நவீன், மிருதுளா, சக்தி மூவரும் பெங்களூரில் ஒரு சிறிய சிங்கிள் பெட்ரூம் வீட்டிற்கு குடி வந்தனர். அவர்களுடன் அம்புஜமும் ராமானுஜமும் ஒரு வாரம் அவர்களுடன் இருந்து மிருதுளா நவீன் இருவரும் அவரவர் வேலைகளை கவனிக்கும் நேரம் சக்தியை பார்த்துக் கொள்வதற்காக வந்திருந்தனர். சக்தியை புது ஸ்கூலில் சேர்த்தனர். வீட்டுக்கு வேண்டிய பொருட்கள் எல்லாம் வாங்கி வந்தனர். அவற்றை எல்லாம் அது அது இடத்தில் வைத்தனர் அம்புஜமும் ராமானுஜமும். சமையலை அம்புஜம் பார்த்துக் கொண்டாள். ஒரு வாரம் பறந்தது. ராமானுஜம் ஊருக்கு கிளம்பலாம் என்று அம்புஜத்திடம் சொல்ல அதற்கு
“ஏன்னா நீங்க கிளம்புங்கோ நான் இங்கேயே இந்த மாசம் இருந்துட்டு வர்றேனே. அதுதான் இப்போ வேனுவும் ஆத்துல இல்லையே. அவனும் மேல் படிப்புக்காக லண்டன் போயிருக்கானே. நீங்களும் உங்க வேலைக்கு போயிடுவேங்கள். நான் மட்டும் தனியா அங்க இருக்கறதுக்கு நம்ம சக்திக் குட்டியோட இங்க இருந்துட்டு வர்றேனே”
“ம்…நீ என்ன சொல்லுற மிருது? நீங்க என்ன சொல்லறேங்கள் மாப்ள?”
“எனக்கு சந்தோஷம் தான் பா”
“எங்களுக்கு ஓகே தான். ஆனா நீங்க எப்படி சம்மாளிப்பேங்கள்?”
“அதெல்லாம் நான் பார்த்துக்குவேன். அப்போ சரி நான் இன்னைக்கு நைட்டு பஸ்ஸில் கிளம்பறேன்”
“நான் உங்களை வந்து பஸ் ஏத்தி விட்டுட்டு வர்றேன்.”
அன்றிரவு உணவு அருந்தியதும் ராமானுஜத்தை பஸ் ஏத்திவிட்டு வந்தான் நவீன். மறுநாள் இருவருக்கும் வேலையில் சேர வேண்டிய முக்கியமான நாள் என்பதால் சீக்கிரம் படுத்துக் கொண்டனர். ஆனால் இருவருக்கும் ஒரே காரணத்தால் உறக்கம் வராமல் படுத்திருந்தனர். மிருதுளா மனதில் பதற்றம் இருந்துக் கொண்டே இருந்தது. அதற்கான காரணம் வேலையில் சேர்வதற்கு முன்னே ஹெச்.ஆர் மிருதுளாவிடம் அவளுக்கு கிடைக்கும் ப்ராஜெக்ட்டை பொருத்து தான் நைட் ஷிப்ட் ஆர் டே ஷிப்ட் என்பது டிசைட் ஆகும் என்றும் அது ஒரு மாத கால ட்ரெனிங் முடிந்து தான் தெரியுமென்றும் சொல்லி இருந்தார். அதை நவீனிடம் கூட கூறாமல் இருந்ததால் வந்த பதற்றம். நவீனிடமும் ஹெச்.ஆர் அதையே கூறியிருந்தார் அதை நவீனும் மிருதுளாவிடம் கூறாமல் இருந்தான். அதை எண்ணிக் கொண்டு அவனும் தூங்காமலிருந்தான். இருவரும் புரண்டு படுத்ததில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதும்
“நவீ இன்னுமா தூங்கலை?”
“நீ ஏன் இன்னும் தூங்கலை மிருது?”
“அது வந்து…..நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லாம மறைச்சுட்டேன். அதை சொன்னா நீங்க ஒத்துக்க மாட்டேங்களோ, அதுனால உங்க சர்வீஸை விட்டு வர மாட்டேங்களோன்னு நினைச்சு சொல்லலை. ஆனா அது என்னை பல நாளா தூங்க விடாம படுத்தறது. நாளைக்கு புது வேலையில் ஜாயின் பண்ணப் போறோம் அதுனால உங்கள்ட்ட சொல்லலாமா வேண்டாமான்னு யோசிச்சுண்டு இருந்தேனா தூக்கம் வரலை. சரி நீங்க ஏன் தூங்காம இருக்கேங்கள்”
“ம்….நீ எந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாம தவிக்கறயோ அதே விஷயம் தான் என்னையும் தூங்க விடாம பண்ணறது!”
“எந்த விஷயத்துக்காகன்னு நான் இன்னும் உங்ககிட்ட சொல்லவேயில்லையே”
“சொல்லணுமா என்ன? நைட் ஷிப்ட் வந்திடுமோன்னு தானே கவலைப்படுற!”
“அட ஆமாம் நவீ. யூ ஆர் க்ரேட் பா”
“இதுல க்ரேட்னஸ் ஒண்ணுமே இல்லை மிருது. நீயும் நானும் ஒண்ணா தானே இன்டர்வியூ அடென்ட் பண்ணினோம் அப்போ என் கிட்டேயும் தான் சொன்னா”
“ஓ!!! ஓகே ஓகே!! அப்போ நீங்க ஏன் என் கிட்ட சொல்லலை? நான் சொல்லாமல் இருந்த காரணத்தை சொல்லிட்டேன். ஆனா நீங்க ஏன் மறைச்சேங்கள்?”
“எனக்கு தெரியும் உன்கிட்டேயும் இதை சொல்லியிருப்பான்னு ஆனா நீ என்னிடம் சொல்லாத போது நான் புரிஞ்சுண்டுட்டேன் யூ ஆர் ஓகே வித் இட். நீயே நம்மளோட நல்லதுக்காக ஏத்துண்டதுக்கப்புறமா நான் அதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கக் கூடாதுன்னு தான் சொல்லலை மிருது.”
“பார்ப்போம் ஒரு மாசம் கழிச்சு தானே அதைப் பத்தி தெரியும். அப்போ பார்த்துக் கொள்வோம். அப்பாடா என் மனசை உருத்திண்டே இருந்த விஷயத்தை இறக்கி வச்சுட்டேன். இனி நிம்மதியா தூங்கறேன் நவீ. குட் நைட்”
“குட் நைட் மிருது”
என்று நவீன் சொன்னாலும் அவன் மனதில் ஒரு விதமான கலக்கம் இருந்துக் கொண்டேதான் இருந்தது. மிருதுளாவிற்கு நைட் ஷிப்ட் வந்தால் என்ன செய்வாளோ!! அவளால் முடியுமா? என்ற கவலைகள் அவனை தூங்கவிடாமல் செய்தது.
மறுநாள் விடிந்தது. அம்புஜம் விடியற் காலையில் எழுந்து காலை டிபன், மத்திய சாப்பாடு என அனைத்தையும் செய்து வைத்தாள். அதைப் பார்த்த மிருதுளா
“அம்மா சுப்பர் மா. எப்போ எழுந்துண்ட நீ?”
“நான் எப்பவும் போல விடியற் காலையிலேயே எழுந்துண்டேன் மிருது. சரி இங்க எல்லாமே வச்சிருக்கேன் நீங்க சாப்டுட்டு மத்தியானத்திற்கு வேண்டியதை டிபன் பாக்ஸில் கட்டிக்கோங்கோ. சக்திக்கு என்ன குடுக்கணுமோ அதை நானே பையில் போட்டு வச்சுட்டேன். அவளை ரெடி பண்ணி நீங்க ரெண்டு பேரும் கிளம்பறதுக்குள்ள ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடறேன்”
“அம்மா நீ சாப்பிட்டயா?”
“இதோ இவளை விட்டுட்டு வந்து சாப்பிட்டுக்கறேன்”
என்று சக்தியை வழக்கம் போல ரெடி செய்து ஸ்கூலில் விட்டு வரச் சென்றாள் அம்புஜம். அந்த நேரத்தில் மிருதுளாவும், நவீனும் ஆஃபீஸுக்கு கிளம்பினர். அவர்கள் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அம்புஜம் சக்தியை விட்யுவிட்டு வந்தாள்.
“என்ன மிருது நீங்க டிபன் பாக்ஸ் இன்னும் கட்டிக்கலயா?”
“அம்மா எங்களுக்கு சாப்பாடும் அவாளே தருவா மா. அதுனால நாங்க நைட் வந்து சாப்பிட்டுக்கறோம். சரியா”
“ஓ!! அப்படியா சரி.”
நவீனும் மிருதுளாவும் சாப்பிட்டு எழுந்ததும் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது டாடா சூமோ வண்டி. உடனே அவர்கள் இருவரும் அம்புஜத்திற்கு பை சொல்லிவிட்டு வண்டியில் ஏறினார்கள். அவர்களுக்கு ஆபிஸில் ட்ரெயினிங் ஆரம்பமானது. காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை இருந்தது. ஒரு மாத காலம் முடிந்ததும் மீண்டும் ஒரு இன்டர்வியூ ஹெச். ஆரால் நடத்தப்பட்டு அவரவருக்கான பாராஜெக்ட் டீம் அறிமுகப் படுத்தப்பட்டது.
ஒரு மாத காலம் ஒன்றாக ஆபீஸ் சென்று வந்துக் கொண்டிருந்த நவீன் மிருதுளாவுக்கு அன்று பெரிய முடிவெடுக்க வேண்டிய நாளாக அமைந்தது. மிருதுளாவுக்கு வழங்கப்பட்ட ப்ராஜெக்ட் நைட் ஷிப்ட் வேலை என்றும் மாலை ஏழு மணி முதல் விடியற்காலை மூன்று மணி வரை என்றும் அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நவீனுக்கு வழங்கப்பட்ட ப்ராஜெக்ட் டே ஷிப்ட் வேலை காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை என்று அளிக்கப்பட்டது.
இருவரும் காரில் வீட்டிற்கு திரும்பி வரும்போது ஒன்றுமே பேசாமல் வந்தனர். வீட்டுக்குள் சென்று முகம் கை கால் அலம்பி அம்புஜம் செய்து வைத்திருந்த டிபனை சாப்பிட்டனர். அப்போது அம்புஜம்
“மிருது நான் ஊருக்கு கிளம்பட்டுமா? காலையில நீங்களே சக்தியை ஸ்கூல்ல விட்டுடலாம் சாயந்தரம் தான் என்ன பண்ணறதுன்னு தெரியலை”
“அம்மா இப்போ நிலைமையே வேற”
“என்ன ஆச்சு மிருது”
“அம்மா எங்களோட ட்ரெயினிங் இன்னையோட முடிஞ்சிடுத்து. வர திங்கட்கிழமை முதல் எனக்கு நைட் ஷிப்ட் நவீக்கு டே ஷிப்ட்”
“அச்சச்சோ இது என்னடி இப்படி. நீங்க புருஷன் பொண்டாட்டின்னு அவாளுக்கு தெரியாதா என்ன?”
“ஹா!ஹா!ஹா! அம்மா என்னோட சங்கடத்திலும் உன்னோட இந்த கேள்வி என்னை சிரிக்க வச்சுடுத்து. அப்படி எல்லாம் அவா யோசிக்க மாட்டா. நவீக்கு கிடைச்சிருக்குற ப்ராஜெக்ட்டும் எனக்கு கிடைச்சிருக்குற ப்ராஜெக்ட்டும் அப்படி என்ன பண்ண?”
“சரி நான் ஒண்ணு பண்ணறேன். இன்னைக்கு நைட் பஸ்ஸில் ஊருக்கு போயிட்டு அங்க வீட்டை சுத்தம் செய்துட்டு அப்பாக்கு ஏதாவது செய்து வச்சுட்டு ஞாயிற்றுக்கிழமை நைட் பஸ்ஸை பிடிச்சு திங்கள்கிழமை காலையில வந்துடறேன் என்ன சொல்லறேங்கள்!”
“அம்மா உனக்கு ஏன் மா வீண் சிரமம். அது தான் நவீன் டே ஷிப்ட் தானே அவர் காலையில சக்தியை ஸ்கூல்ல விட்டுட்டு வந்திடுவார் நான் சாயந்தரம் ஐந்து மணிக்கு தானே போகணும் அதுனால நான் போய் அவளை ஸ்கூல்லேந்து கூட்டிண்டு வந்திடுவேன். நீ போய் உன் வீட்டை பாரும்மா. சரியா”
“உங்களால முடியுமா மிருது?”
“அம்மா முடிஞ்சு தான் ஆகனும். எவ்வளவு நாள் தான் நீயும் எங்களுக்காக இங்கேயே இருப்ப? நாங்க பார்த்துக்கறோம் நீ கவலைப்படாம போயிட்டு வா”
என்று அம்புஜத்தை அன்றிரவு பஸ்ஸில் ஏற்றி விட்டனர் நவீனும் மிருதுளாவும். பின் வீட்டுக்கு வந்ததும் நவீன் மிருதுளாவிடம்
“ஏய் மிருது என்ன இது இப்படி ஆயிடுத்து?”
“ஆமாம் என்ன பண்ண நவீ?”
“நாம ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கறதே காலையில அன்ட் ஈவினிங் கொஞ்ச நேரம் தான் முடியும்”
“ஆமாம். அதுதான் வீக்கென்ட் டூ டேஸ் லீவிருக்கே நவீன்”
“இது சரியா வருமா மிருது?”
“எல்லாம் சரியா வரும் நவீ. அப்படி வராவிட்டால் அப்போ பார்த்துப்போம். ட்ரை பண்ணாமலே முடியுமா முடியாதான்னு என்னத்துக்கு யோசிச்சுண்டு நம்மளை நாமே குழப்பிக்கணும்”
“ம்….அதுவும் சரிதான். ஆனா உன்னால நைட் ஷிப்ட் பண்ண முடியுமா?”
“லெட் மீ ட்ரை நவீ”
“சரி பார்ப்போம்.”
என்று இருவருக்குள்ளும் சரிவருமா வராதா என்ற குழப்பங்களும், சந்தேங்கங்களும் இருந்தது. திங்கட்கிழமை காலை எழுந்து ப்ரேக் பாஸ்ட், லஞ்ச் என் அனைத்தையும் செய்து முடித்து சக்தியை எழுப்பி ஸ்கூலுக்கு செல்ல தயார் செய்தாள் மிருதுளா. நவீன் சக்தியை ஸ்கூலில் விட்டுவிட்டு வந்ததும் அவனுடய ஆபீஸ் கார் வந்தது அதில் ஏறுவதற்கு முன் மிருதுளாவிடம்
“மிருது நல்லா தூங்கிக்கோ. நைட் வேலை பார்க்கணும். சரியா”
“ஓகே நவீ. நீங்க போயிட்டு வாங்கோ”
என்று நவீனை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் வந்து அடுப்படியை சுத்தம் செய்து வீட்டை சுத்தம் செய்து பின் சற்று நேரம் உறங்குவதற்காக படுத்துக் கொண்டாள் மிருதுளா. ஆனால் அவளுக்கு உறக்கம் வரவில்லை. அதனால் எழுந்து மாலை சிற்றுண்டி தயார் செய்து வைத்துவிட்டு சக்தியின் ஸ்கூலுக்கு சென்று அவளை வீட்டுக்கு அழைத்து வந்து அவளை குளிப்பாட்டி உடைகளை மாற்றி டிபன் ஊட்டிவிட்டப் பின் அவளுக்கான சிறிய விளையாட்டை சொல்லிக் கொடுத்து விளையாட வைத்துக் கொண்டே தனது வேலைக்கு கிளம்பினாள் மிருதுளா. அவள் ரெடியானதைப் பார்த்த சக்தி
“அம்மா நாம எங்க போறோம்?”
“நாம இல்லடா குட்டி அம்மா வேலைக்கு போகணுமில்லையா அதுக்குதான் கிளம்பியிருக்கேன்.”
“அப்போ நான்”
“அப்பா இப்போ வந்துடுவாளாம், சக்தி குட்டியை அப்பா பார்த்துப்பாளாம். சக்தி பாப்பா சம்மத்தா அப்பாவை படுத்தாம டின்னர் சாப்பிட்டு தூங்குவாளாம் காலையில நீ முழிக்கும் போது அம்மா சக்தி பாப்பா பக்கத்துல படுத்திருப்பேனாம். எப்படி மேஜிக்”
“ஐயா சுப்பர்”
மணி ஐந்தே முக்கால் ஆனதும் நவீனின் கார் வந்தது. அதிலிருந்து நவீன் இறங்கி வீட்டிற்குள் சென்று ஹாய் சொல்வதற்குள் மிருதுளாவிற்கு வண்டி வந்து வாசலில் நின்றது. உடனே மிருதுளா சக்திக்கும் நவீனுக்கு பை சொல்லிவிட்டு வண்டியில் ஏறி தனது முதல் நாள் நைட் ஷிப்ட் வேலைக்கு புறப்பட்டுச் சென்றாள்.
நவீன் சக்தியுடன் சற்று நேரம் விளையாடி, அவளின் ஸ்கூல் பாடங்களை சொல்லிக் கொடுத்து, ஹோம்வர்க் செய்ய வைத்து, இரவு உணவை சாப்பிட வைத்து, படுப்பதற்கு முன் ஒரு தம்பளர் பால் காய்ச்சி நன்றாக ஆத்தி அதை சக்திக்கு கொடுத்து அவளை தூங்க வைத்தான். பின் தானும் தூங்க முயற்சித்தான் ஆனால் முடியவில்லை. மிருதுளா பற்றிய கவலை அவனை தூங்க விடாமல் செய்தது. எழுந்து சென்று சற்று நேரம் டிவி பார்த்தான். கடிகாரத்தைப் பார்த்தான் மணி ஒன்று என காட்டியது. டிவியை ஆஃப் செய்து விட்டு சக்திப் பக்கத்திலேயே சென்று படுத்துக் கொண்டான். தன்னை அறியாமல் அசந்து போனான்.
சட்டென வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. விருட்டென்று எழுந்து வேகமாக சென்று கதவைத் திறந்தான். மிருதுளா நின்றிருந்தாள். அவளை உள்ளே வரச்சொல்லி கதவை சாத்திவிட்டு கடிகாரத்தைப் பார்த்தான் அது மணி நான்கு என்று காட்டியது. மிருதுளா தனது உடைகளை மாற்றிவிட்டு நேராக சக்தியின் அருகில் சென்று படுத்துக் கொண்டாள். நவீன் ஹால் லைட்டை ஆஃப் செய்து விட்டு வந்து படுத்துக் கொண்டான். மிருதுளாவிடம் வேலை எப்படி இருந்தது என்று கேட்டான் ஆனால் பதில் ஏதும் வரவில்லை. உடனே எழுந்து பார்த்தான். மிருதுளா நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை தொந்தரவு செய்யாமல் அவனும் படுத்து நிம்மதியாக தூங்கலானான்.
எப்போதும் சீக்கிரம் எழுந்துக்கொள்ளும் மிருதுளா அன்று விடிந்தும் எழாமல் உறங்கிக் கொண்டிருந்தாள். நவீன் எழுந்து காபி போட்டு குடித்தான். சட்டென ஆறரை மணிக்கு எழுந்தாள் மிருதுளா. ஃப்ரெஷ் ஆகி காபி போட்டு குடித்தாள். அப்போது நவீன் அவளிடம்
“மிருது வேலை எப்படி இருக்கு?”
“நல்லா தான் இருக்கு நவீ. ஆனா என்ன பதினோரு மணிக்கு மேலே தூக்கம் தூக்கமா வந்தது. கொட்டாவி விட்டு விட்டு தலைவலி பிடிச்சிடுத்து அதுதான் வந்ததும் தூங்கிட்டேன். உங்களுக்கு வேலை எப்படி இருந்தது?”
“எனக்கும் நல்லா தான் இருந்தது. இங்க பாரு மிருது நைட் முழிச்சு வேலைப் பார்த்தா நிறைய ரிஸ்க் இருக்கு. நீ நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் ஆபீஸ் போணதுக்கப்புறம் நல்லா தூங்கணும். அப்படி தூங்கலைன்னா அப்புறம் சுருண்டு விழுந்துடுவ புரியுதா!! சரி நான் குளிச்சிட்டு ஆபிஸுக்கு கிளம்பட்டும்”
என்று நவீன் சென்றதும் மிருதுளா டிபன், லஞ்ச் எல்லாம் செய்து வைத்து விட்டு சக்தியை ஸ்கூலுக்கு ரெடி ஆக்கினாள். நவீனும் சக்திமும் சென்றதும் மிருதுளா டிபன் சாப்பிட்டுவிட்டு நேராக சென்று படுத்துறங்கினாள். மதியம் இரண்டு மணிக்கு எழுந்து குளித்து மத்திய சாப்பாடு சாப்பிட்டு மாலை சிற்றுண்டி செய்துவிட்டு சக்தியை ஸ்கூலில் இருந்து அழைத்து வந்து வழக்கம் போல எல்லாம் நடந்தேறியது.
இப்படியே ஒரு வாரம் கடந்தது. மிருதுளா சரியாக தூங்காததால் அவளுக்கு உடம்புக்கு முடியாமல் ஆனது. அதை அம்புஜத்திடம் சொன்னதும் அவள் உடனே கிளம்பி வருவதாக சொன்னாள். அதற்கு மிருதுளா
“இரு மா எப்போ பார்த்தாலும் நீ தான் வந்து எங்களுக்கு ஹெல்ப் பண்ணற. இந்த தடவை எங்க மாமியார் மாமனாரிடம் கேட்கிறேன். இப்போதான் பவினும் ப்ரவினும் படிப்பை முடிச்சாச்சில்லையா… அவா வரலாமே. அதுவுமில்லாம நான் சொல்லலை கேட்கலைன்னு நாளைக்கு அதையும் குத்தமா சொல்லாம இருக்கணும் இல்லையா அதுக்காகவாவது கேட்டுப் பார்க்கறேன். அப்புறமா உன்கிட்ட நீ வருணுமா இல்லையான்னு சொல்லறேன். அனேகமா அவா வரமாட்டா நீ தான் மறுபடியும் வரவேண்டி இருக்கும்…பார்ப்போம்”
“சரி மிருது உங்க ரெண்டு பேருக்கும் எது சரின்னு படறதோ அதுபடியே செய்யுங்கோ. நான் வரணும்னாலும் வரேன். சனி ஞாயிறு இங்க வந்துட்டா போறது.”
“சரி மா நான் அவா கிட்ட பேசிட்டு உன்கிட்ட நீ வரணுமா வேண்டாமான்னு சொல்லறேன். இப்போ ஃபோனை வச்சுடவா?”
என்று கூறி வைத்ததும் நவீனும் மிருதுளாவும் மூத்த தம்பதியருக்கு ஃபோன் போட்டு பேசினார்கள். அப்போது மிருதுளா தன் நிலைமையை எடுத்துக் கூறி உதவி புரியுமாறு கேட்டாள் அதற்கு வழக்கம் போல மூத்த தம்பதியர் மறுத்து விட்டனர். ஃபோனை வைத்ததும் மிருதுளா நவீனிடம்
“இது என்ன நியாயம்!! எப்போ பார்த்தாலும் என் அம்மா தான் ஓடி ஓடி வர வேண்டியிருக்கு!!! முன்னாடி வேனுவையும் அப்பாவையும் விட்டுட்டு விட்டுட்டு வந்தா. இப்போ அப்பாவை விட்டுட்டு வரணும். அவா வரதே நம்மளுக்கு ஹெல்ப் பண்ண இதுல உங்க அம்மா அப்பா என்னடான்னா நம்ம சொந்தகாராகிட்ட எல்லாம் ஏதோ பொண்ணு மாப்பிள்ளை வீட்டிலேயே இருக்கான்னு பரப்பிண்டு இருக்கா. அவா எல்லாரும் என்னடான்னா என்கிட்ட ஃபோன்ல பேசும்போது “உங்க அம்மா இங்க இருக்காளா இல்ல அங்க இருக்காளான்னு” நக்கல் பேச்சை எல்லாம் கேட்க வேண்டியிருக்கு. இவாளால ஒரு சின்ன உபகாரம் கூட இல்ல ஆனா டன் கணக்குல உபதிரவம் கொடுக்கறா.”
“மிருது சொல்லறவா சொல்லிண்டு தான் இருப்பா…நான் எப்பவும் சொல்லறது தான். அதை சொன்னா உனக்கு கோபம் வரும்”
“வராதா பின்ன என்னையும், எனக்கு உதவுற என் குடும்பத்தையும் அசிங்கப் படுத்திண்டே இருந்தா விட்டுண்டே இருக்க முடியுமா சொல்லுங்கோ.”
“முடியாது தான் மிருது ஆனா அவாளை எல்லாம் நம்மால் திருத்த முடியாது மா. அவாளை திருத்த நினைக்குற நேரத்துல நாம நம்ம வேலையைப் பார்த்தா நாம முன்னேற்றம் அடையலாம்.”
“என்னமோ போங்கோ. ஆனா உங்க அப்பா அம்மா பண்ணறது சரியே இல்லை. ஆண்டவன் அவாளுக்கு தண்டனை தர்றான் ஆனாலும் அவாளுக்கு புரிய மாட்டேங்கறது. நான் உண்டாயிகருக்கேன்னு ஆசையா ஃபோன் போட்டு சொன்னபோது என்னத்துக்கு அவசரப்பட்டேன்னு முகதுல அறஞ்சது போல கேட்டு என் மனசை சங்கடப் படுத்தினா அதுக்கு தான் ஆண்டவன் இரண்டாவது புள்ளைக்கு குழந்தை பாக்கியத்தை தள்ளிப் போட்டுண்டே வர்றான். அதை உணர்ந்திருந்தானா இப்படி எல்லாம் பேச மாட்டா. எங்கே..என்னமோ…அவா அவா பண்ணுறது அவா அவா அனுபவிக்கதான் வேணும் அது நீங்களா இருந்தாலும், நானா இருந்தாலும் இல்ல அவாளா இருந்தாலும். சரி என் அம்மாட்ட ஃபோன் பண்ணி ஹெல்ப் கேட்கறேன். மறுபடியும் மறுபடியும் என் அம்மா அப்பாவையே தொந்தரவு செய்ய எனக்கு சங்கடமா இருக்கு. என்ன பண்ண?”
என்று மீண்டும் அம்புஜத்தின் உதவியை நாடினாள் மிருதுளா. அம்புஜமும் வந்திருந்து தன் பெண்ணையும், மாப்பிள்ளையையும், பேத்தியையும் நன்றாக கவனித்துக் கொண்டாள். வீட்டு வேலைக்கு ஒரு பெண்ணை நியமித்தாள் மிருதுளா. அவ்வப்போது ஊருக்கும் சென்று வந்தாள் அம்புஜம். வீட்டில் அம்புஜம் இருப்பதால் நிம்மதியாக வேலைக்கு சென்று வந்தனர் நவீனும், மிருதுளாவும்.
மாதங்கள் கடந்தன. ஒரு நாள் ஈஸ்வரனும் பர்வதமும் நவீன் வீட்டிற்கு வருவதாக ஃபோனில் சொன்னார்கள். அதைக் கேட்ட மிருதுளா அம்புஜத்திடம்
“அம்மா அவா வராலாம். நீ ஊருக்கு போயிட்டு வரியா?”
“அவா வந்தாலும் சக்தியை பார்த்துப்பாளா மிருது?”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அவா எல்லாம் நிச்சயம் பார்த்துக்க மாட்டா. உங்களுக்கு ஊருக்கு போகணும்னா போயிட்டு வாங்கோ. நாங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் லீவு போட்டு பார்த்துக்கறோம்.”
“நவீ அவா எவ்வளவு நாள் இருப்பான்னு நமக்கெப்படி தெரியும்”
“ஒரு வாரம்ன்னு சொன்னா”
“என்னத்துக்கு நீங்க லீவெல்லாம் போட்டுண்டு? பரவாயில்லை நானே இருக்கேன்”
“அம்மா நீ உன் பொண்ணுக்கும் பேத்திக்கும் செய்யலாம் ஆனா சம்மந்திகளுக்கெல்லாம் செய்யணும்னு ஒரு அவசியமுமில்லை. அவாளுக்கும் சக்தி பேத்தி தானே.”
“வேண்டாம் மிருது இது விதண்டாவாதம் பிடிக்கற நேரமில்லை. விடு விடு ஒரு வாரம் தானே”
என்று அம்புஜம் கூறினாலும் மிருதுளா மனம் ஆறவில்லை. எந்த விதத்திலும் உதவி புரியாது, தன் அம்மாவையே அவமானப் படுத்திய மூத்த தம்பதியருக்கு ஏன் தன் அம்மா செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுள் இருந்து படாய் படுத்தியது.
மூத்த தம்பதியர் வந்தனர். ஒரு வாரம் நன்றாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு எந்த வித உறுத்தலுமின்றி இருந்துவிட்டு சென்றனர். மிருதுளா தன் வேலையில் சிறப்பாக பணியாற்றியதற்கு ஸ்டார் பர்ஃபாமர் என்று ஸ்டாரும் சான்றிதழும் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வாங்களானாள். சக்தி பாட்டு, வயலின், படிப்பு என எல்லாவற்றிலும் சிறந்தவளாக வலம் வந்தாள். பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்தன. ஆனால் மிருதுளாவால் மட்டும் பல ஸ்கூல் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள முடியாமல் போனது. ஒரு வருடம் உருண்டோடியது. நவீனும் மிருதுளாவும் அவர்கள் ஊரில் ஒரு இரண்டு பெட்ரூம் அப்பார்ட்மென்ட் வாங்கினார்கள்.
மிருதுளாவுக்கு வைரல் ஃபீவர் வந்தது. ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டாள். உடல் நிலை மிகவும் பாதித்தது. ஒரு மாதம் வேலைக்கு செல்ல முடியாமல் போனது. டாக்டர் அவளை நைட் ஷிப்ட் போகக் கூடாது என்று கூறினார். உடல் நலமானதும் அவரின் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு ஆஃபீஸ் சென்று தனக்கு டே ஷிப்ட் தரும்படி கேட்டுக்கொண்டாள். அவர்களும் மிருதுளாவுக்கு டே ஷிப்ட் கொடுத்தார்கள். இரண்டு மாதங்கள் கழிந்த பின் மீண்டும் மிருதுளாவுக்கு நைட் ஷிப்ட் வழங்கப்பட்டது. அதை தவிர்க்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போக வேறு வழியின்றி வேலையை ராஜினாமா செய்தாள் மிருதுளா.
ஒரு வருட காலம் நவீனும் மிருதுளாவும் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே சந்தித்துக்கொள்ளவும் பேசிக்கொள்ளவும் முடிந்த நிலைக்கும், தன் அம்மா அப்பாவின் பிரிவுக்கும் இன்று முற்றுப்புள்ளி வைத்தாள் மிருதுளா.
தொடரும்……