அத்தியாயம் 78: விசேஷம், விளக்கம், விருந்தோம்பல்

பிச்சுமணி மாமாவிடம் பேசி முடித்ததும் பைக்கில் வீட்டுக்கு கிளம்பினர் நவீனும் மிருதுளாவும். மறுநாள் விடியற்காலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்து ரெடியாகி ரம்யா சித்தி மகளின் திருமணத்திற்கு சென்றனர். அங்கே மூத்த தம்பதியர் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். அதை எல்லாம் கண்டும் காணாது மற்ற அனைவருடனும் சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் நவீனும் மிருதுளாவும். திருமணம் இனிதே நடந்தேறியது. மத்திய உணவருந்த அனைவரும் சென்றனர். மண்டபத்தின் ஹாலின் ஒரு பகுதியில் தரையில்… மடியில் சக்தியுடன் தனியாக அமர்ந்திருந்தாள் மிருதுளா.

அங்கே வந்த பிச்சுமணி மனைவி அம்பிகா மிருதுளாவிடம்

“என்ன மிருது சாப்பிட போகலையா?”

“இல்ல மாமி. சக்தி தூங்கறா அதுதான் உட்கார்ந்துண்டிருக்கேன். நவீன் சாப்பிட்டு வந்து இவளை என்கிட்ட இருந்து வாங்கிண்டுட்டார்ன்னா நான் சாப்பிட போவேன். நீங்க சாப்ட்டாச்சா மாமி?”

“இன்னும் இல்லை மிருது. உன் மாமியார் மாமனார் தான் சாப்பிட்டுட்டு வந்தாச்சே அவாகிட்ட குழந்தையை குடுத்துட்டு நீயும் நவீனுடனே சாப்பிட போயிருக்கலாமில்லையா!!!”

“ம்….ம்….நவீன் வந்துடுவார் மாமி. அதுவுமில்லாம எனக்கு அவ்வளவா பசியில்லை. அவர் வந்ததுக்கப்புறமா போயிக்கறேன்”

“ம்…விட்டுக்கொடுக்க மாட்டியே!!! ஆனா அவா எல்லாம் அதற்கு வர்த்தே இல்லை”

“யாரு மாமி?”

“ம்…உன் மாமனார், மாமியார், மச்சினன் எல்லாரும் தான்”

“அவா வர்த்தோ இல்லையோ இது தான் நான். ஆமா நீங்க ஏன் அப்படி சொல்லறேங்கள்?”

“உன் மாமா நேத்து உங்க கிட்ட அவர் அக்காவுக்காக பரிஞ்சு பேச வந்திருப்பாரே!!”

“ஆமாம் பேசினார் அதுக்கென்ன மாமி?”

“அது அவரா வரலை தெரியுமா?”

“தெரியும் மாமி. யார் அவரை அனுப்பியிருப்பான்னு எனக்கும் நவீக்கும் நல்லாவே தெரியும். அது மட்டுமில்லாம அதை மாமாகிட்டயே சொன்னோம்”

“இந்த மனுஷனுக்கு என்னத்துக்கு இந்த வேலையெல்லாம் சொல்லு!!!”

“விடுங்கோ மாமி. மாமா ஏதோ அக்கா மேல உள்ள பாசத்தால் அப்படி பேசினார்.”

“ஹலோ உனக்கும் நவீனுக்கும் மாமா பேச வந்ததும் அதை பேச வைத்தது உன் மாமியார்ன்னு மட்டும் தான் தெரியும் ஆனா அங்க நடந்ததே வேற அது தெரியுமா?”

“அங்க நடந்தது எங்களுக்கு எப்படி மாமி தெரியும்?”

“நான் சொல்லறேன் கேட்டுக்கோ.”

“எனக்கு வேண்டாம் மாமி. அங்க அவா என்ன பேசியிருந்தாலும் அதை நான் தெரிஞ்சுக்க விரும்பலை விட்டுவிடுங்கோ”

“அடியே அசடு. நீ தெரிஞ்சுண்டா தான் யார் யார் எப்படின்னு உனக்கு புரிஞ்சுக்கவும் அது படி நடக்கவும் தெரியும்.”

“சரி சொல்லுங்கோ.”

“முந்தானாள் நைட்டு ரம்யா ஆத்து ஹாலில் ஒரு மாநாடே நடந்தது”

“ரம்யா சித்தி விட்டு ஹாலில் என்ன மாநாடு?”

“எல்லாம் உன்னையும் நவீனையும் பத்தின மாநாடு தான் அது.”

“என்னையும் நவீனையும் பத்தி பேச எதுக்கு மாநாடு எல்லாம். மாமாவும் அவாளும் தானே பேசியிருப்பா? மாமி மூணு பேர் சேர்ந்து பேசினா அது மாநாடாகிடுமா? என்ன மாமி!!!”

“மூணு பேரா!!! அது தான் இல்லை. அங்கே நம்ம குடும்பத்துல இருக்கிற உன் மாமியாரோட அக்கா, தங்கைகள் அவா அவா ஆத்துக்காரர்கள், கவின் கஜேஸ்வரி, நான் எங்காத்துக் காரர்ன்னு ஒரு படையே அங்க இருந்தோம். எல்லாரையும் அங்க கூடச் சொன்னது யார் தெரியுமோ?”

“யார் மாமி?”

“எல்லாம் உன் மச்சினன் கவின் தான்”

“அவன் எதுக்கு எல்லாரையும் அங்க ஆஜராகச் சொன்னான்?”

“அந்த கேள்வி எனக்கும் இருந்தது அவா சொல்லும்போது. அங்க போணதுக்கு அப்புறம் எல்லாம் புரிஞ்சுது. அவன் தான் பேச்சை ஆரம்பிச்சு வச்சான். உங்க ரெண்டு பேர்கிட்டேயும் உங்க மாமனார் மாமியாரைப் பத்தி பேசினானாமே!!!”

“என்ன பேசினானாம்?”

“கேளு நீ கதையை. அதுல அவன் புரிஞ்சுண்டது வரைக்கும் …நீங்க அவன் அப்பா அம்மாவை மதிக்கறதில்லையாம், மரியாதைக் கொடுக்கறதில்லையாம், உங்க பாத்திரங்கள் சீர் சாமான்கள் எல்லாத்தையும் உன் வீட்டுக்கே கொடுக்கறா மாதிரி கொடுத்துட்டு எடுத்துண்டு போயிட்டேங்களாம். அப்படி இப்படின்னு குற்றப்பத்திரிகை வாசிச்சான். அவன் முடிச்சதும் உன் மாமியார் மாமனார் வாசிச்சா”

“எல்லாருக்கும் முன்னாடியா இப்படி எல்லாம் பேசினா?”

“ஆமாம் மா. அதுனால தானே எனக்கு தெரிஞ்சுது. இல்லாட்டி எனக்கெப்படி தெரியும். உங்க மாமா அவர் அக்கா தங்கைகள் விஷயங்களை எல்லாம் என்கிட்ட மூச்சு விடமாட்டார்.”

“ம்…ம்…மாமா சொன்னார். ஆனா நடந்ததை எல்லாம் அவாளுக்கு சாதகமா தான் சொல்லிருக்கான்னு மாமா கேட்ட கேள்விகளிலிருந்து புரிஞ்சுண்டோம் அதற்கான விளக்கத்தை மாமாகிட்ட சொல்லியாச்சு மாமி. ஆனா இவா இப்படி எல்லார்கிட்டயும் சொல்லிருப்பானு சத்தியமா நான் எதிர் பார்க்கலை. எல்லாம் அந்த அம்மனுக்குத் தெரியும் அவ பார்த்துப்பா”

“உன்னையும், நவீனையும் பத்தின கதாகாலட்சேபமே நடந்தது.”

“அதைக் கேட்ட ஒருத்தரும் எங்க மாமனார் மாமியார்கிட்ட ஏன் இப்படி எல்லாரையும் வச்சுண்டு உன் புள்ளையையும் மாட்டுப்பொண்ணையும் பேசறன்னு கேட்கலையா?”

“இல்லையே. ஒருத்தரும் வாயைத் திறக்கலை. அவா ஏன் சொல்லப்போறா மிருது? அவாளுக்கெல்லாம் என்ன வந்தது? அப்படி எல்லார்கிட்டேயும் நம்ம புள்ளையைப் பத்தி சொல்லறோமேன்னு உன் மாமனார் மாமியாருக்கில்லையா தோணிருக்கணும்!!! சொல்லறவா வெட்கமில்லாம சொன்னா கேட்கிறவாளுக்கு என்ன அவா பாட்டுக்கு கேட்டுட்டு தான் போவா. ஆனா அதை எல்லாம் என்னால ஜீரணிச்சுக்கவே முடியலை அது தான் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். ஏன்னா நானும் உன் மாமியாரால ரொம்ப பட்டுட்டேன் மா. அவ அப்படி தான். அவளோட நிம்மதி சந்தோஷம் எல்லாமே அடுத்தவாள பிரிக்கறது, அடுத்தவா நிம்மதியை கெடுக்கறது எல்லாம் தான். அதை தட்டிக் கேட்க வேண்டிய உன் மாமனாரும் ஒத்தூதரார் பின்ன கேட்கவா வேணும் சொல்லு. என் மனசுல பட்டதையும், அங்க நான் பார்த்ததையும், கேட்டதையும் சொல்லிட்டேன். சரி வர்றயா சாப்பிட போகலாம். சக்தியை அப்படியே தூக்கிண்டு வாயேன் “

“இல்ல மாமி நவீ வந்திடட்டும் அப்புறம் நான் வர்றேன். நீங்க போய் சாப்பிடுங்கோ”

“ஓகே. நீ உங்க ஆத்துக்காரர் வந்துட்டே வா. நான் போறேன். ஹேய்!! இதோ நவீனே வந்துட்டானே. இப்போ வருவே இல்லையா!!”

“சரி மாமி. நீங்க டைனிங் ஹாலுக்கு போயிண்டே இருங்கோ நான் பின்னாடியே வர்றேன்”

“வா வா. நான் வெயிட் பண்ணறேன்.”

“நவீ இந்தாங்கோ சக்தியை வச்சுக்கோங்கோ. நான் மாமிகூட போய் சாப்பிட்டுட்டு இதோ வந்துடறேன்.”

“ஓகே மிருது. நீ போய் நிம்மதியா சாப்பிட்டுட்டு வா. நான் சக்தியைப் பார்த்துக்கறேன்.”

என்று நவீன் கூறியதும் அம்பிகாவுடன் சாப்பிடச் சென்றாள் மிருதுளா. அன்று காலை முதல் மாலை வரை மூத்த தம்பதியரும் அவர்கள் மகன் கவினும் அவன் மனைவியும் நவீன் மிருதுளாவுடன் பேசாமல் இருந்தனர். அதை பெரிதுப் படுத்தாமல்… அது அவரவர் விருப்பம் என்று விட்டு விட்டனர். மாலை நலங்கு நடந்தது. அதில் மிருதுளாவைப் பாட்டுப்பாடச் சொன்னார் ரம்யா சித்தி. உடனே எந்த தயக்கமுமின்றி “யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே” என்று பாடி முடித்ததும் மிருதுளாவை அனைவரும் பாராட்டினர். அதை கவனித்த கஜேஸ்வரி மிருதுளாவிடம்

“ஏன் மன்னி எங்க கல்யாணத்துல நீங்க பாடலை?”

“எனக்கு தோணலை கஜேஸ்வரி. சரி அது இருக்கட்டும் எப்போ நம்ம ஆத்துக்கு வரப்போறேங்கள்?”

“கவின் கிட்ட தான் கேட்கணும் மன்னி. நான் வர ரெடி தான் ஆனா அவர் மாமா மாமி பர்மிஷன் கொடுத்தா தான் வருவார்”

“யாரு? கவினா? அவன் அவா பர்மிஷனுக்கெல்லாம் வெயிட் பண்ணறவனா என்ன!!!!”

“அட ஆமாம் மன்னி.”

“சரி கஜேஸ்வரி நாங்க ஆத்துக்கு கிளம்பறோம். அனேகமா நவீன் கவின் கிட்ட ஆத்துக்கு வரச்சொல்லியிருப்பார். பார்த்துக்கோ முடிஞ்சா வந்துட்டுப் போங்கோ சரியா. நான் வரட்டுமா”

“சரி மன்னி. பை.”

என்று அங்கிருந்து எழுந்து மற்ற அனைவரிடமும் தாங்கள் கிளம்புவதாக கூறி, வீட்டுக்கு வந்து செல்லும்படி அழைப்பு விடுத்து விடைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பிச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.

வீட்டிற்கு வந்ததும் மிருதுளா நவீனிடம் அம்பிகா மாமி சொன்னதனைத்தையும் கூறினாள். அதைக் கேட்டதும் நவீன்

“நம்மளை அசிங்கப் படுத்தறதா நினைச்சுண்டு அவா தான் அசிங்கப் பட்டிருக்கா. விடு விடு இவாளெல்லாம் திருத்த முடியாது. என்ன வேணும்னாலும் சொல்லிண்டு நடக்கட்டும். நாம நம்ம வேலையைப் பார்த்துண்டு இருப்போம்.”

“ஆமாம் நீங்க வேறென்னத்தை சொல்லப் போறேங்கள்? அவா டார்கெட் நான் தானே. என்னை கேவலப் படுத்தறது தான் அவாளோட நோக்கமே”

“வேற என்ன சொல்ல முடியும் மிருது. அவாகிட்ட ஏன் அப்படி செஞ்சன்னு கேட்கணுமா?”

“கேட்டுட்டாலும் அப்படியே அன்பா கேட்டதுக்கு பதில் சொல்லிடவா போறா? அதையும் ஊதி பெரிசாக்கி சண்டைக்கு தான் வந்திருப்பா”

“தெரியறது இல்ல!! பின்ன! இது மாதிரி கேரக்டெர்ஸ்ஸை எல்லாம் இக்னோர் பண்ணிடறது தான் நம்ம லைஃப்புக்கு நல்லது. தே த்ரைவ் ஆன் டிராமா, ஆக்டிங், அன்ட் இன்ஃபர்மேஷன் தெரியுமா. அதுனால தான் ஒவ்வொரு தடவையும் நீ இவாளைப் பத்தியோ இல்லை அவா சொன்னதைப் பத்தியோ கவலைப் படும்போதெல்லாம் விட்டுவிடுன்னு சொல்லறேன் தெரியுமா!!”

“சரி சரி வேறென்ன பண்ணறது? குட் நைட் நவீன்.”

“குட் நைட் மிருது.”

மறுநாள் காலை நவீன் வீட்டிற்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அதில் கவின்

“ஹாய் நவீன் நாங்க எல்லாரும் உங்க ஆத்துக்கு மத்தியானம் இங்க சாப்டுட்டு வரலாம்ன்னு இருக்கோம். ஈஸ் இட் ஓகே?”

“ஓ எஸ் தாராளமா வாங்கோ.”

“சரி அப்போ மத்தியானத்துக்கு மேல பார்ப்போம் வச்சுடவா”

“ஓகே பை”

என்று கால் கட் ஆனதும் மிருதுளாவிடம் விவரத்தை கூறினான் நவீன். உடனே மிருதுளா ஈவினிங் என்ன ஸ்னாக்ஸ் செய்வதென்ற யோசனையில் மூழ்கியவள் சட்டென்று

“ஓகே! நவீ நான் சாயந்தரத்துக்கு கேசரி, மசால் வடை, தேங்காய் சட்னி அன்ட் ஃபில்டர் காஃபி செஞ்சுடறேன். என்ன சொல்லறேங்கள். யார் யார் வராலாம்?”

“அதெல்லாம் அவன் சொல்லலை நானும் கேட்கலை வந்ததும் பார்த்துக்கலாம். ஆமாம் நீ மாசமாகி உன் மாமியார் வீட்டுக்குப் போணயே உனக்கு ஏதாவது செய்து தந்தாளா? நீ மட்டும் ஏன் இப்படி இருக்க?”

“அது அவா குணம். இது என் குணம். விடுங்கோ விடுங்கோ”

கவின் கூறியது போலவே ஒரு வேனில் அனைவரும் வந்திறங்கினர். மூத்த தம்பதியர், கவின் கஜேஸ்வரி, பர்வதத்தின் அக்கா, தங்கைகள் அவர்களின் கணவர்கள் குழந்தைகள் என ஒரு இருபது பேர் வந்திருந்தனர். அனைவரையும் வீட்டினுள் அழைத்து அமரவைத்து பேசிக் கொண்டிருந்தனர் நவீனும் மிருதுளாவும். மூத்த தம்பதியர் அப்பொழுதும் ஏதும் பேசாமல் தங்கள் பேத்தியைக் கூட கொஞ்சாமல் அமர்ந்திருந்தனர். அனைவருக்கும் தட்டில் கேசரி, வடை, சட்னி போட்டு பரிமாறினாள் மிருதுளா. பின் ஃபில்டரிலிருந்து டிக்காக்ஷனை எடுத்து காபி போட்டு கொடுத்தாள். வந்திருந்தவர்களில் மூத்த தம்பதியரும் அவர்கள் வாரிசுகளும் தவிர மற்ற அனைவரும் மிருதுளாவை புகழ்ந்து தள்ளினர். எல்லாரும் சாப்பிட்டப் பின் ரம்யா வீட்டிற்கு கிளம்ப ஆயத்தம் ஆனார்கள். அப்போது வந்திருந்த அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்து, கவினும் கஜேஸ்வரியும் திருமணமான பின் அன்று தான் முதல் முறை வீட்டுக்கு வந்திருந்ததால் மிருதுளா தன்னிடம் வியாபாரத்துக்கிருந்த புடவை ஒன்றையும் நவீனிடமிருந்த புது வேஷ்டி அங்கவஸ்திரத்தையும் வைத்துக் கொடுத்தாள். அனைவரும் வந்த வேனில் ஏறிச் சென்றனர். அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டினுள் வந்ததும் மிருதுளா நவீனிடம்

“நாலு மணி நேரம் போணதே தெரியலை இல்ல நவீ.”

“ஆமாம் மிருது. ஆனா உனக்கு தான் செம வேலை ஆயிடுத்து.”

“எப்பவாவது தானே இப்படி எல்லாருமா வர்றா. இட்ஸ் ஓகே நவீ. வந்த எல்லாரும் நல்லா கலகலன்னு பேசினா உங்க ஃபேமிலியை தவிற”

“மிருது…”

“சரி சரி விட்டுடறேன்… விட்டுடறேன்”

நல்லபடியாக ரம்யா சித்தி மகள் திருமணமும் முடிந்தது சொந்தங்கள் அனைவரும் மிருதுளா நவீன் வீட்டிற்கும் வந்து சென்றனர்.

காலம் வேகமாக சுழன்றது. மிருதுளா வீட்டிலிருந்த படியே புடவை வியாபாரம், டியூஷன் என்று படி படியாக அங்கு பிரபலமாகி வரும் போது நவீனுக்கு ராஜஸ்தான் ஜோத்பூரில் போஸ்டிங் வந்தது. மூட்டையைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு ராஜஸ்தான் சென்றனர். அங்கே புடவை வியாபாரத்தை விடாமல் தொடர்ந்தாள் மிருதுளா. ஆனால் டியூஷன் எடுக்க வாய்ப்புக் கிடைக்காததால் அங்கிருந்த ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தாள். அதனால் அவளுக்கு நிறைய பெண்மணிகளுடன் பரிச்சயம் கிடைத்தது. வியாபாரமும் சற்று லாபகரமாக இருந்தது.

ஜோத்பூரில் ஆரம்பப் பள்ளியில் ஒரு வருடம் ஆசிரியையாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை என்ற விளம்பரம் பார்த்து அங்கே விண்ணப்பித்து அந்த வேலையில் நியமிக்கப்பட்டு சிறந்த ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டே புடவை வியாபாரத்தையும் செய்து வந்தாள். அங்கு பெரிய ஆஃபிஸர் மனைவிமார்களின் நட்பு கிடைக்க அவர்களிடம்… ஒரு சிறிய வீக் என்ட் புடவை மார்கெட் போல ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் போடுவதற்கு பர்மிஷன் வாங்கி அதுபடியே ஞாயிறு தோறும் புடவை வியாபாரத்தை தங்கள் கேம்புக்குள்ளே இருக்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் விற்பனை செய்து வந்தார்கள் நவீனும் மிருதுளாவும்.

இப்படியே அவர்கள் வாழ்க்கை சக்கரம் வேகமாக ஓடிக் கொண்டிருந்ததில் நவீன் தனது பதினைந்து வருட சர்வீஸ்(பென்ஷன் எளிஜிபுள்) முடித்தது மறந்து போனார்கள் இருவரும். சக்தியும் யூ கேஜி முடித்து ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்டு போயிருந்தாள்.

நவீனுக்கு ஈஸ்வரனிடமிருந்து ஃபோன் கால் வந்தது. அதில் அவர்கள் ஜோத்பூர் வருவதாக சொன்னார்கள். அதே சமயம் மிருதுளாவுக்கு அம்புஜத்திடமிருந்து ஃபோன் வந்தது. அதில் அவளும் ஜோத்பூர் வருவதற்கு ஆவலாக இருப்பதாகவும் எப்போது வரலாமென்றும் கேட்டாள். அதற்கு மிருதுளா எப்ப வேண்டுமானாலும் வரலாமென்று சொல்ல… அம்புஜம் அடுத்த வாரமே வருவதாக சொல்லி ஃபோனை வைத்தாள். அன்று மாலை நவீன் வீட்டிற்கு வந்ததும் தனக்கு வந்த ஃபோன் கால் விவரத்தைச் சொன்னான். அதைக் கேட்டதும் மிருதுளா

“வாட் எ கோ இன்ஸிடென்ஸ்!! என் அம்மாவும் அடுத்த வாரம் வர்றதா சொல்லி ஃபோன் பண்ணினா. சுப்பர், சுப்பர் அப்போ இந்த வருஷம் நம்ம சக்தி பர்த்டேக்கு ரெண்டு பாட்டிகளும் ஒரு தாத்தாவும் இருக்கப் போறா”

“சுப்பரா இல்லையான்னு எல்லாரும் வந்ததுக் கப்புறமா தான் தெரியும் மிருது. பார்ப்போம்”

அனைவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலே ஒன்றாக வந்திறங்கினர். அவர்களின் வருகையைப் பற்றி ஏதும் நவீனும் மிருதுளாவும் இரு தரப்பினருக்கும் சர்ப்ரைஸாக இருக்கட்டுமென்று கூறாமல் இருந்தனர்.

அனைவரையும் ஒரு வண்டி ஏற்பாடு செய்து ராஜஸ்தான் முழுவதும் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர் நவீனும் மிருதுளாவும். சுற்றுலா முடிந்து வீட்டுக்கு வந்ததும் மிருதுளா சக்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்த ஏற்பாடுகளில் இறங்கினாள். வீட்டு வேலை, ஸ்கூல் வேலை, சக்தியை கவனித்துக் கொண்டும், பிறந்த நாள் விழா நடத்துவதற்கும் என ஓடிக் கொண்டிருந்தாள் மிருதுளா. அவளுக்கு உதவியாக அந்த நேரத்தில் கைக் கொடுத்தது அவள் அம்மா அம்புஜம் தான்.

சக்தியின் பிறந்த நாள் விழாவுக்கு மிருதுளா அவள் தோழிகள் மற்றும் அவள் பணியாற்றும் பள்ளியில் அவளுடன் வேலைப் பார்ப்பவர்கள் அக்கம்பக்கத்தினர் என் அனைவருக்கும் அழைப்பு விடுத்தாள். நவீன் தன்னுடன் வேலை பார்ப்பவர்களை அழைத்திருந்தான். அவர்கள் வீட்டின் மொட்டைமாடியில் ஷாமியானா பந்தல் போடப்பட்டது. தடபுடலாக சமையற் காரர்கள் வந்து அன்றைய இரவு விருந்துக்கு அனைத்தையும் தயார் செய்துக் கொண்டிருந்தனர். இதை எல்லாம் பார்த்த பர்வதம் அவளின் தங்கைக்கு ஃபோன் போட்டு பேசிக் கொண்டேயிருக்கையில்

“இங்கே இன்னைக்கு சக்திக்கு பிறந்தநாள். அதுனால பந்தல், விருந்துன்னு ஒரே அமர்க்களமா இருக்கு. தேவையே இல்லாம வீண் செலவு பண்ணறா இவா. பணத்தை தண்ணியா செலவழிக்கறா. ம்… என்ன சொல்ல? நாம சொன்னா கேட்கவா போறா?”

என்று பேசுவதைக் கேட்ட மிருதுளாவுக்கு கோபம் வந்தது. தன் மாமியார் ஃபோனை வைத்ததும். அவரிடம் நேராக சென்று

“பேத்திக்கு பிறந்த நாள் கொண்டறது உங்களுக்கு வீண் செலவா? அவ அப்பா அம்மா நாங்க ஓடியாடி சம்பாதிக்கறோம் கொண்டாடுறோம். எங்க குழந்தையோட பிறந்த நாளை நாங்க கொண்டாடாம வேற யாரு கொண்டாடுவா. ப்ளீஸ் இதை வீண் செலவுன்னு இனிமேட்டு சொல்லாதீங்கோ. முடிஞ்சா குழந்தையை ஆசிர்வாதம் பண்ணுங்கோ இல்லாட்டி இன்னிக்கு பேசமயாவது தயவுசெய்து இருங்கோ.”

என்று கூறிக்கொண்டிருக்கையில் சமையற்காரர் வந்து ஏதோ கேட்டதும் அங்கே சென்று மீண்டும் வேலையில் மூழ்கினாள் மிருதுளா.

அன்று மாலை சிறப்பாக சக்தியின் பிறந்த நாள் விழா நடந்து முடிந்தது. வந்திருந்த அனைவரும் குழந்தையை ஆசிர்வதித்து பரிசுப் பொருட்கள் கொடுத்து விருந்துண்டுச் சென்றனர். அப்போது நவீனின் நெருங்கிய நண்பர்களை வழியனுப்பி வைக்கும் போது அதில் ஒருவர் நவீனிடம்

“ஹேய் நவீன் நீயும் நானும் ஒன்னா தான் சர்வீஸ்ல சேர்ந்தோம் ஞாபகமிருக்கா?”

“ஓ எஸ் நல்லாவே ஞாபகம் இருக்கு நண்பா”

“போன மாசத்தோட நாம ஃபிஃப்டீன் இயிர்ஸ் கம்ளீட் பண்ணிட்டோம் மேன். வீ ஆர் நவ் எளிஜிபுள் ஃபார் பென்ஷன்”

“ஓ!!! எஸ்!!! ஆமா டா.”

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மிருதுளாவுக்கு நவீனும் அவளும் முன்பொரு நாள் பேசிக் கொண்டது ஞாபகம் வந்தது. அதைப் பற்றி நவீனிடம் அனைவரும் சென்றதும் பேசினாள். அதற்கு நவீன் யோசிக்க வேண்டும் என்று கூறிவிட்டு உறங்கிப் போணான். ஆனால் மிருதுளா தூக்கம் வராமல் புரண்டுப் புரண்டு படுத்தாள். மறுநாள் காலை விடிந்ததும் நவீனின் அப்பாவிடம்

நவீனுக்கு பதினைந்து வருடம் சர்வீஸ் முடிஞ்சிடுத்து அதுதான் வி.ஆர்.எஸ் வாங்கச் சொல்லறேன் கேட்க மாட்டேங்கறார் பா. அவரோட டேலன்ட்டுக்கு வெளியில் போனா பெஸ்ட்டா வருவார்ன்னு எனக்கு தோணறது. கொஞ்சம் நீங்களாவது சொல்லுங்கோளேன். “

“என்னது கவர்மென்ட் வேலையை விடச் சொல்லறயா? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்”

என்று சொன்னதும் வாடிப் போனாள் மிருதுளா. அன்று மாலை பர்வதம் தன் தங்கைகளுக்கு ஃபோன் போட்டு மிருதுளா நவீனிடம் வேலையை விடச் சொல்லறான்னு சொல்ல ….அதற்கு சித்திகள் மாறி மாறி ஒரே அட்வைஸ் மழையை பொழிந்தனர். வெளில போணா வீட்டு வாடகையே வாங்கற சம்பளத்தை சாபிட்டு விடும், இங்கே இருக்கறா மாதிரி கேன்டீன் வசதி எல்லாம் வெளிலே கிடையாது. ஒவ்வொரு பொருள் என்ன விலை விக்கறது!!! அதுவுமில்லாம சக்திக்கு இது மாதிரி நல்ல ஸ்கூல் வெளில கிடைக்குமா அப்படியே கிடைத்தாலும் பணத்தைக் கொட்டிக் குடுக்க வேண்டியிருக்கும். நவீனுக்கு இந்த வேலை தான் சரி அப்படி இப்படின்னு சொன்னதை எல்லாம் கேட்டதில் மிருதுளாவின் காது வலித்தது. ஃபோனை வைத்துவிட்டு தன் மனதில் “இந்த அப்பாவிடம் சொன்னது தப்பா போச்சு. இவா எல்லாரும் ஊருக்கு போகட்டும் அப்புறமா நவீன்ட்ட இதைப் பத்தி பேசலாம்” என்று எண்ணிக் கொண்டே அவளது வேலைகளில் மூழ்கினாள் மிருதுளா.

தொடரும்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s