அம்புஜம் குஜராத் வந்து ஒரு மாதமானது. அம்புஜமும் கிளம்பி ஊருக்குச் சென்றாள். நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் ஈஸ்வரனிடமிருந்து நவீன் மிருதுளாவுக்கு ஃபோன் வந்தது.
“ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன்”
“ஆங் சொல்லுங்கோ பா நான் மருது தான் பேசறேன்”
“நவீன் இல்லையா?”
“இருக்கார் பா குளிச்சிண்டிருக்கார்.”
“சரி சரி அடுத்த மாசம் கவினுக்கும், கஜேஸ்வரிக்கும் கல்யாணம் ஞாபகம் இருக்கா!!”
“ஏன் இல்லாம!!! நல்லா ஞாபகம் இருக்கு”
“சரி சரி அதுக்கு முன்னாடி ஆத்துல சுமங்கலிப் பிரார்த்தனையும் சமாராதனையும் பண்ணப்போறோம். அது கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி வச்சிருக்கோம். நீ வரணும். புரிஞ்சுதா? சக்தி எப்படி இருக்கா? நவீன்ட்டயும் சொல்லிடு. வச்சுடறேன்”
“சக்தி நல்லா இருக்கா. சரி ப்பா…”
என்று சொல்லி முடிப்பதற்குள் ஈஸ்வரன் ஃபோனை வைத்துவிட்டார். ரிசீவரையே பார்த்துக்கொண்டிருந்த மிருதுளாவிடம் பாத்ரூமிலிருந்து வெளியே வந்த நவீன்
“ஏய் மிருது யாரு ஃபோன் ல? ஏன் ரிசீவரை கீழே வைக்காமல் பிடிச்சிண்டே இருக்காய்?”
என கையிலிருந்த ரிசீவரை வாங்கி வைத்துவிட்டு அவளை ஒரு உலுக்கு உலுக்கினான் நவீன்…
“ஆங் ஆங் என்ன நவீ?”
“நீ எங்கே இருக்க? ஃபோன்ல யாருன்னு கேட்டு பத்து நிமிஷமாச்சு!! அப்படியே சிலை மாதிரி நிக்கற?”
“உங்க அப்பா தான். அடுத்த மாசம் கவின் கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி சுமங்கலிப் பிரார்த்தனை வச்சிருக்காளாம் அதுக்கு வரச்சொன்னா.”
“நீ எங்கன்னு போவ? அவா புது வீடு அட்ரஸ் இருக்கா? சரி ஃபோன் பண்ணினாலே அதை பத்தி சொன்னாளா? இல்ல அட்ரஸ் தான் கொடுத்தாளா?”
“அதெல்லாம் ஃபோன் போட்டுக் கேட்டுக்கலாம் விடுங்கோ”
“அப்போ அப்படி கேட்டுத் தெரிஞ்சிண்டு நாம அந்த கல்யாணத்துக்கு போகணுமா? நமக்கு இன்விடேஷனை கூட காமிக்கலையே!!”
“அதுக்கு தான் இன்னும் ஒரு மாசமிருக்கே அப்புறம் என்ன? அனுப்புவா!!! நாம போயிட்டு வருவோம். இதெல்லாம் பெரிசாக்க வேண்டாமே ப்ளீஸ் நவீ. அப்புறம் இதுக்கும் என் தலைதான் உருட்டப்படும்”
“என்னோட அபிப்பிராயத்தை சொன்னேன். இதுக்கு மீறியும் போனும்னா போகலாம் ஆனா …..சரி போவோம் போய் தான் பார்ப்போம்”
“என்ன ஆனா? ஆவன்னான்னுட்டு?”
“ஒண்ணுமில்லை போவோம் போவோம். சரி நீ ஏன் பிரமைப் பிடிதவள் போல ரிசீவரை வச்சுண்டு நிண்ணுண்டிருந்த”
“சக்தி எப்படி இருக்கான்னு கேட்டார். நான் பதில் சொல்லறதுக்கு முன்னாடியே ஃபோனை வச்சுட்டார். அதுவுமில்லாம சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அந்த தேதி எனக்கு சரி வருமா என்னோட நாள் ஏதாவது வருமான்னு ஒண்ணுமே கேட்காம இந்த தேதி வரணும்ன்னு மட்டும் சொல்லிட்டு வச்சுட்டாரா… அது தான் அந்த ஷாக் ல இருந்தேன்.”
“இன்னும் நிறைய இருக்கலாம் எதுக்கும் பி கேர் ஃபுல் மிருது”
“ஓகே ஓகே”
கவினின் கல்யாண தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவே ஊருக்குச் சென்றனர் நவீனும் மிருதுளாவும். அவர்கள் எப்போது வீடு வாங்கினார்கள் என்றோ இல்லை எப்போது வீடு மாறி வந்தார்கள் என்றோ ஒன்றுமே கேட்கவில்லை நவீனும் மிருதுளாவும். கவின் மட்டும் நவீனிடம்
” நல்ல ஆஃபர் வந்ததுன்னு நம்ம பிச்சுமணி மாமா பாங்க்ல லோன் போட்டு இந்த அப்பார்ட்மெண்ட் வாங்கிட்டேன்.”
“ஓ அப்படியா. நல்லா இருக்கு”
என்று அத்துடன் நிறுத்திக் கொண்டான் நவீன்.
சுமங்கலிப் பிரார்த்தனை நாள் வந்தது. அன்று காலை வீட்டுச் சுமங்கலிப் பெண்கள் அனைவரும் குளித்து ஒன்பது கஜம் புடவை உடுத்திக் கொண்டனர். சுமங்கலிப் பிரார்த்தனை சிறப்பாக நடந்தேறியது. அப்போது அனைவரையும் சற்று வெளியே நிற்கச் செய்து சாமி இலையில் சாப்பாடு பரிமாறி விட்டு கதவைச் சாற்றி அவர்கள் வம்சத்தில் சுமங்கலிகளாக இறந்தவர்கள் பெயர்களை கைத் தட்டி அழைக்கச் சொன்னார் சாஸ்திரிகள். அப்போது பர்வதம் அவள் வீட்டுப் பக்கம் பெண்களின் பெயர்களைச் சொல்ல ஆரம்பித்தாள்….அதைக் கேட்ட நவீனின் அத்தை வாசலில் இருந்து
“ஏய் பர்வதம்!!! உன் ஆத்துக் காரர் பக்கம் சுமங்கலியா போனவாளை தான் அழைக்கணும். நீ யாரை அழைக்கறாய்?”
என்றதும். உடனே ஏதேதோ பெயர்களை முனுமுனுத்தாள் பர்வதம். அது காதில் விழாததால் மிருதுளா
“அம்மா என்ன பெயர் சொன்னேங்கள்? எனக்கு கேட்கலை.”
“எல்லாம் நான் சொல்லியாச்சு அது போதும். பேசாம இரு”
என்றதும் மிருதுளாவும் அமைதியாக தன் மனதில்
“அம்மா தாயே நடப்பதனைத்தையும் நீயே பார்த்துக் கொண்டிருக்கிறாய். எனக்கு சரியா புரியலை அதுனால சொல்ல முடியலை மன்னிச்சுக்கோமா. எங்காத்துல சுமங்கலியா போனவா இப்போ சாப்பிட வரப் போறவா ரூபத்தில வந்து சாப்பிட்டு எங்களை ஆசிர்வதிச்சிட்டு போகணும் மா..அதுக்கு நீ தான் அருள் புரியணும் மா”
என்று வேண்டிக் கொண்டாள். கதவைத் திறந்தாள் பர்வதம். ஒன்பது சுமங்கலிகள் வீட்டினுள் நுழைந்தனர். அவர்களை வரவேற்றார்கள் பர்வதமும் மிருதுளாவும். சாமிக்கு முன் போடப்பட்டிருந்த இலைகளில் அவர்களை வரிசையாக அமரச்செய்தனர். பின் தன் புடவையை சரி செய்துக் கொள்வதற்காக உள்ளே சென்றாள் பர்வதம். அப்போது சாஸ்திரிகள்
“எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தாச்சு. மாமி உங்க மூத்த மாட்டுப்பொண் எங்கே அவாளை முதலில் பரிமாறச் சொல்லுங்கோ”
என்றார். அதைக் கேட்டதும் மிருதுளா முன்னே செல்ல…பர்வதம் அவள் கையை பின்னாலிருந்து பிடித்து நிறுத்தி தன் நாத்தனாரை அனுப்பினாள். அவரும் பர்வதத்திடம் ஒன்றும் சொல்லாமல் பரிமாறச் சென்றார். அவரைப் பார்த்ததும் சாஸ்திரிகள்
“பர்வதம் மாமி மாட்டுப்பொண்ணா நீங்கள்?”
“இல்லை இல்லை நான் பர்வதத்தோட ஒண்ணு விட்ட நாத்தனார்”
“மாமியோட மூத்த புள்ளைக்கு கல்யாணமாச்சோன்னோ”
“ஆங் கல்யாணமாகி அவனுக்கு ஒரு பொண்ணுமிருக்கா”
“அப்போ நீங்க அதை கீழே வச்சுட்டு போய் மாமியோட மாட்டுப்பொண்ணை வரச்சொல்லுங்கோ. அவா தான் பரிமாறணும்”
என்றது வேகமாக உள்ளேச் சென்றாள். அனைத்தையும் கேட்ட மிருதுளா பர்வதத்தைப் பார்த்தாள் வேறு வழியில்லாமல் மிருதுளாவைப் பிடித்து நிறுத்திய கையை எடுத்து
“ம்..ம்.. போ போ”
என்றாள். மிருதுளாவும் அனைவரும் அமர்ந்திருந்த ஹாலுக்குச் சென்றாள் அவளிடம் சாஸ்திரிகள் பரிமாறச் சொன்னார் அதற்கு மிருதுளா
“சாரி மாமா கல்யாணத்துக்கு அப்புறம் நான் அட்டென்ட் பண்ணற முதல் சுமங்கலிப் பிரார்த்தனை இது. அதுனால எனக்கு எதைப் எப்படிப் பரிமாறணும்ன்னு தெரியாது”
“நீங்க கவலைப் படாதீங்கோ எல்லாம் கத்துக்கலாம். நான் சொல்ல சொல்ல ஒவ்வொன்னா எடுத்துண்டு வந்து என் இலையிலிருந்து ஆரம்பிச்சு எல்லார் இலைகளிலும் பரிமாறுங்கோ சரியா. இது ஒண்ணும் ராக்கெட் சையின்ஸ் இல்லை”
“ஓகே மாமா அது படியே செய்யறேன்”
“ஃபர்ஸ்ட் சுவீட் எடுத்துண்டு வந்து எல்லார் இலையிலேயும் வையுங்கோ”
என்று அவர் சொல்ல சொல்ல மிக நேர்த்தியாக சாப்பாடு பரிமாறி அசத்தினாள் மிருதுளா. அதை கவனித்த சாஸ்திரிகள் பர்வதத்திடம்
“மாமி உங்க மாட்டுப்பொண் நல்ல பொறுப்பானவள்ன்னு அவ சாப்பாடு பரிமாறும் போதே தெரிஞ்சுண்டுட்டோம். அட ஆமாம் மாமி கரெக்ட்டான அளவில் சிந்தாம சிதறாம செய்தா. சரி மாமி நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்”
“ம்…சரி”
என்று தான் நினைத்ததை நடத்த முடியாமல் போன கடுப்பில் இரு வார்த்தையில் முடித்தாள் பர்வதம். மறு நாள் சமாராதனையும் முடிந்தது. பர்வதத்தின் தங்கைகள் அனைவரும் கவினின் திருமணத்திற்கு வந்தனர்.
அன்றிரவு மிருதுளா சக்திக்கு பால் குடுப்பதற்காக ஃபிரிட்ஜைப் பார்த்தாள் அதில் பால் இருக்கவில்லை அப்போது அடுப்படியில் பர்வதம் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள் அங்கே சென்று…
“அம்மா பாலிருக்கா. சக்திக்கு குடுக்கணும். ஃப்ரிட்ஜில் பார்த்தேன் இருக்கலை”
“பால் எல்லாம் இல்லை. வந்த இடத்தில் அட்ஜெஸ்ட் பண்ணிண்டு இருக்கத் தெரியணும்”
என சலித்துக் கொண்டாள் பர்வதம். அதைக் கேட்டதும் மிருதுளா அங்கிருந்து ஹாலுக்கு வந்து சக்தியை தூங்க வைத்தாள். அப்போது நவீன் அங்கே வந்து மிருதுளாவிடம்
“என்ன சக்தியை தூங்க வைக்கிற!!! அவ பால் குடிச்சிட்டாளா?”
“இல்லை. நானும் என் பொண்ணும் வந்த இடத்துல அட்ஜெஸ்ட் பண்ணிக்கறோம். ஒரு நாள் பால் குடிக்கலைன்னா என்ன ஆயிடப் போறது?”
என்று மெல்லிய குரலில் சொன்னாள் மிருதுளா. அதைக் கேட்டதும் நவீன்
“என்ன ஆச்சு? ஏன் பால் இல்லையாமா? இத்தனைப் பேர் வர்றான்னு தெரியாது இவாளுக்கு. அதுக்கேத்தா மாதிரி வாங்கி வைக்க வேண்டாமா?”
“வேண்டாம் நவீ நீங்க ஏதாவது கேட்க போக அதையே ஊதிப் பெரிசாக்கி பிரச்சினை ஆக்கிடுவா…விட்டு விடுவோம். என்ன இன்னும் ஒரு மூணு நாள் தானே!”
“ம்…ம்…இதுக்கு தான் அன்னைக்கே பி கேர் ஃபுல்ன்னு சொன்னேன்”
இவர்கள் மெல்லப் பேசிக்கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டில் தங்கியிருந்த பர்வதத்தின் தங்கை லலிதா ஹாலுக்குள் நுழைந்தாள்..
“என்ன நவீன் ரொமான்ஸா !!! மலரும் நினைவுகளா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லைச் சித்தி சும்மா பேசிண்டு இருந்தோம் அவ்வளவு தான்.”
“சக்தி தூங்கியாச்சா மா மிருது?”
“ஆங் தூங்கிட்டா சித்தி”
“இருங்கோ இதோ வர்றேன். நம்ம பர்வத அக்கா கிட்ட விச்சுக்கு பால் கேட்டிருந்தேன். காச்ச வச்சிருக்காளான்னு தெரியலை. அவள் அது கொடுக்காட்டி தூங்க மாட்டா தெரியுமோ!!! அதை எடுத்துண்டு அவகிட்ட குடுத்துட்டு நான் வந்து உங்க கூட பேசறேன் சரியா. எக்ஸ்க்யூஸ் மீ”
இதைக் கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள். நவீன் சித்தி போன வழியையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அடுப்படியிலிருந்து பர்வதம் லலிதாவிடம்
“ஏய் லலிதா இந்தா உன் பொண்ணுக்கு பால் கேட்டயே வந்து எடுத்துக்கோ. கரெக்ட்டா ஒரு கிளாஸ் பால் தான் இருந்தது. இந்தா ஆறிடப் போறது போய் குழந்தைக்கு குடு”
என்று கொடுத்தாள். அதைப் பார்த்ததும் நவீன் கோபமாக எழந்து போய் கேட்க முயற்சித்தான் ஆனால் மிருதுளா அவனைத் தடுத்து நிறுத்தி
“வேண்டாம் நவீ. ஷீ இஸ் டூயிங் இட் பர்பஸ்ஃபுலி! ஜஸ்ட் இக்னோர் நவீ. நீங்க எனக்கு எப்பவும் சொல்லறதை இப்போ நான் உங்களுக்குச் சொல்லறேன். ப்ளீஸ். இப்போ வேண்டாம்”
“ச்சே…”
என்று தன் தலையில் அடித்துக் கொண்ட நவீன் மிருதுளாவிடம்
“நாளைக்கு காலையில நாம உங்க ஆத்துக்குப் போயிடுவோம். நாளை மறுநாள் காலையில தானே இவா பஸ்ஸில ஈரோடுக்கு கிளம்பறா அப்போ வருவோம் போதும். சரியா”
“ம்…சரி நவீ. ஆனா இந்த நேரத்துல அங்க போணோம்னா உங்க அப்பா அம்மா தேவையில்லாம எனக்கு தான் பெயர் கட்டுவா”
“அதை எல்லாம் நினைக்காத மிருது. இப்போ மட்டும் என்ன வாழறதாம். பேசாம நான் சொல்லறதைக் கேளு”
மறுநாள் விடிந்ததும் மிருதுளாவைக் கிளம்பச் சொன்னான் நவீன். மிருதுளாவும் கிளம்பி நின்றாள். அவர்கள் எங்கோ கிளம்பி நிற்கிறார்கள் என்பதை அறிந்த பர்வதம் ஈஸ்வரனிடம் ஏதோ காதில் ஓதினாள். உடனே ஈஸ்வரன் நவீனிடம்
“என்ன காலங்காத்தால ரெண்டு பேரும் எங்கயோ போறா மாதிரி ரெடியாகி நிக்கறேங்கள்?”
“ஆமாம் நாங்க வந்து ஒரு வாரமாச்சு இன்னும் மிருது ஆத்துக்குப் போகலை அது தான் ஒரு எட்டுப் போயிட்டு வந்துடலாம்ன்னு கிளம்பியிருக்கோம்.”
“அப்போ கவின் கல்யாண வேலை எல்லாம் யார் செய்வா?”
“யாரு செய்யணும்? அதுதான் இத்தனைப் பேர் இருக்காளே அவாளை வச்சு செஞ்சுக்கோங்கோ. மிருது வா நாம போகலாம்”
என்று நவீன் சொன்னதும் மிருதுளாவும் அவன் பின்னாலேயேச் சென்றாள். இருவரும் ஆட்டோப் பிடித்துச் சென்றனர். விவரத்தை ஈஸ்வரன் பர்வதத்திடம் சொன்னதும் அவள் வாயிக்கு அவல் போட்டதுப் போலானது.
கொழுந்தன் கல்யாணத்தை வச்சுண்டு அம்மா வீட்டுக்கு தன் பையனை இழுத்துண்டு போயிட்டா மிருதுளா என்று அங்கிருந்த சொந்த பந்தங்களிடமெல்லாம் மிருதுளாவைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பரப்பினாள் பர்வதம்.
கல்யாணத்துக்கு ஈரோடு செல்ல பஸ் ஏற்பாடு செய்திருந்தனர். அன்று விடியற் காலையில் நவீனும் மிருதுளாவும் வந்தனர். ஒரு ஒன்பது மணி அளவில் மிருதுளாவின் பெற்றோர்களும் வேனுவும் வந்தனர். அனைவருமாக பஸ்ஸில் ஏறி ஈரோடு சென்றடைந்தனர். அங்கே லட்சுமி வீட்டார் இவர்களை வரவேற்று அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ரூம்களின் சாவிகளைக் கொடுத்தனர். பர்வதம், ஈஸ்வரன், கவின் ப்ரவின், பவின் ஆகியோருக்கு மண்டபத்திலேயே கொடுக்கப்பட்டது. ஆனால் நவீன், மிருதுளா மற்றும் அவள் பெற்றோருக்கென்று தனியாக மண்டபத்தின் அருகே இருந்த ஒரு வீட்டின் அறையைக் கொடுத்தனர். அந்த வீட்டில் நவீனின், சித்திகள் குடும்பங்களும், அத்தை, பெரியம்மா குடும்பங்களும் தங்கியிருந்தன. நவீனும் மிருதுளாவும் அந்த வீட்டிற்குள் நுழைந்தததும் லலிதா சித்தி
“ஏய் நவீன் என்னடா நீ இங்கே வர்ற!!! உனக்கு பர்வதம் அக்கா அத்திம்பேர் கூட ரூம் குடுக்கலையா?”
“ஏன் சித்தி நான் உங்க கூட எல்லாம் தங்கக் கூடாதா என்ன?”
“அதுக்கு இல்லடா… கல்யாண பையனோட அண்ணன் நீ உன்னையும் மூணாம் மனுஷா மாதிரி இங்க தங்க வச்சிருக்காளேன்னு கேட்டேன்”
“எல்லாம் அப்படி தான் சித்தி. சரி நாங்க எங்க ரூமுக்கு போறோம். ஈவினிங் மாப்பிள்ளை அழைப்பில் பார்ப்போம்”
என்று கூறி விட்டு அவர்கள் ரூமிற்குள் சென்றனர். அப்போது மிருதுளா நவீனிடம்
“உங்க லட்சுமி அத்தை ஃபேமிலி பண்ணறது சரியே இல்லை. உங்க சித்தி சொல்லுற மாதிரி தான் நம்மள நடத்தறா. இதை ஏன் உங்க அப்பா அம்மா கேட்கலை?”
“விடு விடு வரவே வேண்டாம்ன்னு சொன்னேன்!! நீ கேட்கலை இப்போ வந்துட்டு இப்படி எல்லாம் கேட்க வேண்டியிருக்கு. சரி சரி நாம ரெடி ஆகுவோம்.”
என அனைவரும் மாப்பிள்ளை அழைப்பிற்கு தயார் ஆனார்கள். நவீனும் மிருதுளாவும் தயாராகி மண்டபத்திற்கு சென்றனர். அங்கு எவருமே இருக்கவில்லை. ஈஸ்வரனும் பர்வதமும் மட்டும் வாசலில் நின்றிருந்தனர். நவீன் ஈஸ்வரனிடம் சென்று
“எங்கே யாரையுமே காணமே! நாலரை மணிக்கு தானே சொன்னா? கவின் எங்க?”
“நானே ஆத்திரத்துல இருக்கேன் டா”
“ஏன் என்ன ஆச்சு?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் மிருதுளா.
“ஆமாம் நாலரைக்குன்னு தான் சொன்னா. ஆனா நாலு மணிக்கெல்லாம் ஆரம்பிச்சுட்டா..அதுவுமில்லாம எங்க கிட்ட எல்லாம் சொல்லாம எங்களுக்கு வெயிட் பண்ணாம கவினையும் கூட்டிண்டு அவா எல்லாருமா கோவிலுக்கு போயாச்சுன்னு கேட்டரிங் ஆளு சொல்லித் தான் எனக்கும் அம்மாவுக்குமே தெரிஞ்சுது. உங்க எல்லாரையும் அங்க தங்க வச்சுட்டு எங்களை மட்டும் இங்க இருக்கச் சொல்லிட்டு, உங்க கிட்ட எல்லாம் தப்பான நேரத்தை சொல்லிட்டு இப்போ எங்களையும் விட்டுட்டு கவினை மட்டும் கூட்டிண்டு எல்லாரும் போயாச்சு.”
மிருதுளா மனதில் அவளின் நிச்சயதார்த்தமும் அதில் தன் மாமியார் மாமனார் செய்த சூழ்ச்சியும் நினைவுக்கு வந்தது. ஆனாலும் அவள் ஈஸ்வரனிடம்
“சரி பா அதுக்காக இப்படி இங்கேயே வா நிக்கப் போறேங்கள்? வாங்கோ… நாம விசாரிச்சுண்டு அந்த கோவிலுக்கே போவோம்”
“இந்த கவினுக்காவது தோனவேண்டாம் அம்மா அப்பா காணலைன்னு தேடமாட்டானோ”
“அப்பா இப்படியே இங்க நிண்ணுண்டு பொலம்பறதால ஒண்ணும் ஆகப் போறதில்லை. வாங்கோ நாமளும் போவோம்”
“அது எப்படி அப்பா அம்மா இல்லாம அவா நிச்சயதார்த்ததை நடத்திடுவாளா என்ன?”
“அப்பா நீ இப்படி நினைச்சுண்டே இங்கேயே இருந்தேனா உன் தங்கை ஆத்துக் காரா அதையும் செஞ்சிடுவா!!”
என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது லட்சுமியின் கடைசி மகனான சுந்தரேசன் வந்தான்.
“மாமா மாமி என்ன இங்கேயே இருக்கேங்கள். வாங்கோ கோவிலுக்கு உங்களை தான் சாஸ்திரிகள் தேடறா.”
“வாடா வா அதுதான் உங்க மாப்பிள்ளையை மட்டும் கூட்டிண்டு போயிட்டேங்களே அப்புறம் என்னத்துக்கு நாங்க? நீங்க அவனை மட்டும் வச்சுண்டு நிச்சயம் பண்ணிக்கோங்கோ”
“மாமா என்ன மாமா!!! ஏதோ ஒரு டென்ஷன்ல அப்படி ஆயிடுத்து. அது தான் உங்களை அழைச்சுண்டு போக நானே வந்திருக்கேனே ப்ளீஸ் பிரச்சினை பண்ணாம வாங்கோ!”
“ஆமாம் நீ ரொம்ப பெரிய மனுஷன். வந்துட்ட எங்களை கூப்பிட. யாருடா பிரச்சினைப் பண்ணறா? நீங்க எல்லாருமா தப்பான டைம் சொல்லிட்டு எங்களை எல்லாம் இங்கேயே விட்டுட்டு நீங்க கவினை மட்டும் கூட்டிண்டு போயிட்டு இப்போ வந்து நாங்க பிரச்சினை பண்ணாம வரணுமாமே!!! நல்லா இருக்குடா உங்க நியாயம்!!”
“மாமா இப்போ வரேங்கள் அவ்வளவு தான் சொல்லிப்புட்டேன். வாங்கோ வாங்கோ”
என்று சுந்தரேசன் சொன்னதும் ஈஸ்வரனும் பர்வதமும் கிளம்பிச் சென்றனர். அப்போது ஈஸ்வரன் நவீனிடம்
“டேய் நவீன் நீங்களும் எங்களோட வாங்கோ”
“இல்லை நீங்க போங்கோ நாங்க கொஞ்ச நேரம் கழித்து வர்றோம்”
என்று கூறி அங்கிருந்த அவர்கள் சொந்தக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர் நவீனும் மிருதுளாவும். பின் அனைவயுமாக நடந்து கோவிலுக்குச் சென்றனர். அங்கு நிச்சயதார்த்தம் நடந்தேறியது.
மறுநாள் காலை விரதம் நடந்தது அதன் பின் ஊஞ்சல் நிகழ்வு நிகழ்ந்தது அதில் பச்சைப் பொடிச் சுற்றுவதற்காக பர்வதம் சென்றாள் அப்போதா சாஸ்திரிகள் பர்வதத்திடம்
“மாமி உங்க மாட்டுப்பொண் எங்கே அவாளும் சுத்தணும். வரச்சொல்லுங்கோ”
என்றார். இந்த சடங்கில் தான் ஈடுபடுவது தன் மாமியாருக்குப் பிடிகாது என்று அறிந்த மிருதுளா ஓரமாக நின்றிருந்தாள். அப்போது பர்வதம் அவளைக் கூப்பிட்டாள். உடனே சென்றாள் மிருதுளா. அவளிடம் பர்வதம்
“இதுக்கு ஒன்பது கஜம் கட்டிக்கணும்ன்னு கூடவா தெரியாது?”
“சத்தியமா எனக்குத் தெரியாது மா. நீங்க சொல்லியிருந்தா கட்டிண்டிருப்பேனே. இப்போ என்ன நான் போயி ஒரு நிமிஷத்துல ஒன்பது கஜம் மாத்திண்டு வந்திடவா?”
“ஒண்ணும் வேணாம். உனக்காக எல்லாரும் வெயிட் பண்ணணுமாக்கும்!!”
என்று யார் மீதோ உள்ள கோபத்தை மிருதுளா மீதுக் காட்டி முனுமுனுத்துக் கொண்டே செய்தாள் பர்வதம். திருமணம் முடிந்தது. இரண்டு பந்தி முடிந்ததும் மூன்றாவது பந்தியில் ஈஸ்வரன், பர்வதம், நவீன், மிருதுளா, பவின், ப்ரவின், பர்வதத்தின் அக்கா ரமணி தங்கைகள் என ஆண்கள் எல்லோரும் ஒரு பக்கமாகவும் பெண்கள் ஒரு பக்கமாகவும் அமர்ந்தனர். சாப்பாடு பரிமாறப் பட்டது. சாப்பாடு நன்றாகவே இருக்கவில்லை அனைவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். பாயசம் அடிப்பிடித்திருந்தது. அதை எல்லோரும் சொல்லிக் கொண்டனர். பர்வதம் குடித்துப் பார்த்து விட்டு அதைப் பரிமாறியவரை அழைத்தாள்.
“என்னது இது பாயசம் நல்லா அடிப்பிடிச்சிருக்கு!!! அதையே எங்களுக்கு கொடுத்திருக்கேங்கள்!!”
“மாமி எல்லாரும் சாப்பிட்டுட்டு சூப்பரா இருக்குன்னு சொல்லறா!!! நீங்க மட்டும் தான் இப்படி சொல்லறேங்கள். பிரச்சினை கிளப்பணும்ன்னே சொல்லறேங்கள் போல தோணறது!”
என்று பொறுப்பில்லாமல் திமிராகச் சொல்லிவிட்டுச் சென்றார் கேட்ஞரிங் ஆள். அதை பார்த்த அனைவரும் வாயடைத்துப் போனார்கள். ஈஸ்வரன் மட்டும் மரியாதை இல்லை மதிப்பில்லை என்று சத்தம் போட்டார். அதையும் எவரும் கண்டுக் கொள்ளவில்லை என்றதும் அடங்கிப் போனார். நடந்தவைகளை கவனித்துக் கொண்டிருந்த மிருதுளா அம்புஜத்திடம் மெதுவாக….
“கடவுள் இருக்கா மா. இருக்கா”
“ஏய் மிருது சும்மா இரு. இது தான் நேரமா உனக்கு சொல்லிக் காட்ட?”
“உன் கிட்ட தானே மா சொல்லறேன். அட போ மா. நான் பட்ட பாடு அப்படி”
என்று எப்படியோ கஷ்டப்பட்டு அந்த சாப்பாட்டை அனைவரும் சாப்பிட்டு எழுந்து. அதே பஸ்ஸில் ஊருக்குக் கிளம்பினர். கட்டு சாதக் கூடை என்று ஈஸ்வரன் குடும்பத்தினரான எட்டு பேருக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் வீட்டில் பர்வதத்தின் தங்கைக் குடும்பத்தினர் அக்கா குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர் என அனைவரும் இருந்தனர். வேறு வழியின்றி இட்டிலியை பாதி பாதியாக பிச்சுப் போட்டனர். எப்படியோ வந்ததை அனைவருக்கும் பரிமாறினர். ஆனால் எவருக்கும் வயிறு நிரம்பவில்லை.
“இது தான் உங்க லட்சுமி அத்தை பெண் கஜேஸ்வரி ராசியின் பலன் போல!! வீட்டிற்குள் வந்ததுமே சாப்பாடு பத்தும் பத்தாம ஆனது!!!”
என்று மிருதுளா நவீனிடம் கூறி புன்னகைத்தாள்
வேறு வழியில்லை என அனைவரும் சகித்துக் கொண்டனர். அன்று மாலை திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அவரவர் வீடுகளுக்கு பஸ்ஸிலும், ட்ரெயினிலும் புறப்பட்டுச் சென்றனர். மறுநாள் காலை விடிந்தது அனைவரும் எழுந்து குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு வீட்டின் ஆண்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து நடந்துக் கொண்டிருந்த கிரிக்கெட் மேட்ச் பேசிக் கொண்டிருந்தனர்.
உள் ரூமில் மிருதுளா சக்திக்கு டிபன் ஊட்டிக் கொண்டிருந்தாள். கஜேஸ்வரி அங்கு சென்று
“என்ன மன்னி சக்திக்கு சாப்பாடு ஊட்டறேளா?”
“ஆமாம் கஜேஸ்வரி. நீ சாப்பிட்டாச்சா?”
“ஆங் ஆச்சு மன்னி”
“உட்காரு ஏன் நிண்ணுண்டு இருக்க?”
என்று மிருதுளா சொன்னதும் அமர்ந்தாள் கஜேஸ்வரி. அப்போது மிருதுளா அவளிடம்
“கவின் குவைத்துக்கு கிளம்பும் போது உன்னையும் கூட்டிண்டு போறானா? இல்லை போயிட்டு வந்து கூட்டிண்டு போகப் போறானா?”
“இல்ல மன்னி அவர் என்னையும் கூட்டிண்டு தான் போக போறார். அதுக்கு தானே எட்டு மாசம் முன்னாடியே மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணினோம்.”
“ஓ!! ஓகே ஓகே. அப்புறம் சொல்லு. உனக்கு இது புது இடம் இல்லை. உங்க மாமா வீடு தானே!! அதுனால எப்படி இருக்குன்னு எல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை”
“ஆமாம் ஆமாம் மன்னி”
“பாரு… நீ வர்றதுக்குள்ளேயே எங்க கவின் உனக்காக வீடெல்லாம் வாங்கிட்டான்”
“ஆமாம் மன்னி. ஆனா என்ன வாங்கி என்ன?”
“ஏன் அலுத்துக்கற கஜேஸ்வரி?”
“பின்ன என்ன மன்னி. நாங்க பாட்டுக்கு குவைத் போயிடுவோம். அப்புறம் என் வீட்டில் அவா அவா வந்து வருஷத்துல ஒரு மாசம் டேரா போடுவா. நானா தங்கப் போறேன்”
“என்னது? நீ யாரைச் சொல்லுற? ப்ரவின், பவின், அப்பா, அம்மா இங்கேயே தான் இருக்கப்போறவா!!! வருஷத்துல ஒரு மாசம் லீவுப் போட்டு வர்றது நானும் நவீனும் தான் அப்போ நீ எங்களையா டேராப் போடுவான்னு சொல்லற?”
“அச்சச்சோ மன்னி இல்லை நான் பொதுவா சொன்னேன்”
“இல்லை கஜேஸ்வரி நீ பொதுவா எல்லாம் சொல்லலை ..குறிப்பிட்டுத் தான் சொன்னங்கறது எனக்குப் புரிஞ்சுடுத்துமா நல்லாவே புரிஞ்சுடுத்து”
“அய்யோ மன்னி நான் சொல்லாததை எல்லாம் இப்படி மாத்திப் பேசி பிரச்சினை உண்டாக்காதீங்கோ ப்ளீஸ்”
“நீ சொல்லறதைக் கேட்டா பிரச்சினை உண்டாக்குங்கோன்னு சொல்லறா மாதிரி இருக்கு. ஆனா நான் அப்படிப் பட்டவள் இல்லை. துஷ்டனைக் கண்டால் தூர விலகிடுவேன். சரியா. வாடி சக்திக் குட்டி நாம அம்பு பாட்டி ஆத்துக்கு போவோம்”
என்று சக்தியைத் தூக்கிக் கொண்டு நவீனிடம் நடந்தவைகளைக் கூறினாள் மிருதுளா. அதன் பின் இருவருமாக கிளம்பி ஈஸ்வரனிடம் சொல்லிவிட்டு ராமானுஜம் வீட்டிற்குச் சென்றனர்.
முதலில் திருமணமாகி மூத்த மருமகளாக வீட்டிற்கு வந்து அனைத்தையும் பொறுமையாக பொறுத்துக் கொண்டு (அதையும் பொறுத்துப் போக வேண்டிய அவசியமில்லை என்றாலும்) எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாத ஒருத்தி….. அடுத்து வீட்டுக்கு வந்த மருமகள் / ஓர்பிடி சொன்ன வார்த்தையை பொறுத்துக் கொள்ளாது வீட்டை விட்டு வெளியேறினாள்.
மிருதுளா அதுவரைப் பொறுத்திருந்த தன் காரணம் அவர்கள் நவீனின் பெற்றவர்கள் என்பதால் ஆனால் இன்று அவள் வெளியேறியதின் காரணம் சுயமரியாதை.
தொடரும்……