மூத்த தம்பதியரும், அம்புஜமும் ஜோத்பூரிலிருந்து அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டனர். அவர்களின் பயணத்திற்கு வேண்டிய உணவுகளை செய்து கொடுத்து, ஈஸ்வரனுக்கு சட்டை வேஷ்டியும், பர்வதத்திற்கும், அம்புஜத்திற்கும் ஒரே மாதிரி புடவை அவர்களுக்கு இஷ்டப்பட்ட நிறத்தில் எடுத்துக் கொடுத்து அவர்களை ரெயில்வே ஸ்டேஷன் வரை சென்று வழியனுப்பி வைத்தனர் நவீனும் மிருதுளாவும்.
அன்றிரவு மீண்டும் மிருதுளா நவீனிடம் வீ.ஆர்.எஸ் பற்றி பேச்சை ஆரம்பித்தாள். அதற்கு மீண்டும் அதே பதில் அளித்தான் நவீன். அதைக் கேட்ட மிருதுளா
“என்ன நவீன் நாம நாலு வருஷம் முன்னாடி பேசினதை மறந்துட்டேங்களா என்ன?”
“மறக்கலை மிருது. ஆனா யோசிக்கணும் இல்லையா!! இப்போ நமக்கு சக்தி வேற இருக்கா. அவளோட எதிர்காலம் நம்மளோட எதிர்காலம் எல்லாத்தைப் பத்தியும் யோசிக்கணுமில்லையா!!”
“யோசிச்சிண்டே இருந்தா போதாது நவீ. ஏதாவது ஸ்டெப் எடுக்கணும்”
“என்ன பண்ணணும்னு சொல்லற? இப்போ வேலையை விட்டுட்டா அடுத்த வேலை எப்போ கிடைக்குமோ!! அது வரைக்கும் என்ன பண்ணுவோம்? எனக்கு பி.எஃப் அது இதுன்னு ஒரு…. ஒரு லட்சம் ஆர் ஒன்றரை லட்சம் வரும் அதை வச்சுண்டு என்ன பண்ணப் போறோம்?”
“ஓகே!! இது தான் உங்க கவலையா!! சரி நாளையிலிருந்தே நான் ஏதாவது வேலைக்கு ட்ரை பண்ண ஆரம்பிக்கறேன். கிடைச்சா அப்புறம் பேசலாம் என்ன சொல்லறேங்கள்?”
“ம்…பார்க்கலாம்”
மறுநாள் மாலை கவினிடமிருந்து ஃபோன் வந்தது….டெக்னிக்கல் நாலேட்ஜ் இல்லாததால் நவீனுக்கு குவைத்தில் வேலை கிடைக்காது என்று சொன்னவன் திடீரென சொல்லி வைத்தார் போல நவீனிடம்
“நீ பேசாம வேலையை விட்டுட்டு இங்க குவைத் வந்து வேலை தேடேன்”
“என்ன பேசற டா? இதை நீ எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி சொல்லியிருந்தேன்னா நிச்சயம் வந்திருப்பேன் இல்ல அட்லீஸ்ட் சக்தி பொறக்கறதுக்கு முன்னாடி சொல்லிருந்தேன்னா யோசிச்சிருப்பேன். அப்போ எல்லாம் விட்டுட்டு இப்போ இருக்கறதை விட்டுட்டு வந்து புதுசா தேடுன்னா எப்படி வருவேன்? நோ நோ அதெல்லாம் சரிபட்டு வராது கவின். எனிவே தாங்க்ஸ் அழைத்ததுக்கு”
“ஓகே!! இல்ல அங்க கம்மியான சம்பளத்துக்கு வேலைப் பார்த்துண்டு கஷ்டப்படுறயேன்னு சொன்னேன்”
“நான் கஷ்டப்படுறேன்னு உனக்கு யார் சொன்னா? நாங்க நல்லா தான் இருக்கோம். சரி எனக்கு ஷிப்ட்டுக்கு நேரமாச்சு வைக்கட்டுமா?”
“ஓகே! பை”
என்று ஃபோனை வைத்ததும் மிருதுளா யார் என்ன என்று விசாரித்தாள். நவீனும் கவின் சொன்னதை சொன்னான். அதை கேட்ட மிருதுளா
“ஏன் நவீ அவன் சொன்னதுல என்ன தப்பு? பேசாம அப்படி செஞ்சா என்ன?”
“விளையாடறயா மிருது. இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டா இருக்கறதும் போயிடும்ன்னு உனக்கு தெரியாதா? அவன் சொல்லறான்னு நீயும் பேசுற பாரு. அவனைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். இருக்கறதையும் விட்டுட்டு நடு ரோட்டில நிக்கவைக்கப் பாக்குறான் அதுக்கு நீயும் ஆமோதிக்கறாய்?”
“என்ன சொல்லறேங்கள் நவீ!! அப்படி நினைத்தா அவன் சொல்லிருப்பான்?”
“இப்படி யோசித்துப் பார். என் மேலே ஆர் நம்ம மேல அவ்வளவு அக்கறை இருக்குன்னா அவன் என்ன சொல்லிருக்கணும்?”
“என்ன?”
“நீ வந்து இங்க ஏதாவது ட்ரை பண்ணு…கிடைச்சுதுன்னா அங்க உன் வேலையை விட்டுவிடுன்னு சொல்லியிருந்தா கூட நான் யோசிச்சிருப்பேன் ஆனா அவன் என்னை இந்த வேலையை விடச் சொல்லறதிலேயே குறியா இருக்கான். நல்ல எண்ணத்துல சொன்னா மாதிரி மனசுக்கு படலை…. அது எனக்குப் பிடிக்கலை அதுதான் அப்படி சொன்னேன்.”
“ஓகே!! நீங்க சொன்னா சரியா தான் இருக்கும். சரி நான் ஒரு அஞ்சு மல்டினாஷ்னல் கம்பெனிக்கு சென்னையிலும், பங்களூரிலும் அப்ளை பண்ணிருக்கேன். பார்ப்போம்”
ஒரு மாதம் கழித்து மிருதுளாவுக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அதில்
“ஹலோ ஆம் ஐ ஸ்பீக்கிங் டூ மிஸ்.மிருதுளா”
“எஸ்”
என்று பேசத் துவங்கினாள். பேசி முடித்ததும் அவளுள் மகிழ்ச்சிப் பொங்கியது. வேலைக்கு சென்ற நவீன் வந்ததும் அவனிடம்
“நவீ ஒரு குட் நியூஸ். நான் உங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லணும்னு நினைச்சேன் அப்புறம் நேர்ல சொல்லலாம்னு இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிண்டிருக்கேன்”
“என்னது அது மிருது?”
“எனக்கு பங்களூரில் அக்சென்சுவர் என்ற பஃர்மில் ஒரு ஜாப் ஆஃபர் வந்திருக்கு நவீ. ஒரு கன்சல்டன்சியிலிருந்து தான் ஃபோன் வந்தது. நெக்ஸ்ட் டூ நெக்ஸ்ட் வீக் சாட்டர்டே இன்டர்வியூக்கு வரச்சொல்லிருக்கா.”
“சூப்பர். குட் மிருது.”
“தாங்க்ஸ் நவீ ஆனா எப்படி போறதுன்னு தான் யோசனையா இருக்கு நவீ. ஸ்கூல்ல லீவ் தருவாளான்னு தெரியலையே”
“கேட்டுப் பாரு மிருது. ஒரு வாரம் லீவு கேளு”
“ஓகே …கேட்டுப் பார்க்கறேன்”
மிருதுளா விவரத்தை சொல்லி லீவு கேட்க முதலில் மறுக்கப்பட்டாலும் அவளின் இரண்டாவது வேண்டுகோளுக்கு செவி சாய்த்து வழங்கப்பட்டது. நவீனும் லீவு அப்ளை செய்தான். இருவரும் சக்தியை அழைத்துக் கொண்டு ஊருக்கு ராமானுஜம் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கே சக்தியை அம்புஜத்திடம் விட்டுவிட்டு அன்றிரவே நவீனும் மிருதுளாவும் பஸ் ஏறி பங்களூருக்கு சென்றனர். மறுநாள் விடியற் காலை பங்களூர் மண்ணில் கால் வைத்தனர். அங்கே பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த ஹோட்டலுக்குச் சென்று அங்கிருந்த பாத்ரூமில் பல் துலக்கி, முகம் , கை கால் அலம்பி, ப்ரெஷ் ஆகி வெளியே வந்து காலை டிபன் அருந்தினர் இருவரும். மிருதுளாவுக்கு இன்டர்வியூ காலை பதினோரு மணிக்கு என்பதால் அங்கிருந்து பஸ் பிடித்து லால்பாக் பார்க் சென்றனர். அங்கே சற்று நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்
“ஏன் நவீ இன்னைக்கு நான் அட்டென்ட் பண்ணப் போற கன்சல்டன்சி காரர்கள்ட்ட நீங்களும் இன்டர்வியூ அடென்ட் பண்ணலாமான்னு கேட்போமா?”
“நானா!!! உன்னை தேர்ந்தெடுத்திருக்குற வேலைக்கு என்னையும் எப்படி இன்டர்வியூ பண்ணுவா மிருது? உன் ப்ரொஃபைல் வேற என்னோடது வேறயாச்சே”
“அச்சோ நவீ!!! அது எனக்கு தெரியாதா!! உங்க ப்ரொஃபைலுக்கு ஏத்தா மாதிரி எதாவது இருக்கான்னு கேட்டுப் பார்த்தா தானே தெரியும்”
“கேட்கலாம். முதலில் நீ நல்ல படியா முடிச்சிட்டு வா. அப்புறம் என்னைப் பத்தி கேட்கலாம் சரியா”
“ம்…பார்ப்போம். நான் நிச்சயம் கேட்கத் தான் போறேன்”
“ஆனா நான் என்னோட எந்த டாக்குமெண்ட்ஸும் எடுத்துண்டு வரலையே”
“அதெல்லாம் பார்த்துப்போம்”
இவ்வாறு பேசிக்கொண்டேயிருந்ததில் நேரம் கடந்தது. மணி ஒன்பதரை ஆனது. அங்கிருந்து வெளியே வந்து பஸ் பிடித்து இன்டர்வியூ நடக்கவிருக்கும் இடத்துக்கு சரியாக பத்தரை மணிக்கு சென்றனர். அங்கே சென்றதும் மிருதுளா மட்டும் உள்ளே அனுமதிக்கப் பட்டாள். நவீன் வெளியே காத்திருக்கும் படி சொல்லப்பட்டது. அதற்கு நவீன் மிருதுளாவிடம்
“நான் அந்த மரத்தடியில் இருப்பேன் மிருது. நீ நல்லபடியா முடிச்சுட்டு வா. ஆல் தி பெஸ்ட்”
என்று சொல்லி மிருதுளாவை உள்ளே அனுப்பி வைத்தான். உள்ளே சென்றவள் நேராக சம்பந்தப் பட்டவரிடம் பேசி நவீனின் ப்ரொபைல் பற்றி விவரித்து…இவ்வளவு தூரம் வந்திருப்பதால் அவருக்கு ஏற்ற ஏதாவது வேலை இருக்கிறதா என்று விசாரித்தாள். அதற்கு அவளை இன்டர்வியூக்கு அழைத்தவர்
“ம்….நீங்க சொல்லற ப்ரொஃபைல் ஈஸ் இன்ட்ரெஸ்டிங். சரி அவரையும் வரச் சொல்லுங்க. அவரும் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணட்டும் அப்புறமா டிசைட் பண்ணலாம். ஓகே?”
“ஓகே. தாங்க்யூ சோ மச். நான் அவரையும் உள்ளே அழைத்து வருகிறேன்.”
என்று கூறி வெளியே சென்று நவீனிடம் உள்ளே நடந்ததை விவரித்து தன்னுடன் அழைத்துச் சென்றாள் மிருதுளா. இருவரும் அவரவருக்கான இன்டர்வியூவை அட்டென்ட் செய்தனர். மூன்று ரௌண்ட் நடந்தது. மூன்றிலுமே இருவரும் தேர்வானார்கள். மத்திய உணவுக்கான இடைவெளி விடப்பட்டது. உணவருந்தியதும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலேயே வரும்படி சொல்லப்பட்டது. நவீனும் மிருதுளாவும் மத்திய உணவு சாப்பிட பக்கத்தில் ஹோட்டல் இருக்கிறதா என்று விசாரித்து அங்கு சென்று உணவருந்தியதும் மீண்டும் அதே இடத்திற்கு சென்றனர். மூன்று ரௌண்ட்களிலும் தேர்வானவர்களை மட்டும் ஒரு அறையில் அமரவைத்து
“நீங்கள் அனைவரும் மூன்று சுற்றுகளிலும் தேர்ச்சி அடைந்துள்ளீர்கள். இன்னும் இரண்டு ரௌண்ட் உள்ளது. அது அக்சென்சுவர் ஹெச்.ஆர் டிப்பாட்மென்டில் இன்று மாலை நடக்கும். ஒரு ரௌண்ட் ஆப்ரேஷன்ஸ் ஹெட்டுடன். மற்றது ஹெச்.ஆர் பர்சனுடன். அந்த இரண்டிலும் தேர்ச்சி அடைந்தீர்கள் என்றால் உடனே அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கையில் தந்திடுவார்கள். ஓகே! நீங்க உங்க ஓன் செலவுல தான் அவங்க ஆஃபீஸுக்கு போகணும். இப்போ டைம் இரண்டரை ஆகுது. நீங்க அங்கே ஒரு நாலரை மணிக்கு இருக்கணும் ஸோ இப்பவே கிளம்பி நேரா அங்க போங்க அங்கே எங்க கன்சல்டன்சி பர்சன் இருப்பாங்க, அவங்க உங்களை ரிசீவ் பண்ணி ஹெச்.ஆர் கிட்ட கூட்டிட்டு போவாங்க. இரண்டு ரௌண்ட்ஸையும் அட்டென்ட் பண்ணுங்க…அப்பாயின்ட்மென்ட் ஆர்டரோட வீட்டுக்கு போங்க சரியா. ஆல் தி பெஸ்ட் டூ யூ ஆல்”
என்று கன்சல்டன்சி ஹெட் பேசி முடித்ததும் நவீனும் மிருதுளாவும் வெளியே வந்து ஒரு ஆட்டோவை நிறுத்தி அக்சென்சுவர் ஆபீஸ் அட்ரெஸைக் காட்டி அங்கே செல்ல வேண்டுமென்றும் அதற்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டதுக்கு ஆட்டோ காரர் முன்னூறு ரூபாய் ஆகும் என்று கூறியதும் வேண்டாமென அனுப்பி விட்டனர். அப்போது அதே இன்டர்வியூவுக்கு வந்திருந்த இன்னும் மூன்று பேர் இவர்கள் அருகில் வந்தனர்.
“ஹாய் நாங்களும் அக்சென்சுவர் ஆபீஸுக்கு தான் போகணும்”
“ஹாய். ஆங் நீங்களும் எங்க கூட தானே உட்கார்ந்திருந்தேங்கள்”
“எஸ் எஸ். நாம அஞ்சு பேரு இருக்கோம் பேசாம ஒரு டாக்ஸி புக் பண்ணி அதுல போவாமா?”
என்று கூறியதும் நவீனும் மிருதுளாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அதை கவனித்த ஒருவர்
“நீங்க ஆட்டோ காரர் கிட்ட பேரம் பேசினதைப் பார்த்தோம். அவன் முன்னூறு கேட்டான் டாக்ஸி செவன் பிஃப்டி கேட்கிறான். நாம் அஞ்சு பேரும் ஸ்பிளிட் பண்ணினா ஆளுக்கு நூற்றி ஐம்பது தான் வரும். வாட் ஸே?”
என்றதும் மற்றவர்கள் சரி என்று சொல்ல…நவீனும் சரி என்று கூறினான். ஐவரும் காரில் சென்று இறங்கி அக்சென்சுவர் ஆபீஸுக்குள் சென்றனர். அந்த ஆபீஸின் பிரம்மாண்டமான வரவேற்பு அறையைப் பார்த்த நவீனும் மிருதுளாவும் அசந்து போனார்கள். அங்கே அவர்களை அமரவைத்தனர் கன்சல்டன்சி ஆட்கள். பின் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு இன்டர்வியூ நடந்தது. இரண்டு சுற்றும் முடிந்ததும் மீண்டும் அதே வரவேற்பு அறையில் அமரவைக்கப்பட்டனர். மணி ஆறரை ஆனது. நவீனும் மிருதுளாவும் ஊருக்கு திரும்பிச் செல்ல ஒன்பதரைக்கு பஸ் புக் செய்திருந்தனர். அதை நினைத்து இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் அக்சென்சுவர் ஹெச்.ஆரிலிருந்து ஒருவர் வந்து ஆஃபர் லெட்டர்ஸ் ரெடியாக இருப்பதாக கூறி அங்கிருந்த பதினைந்து பேர்களிலிருந்து எட்டு பேர்களை மட்டும் அழைத்துச் சென்றார். அதில் மிருதுளாவும் ஒருத்தி ஆவாள்.
உள்ளே ஒரு அறையில் அமரச்செய்து ஒவ்வொருவராக அழைத்து அவர்களுக்கான வேலை ஒப்பந்த படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஆஃபர் லெட்டர்கள் வழங்கப்பட்டது. நவீனுக்கு கிடைக்கவில்லையே என்ற எண்ணம் தான் மிருதுளா மனம் முழுவதுமிருந்தது. அவள் ஆஃபர் லெட்டரை வாங்கிக் கொண்டு தயங்கி தயங்கி அங்கேயே நின்றாள் அதை கவனித்த ஹெச்.ஆர் அவளிடம்
“எஸ் மிஸ் மிருதுளா டூ யூ வான்ட் டூ ஸே சம்திங்”
“எஸ் மேம். என் கணவரும் அடென்ட் செய்தார் ஆனால் அவருக்கு ஏன் கிடைக்கவில்லை என்று நான் தெரிந்துக் கொள்ளலாமா? ப்ளீஸ்”
“யார் அது?”
“மிஸ்டர். நவீன்”
“ஓ!!! ஓகே ஓகே!!! அவர் இப்போது சர்வீஸில் இருக்கிறார் மேபி அதுனால கூட இருக்கலாம். ஆனா அவர் இன்டர்வியூ எல்லாம் நல்லா தான் பண்ணியிருக்கார். அவரை ரிஜக்ட் பண்ணலை வெயிட்டிங்கில் தான் போட்டிருக்கார் அந்த ப்ராஜெக்ட் மேனேஜர். ஸோ டோன்ட் வரி நிச்சயம் அவருக்கும் இங்கே வேலை கிடைக்கும். என்ன இட் மே டேக் டைம் அவ்வளவு தான்”
“எவ்வளவு நாட்கள் ஆகும் மேம்”
“மேபி டூ வீக்ஸ் ஆர் எ மந்த்”
“ஓகே மேம். தாங்க் யூ. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்”
“தாங்க் யூ. யூ டூ ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் மிருதுளா. சீ யூ சூன் ஆஸ் அவர் ஸ்டாஃப்”
“ஷுவர் மேம். பை”
என்று சொல்லி வெளியே வந்து நவீனிடம் உள்ளே நடந்தவற்றை கூறினாள். அதற்கு நவீன்
“அவா அப்படி தான் சொல்லுவா மிருது. பார்ப்போம். சரி உன் ஆஃபர் லெட்டரை குடு பார்க்கட்டும்”
“இந்தாங்கோ நவீன்.”
“ஹேய் வாவ்!! மிருது உன் சம்பளம் எவ்வளவு தெரியுமா?”
“நான் பார்க்கலை நவீ. வாங்கிண்டு நேரா உங்ககிட்ட வந்துட்டேன். ஹெச். ஆர் ரௌண்ட் போது சொன்னா ஏதோ பதினைந்தாயிரம் தருவோம்ன்னு”
“பதினைந்து இல்ல மிருது பதினெட்டாயிரம் ப்ளஸ் பி.எஃப், டோர் பிக்கப் அன்ட் டிராப். சாப்பாடுன்னு எல்லாமே தராமா. சூப்பர் மிருது. கங்கிராட்ஸ்”
“தாங்க்ஸ் நவீ. உங்களுக்கும் கிடைச்சா அப்போ நம்ம சம்பளம் முப்பத்தி ஆறாயிடுமே!! வாவ். கடவுளே சீக்கிரம் நவீனுக்கும் ஆஃபர் லெட்டர் தரட்டும்”
“சரி பஸ்ஸுக்கு நேரமாச்சு கிளம்பலாமா?”
“எஸ் கிளம்பலாம் நவீ. எனக்கு காலையிலிருந்து ஒரே டென்ஷனா அதுல தலை வலிக்கறது பா. குத்தறது. பஸ் ஸ்டாண்ட் போற வழியில ஏதாவது டாக்டரைப் பார்த்துட்டு போவோமா ப்ளீஸ்”
“என்ன மெதுவா சொல்லற. சரி சரி வா கிளம்பலாம்.”
என்று மிருதுளாவுடன் ஆட்டோவில் ஏறி பக்கத்தில் ஏதாவது ஹாஸ்பிடல் இருந்தால் வேகமாக போகச் சொன்னான் நவீன். ஆட்டோ டிரைவரும் ஒரு ஹாஸ்பிடல் வாசலில் வண்டியை நிப்பாட்டினார். இருவரும் இறங்கனர். மிருதுளா வண்டியிலிருந்து இறங்கியதும் வாந்தி எடுக்கத் துவங்கினாள். உடனே அவளின் நெற்றியைப் பிடித்துக் கொண்டான் நவீன். ஆட்டோ டிரைவர் வாட்டர் பாட்டிலை நீட்டினார். வாயை கொப்பளித்துக் கொண்டு முகத்தை அலம்பிக் கொண்டு டாக்டரிடம் சென்றாள் மிருதுளா. டாக்டர் செக் செய்து விட்டு…சரியான தூக்கம் இல்லாததால் சாப்பிட்டது ஜீரணிக்கவில்லை அதுதான் தலைவலி வாந்தி எல்லாம் என்று கூறி ஒரு இன்ஜெக்ஷன் போட்டு மாத்திரையும் கொடுத்து அனுப்பினார்.
மீண்டும் அதே ஆட்டோவில் ஏறி பஸ் ஸ்டாண்டுக்கு சென்று அங்கு காலையில் டிபன் அருந்திய ஹோட்டலுக்கு சென்று இரவு உணவு அருந்தினர். மிருதுளா ஒரே ஒரு இட்டிலி மட்டும் மாத்திரை சாப்பிடுவதற்காக சாப்பிட்டு மாத்திரையையும் போட்டுக் கொண்டாள். பஸ்ஸில் ஏறி ஊருக்கு சென்றனர். ஒரு நாள் விடியற் காலையிலிருந்து இரவு வரை அலைச்சல், இன்டர்வியூ, டென்ஷன் என்று முடித்து வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.
ஊரில் அனைவரிடமும் தனக்கு வேலைக் கிடைத்ததுப் பற்றி சொன்னாள் மிருதுளா. இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுத்து விட்டு ஜோத்பூருக்கு புறப்பட்டுச் சென்றனர் நவீனும் மிருதுளாவும். மிருதுளாவுக்கு வேலையில் சேருவதற்கு இரண்டு மாத காலம் கொடுத்திருந்தனர்.
ஜோத்பூர் சென்றதும் மீண்டும் ஸ்கூல் வேலை, வீட்டு வேலை, சக்திக்கு பாடம் சொல்லிக் குடுப்பது, அவளுடன் விளையாடுவது என்றிருந்தாள் மிருதுளா. ஒரு நாள் நவீனிடம்
“நவீ நான் ஒண்ணு சொல்லுவேன் நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது”
“நீ சொல்லி நான் எதை தப்பா எடுத்திருக்கேன் மிருது? சொல்லு”
“எனக்கு வேலை கிடைச்சிருக்கு இன்னும் ஒன்றரை மாசத்துல ஜாயின் பண்ணணும்”
“ஆமாம் அது தெரிஞ்சது தானே. இதுல நான் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு?”
“இருங்கோ பா. நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு வேலை கன்பார்மா இருக்கு ஸோ நீங்க ஏன் இந்த வேலையை விட்டுட்டு பங்களூரிலேயே வேற வேலையில் சேரக்கூடாது?”
“ம்….நல்ல யோசனை தான். நானும் வேலையை விட்டுட்டு உனக்கும் வேலையில்லைன்னா என்ன பண்ணறதுன்னு தான் இவ்வளவு நாளா தள்ளிப் போட்டுண்டே வந்தேன். சரி நாளைக்கே அப்ளை பண்ணறேன் ஓகே”
“சூப்பர் நவீ. தாங்க்ஸ்.”
“எதுக்கு தாங்க்ஸ் எல்லாம் மிருது. என்னோட நம்மளோட நல்லதுக்கு தானே சொல்லற அதுகூடவா எனக்கு புரியாது?”
மறுநாள் நவீன் அவனது ஆஃபீஸில் சர்வீஸிலிருந்து டிஸ்சார்ஜ் வேண்டுமென்று ஒரு காரணத்தைச் சொல்லி அப்ளை செய்தான். சர்வீஸிலிருந்து டிஸ்சார்ஜ் கிடைத்ததும். மிருதுளா ஆசிரியை மூவருமாக ஊருக்குச் சென்றனர். அங்கிருந்துக் கொண்டே வேலைகளுக்கு அப்ளை செய்தான் நவீன். ஒரு வாரம் அவனது அலுவலக பொறுப்புகளை ஒப்படைத்து பென்ஷனுக்கு உண்டான டாக்குமெண்ட்ஸ் வேலைகளுக்காக டில்லி வரைச் சென்றிருந்தான். அப்போது விஷயத்தை நவீனின் தந்தை தாயிடம் கூறினாள் மிருதுளா. அதைக் கேட்டதும் ஈஸ்வரன் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் பர்வதம்
“என்னது வேற வேலை தேடறானா? அவன் படிப்புக்கு என்ன ஒரு ஆராயிரமோ ஏழாயிரமோ தானே கிடைக்கும் அதுவும் இந்த ஊரில் எங்கே வேலை இருக்கு?”
“அம்மா அவர் இங்கே தேடலை பங்களூரிலே தேடுறார். சரி நான் ஃபோனை வச்சுடுறேன். நவீன் வந்ததும் நாங்க அங்க வரோம்”
என்று பர்வதத்தின் பேச்சு பிடிக்காமல் ஃபோனை வைத்துவிட்டு கண்களில் கண்ணீரோடு அப்படியே அமர்ந்திருந்தாள் மிருதுளா. அவளைப் பார்த்த அம்புஜம்
“ஏய் மிருது என்னமா ஆச்சு? ஏன் அழுதுண்டு இருக்க?”
“பாருமா எங்க மாமியார் பேசறதை!!!”
“என்ன சொன்னா? நீ அழறதுக்கு!!”
“நவீயை படிக்கவும் வைக்காம இப்போ எப்படி சொல்லறா பாறேன். நல்லா படிக்க வச்சிருந்தா அவர் நல்லா ஆகிருக்க மாட்டாரா என்ன? அவரே எப்படியோ அவ்வளவு கஷ்டத்துலேயும் இவ்வளவு படிச்சிருக்கார். படிக்க வைக்க துப்பில்லை இவா எல்லாம் பேச வந்திட்டா”
“என்னடி நீயே பேசிக்கற!”
“நவீன் படிப்புக்கு ஆறாயிரமோ ஏழாயிரமோ தான் கிடைக்குமாம்…அப்படீன்னு உன் சம்மந்தி சொல்லறா…போதுமா”
“நீ சொல்ல வேண்டியது தானே ….நீங்க படிக்க வச்சதுக்கு அவ்வளவு தான் கிடைக்கும் என்ன செய்யன்னு!!”
“அட போ மா!!! நீ வேற!!! அவாகிட்ட எல்லாம் எது பேசினாலும் பிரச்சினையில தான் கொண்டு போய் முடிப்பா. நானே அதுனால தான் வாய் குடுக்காம இத்தனை வருஷமா ஓட்டிண்டிருக்கேன்.”
“சரி சரி அதை எல்லாம் நினைச்சு கவலைப் படாதே மிருது. பெத்தவளே தன் பிள்ளையை அப்படி சொல்லியிருக்கக் கூடாது தான். ஆனா சொல்லிட்டா விடு. இதை எல்லாம் அந்த அம்மன் பார்த்துண்டு தானே இருக்கா. நீ வேணும்னா பாரு நம்ம நவீன் பெரிய ஆளா ஆகி ஏழாயிரம் என்ன அதைவிட பத்து மடங்கு சம்பாதிப்பார் பார்”
“ஆமாம் மா அவரை மட்டம் தட்டுற கூட்டத்துக்கு முன்னாடி அவரை பெரிய ஆளா ஆக்கிக் காட்டணும். அதுக்கு அந்த அம்மன் தான் துணை இருக்கணும்”
“பாரத்தை அவள் மேல் போட்டுட்டு உங்க வேலைகளில் மும்முரமாகுங்கோ எல்லாம் நல்லதே நடக்கும்”
என்ன தான் மாமனார் மாமியார் ஒன்றும் சொல்லாவிட்டாலும் நவீனுக்கு அங்கிருக்க சற்று உறுத்தலாகவே இருந்தது. டில்லியிலிருந்து வந்ததும் அவனுக்கு பங்களூர் கன்சல்டன்சியிலிருந்து ஃபோன் வந்தது. அதில் நவீனுக்கும் ஆர்டர் கன்பார்ம் ஆனதாகவும் அவனையும் மிருதுளாவுடன் வேலையில் சேரும் படியும் அதற்கான ஆஃபர் லெட்டரை வந்து வாங்கிக் கொள்ளும் படியும் கூறினர். அல்லது சேரும் நாளன்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த ஆஃபர் லெட்டரை ஈமெயிலில் அனுப்பி வைத்தது அந்த கன்சல்டன்சி. அதில் நவீனுக்கும் பதினெட்டாயிரம் சம்பளம் என்று அச்சிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் நவீனும், மிருதுளாவும் அவர்கள் வீட்டாரும் மகிழ்ச்சியானார்கள்.
அம்புஜம் இந்த செய்தியைக் கேட்டதும் விரைந்து சென்று அம்மனுக்கு விளக்கேற்றி மனமுருகி நன்றி சொல்லி தன் பிள்ளைகள் மென்மேலும் வாழ்வில் வளச்சியடைவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டாள்.
எல்லாம் சுபமே என்றெண்ணிக் கொண்டிருக்கையில் பங்களூரில் தன் நண்பன் மூலம் வீடு பார்த்தான் நவீன். அந்த வீட்டிற்கு ஐந்தாரம் வாடகை மற்றும் பத்து மாசம் அட்வான்ஸ் என்று தெரிந்ததும் மீண்டும் கவலையில் ஆழ்ந்தனர் நவீனும் மிருதுளாவும் ஏனெனில் அவர்களிடம் கையிருப்பு இருபத்தி ஐந்தாயிரம் தான் இருந்தது. நவீனுக்கு வர வேண்டிய பி.எஃப் தொகை இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் வரும்… அதற்குள் அட்வான்ஸ் குடுத்தாக வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கையில் மிருதுளா தன் அப்பாவிடம்
“அப்பா இந்த நகையை விற்று எனக்கு ஒரு ஐம்பதாயிரம் வாங்கித் தர முடியுமா?”
“எதுக்கு இப்போ நகை எல்லாம் விக்குற மிருது? இதை இப்போ வாங்கப் போணா எவ்வளவு ஆகும் தெரியுமா”
“தெரியும் ஆனா இப்போ எங்தளுக்கு பணம் தேவை அது தான்”
“எவ்வளவு தேவை?”
“பங்களூர் போய் செட்டில் ஆகணும் அதுக்கு வீட்டு அட்வான்ஸ் வாடகை, இங்கே இருந்து பொருட்கள் ஷிஃப்டிங்ன்னு ஒரு எழுபத்தைந்தாயிரம் தேவைப் படறது. எங்க கிட்ட இருபத்தைந்தாயிரம் இருக்கு. மீதிக்கு தான் இதை வித்தா ஐம்பது கிடைக்குமான்னு கேட்டேன்”
“அடிமாட்டு விலைக்கு எடுத்துப்பானே”
அப்பா மகள் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த அம்புஜம் தன் நகைகளைக் கொண்டு வந்து ராமானுஜத்திடம் கொடுத்து
“ஏய் மிருது உன் நகை எல்லாம் விற்க வேண்டாம். அடுத்தடுத்து உன் மச்சினன்கள் கல்யாணமெல்லாம் வரும் அப்போ மொட்ட கழுத்தோடவா நிப்ப…ஏன்னா உங்க கிட்ட பணமில்லையா?”
“என்கிட்ட ஒரு இருபதாயிரம் இருக்கு மீதி எல்லாம் ரொடேஷன்ல இருக்கே”
“சரி மீதம் முப்பதாயிரத்துக்கு இந்தாங்கோ என் நகையை வித்தோ இல்லை அடமானம் வச்சோ பண்ம் கொண்டு வாங்கோ. நம்ம பொண்ணுக்கு நாம செய்யாம வேற யாரு செய்வாளாம்!!”
என்று ராமானுஜமும் அம்புஜமுமாக சேர்ந்து ஐம்பதாயிரம் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவர்களின் அன்பையும் பாசத்தையும் பார்த்ததும் நவீனுக்கு அவர்கள் மீதானா மதிப்பும் மரியாதையும் கூடியது. அன்று மிருதுளாவிடம்
“உன் அப்பா அன்ட் அம்மா ஆர் க்ரேட் மிருது. நம்ம மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கா”
“ஆமாம் நவீ. ஆனா ஒண்ணு அவா பணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருப்பிக் கொடுத்திடணும் புயிஞ்சுதா”
“கொடுத்திடலாம் மிருது…ஆனா ஏன் நீ அப்படி சொல்லுற?”
“என்னைக்குமே சொந்தக்காராகிட்ட கொடுக்கல் வாங்கல் வச்சுக்கக்கூடாதுன்னு எங்க அப்பா நான் சின்னதா இருந்ததிலிருந்து சொல்லிக் கேட்டிருக்கேன் அது தான்.”
“ஓ!! ஓகே டன். அப்போ இந்த வீக் என்ட் முதல் பங்களூர் வாசிகளாக போறோம்”
“எஸ் நவீ. சக்திக் குட்டிக்கு நல்ல ஸ்கூல் பார்க்கணுமே”
“நமக்கு வீடு பார்த்திருக்கோமே அதுக்கு பக்கத்திலேயே ஆர்மி ஸ்கூல் இருக்கு அங்கேயே சேர்த்துடலாம்.”
“ஓ!!! அப்படியா….அப்போ ஓகே!! என்ன சக்தி குட்டி புது ஸ்கூல் போக ரெடியா?”
ஐந்தாயிரம் சம்பளத்திலிருந்து படி படியாக உழைத்து, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயண்படுத்திக் கொண்டு, ஏளனம், குத்தல் பேச்சுக்களுக்கெல்லாம் செவி சாய்க்காமல் நவீனும் மிருதுளாவும் இணைந்து வாழ்க்கையில் முன்னோக்கி நகர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தொடரும்…..