கேட்டே தீருவேன் என்று நவீனும். கேட்டால் பிரச்சினை தான் வரும். தீர்வு கிடைக்காது என்று மிருதுளாவும் எண்ணிக் கொண்டு வீட்டுக்கு வந்துக் கொண்டிருக்கும் போது நவீன் மிருதுளாவிடம்
“ஏன் மிருதுளா நம்ம கேட்டா தானே பிரச்சினை பண்ணுவா. பேசாம பிச்சுமணி மாமாகிட்ட விவரத்தை சொல்லி அவரை பேச சொன்னா என்ன?”
“அது சரியா வராது நவீ”
“இல்லை இல்லை அது தான் சரி. வா நாம அடுத்த பஸ் ஸ்டாப்புல இறங்கி மாமா ஆத்துக்கு போயிட்டு அப்புறமா அந்த வீட்டுக்கு போகலாம்”
“நவீ சொன்னா கேளுங்கோ இதை நாம் தான் பேசி தீர்க்கணும். அந்த பாட்டி சொன்னா மாதிரி உங்க அம்மா தானே நீங்களே கேட்டுப் பாருங்கோ அதை விட்டுட்டு இதில் மாமாவை ஏன் இழுக்கணும்? ஏன் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா !!!”
“நீ வா மிருது நான் பார்த்துக்கறேன்.”
என்று அடுத்த ஸ்டாப்பில் இறங்கி பிச்சுமணி வீட்டுக்குச் சென்றனர் இருவரும் குழந்தை சக்தியுடன். அவர்களைப் பார்த்த பிச்சுமணி
“வாங்கோ வாங்கோ. வாடி சக்திக்குட்டி வாவா. வாடா நவீன். வாம்மா மிருதுளா. எப்போ ஊரில் இருந்து வந்தேங்கள்? பர்வதம் அக்கா நீங்க வந்திருப்பதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே!!! சரி அதை விடு எப்படி இருக்கேங்கள்? அம்பிகா யாரு வந்திருக்கா பாரு? வா வா”
“அடடே வா நவீன் வாம்மா மிருது. ஏய் உன் பொண்ணு நல்லா வளந்துட்டாடா நவீன். சரி என்ன சாப்பிடறேங்கள்?”
“ஒண்ணும் வேண்டாம் மாமி”
“இல்ல இல்ல இரு இரு”
என்று உள்ளே சென்று கையில் ஒரு தட்டுடன் வந்தாள் அம்பிகா. அதை நவீன் மிருதுளா இருவரிடமும் கொடுத்து
“நான் சுட்ட முறுக்கு. சாப்பிடேங்கோ நான் போய் காபி போட்டு எடுத்துண்டு வர்றேன். சக்திக்கு பால் தரட்டுமா?”
“ம்…ஓகே”
“சமத்து சரி வா”
என்று சக்தியை தூக்கிக் கொண்டு அடுப்படிக்குள் காபி போடச் சென்ற அம்பிகாவுக்கு பின்னாலேயே சென்றாள் மிருதுளா. அப்போது பிச்சுமணி நவீனிடம்
“என்னடா திடீர்ன்னு வந்திருக்க?”
“நான் புது வேலையில் உயர் பதவியில் ஹைதராபாத்தில் அடுத்த வாரம் சேரப்போறேன் அதுதான் பெரியவாகிட்ட எல்லாம் ஆசிர்வாதம் வாங்கிண்டு போக வந்தோம்.”
“அப்படியா சூப்பர் டா. கங்கிராட்ஸ்.”
“அது மட்டுமில்லை மாமா இன்னுமொரு முக்கியமான விஷயம் பத்தியும் உங்க கிட்ட பேசணும்”
“ம்…சொல்லு”
“எல்லாம் நான் வாங்கின வீடு பத்தி தான் மாமா?”
“எது அந்த அப்பார்ட்மெண்ட்டா?”
“இல்லை மாமா நான் முதல் முதலில் வாங்கின வீடு. நீங்க கூட பணம் கொடுத்து உதவினேங்களே அந்த வீட்டைப் பத்தி பேசணும்”
“அதுக்கு என்ன இப்போ?”
என்று பிச்சுமணி கேட்டதும் நடந்தவை அனைத்தையும் அம்பிகா போட்ட காபியை அவ்வப்போது குடித்துக் கொண்டே கூறி முடித்தான் நவீன். அதைக் கேட்டதும் பிச்சுமணி
“உன் பேருல இல்ல ரிஜிஸ்டர் பண்ண சொன்னேன்!!! ஏன் அக்கா அப்படி பண்ணிருக்கா?”
“அது தான் மாமா எனக்கு ஆத்திரமே. என் கிட்ட எதையுமே சொல்லாமல் எல்லாத்தையும் தன் இஷ்டத்துக்கே செய்திருக்கா பாருங்கோ. என்ன எனக்கு தெரியாமயே போயிடும்ன்னு நினைச்சா போல!!!”
என்று கூறி தானும் மிருதுளாவும் சேர்ந்தெடுத்த முடிவான அக்ரிமென்ட் முடிவை சொன்னதும் பிச்சுமணி
“இட்ஸ் ஏ குட் ஒன். ஆனா இதை எல்லாம் அவாளுக்கு முதலில் புரிய வைக்கணும். அதை மெதுவா தான் அவாகிட்ட பேசி புரிய வைக்க முடியும். அதுக்கு கொஞ்ச டைம் ஆகும். ஏன்னா திடுதிப்புன்னு இப்போ போய் நீ வீட்டை உன் பெயருக்கு மாத்தித் தர சொன்னேனா அதை அவா தப்பா தான் எடுத்துப்பா….”
“அதைத் தான் நானும் இவர்கிட்ட சொன்னேன் மாமா. ஆனா இவர் தான் ஆத்திரத்துல யோசிக்கறார்”
“நீ ஒண்ணு பண்ணு நவீன். இதை என்கிட்ட விடு நான் மெதுவா அக்காவுக்கு புரியும் படி சொல்லி சம்மதிக்க வைக்கறேன் சரியா. இப்போ நீங்க ரெண்டு பேருமே இதைப் பத்தி ஒண்ணும் பேசிக்காதீங்கோ. நீங்க ஊருக்கு போய் உன் புது வேலையில சேரு. நான் பேசிட்டு உனக்கு சொல்லறேன்”
என்று பிச்சுமணி நவீனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது காபி குடித்த தம்பளர்களை அடுப்படிக்கு எடுத்து சென்ற அம்பிகா மிருதுளாவிடம்
“மிருது உங்க மாமா என்னைக்குமே உங்க மாமியாருக்கு தான் சப்போர்ட் பண்ணுவார் சொல்லிட்டேன். இவரை நம்பாதீங்கோ”
“ஐயோ மாமி அதை நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியணுமா என்ன? நானும் வேண்டாம்ன்னு நவீன் கிட்ட சொன்னேன் அவர் தான் நடந்தது எல்லாமே மாமாவுக்கு தெரியும் அவர் நியாயத்தைக் கேட்டா சரியா இருக்கும்ன்னு சொல்லி இங்கே வந்திருக்கார். “
“அவர் நியாயமானவர் தான் ஆனா உன் மாமியாரைப் பார்த்தா கப்சிப் தான்.. உன் மாமியாரால தான் நாங்க இப்படி எலியும் பூனையுமா வாழறோம். எங்களுக்கு கல்யாணமான புதுசுல எங்களை வாழவே விடாதவள் தான் உன் மாமியார். அவ வீட்டுக்கு வந்தா… என்கிட்ட எல்லாம் பேச மாட்டா நேரா தம்பியைக் கூட்டிண்டு மாடிக்கு போயிடுவா தெரியுமா!! என்னதான் மாய மந்திரம் போடுவாளோ தெரியாதுமா !! ஆனா அவ வந்துட்டு போணா இவர் என்கிட்டயும் என் குழந்தைகள் கிட்டேயும் சாமி ஆடிடுவார் அதுனாலயே அத்தை வர்றான்னா என் குழந்தைகள் பயப்படுங்கள் தெரியுமா.”
“ம்…..”
“அதுனால சுதாரிச்சு நடந்துக்கோங்கோ”
“மாமி அது எங்க கல்யாணத்துக்கு முன்னாடி நவீன் வாங்கின வீடு ஸோ அதை அவர் எப்படி டீல் பண்ணறாரோ பண்ணிக்கட்டும் அதில் நான் ஒண்ணும் சொல்லறதுக்கில்லை. அவரும் அவர் மாமாவைப் பத்தி தெரிஞ்சுக்கட்டுமே!! அதை நாம் ஏன் தடுக்கணும்”
“மிருது மிருது… கிளம்பலாமா நேரமாயிடுத்து”
“இருடா நவீன் இதோ தோசை வார்த்தேட்டேன் இருந்து எங்களோட சாப்டுட்டு கிளம்புங்கோ”
என்று அம்பிகா சொன்னதும் இருவரும் சாப்பிட்டு சக்தியையும் சாப்பிட வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் பர்வதம்
“வர்றதுக்கு ஏன் இவ்வளவு நேரம்? எங்க போயிருந்தேங்கள்? சொல்லிட்டு போறதில்லையா!!சாப்பிட்டேங்களா இல்லை ஏதாவது பண்ணணுமா?”
நவீன் ஏதும் பதில் சொல்லாமல் மிருதுளாவிடம்
“மிருது வா பேக் பண்ணுவோம் நாளைக்கு ஊருக்கு கிளம்பணுமில்லையா. சக்தி தூங்கி வழியறா பாரு!! நான் அவளை தூங்க வைக்கிறேன் குடு. நீ போய் டிரெஸ் மாத்திண்டு வா”
“என்ன நான் கேட்டுண்டிருக்கேன்!! அதுக்கு பதிலே காணம்”
“நாங்க சாப்பிட்டாச்சுமா”
“எங்க போயிருந்தேங்கள்?”
“பிச்சுமணி மாமா ஆத்துக்கு போயிருந்தோம்”
“ஓ!!! அங்க எதுக்கு இப்போ?”
“நவீன் போகணும்ன்னு சொன்னார் போணோம். சரி நான் போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்”
என்று கூறிவிட்டு சென்று மாற்றிவிட்டு வருவதற்குள் நவீன் சக்தியை தூங்கச் செய்தான். பின் இருவருமாக பெட்டிகளை பேக் செய்த பின் படுத்துறங்கினர். காலை விடிந்ததும் நவீன், மிருதுளா, சக்தி மூவருமாக ஹத்ராபாத்துக்கு மனதில் கலக்கத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.
நவீன் புது வேலையில் சேர்ந்தான். அவனது ஆறு மாத ப்ரொபேஷன் காலம் ஆரம்பமானது. இதே நேரத்தில் கவின் குவைத்தில் தனது வேலையை விட்டுவிட்டு தன் மாமனார் மாமியார் ஊரான ஈரோடுக்கே குடி வந்தான். அந்த விஷயத்தை அறிந்ததும் நவீன் காரணம் கேட்டதற்கு ஏதேதோ சொல்லி மழுப்பினான் கவின். அவனுக்கு சொல்ல விருப்பமில்லை என்பதை உணர்ந்த நவீன் அதற்கு மேல் அதைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை. நவீனும் மிருதுளாவும் ஹைதராபாத் சென்று மூன்று மாதங்கள் ஆனது. திடிரென ஒரு நாள் ஈஸ்வரனிடமிருந்து ஃபோன் வந்தது அதில் ப்ரவின் வேலையில் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆனதாகவும், அவனுக்கு பெண் பார்த்து விட்டதாகவும், நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடக்க போவதகவும் தகவல் சொன்னார். அதைக் கேட்டதும் மிருதுளா
அதிர்ச்சியானாள். பின் நவனிடம்
“ஏன் நவீ …ஏதோ மூணாம் மனுஷாள்ட்ட சொல்லறா மாதிரி தகவல் சொல்லறார்? எப்போ பொண்ணு பார்த்தா? எப்போ எல்லாம் ஓகே பண்ணினா? சரி அவா தான் சொல்லலை இந்த ப்ரவினாவது சொல்லி இருக்கலாம் இல்ல? ச்சே என்ன மனுஷாப்பா இவா எல்லாம்!!!”
” நாமன்னா அவ்வளவு எளக்காரம் அவாளுக்கு அதுதான்!! ஆமாம் வீட்டையே முழுங்கி ஏப்பம் விட்டுட்டிருக்கா அதுவே சொல்லலை இதை சொல்லிடுவாளாக்கும்.”
“அதுவும் சரி தான். ஆமா மாமா உங்க அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் பேசினாரா?”
“தெரியலையே அவர்ட்ட இருந்து ஒரு நியூஸும் இல்லை”
என்னதான் மூத்த தம்பதியர் நவீனையும் மிருதுளாவையும் ஒதுக்கினாலும் அவர்கள் எதையுமே காட்டிக்கொள்ளாமல் ப்ரவினின் நிச்சயதார்த்தத்திற்கு லீவு போட்டு ஊருக்குச் சென்றனர். அங்கு சென்றதும் தான் இருவருக்கும் தெரிய வந்தது அங்கு பெண் பார்ப்பதிலிருந்து நிச்சயம் வரை அனைத்தும் மிஸ்டர் கவின் தலைமையில் நடந்தேறியுள்ளது என்பது. அதுவுமில்லாமல் கஜேஸ்வரி மாசமாக இருந்தாள். அதுவும் அப்போது தான் தெரிய வந்தது. தனக்கு ஏன் எல்லாம் தெரிவிக்காதிருந்தார்கள் என்றோ இல்லை தங்களை ஏன் மதிக்கவில்லை என்றோ ஏதும் கேட்காமல் ஜென்டிலாக வந்து விஷேஷத்தை அட்டென்ட் செய்து விட்டு சென்றனர். இவை எல்லாம் பிரச்சினை ஆக வேண்டுமென எண்ணி எவர் போட்ட திட்டமாக இருந்தாலும் நவீன், மிருதுளாவின் பெருந்தன்மையால் அவை அனைத்தும் தவிடுபொடி ஆனது. பின் மீண்டும் அவர்கள் வேலையில் மூழ்கினர். நிச்சயதார்த்தம் ஆனா அடுத்த மாதமே கவினிடமிருந்து நவீனுக்கு ஃபோன் வந்தது அதை அடென்ட் செய்தான் நவீன்
“ஹலோ சொல்லு கவின்”
“நவீன் அப்பாவுக்கு அப்பென்டிசைடீஸ் ஆப்பரேஷன் பண்ணணும்ன்னு டாக்டர்ஸ் சொல்லறா”
“சரி அதுக்கு?”
என்று பட்டும் படாமல் பதலளித்தான் நவீன். அதைக் கேட்டதும் மேலே என்ன சொல்ல வேண்டுமென அறியாது.. கவின்
“இல்ல உன் கிட்ட சொல்லணும் இல்லையா அது தான் ஃபோன் பண்ணினேன்”
“ஓ!!! அப்படியா!! சரி சொன்னதுக்கு ரொம்ந தாங்க்ஸ். எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் போகணும். நான் உனக்கு அப்புறமா கால் பண்ணறேன்”
என்று ஃபோனை வைத்துவிட்டு தன் வேலையைப் பார்த்தான் நவீன். பட்டும் படாமலும் நவீன் பேசியதும் கவின் வீட்டிற்கு ஃபோன் செய்து மிருதுளாவிடம் விவரத்தை சொன்னான். அதைக் கேட்டதும் மிருதுளா
“அச்சச்சோ!!! என்ன திடீர்ன்னு இப்படி ஆகிருக்கு? அடுத்த மாசம் ப்ரவின் கல்யாணம் வேற இருக்கே? நீ நவீன்ட்ட சொன்னயோ”
“ம்…ம்…சொன்னேன். சரி மன்னி அதுக்கு ஹாஸ்பிடல் செலவு எல்லாம் கிட்டதட்ட ஒரு லட்சம் ஆகலாம்ன்னு சொல்லறா. அதுதான் நவீன்ட்ட சொல்லணும். நீங்க சொல்லிடுங்கோ”
என்று கூறி ஃபோனை வைத்தான் கவின். நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் விஷயத்தை சொன்னாள் மிருதுளா அதைக் கேட்டதும் நவீன்
“எனக்கும் ஃபோன் பண்ணினான் ஆனா இந்த காசு விவரமெல்லாம் ஒண்ணும் சொல்லலை….எவ்வளவோ என்கிட்ட சொல்லாம பண்ணிருக்காளே அவா எல்லாருமா??? இப்போ இதை மட்டும் எதுக்கு என்கிட்ட சொல்லறாலாம்? அவனே பார்த்துக்க வேண்டியது தானே!!”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது நவீ. நீங்களாச்சு கவினாச்சு. அவன் சொன்னதை சொன்னேன் அவ்வளவு தான்”
மறுநாள் காலை நவீன் ஆஃபீஸ் புறப்படுவதற்கு முன் அவர்கள் வீட்டு நம்பருக்கு கால் செய்தான் கவின்
“ஹலோ நவீன் நான் கவின் பேசறேன்”
“ம்….சொல்லு”
“மன்னி கிட்ட நேத்து பேசினேன் சொன்னாளோ”
“ம்…சொன்னா சொன்னா அதுக்கென்ன இப்போ? அதுதான் நீங்க மூணு பசங்களும் சம்பாதிக்கறேங்களே!! சேர்ந்து செய்யுங்கோ. எல்லாத்தையும் நீங்களே தானே டிசைட் பண்ணிப்பேங்கள் அப்புறம் என்ன புதுசா என்கிட்ட எல்லாம் சொல்லறேங்கள்?”
“அதுக்கில்லை அடுத்த வாரம் ஆப்பரேஷன் வச்சிருக்கோம்ன்னு இன்ஃபார்ம் பண்ணவும். நீயும் மன்னியும் எப்போ வர்றேங்கள்ன்னு கேட்கவும் தான் ஃபோன் போட்டேன்”
“நாங்கள் வரமுடியாது. நான் என்னோட ப்ரொபேஷன் பீரியட்ல இருக்கேன். ப்ரவீன் நிச்சயதார்த்தத்துக்கே லீவு கிடைக்காம லாஸ் ஆஃப் பே போட்டு தான் வந்தேன் அதுவுமில்லாம சக்தி இப்போ தான் புது ஸ்கூல் போக ஆரம்பிச்சிருக்கா ஸோ உடனே எல்லாம் லீவு தரமாட்டா. அது தான் நீங்க மூணு பேரு இருக்கேங்களே பார்த்துக் கோங்கோ நான் ஃபோன் பண்ணி என்ன ஏதுன்னு கேட்டுக்கறேன்”
என்று நவீன் சொன்னதும் கவின் ஃபோனை வைத்துவிட்டான். அதை கேட்ட மிருதுளா நவீனிடம்
“ஏம்ப்பா இப்படி படக்குனு சொல்லிட்டேங்கள்?”
“நீ இதெல்லாம் கண்டுக்காத மிருது. இதை நான் டீல் பண்ணிக்கறேன்”
“நீங்க தான் பண்ணணும் சரி ஆனா அங்கே இப்போ என் தலையை தான் போட்டு ஆளாளுக்கு உருட்டுவா தெரியுமா”
“என்னமோ பண்ணட்டும். சரி நான் வேலைக்கு போயிட்டு வர்றேன்”
என்று கூறிவிட்டு சென்றான் நவீன். அவன் அவ்வாறு பேசியதை எண்ணி கவலைப்பட்டாள். அவள் ஆப்பரேஷனுக்கு முன் தினம் தன் மாமனார் மொபைலுக்கு கால் செய்தாள். ஃபோனை அடென்ட் செய்தது கவின் என்று தெரியாத மிருதுளா
“ஹலோ அப்பா நான் மிருது பேசறேன்”
“ஹலோ மன்னி நான் கவின்”
என்றதும் மிருதுளா மீண்டும் ஒரு முறை தன் மொபைலில் நம்பரை சரி பார்த்த பின்
“நான் அப்பாக்கு இல்லையா பண்ணினேன் நீ எடுக்கறாய்”
“அப்பாக்கு அனாவசியமான கால்ஸ் எல்லாம் வந்து டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு எல்லாம் எனக்கு ஃபார்வேர்டு ஆகுறா மாதிரி செய்திருக்கேன்”
“நாங்க கால் பண்ணிணாலுமா?”
“எல்லா காலஸும் தான்”
என்று திமிராக கவின் சொன்னதும் அதற்கு மேல் பேச விரும்பாத மிருதுளா ஃபோனை துண்டித்து விட்டு அருகில் அமர்ந்திருந்த நவீனைப் பார்த்தாள்.
“நான் தான் சொன்னேன் ல வேண்டாம்ன்னு …கேட்டயா….இப்போ இது உனக்கு தேவையா?”
“சரி அப்பா நம்பரை தானே அவனுக்கு ஃபார்வேர்டு ஆகுறா மாதிரி செய்திருக்கான் நான் உங்க அம்மாவுக்கு கால் பண்ணறேன்”
என்று கால் செய்தாள் ஆனால் அந்த நம்பரும் கவினுக்கே ஃபார்வேர்டு ஆகி அவனே அடென்ட் செய்தான். அதுத் தெரிந்ததும் அவள் கவினிடம்
“அப்பாக்கு ஏதோ காரணம் சொன்ன சரி ஆனா அம்மா நம்பரையும் ஏன் உனக்கே ஃபார்வேர்டு ஆகுறா மாதிரி பண்ணிண்டு இருக்க. அப்போ நாங்க எப்படி தான் அவாகிட்ட பேசறது?”
“அதெல்லாம் இப்போ பேச முடியாது. சாரி”
என்று கூறி நவீனையும் மிருதுளாவையும் பேச விடாமல் செய்தான் கவின். நவீன் ஊரிலிருந்த தன் வசுந்தரா அத்தைக்கு விவரம் தெரிந்துக் கொள்ள கால் செய்தான்.
“ஹலோ அத்தை நான் நவீன் பேசறேன். எங்க ஆத்துல யாருமே கால் அடென்ட் பண்ணமாட்டேங்கறா. நீங்களும் அங்க தானே இருக்கேங்கள் கொஞ்சம் அவாளை கால் பண்ணச் சொல்லறேங்களா”
“அதை ஏன்ப்பா கேட்குற நவீன்.”
“ஏன் அத்தை என்ன ஆச்சு?”
தொடரும்…….