அத்தியாயம் 72: ராசியின் இரகசியம்!!

டெம்ப்போவில் பொருட்களுடன் வந்திறங்கினர் ராமானுஜமும், வேனுவும். அவர்கள் பின்னாலேயே ஆட்டோவில் வந்தனர் நவீனும் மிருதுளாவும் குழந்தை சக்தியுடன். மூவருமாக பொட்களை எல்லாம் வீட்டிற்குள் கொண்டுச் சென்று வைத்தனர். மிருதுளா குழந்தையுடன் வீட்டினுள் சென்று அமர்ந்தாள். பொருட்களை வீட்டினுள் கொண்டுச் செல்லும் போது மிதியடி சறுக்கி விட்டுவிடக்கூடாது என்பதற்காக வெளியே சென்று வாசலில் இருந்த மிதியடியை எடுத்து திண்ணைத் திண்டின் மேல் போட்டாள் அம்புஜம். அக்கம் பக்கத்தினர் வண்டியிலிருந்து பொருட்கள் இறங்குவதைப் பார்த்ததும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர். அதில் அம்புஜத்தின் பக்கத்து வீட்டு சென்பகம் அவளிடம்

“என்ன மாமி நம்ம மிருது வந்திருக்கு போல”

“ஆமாம் வந்திருக்கா.”

“இல்ல என்ன ஊரையே காலி பண்ணிட்டு வந்துட்டாளாக்கும்”

“ஏன் அப்படி கேட்குற சென்பகம்?”

“சாமான் செட்டெல்லாம் வந்து இறங்குதேன்னு கேட்டேன்”

“அதுவா அவங்க வீட்டுல இடமில்லையாம் அதுனால இங்க கொண்டு வந்து வைக்க வந்திருக்காங்க”

“என்ன மாமி காமிடி பண்ணுறேங்களே!!! இங்க நம்ம வீடு என்ன நாலு ரூம் வீடா? இதுவும் சின்ன வீடுதானே இதுல எங்கேந்து வைப்பீங்க?”

“அதெல்லாம் உனக்கெதுக்கு? அது எங்க கவலை நாங்க பார்த்துக்கறோம். நீ போய் உன் புள்ளகளைப் பாரு போ”

“சொல்ல விருப்பமில்லைன்னா விடுங்க. சரி நான் வரேன்”

பேசிவிட்டு சென்பம் அவள் வீட்டினுள் சென்றாள். ராமானுஜம் வேன் காரருக்கு பணம் செட்டில் பண்ணிவிட்டு வந்தார். அம்புஜம் அனைவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள். அப்போது ராமானுஜம்

“இவ்வளவு பாத்திரங்களிலும் நசுக்கெடுக்கணும்னா ….இதை எல்லாம் அப்போ நாம இதை வாங்கின காசை குடுக்க வேண்டியிருக்கும்”

“அப்பா நசுக்கெல்லாம் எடுக்க வேண்டாம். அப்படியே செலவழித்து எடுத்தாலும் அது புதுசாகாது. முக்கியமான பாத்திரங்களை மட்டும் சரி செய்துட்டு மத்தது எல்லாத்தையும் பாத்திரக்கடையில போட்டுட்டு அதுல வர பணத்துக்கு எதை வாங்க முடியுமோ அதை மட்டும் வாங்கிக்கறேன் என்ன செய்ய!!!”

“அப்படி செஞ்சா இப்போ இருக்கறதுல பாதி தான் வாங்க முடியும் மிருது. இதெல்லாம் நான் பல வருஷமா வாங்கி வாங்கி சேமிச்சது தெரியுமா. இப்போ விக்குற விலைவாசிக்கு பாதி சாமான் கூட கிடைக்குமான்னு தெரியலை”

“என்னமா பண்ணறது. இப்படியே வச்சுக்க முடியாது, நசுக்கெடுத்தா காசும் போகும் பாத்திரமும் நீங்க கொடுத்ததுப் போல ஆகாது அப்போ நான் சொன்ன வழிதான் சரியானது”

“ஆமாம். மிருது சொல்லறது தான் சரி. நீங்க என்ன சொல்லறேங்கள் மாப்ள?”

“நீங்க எது செய்தாலும் எனக்கு ஓகே தான். ஐ ஆம் ஸோ சாரி நடந்த விஷயங்களுக்கெல்லாம்.”

என கூறி மொட்டை மாடிக்குச் சென்றான் நவீன். பெற்றவர்கள் சரியாக இல்லாததால் பல பிள்ளைகள் இது போன்ற தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பர்வதீஸ்வரன் இருவரும் மனசாட்சி இன்றி செய்த செயலுக்கும், பேசிய பேச்சிற்கும் வெட்கித் தலைக்குனிதவனாக நின்றான் நவீன்‌. பெற்றவர்களுக்கு மனசாட்சி இல்லாவிட்டாலும் பாவம் பாட்டியிடம் வளர்ந்த நவீனுக்கு மனசாட்சி இருந்தது. அது அவனை வேதனையில் ஆழ்த்தியது.

மறுநாள் நவீனும், மிருதுளாவும் அங்கிருந்தே குஜராத் கிளம்பிச் சென்றனர். கவின் கஜேஸ்வரி திருமணத்திற்கு எட்டு மாதங்கள் இருந்தன. இரண்டு மாதங்களில் நவீன் தன் வீட்டுக்கு ஃபோன் கனெக்ஷன் வாங்கினான். புது ஃபோன் வந்ததும் மிருதுளா தன் அப்பா அம்மாவிடம் பேசி நம்பரைக் கொடுத்தாள். அடுத்து நவீன் வீட்டுக்குப் ஃபோன் செய்து தன் மாமனார் மாமியாரிடமும் நம்பரைக் கொடுத்தார்கள் நவீனும் மிருதுளாவும். ஆறு மாதங்கள் கடந்தன. மிருதுளாவுக்கு அம்மைப் போட்டது. நவீனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அருகே இருந்த தனது நண்பன் வீட்டுக்கு ஃபோன் போட்டுக் கேட்டான். நவீனின் நல்ல நேரம் நண்பனின் அம்மா அப்பா வீட்டிற்கு வந்திருந்தனர், உடனே அவர்களிடம் ஃபோனைக் கொடுத்து நவீனுக்கு உதவச் சொன்னான் நண்பன். பெரியவர்களாகிய அவர்களும் நவீனிடம் என்னென்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்ற விவரங்களைச் சொல்ல நவீனும் அது படியே செய்தான். ஆபிஸுக்கு ஒரு வாரம் லீவு போட்டான். சக்திக்கு பால் குடுக்க முடியாமல் படுத்துக் கிடந்தாள் மிருதுளா. நவீன் சக்திக்கு பாட்டிலில் பால் குடுக்க முயற்சித்தான் ஆனால் சக்தி அழுது ரகளை செய்தாள். அதைப் பார்த்த மிருதுளா கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. நவீன் சக்தியை சமாதானப் படுத்தி பாட்டில் பாலை குடிக்க வைத்து அவளைத் தூங்கச் செய்தான்.

நான்கு நாட்கள் நவீனுக்கு சரியான வேலை இருந்தது. காலையில் எழுந்து குளித்து வீட்டை சுத்தம் செய்து மஞ்சள் தண்ணீர் தெளித்து, மிருதுளா படுத்திருந்த வேப்பிலையை தினமும் மாற்றி, அவளுக்கு நீர் ஆகாரம் கொடுத்து, சக்தியையும் சமாளித்து என சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். ஐந்தாவது நாள் அம்மை முழுவதுமாக மிருதுளா உடம்பிலிருந்து இறங்கியிருந்தது. அன்று தலைக்கு தண்ணீர் ஊற்றலாம் என்று நண்பனின் அம்மா சொல்ல அதுபடியே மிருதுளாவை அமர வைத்து தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி பருத்தி ஆடைக் கொடுத்து அணிந்துக் கொள்ளச் செய்தான். மிருதுளா அசதியில் கண் அசந்துப் போனாள். நவீன் சக்திக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தபோது ஃபோன் வந்தது. மிருதுளா எழுந்து விடுவாளோ என்று உடனே ரிசீவரை எடுத்தான் நவீன்

“ஹலோ நான் நவீன் பேசறேன்”

“ஹலோ நான் அம்புஜம் பேசறேன். எப்படி இருக்கேங்கள்? மருதுளாவும் சக்தியும் எப்படி இருக்கா?”

எவருக்குமே மிருதுளாவின் நிலையை நவீன் கூறவில்லை. இப்போது அம்புஜம் கேட்டதும்

“ஆங் நாங்க நல்லா இருக்கோம். அவ தூங்கிண்டிருக்கா”

“என்ன மாப்ள உங்க குரலே சரியில்லையே!! இந்த நேரத்துல எல்லாம் மிருது தூங்க மாட்டாளே!!! என்ன ஆச்சு மாப்ள? எதுவா இருந்தாலும் சொல்லுங்கோ”

“அது அது வந்து!!! மிருதுக்கு அம்மை போட்டிருந்தது. இன்னைக்கு தலைக்கு தண்ணீ ஊத்தியாச்சு. ஆனா அவ ரொம்ப டையர்டா இருக்கா அதுதான் தூங்கறா”

“கடவுளே!! அம்மா தாயே!!!! நீங்க எப்படி அவளையும் குழந்தையையும் பார்த்துண்டேங்கள்? இன்னைக்கு எத்தனாவது நாள்?”

“அஞ்சாவது நாள். நீங்க பதட்டப் படாதீங்கோ இப்போ ஷீ இஸ் ப்ர்ஃபெக்ட்லீ ஆல்ரைட். ஜஸ்ட் டையர்டுனஸ் தான் இருக்கு”

“சரி மாப்ள நாளைக்கு உங்க தம்பி கவின் வாங்கின வீட்டுக்கு கிரகபிரவேசம். அதுக்கு போயிட்டு நைட்டு ட்ரெயின் பிடித்து நான் அங்க வரேன். நீங்க பாவம் ஒத்த ஆளா எப்படி சமாளிப்பேங்கள்?”

“என்னது கவின் வீடு வாங்கிருக்கானா?”

“ஆமாம். அந்த வீட்டுக்குத் தான் உங்த அப்பா அம்மா நாளையிலிருந்தே குடி போகப் போறாளாம். ஏன் உங்க ரெண்டு பேர்கிட்டேயும் அவா சொல்லலையா”

“சரி சரி அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நீங்க வரணும்ன்னு இல்ல பார்த்துக் கோங்கோ”

“இல்ல இல்ல மிருது பயங்கறமா வீக்காகிடுவா ஸோ நான் வந்து அவளையும் பார்த்துண்டுட்டு அப்படியே என் பேத்திக் கூடவும் ஒரு மாசம் இருந்துட்டு வரேன்.”

“அப்பறம் உங்க இஷ்டம். நான் வச்சுடவா”

“சரி மாப்ள”

ஃபோனை வைத்ததும் அம்புஜம் நேராக பூஜை அறையிலிருந்த அம்மனிடம் சென்று கண்ணீர் மல்க தன் பெண்ணிற்காக வேண்டிக்கொண்டாள். பின் விவரத்தை ராமானுஜத்திடமும் வேனுவிடமும் கூறி மறுநாள் இரவு ட்ரெயினில் டிக்கெட் புக் செய்து வேண்டிய துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டாள். விடியற்காலையில் எழுந்து கவின் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு ராமானுஜமும் அம்புஜமும் சென்றனர். அங்கு அனைவருடனும் அமர்ந்திருந்தாலும் அம்புஜத்தின் மனம் முழுவதும் தன் பெண்ணிடமிருந்தது. அவளை எண்ணிக்கொண்டே அமர்ந்திருந்தவளிடம் பர்வதம்

“அம்புஜம் மாமி”

என அழைத்தும் காதில் விழாததால் சிலைப் போல அமர்ந்திருந்தவள் தோளைத் தட்டி கூப்பிட்டாள் பர்வதம். சட்டென சுயநினைவுக்கு வந்த அம்புஜம்

“ஆங் ஆங் மாமி சொல்லுங்கோ”

“என்ன மாமி பகல் கனவா? எப்போ உங்க பொண்ணு இதே மாதிரி வீடு வாங்கப் போறாங்கற யோசனையில இருக்கேளோ?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமி. அவாஅவாளுக்கு நேரமும் காலமும் கூடி வந்தா வாங்கப் போறா! அதை பத்தி நான் ஏன் யோசிக்கப் போறேன்”

“பின்ன என்ன அப்படி ஆழ்ந்த சிந்தனையில இருந்தேங்களே!!”

“அது ஒண்ணுமில்ல மாமி. அதை விடுங்கோ”

என்று நல்ல விசேஷம் நடக்குமிடத்தில் தன் பெண்ணுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல விரும்பாத அம்புஜம் அமைதியாக இருந்தாள். பர்வதம் அம்புஜம் உரையாடலைக் கேட்டுக்கொண்டே வந்த லட்சுமி பர்வதத்திடம்

“பார்த்தயா பர்வதம். என் பொண்ணு ராசி அப்படி. அவளை நிச்சயம் செய்ததுமே வீடு வாசல் எல்லாம் வந்துடுத்துப் பார்த்தயா!! என் பொண்ணு ஜாதகத்துலயே இருக்கே அவ வாக்கப்பட்டுப் போகும் போது புத்தம் புது வீட்டுக்குள்ள தான் நுழைவான்னு இருக்கே!!! ஐம்பது பௌன் நகை கொண்டு வராட்டாலும் பாக்கியத்தை அளித்தரப் போறா பாரு!!!”

என்று அம்புஜத்தின் நிலைமை அறியாமல் பர்வதமும், லட்சுமியும் வேண்டுமென்றே அவளை சீண்டினார்கள். ஆனால் அம்புஜம் மனதில் அம்மனை மட்டுமே நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். விசேஷம் முடிந்தது. அனைவரும் சாப்பிட்டுக் கிளம்பினர். அப்போது அம்புஜம் பர்வதத்திடம் தான் குஜராத் செல்வதாக கூறினாள். அதைக் கேட்ட பரவதம்

“அப்படியா என்ன திடீர்னு”

“நம்ம மிருது உடம்புல அம்மா இறங்கிருக்கா. நேத்து தலைக்கு தண்ணீ ஊத்திருக்கா. அது தான் நான் இன்னைக்கு நைட்டு கிளம்பறேன்.”

“அம்மா போகக்கூடாதுன்னு சொல்லுவாளே”

“அது தான் தலைக்கு தண்ணீ ஊத்திட்டாளே அதுனால போகலாம்னு எங்க பக்கத்தாத்து பாட்டி சொன்னா அதுக்கப்புறம் தான் டிக்கெட் புக் பண்ணினோம்”

“எப்போ திரும்பி வருவேங்கள்?”

“ஒரு மாசம் தான் இருப்பேன். மிருதுக்கு தெம்பு வரவரைக்கும் தான் அப்புறம் வந்திடுவேன். சரி மாமி நாங்க கிளம்பறோம்”

என்று கூறி தாம்பூலம் வாங்கிக் கொண்டு கிளம்பினர் ராமானுஜமும் அம்புஜமும். வரும் வழியில் அம்புஜம்

“அந்த மாமிகிட்ட சொல்லறேனே மிருதுக்கு இப்படி இருக்குன்னு !!! அந்த மாமி அவ எப்படி இருக்கா என்ன ஏதுன்னு ஒண்ணுமே கேட்காம !! நான் எப்போ திரும்பி வருவேன்னு கேட்கறா!!! என்ன ஜென்மமோ”

“விடு விடு அவாளைப் பத்தி தான் நமக்கு நல்லா தெரிஞ்சது தானே. நீ போய் மிருதுவ நல்லா பார்த்துக்கோ”

அன்றிரவு அம்புஜத்தை குஜராத்துக்கு ட்ரெயின் ஏற்றி விட்டனர் ராமானுஜமும் வேனுவும்.

குஜராத் சென்று தன் பெண்ணையும் பேத்தியையும் மாப்பிள்ளையையும் நன்றாக கவனித்துக் கொண்டாள் அம்புஜம். மிருதுளா முழுவதுமாக குணமடைந்ததும் கவின் வீடு வாங்கியதைப் பற்றியும், கிரகப்பிரவேசம் பற்றியும், அங்கு நடந்த பேச்சு வார்த்தைகளையும், அவர்கள் அனைவரும் அந்த வீட்டுக்கே குடியேறியது பற்றியும் கூறினாள் அம்புஜம். அதை கேட்ட மிருதுளா நவீனிடம்

“என்னப்பா இவ்வளவு நடந்திருக்கு!!! உங்க கிட்டயாவது யாராவது சொன்னாலா? கவினாவது ஃபோன் போட்டு சொன்னானா?”

“இல்ல மிருது. என்கிட்ட யாருமே சொல்லலை. உங்க அப்பா அம்மா சொல்லித் தான் எனக்கே தெரிய வந்தது”

“சூப்பர் மா சூப்பர்! உங்க பொண்ணையும் மாப்ளையும் அழைக்காத விசேஷத்துக்கு நீங்க ஏன் போனேங்கள்?”

“ஏய் மிருது அவா செய்த தப்புக்கு உன் பேரன்ட்ஸ் கிட்ட ஏன் கோபப்படற? இவா என்ன செய்வா”

“எங்களுக்கு தெரியாது மிருது. முன்னாடி நாள் மாப்ள கிட்ட பேசும் போது கூட நாங்க உன்னைப் பத்திதான் பேசினோமே தவிற இதை பெரிசா பேசலை மா”

“நவீன் உங்களுக்கு கோபம் வரலை?”

“எதுக்கு கோபப் படணும்? அவா என்னைக் கூப்பிடாததுக்கும் என்கிட்ட சொல்லாததுக்கும் அவா தான் வெட்கப் படணும். நான் இனி அங்கப் போக மாட்டேன். என்கிட்ட அவா வீடு மாத்தின விஷயத்தைச் சொல்லலை அதுனால எனக்கு எங்க இருக்கானு தெரியாது ஸோ போக வேண்டிய அவசியமில்லை. ஆஸ் சிம்பிள் ஆஸ் தட். இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகி கோபப்பட்டு எதுக்கு நம்ம உடம்பைக் கெடுத்துக்கணும்”

என்று சொல்லிவிட்டு சக்தியைத் தூக்கிக் கொண்டு வெளியே வாக்கிங் சென்றான் நவீன். அவன் சென்றதும் அம்புஜம்

“இங்க பாரு மிருது ஆம்பளகள் அப்படித் தான் சொல்லுவா அதுக்காக போகாம வராம எல்லாம் இருக்காதே. நீ தான் அவருக்கு எடுத்து சொல்லணும். நீர் அடித்து நீர் விலகாது.”

“என்னமா பேசற? நவீ சொல்லறது தான் கரெக்ட். அதென்ன உங்கள்ட்ட சொல்லுவாளாம் ஆனா எங்க கிட்ட சொல்லமாட்டாளாமா!!!”

“மிருது அங்க என்ன சிட்டுவேஷனோ என்னவோ உனக்குத் தெரியுமா?”

“என்னவா இருந்தா என்னமா? எங்காத்துக்கு ஃபோன் வந்ததும் நாங்க ஃபோன் போட்டு பேசி நம்பர் கொடுத்தோம் தெரியுமா!!! ஒரு ஃபோன் போட்டு விஷயத்தைச் சொன்னா கொறஞ்சா போயிடுவா? என்கிட்ட வேண்டாமா நவீ கிட்டயாவது சொல்லிருக்கலாமில்லையா. இந்த நன்றிக் கெட்ட கூட்டத்துக்காக இந்த மனுஷன் தன்னோட பத்து வருஷத்தை தொலைச்சிருக்கார்”

“விடு விடு அவாளுக்கு தெரிந்தது அவ்வளவு தான். மாப்ள செய்த நல்லதுக்கு அவரும் நீயும் குழந்தையும் நல்லா இருப்பேங்கள்.”

பேசிக் கொண்டிருக்கும் போதே ஃபோன் மணி அடித்தது. மிருதுளா சென்று எடுத்தாள். மறுபக்கத்தில் ஈஸ்வரனின் ஒண்ணு விட்ட தங்கை மகள் பேசினாள். மிருதுளாவும் சகஜமாக பேசினாள். கவின் திருமணம் பற்றியப் பேச்சு வார்த்தை வந்தது அப்போது மறுபக்கத்திலிருந்து

“ஏய் மிருது உனக்கு ஒண்ணு தெரியுமா? நம்ம கஜேஸ்வரி கல்யாணமானதும் நவீன் வாங்கின அந்த பழைய வீட்டுக்குள் வரமேட்டேன்னும் புது வீட்டிற்கு தான் வருவேன்னு சொல்லி கவினை புது வீடு வாங்க வச்சு அதுல உங்க ஃபேமிலியவே ஷிஃப்ட் பண்ணிட்டாளாமே!!! நம்ம சொந்தங்களுக்குள்ள இப்போ இது தான் ஹாட் டாப்பிக் தெரியுமா!!”

“அப்படியா!!! எனக்குத் தெரியாது!”

“சரி மிருதுளா உன்கிட்ட நிறைய நேரம் பேசிட்டேன். கவின் கஜேஸ்வரி கல்யாணத்துல பார்ப்போம். நவீன் கிட்டயும் நாங்க கேட்டதா சொல்லிடு. பை”

என்று ஃபோனை வைத்ததும் மிருதுளா தன் அம்மாவைப் பார்த்து

“லட்சுமி அத்தை கவின் வீட்டு கிரகப்பிரவேசத்தப்போ என்ன சொன்னான்னு சொன்னம்மா?”

நவீன் குழந்தையுடன் வீட்டிற்குள் நுழைந்தான். அம்புஜம் மிருதுளாவிடம்

“அது எதுக்கு இப்போ?”

“நீ சொல்லேன் அப்புறம் நான் எதுக்குன்னு சொல்லறேன்”

“அவா பொண்ணோட ராசியாம், அவா பொண்ணு வந்த அதிர்ஷ்டமாம் அது தான் கவின் வீடு வாங்கியிருக்கானாம். அவா பொண்ணு கல்யாணமாகி வரும்போதே புது வீட்டுக்குள்ள தான் அடி எடுத்து வைப்பான்னு அவ ஜாதகத்திலேயே இருக்காம்”

“மண்ணாங்கட்டி!!!”

“ஏய் மிருது என்ன ஆச்சு?”

“நவீ இப்போ தான் நம்ம நம்மி பேசினா”

“ஓ அப்படியா!! அவா எல்லாரும் எப்படி இருக்காளாம்?”

“அவா எல்லாரும் நல்லா தான் இருக்கா. அவ ஒரு விஷயம் சொன்னாளே அதுல உங்க லட்சுமி அத்தை ஃபேமிலி எவ்வளோ பெரிய டிராமா ட்ரூப்ன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது நவீ”

“அது எனக்கு தெரிஞ்சது தானே!!! நீ அப்படி நினைக்குற மாதிரி என்ன சொன்னா நம்மி?”

என்று நவீன் கேட்டதும் மிருதுளா நிம்மி சொன்னதை கூறினாள். அதைக் கேட்டதும் அம்புஜம்

“அடக் கடவுளே!!!! அவாளே வீடு வாங்க வச்சுட்டு ….. கிரகப்பிரவேசத்தப்போ அந்த லட்சுமி மாமி என்னமோ அவ பொண்ணாலதான் வீடு வந்தது வாசல் வந்ததுன்னு அப்படி பேசினா!!!!”

“அதுனால தான் நான் அவாளல அப்படிச் சொன்னேன் புரியறதா?”

“மிருது நீ சொன்னதைக் கேட்டா செம மார்கெட்டிங் கிமிக்கா இருக்கே இது”

“நான் சொல்லலை நவீ உங்காத்து நிம்மி தான் சொன்னா”

” இன்னும் என்னென்ன ஸ்கில்ஸ் எல்லாம் வெளியே வருதுன்னு வெயிட் பண்ணிப் பார்ப்போம்”

“பார்த்துக்கோமா பார்த்துக்கோ அவா அவா பொண்ணுகளை எப்படி எல்லாம் ப்ரமோட் பண்ணிக்கறான்னு”

“விடு மிருது. எங்க பொண்ணை எல்லாம் எந்த விதத்திலும் நாங்க ப்ரமோட் செய்யணும்னு அவசியமில்லை. அவளுக்கு அந்த அம்பாள் துணையிருக்கா. எல்லாம் அவள் பார்த்துப்பா.”

“ம்..ம்..கதியற்றவாளுக்கு அம்பாளே துணை வேறு யாரிருக்கா?”

“அப்படியே நினைச்சுக்கோ. நீங்க ரெண்டு பேரும் செய்ய வேண்டியதை செஞ்சுண்டு உங்க வாழ்க்கையை பார்த்துண்டு இருங்கோ. யாரோ என்னமோ பண்ணிக்கறா அதை எல்லாம் கேட்டுக்கோ போதும். அதுவும் தானா இது மாதிரி தெரிய வந்தா !! நீயா எல்லாம் எதுவும் கேட்டுக்காத சரியா மிருது”

“ம் …ம் ….சரிமா!! சரி வாங்கோ டின்னர் சாப்பிடலாம்.”

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா!!! தம்பி வீடு வாங்கியுள்ளான் அவனும் சொல்லவில்லை!!! நவீன் வாங்கிக் கொடுத்த வீட்டை காலி செய்து புதிய வீட்டிற்கு செல்லப் போகிறார்கள் அதையும் சொல்லவில்லை!! இது என்ன தெரியாமல் இருந்திடுமா என்ன? நவீன் மாமனார், மாமியார் சொல்ல மாட்டார்களா? அப்போது நவீன் தெரிந்துக் கொள்ள மாட்டானா? இல்லை வேண்டுமென்றே அவன் மாமனாரிடம் சொன்னால் அவனுக்கு போகிவிடுமே என்று சொல்லவில்லையா? எதுவாக இருந்தால் என்ன!!அந்த குடும்பம் இந்த நிலைமைக்கு வருவதற்கு பாடுபட்ட நவீனை மீண்டும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி அவர்களின் பாவக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டனர் மூத்த தம்பதியர்.

தொடரும்…..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s