அத்தியாயம் 70: தவளை நசுக்கிய பாத்திரங்கள்

மிருதுளா பாட்டியை அழைத்து வருவதாக சொல்லி அங்கிருந்து கிளம்ப முற்பட்ட போது, தன் பேச்சுத் திறமையால் ஈஸ்வரனை உசுப்பேத்திவிட்டு அவளை அங்கிருந்து போக விடாமல் செய்தாள் பர்வதம். ஏனெனில் பாட்டியை மிருதுளா கூட்டிக் கொண்டு வந்தால் பர்வதத்தின் குட்டு வெளிப்பட்டுவிடுமே!!! எங்கடா மிருதுளா பாட்டியைக் கூட்டிக் கொண்டு வந்து சாட்சி சொல்ல வைத்திடுவாளோ என்றெண்ணி அவள் மீதும் அவள் அம்மா மீதும் அபாண்டமாக பழியைப் போட்டு பேசி மிருதுளாவுக்கு கோபம் வரவழைத்து பிரச்சினையை திசைத் திருப்பப் பார்த்தனர் பர்வதீஸ்வரன். அவர்களின் எண்ணப்படியே பொறுமையிழந்து தன் மரியாதையையும், தன் தாயின் மரியாதையையும் காக்க வேண்டி பேச்சுக்குப் பேச்சு பேச வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டாள் மிருதுளா. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இறுதியில் மிருதுளா மீதே அனைத்து பழிகளையும் சாற்றி அவளைப் பேச வைத்து தன் மகனிடம் அவன் மனைவியின் லட்சணத்தைப் பற்றி எடுத்துறைத்தார் ஈஸ்வரன். அதுவரை அமைதியாக நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டு மட்டுமிருந்த நவீன்

“நீங்க ரெண்டு பேரும் பிரச்சினையை ஆரம்பிச்சது டிக்கெட் புக்கிங் டேட் பத்தித்தானே அப்புறம் ஏன் பக்கத்து வீட்டுப் பாட்டி எல்லாம் உள்ளே வந்தா? சரி.. ஆமாம்… நான் போன மாசமே டிக்கெட் புக் பண்ணிட்டேன். நான் தான் மிருதுளாட்ட இதைப் பத்தி எதுவும் உங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லியிருந்தேன். இப்போ அதுக்கு என்ன?”

வீட்டில் ஏற்பட்ட சத்தத்தில் குழந்தை வீல் வீல் என அழுதது. மிருதுளா ஒருபக்கம் தன் மீது சாற்றப்பட்ட தவறான குற்றங்களை எண்ணிக் கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தாள். பொய்யை ஏக்கர் கணக்கில் தன் திருமணத்திற்கு முன்னும் பின்னும் ப்ளாட் போட்டு வித்த மூத்த தம்பதியர் நவீன் சொல்லாமல் மறைத்த ஒரு சின்ன விஷயத்துக்காக அவர்கள் கைக்குழந்தையுடன் ஊருக்கு கிளம்பும் போது பிரச்சினையை கிளப்பி அவர்களது நிம்மதியையும் குலைத்து கொண்டிருந்ததைப் பார்த்த மிருதுளாவுக்கு அவர்கள் சொன்ன பொய்களை பட்டியலிட்டு… அதை விட பெரிய பொய் ஒன்றும் நவீன் சொல்லவில்லை என்று சொல்லி பர்வதீஸ்வரன் வாயை அடைக்க துடித்தாள் ஆனால் அவள் மனம் அவளிடம்

“வேண்டாம் மிருதுளா வேண்டாம். இவர்களின் நாக்கு நரம்பில்லாதது எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசக்கூடியது. மீண்டும் நீ அனைத்துக்கும் சாட்சி தேடிக்கொண்டா போக போகிறாய்? நீ தான் நவீனிடம் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறாயே அவன் கேட்கட்டும். இது போன்றவர்களை கையும் களவுமாக பிடித்து தக்க சாட்சியம் மூலம் அம்பலப்படுத்த வேண்டும். அந்த நாள் நிச்சயம் வரும் அதுவரை அந்த அம்பாள் மீது பாரத்தைப்போட்டுட்டு உன் குழந்தையை தூக்கிக்கொள் போ”

என்றதும் ஓடிச் சென்று தன் மகளை தூக்கிக் கொண்டு சமாதானப்படுத்தினாள். நவீன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் கோபப்பட்டு சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார் ஈஸ்வரன். பர்வதம் நினைத்ததை நடத்தியத் திருப்தியில் உள்ரூமுக்குள் சென்றாள். மிருதுளா நவீனைப் பார்த்துக் கொண்டே தன் மனதிடம்

“நான் பர்வதம் ஈஸ்வரன் சொன்னது செய்தது எல்லாவற்றையும் நவீனிடம் கூறியும் ஏன் அவன் அதை எல்லாம் அவர்களிடம் கேட்கவில்லை? இப்படி இவனிருந்தால் இவர்கள் இன்னுமல்லவா ஆடுவார்கள். அம்மா தாயே எனக்கும் என் குழந்தைக்கும் நீ தான் துணை”

என வேண்டிக்கொண்டாள். அழுதக் குழந்தையின் பசியாற்றினாள். சக்தியும் பசியாறியதும் உறங்கிப் போனாள். மிருதுளாவுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனால் தன் மாமியார் ஒன்றுமே செய்து வைக்கவில்லை என்பதைப் புரிந்துக் கொண்டதால் பசியை அடக்கிக்கொண்டாள். ஈஸ்வரன் பர்வதத்தின் அபாண்டமான குற்றச்சாட்டுகள் அதை நிரூபிக்க போராடியது, குழந்தையின் அழுகை, வயிற்றுப் பசி, ஈஸ்வரனின் ஓங்கிய குரல், அதிர்ச்சி, அழுகை என எதிர்பார்க்காத நேரத்தில் அனைத்தும் ஒன்றாக தாக்க மிருதுளா துவண்டுப் போனாள். தலைவலியினால் துடித்தாள். அப்போது வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் பசிமயக்கத்திலிருந்த மிருதுளாவுக்கு அறைகுறையாக கேட்டது. மடியில் சக்தியுடன் மெல்ல உட்கார்ந்த படியே நகர்ந்துப் போய் பார்த்தாள். அம்புஜமும் ராமானுஜமும் காரிலிருந்து இறங்கி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் மிருதுளா ஓவென்று அழுதாள். அதைக் கண்ட அம்புஜத்தின் அடிவயிறு கலங்கியது. ஓடிச்சென்று சக்தியை தூக்கிக் கொண்டு தன் மகளிடம்

“மிருதுமா ஏன் மா அழற? என்ன மா ஆச்சு? எங்க யாரையுமே காணமே? மாப்ள என்ன நடந்தது?”

“நீங்க வாங்கோ நாம ஸ்டேஷனுக்கு கிளம்பலாம். நான் பெட்டியை எல்லாம் எடுத்து காரில் வைக்கறேன்”

என்றான் நவீன்.

“அந்த பெட்டியை என் கிட்ட தாங்கோ நான் தூக்கிண்டு வரேன்”

என்றார் ராமானுஜம்.

இருவரும் பெட்டிகளை காரில் வைத்ததும் …நவீன் வீட்டினுள் வந்து அம்புஜத்திடம்

“நீங்க மிருதுளாவை அழைச்சுண்டு கார்ல ஏறுங்கோ நானும் பின்னாடியே வர்றேன்”

என்று நவீன் சொன்னதும் மிருதுளா வெடுக்கென எழுந்து தன் குழந்தையுடன் வெளியே நின்ற காரினுள் சென்று அமர்ந்தாள். அவள் பின்னாலேயே நடந்தது என்னவாக இருக்கும்!! என்ற குழப்பத்திலேயே சென்றாள் அம்புஜம். இவை நடக்கும் வரை உள்ரூமிலிருந்து வெளியே வராத பர்வதம். அனைவரும் சென்று விட்டார்கள் என எண்ணி ரூமை விட்டு வெளியே வந்தவள் நவீன் கடைசியாக ஒரு பையைத் தூக்கிக் கொண்டு வாசலைத்தாண்டும் போது

“டிபன் சாப்டுட்டு போடா”

என அக்கறையுள்ளவள் போல கூறினாள். அவளைப் பார்த்து முறைத்து விட்டு

“ஒண்ணும் தேவையில்லை”

என்று கூறி திரும்பிப் பார்க்காமல் சென்று காரில் ஏறி காரை ஸ்டார்ட் பண்ணச் சொன்னான். டிரைவரும் வண்டியை ஸ்டார்ட் செய்து திருப்பினார். அப்போது மிருதுளா தன் பெற்றவர்களிடம்

“நாம் ரெயில்வே ஸ்டேஷன் போக வேண்டாம் நேரா நம்ம ஆத்துக்கு போவோம்”

“என்ன மிருது ஆச்சு? எவ்வளவு தடவைக் கேட்கறது? ஏன் இப்போ ஆத்துக்குப் போகணும். டிரேயினுக்கு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்குமா!!!”

“அம்மா நான் இனி இவர் கூட வாழ விரும்பலை. அதனால நான் இவர் கூட குஜராத்துக்கு போக மாட்டேன். என்னை நம்மாத்துக்கே கூட்டிண்டு போங்கோ ப்ளீஸ்”

என்று அழுதுக்கொண்டே சொன்னாள். அதைக் கேட்டதும் நவீன்

“என்ன மிருது சொல்லற? வாட் ஹாப்பன்டு டூ யூ?”

“அம்மா எனக்கு இவர் வேண்டாம். நான் அவமானப்படுத்தப்படும்போதெல்லாம் எனக்காக வாயைத் திறந்து ஒரு வார்த்தைக்கூட பேசாத இவர் கூட வாழ மாட்டேன்”

“மிருது என்னை நீ புரிஞ்சிண்டது அவ்வளவு தானா!!! அவாகிட்ட பேசி ஒண்ணும் ஆகப் போறதில்லைன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். நாம என்ன நியாயத்தைச் சொன்னாலும் அவா காதுல விழாது. வேணும்னே பிரச்சினையை கிளப்பறான்னு உனக்குப் புரியலையா? இந்த மாதிரி ஆளுகளை நாம கண்டுகாம ஒதுங்கிடணும். இவாள மாதிரி இருக்கறவாகிட்ட பேசியும் பிரயோஜனமில்லை. அவா பேசறது எல்லாம் பொய்யின்னு அவா பேசற விதத்திலிருந்தே தெரியாதா? அது தான் நான் ஒண்ணுமே பேசலை. தப்பு செய்தது அவா ரெண்டு பேரும் ஆனா தண்டனை எனக்கா? இதுல என்ன நியாயமிருக்கு?”

டிரைவர் ராமானுஜத்திடம்

“சார் இப்போ எங்க போகணும்? வீட்டுக்கா ஸ்டேஷனுக்கா?”

என்று கேட்க அதற்கு ராமானுஜம் நவீனையும் மிருதுளாவையும் பார்க்க நவீன்

“நீங்க நேரா ஸ்டேஷனுக்கே வண்டியை விடுங்க அண்ணா. அப்படியே போற வழியில இருக்குற நல்ல வெஜ்டேரியன் ஹோட்டலா பார்த்து நிப்பாட்டுங்க”

“ஏன் மாப்ள நீங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடலையா?”

“ஆமாம் சாப்பிடலை”

“என்ன சொல்லறேங்கள் மாப்ள!!! பச்ச உடம்புக்காரியை இப்படியா பசியோடு இருக்க வைப்பேங்கள்?”

“ஆமாம் !!! அவா ஆத்துல அப்போ ஒரு மாதிரி இப்போ ஒரு மாதிரி ட்ரீட்மென்டெல்லாம் இல்லை மா எப்போதும் ஒரே மாதிரிதான் அன்னைக்கு வயத்துல புள்ளையோட இருந்தப்போவும் சரி இன்னைக்கு கைக்குழந்தையோடு இருக்கும் போதும் சரி பசியோடு துரத்தி விடறதுதான் அவா குடும்ப வழக்கம்.”

என்று மிருதுளா சொன்னதும் அம்புஜம் நவீனைப் பார்த்தாள். அவன்

“சாரி!!! நான் என்னப் பண்ணுவேன்? அதுதான் ஹோட்டலுக்குப் போயிட்டு ஸ்டேஷன் போவோம்ன்னு சொன்னேன்”

“உங்களை நம்பிதானே எங்க பொண்ணை உங்களுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம்…இப்படி எப்ப வந்தாலும் பசியும் பட்னியுமா அனுப்பறதும், அழ வைக்கறதும் நல்லாவா இருக்கு?”

என்று அம்புஜம் கூற. உடனே ராமானுஜம் அம்புஜத்தைப் பார்த்து

“ம்‌…ம்…சரி சரி அதெல்லாம் ஊருக்குப் போயிட்டு கேட்டுக்கலாமே!!! இப்போ இதோ ஹோட்டல் வந்தாச்சு இறங்குங்கோ.”

என்றதும் அனைவரும் இறங்கி ஹோட்டலுக்குள் சென்று அமர்ந்தனர். சர்வர் வந்து ராமானுஜமும் அம்புஜமும் ஒன்றும் வேண்டாம் என்றதால் நவீன் மிருதுளாவிடம் மட்டும் ஆர்டர் எடுத்துக் கொண்டு சென்றார். இருவரும் சாப்பிட்டதும் அனைவரும் மீண்டும் காரில் ஏறி ஸ்டேஷன் சென்றனர். அங்கே அவர்கள் செல்ல வேண்டிய ரெயில் ஃப்ளாட் பார்த்ததில் நின்றுக்கொண்டிருந்தது. அதில் வேகமாக நவீன், மிருதுளா, அம்புஜம் மூவரும் ஏறி அவர்களின் ரிசர்வ்டு இருக்கையில் அமர்ந்தனர். ராமானுஜம் நாலு தண்ணீர் பாட்டில்களை வாங்கி வந்து அம்புஜத்திடம் கொடுத்து உள்ளே பையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். அவரிடம் அம்புஜம்

“வேனுவை பத்திரமா பார்த்துக்கோங்கோ. நான் ஒரு ரெண்டு மாசத்துல வந்துடறேன். கொழந்த கழுத்து நின்னுடுத்துன்னா நம்ம மிருதுவே நல்லா பார்த்துப்பா அதுவரை தான் என் உதவி தேவைப்படும்.”

பேசிக்கொண்டிருக்கும் போதே ட்ரெயின் கிளம்புவதற்கான விசில் அடிக்கப்பட்டது. ராமானுஜத்திடம் மூவரும் கையசைத்து பை சொன்னார்கள் அதற்கு அவர்

“சரி சரி நான் பார்த்துக்கறேன். நீங்க பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்கோ. ஊர் போய் சேர்ந்ததும் ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லுங்கோ மாப்ள”

“நிச்சயமா உங்களுக்கு கால் பண்ணறேன். பை. நீங்கப் பார்த்து ஆத்துக்குப் போங்கோ”

அம்புஜமாவது மிருதுளாவிடம் நடந்ததைப் பற்றி கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் ஏனெனில் அவள் தன் மகளுடனே பிரயாணம் செய்கிறாள். ஆனால் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாத புரியாத ராமானுஜம் அவர்கள் ட்ரெயின் அந்த ஸ்டேஷனிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்து விட்டு மனதில் கவலையுடன் வீடு திரும்பினார்.

அம்புஜம் குழந்தை சக்தியை மிருதுளாவிடமிருந்து வாங்கிக் கொண்டு தன் பெர்த்தில் காலை நீட்டிக் கொண்டு அமர்ந்தாள். மிருதுளா கோபத்தில் தன் பெர்த்தில் அமர்ந்துக் கொண்டு ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே மனதில் அழுதுக் கொண்டிருந்தாள். அப்போது நவீன் அவளருகில் சென்று அமர்ந்து

“எப்படி மிருது என்னை வேண்டாம்ன்னு சொன்ன? உன்னால அப்படி ….எப்படி சொல்ல முடிஞ்சுது? ஐ வாஸ் ஷாக்டு!!! நான் என்ன தப்புப் பண்ணினேன்? கம் ஆன் மிருது பேசு.”

மிருதுளா ஏதும் பதிலளிக்காமல் நவீனை ஒரு பார்வைப் பார்த்து விட்டு மீண்டும் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். குஜராத் பயணம் முழுவதும் நவீனிடம் பேசாமல் பயணித்தாள்.

குஜராத்தில் புது வீட்டுக்கு முன் சென்று இறங்கினர். அம்புஜம் வீட்டினுள் சென்று ஆரத்தி கரைத்து வந்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே போகச் சொன்னாள்.

பக்கத்து வீட்டிலிருந்த ஒரு பஞ்சாபி பெண் இவர்களுக்கு டீப் போட்டு, எடுத்து வந்து கொடுத்து விட்டு தன்னை மிருதுளாவிடம் அறிமுகம் செய்துக் கொண்டு சக்தியை கொஞ்சி விட்டுச் சென்றாள். இரண்டு நாட்கள் மிருதுளா நவீனிடம் பேசாமலிருந்தாள். பின் நவீன் அவளிடம்

“இங்கே பாரு மிருது நாம சொன்னா கேட்கறவாகிட்ட நாம ஏதாவது சொல்லலாம் இல்ல திட்டலாம். ஆனா அவா நாம சொல்லறதை கேட்கவும் மாட்டா அதுபடி நடக்கவும் மாட்டாங்கும் போது அங்கே பேசி என்ன ஆக போறது அதுனால தான் நான் பேசாம இருந்துட்டேன்.”

நவீன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்ற எண்ணம்… நிதானமாகியதும் மிருதுளாவுக்கு தோன்ற மூன்றாவது நாள் நவீனுடன் பேச ஆரம்பித்தாள். இரண்டு மாதங்கள் உருண்டோடின அம்புஜமும் ஊருக்குச் சென்றாள்.

நவீன், மிருதுளா, சக்தி பாப்பா மூவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

டிசம்பர் மாதம் நவீனுக்கு திடீரென ஒரு ஃபோன் வந்தது. அதில் பேசிய ப்ரவீன் ஈஸ்வரனுக்கு மிகவும் உடம்பு சரியில்லை என்றும், ஆப்ரேஷன் செய்யப் போவதாகவும், அவர் ஈரோடுக்கு லட்சுமி அத்தையைப் பார்க்கப் போன இடத்தில் அப்படி ஆனது எனவும், அவர்கள் அனைவரும் ஈரோட்டில் இருப்பதாகவும் கூறி ஹாஸ்பிடல் அட்ரெஸைக் கொடுத்து நவீனை உடனே கிளம்பி வரச்சொன்னான்.

நவீனும், மிருதுளாவும் குழந்தையுடன் கிளம்பிச் சென்றனர். இரண்டு நாட்களில் அவர்கள் ஈரோடு சென்றுப் பார்த்தால் ஈஸ்வரனுக்கு ஆப்ரேஷன் முடிந்துவிட்டது என்று கூறினார்கள் லட்சுமியும் அவர் குடும்பமும். ஈஸ்வரனும் நன்றாக தெளிவாக இருந்தார். லட்சுமியும் அவள் குடும்பத்தில் அனைவரும் ஈஸ்வரனின் உடல்நிலையைப் பற்றி ஏதோ கதை சொல்வதைப் போல பெரிய பிரசங்கம் செய்தனர். அதுவுமில்லாமல் லட்சுமியின் மகன்கள் தான் ஈஸ்வரனை பெற்றப் பிள்ளைகளைப் போல பார்த்துக் கொண்டு அவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் கூறினர். நவீனுக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது. அது எப்படி தங்கையைப் பார்க்க வந்த இடத்தில் திடீரென உடம்பு சரியில்லாமல் ஆப்ரேஷன் வரை சென்றது என்றும் அவர்கள் கொடுத்த பிரசங்கமும், அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவன் அதைப் பற்றி ப்ரவினிடம் கேட்டான் அதற்கு ப்ரவின்

“எனக்கும் ஒண்ணும் புரியலை அண்ணா. அப்பாவும் அம்மாவுமா ஈரோடுக்கு வந்தா அடுத்த நாளே நம்ம ஆத்துக்கு ஃபோன் போட்டு இப்போ உன் கிட்ட என்ன சொன்னேனோ அதையே தான் என்கிட்டேயும் சொன்னா. நானும் ஓடி வந்தேன். இதோ ஆப்ரேஷனும் ஆயாச்சுன்னா இன்னும் நாலு நாள்ல வீட்டுக்குப் போகலாம்ன்னு சொல்லிருக்கா”

நவீனுக்கு அவன் அத்தை குடும்பத்தினரின் பேச்சு நடவடிவடிக்கை எதுவும் பிடிக்கவில்லை. மேலும் அவன் அவசரமாக கிளம்பி வந்ததால் லீவுமில்லை ஆகையால் ஒரு நாள் ஈரோட்டில் இருந்து விட்டு மிருதுளா ஏதோ சின்ன குக்கரை பரண் மேலிருந்து எடுக்க வேண்டுமென்பதால் ஈஸ்வரன் கோட்டைக்கு பஸ்ஸில் திரும்பி வந்தனர்.

வந்ததும் உடைகளை மாற்றிக் கொண்டபின் சற்று நேரம் ப்ரவினுடன் பேசி விட்டு மாடிக்குச் சென்று பரண் மேலிருந்து குக்கரை எடுத்துக் கொடுத்தான். அதைப் பார்த்ததும் மிருதுளா

“அச்சச்சோ இது என்ன நவீ குக்கர் கீழே விழுந்தா மாதிரி நசுங்கி இருக்கு?”

“எங்கே குடு”

என்று பார்த்த நவீன் அதிர்ந்துப் போனான். மிருதுளா சொன்னா மாதிரி குக்கர் நசுங்கியிருந்தது. திருமணமானதும் மிருதுளா கொண்டு வந்த சீர் சாமான்களான பாத்திரங்களில் சிலவற்றை மட்டும் குஜராத்துக்கு எடுத்துச் சென்று மீதியை அட்டைப் பெட்டியில் போட்டு பேக் செய்து பரண் மீது வைத்துவிட்டு தான் இருவரும் குஜராத் சென்றார்கள். குக்கர் நசுங்கியிருப்பதைப் பார்த்த நவீன் மிருதுளாவிடம்

“மிருது நான் எல்லா அட்டைப் பெட்டியையும் கீழே இறக்கறேன். எதுக்கும் எல்லாத்தையும் செக் பண்ணிடுவோமா?”

“ஓகே நவீ”

எல்லா பெட்டிகளையும் கீழே இறக்கி வைத்தான் நவீன். பெட்டிகளை திறந்துப் பார்த்த நவீனும் மிருதுளாவும் அதிர்ந்துப் போனார்கள். ஏனெனில் அனைத்துப் சீர் பாத்திரங்களும் நசுங்கி நெளிந்து போயிருந்தன. வெங்கலம், பித்தளை, எவர்சில்வர் என அனைத்து பாத்திரங்களும் அடிவாங்கியிருந்தது. அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு அழுகையே வந்தது…நவீனிடம்

“என்ன நவீன் இது பரண் மேல டப்பாக்குள்ள இருந்த பாத்திரங்கள் எல்லாம் எப்படி நசுங்கியிருக்கு? இதெல்லாம் எங்க அப்பா அம்மா வாங்க எவ்வளவு செலவழிச்சா தெரியுமா? இதோ இந்த வெங்கலப் பாத்திரம் செட் இருக்கே இது எங்க அம்மாவுக்கு அவா அம்மா சீரா கொடுத்தது…எப்படி… இப்படி எல்லா பாத்திரமும் பாழாகிருக்கு?”

“இரு வர்றேன். டேய் ப்ரவின்..ப்ரவின் மேல வா கொஞ்சம்”

என்று கூப்பிட்டான். ப்ரவின் மாடிக்குச் சென்றான். அவனிடம் நவீன் நசுங்கி நெளிஞ்சு போன பாத்திரங்களைக் காட்டி

“இதெல்லாம் நான் மேலே வைக்கும் போது நல்லா தானே இருந்தது. எப்படி இப்படி ஆச்சு?”

“அது …அது… அது… வந்து அண்ணா”

“இழுக்காம நடந்ததைச் சொல்லு ப்ரவின்”

“அம்மா தான் அவா தலையில பரண் மேலேந்து தவளை விழுந்ததுன்னு சொல்லி பார்த்தாளாம். அப்போ பரண்ல ஒரே தவளைகளா இருந்ததாம். அந்த தவளைகளை துறத்தும் போது இந்த பெட்டிகள் எல்லாம் கீழே விழுந்துடுத்தாம்ன்னு சொல்லி என்னை தான் மேலே தூக்கி வைக்கக் கூப்பிட்டா நானும் மேலே வச்சேன். ஆனா இப்படி பாத்திரமெல்லாம் நசுங்கிருக்குன்னு எனக்குத் தெரியாது”

“என்ன சொல்லற ப்ரவின் அம்மா தள்ளி இந்த பெட்டிகளெல்லாம் கீழே விழுந்ததா!!! நம்பறா மாதிரி இல்லையே!! அதுவுமில்லாம ஏன் இதை என்கிட்ட சொல்லலை?”

“அய்யோ அண்ணா இது தான் நடந்தது. நான் கீழே போறேன். கதவு திறந்து கிடக்கு”

என்று கூறி அங்கிருந்து கீழே சென்றான் ப்ரவின். அப்போது மிருதுளா நவீனிடம்

“எங்கப்பா கஷ்டப்பட்டு இதெல்லாம் எனக்கு வாங்கிக் கொடுத்ததை இப்படிப் போட்டு நாசமாக்கியிருக்காளே இது நியாயமா சொல்லுங்கோ நவீன்”

“இல்லவே இல்லை மிருது. இதெல்லாம் அப்படியே மேல தூக்கி வச்சுடறேன். நாம அடுத்த மாசம் சக்தி பிறந்த நாளுக்கு திருப்பதி போக வருவோம் இல்ல அப்போ அவாகிட்ட கேட்கலாம். அதுவரைக்கும் பேசாம இருப்போம் சரியா”

“ம்…சரி நவீ”

அனைத்தையும் பரண் மீதே வைத்தான் நவீன். அடுத்த நாள் புறப்பட்டு குஜராத்துக்கு சென்றனர். ஈஸ்வரன் ஈரோட்டிலிருந்து தன் கோட்டைக்கே வந்தார். நாட்கள் கடந்தன.

ஒரு நாள் ஈஸ்வரன் நவீனுக்கு ஃபோன் செய்து கவினுக்கு தனது தங்கையின் மகளை கட்டி வைக்க போவதாக சொன்னதை மிருதுளாவிடம் சொன்னான் நவீன். அதைக் கேட்டதும் மிருதுளா

“எந்த அத்தை பொண்ணு நவீன்?”

“எல்லாம் அந்த லட்சுமி அத்தைப் பொண்ணு கஜேஸ்வரி தான்”

“அதுக்கு ஏன் இவ்வளவு அலுத்துக்கறேங்கள்?”

“ஆமாம் எங்க அப்பாக்கு அறிவே இல்லை. அவர் குடிச்சு கும்மாளம் போட்ட போது… இதே …அவர் தங்கை ஆத்துக்கு போனபோது அவரை இனி அங்கே எல்லாம் வராதேன்னும், அவா ஆத்துக்காகாரர் கௌரமானவர்ன்னும், இப்படி குடிச்சிட்டு வந்து அவர் கௌரவத்தைக் கெடுக்காதே போயிடுன்னும் வீட்டுக்கு வெளியே இழுத்துப் போட்டுட்டு கதவை சாத்தினா தெரியுமா!!! அதெல்லாம் மறந்துட்டு இப்போ ஏன் கௌரவமில்லாத எங்க குடும்பத்திலேயே சம்மந்தம் பண்ணணுமாம் அந்த கௌரவகாரிக்கு!!! அதுக்கு எங்க அப்பாவும் எல்லாத்தையும் மறந்துட்டு சம்மதிச்சிருக்கார் பாரேன்.”

“அப்போ அதெல்லாம் நடக்கும் போது உங்க அப்பா குடிபோதையிலிருந்ததால் அவருக்கு எதுமே தெரிய வாய்ப்பில்லையே!!! கூட இருந்த உங்களுக்கு தானே தெரியும். அப்புறம் அவரைத் திட்டி என்ன யூஸ்? நீங்க வேண்டாம்ன்னு சொல்ல வேண்டியது தானே”

“நான் சொல்லாம இருப்பேனா!! சொன்னேன். நான் மட்டுமில்ல ஈவன் ப்ரவின் கூட கவினுக்கு கஜேஸ்வரி வேண்டாம்ன்னு சொன்னானாமே!!”

“ப்ரவின் ஏன் வேண்டாம்ன்னு சொல்லணும்?”

“அவன் கொஞ்ச நாள் லட்சுமி அத்தை ஆத்துல இருந்து படிச்சான் இல்லையா அதுனால அவாளைப் பத்தி தெரிஞ்சிருக்கும் ஸோ சொல்லியிருப்பான்.”

“நீங்க ரெண்டு பேரும் சொல்லியுமா இந்த சம்மந்தத்தை ப்ரொஸீட் பண்ணப்போறா?”

“எஸ். எங்க அப்பாவுக்கு தங்கைப் பாசம் கண்ணை மறைக்கறது அதுவுமில்லாம இப்போ தான் கொஞ்ச நாள் முன்னாடி ஈரோடு போன இடத்துல உடம்பு சரியில்லாம போயி ஆப்ரேஷன் எல்லாம் பண்ணி அத்தைக் குடும்பம் தான் காப்பாத்தினாங்கறா மாதிரி எல்லாம் அரங்கேறியது!!! இப்போ சடன்னா கவினுக்கும் அத்தைப் பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணப் போறதா சொல்லறா!!! ஏதோ இடிக்கறா மாதிரி இல்ல!!!””

“சரி இதுக்கு உங்க அம்மா எப்படி சம்மதிச்சா?”

“தெரியலை அவா எல்லாருமா முடிவு பண்ணிட்டா. என்கிட்ட ஒப்புக்கு சொன்னா. நானும் சரின்னு சொல்லிட்டேன். நாம சக்தி பாப்பாவோட ஃபர்ஸ்ட் பர்த்டேக்கு ஊருக்குப் போறோமே அப்போ என்ன ஏதுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்குவோம்”

“இதை விசாரிக்க போயி… நம்ம பாத்திரங்கள் நசுங்கியதை கேட்காம விட்டுடாதீங்கோ”

தொடரும்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s