அத்தியாயம் 92: இடமாற்றம், விசேஷம், இம்சை!

நவீனும் மிருதுளாவும் ஆன்லைனில் மைசூரில் வீடு தேடுதலிலும், சக்திக்கு ஸ்கூல் தேடுவதிலும் மும்முரமாக இருந்தனர். நான்கு வீடுகள் மற்றும் இரண்டு ஸ்கூல் பிடித்திருந்தது. அவற்றில் ஏதேனும் ஒன்றை முடிவுப் பண்ண அவர்கள் மைசூர் சென்று வர வேண்டும் ஆனால் சக்திக்கு பரீட்சை நடந்துக்கொண்டிருந்தது. ஆகையால் மிருதுளா சக்தியோடு வீட்டிலேயே இருந்துக்கொண்டாள். அவர்களுக்கு துணையாக தன் மாமனார் மாமியாரை பம்பாய்க்கு வரவழைத்தான். அவர்கள் வந்ததும் அன்று இரவு கிளம்பி மைசூர் சென்றான் நவீன். ஹோட்டலில் தங்கினான். மறுநாள் காலை எழுந்து ரெடியாகி அந்த ஹோட்டலிலேயே காலை உணவை அருந்திவிட்டு… மிருதுளாவுக்கும் அவனுக்கும் பிடித்திருந்த வீடுகளையும், ஸ்கூலையும் பார்த்து வரப் புறப்பட்டுச் சென்றான். அவற்றில் ஒரு வீட்டையும் ஒரு ஸ்கூலையும் பார்த்து விசாரித்து தேர்ந்தெடுத்து முடிவெடுக்க ஒரு நாள் கேட்டு வந்தவன், அன்றிரவே மிருதுளாவிற்கு வீடியோ கால் செய்து விவரங்களைக் கூறி அவளின் விருப்பத்தையும் கேட்டான். அதற்கு மிருதுளா

“உங்களுக்கு பிடிச்சிருக்கு தானே அப்புறம் எதுக்கு ஒரு நாள் டைம் எல்லாம் கேட்டேங்கள் நவீ? நாளைக்கே வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துடுங்கோ அன்ட் ஸ்கூல் அட்மிஷன் பார்ம் ஃப்ல்அப் பண்ணிக் குடுத்துட்டு வாங்கோ”

“நீ இதுதான் சொல்லுவன்னு தெரியும் இருந்தாலும் கேட்கணும்னு எனக்கு தோணித்து அதுதான் அவா கிட்ட ஒரு நாள் கேட்டேன். சரி அப்போ நாளைக்கே எல்லாம் முடிச்சுட்டு நைட்டே கிளம்பிடறேன்”

“ஓகே நவீ.”

“பை. குட் நைட். சக்தி கிட்ட ஃபோனைக் குடு”

“ம்…அவ அவளோட தாத்தா பாட்டிக்கூட ஊனோ விளையாடிண்டிருக்கா. இதோ கூப்படறேன்..சக்தி …சக்தி ….அப்பா பேசணுமாம். சீக்கிரம் வா”

“என்ன மா?”

“ம்….இந்தம்மா உன் அப்பா உன் கிட்ட பேசணுமாம் டி. பார்த்தேங்களா நவீ!!! சரி அவகிட்ட குடுக்கறேன் நீங்க பேசிட்டு வச்சுடுங்கோ. பை நவீ. குட் நைட். இந்தா சக்தி நீ பேசு”

“ஹலோ அப்பா எப்ப வருவப்பா?”

“நான் …டே ஆஃப்டர் டூமாரோ மார்னிங் நீ எழுந்துக்கறதுக்கு முன்னாடி வந்திடுவேன்.”

“சூப்பர்ப்பா. எனக்கு நியூ ஸ்கூல் பார்த்தாச்சாப்பா?”

“ம்‌….சரி என்ன எக்ஸாம்ஸ் வச்சுண்டு நீ விளையாடிண்டிருக்க?”

“அதுவா!!! நான் அப்பவே படிச்சு முடிச்சுட்டேன் ப்பா அதுதான் விளையாண்டேன். சரி என் நியூ ஸ்கூல் பத்தி சொல்லுப்பா”

“படிச்சுட்டேன்னா ஓகே! சூப்பர் இன்டர்நாஷ்னல் ஸ்கூல் பார்த்திருக்கேன். நாளைக்கு போய் அட்மிஷன் பார்ம் எல்லாம் ஃபில் பண்ணிக் கொடுத்துட்டு வரேன் சரியா. நீ போய் இப்போ உன் ஊனோ கேம்மை கன்டின்யூ பண்ணிக்கோ. பை கண்ணா. குட் நைட். லவ் யூ செல்லக்குட்டி”

“ஓகேப்பா. பை பை…குட் நைட். லவ் யூ டூ அப்பா. வச்சுடவா”

என்று ஃபோனை கட் செய்தாள் சக்தி. பின் தன் தாத்தா பாட்டியுடன் சேர்ந்து தன் விளையாட்டைத் தொடர்ந்து விளையாடியப்பின் அனைவரும் படுத்துறங்கினர்.

மறுநாள் தான் கன்பார்ம் செய்த வீடு மற்றும் ஸ்கூல் வேலைகளை முடித்து விட்டு ஹாட்டலைச் செக் அவுட் செய்து நேராக பெங்களூர் ஏர்போர்ட் சென்று அங்கிருந்து பம்பாய் சென்றான் நவீன்.

ஒரு மாத காலம் நோட்டிஸ் பீரியட் முடிந்ததும் அனைத்து செட்டில்மென்ட்டும் பெற்றுக் கொண்டு அனைவரும் பம்பாயிலிருந்து பறந்து பெங்களூர் வந்திறங்கினர். அங்கிருந்து ஆஃபீஸ் காரில் ஆஃபீஸ் கொடுத்திருந்த இரண்டு பெட்ரூம் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டுக்குச் சென்றனர். ராமானுஜமும், அம்புஜமும் அவர்களுடன் சென்றனர். நவீனுக்கு சனி ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் அனைவரையும் ஒரு கார் புக் செய்து அவன் பார்த்திருந்த புது வீட்டையும் சக்திக்கான ஸ்கூலையும் காண்பித்தான். அனைவருக்கும் இரண்டும் மிகவும் பிடித்துப் போனது. வீட்டுக்குத் தேவையானதை ஞாயிறு மாலை சென்று வாங்கினார்கள். சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் இருந்துக் கொண்டே நவீன் வேலையில் ஜாயின் செயதான். அவர்களின் பொருள்கள் அகர்வால் மூவர்ஸ் மூலம் செவ்வாய் கிழமை காலை அவர்கள் புது வீட்டில் வந்திறங்கியது. நவீனுக்கு வேலை இருந்ததால் மிருதுளா அவள் பெற்றோருடன் டாக்ஸியில் சென்று அனைத்தையும் எங்கெங்கு வைக்க வேண்டுமோ அங்கங்கு வைத்து வீட்டை செட் செய்து வைத்து விட்டு அப்படியே சக்தியை அவள் புது ஸ்கூலில் இருந்து அழைத்துக் கொண்டு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் வந்தார்கள். அன்று மாலை நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் பொருட்கள் வந்ததா என்ன செய்தார்கள் என்று விசாரித்தான். அதற்கு மிருதுளா

“எல்லாம் செட் செய்து வச்சாச்சு நவீ. நாளைக்கே கூட குடிப் போயிடலாம் என்ன சொல்லறேங்கள். சக்தி ஸ்கூல் பஸ்ஸுக்கு மட்டும் அட்ரெஸ் சேஞ்ச் குடுக்கணும்.”

“அப்படியா!!! எப்படி பண்ணின?”

“அப்பா அம்மா உதவியோட தான் இல்லாட்டி இவ்வளவு சீக்கிரம் செய்து முடித்திருக்க முடியாது நவீ. வாங்கோளேன் டின்னர் சாப்டுட்டு ஒரு டவுன்டு போய் பார்த்துட்டு வரலாம்”

“ம்….ஓகே போயிட்டு வரலாம்”

என்று அன்று இரவு உணவருந்தியதும் மிருதுளா தன் அம்மாவிடம்

“அம்மா சக்தியைப் பார்த்துக்கோ நானும் நவீனும் புது வீட்டைப் பார்த்துட்டு வந்துடறோம். முடிஞ்சா நாளைக்கே ஷிஃப்ட் பண்ணிடலாம்”

“ஓகே மிருது நாங்க சக்தியைப் பார்த்துக்கறோம். ஆனா நாளைக்கு ஷிஃப்ட் பண்ண வேண்டாம். அடுத்த வியாழக்கிழமை நல்ல நாளா இருக்கு அன்னைக்கு காலையில பால் காய்ச்சிட்டு அங்கேயே அன்னேலேந்து இருந்துடலாம். அடுத்த வியாழக்கிழமை வரை இந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் இருக்குமோனோ!!”

“அதெல்லாம் ஒரு மாசத்துக்கு குடுத்திருக்கா மா. நான் தான் சீக்கிரமா புது வீட்டுக்கு போயிட்டா சீக்கிரம் செட்டில் ஆகிடலாமேன்னு சொல்லறேன்”

“பின்ன என்ன அடுத்த வியாழக்கிழமை போவோமே மிருது”

“சரி மா. அப்படியே செய்வோம். என்ன இன்னுமொரு நாலஞ்சு நாள் தானே. சரி மா நாங்க போயிட்டு வந்துடறோம்”

என்று கூறிவிட்டு நவீனும் மிருதுளாவும் டாக்ஸி வரவழைத்து அதில் ஏறிச் சென்றனர். புது வீட்டின் கதவைத் திறந்ததும் அசந்து போனான் நவீன். ஏனெனில் எல்லாம் செட்டாகி அழகாக வைக்கப்பட்டிருந்தது. ஜன்னல்களுக்கு கர்ட்டன்ஸ் கூட போடப்பட்டிருந்தது. அவன் எல்லா அறைகளுக்கும் சென்றுப் பார்த்தான். ஹால், கிட்சன், மூன்று பெட்ரூம்கள் என்று எல்லா இடமும் அழகாக வைக்கப்பட்டிருந்தது. பின் ஹாலில் சோஃபாவில் அமர்ந்திருந்த மிருதுளாவிடம் வந்து

“ஹேய் உங்க மூணு பேருக்கும் சரி வேலை போல!!! இப்படி எல்லாத்தையும் செட் பண்ண எவ்வளவு நேரமாச்சு?”

“நாங்க பொருள் வந்ததும் இங்கு வந்தோம்…. என்ன ஒரு பதினோரு மணியிருக்கும். அப்புறம் ஒரு நாலுமணிக்கெல்லாம் வேலையை முடிச்சிட்டு சக்தியை அழைக்க அவ ஸ்கூலுக்குப் போயிட்டோம். அங்கேந்து அப்படியே சர்வீஸ் அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்தோம்”

“சூப்பர் மா. எனக்கு ஒரு வேலையுமே நீங்க வைக்கலை. கிரேட்”

“நீங்க தான் காலையில போனா சாயந்தரம் ஆறு மணி வரைக்கும் வேலைப் பார்க்கறேங்களே அதுக்கு மேலே இது வேற பார்க்கணுமா என்ன!!”

“இல்ல மிருது இருந்தாலும். முதல்ல உன் அப்பா அம்மாக்கு தாங்க்ஸ் சொல்லணும். சரி வா போவோம். வீட்டைப் பூட்டிட்டு வா”

என்று பேசிக்கொண்டே வீட்டைப் பூட்டிவிட்டு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டுக்கு இருவரும் சென்றனர்.

ஐந்து நாட்கள் கடந்தது. வியாழக்கிழமை வந்தது. அவர்கள் புது வீட்டில் பால் காய்ச்சி அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களுடன் அறிமுகமாகிக் கொண்டனர். சக்திக்கும் விளையாடுவதற்கு நிறைய குழந்தைகள் இருந்தன. ஒரு வாரம் ஓடியது. ஒரு நாள் அம்புஜம்

“மிருது நாங்க வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகறது. வர்ற ஞாயிற்றுக்கிழமை நாங்க சென்னைக்குக் கிளம்பலாம்ன்னு இருக்கோம் என்ன சொல்லுற?”

“ஏன் மா அங்கே போய் என்னப் பண்ணப் போறேங்கள்? இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுத் தான் போங்கோளேன்”

“இல்லமா அங்க எங்க செடி கொடிகள் எல்லாம் எப்படி இருக்கோ தெரியலை.”

“அதைத் தான் தோட்டக் கார பார்த்துப்பாளே அப்புறம் என்ன?”

“ம்..அவா வீட்டுக்கு முன்னாடி இருக்குற தோட்டத்தை மட்டும் தான் சுத்தம் செய்வா. வீட்டுக்கு பின்னாடி இருக்குற தோட்டத்தை நாம் தான் காசு கொடுத்து சுத்தம் செஞ்சுக்கணும். இந்த ஒரு மாசத்துல காடு மாதிரி எல்லாச் செடிகளும் வளர்ந்திருக்கும். ஏன்னா மழை நல்லா பெஞ்சிருக்கே!!”

“ம்….சரி சரி உங்க ரெண்டு பேருக்கும் இப்போ அங்க போகணும்ன்னு தோணியாச்சு. ஓகே நவீ கிட்ட சொல்லி டிக்கெட் புக் பண்ணச் சொல்லறேன். ஓகே வா!!”

“ஓகே மா. சக்தியை நினைச்சா தான் எனக்கு கஷ்டமா இருக்கு”

“எதுக்கு கஷ்டப்படணும் மா!! அவ பாட்டுக்கு ஸ்கூல் க்ளாஸ்னு பிஸி ஆகிடுவா. ஸோ கவலைப் படாம போயிட்டு வா. லீவு விட்டா நாங்க அவளைக் கூட்டிண்டு வரோம்.”

என்று பேசிக் கொண்டதுப் படியே ஞாயிற்றுக்கிழமை ட்ரெயினில் ராமானுஜத்தையும், அம்புஜத்தையும் ஏற்றி விட்டனர் நவீனும் மிருதுளாவும். சக்தி இரண்டு நாட்களுக்கு சற்று சோர்வாக இருந்தாலும் பாட்டியுடன் வீடியோ கால் பேசியதில் தெம்பானாள்‌.

எல்லாம் செட்டில் ஆகி ஒரு வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பினர். ஒரு நாள் அவர்கள் கொண்டு வந்து திறந்திடாத பையை திறந்து அதிலிருப்பவைகளை அடுக்கி வைக்க முற்பட்டாள் மிருதுளா. அப்போது அந்த பையிலிருந்து ப்ரவீன் வீட்டு கிரகப்பிரவேசப் பத்திரிகையைப் பார்த்தாள். அன்று மாலை நவீன் வந்ததும் அங்கு சென்று வருவதைப் பற்றி பேசினாள். அதற்கு நவீன்

“போகணுமா மிருது. இப்போ தான் ஒரு வழியா இங்க வந்து ஒரு ரொட்டீனுக்கு வந்திருக்கோம். மறுபடியும் டிராவல் பண்ணணுமா?”

“என்ன நவீ நாம என்ன நாடு விட்டு நாடா போகணும். காருல ஏறி அழுத்தினா அஞ்சு மணிநேரத்துல ரீச் ஆகிடுவோம். கிரகப்பிரவேசமும் ஞாயிற்றுக்கிழமை ல தான் வச்சிருக்கா. ஸோ காலையில போயிட்டு நைட்டு வந்திடலாம் என்ன சொல்லறேங்கள்?”

“எத்தனைத் தடவை பட்டாலும் நீ திருந்தவே மாட்டியா மிருது.”

“நீரடிச்சு நீர் விலகாதும்பா கேள்விப்பட்டிருக்கேளா? நாம இறங்கிப் போறதால ஒண்ணும் கெட்டுட மாட்டோம். நம்மளை மதிச்சுக் கூப்பிட்டிருக்கா போயிட்டு தான் வருவோமே”

“என்னமோ சொல்லற!!! பட் ஐ ஆம் நாட் கன்வின்ஸ்டு. அந்த பழமொழி எல்லாம் அவாளுக்கு பொருந்தாது மிருது. ம்…சரி நீ சொல்லறதால போயிட்டு வருவோம். எனக்கு சுத்தமா நம்பிக்கையில்லை ஆனா உனக்கிருக்குற நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பலை. ஸோ சாட்டர்டே ஈவினிங் போயிட்டு சன்டே மார்னிங் அன்டென்ட் பண்ணிட்டு சன்டே நைட் இங்க வந்துடணும் அப்போ தான் நான் மன்டே ஆஃபீஸ் போக முடியும். சக்தி ஸ்கூல் போக முடியும். ஒரே நாள்ல எல்லாம் போயிட்டு வர முடியாது”

“ஓ!!! சன்டே மார்னிங் இல்லையா!!! மறந்துட்டேன். சரி அப்படியே பண்ணுவோம்”

அவர்கள் பேசிக்கொண்டது படியே ப்ரவீன் வீட்டு விசேஷத்தை அட்டென்ட் செய்தனர் நவீனும் மிருதுளாவும். அங்கே அனைவரிடமும் அவர்கள் மைசூருக்கு மாற்றலாகி வந்ததைத் தெரிவித்து சிலருக்கு அட்ரெஸும் கொடுத்தனர். ஈஸ்வரனும், பர்வதமும் இவர்களுடன் பேசவேயில்லை. இவர்களும் அவர்களுடன் பேசவில்லை. மிருதுளா மட்டும் தன் மாமியாரிடம் நலம் விசாரித்தாள். அதற்கு பர்வதமும் நன்றாக இருப்பதாக கூறிவிட்டுச் சென்றாள். மதிய சாப்பாட்டானதும் அங்கிருந்து புறப்பட்டு மைசூர் வந்தனர். அன்றிரவு நவீனிடம் மிருதுளா

“ச்சே ஐ ஆம் ஸோ டிஸ்ஸப்பாயின்டெட் நவீ”

“ஏன் என்ன ஆச்சு?”

“நான் உங்களை கல்யாணம் பண்ணிண்டு வந்ததிலிருந்து நம்ம ஆத்துல அடென்ட் பண்ணின விசேஷங்கள் ஒவ்வொன்னுலேயும் என் பெயர் கொடிக் கட்டிப் பறக்கச் செய்வா என் மாமியார் ஆனா இது தான் முதல் விசேஷம் என் பெயர் கொடியில் ஏறவில்லை. அப்போ எனக்கு ஏமாற்றமா தானே இருக்கும்”

“ஆமாம் ஆமாம்!!!! நிச்சயமா இருக்கும்!!! ஏன் இதை இங்க வந்து கேட்குற மிருது? அதை அங்கேயே உன் மாமியார்கிட்டேயே கேட்டு க்ளாரிஃபைப் பண்ணிண்டிருக்கலாமே!!”

“ம்….குட் நைட். எனக்குத் தூக்கம் வர்றது”

என்று நவீனின் நக்கல் பேச்சுக்கு பதிலளிக்காமல் உறங்கினாள் மிருதுளா. அவர்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் மைசூருவில் இருக்கும் புது அப்பார்ட்மெண்ட்ஸ், வில்லா சொசைட்டி என்று பொழுதுப் போக்கிற்காக பார்த்து வந்தனர். இந்த நேரத்தில் ஒரு நாள் மிருதுளாவின் வாட்ஸ்அப் நம்பருக்கு கஜேஸ்வரி கால் செய்தாள். பவினின் திருமணத்திற்கு பின் அன்று தான் முதல் முறையாக கூப்பிட்டாள் கஜேஸ்வரி. மிருதுளா வழக்கமாக எல்லோரிடமும் பேசுவதைப் போலவே

“ஹலோ கஜேஸ்வரி எப்படி இருக்க? கவின் எப்படி இருக்கான்? குழந்தைகள் எப்படி இருக்கா?”

“எல்லாரும் நல்லா இருக்கோம் மன்னி. நாங்க இப்போ குவைத்திலிருந்து ஊருக்கு வந்திருக்கோம். வர்ற ஞாயிற்றுக்கிழமை மைசூர் வர்றதா இருக்கோம். அதுதான் சரி நீங்க அங்க தானே இருக்கேங்கள்ன்னு தான் கால் பண்ணினேன்”

“ஓ!! அப்படியா!! அப்போ நேரா ஆத்துக்கே வந்திடுங்கோ. எப்போ வரேங்கள்னு மட்டும் ….டைம் சொல்லிடு சரியா.”

“ஆங் சரி மன்னி. அப்போ வச்சுடறேன். நேர்ல பேசிக்கலாம்”

“ஓகே! பை! டேக் கேர்”

என்று ஃபோனை வத்தாள். அன்று மாலை நவீன் வீட்டுக்கு வந்ததும் கஜேஸ்வரியின் ஃபோன் கால் பற்றிச் சொன்னாள் மிருதுளா. அதைக் கேட்டதும் நவீன்

“என்ன திடிர்ன்னு ஃபோன், வரவு எல்லாம். அவன் தான் பெரிய இவன் மாதிரி பவின் கல்யாணத்துல இருந்தானே!!! இப்போ எதுக்கு இங்க வரானாம்? இதுல ஏதோ இருக்கு மிருது. அவா எல்லாம் சும்மா வர மாட்டா”

“என்னவா இருந்தா நமக்கென்ன நவீ? நம்மளை எதுவும் படுத்தாம இருந்தாலே போதாதா?”

“தெரியாது ….பார்ப்போம்”

ஞாயிற்றுக் கிழமை வந்தது. அன்று மதியம் கவின், கஜேஸ்வரி, அவர்களின் பிள்ளைகள் சௌபர்னிகா, ஆகாஷ் ஆகியோர் நவீன் வீட்டிற்கு வந்தனர். மிருதுளா நன்றாக சமைத்து வைத்திருந்தாள். அவர்களை வரவேற்று அனைவருமாக அமர்ந்து சாப்பிட்டனர். உணவருந்தியதும் கவின் நவீனிடம்

“நவீன் நாங்க இங்க இரண்டு அப்பார்ட்மென்ட் பார்த்திருக்கோம். ஒண்ணு பழைய அப்பார்ட்மெண்ட் ரீசேல் ப்ராப்பர்ட்டி நம்ம ஒண்ணுவிட்ட சித்தபா மகன் ராம் இருக்கானே அவனோட ஃப்ரெண்டோட ப்ராப்பர்ட்டி அது. மற்றொன்று அன்டர் கன்ஸ்ட்ரெக்ஷன்…இதுல கஜேஸ்வரி ஃப்ரெண்டு ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கிருக்கா.”

“எங்கே இங்க மைசூர்லயா?”

“ஆமாம்”

“எதுக்கு நீ மைசூர்ல இன்வெஸ்ட் பண்ணப் பார்க்குற?”

“அதுதான் நீயே சொல்லறையே இன்வெஸ்ட்மென்ட்டே தான்.”

“சரி அதுக்கு?”

“அதுதான் நாளைக்கு நீயும் மன்னியும் வந்து பார்த்து எது வாங்தறது நல்லதுன்னு சொன்னேங்கள்னா…”

“இங்கே பாரு கவின் கல்யாணம், நகை, வீடு இது மூணுலையும் நாமே தான் முடிவெடுக்கணும். இந்த மூணு விஷயத்துக்கு எப்போதுமே அடுத்தவாகிட்ட அபிப்பிராயம் கேட்கக் கூடாது. ஸோ நான் அபிப்பிராயம் சொல்லவும் விரும்பலை. ஐ ஆம் சாரி.”

“இல்ல பார்க்கறதுக்காவது வாங்கோளேன்”

“ம்….சரி வரோம்”

“நாளைக்கு முதல்ல அந்த ராம் சொன்ன வீட்டைப் பார்ப்போம். அதைக் காமிக்க ராம் ஃப்ரெண்டோட ப்ரோக்கர் வருவார். அப்புறமா புது பில்டிங்கைப் பார்க்கப் போவோம்”

“ம்…சரி சரி.”

அன்று மாலை அனைவரையும் பீட்சா சாப்பிட அழைத்துச் சென்றான் கவின். அனைவரும் டின்னருக்கு பீட்சா சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தனர். மறுநாள் விடிந்ததும் சக்தியை ஸ்கூலுக்கு அனுப்பிய பின் கிளம்பி வீடு பார்க்க அழைத்துச் சென்றான் நவீன். அவர்கள் சொந்தக்கார பையனான ராம் நவீனின் தம்பி ஆவான். கவினுக்கு அண்ணன் ஆவான். அந்த அப்பார்ட்மெண்ட் வாசலில் காரைப் பார்க் செய்து விட்டு வந்தான் நவீன் அப்போது கவின் யார் கூடயோ பேசிக் கொண்டிருந்தான். நவீன் அங்கே சென்றதும். பவின் அந்த நபரிடம்

“இவா தான் என் அண்ணா மன்னி. நவீன் இவர் தான் நேத்து நான் சொன்னேனே மிஸ்டர் வருண்.”

“ஆங்!! ஹாய் மிஸ்டர் வருண்”

என்று கைக்குலுக்கிக் கொண்ட பின் வீட்டைப் பார்க்கச் சென்றனர். கவினும் கஜேஸ்வரியும் சரியாகவே அந்த வீட்டைப் பார்க்கவில்லை ஏதோ பார்க்ணுமே என்று அவசர அவசரமாக பார்த்துவிட்டு அங்கிருந்து புரப்படும் போது அந்த ப்ரோக்கரிடம் கவின்

“நாங்க எங்க டிஸிஷனை அண்ணா கிட்ட சொல்லிடறோம் அவர் உங்களுக்குச் சொல்லுவார்”

என்று நவீனைக் காண்பித்துச் சொன்னான். அப்போது பேசாமலிருந்த நவீன் காரில் ஏறியதும்

“ஏன்டா நீ பாட்டுக்கு அண்ணா சொல்லுவார்ன்னு சொல்லற!!! நான் ஏன் சொல்லணும்?”

“அதெல்லாம் அப்படித் தான் விடு விடு. நீ ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை நவீன்”

“அப்புறம் ஏன் அவர்கிட்ட அப்படிச் சொன்ன?”

“ஏதாவது சொல்லித் தானே அங்கேந்து கிளம்ப முடியும். அதுக்காக தான் சொன்னேன்.”

“என்னமோ போ”

என்று பேசிக்கொண்டே கவின் கூறிய புது பில்டிங்குக்கு முன் வண்டி நின்றது. ஓரமாக பார்க் செய்து விட்டு உள்ளே சென்றனர். அது ஒரு நாற்பது வீடுகள் கொண்ட அப்பார்ட்மெண்ட்ஸ். அந்த பில்டரிடம் கவின் நவீனை அறிமுகப்படுத்தாததால் தானாக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். அப்போது அவர் நவீனின் வேலை பற்றி எல்லாம் கேட்டு அது சம்மந்தமாக பேசி முடித்ததும் நவீன் அவரிடம்

“இங்க உங்க அப்பார்ட்மெண்ட் ல ஸ்குவேர் ஃபீட் என்ன விலை?”

என்று கேட்க உடனே அந்த பில்டர் நவீனிடம்

“உங்களுக்கு இங்க வேண்டாம் சார் எங்களோட வில்லா ப்ராப்ர்ட்டி பக்கத்துலேயே ஒண்ணு ரெடி ஆகிக்கிட்டிருக்கு அதை வேணும்னா பாருங்களேன்”

என்றதும் நவீன் பதிலளிப்பதற்கு முன் கவின் முந்திக் கொண்டு

“ஏன் எங்களிடம் அந்த ப்ராப்பர்ட்டிப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே நீங்க? ஏன் நாங்க எல்லாம் அங்க வாங்கக் கூடாதா? இல்லை வாங்க முடியாதுன்னு நினைச்சுட்டிங்களா?”

என்று அவன் கேட்ட விதத்திலிருந்து அவன் மனதிலிருந்த பொறாமை குணம் தலைத்தூக்கியதை உணர்ந்தாள் மிருதுளா. உடனே அந்த பில்டர் கவினிடம்

“அதுக்கில்ல சார்….நீங்க அப்பார்ட்மெண்ட் தான் வேணும்னு சொன்னதால இதைக் காண்பித்தோம். அவர் எதுவும் சொல்லாததால அந்த வில்லா ப்ராஜெக்ட்டையும் சொன்னேன் அவ்வளவு தான். இதுக்கு ஏன் நீங்க இவ்வளவு ஆவேசமா பேசறீங்கன்னு எனக்கு புரியலை.”

“ம்…ம்…..எங்க கிட்டேயும் பணமிருக்கு அதுவும் என். ஆர்.ஐ பணம் சார். எங்களுக்கும் அதை காமிச்சிருக்கலாம். பரவாயில்லை…சரி நாங்க பார்த்த வீட்டை மறுபடியும் பார்த்துட்டு வரோம்…நவீன் வர்றயா?”

“ம்…வரேன். ஓகே சார் நைஸ் மீட்டிங் யூ. நான் போய் பார்த்துட்டு வரேன்.”

“ப்ளஷர் இஸ் மைன் சார். போயிட்டு வாங்க.”

என்று பேசிவிட்டு வீட்டைப் பார்க்க அனைவரும் சென்றனர். அப்போது நவீன் கவினிடம்

“நீங்க ஏற்கனவே இந்த வீடைப் பார்த்திருக்கேங்களா?”

“ம்…ஆமாம் போன தடவை வந்தப்போ பார்த்திருக்கோம்…அப்போ நீங்க மைசூர் வரலை.”

“ஓ!! ஓகே. அப்போ இது தான்ன்னு டிசைட் பண்ணிட்டேங்கள்னா அப்புறம் ஏன் ராம் ஃப்ரெண்டோட வீட்டைப் பார்த்தேங்கள்?”

“அது….அது வந்து அவன் சொன்னதால பார்த்தோம். அதுவுமில்லாம ரெடி டூ மூவ் இன் வீடுன்னா ரென்ட்டுக்கு விடறது ஈஸி. இப்போ இந்த வீடுன்னா ரென்ட்டுக்கு விட இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கணும். பணம் வீணா தானே முடங்கும். அதுதான் எதுக்கும் அதையும் பார்த்திடலாம்ன்னு போனோம்.”

“ஓ! ஓகே.”

என்று அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். மிருதுளா காலையிலேயே சமைத்து வைத்து விட்டு தான் சென்றிருந்தாள். வீட்டுக்கு வந்ததும் குக்கரில் சாதம் மட்டும் வைத்துவிட்டு டிரெஸ் மாற்ற சென்றாள். அனைவரும் ப்ரெஷாகி வருவதற்குள் எல்லாம் ரெடி செய்தாள் மிருதுளா. அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பின் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கவினுக்கு ஃபோன் வந்தது. அதைப் பேசிவிட்டு வந்து

“கஜேஸ் அந்த பில்டர் என் டிமான்ட்ஸ் எல்லாத்துக்கும் ஒத்துண்டுட்டான். விலையும் நாம சொன்னதுக்கு வரான். டாக்குமெண்ட் ரெடியாம் கையெழுத்துப் போட்டு அட்வான்ஸ் குடுக்கறேங்களான்னு கேட்டு தான் ஃபோன் பண்ணினான்.”

“அப்புறம் என்ன குடுத்திடுங்கோ. அதுதான் என் ஃப்ரெண்டும் பாதி பணம் செட்டில் பண்ணிட்டாளே. பின்ன என்ன குடுத்துட்டு டாக்குமெண்ட் ல கையெழுத்துப் போட்டுட்டு வாங்கோ”

“அப்படி என்னாடா டிமாண்ட் பண்ணின?”

“அதுவா எல்லா பாத்ரூமுக்கும் ஷவர் என்க்ளோசர். மாடுலார் கிட்சன். அன்ட் ப்ரைஸ் அவன் சொன்னது ஐம்பத்ரெண்டு லட்சம் ஆனா நான் கேட்டது நாற்பத்தைந்து லட்சத்துக்கு. அதுக்கும் ஒத்துண்டுட்டான்”

“எப்படி எப்படி ஏழு லட்சத்தையும் குறைத்து எல்லாமும் செய்துத் தரேன்னும் சொல்லிருக்கானா? நல்லா விசாரிச்சயா?”

“எங்களுக்கு இவ்வளவு செய்து தரேன்னு சொன்னதுக்கப்புறமா தான் பணம் தருவேன்னு இல்ல சொல்லிருந்தேன். அதுவும் அட்வான்ஸ் மட்டுமே ஹாட் கேஷா இருபது லட்சம் தரேன்னு சொல்லிருக்கேன். இதை எல்லாம் இப்போ கஜேஸ் ஃப்ரெண்டுட்ட சொன்னா அவ்வளவு தான் . சரி நான் கிளம்பட்டும்”

என்று கஜேஸ்வரி சொன்னதுக்கு சரி என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான் கவின். அன்று நவீனுக்கு ஆஃபீஸ் வேலை நிமித்தமாக பெங்களூர் போக வேண்டியிருந்ததால் அவன் அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். கவின் டாக்ஸி வைத்துக் கொண்டு மீண்டும் பில்டரை சந்திக்கச் சென்றான். அப்போது வீட்டில் குழந்தைகளுடன் இருந்தனர் மிருதுளாவும், கஜேஸ்வரியும். கஜேஸ்வரி மிருதுளாவிடம்

“மன்னி இப்போ இந்த வீட்டை வாங்கினோம்னா மாசம் இரண்டு லட்சம்ன்னு கொடுத்து ரெண்டே வருஷத்துல அடைச்சிடுவோம். எங்களுக்கு இந்த லோன் போடுற வேலையே இல்லை. அதுவுமில்லாம கவின் கெட்டிக்காரர் மன்னி. அண்ணா மாதிரி இல்லை. அடாவடியா பேரம் பேசுவார். பாருங்கோளேன் பேசி பேசி விலையையும் குறைச்சு வசதிகளையும் செய்ய வச்சுட்டார். அவர் எப்போதுமே இப்படி தான். எதற்கும் பேசாமல் ஒதுங்கி எல்லாம் அண்ணா மாதிரி போக மாட்டார்.”

என்று கம்பேரிஸன் மோட்டிலேயே பேசியஸமிருதுளாவை வெறுப்பேற்ற நினைத்த கஜேஸ்வரியிடம் மிருதுளா

“நல்லது தானே கஜேஸ்வரி. நம்ம கையில அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி.. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு விசேஷம் இருக்கு. அது மாதிரி தான் மனுஷாலும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு குணாதிசயங்கள் ஒவ்வொரு திறமையிருக்கு. அது போல கவினுக்கு இந்த திறமை அவ்வளவு தானே! நவீனுக்கு வேறு விதத்தில் திறமையிருக்கு. இந்த பூமில யாருமே எந்த திறமையுமே இல்லாம பொறக்கறதில்லை. கடவுள் அப்படி யாரையுமே படைக்கறதுமில்லை. இந்தா காபி எடுத்துக்கோ. குட்டீஸ் இந்தாங்கோ உங்களுக்கு பூஸ்ட்”

என்று கஜேஸ்வரிக்கு பதிலடி கொடுத்துக்கொண்டே அனைவருக்கும் காபியும் பூஸ்ட்டும் போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தாள். குழந்தைகள் மூவரும் உள் ரூமில் விளையாடிக் கொணடிருந்தனர். கஜேஸ்வரியின் முதல் திட்டமான “கம்பேர் அன்ட் இரிடேட்” வேலைக்கு ஆகவில்லை என்று அறிந்ததும் அடுத்த அஸ்த்திரத்தை எடுத்து பேசத் துவங்கினாள்..

“மன்னி ….ஊர்ல இருக்குற அந்த வீட்டை நாங்களும் வேண்டாம்ன்னு சொல்லிட்டோம். ஆனா மாமி தான் அதை வித்து பணத்தை நாலு பேருக்கும் குடுத்திடணும்ன்னு சொல்லிண்டிருக்கா….நான் சொல்லிட்டேன் அந்த பணத்தை மாமிட்டேந்து வாங்கி அதை அப்படியே யாருக்காவது தானமா கொடுத்திடனும்ன்னு. என்னத்துக்கு சிலரோட சாபத்தை எல்லாம் நாங்க சுமக்கணும்…அதுனால தான் அப்படி சொல்லிட்டேன்!! சரி தானே மன்னி”

என்று நவீன் மிருதுளாவையே குத்திப் பேசினாள் கஜேஸ்வரி. அதைக் கேட்டதும் கஜேஸ்வரியைப் பார்த்து மெல்லிதாக சிரித்தாள் மிருதுளா. அதை பார்த்த கஜேஸ்வரி மிருதுளாவிடம்

“என்ன மன்னி சிரிக்கறேங்கள்?”

“ஆமாம் வேறென்ன பண்ண? சரி அப்படி உங்களுக்கு”ம்” அந்த வீடு வேண்டாம்ன்னா அப்புறம் எதுக்கு அந்த பணத்தை உன் மாமிகிட்டேந்து வாங்கணும். அவா ஏதோ பண்ணிக்கட்டும்னு விட்டுட வேண்டியது தானே”

“ம்…அப்படி விட்டா மாமியே அமுக்கிண்ட்ருவா மன்னி. ஏற்கனவே உங்க பங்கை அமுக்கிக்குவா இதுல எங்களோடதையும் ஏன் குடுக்கணும்?”

“ஹா!!!ஹா!!!ஹா!!!”

“ஏன் மன்னி இப்படி சிரிக்கறேங்கள்?”

“இல்ல நீ பணத்தை அமுக்கிக்குவான்னு கவலைப்படறயே கஜேஸ்வரி!!!! ஆனா நவீன் பணம் போட்டு வாங்கின அந்த வீட்டையே அமுக்கிண்டிருக்காளேன்னு நினைச்சேன் சிரிப்பு வந்துடுத்து. சாரி.”

“மன்னி கவினும் அதுல காசுப் போட்டிருக்கார் மன்னி அதுக்கு அவர் எவிடன்ஸும் வச்சிருக்கார். அண்ணா குடுத்ததுக்கு ஏதாவது எவிடன்ஸ் வச்சிருந்தா காட்ட சொல்லுங்கோ”

“ஹலோ கஜேஸ்வரி…..தேவையே இல்லாம இப்போ எதுக்கு இந்த பழைய பேச்சு? நாங்க தான் வேண்டாம்னு ஒதுங்கிட்டோமே அப்புறமும் ஏன் நீ அதைப் பத்தியே பேசுற?”

“மன்னி பேச ஆரம்பிச்சாச்சு அப்போ பேசி முடிச்சிடுங்கோளேன். அண்ணா கிட்ட எவிடன்ஸ் இருக்கா?”

“ம்…..நான் சொல்லுவேன் அப்புறம் நீ வருத்தப்படக் கூடாது”

“பரவாயில்லை சொல்லுங்கோ”

“பெத்தவான்னு நம்பி தான் பணத்தைக் குடுத்திருக்கார். அப்படி பெத்தவாளை நம்பி குடுக்கும் போது புரோ நோட்ல கையெத்து வாங்கிண்டு எவிடன்ஸ் க்ரியேட் பண்ணி வச்சுக்கற அளவுக்கு கீழ்தரமானவர் இல்லை நவீன்.”

“என்ன மன்னி இப்படி சொல்லறேங்கள்?”

“பின்ன நீ தானே சொல்லுங்கோ சொல்லுங்கோன்னு சொன்ன…அது தான் சொன்னேன். சரி நீ இவ்வளவு கேட்கறையே…நான் ஒண்ணு உன்கிட்ட கேட்கறேன் அதுக்கு பதில் சொல்லு நீ. இவ்வளவு பேச்சுத்திறமை உள்ள கவின் ஏன் நவீன்ட்ட நேரா பேசாம மாமாகிட்ட அவனுக்கு வேணும்னா அவனைப் பேச சொல்லுன்னு சொல்லிருக்கான்!! இது நியாயமா?”

“ஐய்யோ மன்னி அவர் ஏதோ கோபத்துல ….”

“எல்லாருக்கும் கோபம் இருக்கு மா. அதுக்காக….சரி அதெல்லாம் விடு. நீங்க எவ்வளவோ செஞ்சிருக்கேங்கள்?? நாங்க ரெண்டு பேரும் உங்க யார்கிட்டேயும் அதையெல்லாம் பத்தி கேட்டதே இல்லை. ஏன் தெரியுமா? தெரியாமல் செய்யறவாட்ட கேட்கலாம் ஆனா நீங்க எல்லாரும் தெரிஞ்சே தான் எல்லாமும் செய்யறேங்கள் அதுனால கேட்டு பிரயோஜனம் இல்லைன்னு தான் நாங்க ரெண்டு பேரும் வாயைத் திறக்காமலிருக்கோம். நீ கொஞ்சம் முன்னாடி சொன்னயே அது மாதிரி பேச தெரியாம எல்லாம் இல்லவே இல்லை. நாங்களும் பேசுவோம்…. ஆனா எல்லாத்துக்கு எல்லா இடத்துலேயே சிலரைப் போல கத்த மாட்டோம். அதுதான் வித்தியாசம்…புரிஞ்சுதா…சரி சரி நான் போய் டின்னர் ரெடி பண்ணட்டும்”

என்று கஜேஸ்வரிக்கு சரியான பதிலடிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றாள். மிருதுளா இப்படி பேசுவாள் என்று எதிர்ப் பார்க்காத கஜேஸ்வரி அப்படியே திகைத்து அமர்ந்திருந்தாள். சற்று நேரத்தில் வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டதும் திகைப்பிலிருந்து வெளி வந்தாள் கஜேஸ்வரி.

“ம்…வா வா கவின். என்ன போன வேலை எல்லாம் நல்ல படியா நடந்துதா?”

“ஆங் நடந்தது மன்னி.”

“சரி டிரெஸ் மாத்திண்டு வா டிபன் ரெடி”

“ஒரு காஃபி தாங்கோளேன் ஃப்ர்ஸ்ட்”

“ஓகே”

என்று கூறிவிட்டு காபி போட சென்றாள் மிருதுளா. அனைத்தையும் அமர்ந்த இடத்திலிருந்தே எட்டிப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்த கஜேஸ்வரி எழுந்து அடுப்படிக்குச் சென்று

“மன்னி ஏதாவது ஹெல்ப் வேணுமா?”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மா. எல்லாம் ரெடி. இந்தா இந்த காபியை கவின்ட்டக் குடு”

என்று சொல்லித் திரும்பும் போது கவினே அடுப்படுக்குள் வந்தான். மிருதுளாவிடமிருந்து அவனே காபியை வாங்கிக் கொண்டு …அடுப்பு மேலிருந்த குக்கரைப் பார்த்து

“என்ன மன்னி ஃப்யூசுரா குக்கரா?”

“ஆங் ஆமாம் கவின்”

கவின் காபியை அங்கிருந்தபடியே அருந்தினான். அப்போது கஜேஸ்வரி கவினிடம்

“கவின் நானும் மன்னியும் ஊர்ல இருக்குற அந்த வீட்டைப் பத்தி தான் பேசிண்டிருந்தோம்”

இதைக் கேட்டதும் மிருதுளா உடனே

“பேசிண்டிருந்தோம் இல்லை கஜேஸ்வரி பேசிண்டிருந்த…அதுக்கு உனக்கு நான் பதில் கொடுத்தேன் அவ்வளவு தான்”

என்று கூறிவிட்டு ஹாலுக்குச் சென்றாள் மிருதுளா. அதைக் கேட்டதும் கவின் கஜேஸ்வரியை பார்த்து முறைத்தான்.

பலர் நம் வாழ்வில் இப்படித் தான் ஏதும் பேசாதவராக இருந்தால்… தவறாக அவர்களுக்கு பேசவே தெரியாது, எப்படி பேச வேண்டுமென்றும் தெரியாது அதனால் தான் விலகிப் போகிறார்கள் என்று அவர்களாக எண்ணிக் கொண்டு மேலும் மேலும் தங்களின் வாய் சாமர்த்தியத்தால் அவர்களை புண்படுத்துவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அப்படிப் பட்டவர்கள் பேச விரும்பாமலும் விலகிச் செல்லலாம் என்பதை அவர்கள் உணர்வதில்லை. எல்லா இடத்திலும் எல்லாவற்றிற்கும் நாம் பேச வேண்டுமென்பதில்லை. பேச வேண்டியதை பேச வேண்டிய நேரத்தில் பேசாமலிருக்கவும் கூடாது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். அது போல மிருதுளாவுக்கு பேசத் தெரியாது என்றெண்ணி அவளை வேண்டுமென்றே வம்புக்கிழுத்த கஜேஸ்வரி நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு வாயடைத்துப் போனாள்.

தொடரும்…..

















Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s