வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்க ஆரம்பித்தாள் மிருதுளா. சக்தியையும் நவீனையும் ஸ்கூலுக்கும் ஆஃபீஸுக்கும் அனுப்பி வைத்து விட்டு, வீட்டு வேலைகள் முடித்த பின் தன் கணவருக்கு வேறு வேலையை மும்முரமாக தேடுவதில் ஈடுபட்டாள். பல வேலைகளுக்கு அவளே நவீனின் ஈமெயில் மூலம் அப்ளை செய்தாள். இதன் மூலம் நவீனுக்கு பல இன்டர்வியூக்களுக்கு அழைப்பும் வந்தது. அவனும் சளைக்காமல் அவற்றை அட்டென்ட் செய்து வந்தான். ஒரு நாள் நவீன் அடென்ட் செய்த இன்டர்வியூவில் செலக்கட் ஆகி அவர்கள் இருவரும் சேர்ந்து சம்பாதித்தை நவீன் ஒருவனே சம்பாதிக்க ஆரம்பித்தான்.
வாழ்க்கை தரம் மெல்ல மெல்ல உயர்ந்தது. நவீனின் படிப்பு சம்பந்தமான வேலையை தேர்ந்தெடுப்பதிலும் அவற்றிற்கு விண்ணப்பிப்பதிலும் எந்த வித மாற்றமுமின்றி தொடர்ந்துக் கொண்டே இருந்தது. அவ்வப்போது மூத்த தம்பதியரும், ராமானுஜம் அம்புஜம் தம்பதியரும் வந்து போய் கொண்டிருந்துனர்.
சக்தி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நேரம் நவீனின் வேலை தேடலில் பெரும் திருப்பம் நேர்ந்தது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் வேலை வாய்ப்பு கிடைத்தது. மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளமும் வழங்கப்பட்டது. வேலை ஹைதராபாத் என்பதால் நவீன் சற்று யோசித்தான். அதை கவனித்த மிருதுளா நவீனிடம்
“எதுக்கு இப்படி யோசிக்கறேங்கள்? நல்ல வேலை. நல்ல சம்பளம் அப்புறம் என்ன?”
“இல்லை மிருது. நாம ஜோத்பூரிலிருந்து வந்தே அஞ்சு வருஷம் தான் ஆகறது அதுக்குள்ள ஹைதராபாத் ஷிஃப்ட் பண்ணணுமேன்னு தான் யோசிக்கறேன். சக்தியோட படிப்பு, உன்னோட விருப்பம் எல்லாம் இருக்கே”
“நம்ம சக்தி என்ன பத்தாம் கிளாஸா படிக்கறா யோசிக்க!!! மூனாவது தானே படிக்கறா. குழந்தைகள் சீக்கிரம் அடாப்ட் ஆகிப்பா. ஸோ அதைப் பத்தி கவலை வேண்டாம். அவளை நான் பார்த்துக்கறேன். என்னுடைய விருப்பம் என் கணவர் அவரோட துறையில் நல்லா வரணும். இன்னும் பல உயர் பதவிகள் வகிக்கணும். நம்மளை ஏளனம் செய்தவர்கள் முன்னாடி நாம விஸ்வரூப வளர்ச்சி பெற்று சிறப்பா வாழ்ந்து காட்டணும். ஓகே வா!! இப்போ சொல்லுங்கோ ஷிஃப்ட் பண்ணலாமா வேண்டாமா!”
“உனக்கும் சக்திக்கும் ஓகேன்னா அப்புறம் நான் ஏன் யோசிக்கப் போறேன்? ஓகே தென் நாளைக்கே அந்த ஆஃபரை அக்செப்ட் பண்ணிடறேன் சரியா. சக்தி குட்டி நாம ஹைதராபாத் போக போறோம்”
“ஐய்யா ஜாலி ஜாலி. அப்பா அப்போ புது ஸ்கூல்ல என்னை சேர்க்கப் போறயா?”
“ஆமாம் குட்டிமா புது ஸ்கூல், புது யூனிஃபார்ம், புது ஃபெரன்ட்ஸ், புது டீச்சர்ஸ்…குட்டிமாக்கு ஓகே தானே? நாம போகலாமா?”
“ஓ!! போகலாம்ப்பா”
அன்று இரவு உணவருந்தியதும் வழக்கம் போல மிருதுளாவும் நவீனும் ஈமெயில்களை செக் செய்தனர். நவீனின் ஈமெயிலுக்கு வந்திருந்த இன்னுமொரு ஆஃபர் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மூன்று மாதுக்கு முன் நவீன் அடென்ட் செய்திருந்த எமிரேட்ஸ் நிறுவனம் நடத்திய இன்டர்வியூவில் தேர்வாகியிருப்பதாகவும், துபாயில் வேலை என்றும், ஃப்ளைட் டிக்கெட், இன்ஷுரன்ஸ், வீடு மற்றும் மாத சம்பளம் எட்டாயிரம் திர்ஹாம்ஸ் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் இருவருக்கும் மகிழ்ச்சி பொங்கியது. மிருதுளா நவீனிடம்
“ஹேய் நவீ வாழ்த்துகள் பா. சூப்பர்.”
“தாங்க்ஸ் மிருது ஆனா இப்போ வந்திருக்கே !! போன மாசம் வந்திருந்தா உடனே சரி சொல்லியிருக்கலாம் ஆனா இப்போ போய் அனுப்பிருக்காளே!!!
“அதனால் என்ன நவீ. நாம டிசைட் பண்ணுவோம்.”
“சரி உனக்கென்ன தோணுது நாம ஹைதராபாத் போகலாமா இல்லை துபாய் போகலாமா?”
“எனக்கு சில காரணங்களுக்காக துபாய் போகணும்ன்னு தோணுது”
“எனக்கும் புரியறது. ஆனா மிருது அங்க அவ்வளவு தூரம் போய் நம்மூர் காசுன்னு பார்த்தா என்பதாயிரம் தான் வருது ஆனா இங்க நம்ம ஹைதராபாத்தில் நமக்கு அதுக்கு மேலேயே சம்பளம் வருதே அப்புறம் எதுக்கு நாம கடல் தாண்டி போகணும் சொல்லு. ஹைதராபாத்தில் கிடைத்துள்ள வேலையை விட சம்பளம் அதிகமாக இருந்திருந்தால் யோசிச்சிருக்கலாம்…என்ன சொல்லுற”
“அதுவும் சரி தான். சும்மா வெளிநாட்டுல இருக்கோம்… அப்படீன்னு சொல்லிக்கறதுக்காக அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை தான் ஆனா இப்படி யோசிச்சுப் பாருங்கோ ஒரு வேலை அங்கே சம்பள உயர்வு கொடுத்தா!!”
“உடனே எல்லாம கிடைக்காது மிருது. ஒரு இரண்டு மூன்று வருஷங்கள் ஆகும் அதுக்கு. என்னை பொருத்த வரை அது வேண்டாம்ன்னு வைக்கலாம்ன்னு தோணுது. உனக்கு போகணும்னு இருந்தா நான் அதை அக்செப்ட் பண்ணறேன் சரியா”
“இல்ல நவீ நீங்க சொல்லுறது தான் சரி. அதுபடியே செய்வோம். நாம ஹைதராபாத்தே போவோம். நீங்க இந்த இமெயிலுக்கு வேண்டாமென்று பதில் அனுப்பிடுங்கோ”
“சரி அனுப்பிடறேன். நீ போய் தூங்கு மிருது.”
என்று நவீன் சொன்னதும் மிருதுளா தூங்கப் படுத்துக் கொண்டாள். ஆனால் அவளால் தூங்க முடியவில்லை. நவீனும் இமெயில் அனுப்பிவிட்டு வந்து படுத்தான். மிருதுளா தூங்காததைப் பார்த்த அவன்
“என்ன மிருது தூக்கம் வரலையா?”
“ச்சே இந்த இமெயில் போன மாசம் வந்திருக்கக் கூடாது!!! கடவுள் நம்மளை வைத்து நல்லா விளையாடுறார் நவீ”
“எல்லாம் நல்லதுக்கே மிருது. இப்படி யோசியேன். இப்போ நமக்கு நல்லா தெரிஞ்சுடுத்து எனக்கு துபாயிலும் வேலை கிடைக்கும்ன்னு சரியா”
“ஆமாம் ஆமாம் அது உண்மை தான்”
“அதுவும் எந்த வித டெக்னிக்கல் நாளேட்ஜ் இல்லாமயே..”
“அதை சொல்லுங்கோ.”
“ஒரு மூணு இல்ல அஞ்சு வருஷம் போகட்டும் அப்புறமா மீண்டும் ட்ரை செய்வோம். அப்போ கிடைச்சா பார்ப்போம் என்ன சொல்லுற மிருது?”
“ஓகே நவீ. டன். குட் நைட்”
“குட் நைட் மிருது.”
என இருவரும் வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தும் வேண்டாமென முடிவு செய்து ஹைதராபாத் செல்ல முடிவெடுத்தனர். அந்த வேலையில் சேருவதற்கு முன் பெற்றவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக ஊருக்கு மூவருமாக சென்றனர். எப்போதும் போவது போலவே ராமானுஜம் அம்புஜம் வீட்டிற்கு சென்றனர். அங்கு இரண்டு நாட்கள் தங்கி அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு பின் மூத்த தம்பதியர் வீட்டிற்கு சென்றனர். அங்கேயும் இரண்டு நாட்கள் தங்கினார்கள். அப்போது மூத்த தம்பதியரின் முன்னாள் வசித்த வீட்டை (நவீன் வாங்கிய வீட்டை) பார்க்க சென்றனர் நவீனும் மிருதுளாவும்.
அங்கே நவீனின் நண்பன் வீட்டிற்கு முதலில் சென்றனர். நண்பன் விச்சு என்கிற விஸ்வநாதன் அவர்களை வரவேற்றான். அப்போது விச்சுவின் அம்மா அப்பா நவீனிடம்…
“வாப்பா நவீன் எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் மாமா அன்ட் மாமி. எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கோ. இதோ இவ தான் என் பொண்ணு சக்தி”
“வாடி வாடி குட்டி”
“ஏம்ப்பா நவீன் உங்க அம்மா அப்பா எல்லாரும் எப்படி இருக்கா?”
“எல்லாரும் நல்லா இருக்கா மாமி. நீங்க எல்லாரும் ஒரே ஊருக்குள்ள இருந்துண்டு வெளியூர்லேந்து வந்திருக்குற என் கிட்ட கேட்கிறேங்களே மாமி”
“என்னப்பா பண்ணறது!!! உங்க அப்பா அம்மா இங்கேந்து உன் தம்பி வாங்கின அப்பார்ட்….மென்ட்டுக்கு போணதுக்கப்புறம் எங்க இந்த பக்கம் எல்லாம் வர்றா? ஒரு ஃபோன் கூட இல்லை. பெரிய ஆளாகிட்டா போல நாங்கள் எல்லாம் இன்னும் இதே கிராமத்துல அப்படியே தான் இருக்கோம்ப்பா. நீயாவது எங்களை எல்லாம் மறக்காம வந்து பார்த்தயே அதுவரைக்கும் சந்தோஷம் தான். இந்தா ஜுஸ் குடிங்கோ”
“தாங்க்ஸ் மாமி. நாங்க பொய் சொல்ல விரும்பலை. ஆக்சுவலா எங்க வீட்டைப் பார்க்கத் தான் வந்தோம் அதுக்கு முன்னாடி விச்சுவையும் உங்க எல்லாரையும் பார்த்துடலாம்ன்னு இங்க வந்தோம் மாமி.”
“பரவாயில்லைப்பா. ஆமாம் உங்க வீட்டை வாடகைக்கு விட்டிருக்காளே அப்புறம் எப்படி இப்போ பார்ப்பேங்கள். வாடகைக்கு இருக்கறவா ரெண்டு பேருமே வேலைக்கு போறவாளாச்சே. இப்போ இருக்க மாட்டாளே”
“என்னது வாடகைக்கு விட்டிருக்காளா?”
“ஆமாம் நவீன். உங்க அப்பா அம்மா இங்கேருந்து ஷிஃப்ட் ஆனதுமே வாடகைக்கு விட்டுட்டாளே!!! உனக்கு தெரியாதா? நீ வாங்கின வீட்டை உனக்கே தெரியாம வாடகைக்கும் விட்டுருக்காளா? உங்க அம்மா கெட்டிகாரி தான்ப்பா? ஆமாம் அந்த வீடாவது உன் பேரில் இருக்கா இல்லை அதையும் ….”
“இல்லை எனக்கு இந்த விஷயம் இப்போ நீங்க சொல்லி தான் தெரியும். அதுவுமில்லாம இந்த வீடுகளுக்கெல்லாம் பட்டா இல்லையே. அதுவுமில்லாம எங்க வீட்டை இன்னும் ரிஜிஸ்டரே பண்ணலை.”
“அட அட வாங்க வாங்க. நவீன்… உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு தாத்தா பாட்டி வந்திருக்கா பாரு”
“வாங்க தாத்தா, வாங்க பாட்டி. எப்படி இருக்கீங்க? உங்க பேரன் என்ன பண்ணறான்?”
“நல்லா இருக்கோம்ப்பா நவீன். நீ வந்திருக்கன்னு கேள்வி பட்டேன் அதுதான் வந்து பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தோம்ப்பா. எல்லாரும் எப்படி இருக்கீங்க? இது தான் உன் பொண்ணா? “
“நல்லா இருக்கோம் தாத்தா. ஆமாம் அவ பேரு சக்தி”
“என்ன மும்முரமா பேசிகிட்டு இருந்தீங்க?”
“அது ஒண்ணுமில்லை பாட்டி விச்சு அம்மா நம்ம வீட்டைப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தாங்க. அதை வாடகைக்கு விட்டிருக்காங்களாமே!”
“என்னப்பா உன் வீட்டை வாடகைக்கு விட்டது உனக்கு தெரியாத மாதிரி கேட்குற?”
“பாருங்க இந்த புள்ள எப்படி இருக்கான்னு. அதைப் பத்தி தான் பேசிகிட்டிருந்தோம். அது தான் கேட்டேன் வீடாவது உன் பெயர் ல இருக்கா இல்லை அதையும் உனக்கு தெரியாமையே ஏதாவது செய்துட்டாங்களான்னு”
“தாத்தா இவங்க வீடெல்லாம் ரிஜிஸ்டர் பண்ணிட்டாங்களாமே!! நம்ம தெரு வீடெல்லாம் இன்னும் ரிஜிஸ்டர் ஆகலை இல்லையா?”
“என்னப்பா நவீன் பேசுற?”
“ஏன் தாத்தா?”
“எங்க வீடு ரிஜிஸ்டர் ஆனதுமே உங்க வீட்டையும் ரிஜிஸ்டர் பண்ணணும்ன்னு உன் அம்மா என்கிட்ட சொல்லி அதுக்கு நாளெல்லாம் பார்த்து உன் அப்பா, தம்பின்னு யாரையும் அழைச்சுக்காம வந்து வீட்டை அவங்க பேர்ல ரிஜிஸ்டர் பண்ணிகிட்டாங்களே. என்னை தான் ரிஜிஸ்டர் ஆஃபீஸுக்கு கூட்டிகிட்டு போக சொன்னாங்க. அது முடிஞ்சு ஒரு ஏழு எட்டு வருஷம் ஆச்சே!!! நான் அவங்களை கூட்டிக்கிட்டு போனபோது கூட கேட்டேனே நவீன்ட்ட சொல்லிட்டேங்களான்னு !! அதுக்கு அவங்க எல்லார்கிட்டேயும் சொன்னதுக்கப்புறமா தான் ரிஜிஸ்டர் ஆஃபீஸுக்கே வந்தேன்னு இல்ல சொன்னாங்க!!! நீ என்னடான்னா இப்படி கேட்குற!!”
“என்னது ரிஜிஸ்டர் பண்ணிட்டாங்களா?”
“அட ஆமாம் பா. நான் தானே கூட்டிகிட்டு போனேன் எனக்கு தெரியாதா என்ன?”
“பார்த்தீங்களா இந்த புள்ள இப்படி இருக்கானே!!! அம்மா மிருது நீ தான் இவனை காப்பாத்தணும்.”
“எப்பவாவது இவர்கிட்ட சொல்லிருப்பாங்க…இவர் மறந்திருப்பார்ன்னு நினைக்கிறேன்.”
“இல்ல மிருது என் கிட்ட எதுவுமே சொல்லலை. இதெல்லாமே இப்போ தான் எனக்கு தெரிய வருது”
என்று மிருதுளா மூத்த தம்பியரை விட்டுக்கொடுக்காமல் பேசினாலும் நவீன் தன் ஏமாற்றத்தை வெளிப் படுத்தியதும் எவருக்கும் தெரியாதவாறு அவன் கையை பிடித்து அழுத்தி பேசாமல் இருக்கச் சொன்னாள். நவீனும் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தான். அப்போது மிருதுளா அவர்களிடம்
“சரி விச்சு, அம்மா அப்பா, பாட்டி தாத்தா நாங்க போய் அந்த வீட்டைப் பார்த்துட்டு அப்படியே ஊருக்கு கிளம்பறோம். வரட்டுமா!”
“நவீன் நீ ஒண்ணும் கவலைப் படாதேப்பா அம்மா தானே போய் கேளு!! கேட்டதும் உன் பெயருக்கு மாதத்திக் குடுத்துடப் போறாங்க அவ்வளவு தானே. போய் பேசுப்பா”
“சரி பாட்டி”
என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்ததும் விச்சு நவீனிடம்
“என்னடா நவீன் இதெல்லாம் உனக்கே தெரியாம நடத்தியிருக்காங்க உன் அம்மா. எதுக்கும் நீ அவங்க கிட்ட ஜாக்கிரதையா இருந்துக் கோடா!!”
என்று கூறி அவர்களை வழியனுப்பி விட்டு வீட்டினுள் சென்றான் விச்சு. நவீன் இடிந்து போய் மெல்ல மெல்ல அடியெடுத்து நடந்து அவன் முதன்முதலில் வாங்கிய வீட்டை வெளியிலிருந்து பார்த்தான். பின் மிருதுளாவிடம்…
“எப்படி ஏமாத்திருக்கா பாரேன் மிருது. இவாளை!!!”
“என்ன பண்ணப் போறேங்கள் நவீ?”
“இப்பவே போய் வீட்டை என் பேருக்கு மாத்திட்டு தான் நாம ஹைதராபாத் போறோம்”
“நவீ உங்க அம்மா நாலு புள்ளகளாச்சேன்னு பயத்துல அந்த வீட்டை தன் பேருல ரிஜிஸ்டர் பண்ணிருப்பான்னு நினைக்கிறேன்”
“ஏன் அதை என் கிட்ட சொல்லிட்டு பண்ணிருக்கலாமே….இரு இரு இரு….இப்போ தான் எனக்கு ஒரு விஷயமே ஞாபகத்துக்கு வர்றது”
“என்ன நவீ?”
“நான் வீட்டை வாங்க பிச்சுமணி மாமாகிட்ட பணம் கடனா வாங்கியிருந்தேன். அப்போ மாமா இந்த வீட்டை வாங்கின அன்னைக்கு ஹாலில் உட்கார்ந்துக் கொண்டு என் கிட்ட வீட்டை ரிஜிஸ்டர் பண்ண முடிந்ததும் என் பெயரில் பண்ணிக்கச் சொன்னா…அதுக்கு ரீஸனா…நாலு புள்ளகள் இருக்கா ஸோ அப்பா ஆர் அம்மா பேர்ல பண்ணினா நாளைக்கு பிரச்சினை வரலாம் அதுனால என் பேருலயே பண்ணிக்கச் சொன்னா….அப்போ என் அம்மா அங்கே இருந்தா. எல்லாத்தையும் கேட்டா ஆனா ஒண்ணுமே சொல்லலை. இவ்வளவும் தெரிஞ்சிருந்தும் இப்படி திருட்டுத்தனமா இந்த வேலையை செய்திருக்கா பாரேன்”
“சரி அதுக்கு இப்போ நாம என்ன பண்ணமுடியும் நவீ”
“நான் இந்த வீட்டை ரெனவேட் பண்ணப் போறேன். நாம வந்தா இனி இங்கேயே தங்கிக்கலாமில்லையா. வாடகைக்கு விட்டதைப் பத்தி மூச்சு விடலை பாரேன்”
“நவீன் நடக்கறதை பேசுங்கோ. இந்த வீட்டை ரெனவேட் பண்ணணும்னா எப்படியும் ஒரு அஞ்சு ஆறு லட்சம் ஆகும். இந்த வீடோ உங்க அம்மா பேருல இருக்குன்னு இப்போ தான் நமக்கே தெரிய வந்திருக்கு அப்படி இருக்கும் பட்சத்தில் நாம மேல அவ்வளவு செலவு செய்ய எனக்கு இஷ்டமில்லை. அதுவுமில்லாம வீடு தான் போச்சு மறுபடியும் அதுல செலவு செய்து தானம் பண்ண வேண்டாம்ன்னு நினைக்கறேன்”
“என்ன சொல்லுற மிருது. இது என்னோட முதல் சம்பாத்தியத்தில் வாங்கின வீடு தெரியுமா. இதை நான் அந்த பாட்டி சொன்னா மாதிரி என் பெயருக்கு மாற்றி தரச் சொல்லப் போறேன்”
“ஹா!!ஹா!!ஹா!!”
“என்ன சிரிக்கற மிருது?”
“பின்ன என்ன நவீ!!! முதல்ல உங்க அம்மா பாவம்ன்னு நினைச்சேன் ஆனா எப்போ நீங்க பிச்சுமணி மாமா சொன்னதையும் அதற்கு உங்க அம்மா ஒண்ணும் சொல்லாததையும் சொன்னேங்களோ அப்பவே நல்லா புரிஞ்சிடுத்து உங்க அம்மா பக்காவா ப்ளான் பண்ணி தான் எல்லாம் செய்திருக்கான்னு. அப்பப்பா இப்படி ஒரு தந்திரகாரியை எங்கேயுமே பார்க்க முடியாது போல!!! ஆனா இப்போ போய் நீங்க வீட்டை உங்க பேருக்கு மாத்தி எழுதித் தரச்சொன்னா அவா செய்ய மாட்டா… பிரச்சினை தான் வரும்.”
“அதுக்காக அப்படியே விட முடியுமா?”
“வேண்டாம் ஆனா இதுல உங்க அப்பா அன்ட் அம்மாவுக்கு எந்த பாதகமும் வராதபடி செய்ய வேண்டும். அதுக்கு அவா நாம சொல்லறதை காது கொடுத்து கேட்க வேண்டும்”
“என்ன சொல்ல வர மிருது. எனக்கு புரியலை”
“இங்க பாருங்கோ நவீ…சப்போஸ் உங்க அம்மா இன்செக்யூரிட்டி ஃபீலிங்கால அப்படி செய்திருந்தான்னா நாம செக்யூர்டு ஃபீல் கொடுப்போம். அப்போ செய்வான்னு நம்பறேன் அவ்வளவு தான்”
“அது என்ன செக்யூர்டு ஃபீல்?”
“அதாவது இந்த வீடு நீங்க முழு பணம் கொடுத்து வாங்கியது ஆனா உங்க அம்மா அவா பேருக்கு ரிஜிஸ்டர் பண்ணிண்டுட்டா சரியா ஸோ அது உங்க அம்மா பெயர்லேயே இருந்துட்டு போகட்டும், இந்த வாடகையும் அவாளே வச்சுக்கட்டும்…ஆனா உங்க அம்மா அப்பா காலத்துக்கு அப்புறம் அந்த வீடு உங்களுக்கு தான்னு ஒரு அக்ரிமென்ட் போட்டுண்ட்டா போறது. இது படி செய்தா உங்க அம்மாவையும் புண்படுத்தாமல் இருக்க முடியும் அதே சமயம் நீங்க வாங்கின உங்க முதல் வீடும் உங்க கிட்டேயே வந்திடும் என்ன சொல்லறேங்கள்? அதுக்கப்புறமா இதை ரினவேட் பண்ணலாம்”
“சூப்பர் ஐடியா மிருது. உன்னை என் அம்மா அப்பா அவ்வளவு படுத்தியிருந்தாலும் நீ அவாளுக்கு நல்லதே தான் நினைக்கற. யூ ஆர் க்ரேட் மிருது.”
“நீங்க பாராட்டுற அளவுக்கெல்லாம் நான் ஒண்ணும் பெரிசா செய்திடலை நவீ. நீங்க இப்போ செலவழிக்க இருக்கும் நம்ம பணமான ஐந்து லட்சத்தை காப்பாத்தியிருக்கேன் அவ்வளவு தான்”
“ஆனாலும் வீட்டை அவா பெயர்லேயே இருக்கட்டும்ன்னு சொன்னே இல்ல அது ரியலீ க்ரேட் தான்.”
“நவீ அதுலேயும் எந்த க்ரேட்னஸும் இல்லை. இந்த வீடு நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி வாங்கினது ஸோ அதுல என்னைவிட உங்களுக்கும், உங்க பேரன்ட்ஸுக்கும் தான் உரிமை அதிகம் அதனால் தான் அப்படி சொன்னேன். இதே நம்ம ரெண்டு பேருமா இப்போ வாங்கின வீடுன்னா நிச்சயம் அப்படி சொல்லியிருக்க மாட்டேன். அதுவுமில்லாம அப்பா வாங்கின முதல் வீடுன்னு நம்ம சக்திக்கு நாளைக்கு காட்டணும் இல்லையா அதுனாலயும் தான் அப்படி சொன்னேன். சரி சரி கிளம்பலாமா?”
“போகலாம் மிருது. முதல்ல போய் இதைப் பத்தி கேட்டாகணும்”
“கேளுங்கோ தப்பில்லை ஆனா எனக்கென்னவோ இவ்வளவு பண்ணியிருக்குற உங்க அம்மா ஒத்துக்க மாட்டான்னு தான் தோணறது…ஸோ டோன்ட் ஹாவ் ஹை ஹோப்”
“அவா பேருலையே தானே இருக்க போறது அதுனால சம்மதிப்பா சம்மதிப்பா”
“பார்ப்போம். அதையும் பார்க்கத் தானே போறோம்”
தொடரும்…….