அத்தியாயம் – 9 புதுப்பெண்

திருமணம் முடிந்த மறுநாள் அனைவரும் மண்டபத்தைக் காலி செய்ய வேண்டியிருந்ததால் கிளம்பிக்கொண்டிருந்தனர். அன்று காலை ஒன்பது மணிக்கு டைரெக்ட்டாக சாப்பாடு பரிமாறப்பட்டது. கட்டு சாத கூடைகள், அங்குமணி சீர்கள், சீர் பக்ஷ்ணங்கள் என திருமண காண்ட்ராக்ட் காரர்கள் அனைத்தையும் பக்காவாக பேக் செய்து மண்டப மேடை அருகே வைத்து அம்புஜத்திடம்…

மாமி எல்லாம் ரெடி நீங்க ஆர்டர் கொடுத்த அனைத்தும் தயார். ஒரு தடவ சரி பார்த்துக்கோங்கோ. 7 சுத்து முறுக்கு , முத்துச்சரம், அதிரசம், மைசூர்பாக், லட்டு எல்லாத்துலயும் 101 மாப்பிள்ளை ஆத்துக்கும் 51 உங்க ஆத்துக்கும் னு தனித்தனியா பேக் பண்ணிருக்கோம். மஞ்சள் நிற டப்பாக்கள் எல்லாம் மாப்பிள்ளை ஆத்துக்கு பச்சை நிற டப்பா எல்லாம் பொன்னாத்துக்கு. அங்குமணி சீர் பேக் அந்த ரெண்டு பெரிய பிளாஸ்டிக் ஃபாக்ஸ் ல இருக்கு. கட்டு சாதக்கூடை  இதோ இந்த அஞ்சு ஆரஞ்சு பக்கெட்டில் இருக்கே இது மாப்பிள்ளை ஆத்துக்கு அதே மாதிரி அஞ்சு பச்சை பக்கெட்டில் இருக்கறது உங்களுக்கு. அதுல பொடி தடவிய இட்டிலி, புளியோதரை, தயிர் சாதம், ஊறுகாய் னு அஞ்சு ஐட்டம் பேக் செய்திருக்கோம். எல்லாம் ஓகே வா மாமி?” 

ரொம்ப சந்தோஷம் எல்லாம் சூப்பரா நடத்திக்கொடுத்தேள். தாங்க்ஸ்

பின் அம்புஜம் பர்வதத்தை அழைத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து சாமான்களையும் காண்பித்து எடுத்து வேனில் வைக்க சொல்லலாமா என்று கேட்க பர்வதம் சரி என்று தலை அசைக்க அனைத்தும் நவீன் வீட்டார் வேனில் ஏற்றப்பட்டது. பாக்கி டப்பாக்கள் பெண்வீட்டார் வேனில் ஏற்றினார்கள்.

 இது ஒருபுறம் நடந்துக்கொண்டிருந்தது. 

கட்டு சாத கூடை என்பது மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திலிருந்து அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் அன்று மத்திய உணவை சமைத்து உண்ண வேண்டிய கஷ்ட்டத்தை குறைப்பதற்காக ஏற்படுத்துப்பட்டது. அங்குமணி சீர் என்பது புது மண தம்பதியினர் புது வாழ்க்கை ஆரம்பிக்க ஒரு மாதத்திற்கு வேண்டிய அனைத்து மளிகை சாமான்களும் பெண்ணின் பெற்றோர் வழங்குவது. 

ராமானுஜம் பணம் செட்டில்மென்ட் செய்துக்கொண்டிருந்தார். வேனு அனைத்து சீர் பாத்திரங்கள் அழகாக அடுக்கி வைத்ததை எல்லாம் எடுத்து  அட்டைப்பெட்டிகளில் மறுபடியும் அடுக்கி அதை நவீன் வீட்டார் வேனில் வைத்தான். அதோடு தனது அக்காவின் 4 சூட்கேஸ்களையும் ஏற்றி வைத்தான். பின் அவர்களின் சூட்கேஸ்களை அவர்கள் வண்டியில் வைத்தான். இப்படி ஒவ்வொரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர். நவீனும் மிருதுளாவும் மண்டபத்தின் நடுவில் சொந்த பந்தங்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அனைத்தும் பேக் செய்து அவரவர் வண்டியில் ஏற்றப்பட்ட பின் எல்லாரையும் ஒன்றாக அமரச் செய்து அனைவருக்கும் திருஷ்டி பூசணிக்காய் சுற்றினார்கள் மண்டபத்துக்காரர்கள். 

எல்லாம் சுபமாக நிறைவேறியது என்ற திருப்தியில் அவரவர் வண்டியில் ஏறி மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றனர். அங்கு அம்பிகா உள்ளிருந்து ஆரத்தி தட்டு எடுத்து வந்து புது தம்பதியருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாள். நவீனும் மிருதுளாவும் உள்ளே சென்றனர். பின் அனைவருமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மிருதுளாவின் பெற்றோர் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் நவீனிடமும் நவீன் வீட்டாரிடமும் விடைப்பெற்றுக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். மிருதுளாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு சமத்தா பொறுமையா இருக்கனும் என அம்புஜம் கூற மிருதுளா கண்களில் கண்ணீர் பெருக அதை டக்கென்று துடைத்துக்கொண்டாள். 

அனைவரும் சென்றபின் மிருதுளாவிற்கு என்ன செய்ய வேண்டுமென்று ஒன்றுமே புரியாமல் நின்றுக்கொண்டிருந்ததைப்பார்த்து பர்வதம் 

என்ன சும்மா நின்னுண்டிருக்க போய் டிரஸை மாத்திட்டு வா” 

என்று சொல்ல உடனே மேலே மாடிக்குச்சென்று பட்டுப்புடவையை கழற்றிவிட்டு ஒரு சல்வாரை போட்டுக்கொண்டு கீழே வந்தவளைப் பார்த்து பர்வதம் ..

இது என்ன இப்படி வந்திருக்க இந்த மாதிரி எல்லாம் டிரஸ் போட்டுண்டா அப்பாவுக்கு பிடிக்காது சத்தம் போடுவார். போ ..போய் ..ஒரு புடவையை கட்டிண்டு வா.என கூற

மிருதுளாவும் மறுபடியும் போய் புடைவையை கட்டிக்கொண்டு கழற்றி போட்ட பட்டுப்புடவையையும் சல்வாரையும் மடித்துக்கொண்டிருக்கையிலே கீழிருந்து பர்வதம் சத்தமாக அக்கம் பக்கத்தினருக்கு கேட்கும்படி

ஏய் மிருதுளா என்ன இவ்வளவு நேரமா மாடில பண்ணர? ஒரு புடவை மாற்ற தானே போன அதுக்கு இவ்வளவு நேரமா. சீக்கிரம் கீழே வாஎன்றாள்

மிருதுளாவும் கீழே இறங்கி வந்தாள். இதை அனைத்தையும் பார்த்த வண்ணம் இருந்தனர் ஈஸ்வரன் நவீன் மற்றும் அவன் தம்பிகள். ஒருவர் கூட ஏன் அவ்வாறு பர்வதம் கத்தி கூப்பிட்டாள் என அவளை கேட்கவில்லை. அனைவரும் மத்திய உணவு உண்ண அமர்ந்தார்கள். அப்பொழுது பர்வத்தின் அக்கா ரமணி மிருதுளாவிடம்…

மிருது நீயும் நவீனோடயே உட்கார்ந்துக்கோ நாங்க பார்த்துக்கறோம்என்று சொல்ல அதை கேட்டுக்கொண்டே உடைமாற்ற சென்ற பர்வதம் வந்து.

பரவாயில்லை மிருதுளா பரிமாறுவாள் நீங்க எல்லாரும் உட்காருங்கோஎன்றதும் அம்பிகா குறிக்கிட்டு

அக்கா அவ இப்பதான் நம்ம ஆத்துக்கு வந்திருக்கா பரவாயில்லை அவள் நவீனுடன் சாப்பிட உட்காரட்டும் நான் பரிமாறரேன். நீங்களும் வேனும்னா உட்காருங்கோஎன்று கூறுவதோடு நிற்காமல் மிருதுளாவை பிடித்து அமர வைத்தாள். அனைவரும் கட்டு சாத கூடையில் வந்ததை பலே பேஷ் என்று சாப்பிட்டனர். அனைவரும் மிருதுளாவிடம் அவள் பெற்றோர் சூப்பராக திருமணம் செய்து வைத்தார்கள் என்றும் கட்டு சாத கூடை ஐட்டம்ஸ் வரை எல்லாமுமே நன்றாக ருசிகரமாக இருந்தது எனவும் பாராட்டினர். இதை பிடிக்காத பர்வதம் அம்பிகாவிடம் …

கட்டு சாத கூடை சாப்பாடு பத்தாதோ!! இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுத்திருக்கலாம் உங்க அப்பா அம்மா மிருதுளாஎன்றாள் 

அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். உடனே ஈஸ்வரன்

என்ன பேசர நீ. இவ்வளோ சாப்பாடு கொடுத்தனுப்பிருக்கா. பத்தாதூங்கறாய். உனக்கு கண்ணுல ஏதாவது கோளாறாஎன்றதும் அனைவரும் அதுதானே என்று கூறி சிரித்தார்கள். பர்வதத்திற்கு கோவம்  தலைக்கேறியது. ஆனால் காட்டிக்கொள்ளாமல் சமாளித்தாள்.

உணவு உண்ட பின் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர். நவீன் மிருதுளாவை மாடிக்கு வரும்படி அழைக்க அதைப்பார்த்த பர்வதம் மிருதுளாவிடம் …

சாயந்தரம் நம்ம பிள்ளையார் கோவிலுக்கு போய் மாலை சாத்தனும் அதனால நீ இங்கயே இப்படி படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுஎன்றதும் அவளருகே மிருதுளா படுத்ததும் நன்றாக அசந்து தூங்கிப்போனாள். 

மிருதுளாவிற்கு அப்பொழுதுதான் கண் மூடியதுபோல இருந்தது ஆனால் மணி நாலரை ஆனது அனைவரும் கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர். எழுந்ததும் பர்வதம் ..

சீக்கிரம் ஆகட்டும் இப்படியா தூங்குவ!!

சாரி மா இரண்டு நாளா சரியா தூங்கலையா அதுதான் கொஞ்சம் அசந்துட்டேன்என்றாள் மிருதுளா

சரி சரி போய் பட்டுப்புடவை கட்டிண்டு வா. ” 

அனைவரும் கோவிலுக்கு சென்றனர். நவீன் மிருதுளா பெயர்களுக்கு அர்ச்சனை செய்தனர் பின் பர்வதம் மிருதுளாவிற்கு கோவிலைச் சுற்றி காண்பிப்பதாக கூறி தனியாக அழைத்துச்சென்றாள். ஓரிடத்தில் இருவரும் அமர்ந்தார்கள். அப்போது பர்வதம் ஏதோ நவகிரகத்தை வலம் வந்துக்கொண்டிருந்த ஒரு மாமியை காட்டி…

மிருதுளா அந்த மாமிக்கு மூணு பொண்ணுகள்

. அவாளுக்கு நவீனை அவா ரெண்டாவது பொன்னுக்கு கட்டி வைக்கனும்னு ஆசைப்பட்டா தெரியுமா அதுவும் இல்லாம அவா ஆத்த பொன்னுகள் எல்லாரும் சிலிம்மா வெள்ள வெளேர்னு இருப்பா. ஹும் …என்ன பண்ண நவீன் என்னடான்னா உன்ன தான் கட்டிப்பேனுட்டான். சரி வாஎன்று அலுத்துக்கொண்டாள். 

இதைக்கேட்டதும் மிருதுளாவிற்கு கோபம் வந்தது ஆனால் தன் தாயின் அறிவுரை அவள் காதில் ஒலித்தது. ஆகையால் அமைதியாக ஒன்றும் கூறாமல் பர்வததின் பின் சென்றாள்.  நவீனின் சொந்தக்காரர்கள் அனைவரும் அங்கிருந்தே விடைபெற நவீன் குடும்பத்தினர் மட்டும் கோவிலில் இருந்து வீடு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் அனைவரும் மீண்டும் உடைகளை மாற்றினர். மிருதுளாவும் பட்டுப்புடவையை மாற்றி ஒரு சாதாரணப் புடவையை கட்டிக்கொண்டு வேகமாக கீழே வந்தாள். 

அவள் வந்ததும் பர்வதம் நவீனை அவன் நண்பன் அழைத்ததாக கூறி அவனை சென்று பார்த்துவரச்சொன்னாள்.  நவீன் மிருதுளாவையும் கூட்டிச்சென்று வருவதாக கூற…

அவ என்னத்துக்கு இங்க கொஞ்சம் அவளுக்கு வேலை இருக்கு நீ மட்டும் போயிட்டு வாஎன நவீனை வெளிய அனுப்பியதும் மிருதுளாவைப்பார்த்து

இன்னைக்கு நைட்டுக்கு சாதம் வச்சுட்டேன் நீ ஒரு ரசம் பண்ணி அப்படியே உருளைக்கிழங்கு பொரியல் பண்ணி வை இதோ நான் வரேன்என்று கூறி வாசலுக்குச் சென்று அக்கம்பக்கத்து வீட்டுப்பெண்களுடன் அரட்டையில் மூழ்கினாள். 

முதல் நாளே சமையல் கட்டில் எங்கே எது இருக்கிறது என்று கூட தெரியாது உள்ளே நுழைந்தாள் மிருதுளா. மெதுவாக ஒவ்வொரு டப்பாவாக திறந்து திறந்து பார்த்து எதுஎது எங்கெங்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துக்கொண்டபின் சமையலில் இறங்கினாள். மாமியார் வைத்துவிட்டுப்போன குக்கரை அடுப்பிலிருந்து எடுத்து மேடையின் ஓரமாக வைத்துவிட்டு ரசம் செய்ய ஆரம்பித்தாள். ரசத்துக்கு வேண்டியதை எல்லாம் போட்டு சட்டியை அடுப்பில் வைத்துவிட்டு உருளைக்கிழங்கை நறுக்க தொடங்கினாள் அப்பொழுது கவின் வந்து 

மன்னி எனக்கு உருளை ரொம்ப ரோஸ்ட் ஆனா பிடிக்காது ஸோ பார்த்துப்பண்ணுங்கோஎன்றான்

அவன் பின்னாடியே ஈஸ்வரன் வந்துநீ நல்லா உருளை ரோஸ்ட் பண்ணுமா எனக்கு அது தான் பிடிக்கும்என்றார். 

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி கேட்கவும் மிருதுளாவிற்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது ஆனாலும் அவள் இரண்டும் செய்தாள். ரசம், உருளை பொரியல், உருளை ரோஸ்ட், அப்பளம் என அனைத்தையும் ஒரே சட்டி உபயோகித்து அறைமணி நேரத்தில் செய்து மேடையின் மூலையில் மூடி வைத்துவிட்டு அடுப்படியை சமைத்தது போலவே தெரியாதவாறு சுத்தம் செய்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்து ஈஸ்வரன் டீவியில் பார்த்துக்கொண்டிருந்த நியூஸை பார்க்கலானாள். ஒரு மணிநேரம் கழித்து நவீன் வீட்டினுள்என்ன இன்னைக்கு நம்ம ஆத்துல ரசம் வாசம் வாசல் வரைக்கும் வீசறது. என்ன அப்படி செபெஷல் ரசம் பண்ணிருக்கா அம்மாஎன்று கூறிக்கொண்டே நுழைந்தான்.  பின்னாடியே கேட்டுக்கொண்டே வந்த பர்வதம்.எனக்கு ஒன்னும் அப்படி வாசம் வரலையேஎன சொல்லிக்கொண்டே நுழைந்தாள். 

மாலை உணவை மிருதுளாதான் செய்தாள் என ஈஸ்வரன் நவீனிடம் சொல்ல பர்வதம் ஈஸ்வரனை முறைத்தாள்.  அனைவரும் இரவு உணவருந்த அமர்ந்தனர். உணவு மிக அருமையாக இருந்ததை அனைவரும் பாராட்டினர் ஆனால் கவின் 

இந்த உருளையை இன்னும் கொஞ்சம் கூட சாஃப்ட்டா செய்திருக்கலாம்என்றான்

ரசத்துல உப்பு ஜாஸ்தியா இருக்கு எல்லாரும் எப்படி சாப்படரேங்கள்என்றாள் பர்வதம்

உடனே பதற்றம் ஆனா மிருதுளா ..

அச்சச்சோ சாரி மா.என்றதும் நவீன் குறுக்கிட்டு

நோ நோ இட் ஈஸ் சூப்பர். அம்மா உனக்கு மட்டும் எப்படிமா உப்பு ஜாஸ்தியா இருக்கும்?” என்றதும் மிருதுளாவிற்கு அப்பாடா என்றிருந்தது.

அனைவரும் சாப்பிட்ட பின்னர் அனைத்துப்பாத்திரங்களையும் தேய்த்து வைத்தாள் மிருதுளா‌. அனைவரும் பாயை விரித்து படுக்கலானார்கள் வேலைகளை முடித்ததும் மாடிக்கு செல்லலாமா இல்லை பர்வதம் ஏதாவது சொல்லி கூப்பிடுவாளா என்ற எண்ணத்தில் தயங்கி ஹாலில் நின்றிருந்தாள். நவீனாவது அவளை கூப்பிட்டிருக்க வேண்டும் ஆனால் அவன் பாட்டுக்கு மாடிக்கு சென்றுவிட்டான். கீழே இவர்களும் அவரவர்கள் உறங்க ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தனர். மிருதுளா எனும் ஒரு பெண் அங்கு இருந்ததையே கண்டுக்கொள்ளாதது போல அனைவரும் நடந்துக்கொண்டார்கள். சிறிது நேரம் நின்றுப்பார்த்த மிருதுளா மெல்ல அங்கிருந்து நகர்ந்து மாடிக்கு போக முதல் படியில் காலை வைத்ததும் பர்வதம் அழைத்தாள்…மிருதுளா மனதிற்குள்

இவ்வளவு நேரம் அங்க தான் இருந்தேன் அப்பெல்லாம் ஏதோ நான் இருப்பதே கண்ணுக்கு தெரியாதது போல இருந்துட்டு கரெட்டா கூபிடறா ஹும்…என்று நினைத்துக்கொண்டேவந்துட்டேன் மாஎன பர்வதம் முன் நின்றாள் 

நாளைக்கு நவீன் பெரியப்பா ராசாமணி ஆத்துக்கு விருந்துக்கு போகனும் அதனால நல்ல பட்டுப்புடவையா கட்டிண்டு போ சரியா.

சரி மாஎன்றாள் மிருதுளா

சரி சரி போய் தூங்கு காலை ல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கனும் இல்லாட்டி அப்பாவுக்கு பிடிக்காது அப்பறம் சத்தம் போடுவார் சொல்லிட்டேன்என கூறி போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டாள்.

அப்பாட என பெருமூச்சு விட்டுக்கொண்டே மாடிக்கு வேகமாக சென்றாள் மிருதுளா. 

ஒரு நாளில் இவ்வளவு பதற்றம் அடைந்த நம்ம மிருதுளா இனி ஒவ்வொரு நாளும் எப்படி கடக்க போகிறாள் என்பதை வரும் வாரங்களில் தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s