அத்தியாயம் 71: கல்யாணமானது!! சீர் தாய்வீட்டிற்கே சென்றது!!

நவீனும் மிருதுளாவும் ஈஸ்வரனை காண வந்த இடத்தில் தவளை நசுக்கிய பாத்திரங்களை பார்த்துவிட்டு குஜராத்துக்கு சென்றனர். திடிர் பயணத்தால் சற்று பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது நவீனுக்கு. அதை பொறுப்பாகவும் சிக்கனமாகவும் இருவரும் கையாண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வரை ஒப்பேற்றினர். அப்போது மிருதுளா நவீனிடம்…

“இனி குழந்தை வளர வளர செலவு கூடிக்கிட்டே தான் போகும் நவீ. நாம என்ன பண்ணப் போறோம்?”

“கவலைப் படாதே மிருது. ஏதாவது வழிப் பிறக்கும்”

“எப்படிப்பா இங்க இருக்கிற வடநாட்டுக்காரா எல்லாரும் மூணு குழந்தைகள் நாலு குழந்தைகள்னு பெத்துண்டும் நல்லா சௌகர்யமா வாழ்ந்துண்டு இருக்கா!!! அவா ஆத்துக் காரர்களுக்கும் இதே சம்பளம் தானே!!! நம்ம ஊர் ஆட்களும் சில பேர் அப்படி தான் இருக்கா அது எப்படி!!! எனக்குள்ள இந்த சந்தேகம் இருந்துண்டே இருக்கு”

“இங்க பாரு மிருது…அவாளுக்கு ஒண்ணு அவா பூர்வீக சொத்து ஏதாவது இருக்கும், இல்லை கிராமத்துல விவசாயம் பண்ணிண்டிருப்பா, நம்ம கார்த்திக் வீட்டுக்கெல்லாம் அப்படி தான் ஊர்லேந்து வருஷத்துக்கு வேண்டிய அரிசி பருப்பு மிளகாய் எல்லாம் வந்திடும். அப்படி எதுவுமில்லாட்டாலும் அவா பதினாறு வயசுலேந்து சம்பாதிச்சது எல்லாம் அவாளே சேமிச்சு வச்சிருப்பா…அதுனால இப்போ இப்படி இருக்கா. ஆனா என் கதை தான் உனக்குத் தெரியுமே!!! எனக்கு ஊர்ல எதுவுமில்லை. நான் சம்பாதிச்சது எல்லாம் குடும்பத்துக்கும் என் படிப்புக்கும் நம்ம கல்யாணத்துக்கும் போயாச்சு. உன்னை கல்யாணம் பண்ணிண்டு வந்தப்போ நான் இருந்த நிலைமை உனக்கு நல்லாவே தெரிஞ்சது தானே!!அது தான் திடிர்னு ஏதாவது செலவு வந்தா நம்மளால சம்மாளிக்க கஷ்டமா இருக்கு. ஏதோ நீ பிரசவத்துக்கு உங்க அம்மா ஆத்துல ஒரு ஏழு மாசம் இருந்ததால கொஞ்சமாவது சேமிக்க முடிஞ்சுது.”

“நமக்குன்னு அந்த அம்பாள் என்ன வச்சிருக்காளோ அது தான் நமக்கு கிடைக்கும். பார்ப்போம் இன்னும் ஒரு மூணு வருஷம் தானே அதுக்கப்பறம் என்ன பண்ணறது டிசைட் பண்ணிப்போம். வாங்கோ சாப்பிடலாம்”

இரண்டு மாதங்கள் ஓடின. சக்தி ஸ்ரீயின் பிறந்த நாள் நெருங்கியது. அவளின் முதலாவது பிறந்த நாளன்று திருப்பதியில் மொட்டையடித்து காது குத்தி ஆயுஷ் ஹோமம் செய்ய திட்டமிட்டு அதை செயல் படுத்திட ஒரு வாரம் முன்னதாகவே மீண்டும் ஊருக்குச் சென்றனர் நவீனும் மிருதுளாவும். அங்கே சென்றதும் தான் தெரிந்தது கவினும் குவைத்திலிருந்து வந்திருந்தது. அவனைப் பார்த்ததும் நவீன்

“என்னடா கவின் திடீரென வந்திருக்க? எப்பவும் நீ ஜூன் ல தானே வருவ!!”

“இல்ல நவீ…”

“என்ன இழுக்கற?”

“நம்ம கவினுக்கும் கஜேஸ்வரிக்கும் அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் பண்ணப்போறோம் அதுதான் வந்திருக்கான்”

“ஓ!!!நிச்சயதார்தம் பண்ண முடிவே பண்ணியாச்சா!! சரி சரி!!! சக்தி ஸ்ரீ பிறந்த நாளுக்கு திருப்பதி போறதா இருக்கோம் எல்லாருக்கும் டிக்கெட் புக் பண்ணட்டுமா?”

“இல்லை இல்லை பசங்க மட்டும் தான் வர்றா நாங்க ரெண்டு பேரும் வரலை”

“ஏன் என்ன ஆச்சு? தாத்தா பாட்டியா உங்களுக்கு அட்டென்ட் பண்ணணும்னு தோனலையா?”

“அதுக்கில்லை இப்போ தான் ஆப்ரேஷன் ஆகிருக்கு அதுதான் யோசிக்கிறேன்”

“ஓ!!! சரி சரி அப்படீன்னா வேண்டாம். டேய் நீங்க எல்லாரும் வரேங்களா இல்லை உங்களுக்கும் வேலை ஏதுவது இருக்கா?”

“இல்லை நாங்க வர்றோம்”

என்றனர் பவினும், ப்ரவினும்

“நீ எப்படி கவின்? வருவயா?”

“ஷுவர் வர்றேன் நவீன்”

“சரி நானும் மிருதுளாவும் கடைவீதிக்குப் போய் குழந்தைக்கு வேண்டிய டிரஸ் எல்லாம் வாங்கிண்டு வந்திடறோம்”

“நவீன் நானும் உங்க கூட வரேன்”

“சரி வா கவின்”

மூவரும் குழந்தை சக்தியுடன் பஸ் ஸ்டாப்புக்கு நடந்துச் சென்றுக்கொண்டிருக்கும் போது நவீன் கவினிடம்

“ஏன் கவின் எப்படி உன் மேரேஜ் இப்படி சீக்கிரம் டிசைட் ஆச்சு? எனக்கு ஒரே குழப்பமாயிருக்கு. ஈரோட்ல ஆப்ரேஷன் இரண்டே மாசத்துல உனக்கும் அத்தைப் பொண்ணுக்கும் நிச்சயதார்த்தம்!!! என்ன ஏதாவது அக்ரிமென்ட்டா என்ன?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. அப்பா சொன்னா சரின்னு ஓகே சொல்லிட்டேன்”

“நீ ஏதாவது டிமாண்ட் பண்ணினயா?”

“ச்சே சே அதெல்லாம் ஒண்ணுமே கேட்கலை ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் க்ளியரா சொல்லிட்டேன்..”

“என்ன அது?”

“என் கல்யாணத்தை நவீனோட கல்யாணம் மாதிரியே கிராண்டா பண்ணணும்னு ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டேன்”

இதைக் கேட்ட மிருதுளா கவினிடம்

“இது நியாயமே இல்லை கவின்”

“ஏன் நியாயமில்லை மன்னி?”

“எங்காத்துல நான் ஒரே பொண்ணு அதுனால செய்தா. ஆனா அவா ஆத்துல ரெண்டு பொண்கள்..அதுவுமில்லாம இரண்டாவது பொண்ணுக்கு எங்க கல்யாணம் மாதிரி பண்ணினா அவா மூத்த பொண்ணும் மாப்பிள்ளையும் கேட்க மாட்டாளா? அவாளுக்கு என்ன பதில் சொல்லுவா அத்தை ? அதை யோசிக்க வேண்டாமா?”

“அதெல்லாம் நான் யோசிக்க வேண்டிய அவசியமில்லை மன்னி. அம்மா உங்களுக்கு உங்க பேரன்ட்ஸ் போட்ட மாதிரியே நாற்பத்தைந்து பௌன் நகை போடணும்னு கேட்டா!!! நான் அப்படியா கேட்டேன்!!!”

“என்னது அம்மா அவாகிட்ட அப்படியா கேட்டா? அதுக்கு அவா ஒத்துண்டுட்டாளா?”

“இல்லை அவாளாள அவ்வளவெல்லாம் முடியாதுன்னுட்டா. அதுனால தான் நான் என்னோட டிமாண்டை சொன்னேன்”

இதற்கு மேல் கவினிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்த மிருதுளா பேசாமல் அவர்களுடன் பஸ்ஸில் சென்றாள். பஸ்ஸில் அமர்ந்துக் கொண்டே கவின் மிருதுளாவிடம்

“ஏன் மன்னி எங்களோட எல்லாம் நல்லா பேசறேங்களே அப்புறம் ஏன் அம்மாவோட மட்டும் சரியாவே பேச மாட்டேங்கறேங்கள்?”

“அப்படீன்னு யார் உன்கிட்ட சொன்னா கவின்”

“இல்ல நானா பார்த்ததை வைத்துதான் கேட்கறேன்”

“நீ எங்ககூட இருந்ததே மொத்தமா ஒரு வாரம் கூட கிடையாது அதுல உனக்கு தெரிஞ்சுடுத்தா!!! நம்பிட்டேன். இங்கே பாரு கவின் நான் எல்லார் கூடையும் பேசிண்டு தான் இருக்கேன் ஆனா இங்கே என்னென்ன நடக்கறதுன்னு முழுசா தெரிஞ்சுக்காம ஒரு சைட் மட்டும் விஷயத்தைக் கேட்டுட்டு இப்படி அடுத்தவா மேலே பழிப் போடக் கூடாது”

“சரி என்ன தான் அப்படி நடந்தது? சொல்லுங்கோ தெரிஞ்சுக்கறேன்”

மிருதுளா நடந்தவைகளை எல்லாம் விவரித்தாள். அதைக் கேட்டதும் கவின்

“ஓ!!! இவ்வளவு நடந்திருக்கா!!! நவீன் உன் மேல தான் எல்லா தப்பும் டா”

“அதை சொல்லு கவின்”

“நீ ஏன் அம்மா அப்பாவை தட்டிக் கேட்கலை?”

“நான் கேட்டேனா இல்லையான்னு எப்படி உனக்குத் தெரியும்?”

“கேட்டிருந்தா மறுபடியும் அதே மாதிரி பிஹேவியர் இருந்திருக்குமா?”

“அவா அப்படி தான்!!! அவாளை திருத்த முடியாது. அட்லீஸ்ட் என்னால முடியாது பா. பார்ப்போம் இதோ உனக்கும் கல்யாணம் ஆக போறது இல்லையா நீ யே தெரிஞ்சுப்ப”

“எனக்கு அந்த கவலை இல்லை நவீன்”

“ஏன் அப்படி சொல்லற?”

“ஆமாம் நான் கட்டிக்கப் போறது அப்பாவோட தங்கைப் பொண்ணு, அவளுக்கு எல்லாமே தெரியும், ஸோ ஷி வில் ஹான்டில் இட். அதுனால எனக்கு எந்தவித டென்ஷனுமில்லை பா”

“அதையும் பார்ப்போம் டா பார்ப்போம்”

என்று பஸ்ஸிலிருந்து கடைவீதி வரை பேசிக்கொண்டே சென்று வேலைகளை முடித்து விட்டு இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினர்.

மறுநாள் நவீனும் மிருதுளாவும் கிளம்பி மிருதுளா வீட்டுக்குச் சென்றனர். மிருதுளாவின் அப்பா அம்மா மற்றும் வேனுவை திருப்பதிக்கு குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவுக்கு வரவேற்றனர். அவர்களும் வருவதாக சொன்னார்கள். முறைப்படி ஈஸ்வரனும் பர்வதமும் அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் தான் கொம்பில் இருக்கிறார்களே!!! அன்று மத்தியம் உணவருந்தியதும் அங்கிருந்து கிளம்பி சென்று ரெயில் டிக்கெட் புக் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.

நவீன் வீட்டிலிருந்து ராமானுஜத்துக்கு ஃபோன் போட்டு கிளம்ப வேண்டிய தேதியை சொல்லி அன்று நேராக ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிடுமாறு சொன்னான். ராமானுஜமும் அதுபடியே வந்துவிடுவதாக சொன்னார். இந்த உரையாடலை கேட்ட ஈஸ்வரன் நவீனிடம்

“அவ அப்பா அம்மா வர்றாளோ!!”

“ஆமாம் வர்றா. அதுக்கென்ன? வேனு தானே மாமா!!! அவன் மடியில தான் நம்ம சக்தியை உட்கார வைத்து மொட்டையும் அடிக்கணுமாம், காதும் குத்தணுமாமே!!!”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பர்வதத்தின் முகம் மாறியதைக் கண்டாள் மிருதுளா. இதற்கு ஏதோ ஒரு தடையை பர்வதம் உருவாக்கப் போகிறாள் என்பது அவளுக்கு புரிந்தது. அது எதுவாக இருந்தாலும் சரி… இந்த முறை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள்.

திருப்பதி கிளம்பும் முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டப் பின் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பர்வதம் பவினிடம்

“இங்க பாரு பவின் நாளைக்கு திருப்பதில குழந்தையை உன் மடியில் தான் உட்கார வச்சு மொட்டை அடிக்கணும் காதும் குத்தணும் புரிஞ்சுதா”

“அது எப்படிமா மாமா மடியில உட்கார வச்சு தானே செய்வா இது என்ன புதுசா இருக்கு!!”

என்றாள் மிருதுளா. அதற்கு பர்வதம்

“இது தான் நம்மாத்து வழக்கம்”

“எனக்கு தெரிந்து எந்த வீடுகளிலும் மாமா இருக்கும் போது சித்தப்பாவை செய்யச் சொல்றதுன்னு ஒரு வழக்கத்தை நான் கேள்விப் பட்டதில்லை. சரி அப்படியே நம்மாத்து வழக்கமானாலும் கவின் தானே உட்காரணும் அது என்ன நீங்க பவினை சொல்லறேங்கள்??”

“எல்லாம் அப்படி தான். பவின் உனக்குப் புரிஞ்சுதுல்ல அது போதும். சரி எல்லாரும் தூங்க போங்கோ”

என திமிராக சொல்லி விட்டு படுத்துக்கொண்டாள் பர்வதம். அனைவரும் படுக்கச் சென்றனர். மாடியில் மிருதுளா நவீனிடம்

“அது எப்படி நவீ !!! என்ன நியாயமிருக்கு? எல்லார் ஆத்துலயும் மாமா மடியில் உட்கார வச்சுதான் பண்ணுவா. அப்படி மாமா இல்லாட்டின்னா தான் மத்தவா உட்காருவா!!! என் சக்தி ஸ்ரீக்கு வேனு இருக்கானே அப்புறம் எப்படி கவினை!!!! உங்க அம்மா ஆனாலும் ரொம்பத் தான் பண்ணறா!!! இந்த விசேஷத்தையும் ஸ்பாயில் பண்ண தான் இப்படி ஒண்ணு கிளப்பி விடறா!!”

“மிருது நீ ஏன் டென்ஷன் ஆகறாய்? ஜஸ் லீவ் இட். அவா சொல்லறதை சொல்லிண்டு இருக்கட்டும் நாம அங்க வேனுவையே உட்கார சொல்லுவோம் யூ டோன்ட் வரி அபௌட் ஆல் தீஸ் திங்ஸ். நிம்மதியா தூங்கு”

என்று நவீன் சொன்னாலும் மிருதுளாவுக்கு ஒரு வகையான பயம் தொற்றிக் கொண்டது. ஆம் அவள் கடந்து வந்த பாதை அப்படி. மறுநாள் விடிந்தது அனைவரும் திருப்பதிக்குப் புறப்பட்டனர். அங்கு சென்றதும் புக் செய்திருந்த ரூமில் கொண்டுச் சென்ற சாமான்களை வைத்துவிட்டு குழந்தைக்கு மொட்டையடிக்கச் சென்றனர். அங்கே சவரம் செய்பவர் குழந்தையின் மாமா எங்கே என்று கேட்டார். அப்போது வேனு செல்ல முற்பட்ட போது பவின் வழிமறித்து

“எங்க அம்மா என்னைதான் உட்காரச் சொல்லி இருக்கா. அது தான் எங்க வழக்கமாம்.”

என்று சொல்லிக் கொண்டு முன்வந்து சக்தியை தன்னிடம் தரச் சொன்னான். அப்போது கோபமடைந்த மிருதுளா

“இங்க பாரு பவின் சில சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் இன்னார் தான் செய்யணும்ன்னு இருக்கு அது உங்க அம்மாக்கு தெரியாம போனதால அதை எல்லாம் மாத்த முடியாது. நீயே பார்த்த இல்ல மொட்டை அடிப்பவரே குழந்தையோட மாமா எங்கேன்னு தானே கேட்டார்…சித்தப்பா எங்கேன்னா கேட்டார். இப்போவாவது புரிஞ்சுக்கோ. நீ நகரு மொதல்ல. டேய் வேனு வா”

என வேனுவின் கையைப் பிடித்து சக்தியை அவன் கையில் கொடுத்து அமரச் செய்து பாப்பாவுக்கு மொட்டை அடிக்க வைத்தாள் மிருதுளா. பின் அனைவரும் ரூமிற்குச் சென்று குளித்து ஃப்ரெஷ் ஆனதும் காதும் குத்தி ஆயுஷ் ஹோமமும் சிறப்பாக செய்து முடித்து பெருமாளின் தரிசனமும் கண்டு, தாயாரையும் சேவித்து விட்டு திருப்பதி லட்டுவுடன் வீடு திரும்பினார்கள்.

சற்று நேரம் ஓய்வெடுத்தனர். மறுநாள் காலை எழுந்து காபி குடித்து குளித்துவிட்டு மிருதுளா வீட்டுக்குக் கிளம்பினர் நவீனும் மிருதுளாவும் அப்போது ஈஸ்வரன்

“நாளைக்கு நம்ம கவினோட நிச்சயதார்த்தமிருக்கு இப்போ என்னத்துக்கு அங்கே போகணும்?”

“நாங்க போகணும். எங்களுக்கு வேலையிருக்கு. நீங்க கவினுக்கு நிச்சயதார்த்தமிருக்குன்னு நாங்க இங்க வந்தததுக்கப்புறம் தானே எங்ககிட்ட சொன்னேங்கள்!!! ஆனா இந்த வேலை நாங்க குஜராத்ல இருந்து கிளம்பும்போதே டிசைட் பண்ணினது. ஸோ நாங்க போயாகணும். சாரி. சாயந்தரம் வந்திடுவோம்”

என்று மிருதுளா பதலளித்து விட்டு இருவரும் விருட்டென்று வெளியே சென்றனர். அவர்கள் சென்றதும் ஈஸ்வரன் ராமானுஜத்துக்கு ஃபோன் போட்டார்

“ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன்”

“ஆங் சொல்லுங்கோ மாமா நான் அம்புஜம் பேசறேன்.”

“மாமா ஆத்துல இல்லையா?”

“இல்லை அவருக்கு காலை ஷ்ப்ட்டு அதுனால ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு போயிட்டார்”

“நேத்து தானே திருப்பதியிலிருந்து வந்தேங்கள்!! அதுக்குள்ள ரெஸ்ட்டில்லாம வேலைக்கும் போயிட்டாரா?”

“ஆமாம் மாமா அவர் அப்படி தான். அவருக்கு வேலைக்கு அப்புறம் தான் நாங்களேன்னா பார்த்துக் கோங்கோளேன்”

“சரி சரி நான் ஃபோன் பண்ணினது ஒரு நல்ல விஷயம் சொல்லறதுக்காக தான். அது என்னனென்னா நம்ம கவினுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம் வச்சிருக்கோம். பொண்ணு என் தங்கை பொண்ணுதான். நீங்க மாமா வேனு எல்லாரும் வந்திடுங்கோ. இருங்கோ பர்வதம் பேசணுமாம் குடுக்கறேன்”

“ஹலோ அம்புஜம் மாமி எங்காத்து மாமா சொன்னா மாதிரி நாளைக்கு எல்லாரும் வந்திடுங்கோ. எங்க நாத்தனார் பொண்ணத் தான் கவினுக்கு பேசி முடிச்சிருக்கோம். என்ன தான் இருந்தாலும் சொந்தத்துல பொண்ணெடுத்தா தானே நம்மள பார்த்துப்பா அது தான் ஓகேன்னு சொல்லிட்டேன். இங்கே நிச்சயதார்த்த வேலைகள் தலைக்கு மேல கிடக்கு ஆனா உங்க பொண்ணும் மாப்பிள்ளையும் கிளம்பி அங்க உங்காத்துக்கு வந்திண்டு இருக்கா. மறக்காம அவாளையும் அழைச்சுண்டு வந்திடுங்கோ. நான் வச்சுடறேன்.”

என்று ஃபோனை அம்புஜத்திடமிருந்து பதில் வருவதற்குள் வைத்தாள் பர்வதம். அவள் ஃபோனை வைத்ததும் ஆட்டோவில் நவீனும் மிருதுளாவும் சக்தி பாப்பாவுடன் வந்திறங்கினர். அவர்களை வரவேற்று காபி டிபன் கொடுத்து சக்தியை மடியில் வைத்துக் கொண்டே

“ஏன் மிருது உங்காத்த கவினுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தமாமே!!!”

“உனக்கு யார் சொன்னா?”

“உங்க மாமனாரும் மாமியாரும் இப்போ தான் ஃபோன்ல சொன்னா. சரி அங்க நிச்சயதார்த்த வேலைகளை விட்டுட்டு நீங்க இப்போ இங்க ஏன் வந்தேங்கள்?”

“ஏன் ஆவா ஏதாவது குற்றமா சொன்னாளாக்கும்”

“அவா சொன்னாளோ இல்லையோ அது தப்பு தானே மா”

“அம்மா எங்களுக்கு அந்த விஷயத்தை நாங்க இங்க வந்ததுக்கப்புறம் தான் சொன்னா அது உனக்குத் தெரியாது. சரி அதெல்லாம் எங்க பாடு நாங்க பார்த்துக்கறோம். அப்பா வேனு எல்லாரும் எங்க காணம்”

“உங்க அப்பா டே ஷிப்ட் போயாச்சு. வேனு காலேஜ் போயிருக்கான். மத்தியானம் வரைக்கும் தான் காலேஜாம் ஒரு இரண்டு மணிக்கெல்லாம் வந்திடுவான்”

“அம்மா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லத் தான் வந்திருக்கோம். இன்னும் இதைப் பத்தி என் மாமனார் மாமியார்ட்ட பேசலை.”

“என்ன மிருது!! என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சினையா?”

“ஆமாம் பிரச்சினை தான் மா”

என்று கூறிக்கொண்டே நவீனைப் பார்த்தாள் மிருதுளா அதை கவனித்த அம்புஜம்

“என்ன மாப்ள!! என்ன ஆச்சு இப்போ?”

“அது அது வந்து …..”

“அய்யோ ஏன் இப்படி என்னோட பிபியை ஏத்தறேங்கள் யாராவது ஒருத்தர் சொல்லுங்கோளேன்”

“சரி மா நானே சொல்லறேன். நீங்க எனக்கு கல்யாண சீரா கொடுத்த பாத்திரங்களில் நான் குஜராத் எடுத்துண்டு போன பாத்திரங்கள் தவிர மத்த எல்லாப் பாத்திரங்களும் நசுங்கி நெளிஞ்சு போயிருக்கு”

“என்ன சொல்லுற மிருது!!!! அதெல்லாத்தையும் அட்டப்பெட்டில போட்டு பேக் பண்ணி ஆத்து பரண் மேல வச்சுட்டுத்தானே குஜராத்துக்கே கிளம்பினேங்கள்!!! அப்புறம் எப்படி நசுங்கித்து நெளிஞ்சுது?”

அம்புஜம் கேட்டதற்கு மிருதுளா நடந்ததைச் சொன்னாள். அதைக் கேட்டதும் அம்புஜத்துக்கு தலை சுற்றுவது போல இருக்க பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து மடக்மடக் என தண்ணீரைக் குடித்து விட்டு நவீனைப் பார்த்து

“என்ன இது மாப்ள!!! இது நியாயமா?”

“நியாயமே இல்லை தான்.”

“நியாயம் அநியாயம் அதை விடுங்கோ. மனசாட்சின்னு ஒண்ணு இருக்க வேண்டாமா? ஒரு பொண்ணைப் பெத்து வளர்த்து ஆளாக்கி அவளுக்கு இப்படி சீரெல்லாம் செஞ்சு அனுப்பினா அதை எல்லாம் இப்படியா நாசமாக்குவா? எங்க பொண்ணத்தான் பாடாபடுத்தறான்னா நாங்க கொடுத்த சீர் ஜாமானங்கள் மேலையுமா வன்மம். நாங்க என்ன அப்படி தப்பு பண்ணிட்டோம்? அந்த பாத்திரங்கள் எல்லாம் நாங்க எங்க பொண்ணுக்காக பார்த்து பார்த்து வாங்கி பல வருஷங்களா சேர்த்து வச்சு வந்ததாக்கும். அந்த மாதிரி பித்தளை வெங்கலப் பாத்திரங்கள் எல்லாம் இப்போ கடையில வாங்கப் போனா என்ன விலையாகும் தெரியுமா? நீங்க இதை பத்தி உங்க அப்பா அம்மாட்ட ஒண்ணுமே கேட்கலையா?”

“நாங்க பார்த்ததே அவரோட ஆப்ரேஷனுக்கு வந்தப்போ தான். அப்போ என்னத்த கேட்கறதன்னு ஊருக்குப் போயிட்டோம்”

“சரி இந்த நல்ல காரியத்தை எப்போ பண்ணினாலாம்?”

“அது எங்களுக்கு தெரியாது.”

“நிஜமாவே தவளையால தான் பாத்திரங்கள் கீழே விழுந்து இப்படி ஆகிருந்தா அதை உங்ககிட்ட ஃபோன் பண்ணிச் சொல்லிருக்கணுமில்லையா!!!”

“ஆமாம் சொல்லிருக்கணும்”

“ஏன் சொல்லலையாம்? இங்க பாருங்கோ மாப்ள அவா பண்ணினதுக்கு உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த நான் விரும்பலை ஆனா இதை அவாகிட்ட நாங்க கேட்கத்தான் போறோம். ஏன்னா அதெல்லாம் மிருது அப்பா கஷ்ட்டப்பட்டு வேர்வை சிந்தி சம்பாதிச்ச காசுல வாங்கினது. இவ்வளவும் பண்ணிட்டும் என்ன எகதாளமா ஃபோன்ல பேசறா அவா!!! நீங்க எங்களை தப்பா எடுத்துக்கக் கூடாது நாங்க உங்க அப்பா அம்மாவை இந்த விஷயத்துக்கு சும்மா விடப் போறதில்லை”

“சரி நீங்க தாராளமா கேளுங்கோ!!! தப்பு பண்ணினவா அவா அப்போ அவாளுக்கு இதெல்லாம் தேவைதான்.”

“ஆமாம் என்ன கேட்டு என்ன ஆகபோறது!!! வீணா போனது போனதுதானே.”

“சரி மா நாங்க மத்தியானம் சாப்டுட்டு சாயந்தரம் அங்கே போகணும். நீங்க நாளைக்கு மறுநாள் வந்து கேளுங்கோ. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்…அவாகிட்ட நியாயம் மட்டும் கிடைக்காது அதை எதிர்பார்க்காதே!! எங்களுக்கே அங்க மதிப்பில்லை அப்புறம் எங்கேந்து உங்களை மதிக்கப் போறா? அதுனால எதற்கும் தயாராக வாங்கோ. அவா எல்லாத்துக்கும் துணிஞ்சவாளா இருக்கா.”

மதியம் சாப்பிட்டு சற்று ஓய்வெடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி ஈஸ்வரக் கோட்டைக்குச் சென்றனர் நவீனும் மிருதுளாவும். ராமானுஜத்திடமும் வேனுவிடமும் விஷயத்தைக் கூறினாள் அம்புஜம் அதைக் கேட்ட ராமானுஜம் அதிர்ந்துப் போனார்.

ஈஸ்வரன் கோட்டையில் கவினின் நிச்சயதார்த்தத்தின்காக சொந்தங்கள் சிலர் வந்திருந்தனர். அதில் ஒருத்தியிடம் பர்வதம் கண்ணசைக்க உடனே அவள் மிருதுளாவிடம்

“என்னமா மூத்த மாட்டுப் பொண்ணு ஆத்துல விசேஷத்தை வச்சுண்டு அதுக்கு வேலையைப் பார்க்காம எங்க ஜோடியா போயிட்டு வறேங்களாம்”

“சித்தி அதுதான் ஜோடியா போயிட்டு வரோம்ன்னு தெரியறது தானே அப்புறம் என்ன கேள்வி. நிச்சயதார்த்தம் கவினுக்கு தானே!! எனக்கில்லையே!”

என்று நவீன் சொன்னதும் சலசலப்பு அடங்கியது. நவீனும் மிருதுளாவும் மாடிக்குச் சென்று உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்து அனைவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு அனைவருக்கும் சாப்பாடு பரிமாறி இடத்தை எல்லாம் சுத்தம் செய்தப் பின் சக்தியைத் தூக்கிக் கொண்டு உறங்கச் சென்றாள் மிருதுளா.

மறுநாள் கவினின் நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்தது. லட்சுமி அத்தைக்கு முகமெல்லாம் பற்கள் பளிச்சிட்டது. நிச்சயதார்த்தம் முடிந்து விருந்து பரிமாறப் பட்டது. அதன் பின் ஒரு மூன்று மணியளவில் கவின், கஜேஸ்வரி, அவளின் அண்ணன், அவரின் நண்பர்கள் எல்லோரும் எங்கோ செல்வதற்கு கிளம்பினர். அப்போது கவின் நவீனையும் மிருதுளாவைம் கிளம்பச் சொன்னான் அதற்கு நவீன்

“எதுக்கு இப்போ எங்க ரெண்டு பேரையும் கிளம்பச் சொல்லுற கவின்?”

“நீங்க கிளம்பி வாங்கோ சொல்லறேன்”

இருவரும் கிளம்பி வந்தனர். அப்போது கவின்

“நாம இப்போ மேரேஜ் ரெஜிஸ்டர் ஆஃபிஸ் போறோம். வந்து வண்டியில ஏறுங்கோ ரெண்டு பேரும்”

“இப்போ தானே நிச்சயமே முடிஞ்சுது அதுக்குள்ளயே கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணற. ஏன் இந்த அவசரம்?”

என்று நவீன் கேட்டுக் கொண்டிருக்கும் போது கஜேஸ்வரியின் அண்ணன் வந்து கவினிடம்

“என்ன கவின் போகலாம் நேரமாயிண்டே இருக்கு அப்புறம் ரெஜிஸ்ட்ரார் கிளம்பிடப் போறார்”

என்றதும் கவின் நவீனையும் மிருதுளாவையும் அவனுடன் அழைத்துச் சென்றான். மிருதுளா சக்தியைத் தூக்கிக் கொண்டு அவர்கள் பின்னால் சென்று வேனில் ஏறினாள். அவள் வேனினுள் சென்றதும் கவின் அவளை கஜேஸ்வரி அருகில் அமரச்சொன்னான் அதற்கு மிருதுளா

“நானா!!! எதுக்கு கவின்?நீ உட்காரு அதைத் தான் அவளும் விரும்புவா போ நீ போய் உட்காரு”

என்றாள் அதை மறுத்த கவின் மிருதுளாவை அமரச்செய்து விட்டு அவன் நவீனுடன் அமர்ந்தான். வேன் புறப்பட்டது அப்போது மிருதுளா கஜேஸ்வரியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தாள். அதே போல கவின் நவீனிடம்

“ஆமாம் நவீன் இப்போவே ரெஜிஸ்டர் பண்ணினாதான் அந்த சர்டிபிகேட் வைத்து நான் கஜேஸ்வரிக்கு விசா எடுக்க முடியும். கல்யாணம் முடிந்ததும் அவளைக் கூட்டிட்டு போகணும்ன்னு அவ சொல்லிட்டா. அப்படீன்னா இப்போவே ப்ராஸஸ் ஆரம்பிச்சாதான் உண்டு அதுனால தான் இப்படி பண்ணறேன்”

“அதெல்லாம் சரி முறையா கல்யாணம் உண்டா இல்லை அதுதான் ரெஜிஸ்டர் ஆயாச்சேன்னு விட்டுவிடுவீங்களா!!!”

“இல்ல இல்ல அது குறிச்ச தேதில நடக்கும். அதுல எந்த சேஞ்சும் இல்லை”

“உன் இஷ்டம் பா. இட்ஸ் யுவர் லைஃப்”

என்று இவர்கள் பேசி முடித்ததும். கஜேஸ்வரியின் அண்ணன் நாராயணனின் நண்பன் கஜேஸ்வரியிடம் தண்ணீர் பாட்டில் கொடுப்பது போல வந்து

“என்ன கஜேஸ்வரி உனக்கு நிச்சயமாயிடுச்சு இதோ ரெஜிஸ்டர் மேரேஜ் ஆக போவுது …இன்னமும் இங்கிதம் இல்லாம இப்படி ஒண்ணா கூட உட்கார வைக்க மாட்டேங்கறாங்க உங்க மாமா வீட்டுல”

என்று சொன்னதும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது. அவள் அங்கிருந்து எழுந்து

“கவின் நீயே வந்து உன் பொண்டாட்டி பக்கத்துல உட்காருப்பா. நான் அங்க வந்து உட்கார்ந்துக்கறேன்”

“இல்ல மன்னி நீங்களே உட்காருங்கோ பரவாயில்லை”

“வேண்டாம் பா எங்களுக்கும் இங்கிதம் எல்லாமிருக்கு. நான் உன்னை முன்னாடியே அங்க தானே உட்காரச் சொன்னேன்!!!! சரி சரி நீ போ பா. உனக்கு உன் பொண்டாட்டிக்கூட உட்காரணமோ இல்லை!!! எனக்கு என் புருஷனோட உட்காரணும் போதுமா.”

என்றதும் கவின் எழுந்து இடம் கொடுத்தான். அவனை நாரயணனின் நண்பன் பிடித்து கஜேஸ்வரி அருகில் அமர வைத்தான். நடந்தவைகளைப் பார்த்த நவீன் மிருதுளாவிடம்

“என்னாச்சு மிருது? நீ இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டியே!!! அங்க என்ன நடந்தது?”

மிருதுளா நடந்தவற்றைக் கூறினாள். உடனே நவீன்

“இரு அவன் யாரு இதெல்லாம் சொல்லறதுக்கு. அவன் என்ன நம்ம சொந்தக்காரனா!!! என்னன்னு கேட்டுட்டு வரேன்”

என்று எழுந்தவனின் கையைப் பிடித்து இழுத்து இருக்கையில் அமர வைத்தாள் மிருதுளா பின் நிதானித்துக் கொண்டு

“இங்க பாருங்கோ அந்த கோஷ்டி எல்லாம் ஒண்ணா சேர்ந்துண்டு தான் இப்படி எல்லாம் பண்ணறா. ஏன் அந்த ஆள் அப்படி சொல்லும் போது அந்த கஜேஸ்வரி வாயை திறக்கலை!!! அவன் சொல்வதை ஆமோதிக்கறா மாதிரி ஈ ன்னு இளிச்சுண்டு இருந்தா தெரியுமா!!! அதுவுமில்லாம நாராயணனும் பேசாம இருக்கார். விடுங்கோ என்னமோ கூத்தடிக்கட்டும். இதுக் கெல்லாம் உங்க தம்பியும் உடந்தைதானோன்னு எனக்கு தோனறது!!!! இப்படி லாஸ்ட் மினிட்ல நமக்கு சொன்னதுமில்லாம இப்படி எல்லாம பேச்சு வேற. சீக்கிரம் எல்லாத்தையும் முடிச்சிட்டு வீட்டுக்கு போனா போறும்ன்னு இருக்கு. வரும்போதே இப்படி !!! இனி இவ வந்தா எப்படியோ!!!! பார்ப்போம்”

என்று ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து முடித்ததும் வீட்டுக்குச் சென்றனர். மாலை ஒரு ஏழு மணியளவில் லட்சுமி வீட்டார் அனைவரும் அவர்கள் வந்த வேனில் ஏறிச் சென்றனர். அவர்கள் சென்றதும் மிருதுளா மாடிக்குச் சென்று சற்று நேரம் குழந்தையை பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு தானும் படுத்துக் கொண்டாள். சற்று நேரத்தில் கீழிருந்து நவீன் கூப்பிட்டான். எழுந்து கீழே வந்தாள். இரவு உணவு சாப்பிட்டனர். பின் அனைவரும் உறங்கச் சென்றனர்.

மறுநாள் விடிந்ததும் கவின் ஈரோடுக்கு கஜேஸ்வரியிடம் ஏதோ டாக்யுமெண்ட்ஸ் கலெக்ட் பண்ண வேண்டுமென்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றான். அவனுக்கு யாரிடமும் பர்மிஷன் கேட்க வேண்டிய அவசியமில்லை!!! ஏனெனில் அவன் சொந்த அத்தை மகளை கட்டிக் கொள்ளப் போவதால் அவனுக்கு முழு சுதந்திரம் போல!!!!

நவீனும் மிருதுளாவும் டிபன் சாப்பிட்டப்பின் பர்வதத்தையும், ஈஸ்வரனையும் ஹாலில் அமர வைத்து பேசலானான் நவீன்

“நாங்க எங்க ரூம்ல இருக்குற பரண்ல வச்சுட்டுப் போன பாத்திரங்கள் எல்லாமே நசுங்கி நெளிஞ்சு உடைஞ்சிருக்கு. அது எப்படி ஆச்சுன்னு ப்ரவின்ட்ட கேட்டா அவன் ஏதோ தவளை வந்தது அதை தட்டி விடப் போனதால பாத்திரங்கள் எல்லாம் கீழே விழுந்து அப்படி ஆயிடுத்துன்னு சொன்னான். ஏன்னா உனக்கு அப்போ ஆப்ரேஷன்னு சொல்லிண்டு ஈரோட்டுல இருந்த அதுனால அப்போ கேட்க வேண்டாம்ன்னு விட்டுட்டோம். ஃபோனில் கேட்க வேண்டிய விஷயமில்ல இதுன்னு ஃபோன்லையும் கேட்கலை. அதுக்கப்புறம் என் குழந்தையோட பொறந்த நாள் அப்புறம் கவினோட நிச்சயம்ன்னு வந்ததால அதெல்லாம் முடியட்டும்ன்னு வெயிட் பண்ணினோம். இப்போ சொல்லுங்கோ ஏன் எப்படி எப்போ இது நடந்தது?”

“என்ன சொல்லணும் நாங்க? என்ன ஏதோ விசாரணை மாதிரி கேட்கற?”

“எப்படி வேணும்னாலும் வச்சுக்கோங்கோ ஆனா எனக்கு பதில் இப்போ வரணும்”

“ஆமாம் பரண்ல ஒரே தவளையா இருந்தது பர்வதம் தான் பார்த்து அதை எல்லாம் தட்டி விடப் போய் எல்லாம் விழுந்திருக்கு. அதுக்கென்ன இப்போ”

“அதுக்கென்ன இப்போன்னு ரொம்ப சாதாரணமா கேட்கறேங்களே பா. அதை எல்லாம் வாங்க எங்க அப்பா அம்மா எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கான்னு எனக்குத் தான் தெரியும். இவ்வளோ பெரிய தப்பை பண்ணிட்டு எவ்வளவு சர்வசாதாரணமா சொல்லறேங்கள்”

“இப்ப என்ன பண்ணணும்னு சொல்லற அதுக்கு. ஏதோ கை தவறி எல்லாம் விழுந்துடுத்து. அதுக்கு நாங்க என்ன பண்ணுவோம்”

“நல்லா இருக்கு நவீ உங்க அப்பா அம்மா சொல்லறது. ரொம்ப நல்லா இருக்கு. நாளைக்கு பாம்பு வந்ததுன்னு பீரோவையும் நசுக்கி வைச்சுட்டு அதுனால என்ன இப்போன்னும் கேட்பா இவா!!!”

“என்ன உனக்கு ரொம்ப வாய் நீளறது. அடக்கிக்கோ சரியா”

என்றாள் பர்வதம். நவீனுக்கு கோபம் உச்சமானது அவன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் இடையில் மிருதுளா பேசியதும் மிருதுளாவிடம் எகிறினார்கள் மூத்த தம்பதியர். அதை புரிந்துக் கொண்ட நவீன்

“மிருது யூ பீ குவயட். சரி நான் கேட்டதுக்கு பதில் எப்போ இது நடந்தது?”

“அது ஒரு ஆறு ஏழு மாசம் முன்னாடின்னு நினைக்கிறேன் இல்லையா பர்வதம்!!”

“ம் ம்…இருக்கும்”

“சரி இதுமாதிரி கீழே விழுந்து எல்லாம் நசுங்கிடுத்துன்னு ஏன் எனக்கு ஃபோன் போட்டு சொல்லலை?”

“என்னத்துக்கு சொல்லணும்? நீங்க வந்தா பார்த்துக்க போறேங்கள் தானே. எப்படி இப்போ பார்த்தேங்களோ அப்படி அதுனால எங்களுக்கு சொல்லணும்ன்னு தோனலை.”

“சபாஷ்!!! சூப்பர் பொறுப்பான பதில்”

“என்ன டா உன் பொண்டாட்டி ரொம்ப துள்ளறா?”

இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது அம்புஜமும் ராமானுஜமும் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் ஈஸ்வரன் நவீனிடம்

“என்ன பேச அடியாள் எல்லாம் வரச் சொல்லிருக்க போல!!!”

என்று சொல்ல நவீனுக்கு இன்னும் கோபம் வந்தது ஆனால் அதை அடக்கிக் கொண்டு தன் மாமனார் மாமியாரை வரவேற்று அமரச் சொன்னான். அவர்களிடம் மிருதுளா

“இவா செஞ்சதுக்கு துளியும் வருத்தப் படறா மாதிரி எனக்குத் தெரியலை மா. நீங்க பேசாம ஆத்துக்கு போயிடுங்கோ”

“என்ன மாமா மாப்ளையும் பொண்ணுமா நடந்ததைச் சொன்னா. ஏன் இப்படி பண்ணிருக்கேங்கள். எங்களுக்கு நீங்க ரெண்டு பேரும் பதில் சொல்லித் தான் ஆகணும்”

“அது தான் உங்க மாப்ள சொல்லிட்டானில்லையா அது தான் நடந்தது. அதுக்கு நாங்க என்னத்த சொல்லணும்?”

“மாமா உங்க வயசுக்கு இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்லறது நல்லா இல்லை. அந்த பாத்திரங்கள் எல்லாம் வாங்க நான் எவ்வளவு உழைச்சிருக்கேன்னு எங்களுக்குத்தான் தெரியும். அதுவுமில்லாம அதுல இருக்குற வெங்கலப் பாத்திரங்கள் எல்லாம் இப்போ வாங்கக் கூட கிடைக்காது. இப்போ அந்த பாத்திரங்களின் நசுக்கை எடுத்து சரி செய்ய வேற செலவாகும் தெரியுமா!!! செலவு ஒரு பக்கமிருந்தாலும் இனி அது புது பாத்திரமாகுமா?”

“எல்லாம் எல்லா இடத்துலையும் காசு கொடுத்தா கிடைக்கும். இப்போ என்ன நீங்க எல்லாருமா ரெவுண்டு கட்டிண்டு கேட்குற அளவுக்கு நாங்க என்ன பண்ணிட்டோமாம்!!! சரி நசுங்கின பாத்திரங்களுக்கெல்லாம் எவ்வளவு ஆகும்ன்னு ஒரு பேப்பர்ல எழுதி தாங்கோ அதுக்கு உண்டான காசை விட்டெரியறோம் எடுத்துண்டு போங்கோ”

என்று திமிறாக ஈஸ்வரன் சொன்னதைக் கேட்டதும் அம்புஜம்

“உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து அவளை கட்டிக் கொடுத்த இடத்துல இப்படி அவா பண்ணிட்டு உங்ககிட்ட இப்போ நீங்க பேசினா மாதிரி பேசினா தான் உங்தளுக்கு எங்களோட வலிப் புரியும்.”

“எங்களுக்கு இப்படியொரு பொண்ணெல்லாம் இல்லை”

என்று பர்வதம் சொன்னதும் ராமானுஜத்துக்கு கோபம் வந்தது அவர் எழுந்து நவீனிடம்…

“இதுக்கு மேல இவாகிட்ட பேச எங்களுக்கு விருப்பமில்லை. உங்களை நம்பி தான் நாங்க எங்க பொண்ணையும், பொருளையும் கொடுத்தோம். நீங்க தான் இதுக்கு என்ன பண்ணலாம்ன்னு இப்போ சொல்லணும்”

நவீனுக்கும் அவனின் பெற்றவர்கள் மீது கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது அதை அடக்கிக் கொண்டு ராமானுஜத்திடம்

“இனியும் இவாளை நம்பி இங்கே எதையும் வைக்க வேண்டாம். நீங்க ஒரு வேன் ஏற்பாடு பண்ணிண்டு வாங்கோ நாம எல்லா பொருளையும் அதுல ஏத்தி உங்காத்துலேயே வச்சுட்டு நாங்க ஊருக்குப் போறோம்”

என்றதும் ஈஸ்வரன் வெடுக்கென்று எழுந்து

“அப்படியே அவா பொண்ணையும் சேர்த்து அதுல ஏத்தி அனுப்பு”

என்று சம்மந்தமில்லாமல் கூறிவிட்டு உள்ரூமிற்குள் சென்றார். அதைப் பார்த்த மிருதுளா தன் பெற்றவர்களிடம்

“அப்பா அவாளை விடு அவா அப்படி தான். நான் நிறைய பட்டுட்டேன். நீ நவீன் சொன்னா மாதிரி வேன் எடுத்துண்டு வாப்பா எல்லாத்தையும் நம்மாத்துலேயே வச்சுடறோம்”

“என்ன பேசறேங்கள் ரெண்டு பேருமா!!! நாங்க உங்களுக்கு கொடுத்தது நல்ல புது பாத்திரங்கள் ஆனா இப்போ நசுங்கினதையும் நெளிஞ்சதையும் என்னத்துக்கு திருப்பி எடுத்துண்டு போகணும். அதுதான் உன் மாமனார் காசை விட்டெரியறேன்னு சொன்னாரே தரச்சொல்லு”

“அப்பா அவர்ட்ட எங்க காசு? அதையும் உன் மாப்ள தான் தரணும். புள்ள கல்யாணத்துக்கே ஒண்ணும் செய்யாத ஆட்கள் விட்டெரிஞ்சிட்டாலும்….அட போப்பா. நான் தான் நேத்தே சொன்னேனே மா இங்க நியாயம் கிடைக்காது. அவமானம் தான் கிடைக்கும்ன்னு. சாயந்தரமா வண்டியை வரச்சொல்லு எல்லாத்தையும் போட்டுண்டு நாங்களும் வந்திடறோம்”

அன்று மாலை ராமானுஜம் வேனுடன் வந்தார். நவீனும் வேனுவும் ராமானுஜமுமாக மிருதுளா நவீனின் அனைத்துப் பொருட்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மிருதுளா மனதில் ரணங்களுடனும், அவள் கொண்டு வந்த சீர் சாமான்கள் அனைத்தும் பலத்த காயங்களுடன் தாய் வீட்டிற்கே திரும்பிச் சென்றனர்.

செய்வதை எல்லாம் செய்து விட்டு
திமிராக பேசிவிட்டு
கேள்வி கேட்க வந்தவர்களை அவமானப் படுத்தி விட்டு
ரூமுக்குள் சென்று அடைந்துக் கொண்ட மூத்த தம்பதியர்
அவர்களின் பாவமூட்டையின் எடையை அதிகரித்துக் கொண்டுள்ளனர்.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s