் நவீன் மிருதுளாவிடம்

“எனக்கு தெரியாமா நான் வாங்கின அனைத்து வீட்டுப் பொருட்களையும் வித்தா அன்னைக்கு!!! இப்போ அதையே இவனுக்கு செஞ்சதும் என்னமா குதிக்கரான். அன்னைக்கு வீட்டு டாக்குமெண்ட்டை எடுத்து வராம சாமர்த்தியமா உள்ளயே இருந்தவன் இன்னைக்கு அவனுக்குன்னா என்னமா பேசறான். அவாளுக்கு வந்தா ரத்தம் அதே நமக்குன்னா தக்காளி சட்னி எப்படி இருக்கு பாரு மிருது. அந்த கவினுக்கு எவ்வளவு கெட்ட புத்தி பாரேன். அப்படி பவினுக்கு வேலை வாங்கிக் கொடுக்கணும்னா அவன் கல்யாணத்துக்கு முன்னாடியே வாங்கிக் குடுத்திருக்க வேண்டியது தானே!! அவன் படிப்பு முடிஞ்சிட்டு ஆறு மாசம் சும்மா தானே இருந்தான். அப்பெல்லாம் விட்டுட்டு கரெக்ட்டா குடும்பம் குழந்தைன்னு ஆனதுக்கப்புறமா ஒவ்வொருத்தர்ட்டயா வேலையை விட்டுட்டு வரச்சொல்லிருக்கான் பாரேன்!! ஏன் அந்த ப்ரவீன் சரியான வேலையில்லாம சுத்திண்டிருக்கானே அவனை கூப்பிட வேண்டியது தானே! அது சொல்ல மாட்டான்”

“சரி அப்படியே நீங்க வேலையை விட்டுட்டு அங்க போணா கவினுக்கு என்ன லாபம் நவீ?”

“லாபமெல்லாம் ஒண்ணுமில்லை மிருது. அவனைப் பொருத்தவரை அவனை விட வேற யாரும் இந்த ஃபேமிலியில முன்னுக்கு வந்திடக் கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணம் தான் என் நல்ல தம்பிக்கு.”

“ச்சே!!! இப்படியுமா நினைப்பா மனுஷா”

“நினைக்கறாளே மிருது. நினைக்கறாளே!!”

“சரி நாளைக்கு சாட்டர்டே தானே நாம எல்லாருமா ஃபன் வேர்ல்டு போயிட்டு வரலாமா! குழந்தைகளுக்கும் ஒரு சேஞ்ச்சா இருக்கும்”

“ம்…ம்..எல்லாரும் எழுந்துக்கறது பொறுத்துப் பார்ப்போம். இப்போ நீயும் தூங்கு. காலையிலேந்து வேலை மேல வேலை பார்த்துண்டே இருந்துருக்க. குட் நைட்”

“குட் நைட் நவீ”

மறுநாள் காலை ஏழு மணிக்கு தான் எழுந்தாள் மிருதுளா. ஹாலில் தன் மாமனாரும் மாமியாரும் அமர்ந்திருந்தனர். எழுந்ததும் நேராக அடுப்படிக்குச் சென்று காபி டிகாக்ஷன் போட்டுவிட்டு பாத்ரூமுக்கு சென்று ஃப்ரெஷ் ஆகி வந்து மாமனாருக்கும் மாமியாருக்கும் தனக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு ஹாலில் அமர்ந்தாள். அப்போது பர்வதம்

“அப்பாக்கு காலையில் ஐந்து மணிக்கெல்லாம் காபி குடிச்சு பழக்கம். இங்கே இப்போ மணி ஏழரை ஆயாச்சு”

என்று சொன்னாள். அதற்கு “போட்டுக்க வேண்டியது தானே” என்று உதடு வரை பதில் வந்தாலும் பிரச்சினையை தவிர்க்க அதை அப்படியே விழுங்கிவிட்டு காதில் விழாதது போலவே அமர்ந்திருந்தாள். நவீன் எழுந்து வந்ததும் அவனுக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் மிருதுளா. அப்போது பவின் அவன் ரூமிலிருந்து அனுவை கொண்டு வந்து தன் அம்மாவிடம் விட்டுவிட்டு மீண்டும் ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டு உறங்கினான். பவித்ரா எழுந்து வரவேயில்லை. மிருதுளா குளித்துவிட்டு வந்து ப்ரேக்ஃபாஸ்ட் செய்ய ஆரம்பித்தாள் அப்போது அனுவுக்கு ஹார்லிக்ஸ் கலந்துக் கொடுத்தாள். அனு அதை தன் பெரியம்மாவிடமிருந்து வாங்கிக் கொண்டு நேராக தன் அப்பா அம்மா உறங்கிக் கொண்டிருக்கும் அறையை நோக்கிச் சென்றாள். அதை கவனித்த பர்வதம் வேகமாக சென்று அனுவை தடுத்து

“டி அனு அங்க உன் அம்மா தூங்கிண்டிருக்கா டி. அவாளை ஏன் எழுப்பப் போறாய்? இங்கே வா…ஏய் மிருது இவ அந்த ரூம் பக்கம் போகாம பார்த்துக்கோ”

என்று சொன்னதும் மிருதுளாவுக்கு முன் டார்ட்டாய்ஸ் சுருள் சுழல்வது போல காலச் சக்கரம் பின்நோக்கிச் சுழன்றது. அவளையும் நவீனையும் அவர்கள் ரூமில் காலிங் பெல் வைத்து எழுப்பியதும், பக்கத்து வீட்டுப் பையனை வைத்து எழுப்பியதும், வாயும் வயிறுமாக இருக்கும் போது கூட தூங்க விடாமல் பாடாய்ப்படுத்தியதும் என அனைத்தும் அவள் முன் படம் போல ஒடியது. அப்போது அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் பாத்திரத்தில் தண்ணீர் வற்றிப் போய் பாத்திரம் அடிப்பிடிப்பதுக் கூட தெரியாது பழைய சம்பவங்களில் மூழ்கியிருந்தாள் மிருதுளா. அங்கே நவீன் வந்து அடுப்பை ஆஃப் செய்து விட்டு மிருதுளாவை உலுக்கினான். சட்டென கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு வந்த மிருதுளா நவீனிடம்

“பார்த்தேங்களா பவினுக்கும் பவித்ராவுக்கும் உங்க அம்மா காவல் இருக்கிறதை. இதுல என்னையும் சேர்த்து காவலிருக்கச் சொல்லறா!!! பல வருஷத்துக்கு முன்னாடி நம்மளை தூங்க விடாம எவ்வளவு தொந்தரவு செய்தா ஆனா இப்போ அவா தூங்கறதுக்கு இவாளே காவலிருக்கா. அதை நினைச்சேன் சிரிப்பு வந்துடுத்து. கடவுள் இருக்கார் நவீனு இருக்கார்”

“ஆமாம் மிருதுளா ஆமாம்”

என்று இருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டனர். பவின் எட்டு மணிக்கு எழுந்து வந்தான் ஆனால் பவித்ரா ஒன்பது மணிவரை உறங்கிக் கொண்டிருந்தாள். ஈஸ்வரனோ பர்வதமோ ஒன்றுமே சொல்லாதிருந்ததைப் பார்த்து வியந்துப் போனாள் மிருதுளா. அன்று மத்தியம் அனைவருமாக ஃபன் வேர்ல்டு சென்று வந்தனர். அவர்கள் பத்திரிகை தருவார்கள் என்று காத்திருந்த மிருதுளா நவீனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் ஊருக்கு கிளம்புவதற்கு முன் தினம் மத்தியம் உணவருந்தியதும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது பொறுக்க முடியாது மிருதுளா பவினிடம்

“பவின் எங்களுக்கு பத்திரிகை அனுப்பறதா சொன்னேங்கள் ஆனா இன்னைக்கு வரை பத்திரிகை வரலையே….யூஷ்வலா இது கவின் கஜேஸ்வரியோட ஸ்டைல் ஆச்சே!!”

அதைக் கேட்டதும் பவின் ஈஸ்வரனைப் பார்த்தான் உடனே ஈஸ்வரன் பதற்றமாகி

“நான் உங்களுக்கும் உன் அப்பா அம்மாக்கும் போஸ்ட் பண்ணி இரண்டு வாரமாச்சே!! வந்திருக்கணுமே”

“வந்திருந்தால் ஏன்ப்பா வரலைன்னு சொல்லப் போறோம். அவாளுக்கும் வரலைன்னு போன வாரம் ஃபோனில் கேட்டப்போ சொன்னா”

என்று மிருதுளா சொன்னதும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் ஆனால் ஏதும் பேசவில்லை.
அன்று மாலை ஒரு ஷாப்பிங் மாலுக்குச் சென்றனர். அங்கே பர்வதம் தன் மத்த பேரன், பேத்திகளுக்கும், பக்கத்து வீட்டு பெண்ணிற்கும் என ஏதேதோ பொருட்கள், விளையாட்டு சாமான்கள் எல்லாம் வாங்கினாள். ஆனால் சக்திக்கு எதுவுமே வாங்கிவரவில்லை. பவித்ரா சில பொருட்கள் வாங்கியதும் அங்கிருந்த ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது பவித்ரா தன் அப்பாவுக்கு கால் செய்தாள்

“ஹலோ அப்பா….மன்னியோட பேரெண்ட்ஸ்க்கு பத்திரிகை போகலையாம். நீ இன்னொரு பத்திரிகை குரியர் பண்ணிடறயா”

என்று மிருதுளாவுக்கு கேட்பது போல பேசினாள். மிருதுளாவும் கேட்டும் கேட்காதது போல இருந்துக் கொண்டாள். அன்றிரவு அவர்கள் அனைவரும் அவரவர் பைகளை பேக் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா பவின் பவித்ரா திருமணம் ஆன பின்னும், குழந்தையுடனும் முதன்முதலாக வீட்டுக்கு வந்திருப்பதால் அவர்களுக்கென்று புடவை, வேஷ்டி, குழந்தைக்கு டிரெஸ், தங்கத்தில் மோதிரம், தோடு, வெள்ளியில் கொலுசு என்று வாங்கி வைத்திருந்ததை அவர்களிடம் கொடுத்தால் அதையும் பேக் செய்துவிட வசதியாக இருக்குமே என்றெண்ணி நவீனையும் அழைத்துக் கொண்டு பவின் பவித்ரா தங்கியிருந்த ரூமிற்கு சென்றனர். அங்கே தரையில் அவர்கள் வீட்டுக் கிரகப்பிரவேசப் பத்திரிகைகள் கிடந்திருந்ததைப் பார்த்த நவீன் மிருதுளாவிடம் கண் ஜாடைக் காட்டி அதைப் பார்க்கச் சொன்னான். அவளும் அதைப் பார்த்தாள். இருவரும் அவர்களுக்கென்று வாங்கி வைத்திருந்ததை கொடுத்துனர். அந்த அறையிலிருந்து வெளியே வந்து மூத்த தம்பதிக்கு எடுத்து வைத்திருந்த புடவை வேஷ்டியை எடுத்து வர இருவரும் அவர்கள் அறைக்குள் சென்றனர். அப்போது மிருதுளா நவீனிடம்

“நாம செய்ய வேண்டியதை நாம செஞ்சாச்சு நவீ. அதை அவர்கள் கிஃப்ட்டாக எடுத்துக் கொண்டாலும் சரி இல்லை பவித்ரா அப்பா சொன்னது போல சீர் ஆக எடுத்துக் கொண்டாலும் சரி அது அவா இஷ்டம். என்ன சொல்லறேங்கள்”

“நீ திருந்திட்டன்னு நினைச்சேன். ம்…ஹும் ….நீ எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்ட மிருது. சரி வா உன் ஆசை மாமனாருக்கும் மாமியாருக்கும் எடுத்து வச்சிருக்கயே அதையும் குடுத்துட்டு வருவோம்”

என்று கூறிக் கொண்டே சென்று அவர்களுக்கும் கொடுத்தனர் அப்போது பர்வதம்

“எங்களுக்கு எதுக்கு இதெல்லாம்? அவா ரெண்டு பேரு தான் கல்யாணமாகிட்டு மொதோ தடவையா உங்காத்துக்கு வந்திருக்கா.”

“பரவாயில்லை மா எடுத்துக்கோங்கோ”

என்று குடுத்துவிட்டு அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்து ஹாலில் அமர்ந்தனர் நவீனும் மிருதுளாவும். அப்போது நவீன் மிருதுளாவிடம் மெதுவாக…

“அவ்வளவு பத்திரிகை வச்சிருக்கா….நீ பத்திரிகை வரலைன்னு சொன்னதுக்கப்புறமும் ஒண்ணு எடுத்து நமக்கு தரலாம் இல்லையா!! ஆனா தரலைப் பாரேன் மிருது”

“இருங்கோ நாளைக்கு காலையில தானே கிளம்பறா அதுவரை பொறுமையா இருங்கோளேன். அப்படி நம்ம ஆம் வரைக்கும் வந்துட்டு பத்திரிகை தராமா போவாளா!!! அதுவுமில்லாம பவித்ரா அவ அப்பாகிட்ட ஃபோன்ல நாம மால்ல இருக்கும் போது பேசினா…என் பேரண்ட்ஸுக்கு பத்திரிகையை குரியர் பண்ண சொல்லிருக்கா. அப்படின்னா நமக்கு இங்கேயே தந்திடலாம்னு தானே நினைச்சிருப்பா! அதுதான் பொறுமையா இருங்கோன்னு சொன்னேன்…சரி சரி அவா காதுல கேட்டுட போறது”

என்று இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பேக்கிங் முடித்ததும் ஹாலுக்கு வந்து சற்றுநேரம் பேசிவிட்டு படுத்துறங்கச் சென்றனர். அப்போது நவீன் தங்கள் அறைக்குள் சென்றதும் மிருதுளாவிடம்

“இனி எப்போ பத்திரிகை தரப்போறான். நாளைக்கு விடியற் காலையில டிரெயின்.”

“அச்சச்சோ விடுங்கோப்பா. தந்தா போவோம் இல்லாட்டி போவேண்டாம் அவ்வளவு தானே”

“ஆனா நீ அப்படி இருக்க மாட்டியே. உனக்கு அதைப் புரிய வைக்கத்தான் நான் இவ்வளவு போறாடுறேன்”

“எனக்கு எல்லாம் புரியறது நவீ. எதுவும் புரியாம ஆரம்பத்துல இருந்தேன் உண்மை தான். ஆனா இப்போ அப்படி இல்லை. சரி காலையில சீக்கிரம் எழுந்துக்கணும் தூங்குங்கோ குட் நைட்”

“குட் நைட் மிருது”

மறுநாள் காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து அவல் உப்புமா செய்து அதை யூஸ் அன்ட் த்ரோ டப்பாக்களில் பேக் செய்து. அதற்கு தொட்டுக் கொள்ள கொத்துமல்லி துவையல் செய்து அதையும் தனிதனியாக பேக் செய்து ஒரு பையில் அடுக்கி அதை டைனிங் டேபிளில் வைத்து விட்டு அனைவருக்கும் காபிப் போட்டுக் குடுத்தாள் மிருதுளா. அனைவரும் காபியை குடித்து விட்டு ஒவ்வொருவராக குளித்து கிளம்பினர். அனைவரும் ரெடி ஆனதும் டாக்ஸியை வரவழைத்தான் நவீன். அப்போது அவர்கள் கையில்… தான் பேக் செய்து வைத்திருந்த காலை டிபனை பவித்ராவிடம் கொடுத்தாள் மிருதுளா. அவர்கள் கிளம்பி காரில் ஏறுவதற்கு முன் நவீனிடமும் மிருதுளாவிடமும்

“கிரகப்பிரவேசத்தில் சந்திப்போம். கட்டாயம் வந்திடுங்கள்”

என்று கொஞ்சமும் கூசாமல் சொல்லிவிட்டுச் சென்றனர். நவீனுக்கு சரி கோபம் வந்தது.

அவர்கள் அங்கிருந்த மூன்று நாட்களுமே பர்வதம் மிருதுளா செய்த எதையுமே சாப்பிடாமல் வெறும் மோர் தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டாள். மிருதுளாவும் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை. அவளுக்கோ பயம் இதைக் கேட்கப் போய் அதை வைத்து ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று எண்ணி கேட்பதைத் தவிர்த்து விட்டாள்.

அவர்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்ததும் நவீன் மிருதுளாவிடம்

“என்ன திமிரு பாரு. நம்ம ஆத்துலேயே இருந்துண்டு, இங்கேந்து மத்த எல்லார் ஆத்துக்கும் பத்திரிகைகளை கொடுத்துட்டு…நமக்கு ஒரு பத்திரிகை குடுக்கணும்னு தோணலைப் பாரேன். ச்சே!! இவா பண்ணற ஒவ்வொன்னும் எனக்கு இவா மேல வெறுப்பை அதிக மாக்கிண்டே போறது. இது எங்க போய் முடியுமோ!!!”

“விடுங்கோ நவீன். இவா வந்ததோட நோக்கம் எனக்கு நேத்து நைட்டு தான் புரிஞ்சுது.”

“அது என்ன?”

“இப்போ நம்ம ஆத்துக்கு திடீர்னு இத்தனை நாள்…இத்தனை நாள் என்ன? வருஷமா வராதவா வந்தா இல்லையா!!! சும்மாவா வந்திருப்பா? ஊர்ல எல்லார் கிட்டேயும் சொல்லிட்டு வந்திருப்பா. அப்போ ஊர் காரா எல்லாம் என்ன நினைச்சுப்பா சரி அண்ணா மன்னிக்கும் பத்திரிகை வைக்கத் தான் போறான்னு நினைச்சுப்பா….நினைச்சுப்பா என்ன இவா அப்படி தான் சொல்லிட்டே வந்திருப்பா….ஆனா இங்கே வந்து நமக்கு பத்திரிகை தரமா போயிட்டா. அப்போ நாம நாளைக்கு பத்திரிகை தரலைன்னு சொன்னா யாராவது நம்புவாளா!!! இது தான் இவாளோட இந்த விஸிட்டின் இரகசியம்ன்னு எனக்குப் படறது. ஏன்னா இவா கல்யாணத்துக்கு பத்திரிகை வரலைன்னு சொன்னோமில்லையா அதுக்காக தான் நம்ம ஆத்துக்கே வந்துட்டும் நமக்கு வேணும்னே தராம போயிருக்கா….அதுல அவாளுக்கு ஒரு சந்தோஷம். இருந்துட்டு போட்டுமே”

“ஓ!!! ஆமாம்…யூ ஆர் ரைட். என்ன மாஸ்டர் ப்ளானிங்!!! பரவாயில்லை மிருது நீ அவாளோட ப்ளான் எல்லாத்தையும் க்ராக் பண்ணற..சூப்பர்”

“ஆமாம் பதினஞ்சு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இல்லையா சும்மாவா!!”

“ஆனா இப்படி பண்ணின அவா விசேஷத்துக்கு நாம போக வேண்டாம் பேசாம டிக்கெட்டை கேன்சல் பண்ணிடு”

“வேண்டாம் நவீ. அதுதான் ஃபோன்ல கூப்பிட்டிருக்காளே அதுவுமில்லாம வீட்டுக்கு வந்தும் சொல்லிருக்கா. ஸோ நாம போயிட்டு வந்திடுவோம்.”

“ஆனா பத்திரிகை தரலைன்னு யார்கிட்டேயும் நாம சொல்லக் கூடாது. ஏன்னா நாம சொல்லணும்னு தான் அவா இதெல்லாம் பண்ணிருக்கா!! நாம மூச் விடக் கூடாது”

“ம்…ஓகே!! டன். ஆனா இப்படி சூழ்ச்சியும் வஞ்சமும் நிறைஞ்ச ஃபேமிலில என்னால ரொம்ப நாள் தாக்கு பிடிக்க முடியும்னு தோனலை நவீ.”

“எதுக்கு தாக்குப் பிடிக்கணும்? வேண்டாம்னு நாம ஒதுங்கிடுவோம்னு தானே நான் சொல்லிண்டே இருக்கேன். நீ தான் கேட்க மாட்டேங்கறாய்”

“ம்…பார்ப்போம் என் பொறுமைக்கு அந்த கடவுள் கொடுக்கும் டெஸ்ட்டா நினைச்சுக்கறேன்.”

நல்ல புகுந்த வீடு கிடைத்தாலும் திருமணமானதும் கணவனைத் தன் வசப்படுத்தி குடும்பத்தையே பாடாய் படுத்தும் கஜேஸ்வரி, பவித்ரா, துளசி போன்ற பல பெண்களுக்கு மத்தியில் மிருதுளாவைப் போல குடும்பம் வேண்டுமென்ற எண்ணமுடைய பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இங்கே நவீனே மிருதுளாவை அவன் குடும்பத்தினரிடமிருந்து விலகச் சொல்கிறான்!!! அவள் அதை செய்ய சிரமப்படவே வேண்டாம் ஆனாலும் அதை பதினைந்து வருடங்களாக அவர்களின் பல துன்புறுத்தல்களுக்கும், அவமானங்களுக்கும் ஆளானாலும் அவள் இதுவரை செய்யாதிருக்கிறாள். இவளைப் போன்ற பெண்களை ஏமாளிகள் என்று எண்ணிக் கொண்டு மேலும் மேலும் பாடாய்ப்படுத்தும் குடும்பத்தினரே இங்கு அதிகம் உள்ளனர். விட்டுக் கொடுப்பவர் என்றுமே கெட்டுப் போவதில்லை என்பார்கள் ஆனால் அது எப்போதும் ஒருவர் மட்டுமே செய்துக் கொண்டிருந்தால் அது நியாயமல்லவே!!

தொடரும்…..






















Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s