பவின் மிருதுளாவுடன் பேசி மூன்று நாட்களுக்கு பின் ஒரு நாள் மாலை நவீன் வீட்டு ஃபோனுக்கு கால் வந்தது. நவீன் ஏதோ ஆஃபீஸ் வேலையாக இருந்ததால் சக்தியை ஹோம் வொர்க் செய்ய வைத்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து எழுந்து மிருதுளா ஃபோனை அடென்ட் செய்தாள்.
“ஹலோ மிருதுளா ஹியர்”
“ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன்”
என்றதும் நேராக ஃபோனை நவீன் இருந்த அறைக்கு எடுத்துச்சென்று வழக்கம் போல ஸ்பீக்கரில் போட்டுவிட்டாள்.
“ஆங் சொல்லுங்கோ பா”
“எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”
“ஆங் நாங்க நல்லா இருக்கோம்.”
“சரி ஆத்துல சுமங்கலிப் பிரார்த்தனை அடுத்த மாதம் பதினொனாம் தேதி வச்சிருக்கோம். பவின் கல்யாணம் இருபதாம் தேதி. வந்துடுங்கோ”
“அழைச்சதுக்கு ரொம்ப நன்றி. நான் உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கட்டுமா?”
“ம்…என்ன? கேளு”
“இதே மாதிரி எங்களுக்கு பவினின் நிச்சயதார்த்தம் தேதியையும் கரெக்ட்டா சொல்லியிருந்தா அவ்வளவு தூரம் வந்தும் மனசு கஷ்டத்தோட திரும்பி வந்திருக்க மாட்டோம் இல்லையா!! ஏன் நீங்க அப்படி அப்போ நடந்துக்கலை?”
“எல்லாம் நாங்க ஃபோன் பண்ணி சொன்னோம். நீங்க சரியா கேட்டுக்கலைன்னா நாங்க என்ன பண்ண?”
“சரி பா. நாங்க சரியா கேட்டுக்கலைன்னே வச்சுப்போம் ஆனா பவின் நிச்சயத்துக்கு நாங்க ரெண்டு பேரும் வரலையேன்னு நம்ம ஆத்தேந்து ஒருத்தர் கூட கேட்கலையே ஏன்? தப்பான தேதி சொன்னதால் எங்கேந்து வருவோம்ன்னு தெரிஞ்சதால கேட்கனும்ன்னு தோனலையோ!”
“எதுக்கு கேட்கணும் நீங்க திமிரெடுத்து வராமல் இருந்தா அதை எல்லாம் நாங்க ஏன் கேட்கணும்?”
“அப்பா நாங்க திமிரெடுத்து வரலையா இல்லை என்ன காரணத்தினால வரலைங்கறது எங்களுக்கும் தெரியும் அது உங்களுக்குமே நல்லாவே தெரியும். ஸோ ப்ளீஸ் ஸ்டாப் ப்ளேமிங் அஸ் லைக் திஸ்”
“ஏய் என்னடி விட்டா பெரிய இவ மாதிரி பேசிண்டே போற? நீ எல்லாம் யாருடி என்ன கேள்வி கேட்க? நீ என்ன பெரிய இவளோ? போடி சரிதான். நீ எல்லாம் என் கால் தூசுக்குக் கூட சமமில்லடி. அதுக்கும் கீழே எங்கேயோ கிடக்குற தூசு டி நீ. எங்களுக்கு நீ எல்லாம் ஒரு ஆளே இல்லடி. நீ பேசுறயா… ம்….நீயெல்லாம் வந்தா என்ன வராட்டி என்ன!!! யாருடி உங்களுக்காக இங்க காத்துக் கிடக்கறா…போடி”
என்று ஈஸ்வரன் சகட்டுமேனிக்கு மிருதுளாவை விலாசித் தள்ளியதைக் கேட்ட நவீன்
“இங்க பாரு மரியாதை குடுத்தா தான் உனக்கு அது திருப்பி கிடைக்கும் ஞாபகம் வச்சுக்கோ. என்ன நீ பாட்டுக்கு வாய்க்கு வந்த படி எல்லாம் பேசுற? நாங்க வந்தா என்ன வராட்டி என்னவா? அப்புறம் என்னத்துக்கு இப்போ கால் பண்ணி கூப்பிட்ட?”
“டேய்!!! நான் உன்னை சொல்லடா….அவ அம்மா காரி இருக்காளே அவ என்ன சொன்னா தெரியுமா….அவ பொண்ண ஒரு கீரகாரனுக்கு கட்டி வைப்பாளாம் டா”
தன்னை இழிவாக பேசிய போது அமைதியாக இருந்த மிருதுளா தன் தாயையும் மரியாதையின்றி ஈஸ்வரன் பேசியதைக் கேட்டதும்
“இதோ பாருங்கோ உங்களுக்கு என்னையே அப்படி பேச எந்த ரைட்ஸும் இல்லை. ஏதோ வயசானவர்ன்னு பல தடவையா உங்களோட இந்த மாதிரி அசிங்கமான பேச்சைப் போனா போறதுன்னு பொறுத்துண்டா இப்போ என் அம்மாவையும் அவ இவன்னு மரியாதை இல்லாம பேசறது நல்லா இல்லை. அப்படி பேச உங்களுக்கு என்ன உரிமையிருக்கு? அப்படி நான் உங்களுக்கெல்லாம் ஒரு தூசுன்னா அப்புறம் என்னத்துக்கு என்னை கூப்பிடறேங்கள்? அதுதான் உங்க வைஃப் இதுக்கு முன்னாடி நடந்த சுமங்கலிப் பிரார்த்தனைக்கும் தேதி எதுவுமே என்கிட்ட டிஸ்கஸ் பண்ணாம அவா இஷ்டத்துக்கு வச்சு நான் வரமுடியாதபடி பார்த்துண்டாளே….என்ன எதுவும் கேள்வி கேட்கலைன்னா எனக்கு எதுவும் தெரியாதா என்ன? மொதல்ல குடும்பத்தை கெடுக்கும் உங்க ஆத்துக்காரியை அடக்குங்கோ அப்போ நம்ம குடும்பம் தானா ஒத்துமையாகிடும். தப்பை எல்லாம் நீங்க ரெண்டு பேரும் செய்துட்டு என்னையும் என் அம்மாவையுமா குத்தம் சொல்லறேங்கள். என் பொறுமையை பத்து வருஷமா நீங்க எல்லாரும் சோதிச்சுட்டேங்கள். இனியும் இது மாதிரி என்கிட்ட பேசினேங்கள் அப்புறம் நடக்கறது வேற சொல்லிட்டேன்.”
“பேசுவ டி பேசுவ”
“சும்மா மறுபடியும் ஆரம்பிக்காதே பா. போதும் மிருது கேட்டதுல ஏதாவது தப்பிருக்கா? அவளும் எவ்வளவு தான் பொறுத்துப் போவா? முடிஞ்சா அவ கேட்டதுக்கு பதில் சொல்லு …தேவையில்லாத பொய்களை எல்லாம் சொல்லி டாப்பிக்கை மாத்தப் பார்க்காதே”
“போடா உனக்கெல்லாம் என்னடா பதில் சொல்ல வேண்டிருக்கு”
என்று அப்போதும் திமிர்த்தனமாக ஃபோனை துண்டித்தார் ஈஸ்வரன். அதை பார்த்ததும் நவீனுக்கும் கோபம் வந்தது. அவன் மீண்டும் ஈஸ்வரன் வீட்டிற்கு ஃபோன் போட முயற்சித்தப் போது மிருதுளா
“நவீ நீங்க கோபத்துல இருக்கேங்கள் நவீ இப்போ வேண்டாம் அப்புறம் உங்க அப்பா மாதிரியே நீங்களும் வார்த்தையை விட்டுட்டா அப்புறம் அள்ள முடியாது நவீ. ப்ளீஸ் நவீ வேண்டாம்”
“மிருது விடு. இன்னைக்கு ஒண்ணுல ரெண்டு பார்த்தே ஆகனும். அது என்ன பேசிண்டே இருக்கும் போது ஃபோனைக் கட் பண்ணறது? பதில் தெரியலைன்னா கட் பண்ணிடுவாளா! இதையே நாம செஞ்சா சும்மாவா இருப்பா. …..நீ பேசாம இரு”
என்று முதல் முறை டயல் செய்ததில் எவரும் ஃபோனை எடுக்கவில்லை. ஆகையால் மண்டும் டயல் செய்தான் ரிங் போனது…
“ஹலோ”
“ஹலோ நான் நவீன் பேசறேன். நீங்க யார் பேசறது?”
“நான் உன் அத்தைப் பேசறேன் நவீன்.”
“அத்தையா!!”
“ஆமாம் பா வசுந்தரா அத்தை தான் பேசறேன்”
“ஏன் நீங்க ஃபோனை எடுத்தேங்கள்?”
“யாருமே எடுக்கலை. ரொம்ப நேரமா அடிச்சுண்டே இருந்தது அதுனால எடுத்தேன்”
“சரி சரி உங்க அண்ணாட்ட ஃபோனை குடுங்கோ அத்தை. உங்ககிட்ட நான் அப்புறமா பேசறேன்”
“இதோ குடுக்கறேன்….ஈஸ்வரா….இந்தா நவீன் தான் பேசறான் ….பேசு”
“எனக்கு எவன் கிட்டேயும் பேச வேண்டாம்னு தானே ஃபோனை எடுக்கலை. நீயே பேசிக்கோ”
என்று பின்னாலிருந்து ஈஸ்வரன் சத்தம் போட்டது நவீனுக்கு கேட்டது உடனே நவீன் தன் அத்தையிடம்
“ஏன் அத்தை இவ்வளவு வயசாச்சே கொஞ்சமாவது அதுக்கு தகுந்தா மாதிரியா நடந்துக்கறா? அவா பேசினது எல்லாம் நீங்களும் கேட்டுண்டு தானே இருந்தேங்கள்!! இதெல்லாம் நல்லாவாயிருக்கு? திருந்தர வழிய பார்க்கச் சொல்லி உங்க அண்ணன் கிட்ட எடுத்துச் சொல்லுங்கோ நான் ஃபோனை வைக்கறேன்”
என்று கூறிவிட்டு ஃபோனை கட் செய்தான் நவீன்.
அன்றிரவு முழுவதும் இவர்களுக்காகவா வாழ்க்கையின் முக்கியமான பருவத்தை தொலைத்தேன் என மிகவும் வேதனைப் பட்டுக்கொண்டே இருந்தான் நவீன். சற்றே திரும்பிப் பார்த்தான் கண்கள் ஓரத்தில் கண்ணீரின் கறையுடன் படுத்துறங்கிக் கொண்டிருந்தாள் மிருதுளா. அவளைக்கட்டிக்கொண்டு படுத்திருந்தாள் சக்தி. அவர்களைப் பார்த்ததும் தன் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே
“இனி நீங்கள் தான் எனக்கு எல்லாம். நான் நம்பியவர்கள் எனக்கு துரோகம் செய்ததோடு என்னை அவமானமும் படுத்திவிட்டனர். அதனால் இனி என்னை நம்பியிருக்கும் உங்களுக்காகவே தான் என் வாழ்க்கை. என் மீதுள்ள நம்பிக்கையில் நிம்மதியாக தூங்கும் இந்த இரு ஜீவன்கள் தான் இனி எனது எல்லாம்.”
என்று மனதில் கூறிக்கொண்டு மிருதுளாவையும் சக்தியையும் அணைத்துக் கொண்டே உறங்கினான் நவீன்.
நாட்கள் கடந்தன. பவினின் கல்யாண பத்திரிகை அவர்கள் வீட்டுப் பத்தியிகை ஒருவழியாக நவீனுக்கு வந்தது. கல்யாண தேதி நெருங்கிக் கொண்டிருந்தது.
“நவீ நான் ஒண்ணு சொல்லுவேன் நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது.”
“நீ என்ன சொல்லப் போறன்னு எனக்கு தெரியும் மிருது. வேண்டாம்”
“இல்ல நவீ பெரியவா என்ன சொன்னா என்ன? எப்படி நடந்தா என்ன நாம சரியா இருப்போமே. அதுவுமில்லாம அவா காலம் இன்னும் கொஞ்சம் தான் அதுக்கப்புறம் நாம நாலு பேரும் அவா அவா ஃபேமிலியும் தான் ஒன்னா இருக்கணும். இவாளால நாம பிரிஞ்சுடக் கூடாது. அதுனால தான் போயிட்டு பட்டும் படாம மூணாம் மனுஷா மாதிரி இருந்துட்டு வந்திடுவோம். அப்போ பவின் மனசுல இருக்குமில்லையா இவ்வளவு நடந்தும் நம்ம சொன்னதை மதிச்சு அண்ணாவும் மன்னியும் வந்திருக்கான்னு!! ஏன்னா அவனுக்கு நடந்தது எல்லாமே தெரியுமே. அந்த நினைப்பு இனிக்கு இல்லாட்டியும் என்னைக்காவது அவன் நம்மளை மதிக்க வைக்கும்ன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு. அதுவுமில்லாம இப்போ நாம போகலைன்னா!!! அப்புறம் இவ்வளவு கூப்பிட்டும் இந்த அண்ணாவும் மன்னியும் அப்பா அம்மா பண்ணினதுக்கு என் கல்யாணத்துக்கு வராம இருந்துட்டா பாருன்னு பதிஞ்சுடும். அது என்றென்றைக்கும் மாறாத வடு ஆகிடும். புரிஞ்சுக்கோங்கோ. இதுக்கப்புறம் நாம எதுக்கு அந்த பக்கம் போகணும் சொல்லுங்கோ. நாம அந்த ஃபேமிலியில வேற யாரோடையும் பேச வேண்டாம். என்ன சொல்லறேங்கள் நவீ?”
“ம்….. என்னென்னவோ சொல்லுற!!! ஆனா அவா இதுக்கெல்லாம் வொர்த்தான்னு எனக்கு தெரியலை. சரி உனக்காக போயிட்டு வரலாம். டிக்கெட் புக் பண்ணு”
“தாங்க்ஸ் நவீ. இப்போ உங்களுக்கு புரியாது. ஆனா காலம் புரிய வைக்கும். சரி நான் டிக்கெட் புக் பண்ணிடறேன். மத்தியானம் ரீச் ஆவோம். ஹோட்டல் ரூம் புக் பண்ணறேன். சாயந்தரம் மாப்பிள்ளை அழைப்பு அடென்ட் பண்ணுவோம், நைட்டு ரூமுக்கு வந்திடுவோம், காலையில கல்யாணத்தை அட்டென்ட் பண்ணிட்டு மத்தியானம் சாப்டுட்டு ரூமுக்கு வந்துடுவோம், சாயந்தரம் நலங்கு முடிச்சிட்டு ஊருக்கு கிளம்பிடுவோம். ஸோ நீங்க மூணு நாள் லீவு போட்டா போதும். என்ன சொல்லறேங்கள்?”
“ம்..ம்…ஓகே ஓகே”
என்று பட்டும் படாமல் பதலளித்தான் நவீன். அதுப் புரிந்தாலும் எப்படியாவது குடும்பத்துடன் ஒற்றுமையாக இருந்திட வேண்டுமென்ற எண்ணத்திலும், எதிர்காலத்தை எண்ணியும், பொருட்படுத்தாமல் ஃப்ளைட் அன்ட் ரூம் புக்கிங்கை செய்தாள்.
திருமண நாள் முன்தினம் மூவரும் புறப்பட்டு ஏர்போர்ட் சென்று அங்கிருந்து ஹோட்டலுக்குச் சென்றனர். மாலை டிரஸ் செய்துக்கொண்டு மூவரும் கல்யாண மண்டபத்தை காரில் சென்றடைந்தனர். அவர்கள் மண்டபத்திற்குள் நுழைவதற்கு செல்லும் போது, வாசலில் அமர்ந்திருந்த ப்ரவீனின் மாமனார் நவீன் மிருதுளாவைப் பார்த்து….
“என்ன இது தம்பிக் கல்யாணத்துக்கு வர நேரமா இது?”
என்று நக்கலாக கேட்க அதற்கு நவீன் பதிலளிக்க முயன்ற போது …அவன் ஏதாவது கோபத்தில் சொல்லிவிடப் போறானோ என்ற பயத்தில் அவனை அங்கிருந்து அழைத்துச் செல்ல ப்ரவீனின் மாமனார் பேச்சைப் புறக்கணித்து
“நீங்க வாங்கோ நவீ நாம எதுக்கு வந்தோமோ அதை மட்டும் பார்த்துட்டு போவோம். தேவை இல்லாத பேச்சுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டாம்.”
என கூறி நவீனின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் மிருதுளா. உள்ளே ரிசெப்ஷன் நடந்துக் கொண்டிருந்தது. அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும் ஈஸ்வரன் குடு குடுவென வந்து நவீனை இழுத்துச் சென்று தனது கடைசி சம்மந்தியிடம்
“இவன் தான் என் மூத்தப் புள்ள நவீன். இவனுக்கு நிச்சயதார்த்தத்தப்போ முக்கியமான வேலை இருந்ததால தான் வரமுடியாம போச்சு.”
என்று நவீனை மட்டும் அறிமுகப் படுத்தினார். உடனே நவீன் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு மிருதுளாவை அழைத்து அவளையும் தன் மகளையும் அறிமுகம் செய்து வைத்து விட்டு தனது சொந்தங்கள் அமர்ந்திருந்த இடத்தில் போய் ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தனர். அப்போது நவீனின் ஒண்ணு விட்ட அக்காவின் கணவர் நவீன் மிருதுளா அருகில் வந்து
“நடந்ததெல்லாம் கேள்விப்பட்டேன். அவ்வளவு நடந்தும் விட்டுக்கொடுக்காம வந்திருக்கேங்கள் பாரு யூ ஆர் சிம்பிளி க்ரேட். ரெண்டு பேரும் நன்னா இருப்பேங்கள்.”
என்று ஆசிர்வாதம் செய்து விட்டு சென்றார். மேடையில் ஈஸ்வரன் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர். அதைப் பார்த்தப் போது நவீனின் தூரத்து சொந்தம் ஒருத்தர் மிருதுளாவிடம்
“ஏன்மா மிருதுளா நீயும நவீனும் ஏன் மேடைக்குப் போகலை?”
“இதோ போகப் போறோம் அத்திம்பேர். நவீன பேசிண்டிருக்கார். இப்போ விட்டா அப்புறம் எப்போ எல்லாரையும் இப்படி ஒண்ணா பாக்கக் கிடைக்கும்!!! அதுதான் பேசிண்டே இருக்கார்.”
என்று கூறி சமாளித்துக் கொண்டே இருக்கையில் அவளைப் பின்னாலிருந்து தோளில் தட்டி அழைத்தாள் கஜேஸ்வரி (முகம் கைக் கால் முழுவதும் காயங்களுடன்)
“ஹலோ மன்னி எப்படி இருக்கேங்கள்”
“ம்… நான் நல்லா இருக்கேன். ஆமாம் உனக்கு என்ன ஆச்சு? ஏன் நீயும் கவினும் இவ்வளவு காயங்களோடு இருக்கேங்கள்? வந்ததும் பார்த்தேன். சரி நீங்க எல்லாம் பிஸி பீஸ் ஆச்சே… ஸோ அப்புறமா கேட்டுக்கலாமேன்னு விட்டுட்டேன்”
“அதை ஏன் கேட்குறேங்கள் மன்னி!! நாங்க போன ஆட்டோ ஆக்ஸிடென்ட் ஆகி எங்க ரெண்டு பேருக்கும் செம அடி. நல்ல வேளை உள் காயங்கள் ஏதும் இல்லை. வெளில மட்டும் இந்த சிராய்ப்புகள். என்ன கல்யாண சமயத்துல முகமெல்லாம் இப்படி கீறிண்டு நிக்கறோமேனு தான் ஒரு வருத்தம். பவின் கல்யாண ஃபோட்டோல எல்லாம் இப்படி காயங்களோட தான் இருப்போம்.”
“அச்சச்சோ!!! இது எப்போ நடந்தது”
“இந்த கல்யாண வேலையா அலைஞ்சிண்டிருந்தோம் இல்லையா அப்போ தான் நடந்தது…”
என்று பேசிக்கொண்டிருக்கும் போது பின்னாலிருந்து கஜேஸ்வரியை அவள் அம்மா அழைக்க உடனே
“ஆங் வரேன் மா…சரி மன்னி நீங்க உட்காருங்கோ நான் போயிட்டு அப்புறமா வந்து பேசறேன். நிறைய பேச இருக்கு மன்னி. வரேன்”
“சரி சரி போயிட்டு வா”
என்று கஜேஸ்வரி சென்றதும் மிருதுளா நவீனிடம் மெதுவாக
“கேட்டேளா கஜேஸ்வரி சொன்னதை? பாவம் ரெண்டு பேருக்கும் இப்படியா ஆகனும்? எல்லாம் நேரம் தான்”
“நேரமில்லை மிருது நேரமில்லை!! நீ அன்னைக்கு சொன்னயே எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துப்பான்னு ஞாபகமிருக்கா? அவர் பார்த்ததின் விளைவு தான் இது. கொஞ்ச நஞ்சமாவா ஆடினா? அப்பவும் அவன் வந்தானா பேச!!! அடிவாங்கியும் திருந்தலைப் பாரு “
“உஷ்…விடுங்கோ. பேசாம இருங்கோ ப்ளீஸ். என்ன இப்போ அவன் உங்க கூட பேசலையேன்னு கவலையாக்கும்”
“ஆமாம் ஆமாம்!!! எனக்கு வேறெதுவுமில்லைப் பாரு. சரி சரி சேஷு அத்திம்பேர் வரார்…வாங்கோ அத்திம்பேர்”
“என்னடா நவீன் அண்ணனா அங்க போய் மேடையில உட்காராம இப்படி கூட்டத்தோடு கூட்டமா உட்கார்ந்திண்டிருக்க?”
“அதுதான் மத்த அண்ணன்கள் எல்லாம் நிக்கறாளே அப்புறம் நான் வேற எதுக்கு அத்திம்பேர்”
“எல்லாம் கேள்விப் பட்டேன் டா. நீ தான் ஒரே ஆளு அப்போ உங்காத்துல உழைச்சுண்டு இருந்தவன். இது எங்க எல்லாருக்குமே தெரியும். வேற யாருமே வேலைக்கு எல்லாம் போகலைமா மிருது. இவன் ஒருத்தன் சம்பாத்தியத்துல தான் எல்லாரும் சாப்ட்டுண்டு இருந்தா. அப்போ நவீன் எலும்பும் தோலுமா தான் இருப்பான். உன் மாமனார் அப்போ மொடா குடியன். ஒரு நாள் குடிக்க காசில்லைன்னு தெரிஞ்சவாகிட்ட போயி மூத்த புள்ளை செத்துப் போயிட்டான் எடுத்துப் போட காசு இல்லைன்னு அழுது. அவாகிட்டேந்து காசு வாங்கிண்டு போய் குடிச்சவனாக்கும். ஏன்டா நவீன் நீ ஏன் அந்த வீட்டை விட்டுக் கொடுத்த? “
“அத்திம்பேர் அவாளே வச்சுக்கட்டும் ஆனா என்னைக்கிருந்தாலும் என்னோட கையெழுத்தில்லாம அவாளால அந்த வீட்டை விற்கவோ இல்லை மாத்திக்குடுக்கவோ முடியாது இல்லையா. அப்போ என்கிட்ட வந்து தானே ஆகனும். அப்போ பார்த்துக்கலாம்னு தான் விட்டுட்டேன்”
“ஓ!!! ஓ!!!! ஓகே ஓகே!! வா வா என் தர்ம பத்தினியே…என்னை அழைக்க ஆள் வந்தாச்சு நவீன்”
“என்ன நவீன் மிருதுளா எப்படி இருக்கேங்கள்? இது தான் உங்க பொண்ணா? என்ன பேரு”
“நாங்க நல்லா இருக்கோம் அக்கா. ஆமாம் அக்கா. இவ பேரு ….”
என்று மிருதுளா முடிப்பதற்குள்
“என் பேரு சக்தி”
“அட படு சுட்டிப் பொண்ணா இருக்காளே. நாம சாப்பிட போகலாமா. சரி மா நீங்க சாப்பிட வரலையா”
“நீங்க ரெண்டு பேரும் போங்கோ!! நாங்க சாப்பிட இன்னும் கொஞ்சம் நேரமாகும்”
“அப்படியா சரி அப்போ நாங்க சாப்பிடப் போறோம் ப்பா. எங்களுக்கு வயசாயிடுத்தே மாத்திரை போட்டுக்கணுமே. வரோம். அப்புறமா பேசலாம்”
“சரி அக்கா போயிட்டு வாங்கோ. பத்திரமா படில இறங்குங்கோ”
“தாங்க்ஸ் மா மிருது”
“சரி மிருது நாம ஏன் வெயிட் பண்ணிண்டு? நாமளும் சாப்டுட்டு ரூமுக்கு போகலாமே”
“இருங்கோ நம்மாத்துக் காரா எல்லாரும் போகும் போது நாமும் போவோம். ஏன் உங்களுக்கு பசிக்கறதா?”
“ஆமாம் நம்மாத்துக் காரா!!! பேசாம வா மிருது. சக்திக்கு பசிக்குமில்லையா”
என்று கூறி மூவரும் சாப்பிட சென்றனர். இரவு உணவு உண்டதும் அங்கிருந்து ரூமுக்கு புறப்படும் முன் யாரிடமாவது தெரிவித்து செல்ல வேண்டுமென்று மிருதுளா தேடிக்கொண்டிருக்கையில் கஜேஸ்வரி அங்கே வந்தாள் அவளிடம்
“கஜேஸ்வரி நாங்க போயிட்டு காலையில கல்யாணத்துக்கு வந்திடறோம் சரியா. யார்கிட்டயாவது சொல்லிட்டுக் கிளம்பலாமேன்னு தான் வெயிட் பண்ணிண்டிருந்தோம்”
“என்ன மன்னி கிளம்பறேளா? இருப்பேங்கள் உங்ககிட்ட நிறைய விஷயங்கள் பேசலாம்னு நினைச்சேனே!!”
“அதுதான் நாளைக்கு வருவோமே அப்போ பேசிப்போம். நாங்க வரோம்”
என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு ஹோட்டல் ரூமிற்குச் சென்றனர் நவீனும், மிருதுளாவும், சக்தியும்.
மறுநாள் விடிந்ததும் எழுந்து ரெடியாகி மிருதுளா ஒன்பது கஜம் புடவை கட்டிக்கொண்டு மண்டபம் சென்றனர். அங்கே போனால் எவரையுமே காணவில்லை மேடையில் சாஸ்த்திரிகள் வேதங்கள் ஓத அதை சொல்லிக்கொண்டிருந்தான் பவின். அவனருகே ஈஸ்வரனும் பர்வதமும் அமர்ந்திருந்தனர். மேடையில் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தார் பிச்சுமணி மாமா. வேறு எவருமே மண்டபத்தில் இருக்கவில்லை. நவீன் மிருதுளா உள்ளே நுழைந்ததைப் பார்த்த பிச்சுமணி மாமா நேராக நவீனிடம் வந்து
“பங்சுவாலிட்டினா அது நீங்க தான் டா. பர்ஃபெக்ட் டைம் ல வந்திருக்கேங்கள்.”
“ஏன் மாமா மத்தவா எல்லாம் எங்கே?”
“யாருமே இன்னும் ரெடி ஆகலைடா..நீங்க ரெண்டு பேரும் மேடைக்கு வாங்கோ”
“இல்லை மாமா நாங்க இங்க கீழயே உட்கார்ந்துக்கறோம்”
“வாடா மேல.”
என்று நவீனையும் மிருதுளாவையும் மேலே அழைத்தார் பிச்சுமணி. அவர்களும் சக்தியைக் கூட்டிக்கொண்டு மேடையில் நின்றனர். அப்போது அதுவரை அங்கெங்குமில்லாத கவின் எங்கிருந்தோ வந்தான். அவன் பின்னால் கஜேஸ்வரி கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுதவாறு வந்து நின்றாள். கொஞ்ச நேரத்தில் அனைவரும் வரத்துவங்கினர். மண்டபம் கல்யாணக் கலைக் கட்டியது. அன்று அந்த கல்யாணத்தில் ப்ரவீனும் துளசியும் தான் அங்கும் இங்குமாக அவர்கள் திருமணத்தில் எப்படி கஜேஸ்வின் நடந்துக் கொண்டார்களோ அதைப் போல பவின் கல்யாணத்தில் இவர்கள் கையே ஓங்கி இருந்ததை கவனித்தனர் நவீனும் மிருதுளாவும்.
ஊஞ்சல் நடைப்பெற்றது. அப்போது சாஸ்த்திரிகள் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுப்பதற்கு முதலில் மாப்பிள்ளையின் தாயாரைக் கூப்பிட்டார். அவர் கொடுத்ததும் பர்வதத்திடம்
“மாமி உங்க மூத்த மாட்டுப் பொண்ணு அப்புறம் அடுத்த மாட்டுப்பொண்ணுன்னு குடுத்துட்டு அப்புறமா உங்காத்துக் காராளை குடுக்கச் சொல்லலாம்”
என்று கூறியதும் பர்வதம் சட்டென திரும்பி
“கஜேஸ்வரி வாத்தியார் சொன்னபடி செய்யுங்கோ ம் ….ம்…”
என்று கூறியதும் மிருதுளா இருக்க கஜேஸ்வரி தயங்கி நின்றாள். நவீனின் அத்தை மிருதுளாவிடம்
“மிருது இதை எல்லாம் விட்டுக் கொடுக்காதே போ”
என்று அவளை முன் தள்ள. வேளு வழியின்றி மிருதுளா சென்று பாலும் பழமும் கொடுத்தாள். அவளுக்குப் பின் கஜேஸ்வரி சென்றாள். அவள் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே பவின் பர்வதத்திடம்
“அம்மா துளசியும் ப்ரவீனும் எங்கே? துளசியை வரச்சொல்லு”
என்று கூறினான். அதைக் கேட்டதும் வேகவேகமாக வேண்டா வெறுப்பாக கொடுத்துவிட்டு மிருதுளா பின் சென்று நின்றாள் கஜேஸ்வரி. பின் அனைவரும் துளசி துளசி என்று அழைத்தப் பின் வந்தாள் மஹாராணி. வந்து அவள் பாலும் பழமும் கொடுத்தப் பின்பு மற்ற அனைவரும் கொடுத்தனர். அப்போது கஜேஸ்வரி மெல்ல மிருதுளாவிடம்
“மன்னி பார்த்தேளா? இப்போ இங்க எல்லாமே ப்ரவீனும் துளசியும் தான். அவா வச்சது தான் சட்டம். இங்க இந்த சடங்கிருக்குன்னு அவளுக்கு தெரியாதா அப்போ இங்கே இருந்திருக்கணுமா இல்லையா!! பெரிய இவ மாதிரி உள்ள இருந்துண்டு எப்படி கூப்பிட வைக்கறா பாருங்கோ. இந்த பவினும் துளசி துளசின்னுட்டு சகிக்கலை. ஏன் அவனுக்கு நம்ம ரெண்டு பேரையும் பார்த்தா மன்னிகளா தெரியலையா என்ன!!! பாரப்போம் பார்ப்போம் எல்லாம் எத்தனை நாள்ன்னு!! பவித்ரா வரட்டும் அப்புறம் உண்டு இந்த துளசிக்கு”
“சரி சரி விடு கஜேஸ்வரி!!”
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல நவீனுக்கும் மிருதுளாவுக்கும் கஜேஸ்வின் செய்தது இப்போது அவர்களுக்கே திரும்பியுள்ளது. அன்று நவீன் மிருதுளா அதைப் பற்றி எவரிடமும் மூச்சு விடவில்லை ஆனால் இன்றோ கஜேஸ்வின் அதை பெரிய விஷயமாக மாற்றி எல்லாவற்றிற்கும் பிரச்சினையை கிளப்பிக்கொண்டே இருந்தனர்.
கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. கஜேஸ்வரியும் துளசியும் ஒன்பது கஜத்தை மாற்றிவிட்டு சுடிதாரில் வந்தனர். மிருதுளாவும் பையில் சுடிதார் எடுத்து வந்துள்ளாள் ஆனால் மாற்றுவதற்கு இடமில்லாமல் நின்றிருந்தாள் அப்போது கஜேஸ்வரியை அழைத்து
“கஜேஸ்வரி நானும் ட்ரெஸ் மாத்தனும். நம்மாத்து ரூம் எங்கருக்குன்னு சொல்லறையா”
“ரூம் அங்கிருக்கு மன்னி ஆனா அதைப் பூட்டிட்டு சாவியை எடுத்துண்டு இப்போ தான் எங்கயோ போனா அந்த துளசி. நீங்க அவகிட்ட தான் சாவியை கேட்டு வாங்கிக்கணும்.”
“அப்படியா. சரி. இங்கே காமென் பாத்ரூம் எங்கிருக்கு?”
“அதோ அந்த ஹான்ட் வாஷ் இடத்துக்குப் பக்கத்துல இருக்கு”
“சரி இரு நான் போய் புடவையை மாத்திண்டு வந்துடறேன்”
என்று அங்கு நவீனுடன் சென்றுப் பார்த்தாள் மிருதுளா ஆனால் அந்த இடம் மிகவும் மோசமாக இருந்ததால் அங்கிருந்து வந்தனர். மிருதுளா ஒரு ட்ரெஸ் மாத்த இடமில்லாமல் தவிப்பதைப் பார்த்த நவீன்
“ஏய் மிருது வா பேசாம ரூமுக்கே போய் மாத்திண்டு வந்திடுவோம்.”
“என்ன நவீன் இப்போ போனோம்ன்னா ட்ராஃபிக் ஜாஸ்த்தியா இருக்கும் போறதுக்கு ஒரு மணி நேரம் வர்றதுக்கு ஒரு மணி நேரமாகிடுமே. சாப்டுட்டு கிளம்பி போனோம்னா அப்புறம் சாயந்தரம் நலங்குக்கு வந்தா போதும்னு பார்த்தேன் இல்லாட்டி இப்போ ஒரு தடவை அப்புறம் ஒரு தடவைன்னு அலையணும். டைம் தான் வேஸ்ட்டாகும். ஒரு யூஸும் இருக்காது”
“ம்…அதுவும் சரிதான் சரி இரு எங்க அப்பா சைடு ஆளுகளுக்கு ரூம் குடுத்திருப்பா இல்ல அவாகிட்ட கேட்டுப் பார்க்கறேன்”
என்று தங்கள் வீட்டுக் கல்யாணத்துலேயே தங்களுக்கு உடை மாற்றக் கூட இடமில்லாமல் தவித்தனர் நவீனும் மிருதுளாவும். அப்போது நவீனின் பெரியப்பா மகன் தங்கள் ரூம் சாவியை குடுக்க வேகமாக சென்று உடையை மாற்றிக் கொண்டு வந்தனர் மூவரும். வெளியே வந்ததும் கஜேஸ்வரி
“அண்ணா மன்னி உங்களுக்கு சீர் செய்ய பொண்ணாத்த கூப்பிடறா. சீக்கிரம் வாங்கோ”
என்றழைக்க அதற்கு நவீன்
“ஆமாம் துணி மாத்தக் கூட ஒரு நல்ல ரெஸ்ட்ரூம் கூட இல்லையாம். இதுல சீராம் சீர்”
என்று முனுமுனுக்க அதற்கு கஜேஸ்வரி
“என்ன சொன்னேங்கள் அண்ணா?”
“அது ஒண்ணுமில்லை கஜேஸ்வரி நீ போ இதோ வந்துடறோம். ஏன் நவீ நீங்க சொன்னது மட்டும் அவ காதுல விழுந்திருந்தா!!! அவ்வளவு தான் அதை வச்சே இங்க ஒரு பெரிய பிரச்சினையை கிளப்பி விட்டிருப்பா…கொஞ்சம் பேசாம வாங்கோளேன் ப்ளீஸ்.”
என்று கூறிக் கொண்டே மூவருமாக மேடையிலிருந்த பவித்ராவின் குடும்பத்தினர் அளித்த சீரை வாங்கிக் கொண்டு கீழே வந்து அமர்ந்தனர். அப்போது கஜேஸ்வரி வேகமாக அவர்களிடம் வந்து
“உங்களுக்கு என்ன குடுத்திருக்கா மன்னி? காட்டுங்கோ”
என்று கேட்டு வாங்கிப் பார்த்து விட்டு
“இதே தான் எங்களுக்கும் தந்திருக்கா. இது நல்லாவா இருக்கு? இன்னும் கொஞ்சம் நல்லதா எடுத்திருக்கலாம். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா மன்னி….பவின் பவித்ராவோட நிச்சயதார்த்ததுக்கு புடவையை நாங்க எடுத்துக்கறோம்… பணம் மட்டும் நீங்க தந்தா போறும்ன்னு பவித்ராவோட அப்பா சொல்ல அதுக்கு பவினும் சரின்னு மண்டைய ஆட்டினான். அவாளும் புடவையை எடுத்துட்டு நிச்சயதார்த்தத்தப்போ எல்லாம் முடிந்ததும் புடவை பில்லை கவின் கிட்ட நீட்டிப் பணத்தைக் கேட்டார் பவித்ரா பெரியப்பா. கவினும் ஒரு ஆயிரம் இரண்டாயிரத்துக்குள்ள இருக்கும் தானே குடுத்துடலாம்னு பார்த்தா அதில் பத்தாயிரம்னு இருந்தது மன்னி. அதை அப்படியே மாமாகிட்ட கொடுத்து பணத்தைக் குடுக்கச் சொன்னார் கவின். அதுக்கு மாமி வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சாளே பார்க்கணும். ஆனா அதை எதையுமே சட்டைப் பண்ணாத பவின் ரூபாய் பத்தாயிரத்தை எடுத்து அவாகிட்ட குடுத்துட்டு மாமியையும் வாயை மூடிண்டு இருக்கச் சொல்லிட்டான். உங்க நிச்சயத்துக்கு என்ன ஒரு இருநூறு ரூபாய்க்கும் என் நிச்சயத்துக்கு ஒரு ஐநூறு ரூபாய்க்கும் தானே புடவை எடுத்தா? இது எந்த விதத்துல நியாயம் மன்னி. நம்மாத்துக் காராளும் அவா அவா சம்பாத்தியத்துல தானே கல்யாணம் பண்ணிண்டா!!! மாமா மாமியா செலவு செஞ்சா?”
“விடு கஜேஸ்வரி என் கல்யாணம் அப்போ இருநூறு இப்போத்த பத்தாயிரத்துக்கு சமம்மா. சரி அப்போ உனக்கு ஐநூறுக்கு எடுத்தாளே ….எடுத்தாளே என்ன நான் தான் எடுத்தேன் அறநூறு ரூபாய்க்கு ..அப்போ என்ன நான் கேள்வி கேட்டேனா. ஏன்னா விலைவாசி ஏறிண்டே போறதுமா. எங்க கல்யாணம் முடிஞ்சு என்ன மூணு வருஷம் கழிச்சு உங்க கல்யாணம் நடந்தது. அப்போத்த விலை வாசிக்கு அறுநூறு இப்போ அதுவே பத்து வருஷத்துல பல மடங்காயிருக்கு அவ்வளவு தான்.”
“என்னமோ மன்னி எனக்கு இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமே இல்லை. அவளுக்கு பத்தாயிரம்னா நம்ம எல்லாருக்கும் பத்தாயிரத்துக்கு எடுக்கணும் அவ்வளவு தான்”
“அதையும் அவாளா எடுக்கப் போறா? நம்ம ஆத்துக் காரா தானே எடுக்கணும். கவினை எடுக்கச் சொல்லு. உடுத்திக்கோ. எனக்கு இப்படி எல்லாம் ஒரு யோசனைக் கூட வரலை கஜேஸ்வரி”
“சரி சரி மன்னி வாங்கோ நாம சும்மா அங்கேயும் இங்கேயுமா மேடையிலே இரண்டு தடவை கீழே ரெண்டு தடவைன்னு நடந்துட்டு வருவோம்.”
“என்னத்துக்கு சும்மா நடக்கணும்?”
“மன்னி அப்போ தான் பார்க்கறவாளுக்கு நாம ஏதோ பிஸியா வேலை செய்யறா மாதிரி இருக்கும் வாங்கோ வாங்கோ…அப்புறம் நாளபின்ன யாரும் நாம ஒண்ணும் செய்யலைன்னு சொல்ல முடியாதில்லையா அதுக்குத் தான்.”
“அம்மா தாயே ஏதாவது வேலையிருந்தா தான் நான் வருவேன் இல்லாட்டி என்னால எல்லாம் அப்படி ஆக்டெல்லாம் பண்ண முடியாதும்மா”
“சரி நீங்க வரலைன்னா போங்கோ நான் போயிட்டு வரேன்”
என்று நடகத்தை வழக்கம் போல அறங்கேற்றினாள் கஜேஸ்வரி. அதைப் பார்த்த மிருதுளா நவீனிடம்
“என்னமா நடிக்கறா பா!!! ஏதோ எல்லாமே அவ தலைமேல தான்ங்கறா மாதிரியும் அங்கே பாருங்கோளேன்”
“அதெல்லாம் உனக்கு சுட்டுப் போட்டாலும் வராது மிருது. அதெல்லாம் சின்னதுலேந்து எல்லாத்தையும் பார்த்து வளர்ந்த டிக்கெட் அதுனால அவ இதுவும் செய்வள் இதுக்கு மேலேயும் செய்வள்”
மத்திய உணவருந்தியதும் ஹோட்டல் ரூமுக்குச் சென்று சற்று நேரம் உறங்கிவிட்டு மாலை நலங்குக்கு தயாராகி வந்தனர். வழக்கம் போல் அங்கு எவருமே இருக்கவில்லை. இவர்கள் சென்று அங்கிருந்த சில சொந்தங்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். நலங்கு துவங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. அப்போது அருகே இருக்கும் பெண் வீட்டிற்கு காரில் தம்பதிகளை பாலும் பழமும் குடுக்க அழைத்துச் செல்ல வேண்டுமென்றும் அதற்காக மாப்பிள்ளை வீட்டிலிருந்து யாராவது ஒரு தம்பதி வரவேண்டுமென்றும் கூற அங்கே ஒவருமே (ஈஸ்வரன் குடும்பத்தினர்) இல்லாமல் போக உடனே பவித்ராவின் பெரியப்பா நவீனைக் காட்டி இதோ மாப்பிள்ளையின் மூத்த அண்ணனும் மன்னியும் இருக்கிறார்களே என்று கூறி அவர்களை அழைக்க அப்போது பவின் குறுக்கிட்டு
“இல்லை இல்லை இருங்கோ ப்ரவீனுக்கும் துளசிக்கும் சொல்லி அனுப்பிருக்கேன் இதோ வந்துடுவா”
என்று கூறியதும் நவீனுக்கு கோபம் வந்து மிருதுளாவைப் பார்த்தான். சரி சரி என்று அவன் கையை வருடிக் கொடுத்து சமாதானமாக இருக்கச் சொன்னாள். அங்கே நவீனும் மிருதுளாவும் ஹோட்டலுக்கு சென்ற சமயத்தில் ப்ரவீனுக்கும் கவினுக்கும் ஏதோ வாக்குவாதமாகி அவர்கள் நலங்கு முழுவதும் உர் என்று இருந்தனர். ப்ரவீனும் துளசியும் வராததால் பவின் நவீனிடம் சென்று வரச் சொன்னான். அப்போது நவீன்
“ஏன் உன் அண்ணனும் மன்னியும் வரலையா?”
என்று கேட்டதும் மிருதுளா குறிக்கிட்டு
“சரி இப்போ என்ன நாங்க ரெண்டு பேரும் வரணும் அவ்வளவு தானே. வரோம்”
என்று கூறி பவினை அனுப்பிவிட்டு நவீனிடம்
“இது கேள்விக் கேட்குற நேரமில்லை நவீ. வாங்கோ பவித்ரா பெரியப்பா பெரியவர் கூப்பிட்ட மரியாதைக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடுவோம்”
“ஏன் உன் மச்சினன் சொன்னது கேட்கலையோ”
“அவா குணம் தான் நமக்கு நல்லா தெரிஞ்சது தானே நவீ. பவித்ரா வீடு கிட்டக்க தானாம் போயிட்டு வந்துடலாம் வாங்கோ அதோ அவா கூப்பிடறா”
என்று நவீனை சமாதானப் படுத்தி தானும் சமாதானத்தையே விரும்பிச் சென்றாள் மிருதுளா.
பவின், பவித்ரா, மிருதுளா, நவீன் ஒரு காரில் ஏறிக் கொண்டனர். காரும் புறப்பட்டது. அப்போது மிருதுளா முதல் முறையாக பவித்ராவிடம்
“ஹாய் பவித்ரா.”
என்றாள். அதற்கு பவித்ரா ஏதும் தெரியாதது போல
“ஹாய். நீங்க பவினுக்கு என்ன வேணும்”
“நாங்க பவினோட அண்ணா மன்னி”
“அப்படியா!!!! எனக்கு தெரிந்ததெல்லாம் ரெண்டு மன்னிகளைத்தான்”
என்று திமிராக பதிலளிக்க உடனே முன் சீட்டில் அமர்ந்திருந்த நவீன் மிருதுளாவைப் பார்த்து தன் கண்களாலேயே “இதெல்லாம் உனக்கு தேவையா” என்று கேட்டு விட்டு நடந்தது எதுவுமே காதில் விழாததுப் போல ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த பவினையும் பார்த்துவிட்டு திரும்பி உட்கார்ந்தான்.
அதற்கு பின் மிருதுளா பவித்ராவிடம் ஏதும் பேசவில்லை. சற்று நேரத்தில் பவித்ரா வீட்டு வாசலில் நின்றது கார்.
அனைவரும் இறங்கினர். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கே பவின் பவித்ராவுக்கு பாலும் பழமும் கொடுத்தப் பின் நவீனையும் மிருதுளாவையும் உட்கார வைத்து தாம்பூலம் கொடுத்தனர். பின் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அங்கிருந்து மீண்டும் காரில் மண்டபம் வந்திறங்கினர். உடனே நவீனும் மிருதுளாவும் ஊருக்கு கிளம்புவதாக பவினிடம் கூறினர். அதைக் கேட்டுக் கொண்டிருந்த பர்வதம்
“துளசி துளசி அந்த பையை எடுத்துண்டு வந்து இவா கிட்ட குடு”
என்று கூறியும் துளசி வரவில்லை. அதற்காக எல்லாம் நிற்காமல் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்…..அப்போது துளசி பின்னாலிருந்து அழைத்து ஒரு பையை கொடுத்து
“மன்னி இதுல பவின் கல்யாண பட்சணங்கள் இருக்கு அன்ட் உங்களுக்கும் அண்ணாவுக்கும் எடுத்த டிரெஸிருக்கு. வாங்கிக்கோங்கோ”
“இல்லமா துளசி நாங்க இதுக்காக வரலை பரவாயில்லை. நாங்க வரோம்.”
“இல்ல மன்னி இது எல்லாருக்கும் குடுகுற தாம்பூலம் தானே இதை போய் வேண்டாம்னு சொல்லறேங்களே”
“ம்….சரி குடு. நாங்க வரோம்”
என்று மூணாம் மனிதர்களைப் போல வந்திருந்து வாழ்த்திவிட்டு அங்கிருந்து கிளம்பி ஹோட்டலை காலி செய்து பம்பாய் சென்றனர்.
இயற்கையே மனிதனின் செயல்களைக் கண்டு சீற்றம் கொள்ளும் போது….மிருதுளா மட்டும் எப்படி என்றுமே தென்றலாய் வீசிக்கொண்டே இருக்க முடியும்!!!! அவள் புயலாக சற்று நேரம் புரட்டி எடுத்தாலும் மீண்டும் அவளின் இயல்பான தென்றல் குணம் அவளை குடும்பத்துக்காக இறங்கி வரச் செய்தது.
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்பார்கள். அது நவீன் மிருதுளா வாழ்வில் சரியாக தான் இருக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு. அது நவீன் மிருதுளா விஷயத்தில் எது என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.
தொடரும்……