அத்தியாயம் 89: பணமே பாசம்!!

மன பாரத்துடன் ஊரிலிருந்து சென்னைக்கு சென்றனர் நவீனும் மிருதுளாவும்.

நிச்சயதார்த்தம் நடந்த ஹோட்டலில் ரமணி பெரியம்மாவும் பெரியப்பாவும் நவீன் சொன்னது போலவே எவரிடமும் வாயை திறக்கவில்லை. அங்கு வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் நவீன் மிருதுளா வரவில்லையா என்று விசாரிக்க அதற்கு ஈஸ்வரன் குடும்பத்தினர்

“நாங்க சொல்லியாச்சு அவாளுக்கு என்னவோ வேலையிருக்காம் அதனால வரலை. நாங்க என்ன பண்ண?”

என்று கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் கூற அதற்கு ஒரு சொந்தம்

“நவீனுக்கு தானே வேலையிருக்கு உங்க மாட்டுப்பொண் வந்திருக்கலாமே”

என்று கேட்க அதற்கு பர்வதம்

“வந்திருக்கலாம் தான். ஆனா மனசு வேணுமே!!! அது தான் இல்லையே அங்க!!! நாங்க என்ன செய்யறது”

என்று வாய் கூசாமல் பதிலளிக்க. அதைப் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த பெரியம்மா பெரியப்பாவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பெணின் அப்பா ஈஸ்வரனிடம்

“எங்க உங்க பெரிய புள்ளையும் மாட்டுப்பொண்ணையும் காணம்!”

என்று கேட்க அதற்கு ஈஸ்வரன் பதிலளிப்பதற்கு முன் முந்திக்கொண்டு சந்தர்ப்பத்தை தனக்காக்கிக் கொண்டான் கவின்

“அது அப்படி தான். அவன் எப்பவுமே இப்படி தான். குடும்பம்ன்னா அப்படி இப்படி எல்லாம் தானே இருப்பா. அது மாதிரி தான் எங்காத்துல அவனும்”

என்று பெரிய மனுஷன் மாதிரி தன் அண்ணனை அவமானப்படுத்த தனது பெற்றோரால் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் லாவகமாக உபயோகித்துக் கொண்டான் நவீன் கூடப்பிறந்தவன். அதை ஆமோதிக்கும் வண்ணம் ஈஸ்வரனும்

“ஆமாம் நீங்களே பார்த்தேங்களே பொண் பார்க்கக் கூட எங்க கவினும் கஜேஸ்வரியும் தானே வந்தா!! அதே மாதிரி தான் எங்க ப்ரவின் விஷயத்துலேயும் இவா ரெண்டு பேரு தான் எல்லாம்”

என்று மனசாட்சி… என்ன.. மனசே இல்லாத மனிதர்களாக பேசினர் கவினும் ஈஸ்வரனும். ஏனெனில் ப்ரவீன், பவின் இருவருக்கும் பெண் பார்த்து முடித்து நிச்சயதார்த்தம் தேதி முடிவான பின்னரே நவீனுக்கு தெரியப்படுத்தப்பட்டது, பவினின் நிச்சயத்திற்கு வரவிடாமலே செய்தனர், ஆனால் இவர்கள் என்னவோ நவீனை முன்னதாகவே அழைத்ததுப் போலவும் அவர்கள் வராததுப் போலவும் பேசுவதைப் பார்த்தால் இதிகாச சகுனியும் கூனியும் தங்களுக்கு இணையானவர்களோ என்று எண்ணும் அளவிற்கு இருந்தது அவர்களின் பேச்சும் நடிப்பும். இவர்களின் டிராமா எவருக்கும் தெரியாது என்ற மிதப்பில் எல்லோரிடமும் ஒவ்வொரு கதையை அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தனர் ஈஸ்வரன் குடும்பத்தினர். தவறு முழுக்க தங்கள் பக்கம் இருந்தாலும் சாமர்த்தியமாக பழியை நவீன் மிருதுளா மீது போட்டுவிட்டு அதையே பெரிய விஷயமாக அன்று அந்த நிகழ்ச்சி நடந்த ஹோட்டல் முழுவதும் பரப்பிவிட்டனர் பர்வதீஸ்வரனும் அவர்களின் புத்திரர்களும். இதைத் தான் ஒரு பொய்யை பத்து தடவை சொல்லி அதை உண்மையாக்குவது போல!!!!

இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நவீனின் பெரியப்பா எல்லாம் முடிந்தப் பின் ஈஸ்வரன் பர்வதத்திடம்

“நவீனும் மிருதுளாவும் இன்னைக்கு காலையில எங்காத்துக்கு வந்திருந்தா”

“ஓ! அப்படியா!! பாருங்கோ அப்போ இவ்வளவு தூரம் வந்தவாளுக்கு இங்க வர தெரியாம போயிடுத்தாக்கும்?”

“என்ன பேசறேங்கள் நாங்களும் அப்போலேந்து பார்த்துண்டு தான் இருக்கோம். என்னமோ தப்பெல்லாம் அவா மேல தான்னு சொல்லிண்டிருக்கேங்கள்!!! உண்மையிலே என்ன நடந்ததுன்னு எங்களுக்கு தெரியும். அது உங்களுக்கும் நல்லாவே தெரியும் அப்படி இருந்தும் ஏன் இப்படி எல்லாம் பொய் சொல்லிண்டு இருக்கேங்கள்? அந்த புள்ளையும் பொண்ணும் என்ன தப்பு பண்ணினா?”

“உங்களுக்கு என்ன தெரியுமோ தெரியாதோ அது எங்களுக்கு வேண்டாதது. நாங்க அழைச்சோம் அவா வரலை அவ்வளவு தான் விஷயம்”

“நீங்க அழைச்சேங்கள் இல்லைன்னு அவாளும் சொல்லலை ஆனா சரியான தேதியை சொல்லாம ஏன் தப்பான தேதியை சொல்லிருக்கேங்கள்?”

“யாரு தப்பான தேதியை சொன்னாளாம்? ஃபோன் செய்து விசேஷத்துக்கு அழைக்கறவா எதுக்கு தப்பான தேதியை சொல்லணுமாம்!!!”

“போதும் ஈஸ்வரா போதும். நீங்க தான் தப்பான தேதியை சொல்லி அவாளை வரவிடாம செய்துட்டு இப்போ இப்படி பேசறது நல்லாயில்லை…நல்லாவேயில்லை ஆமாம்”

“அப்படி தப்பான தேதியை சொல்லி அவாளை வரவிடாம செய்யறதுக்கு நாங்க அழைக்காமலே இருந்திருப்போமே!!! அது தோனலையா உங்களுக்கு? நாங்க எல்லாம் சரியா சொல்லித் தான் கூப்பிட்டோம் அவாளுக்கு வர இஷ்டமில்லைன்னா அதுக்கு நாங்க ஒண்ணும் பண்ண முடியாது”

“சரி நீங்க சொல்லற படியே எடுத்துண்டாலும் அப்படி வர இஷ்டமில்லாதவான்னா எதுக்கு இன்னைக்கு இந்த ஊருக்கு மும்பாயிலேந்து வரணுமாம்?”

“அதெல்லாம் நீங்க அவன்கிட்ட தான் கேட்கணும் பெரியப்பா. அதை ஏன் எங்க அப்பா அம்மாகிட்ட கேட்கறேங்கள். அதுதான் அவா சாமர்த்தியம். அப்பா நீ வா அவாளுக்கெல்லாம் பணம் செட்டில் பண்ணியாச்சு. நாம நம்ம பொருளெல்லாம் பேக் செய்து இன்னும் ஒன் அவர்ல ஹோட்டலை காலி செய்துக் குடுக்கணும்.”

என்று கூறி தங்கள் திட்டம் தெரிந்தவரிடமிருந்தும் சாமர்த்தியமாக பதிலளித்து நழுவிச் சென்றனர் ஈஸ்வரன் குடும்பத்தினர். மொத்தத்தில் நவீனும் மிருதுளாவும் அவ்வளவு தூரம் வந்துவிட்டுச் சென்றிருக்கிறார்களே!! அவர்கள் வீட்டு விசேஷத்தில் கலந்துக் கொள்ளவில்லையே என்ற எண்ணம் நவீன் குடும்பத்தினர் எவரிடமும் இல்லை.

அவர்கள் இருவரும் வரக்கூடாதென்று… காழ்ப்புணர்ச்சியில் கவினும் கஜேஸ்வரியும் இயக்கிய நாடகத்தில் சிறப்பாக பங்கேற்று தங்களின் வீண் கோபத்தையும் தீர்த்துக் கொண்டனர் பர்வதீஸ்வரன் தம்பதியர்.

ப்ரவீனின் திருமணத்தில் ஒரு விதமான நாடகம் நடத்தி சொந்தபந்தங்களிடம் நவீனும் மிருதுளாவும் எதுவுமே செய்யவில்லை எல்லாமும் இங்கே நாங்கள் தான் என்று பறைசாற்றிய கவினும் கஜேஸ்வரியும் இப்போது பவினின் திருமணத்தில் புது நாடகத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் பவினின் அண்ணனும் மன்னியும் அவன் நிச்சயத்தார்த்தத்துக்கு வரமறுத்துள்ளனர் என்றும் அதற்கு மிருதுளா தான் காரணம் என்றும் அவனிடம் ஓதப்பட்டு அவனுக்கு நவீன் மீதும் மிருதுளா மீதும் கோபத்தை உசுப்பேற்றி உருவேற்றினர் பர்வதீஸ்வரனும், கஜேஸ்வினும். கஜேஸ்வின் செய்வதே தவறு இதில் இந்த பர்வதீஸ்வரன் அவர்களுடன் சேர்ந்து இப்படி பிள்ளைகளுக்குள்ளே பிரச்சினையையும் பிரிவினையையும் வரவழைப்பது என்பது முட்டாள்தனமானது.

கஜேஸ்வின்க்கு அந்த குடும்பத்தின் கன்ட்ரோல் தங்கள் கையில் தான் இருக்க வேண்டுமென்பதற்காக இத்தனையும் செய்கிறார்கள். அதற்கு ஒரே தடை தங்களுக்கு மூத்தவர்களான நவீனும் மிருதுளாவும் தான் ஆகையால் அவர்களை பர்வதீஸ்வரனுடன் சேர்ந்து அவர்களை வைத்தே மிகவும் அற்புதமாக காய்களை நகற்றி தங்களின் தடையை அகற்றி வருகின்றனர்.

இவை எதுவுமே தெரியாத நவீனும் மிருதுளாவும் சென்னையில் நிமம்தியாக மூன்று நாட்கள் இருந்து விட்டு பம்பாய் சென்றனர். மிருதுளா நவீனிடம்

“நவீ நான் ஒண்ணு சொல்லுவேன் கோபப்படக்கூடாது”

“என்ன மிருது?”

“நாம உங்காத்துக்கு ஃபோன் போட்டு ஏன் அப்படி செஞ்சான்னு கேட்க வேண்டாமா?”

“நீ ஏன் இப்படி இருக்க மிருது? சரி அவா யாராவது நமக்கு ஃபோன் செஞ்சு நாம ஏன் வரலைன்னு கேட்டாளா?”

“இல்லை.”

“அப்புறம் நாம ஏன் கேட்கணும்?”

“எனக்கு என்னவோ தோணித்து. இதுல யாரோ நமக்குள்ள விளையாடறா மாதிரி இருக்கு நவீ”

“யாரு வேணும்னாலும் விளையாடிக்கட்டும் மிருது. நம்ம லைஃப்பை நாம நிம்மதியாவும் சந்தோஷமாவும் வாழ்ந்துட்டு போவோம். அவாளையும் இவாளையும் பத்தி எல்லாம் யோசிக்கவே வேண்டாம். இனி எவாளுமில்லை அதை நன்னா மனசுல ஏத்திக்கோ. நம்ம சொந்தங்கள் யாராவது ஏதாவது விசேஷத்துக்கு கூப்பிட்டா அதை சரிப் பார்த்துக் கொண்டபின் போயிட்டு வருவோம் அவ்வளவு தான்”

“ம்….ஓகே நவீ”

சில நாட்கள் கடந்தன. ஒரு நாள் லட்சுமி அத்தை (கஜேஸ்வரியின் அம்மா) நவீனை ஃபோனில் அழைத்தாள்.

“ஹலோ நவீன் நல்லா இருக்கயா? மிருதுளா சக்தி எல்லாம் எப்படி இருக்கா?”

“எங்களுக்கென்ன அத்தை நாங்க நல்லா தான் இருக்கோம். என்ன திடீர்னு ஃபோன் எல்லாம்”

“நம்ம நாராயணனுக்கு கல்யாணம் கூடி வந்திருக்கு நவீ.”

“அப்படியா ரொம்ப சந்தோஷம் அத்தை.”

“அது தான் உங்களை எல்லாம் இன்வைட் பண்ணலாம்ன்னு கால் பண்ணினோம். பத்திரிகை அனுப்பியிருக்கோம். வர்ற தை மாசம் பதினெட்டாம் தேதி வச்சிருக்கோம். நீ உன் குடும்பத்தோட வரணும். இதோ அத்திம்பேர் பேசனுமாம் குடுக்கறேன்”

“ஆங் குடுங்கோ அத்தை”

“என்ன நவீன் எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன் அத்திம்பேர். நீங்க எப்படி இருக்கேங்கள்?”

“நானும் நல்லா இருக்கேன் பா. உன் அத்தை சொன்னா மாதிரி நாராயணன் கல்யாணத்துக்கு நீ உன் குடும்பத்தோடு வந்துடு சரியா. இதோ அத்தைட்ட குடுக்கறேன்.”

“நவீ மிருதுளாட்ட கொஞ்சம் ஃபோனைக் குடு”

“ஆங் இதோ குடுக்கறேன் அத்தை. மிருது இந்தா அத்தை உன்கிட்ட பேசணுமாம்”

“ஹலோ அத்தை சொல்லுங்கோ. எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”

“நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம் மா. நவீன்ட்ட சொல்லிருக்கோம். நம்ம நாராயணனுக்கு கல்யாணம். நவீனோட அவசியம் வந்துடு சரியா. அதுக்கு தான் கால் பண்ணினோம். வந்துடுங்கோ. நான் வச்சுடட்டுமா?”

“ஆங் சரி அத்தை நாங்க எல்லாரையும் விசாரிச்சதா சொல்லிடுங்கோ”

“சொல்லிடறேன் மா பை”

“பை அத்தை”

“என்ன நவீன் இந்த கல்யாணத்துக்கு போறோமா?”

“ஏன் எப்பவும் டிக்கெட் புக் பண்ணவானு தானே கேட்ப இப்போ என்ன போறோம்னு கேட்கறாய்?”

“எல்லாம் அடிப்பட்டதுனால தான்”

“அடிப்பட்டும் திருந்த மாட்டேன்னு நினைச்சேன் பரவாயில்லை திருந்திட்ட சபாஷ். முதல்ல பத்திரிகை வரட்டும் அப்புறமா போறதைப் பத்தி யோசிப்போம்”

“ஓகே நவீ. யூ ஆர் ஆல்வேஸ் கரெக்ட்”

சில் நாட்களில் பத்திரிகை நவீன் வீட்டு போஸ்பாக்ஸில் இருந்தது. அதை எடுத்து வீட்டிற்கு வந்து மிருதுளாவிடம் கொடுத்தான் நவீன். அதைப் பார்த்ததும் மிருதுளா

“என்ன நவீ பத்திரிகை வந்திடுத்தே!! யூஷ்வலா கஜேஸ்வரி வீட்டு விசேஷத்துக்கு எங்க பேரன்ட்ஸுக்கு அனுப்பறது தானே அவா வழக்கம். நமக்கு அனுப்பிருக்கா அதிசயம் தான்”

“அது உன் மச்சின் கவின் கஜேஸ்வரி வீட்டுப் பழக்கம். அத்தை வீட்டுப் பழக்கமில்லையே”

“அதுவும் சரிதான். நாம போறோமா?”

“போகணுமா என்ன? பேசாம ஃபோன்ல விஷ் பண்ணினா போறாதா?”

“என்ன நவீ நாம இவ்வளவு தூரத்துல சொந்த பந்தம் எல்லாத்தையும் விட்டுட்டு இருக்கோம். இது மாதிரி விசேஷத்துக்கெல்லாம் போனாதானே எல்லாரையும் பார்க்க முடியும். அதுவும் எல்லாரையும் ஒரே இடத்துல!!”

“அப்படிங்கறயா!!! அப்போ சரி டிக்கெட் புக் பண்ணிடு. போயிட்டு வருவோம். நானும் லீவுக்கு அப்ளை பண்ணறேன். ஆனா அந்த கூட்டமும் வருமே”

“வந்தா வந்துட்டுப் போறா. நமக்கென்ன நவீ. நம்மளை அத்தை கூப்பிட்டிருக்கா நாம போறோம் அவ்வளவு தானே. அவளை நாம கண்டுக்க வேண்டாம்”

“ம்….பார்ப்போம் பார்ப்போம்”

என்று பேசிக்கொண்டதும் டிக்கெட் புக் செய்தாள் மிருதுளா. மூவருமாக ஈரோடு சென்றனர். அங்கே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினர். அன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு மற்றும் ரிசெப்ஷனில் பங்கெடுத்துக் கொள்வதற்காக ஹோட்டலில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். வாசலில் அமர்ந்திருந்த சொந்தங்கள் அனைவரும் நவீனையும் மிருதுளாவையும் வரவேற்றனர். இவர்கள் வருவதைப் பார்த்ததும் பர்வதம் ஈஸ்வரனைப் பார்க்க உடனே அவர் ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டார். பர்வதம் நேராக நவீனிடம் வந்து

“வா வா. வாங்கோ. எப்படி வந்தேங்கள்”

“நாங்க ட்ரெயின்ல வந்தோம் மா”

என்று மிருதுளா பதில் அளித்தாள். நவீன் மிருதுளாவிடம்

“மிருது நாம அத்தைப் புள்ளை கல்யாணத்தை அட்டென்ட் பண்ண தான் வந்திருக்கோம் அதை ஞாபகம் வச்சுக்கோ. வா போயி தம்பதிகளை வாழ்த்திட்டு வருவோம்”

என்று பர்வதத்திடம் பேச விருப்பமில்லை என்பதை மிருதுளாவிற்கு புரியும்படி சொல்லி அங்கிருந்து அவளை மேலும் ஏதும் பேச விடாமல் அழைத்துச் சென்றான். மிருதுளாவும் அவன் பின்னால் சென்றாள். கஜேஸ்வரி நேராக இவர்களிடம் வந்து

“வாங்கோ அண்ணா வாங்கோ மன்னி”

“ம்…ம்…”

என்று இரண்டே எழுத்தில் பதிலளித்தான் நவீன். ஆனால் மிருதுளாவோ

“கஜேஸ்வரி எப்படி இருக்க? கவின் எப்படி இருக்கான்? குட்டி எப்படி இருக்கா?”

“நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம் மன்னி. சரி அங்கே கூப்பிடறா. நான் போயி என்னன்னு பார்த்துட்டு வரேன். நீங்க உட்காருங்கோ”

என்று பேச்சை கட் பண்ணிவிட்டு சென்றாள் கஜேஸ்வரி. அதை கவனித்த நவீன் மிருதுளாவிடம்

“உனக்கு இது தேவையா? நான் எப்படி பதில் சொன்னேன் அது மாதிரி சொல்லிட்டு விட வேண்டியது தானே.”

“என்னப்பா எப்படி இருக்க என்னன்னு கேட்கறது தப்பா?”

“கேட்கறது தப்பில்லை ஆனா அதை யார்கிட்ட கேட்கறோம்ங்கறதை பொறுத்துத்தான் தப்பு சரி எல்லாம். அவ என்னவோ பெரிய இவ மாதிரி பேச்சைக் கட் பண்ணிட்டுப் போனா இல்ல”

“ம்….அப்படியா!! அவளை யாரோ கூப்பிடறான்னு இல்லையா சொல்லிட்டுப் போனா?”

“அப்படித்தான் ஏதாவது சொல்லி பேச்சைக் கட் பண்ணுவா மிருது. இது கூட புரியலையா உனக்கு?”

“இப்போ புரிஞ்சுண்டுட்டேன் நவீ”

“நாளைக்கு கல்யாணம் முடிஞ்சு கிளம்பற வரைக்கும் உன் கிட்ட பேசறவா கிட்ட மட்டும் நீ பேசு போதும். நீயா எல்லாம் பேசிண்டு போகாதே புரியறதா? அதுவும் நம்ம கூட்டத்துட்ட போகவே போகாதே”

“சரி நவீ”

திருமணத்தை முழுவதுமாக அட்டென்ட் செய்தனர். அந்த நிகழ்விலும் கவினும் கஜேஸ்வரியும் தான் எல்லாமும் என்பது போன்ற நாடகம் ஒரு பக்கமும் (அதற்கு அவள் குடும்பத்தில் கஜேஸ்வின்னால் ஒதுக்கப்பட்டவர்கள் கஜேஸ்வரியின் மூத்த அக்கா ரமாமணி குடும்பத்தினர்), அந்த விசேஷம் முழுவதும் ஈஸ்வரன்…நவீன் மிருதுளா இருக்கும் இடத்திற்கு வராது இருந்து ஏதோ நவீனும் மிருதுளாவும் தவறிழைத்தது போலவும் அதனால் அவர் கோபத்தில் இருப்பது போலவும் மறுபக்கம் ஒரு நாடகம் அரங்கேறியது. அதை எதையும் கண்டுக்கொள்ளாதது போல நவீனும், அது எதுவுமே புரிந்துக் கொள்ளாத மிருதுளாவும் மத்திய சாப்பாடு ஆனதும் தம்பதிகளுக்கு பரிசைக் கொடுத்து விட்டு தாம்பூலம் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு பம்பாய்க்கு சென்றனர்.

ஊருக்குச் சென்று வந்த துணிமணிகளை ட்ரைக்ளீனிங் போட்டு வாங்கி வைப்பதற்குள் நவீன் இன்னொரு பத்திரிகை போஸ்ட்பாக்ஸில் இருந்ததாகச் சொல்லி எடுத்து வந்து மிருதுளாவிடம் கொடுத்தான். அதைப் பார்த்ததும் மிருதுளா

“நவீ இது யாரோட கல்யாணப் பத்திரிகைன்னு தெரியலையா?”

“நான் பார்க்கலை மிருது. யாரோடது?”

“பவினோட கல்யாணப் பத்திரிகை தான் இது”

“அப்படியா. ஓகே ஓகே!!!”

“என்ன நவீ இப்படி சொல்லறேங்கள்!!”

“பின்ன என்ன சொல்லறது?”

“ஆனா இது நம்மாத்துப் பத்திரிகை இல்லை நவீ”

“என்ன சொல்லுற மிருது? பவினோட கல்யாணப் பத்திரிகைன்னு சொல்லற ஆனா நம்மாத்து பத்திரிகை இல்லைன்னும் சொல்லற. எனக்கு ஒண்ணுமே புரியலை இரு நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன் அப்புறமா தெளிவா சொல்லு”

“சரி சரி வாங்கோ நானும் அதுக்குள்ள காபி போட்டுடறேன்”

“ம்…இப்போ சொல்லு”

“இந்தாங்கோ முதல்ல காபி எடுத்துக்கோங்கோ.”

“சரி எடுத்துண்டுட்டேன். எங்கே அந்த பத்திரிகையை தா படிக்கட்டும்”

“இந்தாங்கோ. நீங்களே பாருங்கோ”

“ஆமாம் இது பவினோட கல்யாணப் பத்திரிகை தானே!!”

“ஆனா இது நம்மாத்து பத்திரிகை கிடையாது நவீ. நல்லா பாருங்கோ இது பொண்ணாத்துக் காரா அடிச்சப் பத்திரிகை. இது பவின் கல்யாணம் பண்ணிக்கப் போற அந்த பொண்ணு பவித்ரா ஆத்த அடிச்ச பத்திரகை. அவா அனுப்பிருக்கா நமக்கு.”

“ஆனா நம்ம ஆத்து மனுஷாளுக்கு நாம இருக்கறதே ஞாபகமிருக்காது”

“அப்படி அவாளுக்கு நம்மளை கூப்பிடுவதில் விருப்பம் இல்லைன்னா!!! நம்மளுக்கு அனுப்பச் சொல்லி பவித்ரா வீட்டுக்கு ஏன் நம்ம அட்ரெஸை கொடுக்கணும்?”

“அவாளோட இத்தனை வருஷமிருந்துமா உனக்கு புரியலை? அவா சைடு பர்ஃபெக்ட்ன்னு காமிச்சுக்க தான். அவா நம்மளை கூப்பிடாதது நமக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஆனா ஊர்காராளையும், பொண்ணுவீட்டுக்காராளையும் பொறுத்தவரை நம்மளை இன்வைட் பண்ணிருக்கான்னு தானே அர்த்தமாகறது!!”

“ஓ!!!! ஆமாம் இல்ல. அப்போ நாம் அவா நம்மளை இன்வைட் பண்ணலன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டா இல்ல !!! ஓ!! அதுக்குத் தானா”

“இன்வைட் எல்லாம் கூட வேண்டாம் மிருது. நம்மகிட்ட என்னைக்கு அவனுக்கு கல்யாணம்ன்னு சொல்லவாவது செய்தாளா அவா? இதுவரைக்கும் இல்லையே!!!”

“அதானே!!! ஏன் அந்த பவினுக்குக் கூட நம்மகிட்ட சொல்லணும்ன்னு தோனலைப் பாருங்கோ!”

“விடு விடு!!! என்ன வேணும்னாலும் பண்ணிக்கட்டும்”

“எல்லாத்தையும் அந்த ஆண்டவன் பார்த்துண்டு தானே இருக்கார் நவீ. அவர் பார்த்துப்பார்”

பவின் திருமணத்திற்கு ஒரு மாதம் முன் நவீன் ஆஃபீஸ் சென்றிருந்த வேளையில் வீட்டிற்கு ஃபோன் கால் வந்தது. அதை அட்டென்ட் செய்தாள் மிருதுளா

“ஹலோ மிருதுளா ஹியர்”

“ஹலோ மன்னி நான் பவின் பேசறேன்”

“ம்…சொல்லு பவின். என்ன விஷயம்?”

“மன்னி நீங்களும் அண்ணாவும் என் கல்யாணத்துக்கு அவசியம் வரணும். அடுத்த மாதம் இருபதாம் தேதி தான் கல்யாணம்.”

“ஆங் பவித்ரா ஆத்துலேந்து பத்திரிகை போன வாரமே எங்களுக்கு வந்தது. அது மூலமா தெரிஞ்சுண்டோம். சரி இப்போ சொல்லற நீ … உன் நிச்சயத்துக்கும் ஃபோன் பண்ணி சொல்லிருக்கலாம் இல்லையா? நாங்க ஊருக்கு வந்துட்டு திரும்பி வந்திருக்க மாட்டோமே”

“மன்னி நான் சொல்லுறேன்னு சொன்னேன் ஆனா அப்பாவும் அம்மாவும் தான் அவா சொல்லிட்டா அதுனால நான் ஒண்ணும் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னா…அதுதான் சரி அவாளே சொல்லிட்டாளேன்னு நான் சொல்லலை”

“சரி இப்போ எதுனால ஃபோன் போட்டுச் சொல்லற?”

“அப்பா அம்மா நீங்க என் நிச்சயதார்த்தத்துக்கு கூப்பிட்டுட்டும் வராததுனால கோபத்துல உங்க கிட்ட சொல்லிருக்க மாட்டளோன்னு தான் நான் ஃபோன் பண்ணினேன்”

“இங்க பாரு பவின் உங்க அப்பா அம்மா என்னையும் நவீனையும் எப்படி நடத்துவாங்கறது மத்தவாளைவிட உனக்கு நல்லாவே தெரியும். ஏன்னா நீ எல்லா இடத்துலேயும் எல்லாத் தருணத்திலேயும் இருந்திருக்க. உன் நிச்சயதார்த்த டேட்டை ஒரு நாள் தள்ளித்நான் எங்க கிட்ட சொன்னா உன் பேரன்ட்ஸ். அது உனக்கு தெரிஞ்சு நடந்ததா இல்லை தெரியாம நடந்ததான்னு எங்களுக்கு தெரியாது ஆனா நடந்தது. பின்ன எப்படி நாங்க வருவோம் சொல்லு”

“சரி மன்னி அதெல்லாம் விடுங்கோ நீங்களும் அண்ணவும் என் கல்யாணத்துக்கு நிச்சயம் வரேங்கள் அவ்வளவு தான். நானே கூபிடறேன்.”

“ம்…பார்க்கலாம் பவின். நவீன்ட்ட சொல்லிப் பார்க்கறேன். நீ ஈவ்னிங் நவீன் ஆத்துல இருக்கும் போது ஃபோன் பண்ணிருக்கலாம் இல்லையா!! இல்லாட்டி அவர் செல்லுக்கு கால் பண்ணிருக்கலாமே!!”

“நான் அண்ணா செல்லுக்கு ட்ரைப் பண்ணினேன் ஆனா ரெஸ்பான்ஸ் இல்ல அதுதான் வீட்டுக்குப் பண்ணினேன்”

“சரி சரி சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ் பவின். நாங்க பேசிட்டு டிசைட் பண்ணறோம்.”

“நானே உங்களுக்கு இன்விடேஷன் அனுப்பறேன்”

“சரி வச்சுடட்டுமா. சக்தியை ஸ்கூல்லேந்து கூட்டிண்டு வர நேரமாச்சு”

“ம்…ஓகே மன்னி. நீங்க அண்ணாகிட்ட சொல்லி ரெண்டு பேருமா என் கல்யாணத்துக்கு கட்டாயம் வரணும். பை மன்னி”

“பை பவின்”

அன்று மாலை நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் மிருதுளா பவின் ஃபோன் செய்த விவரத்தை சொன்னாள். அதைக் கேட்டதும் நவீன்

“ஓ!! அப்படியா”

“என்ன? ஓ! அப்படியான்னு கேட்கறேங்கள்.”

“ஏன் அந்த பெரிய மனுஷனால எனக்கு ஃபோன் போட்டு இதை சொல்ல முடியாதாமா?”

“அவன் முதல்ல உங்க செல்லுக்குத் தான் ட்ரைப் பண்ணினானாம். ரெஸ்பான்ஸ் இல்லாததால வீட்டுக்குப் பண்ணிருக்கான்”

“கால் பண்ணிருந்தாலும் என்கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வராதுன்னு தெரிஞ்சதனால தான் அவன் வீட்டுக்குக் கால் பண்ணி உன் கிட்ட பேசிருக்கான்”

“என்ன சொல்லறேங்கள் நவீ?”

“எவனும் என் செல்லுக்கு கால் பண்ணலைன்னு சொல்லறேன் மிருது”

“பின்ன ஏன் அப்படி என் கிட்ட சொன்னான்?”

“அவனுக்கு நாம அவன் கல்யாணத்துக்கு வரணும் அவ்வளவு தான். என் கிட்ட சொன்னா நான் கேள்வி மேல கேள்வி கேட்பேன். அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. உன் கிட்ட எமோஷனல்லா பேசிட்டா போதும் நீ உடனே சரின்னு சொல்லிடுவ. அது தான் உன்கிட்ட பேசிருக்கான்…ஸோ சிம்பிள்”

“நானும் கேள்வி மேல கேள்வி கேட்டேன் நவீ. வரோம்ன்னு எல்லாம் நான் சொல்லலை. உங்ககிட்ட சொல்லறேன் பார்ப்போம்ன்னு தான் சொல்லிருக்கேன். நீங்க என்ன சொல்லறேங்கள்?”

“எனக்கு போக இஷ்டமில்லை”

“என்ன நவீ அவன்தான் அவ்வளவு தூரம் சொல்லிருக்கானே”

“அதுனால!!! நிச்சயத்துக்கு நடந்ததெல்லாம் மறந்துட்டயா?”

“மறக்கலை நவீ ஆனா அது அவனுக்கே கூட தெரியாம நடத்தியிருக்கலாம் இல்லையா. அவன் பேசினதிலிருந்து அப்படித்தான் எனக்குத் தோனறது”

“சரி அதுக்கு?”

“நாம போயிட்டு பட்டும் படாம இருந்துட்டு வந்திடலாமே. நம்மாத்த நம்ம ஜெனரேஷனோட கடைசிக் கல்யாணம் இல்லையா இது. இதுக்கப்புறம் நம்ம சக்திக் கல்யாணம் தான். அதுக்கு இன்னும் எவ்வளவு வருஷங்கள் இருக்கு!!!”

“ம்..ம்…பார்க்கலாம் பார்க்கலாம். இன்னும் ஒரு மாசமிருக்கே!!”

என்று கூறினான் நவீன். அதற்கு எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தாள் மிருதுளா ஏனெனில் நவீனின் மனக்கஷ்ட்டத்தை நன்கறிந்தவளாயிற்றே. நவீனே சொன்னால் பவினின் திருமணத்திற்கு செல்லலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டு தனது வேலையில் மூழ்கினாள் மிருதுளா.

வீட்டை வைத்து முதல் பிள்ளைக்கும் இரண்டாவது பிள்ளைக்கும் கிளப்பிவிட்டப் பிரச்சினை ப்ரவீன் திருமணத்தில் பிரதிபலிக்க…

இப்போது நிச்சயதார்த்தத்துக்கு வேண்டா அழைப்பு ஒன்றை விடுத்து முதல் பிள்ளைக்கும் நான்காவது பிள்ளைக்கும் பிரச்சினையை உண்டு பண்ணியிருக்கிறார்கள் மூத்த தம்பதியர்.

வீட்டைக் காரணமாக வைத்து முதல் பிள்ளையிடமும் இரண்டாவது பிள்ளையிடமும் இருவருக்கும் ஒருவருக்கொருவர் தெரியாமலேயே பணம் வாங்கியுள்ளனர் மூத்த தம்பதியர் . அவர்கள் இருவரும் சுமுகமாக பழகினால் இருவருமே கொடுத்தப் பணத்திற்கு கேள்வி கேட்பார்கள். ஆனால் இருவருக்குள்ளும் பிரச்சினையை கிளப்பி விட்டால்….எங்கிருந்து கேள்வி வரும். பணத்திற்கு முன் பிள்ளைப் பாசம் காணாமல் போனது. இரு கோடுகள் தத்துவத்தை அவர்களின் சுயநலத்திற்காக பிரயோகப் படுத்த இப்போது அது உருமாறி பலப் பிரச்சினைகளுக்கு வித்தாக அமைந்துள்ளது.

மூத்த தம்பதியர் பெற்றப் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் எதார்த்தமாக பேசிக்கொண்டால் அவர்களின் பல குட்டு வெளிப்பட்டு விடுமென்பதனாலேயே கவினுடன் சேர்ந்து அனைத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கவினும் கஜேஸ்வரியும் அவர்களின் குணமறிந்து குடும்பத்தை அவர்கள் கன்ட்ரோலுக்கு கொண்டு வந்து அவர்களை வைத்தே ஆட்டிப் படைக்கின்றனர்.

பெற்றப் பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று எண்ணும் பெற்றோர்களுக்கு மத்தியில் இப்படியும் சில சுயநலவாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்!!!!

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s