சஷ்டியப்த பூர்த்தி முடிந்த ஒரு வாரத்தில் ஊருக்கு கிளம்பினர் ஈஸ்வரன், பர்வதம், பவின் மற்றும் அவன் நண்பன். அவர்கள் வந்து போனதில் கையிருப்பு பணம் முழுவதும் காலியானது நவீனுக்கு. மீண்டும் ஐநூறு ரூபாய்க்கே திரும்பினர் மிருதுளாவும் நவீனும். அப்போது நவீன் மிருதுளாவிடம்
“என்ன மிருது நான் சொன்னதைக் கேட்காம நீ பாட்டுக்கு அவாளுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணி அதுக்கு புது புடவை வேஷ்டி சட்டை என சொலவு வச்சதோட இல்லாம என்னென்னவோ வாங்கி வேற குடுத்தனுப்பிருக்க!!! இப்போ பாரு நாம பேக் டூ ஸ்கூவேர் ஒன்”
“பரவாயில்லை நவீ. பணம் எப்ப வேணும்னாலும் சம்பாதிச்சுக்கலாம். ஆனா இந்த மாதிரி விசேஷங்கள் எல்லாம் அடிக்கடி வருமா? வராதில்லையா!!! அதுவுமில்லாம உங்க பேரன்ட்ஸும் சந்தோஷப் பட்டிருப்பா தானே ….அதுனால செலவைப் பத்தி கவலைப் படாதீங்கோ”
“நீதான் சொல்லிக்கணும். நாம எடுத்துக் கொடுத்த டிரஸ்லேந்து எதுலையுமே திருப்தி அடையாதவா!!! எங்கேருந்து சந்தோஷப் பட்டா? அதை நீ பார்த்த?”
“நம்மளால முடிஞ்சதை பண்ணிணோம் நமக்கு மனசுக்கு திருப்தியா இருக்கு அதோட விடுங்கோ. நாம சமாளிச்சுக்குவோம்”
“என்னமோ சொல்லுற பார்ப்போம்”
“நான் ஒண்ணு சொல்லறேன் அதுக்கு நீங்க ஃப்ராங்க்கா ரிப்ளை பண்ணணும் ஓகே வா?”
“என்ன சொல்லு”
“நான் வேலைக்கு போகட்டுமா?”
“தாராளமா போ மிருது ஆனா நம்ம சக்தியை யாரு பார்த்துப்பா?”
“அம்மா கிட்ட ஹெல்ப் கேட்கவா?”
“விளையாடறயா அம்மா இங்க வந்துட்டா பின்ன உன் அப்பாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா?”
“சரி மொதல்ல நான் வேலைக்கு அப்ளை பண்ணறேன். கிடைக்கட்டும். அப்புறம் இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம் சரியா”
“ஓகே! ஆனா நாம தான் மேனேஜ் பண்ணிக்கணும் மிருது. வீ ஷுட் நாட் டிஸ்டேர்ப் யுவர் பேரன்ட்ஸ்”
மிருதுளா வேலைத் தேடுவதில் மும்முரமானாள். தேட ஆரம்பித்த ஒரே மாதத்தில் அவளுக்கு வணிக நடைமுறை ஒப்பந்தசேவை எனப்படும் பன்நாட்டு BPO நிறுவனம் (இருபது வருடங்களுக்கு முன் அப்போது தான் புதிதாக இந்தியாவில் முளைக்க ஆரம்பித்தத் தருணம்) ஒன்றில் ஒன்பது ரௌண்ட் இன்டர்வியூவை வென்று மாதம் பண்ணிரெண்டாயிரம் சம்பளத்தில் வேலைக் கிடைத்தது. ஆனால் அதில் இரண்டு வருடக் காலம் ஒப்பந்தமும் மற்றும் அமெரிக்காவிற்கு ஆறு மாத காலம் டிரேயினிங் சென்று வரவேண்டும் எனவும், அப்படி இரண்டு வருடத்திற்குள் தானாக வேலையை விட நேர்ந்தால் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதற்கான கையெழுத்திட ஃபார்ம் கொடுக்கப்பட்டு, முடிவைத் தெரிவிக்க இரண்டு நாள் டைமும் கொடுக்கப்பட்டது. அதை சிறந்த வாய்ப்பாக கருதினர் நவீனும் மிருதுளாவும். ஆனால் சக்தியை யார் பார்த்துப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது!! குழந்தையை விட்டுவிட்டு எப்படி ஆறு மாத காலம் பிரிந்திருப்பது என்ற மனக் குழப்பம் என்று தடுமாறினாள் மிருதுளா. நவீன் அவளை சென்று வரும் படியும், சக்தியை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினான். மிருதுளா தன் அம்மாவிடம் கூறினாள். அம்புஜம் தன் கணவர் மற்றும் மகனிடம் கூறினாள் அதைக் கேட்ட வேனு அம்புஜத்திடம்
“அம்மா நல்ல ஆஃபர் இது. மிருதுவ சைன் பண்ணச் சொல்லு. சக்தியை நாம இங்க கூட்டிண்டு வந்து பார்த்துப்போம். என்ன ஒரு சிக்ஸ் மந்த்ஸ் தானே. பறந்திடும். நீ தான் மிருதுக்காவுக்கு தைரியம் சொல்லணும்”
அம்புஜமும் வேனுவும் ஃபோனில் மிருதுளாவிடம் இதைக் கூறினர்.
அடுத்து தன் மாமனார் மாமியாரிடம் ஃபோனில் தனக்கு வேலைக் கிடைத்ததைப் பற்றி கூறினாள் மிருதுளா. நல்லக் காலத்துலேயே நல்லது நினைக்காத மூத்த தம்பதியர் மேலும் மிருதுளாவைக் தங்கள் பேச்சால் குழப்பினர்.
“என்னது அமெரிக்கா போகணுமா? என்ன விளையாடறயா? அப்போ உன் குழந்தையையும் உன் புருஷனையும் அம்போன்னு விட்டுட்டு நீ மட்டும் போகப் போறயாக்கும்!!! நல்லா இருக்கு!!! முதல்ல பொண்ணா லட்சணமா உன் குழந்தையையும் புருஷனையும் பார்த்துக்கோ போதும். புருஷன் சம்பாதிச்சுண்டு வரதுக்கு தகுந்தா மாதிரி தான் ஆத்துக் காரி செலவழிக்கணும். அளவுக்கதிகமா ஆசைகளை வச்சுண்டா இப்படி தான் குடும்பத்தை விட்டுட்டு பணத்தைத் தேடி ஓடத்தோணும். அப்படியே வேலைக்குப் போறதா இருந்தா உள்ளூர்லயே தேடு அதை விட்டுட்டு வேற வேலையில்லை. ஊரு, நம்ம சொந்த பந்தங்கள் எல்லாம் இப்படி புள்ளையையும் புருஷனையும் விட்டுட்டு சம்பாதிக்க போனா சிரிப்பா. நாங்க சொன்னதை கொஞ்சமாவது யோசிச்சுப் பாரு”
என்று ஃபோனை வைத்தனர். பெரியவர்கள் என்ற மரியாதைக்கு சொல்லி அபிப்பிராயம் கேட்கப் போய் குழப்பத்தை மட்டுமே மனதில் சுமந்துக் கொண்டு ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த சக்தியைப் பார்த்த வண்ணம் கண்களில் மெலிதாக வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அவளைத் தூக்கிக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
பெண்களாக பிறந்து விட்டால் மனம் ஒன்றும் மூளை ஒன்றுமாக கூறி அவர்களை குழப்பித் தள்ளும். அதிலும் திருமணமான பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். மனம் வீட்டையும் மூளை வேலையையும் பார்க்கச் சொல்லி பாடாய்ப்படுத்திவிடும். திருமணமான ஆண்கள் வேலைக்கு போவதற்கும் திருமணமான பெண்கள் வேலைக்கு போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் அன்றிருந்தன. அப்போதெல்லாம் குழந்தைகளுக்கான டே கேர் வசதி எல்லாம் இருக்கவில்லை அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் அதற்கு காசுக் கொடுத்து கட்டுப்படி ஆகாத நிலைமை நிலவியது.
இன்றைய காலம் பெண்களுக்கு வரப்பிரசாதம் என்றாலும் இன்றும் பலப் பெண்கள் இந்த மன உளைச்சலுக்கு ஆளாவது சகஜமாகத் தான் இருந்து வருகிறது.
அந்த ஃபார்மோடு வீட்டுக்கு வந்ததிலிருந்து மிருதுளாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. முழு நேரமும் யோசனையிலேயே இருந்தாள். அதைப் பார்த்த நவீன் அவளிடம்
“எதுக்கு உன்னை நீயே குழப்பிக்கற மிருது? ஜஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ் தானே!!! நாங்க எல்லாரும் இருக்கோம் நம்ம சக்தியை நாங்க பார்த்துக்கறோம். யூ டோண்ட் வரி. நீ கையெழுத்து போடு மிருது.”
“அதுக்கில்ல நவீ நான் எப்படி நம்ம சக்தியைப் பிரிஞ்சு இருப்பேன்? அதுவுமில்லாம உங்களுக்கு அடுத்த வருஷம் போஸ்டிங் வந்திடும். எந்த ஊருக்கு அனுப்பப் போறாளோ நெரியாது!!! அப்போ நான் இங்கேயும் நீங்க எங்கேயோ வேலைப் பார்க்கணுமே!!! அதை யோசிச்சேங்களா!! இல்ல அடுத்த வருஷமே ரிசைன் பண்ண வேண்டி வந்தா நாம இரண்டு லட்சம் பணம் கட்டணுமே அதுக்கு எங்க போவோம்? அதை யோசிக்க வேண்டாமா!!!”
“அதை எல்லாம் நடக்கும் போது பார்த்துப்போம் மிருது. இப்போ கிடைச்ச இந்த வாய்ப்பை ஏன் விடணும்?”
“அப்படியா சொல்லறேங்கள்?”
“அப்படி தான். இந்த காலத்துல பண்ணெண்டாயிரம் சம்பளம், அமெரிக்கா வாழ்க்கை!!!! வேண்டாம்னு சொல்ல எப்படி உனக்கு மனசு வருதுனே எனக்கு புரியலை!!! சப்போஸ் உனக்கு அமெரிக்காலேயே வேலை கொடுத்துட்டா கசக்கறதா என்ன? நீ அந்த ஃபாரமில் கையெழுத்துப் போட்டு நாளைக்கு குடுத்திடு மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் புரியறதா?”
“ம்….ம்….”
என்று சொல்லித் தலையசைத்தாலும் அவள் மனதில் பெரும் போராட்டமே நடந்துக் கொண்டிருந்தது. அன்றிரவு முழுவதும் தூங்காமல் மனதில் தன் அம்மா, வேனு, நவீன், ஈஸ்வரன், பர்வதம் சொன்னவற்றை எல்லாம் அசைப் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுள் ஒரு பட்டிமன்றமே நடந்தது. விடிய விடிய தன் மனதில் நடந்த அந்த விவாதங்களின் முடிவை எடுத்தாள் மிருதுளா. தெளிவு பிறந்தது. ஃப்ரெஷ் ஆகி வந்து காபிப் போட்டுக் கொண்டு ஹாலில் உட்கார்ந்து மெல்ல ருசித்து அருந்தினாள். அப்போது நவீன் எழுந்து வந்து..
“என்ன மிருது இவ்வளோ சீக்கிரம் எழுந்துட்ட!!!”
“தூங்கினா தானே எழுந்துக்கறதுக்கு!!!”
“என்ன சொல்லுற? அப்போ நீ நைட் தூங்கவே இல்லையா?”
“ஹூம் …ஹூம்… தூக்கம் எப்படி வரும் நவீ?”
“நீ இன்னுமா அதே குழப்பதுல இருக்க?”
“இருக்காதா பின்ன?”
“ஒரு குழப்பமும் வேண்டாம் மிருது. நாங்க சொன்னதெல்லாம் தள்ளி வை. உன் மனசைக் கேள். அது சொல்லும் நீ என்ன செய்யணும்னு. அதுபடி செய். இட்ஸ் அப் டூ யூ. நீ சேரறேன்னு சொன்னாலும் சரி சேரமாட்டேன்னு சொன்னாலும் சரி ஐ வில் ரெஸ்பெக்ட் யூவர் டிஸிஷன் ஓகே!!! இரு நான் போய் ப்ரஷ் பண்ணிட்டு வர்றேன்”
நவீன் ப்ரெஷ் பண்ணிட்டு வந்ததும் மிருதுளா சூடான காபியைக் கொடுத்தாள். அவனும் அதைக் குடித்துக் கொண்டே பேப்பர் படித்தான். பின் மிருதுளாவிடம்….
“ஹேய் மிருது இன்னைக்கு நாம ப்ரேக்ஃபாஸ்ட் அந்த கம்பெனிக்கு போற வழியில இருக்குற டாபால சாப்பிடுவோமா? அப்படியே உன் டிஸிஷனை அவாகிட்ட சொல்லிட்டு வந்ததும் அங்கேயே லஞ்சும் சாப்டுட்டு வீட்டுக்கு வந்திடுவோம் என்ன சொல்லற?”
“என்ன நவீ நாம அன்னைக்கே இன்டர்வியூக்கு போனபோதே சாப்பாடு பழங்கள், காய்கள் எல்லாம் வாங்கிண்டு வந்ததிலேயே நூறு ரூபாய் போயிடுத்து இப்போ நம்ம கிட்ட இருக்கறதே நானூறு ரூபாய் தான் இதுல தான் இந்த மாசத்தையே ஓட்டணும். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் இட்டிலி வச்சுடறேன். மத்தியத்துக்கும் சமச்சுடறேன். நிறைய டைமிருக்கே!!! எல்லாத்தையும் முடிச்சுட்டே கிளம்பலாம்”
அன்று நவீனுக்கு வலித்தது. ஆம் தன்னை நம்பி வந்தவளுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறோமே என்று அவன் மனம் வருந்தியது. மிருதுளாவைத் திருமணம் செய்துக் கொள்வதற்கு முன் தனது முதல் பத்து வருட சம்பாத்தியத்தை தாய் தந்தை என்று நம்பி தன் படிப்புச் செலவு போக மீதம் அனைத்தையும் தனக்கென ஏதும் வைத்துக் கொள்ளாமல் கொடுத்ததால் இன்று தன் மனைவிக்கு ஒன்றும் செய்யமுடியாமல் போகிறதே என்று எண்ணி பெருமூச்சு விட்டான். பேங்க்கில் லோன் போட்டு வாங்கிய பைக்கின் ஈ.எம்.ஐ முடிவதற்கு இன்னும் ஒரு வருடம் மீதமிருந்தது. தன் பெற்றோர்கள் இருந்த வீட்டை விலைக்கு வாங்க எடுத்த லோனின் ஈ.எம்.ஐ முடியவும் ஆறு மாத காலம் மீதமிருந்தது. இதை எல்லாம் எண்ணிக்கொண்டே அமர்ந்திருந்தவனைத் தோளில் தட்டினாள் மருதுளா.
“ஆங் ஆங் ஏய் மிருது நீ குளிச்சாச்சா?”
“நான் குளிச்சு டிபன் ரெடி பண்ணி சாதம் வச்சு குழம்பும் வச்சாச்சு. நீங்க என்ன இந்த பேப்பர்லேயே மூழ்கிட்டேங்கள்? சரி சரி எழுந்து குளிச்சு ரெடி ஆகுங்கோ அதுக்குள்ள நான் கிட்சன் வேலைகளை முடிச்சுட்டு சக்தியை எழுப்பி ரெடி பண்ணறேன்.”
என்று மிருதுளா சொன்னதும் எழுந்து குளிக்கச் சென்றான் நவீன். அவன் குளித்து ரெடி ஆவதற்குள் மிருதுளா சொன்னது போலவே எல்லா வேலைகளையும் முடித்து சக்தியையும் எழுப்பி ப்ரஷ் செய்து உடம்பை ஈர டவலால் துடைத்து சுத்தம் செய்து அவளுக்கு டிபன் ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அதை முடித்ததும் அவளை விளையாட விட்டுவிட்டு அவளுக்கு வேண்டிய டிரஸ் மற்றும் டையப்பரையும், பழங்களை வெட்டி டப்பாவில் போட்டு வைத்திருந்ததையும், பிஸ்கெட் பாக்கெட்டையும், தண்ணீர் பாட்டிலும் என அனைத்தையும் ஒரு பேகில் போட்டு வைத்து விட்டு நவீனுடன் சேர்ந்து காலை உணவருந்தினாள்.
பிறகு சாமி கும்பிட்டு விட்டு அந்த கம்பேனிக்கு பைக்கில் புறப்பட்டுச் சென்றனர். மிருதுளா கேட்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளே சென்றாள். அங்கு அந்த கம்பேனி பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு வாசலில் இருந்த பெரிய ஆலமரத்தடியைச் சுற்றிப் போடப்பட்டிருந்த சிமெண்ட் மேடையின் மீது சக்தியை வைத்துக் கொண்டு அமர்ந்தான் நவீன்.
உள்ளே சென்ற மிருதுளாவை ஓரிடத்தில் அமரச் செய்தனர். அப்போதும் அவள் மனம் முழுவதும் …..தான் இல்லாமல் நவீன், சக்தி என்ன செய்வார்கள்? எப்படி இருப்பார்கள் என்ற எண்ணமும், தான் இப்போது இந்த வேலையில் சேர்ந்தால் தன் குடும்பத்திலிருக்கும் பணப் பிரச்சினை தீருமே அதற்காகவாவது ஆறு மாசம் பல்லைக் கடித்துக் கொண்டு கடந்திடலாமா என்ற எண்ணமும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த சிந்தனைகளை மனதில் அசைப் போட்டுக் கொண்டே தான் அமர்ந்திருந்த இருக்கையின் வலது புறமிருந்த ஜன்னல் வழியாகப் பார்த்தாள். வெளியே மரத்தடியில் அமர்ந்திருந்த நவீனும் சக்தியும் தெரிந்தனர். அவர்களையே சற்று நேரம் பார்த்தவள் கண்கள் கலங்கியது. மீண்டும் குழப்பம் என்னும் வேதாளம் அவளைத் தொற்றிக் கொண்டது. அவள் பெயர் சொல்லி அழைக்கப்பட்டதும் மனதில் ஒரு குருக்ஷேத்திர போரை நடத்திக் கொண்டே சட்டென எழுந்து சென்று அந்த அறையின் கதவைத் தட்டி
“மே ஐ கம் இன்” என்றாள்.
தொடரும்…….