அத்தியாயம் 69: போராட்டம் தொடர்ந்தது

மிருதுளா குழந்தை சக்தி ஸ்ரீயுடன் நிம்மதியாக தன் பெற்றோர் வீட்டிலிருந்தாள். நவீன் அவன் வேலையில் மும்முரமானான். வழக்கம் போல் தினமும் ஒரு ஃபோன் கால் டாபா சாப்பாடு என்று நாட்கள் ஓடின. ஒரு நாள் மிருதுளாவுக்கு ஃபோன் பேசும்போது

“ஹாய் மிருது ஒரு குட்நியூஸ்”

“என்னது நவீ?”

“எனக்கு குவார்ட்ஸ் அலாட் ஆயிருக்கு. அடுத்த வாரமே ஷிஃப்ட் பண்ணணும்”

“அச்சசோ உங்களால மட்டும் முடியுமா?”

‘செய்துத்தான் ஆகணும். நீயும் நம்ம சக்தியும் புது வீட்டுக்குத் தான் வருவேங்கள்.”

“சூப்பர். ஆனா பார்த்து பொறுமையா எல்லாத்தையும் பேக் பண்ணுங்கோ. எதையும் விட்டுடாதீங்கோ.”

“சரி சரி அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். சக்திக் குட்டிமா எப்படி இருக்கா?”

“நல்லா இருக்கா அவளுக்கென்ன ஜம் ஜம்முனு இருக்கா”

“சரி எப்போ நீங்க ரெண்டு பேரும் குஜராத் வர்றதா ப்ளான்?”

“மூணு மாசம் ஆகணும்ன்னு சொன்னா”

“அது தான் இரண்டு மாசம் முடியப்போறதே!! அப்போ அடுத்த மாசம் புக் டிரேயின் டிக்கெட் புக் பண்ணட்டுமா?”

“அதெல்லாம் சரி தான் ஆனா நம்ம கூட ஹெல்ப்புக்கு யார் வருவா?”

“யார் வரணும்?”

“உங்க அம்மா வருவாளா நவீ?”

“எனக்குத் தோணலை”

“அப்போ என் அம்மாட்ட கேட்டுப் பார்க்கறேன். ஃபர்ஸ்ட் உங்க அம்மாட்ட கேட்கறேன். என்ன சொல்லாறான்னு பார்த்துட்டு என் அம்மாட்ட கேட்கறேன்”

“ஓகே. பட் ஐ திங்க் யூ ஆர் வேஸ்டிங் டைம் ஆஸ்கிங் யூவர் மதர் இன் லா”

“நாளை பின்னே அவாளைக் கேட்காம என் அம்மாவைக் கூட்டிண்டு போயிட்டேன்னு பேச்சு வரக்கூடாதில்லையா!!! அதுனால ஒரு வார்த்தைக் கேட்டுண்டுடறேனே. “

“தென் யூவர் விஷ். சரி பில்லு மீட்டர் பறக்கறது. நான் வச்சுடட்டுமா”

“ஓகே நவீ பை. குட் நைட்”

“குட் நைட் மிருது”

மிருதுளா தன் குடும்பத்திடம் தங்களுக்கு புது குவார்ட்ஸ் அலாட்டான விஷயத்தைப் பற்றி பகிர்ந்துக் கொண்டாள். தன் அம்மாவிடம் தனக்கு ஹெல்ப்புக்கு வரமுடியுமா என்று கேட்டாள் அதற்கு அம்புஜம் சற்று யோசிக்க உடனே வேனு தன் அம்மாவிடம்

“அம்மா நீ என்னையும் அப்பாவையும் பத்தி யோசிக்காதே நாங்க இருந்துப்போம் நீ மிருதுக்காவுக்கு போய் ஹெல்ப் பண்ணிட்டு வா”

என்றான். அதைக் கேட்டதும் அம்புஜம் சரி என்று கூற அதற்கு மிருதுளா தன் மாமியாரிடம் காலையில் கேட்கப்போவதாக சொன்னதும் வேனு…

“மிருதுக்கா அந்த மாமி வரமாட்டா!!! அப்படியே வந்தாலும் குழந்தையை அவாளை நம்பி விடாதே!! ஹாஸ்பிடலேயே பச்சக் குழந்தைன்னு கூட பார்க்காம காதைப் பிடிச்சு திறுவினவாளாக்கும்!!! ஜாக்கிரதை!!”

“டேய் வேனு அப்படி எல்லாம் சொல்லாதே டா!!! எங்களை மாதிரி அவாளுக்கும் இவள் பேத்தி தானே டா”

“அம்மா அதை நான் இல்லைன்னு சொல்லலை ஆனா அவா செஞ்சது எந்த பாட்டியும் செய்யாத ஒண்ணு!!! அதைப் புரிஞ்சுக்கோ ஃபர்ஸ்ட்”

“ஆமாம் மா நம்ம வேனு சொல்லறதும் வாஸ்தவம் தான். பார்ப்போம் நாளைக்கு கேட்டா தெரிஞ்சுடும். அவா வரேன்னு சொன்னா அப்புறம் இதை எல்லாம் பத்தி யோசிச்சுக்கலாம். நான் சக்தி ஸ்ரீ தூங்கும் போதே தூங்கிக்கறேன். குட் நைட்”

மறுநாள் காலை குளித்து விட்டு, சாமியிடம் வேண்டிக்கொண்டு, டிபன் சாப்பிட்டு விட்டு, பர்வதத்திற்கு ஃபோன் செய்தாள் மிருதுளா. ஃபோனை எடுத்தாள் பர்வதம்

“ஹலோ”

“ஹலோ மா நான் மிருதுளா பேசறேன்”

“ம்…சொல்லு”

“எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? அப்பா எப்படி இருக்கா? பவின் அன்ட் ப்ரவின் எப்படி இருக்கா? அடுத்த மாசம் ஊருக்கு போகலாம்ன்னு இருக்கேன். அப்போ என் கூட நீங்களும் வர்றேளா?”

“அது இருக்கட்டும் நீயும் உன் குழந்தையுமா எப்போ இங்கே வர்றப் போறேங்கள்?”

“அதைப் பத்தி இன்னும் யோசிக்கலை”

“அதை தானே முதல்ல டிசைட் பண்ணிருக்கணும் அதுக்கப்பறம் தானே குஜராத் போறதைப் பத்தியே யோசிச்சிருக்கணும்?”

“அது சரி தான் மா ஊருக்குப் போறதுக்கு முன்னாடி அங்க வந்து இருந்துட்டுத்தான் கிளம்பணும். அது தான் அப்படி கிளம்பும் போது எங்க கூட நீங்க ஹெல்ப்புக்கு வர முடியுமா?”

“அதெல்லாம் என்னால முடியாது அப்பாவைப் பார்த்துக்க இங்க யாரிருக்கா? என்னால எல்லாம் வரமுடியாது”

“சரி மா அப்போ நான் என் அம்மாவைக் கூட்டிண்டு போறேன்”

“அது எப்படி!!! அப்போ உன் அப்பா தம்பி!!”

“அவா ரெண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்ன்னு சொல்லிட்டா”

“ஓ!! அப்போ அது எல்லாம் முடிவு பண்ணிட்டு ஒப்புக்கு என்கிட்ட கேட்கறயோ?”

“அப்படி இல்லமா நீங்க வரேன்னா இவா வரமாட்டா நீங்க முடியாதுன்னுட்டேங்கள்னா அப்போ இவாளாவது வருவாளான்னு நான் கேட்டு வச்சுக்க வேண்டாமா!!! அதுதான் கேட்டுண்டேன்”

“சரி சரி என்னமோ பண்ணு!! நான் ஃபோனை வச்சுடறேன்”

என்று தன் பேத்தியைப் பற்றியோ இல்லை தன் மருமகளைப் பற்றியோ எந்த நலனும் விசாரிக்காமல் ஃபோனை கட் செய்தாள் பர்வதம். அதை எதிர்பார்த்த மிருதுளா தன் மனதுக்குள்

“அப்பாடா வரலைன்னு சொல்லிட்டா. நிம்மதியா இருக்கு. அப்போ நம்ம அம்மாவை அழைச்சுண்டு போக வேண்டியதுதான்”

என நினைத்துக் கொண்டே ஹாலுக்கு சென்று தன் அம்மாவிடம்

“அம்மா நீதான் என் கூட வரணும். நான் எதிர்பார்த்த மாதிரியே அவா வர முடியாதுன்னு சொல்லிட்டா”

“இது என்னடி இப்படி சொல்லறா?”

“அப்பாவையும் பசங்களையும் விட்டுட்டு வரமுடியாதாம். அவாளைப் பார்த்துக்க யாருமில்லையாம்”

“இது நல்லா இருக்கே!! அப்போ உன் அப்பாவையும் தம்பியையும் பார்த்துக்க மட்டும் இங்க என்ன பத்துப் பேரா இருக்கா? நீ மாசமா இருக்கும் போதும் அவா வர முடியாதுன்னுட்டா!! அப்பாவும் வேனுவும் இரண்டு மாசம் அட்ஜஸ்ட் பண்ணிடா இப்பவும் அதே தான். ஆனா நாளைக்கு ஏதோ நான் தான் எப்பப்பாரு உன் கூட இருக்கறதா சொல்லுவா!!”

“அம்மா அவா அப்படித்தான் நான் என்ன செய்வேன் சொல்லு”

“அதுவும் வாஸ்தவம் தான். நீ என்ன பண்ணுவ? சரி சரி நானே வரறேன். என் பொண்ணுக்கும் பேத்திக்கும் நானும் வரமுடியாதுன்னு சொல்ல எனக்கு மனசு கேட்காது”

அன்றிரவு நவீன் ஃபோன் செய்த போது நடந்தவைகளை விவரமாக கூறி இறுதியில் தன் அம்மா தங்களுடன் வருவதாக கூறினாள் அப்போது நவீன்

“நான் தான் முன்னாடியே சொன்னேனில்லையா!!! சரி எந்த டேட்டுக்கு புக் பண்ணறது?”

“நவீ உங்க அம்மா சொல்லறா மாதிரி நானும் சக்தியும் முன்னாடியே எல்லாம் அங்கே நீங்க இல்லாம போய் இருக்க மாட்டோம் அதை இப்பவே க்ளியரா சொல்லிடறேன். ஏன்னா எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படிபட்டது!!! நீங்க அங்கே வர்ற அன்னைக்கு தான் நாங்களும் வருவோம். அதுக்கப்புறம் எவ்வளவு நாள் இருக்கணும்ன்னு நீங்க டிசைட் பண்ணிக்கோங்கோ”

“எஸ் வாட் யூ சே இஸ் கரெக்ட். ஐ அக்செப்ட் இட். எனக்கே அவா மேல நம்பிக்கை இல்லை ஸோ நான் வர்ற அன்னைக்கு ஈவினிங் நீ அங்க வந்தா போதும் அப்புறம் ஒரு மூணு நாள் இருப்போம் அப்புறம் கிளம்பிடுவோம். என்ன சொல்லுற?”

“ஓகே அது படியே புக் பண்ணிடுங்கோ”

“டன்.. ஆனா இதை எல்லாம் நீ என் பேரன்ட்ஸ் கிட்ட சொல்லாதே!!! அவாகிட்ட இப்ப இதெல்லாம் சொன்னா இதை வச்சே ஏதாவது பிரச்சினையை உருவாக்கிடுவா!! அதுனால எப்போ எப்படிச் சொல்லணுமோ அப்போ அப்படிச் சொல்லிக்கறேன் புரியறதா?”

“என்னமோ பண்ணுங்கோ!! எப்படியும் எல்லாத்துக்கும் என்னைத்தான் குற்றம் சொல்லப்போறா!!! தெரிஞ்சது தானே”

என்று பேசி முடித்து ஃபோனைக் கட் பண்ணியதும் நவீன் சொன்னது சற்று நெருடலாக இருக்க அன்றிரவு முழுவதும் உறக்கமின்றி தவித்தாள் மிருதுளா.

நவீன் மிருதுளாவிடம் அவன் வரும் அன்றைய தினம் மாலை அவன் வீட்டுக்குச் செல்லும் படி கூறியதை பர்வதத்திடம் தெரிவித்தாள் மிருதுளா. அதற்கு பர்வதத்திடமிருந்து எந்த வித ரியாக்ஷனும் வரவில்லை. வெரும் “ம்…ம்” மட்டும் பதிலாக வந்ததும் நவீன் ஏதாவது சொல்லியிருப்பார் என்று நினைத்துக் கொண்டாள் மிருதுளா. நாட்கள் ஓடின. நவீன் வரும் நாள் வந்தது.

மிருதுளாவையும் சக்தியையும் பர்வதம் ஈஸ்வரன் வீட்டுக்கு அனுப்பும் முன் குழந்தைக்காக வாங்கிய செயின், மோதிரம், கொலுசு, அரைஞாண் என்று அனைத்தையும் போட்டு அழகுப்பார்த்தார்கள் அம்புஜமும், ராமானுஜமும், வேனுவும். பின் அவர்கள் வீட்டுக்குச் செல்ல வாடகைக் காரை வரவழைத்து அதில் அனைவரும் ஏறிச் சென்றனர். மாலை ஆறரை மணிக்கு பர்வதம் வீட்டுக்குச் சென்றனர். காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது அம்புஜம் மிருதுளாவிடம்

“மிருது வண்டிலேந்து இறங்கினதும் வாசலில் நில்லு உங்க மாமியார் உனக்கும் குழந்தைக்கும் ஆரத்தி எடுத்ததுக்கப்புறம் தான் நீ ஆத்துக்குள்ளேயே போகணும் சரியா”

“யாரு என் மாமியார் எடுப்பாளா? அட போமா…சரி சரி நான் வெயிட் பண்ணறேன் ஆனா நீ அவாகிட்டேருந்து ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணற …ஏமாந்து தான் போகப்போற!!”

கார் பர்வதம் ஈஸ்வரன் கோட்டைமுன்(ஈஸ்வரன் அப்படிச் சொல்லித் தானே மிருதுளாவை திட்டித் துரத்தி விட்டனர்) நின்றது. அங்கே பர்வதம் அக்காள் ரமணியும் இருந்தார். உள்ளேருந்து எட்டிப் பார்த்தப் பர்வதம் மீண்டும் உள்ளே சென்றாள். அதைப் பார்த்த மிருதுளா தன் மாமியார் தனக்கில்லாவிட்டாலும் தன் பேத்திக்காக ஆரத்தி கரைக்கச் சென்றுள்ளார் என்று எண்ணி வாசலில் காத்திருந்தாள். எவருமே வரவில்லை. ரமணி உள்ளேருந்து வந்து வந்தவர்களை

“வாங்கோ வாங்கோ உள்ளே வாங்கோ”

என்றழைத்தார். அப்போது அவரிடம் அம்புஜம்

“என்ன ரமணி மாமி மொதோ மொதோ அவா குடும்ப வாரிசைத் தூக்கிண்டு ஆத்துக்கு வந்திருக்கா ஒரு ஆரத்திக் கூட எடுக்காம இப்படி கூப்பிடறேளே!!”

“என்னதுக்கு மாமி இப்போ வீண் பிரச்சினை. நான் பர்வதத்திடம் ஆரத்தி ரெடி பண்ணச் சொன்னேன்…அவ மறந்துட்டாளாம். பேசாம அப்படியே விடறதுதான் இப்போதைக்கு நல்லது மாமி. மிருதுளா நீ பகவானை நன்னா மனசுல வேண்டிண்டு குழந்தையோட உள்ளே வாமா”

என்று கூறியதும் மிருதுளா தன் அம்மாவைப் பார்த்து

“நான் தான் சொன்னேன்னே நீ ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணறேன்னு…அப்போ முறைச்சையே இப்போ என்ன சொல்லற?”

“இப்படியும் மனுஷா இருப்பானு இப்பத் தான் மா நானே தெரிஞ்சுக்கறேன். சரி சரி வா என்ன செய்ய”

என அனைவரும் உள்ளேச் சென்றதும் ஈஸ்வரன் அவர்களை “வாங்கோ வாங்கோ” என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு ரூமுக்குள் சென்று விட்டார். பர்வதம் வந்தவர்களிடம்

“காபி போடட்டுமா?”

“இல்லை மாமி காபி டிபன் எல்லாம் சாப்டுட்டு தான் ஆத்தேந்தே கிளம்பினோம். பரவாயில்லை”

குழந்தையை ரமணி சற்று நேரம் கொஞ்சினாள். பிறகு ஈஸ்வரன் சற்று நேரம் தரையில் படுக்க வைத்திருந்த சக்தியை கொஞ்சினார். வேறு எவரும் அந்த பச்சக் குழந்தையை தூக்கவோ கொஞ்சவோ செய்யவில்லை. மணி ஒரு ஏழரை ஆனதும் ராமானுஜம் அம்புஜத்திடம் கிளம்பலாமா என்று கேட்டார். அதைக் கேட்டதும் மிருதுளாவுக்கு ஏதோ ஒரு வகையான பதற்றம் தொற்றிக் கொண்டது உடனே அவள் அம்புஜத்திடம்

“அம்மா இன்னும் ஒரு மணி நேரத்துல நவீ வந்திடுவார் அதுவரைக்கும் இருந்துட்டுப் போங்கோளேன்”

“இல்ல மிருது அப்பா சொல்லறா மாதிரி நாங்க கிளம்பறோம். பர்வதம் மாமி, ரமணி மாமி நாங்க போயிட்டு வரோம். ஈஸ்வரன் மாமாட்டையும் சொல்லிடுங்கோ. மாமா ஏதோ வேலையா இருக்கார் போல”

“ம்..ம்..சரி”

என்ற பதிலுடன் வெளியே சென்றனர் மிருதுளாவின் குடும்பத்தினர். வாசல் வரைச் சென்ற மிருதுளா தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு

“அம்மா நவீ வரும்வரை இருந்துட்டுப் போகலாம் இல்லையா. அவர் வரத்துக்கு இன்னும் ஒன் அவர் ஆகும் அதுவரைக்கும் நானும் என் பொண்ணும் அம்போன்னு உட்கார்ந்திருக்கணும். நீ பார்த்தே இல்ல. ப்ளீஸ் மா”

“இதோ பாரு மிருது இது உன் வீடு நீ ஜம்முனு இங்க இரு. யாருக்கும் பயப்படாதே. நீ தப்பு பண்ணாத வரை எவருக்கும் நீ பயப்படாம பேசு. நீயே பார்த்த தானே!!!ஏதோ வரக்கூடாதவா வந்திருக்கறா மாதிரியே எங்களை டிரீட் பண்ணறதை. இதுக்கப்புறமும் நாங்க ஏன் உட்காரணும் சொல்லு. அதுதான் நான் இன்னும் மூணு நாள்ல உன் கூட வரப்போறேனே பின்ன என்ன. எதற்கும் கவலைப் படாதே சரியா. உன்னையும் உன் குழந்தையையும் பத்திரமா பார்த்துக்கோ. பை மா மிருது”

என்று மதியாதவர் வீட்டில் தன் பெண்ணுக்காக சற்று நேரமிருந்துவிட்டு பேத்தியைப் பிரிய மனமில்லாமல் காரில் ஏறிச் சென்றனர் ராமானுஜமும், அம்புஜமும், வேனுவும். மிருதுளா அவர்களுக்கு பை சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றிருந்தாள். அவளைக் கண்ட பக்கத்து வீட்டுப் பெண்.

“ஹேய் மிருதுளா எப்போ வந்தே? பாப்பா எப்படி இருக்கு?”

“ஆங் இப்போ கொஞ்சம் முன்னாடி தான் வந்தேன். ம்…பாப்பா நல்லா இருக்கா”

“பாப்பாவைப் பார்க்க இதோ வரேன்”

என கூறி அக்கம் பக்கத்தினர் ஒரு நாலைந்து பெண்கள் வந்து குழந்தையைப் பார்த்து, சற்று நேரம் கொஞ்சினர். அதில் ஒருத்தி மிருதுளாவிடம்

“ஏன் மிருதுளா உன் பாப்பாவுக்கு ஆம்பள பேரு வச்சிருக்கையாமே!!”

“யாராவது பொண்ணுக்கு பையன் பேரு வைப்பாங்களாங்க?”

“அதுனால தான் நானும் கேட்கறேன்”

“ஏங்க சக்தி ஸ்ரீ பெயர் ஆண் குழந்தைப் பெயரா நீங்களே சொல்லுங்க”

“இல்லையே சக்தி அம்மனோட பெயராச்சே!!! ஏன் பர்வதம் மாமி நீ ஏன் பின்ன அப்படி சொன்னீங்க. உங்க மருமக அம்மன் பெயரை தானே வச்சிருக்கு.”

என்றதும் பர்வதம் முனுமுனுத்துக் கொண்டே உள்ளேச் சென்றாள். வந்தவர்கள் குழந்தையைக் கொஞ்சி விட்டுச்சென்றனர். அதில் சற்று நேரத்தைக் கழித்தாள் மிருதுளா.

அவர்கள் சென்றதும் பர்வதம் அனைவரையும் சாப்பிடக் கூப்பிட்டாள். அதே கூட்டு, ரசம் பொறியல் மதியம் செய்ததை சூடு செய்து சாதம் மட்டும் செய்திருந்தாள். ஈஸ்வரன், பவின், ப்ரவின் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்ததும் மிருதுளா குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ரூமில் ரமணி பெரியம்மாவுடன் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தாள் அப்போது ரமணியிடம்

“பெரியம்மா நீங்க சொல்லுங்கோ சக்தி ஸ்ரீ ங்கற பெயர் ஆண் குழந்தைப் பெயரா? ஏன் இப்படி என் குழந்தையையும் படுத்த ஆரம்பிக்கறான்னே தெரியலை!!”

“சரி சரி விடு மா மிருது. அவ அப்படி தான். என்ன செய்ய? தன்னாலும் தெரியாது!! சொன்னாலும் கேட்கமாட்டா? நவீன் வர்றதுக்கு நேரமாச்சு கண்ணைத் தொடச்சுக்கோ. அவன் வர்ற நேரத்துல என்னதுக்கு அழுதுண்டிருக்க?”

“மனசு வலிக்கறது பெரியம்மா. இவ்வளவு நாள் என்னை வாயில் போட்டு வறுத்தெடுத்தா. இப்போ இந்த பிஞ்சுக் குழந்தையை வறுக்க ஆரம்பிச்சிருக்கா. இரண்டே நாள் தானே ஓடிப் போயிடணும்”

“ம்…சரி சரி இதுனாலப் பிரச்சினை வேண்டாமே மிருது”

“அப்படி நினைச்சு ஒதுங்க ஒதுங்க அவா ரொம்ப பண்ணறா பெரியம்மா!! சரி சாரி உங்ககிட்ட சொல்லி புலம்பி உங்களையும் ஏன் கஷ்டப் படுத்தறேனோ தெரியலை. ஆட்டோ சத்தம் கேட்கறதே. நவீனா!!! சக்திக் குட்டி அப்பா வந்தாச்சுப் போலத் தெரியறது வா போய்ப் பார்ப்போம்”

என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஹாலுக்குச் சென்றாள் மிருதுளா. ஆனால் நவீன் வரவில்லை. அது பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த ஆட்டோ. ஏமாந்துப் போன மிருதுளா குழந்தையை தரையில் ஒரு பெட்ஷீட் விரித்துப் படுக்க வைத்தாள். அப்போது ஈஸ்வரன், பவின், ப்ரவின் சாப்பிட்டு எழுந்ததும் பர்வதம் தன் அக்காள் ரமணியை சாப்பிட அழைத்தாள். ரமணி ஹாலுக்கு வந்து மிருதுளாவையும் அவர்களுடன் சாப்பிட அழைத்தாள். அதற்கு மிருதுளா தான் நவீனுடன் சாப்பிடுவதாக கூறினாள். பின் அக்காவும் தங்கையுமாக சாப்பிட்டு எழுந்தனர்.

அவர்கள் சாப்பிட்டு எழுந்ததும் நவீன் வந்தான். ஹாலில் படுத்திருந்த தன் குழந்தையை மூன்று மாதங்களுக்குப் பிறகு பார்த்ததும் சந்தோஷத்தில்

“ஹேய் சக்திக் குட்டி. ஏய் என்ன இது மிருது? நான் பார்த்துட்டுப் போகும் போது குட்டியா இத்தணுண்டு இருந்தது இப்போ என்ன இப்படி இருக்கா. “

“டேய் நவீ நீ பார்த்துட்டு போனது மூணு மாசம் முன்னாடி. குழந்தை வளராதாடா?”

“ஹாய் பெரியம்மா சாரி நான் உங்களை கவனிக்கலை. எப்படி இருக்கேங்கள்?”

“நான் நல்லா இருக்கேன் பா. சரி நீ போய் குளிச்சிட்டு வா. மிருது உன் கூட சாப்பிடுவதற்காகக் காத்துண்டிருக்கா.”

“நீங்க எல்லாரும் சாப்பிட்டாச்சா?”

“இப்பத்தான் நாங்க எல்லாரும் சாப்பிட்டு எழுந்தோம் நீ வந்த”

“என்னடா நவீன் எப்படி இருக்க?”

என்று உள்ரூமிலிருந்து வந்து ஈஸ்வரன் கேட்டார் அதற்கு நவீன்

“ஆங் நல்லா இருக்கேன். இதோ குளிச்சிட்டு வந்துடறேன்”

என வேகமாக குளித்துவிட்டு வந்ததும் தங்கள் பக்கத்திலேயே சக்தியைப் படுக்கப் போட்டுக் கொண்டு சாப்பிட அமர்ந்தனர். வழக்கம் போல பர்வதம் போதிய அளவு செய்யவில்லை என்பதை அறிந்த மிருதுளா நவீனுக்கு முதலிலேயே நிறையப் பரிமாறினாள். பின் இருந்ததைச் சாப்பிட்டு எழுந்தாள். குழந்தையைக் கண்ட சந்தோஷத்தில் நவீன் அதை எல்லாம் கவனிக்கவில்லை. மிருதுளாவும் அது தான் தன் மாமியாரின் குணமென்றுணர்ந்ததால் அதைப் பெரிதாக்கவும் இல்லை.

மறுநாள் காலை பெரியம்மாவை வீட்டில் கொண்டு போய் விட்டு வருவதற்கு நவீன் சென்றான். பவின், ப்ரவின் காலேஜ் சென்றனர். ஈஸ்வரன் டிபன் அருந்தியதும் உள்ரூமிற்குள் சென்று படுத்துக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். மிருதுளா குளிக்கச் செல்ல வேண்டும் என்பதால் குழந்தையை ஹாலில் படுக்க வைத்துவிட்டு கிட்சனிலிருந்த பர்வதத்திடம்

“அம்மா சக்தியைப் பார்த்துக் கோங்கோ. ஒரு நிமிஷத்துல குளிச்சிட்டு வந்துடறேன்”

என்று கூறி பாத்ரூமிற்குள் சென்று தன் துணிகளை அவிழ்த்து கதவின் மேல் போட்டள். அதை அடுப்படி ஜன்னலில் இருந்து பார்த்த பர்வதம் சத்தமாக

“ஏய் உன் குழந்தை அழறது வந்து என்னன்னு பாரு”

என்றாள். உடனே மிருதுளா கழற்றிய ஆடையை மீண்டும் போட்டுக் கொண்டு ஓடி வந்துப் பார்த்தாள்.. குழந்தை சமத்தாக படுத்துக் கொண்டு கால் கையை ஆட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் மிருதுளா பர்வதத்திடம்

“எங்கமா அழறா? ப்ளீஸ் ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன்”

என்று கூறி மீண்டும் பாத்ரூம் சென்று வேக வேகமாக குளித்துக் கொண்டிருக்கும் போதே சக்தியின் அழுகுரல் கேட்டது. பாத்ரூமில் அவள் கழற்றிய துணிமணிகளை அப்படியே அங்கேயே போட்டுவிட்டு வேறு உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே ஓடி வந்தாள் மிருதுளா. ஹாலுக்குல் சென்றுப் பார்த்தாள் குழந்தை மலம் கழித்து அதிலேயே கை காலை அசைத்து உதவிக்காக அழுதுக் கொண்டிருந்தது. பர்வதம் அந்த குழந்தையின் அழுகுரல் கேட்காததைப் போலவே மரம் போல் அடுப்படி வாசலில் நின்றிருந்தாள். அதைப் பார்த்த மிருதுளாவுக்கு கோபம் வந்தது …குழந்தையை தூக்கி அலம்பி துடைத்து சுத்தம் செய்துக் கொண்டே பர்வதத்திடம் கோபமாக

“குழந்தை மலம் போயிட்டு அதுலேயே படுத்திண்டிருக்கு கொஞ்சம் நீங்க தூக்கி அலம்பி விட்டிருக்கலாம் இல்லையா மா!! நான் உங்ககிட்ட சொல்லிட்டுத்தானே குளிக்கப் போனேன்!! இப்படி அழறக் குழந்தையை மரம் மாதிரி நின்னுண்டு பார்த்துண்டு இருக்கேங்களே!!!”

கேட்டாள். அதற்கு பர்வதம்

“உன் குழந்தை நீ தான் பார்த்துக்கணும். எனக்கு அடுப்படில வேலையிருக்கு. நான் இந்த வேலை எல்லாம் பார்த்தா அப்புறம் யாரு சமைக்கறதாம்?”

“இதுக்கு என்ன ஒரு பத்து நிமிஷமாச்சா அந்த பத்து நிமிஷத்துல என்னத்த அப்படி சமையல் செய்துடப் போறேங்களாம்?…விடுங்கோ என் தப்பு தான். நவீன் வந்துட்டு நான் குளிக்கப் போயிருந்தா என் குழந்தை இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டா”

“உம் …ஹூம்…”

என்று கழுத்தை வெட்டிக் கொண்டுச் சென்றாள் பர்வதம். அவர்களின் அந்த ஒட்டுதல் இல்லாத பழக்கம் மிருதுளாவின் மனதில் சந்தேகத்தைக் கிளப்பியது.

“என்னத் தான் மருமகள் மேலே அல்லது மகன் மேலே கோபம் இருந்தாலும் அதெல்லாம் பேரக்குழந்தையைக் கண்டா மாயமா மறைந்திடும்ன்னு படிச்சிருக்கேன் சினிமாவுல பார்த்திருக்கேன் ஆனா இங்கே என்னடான்னா இப்பத் தான் இன்னும் உக்கிரமாகியிருக்கு”

என தனக்குத் தானே பேசிக் கொண்டே அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு தன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்ததில் பாத்ரூமில் கழற்றிப் போட்ட துணிமணியை மறந்துப் போனாள் மிருதுளா. அதை பார்த்த பர்வதம் ஹாலுக்கு வந்து மிருதுளாவிடம்…

“துணியை எல்லாம் பாத்ரூம்ல அப்படி அப்படியே கழட்டிப் போட்டா யாரு அதை எல்லாம் எடுத்து தோய்ப்பாளாம்? பாத்ரூமே அலங்கோலமா கிடக்கு”

அலுத்துக் கொண்டே சொல்ல அதற்கு மிருதுளா

“இந்த வேலையில அதை நான் மறந்தேப் போயிட்டேன் மா சாரி. இதோ போய் எடுத்துடறேன்”

என்று குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு பாத்ரூமுக்குச் சென்று நவீன் மற்றும் அவளின் துணிகளை ஊற வைத்து விட்டு வந்து மீண்டும் குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் போது நவீன் வந்தான். அவனிடம் குழந்தையைப் பார்த்துக்கச் சொல்லிவிட்டு துணிகளை எல்லாம் தோய்த்து மாடிக்குச் சென்று காய வைத்துவிட்டு வந்தாள் மிருதுளா. இப்படியே மூன்று நாட்கள் ஓடியது. நான்காவது நாள் குஜராத்துக்கு கிளம்பும் நாள் அன்று காலை மும்முரமாக கிளம்பினர் நவீனும் மிருதுளாவும். குழந்தைக்கு வேண்டியதை எல்லாம் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்துக் கொண்டாள் மிருதுளா. பின் அவளும் கிளம்பி கீழே வந்தாள். நவீன் பெட்டிகளை எடுத்து வந்தான். இருவரும் டிபன் அருந்தியிருக்கவில்லை. அவர்கள் கிளம்ப ஒரு மணிநேரம் இருந்தது. ராமானுஜமும் அம்புஜமும் காரில் வருவதாகவும் அதே காரில் நவீனையும் மிருதுளாவையும் குழந்தையுடன் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதாகவும் ஃபோனில் முன்தினம் மாலை கூறியிருந்ததால் நவீனும் மிருதுளாவும் ரெடியாகிக் காத்திருந்தனர்.

அப்போது ஈஸ்வரன் நவீனிடம்

“நீ எங்க கிட்ட என்ன சொன்ன?”

“என்ன சொன்னேன்?”

“உனக்கு லீவு கிடைக்கலை…இப்போ விட்டா அப்புறம் உன்னால வந்து உன் பொண்டாட்டியையும் புள்ளையையும் கூட்டிண்டு போக முடியாதுன்னு தெரிஞ்சதும் திடுதிப்புன்னு டிக்கெட் புக் பண்ணினேன் அதுனால் நாளன்னைக்கு வருவேன்னு தானே ஃபோன்ல சொன்ன?”

“ஆமாம் அதுக்கென்ன இப்போ?”

“அப்புறம் எப்படி நீ திடுதிப்புன்னு வர்றது உன் பொண்டாட்டி ஆத்துல எலலாருக்கும் தெரிஞ்சிருக்கு அவாளும் கரெக்ட்டா வந்தாளாம்?”

மிருதுளா ஏற்கனவே சொன்னது நவீனுக்கு தெரியாததால் முழித்தான். அப்போது மிருதுளா தன் மாமனாரிடம்

“அவர் சொல்லாட்டா என்ன பா நான் தான் உங்ககிட்ட ஃபோன்ல சொன்னேனே”

“எப்போ சொன்ன நீ இங்க வர்றதுக்கு இரண்டு நாள் முன்னாடி தானே சொன்ன!!! ஆனா நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து நல்லா பொய் சொல்லிருக்கேங்கள்ன்னு நவீனோட பர்ஸுல இருந்த இந்த டிக்கெட் காட்டிக் கொடுத்துடுத்தே!!! இவன் போன மாசமே டிக்கெட் புக் பண்ணிருக்கான் அது உனக்கும் தெரிஞ்சிருக்கு ஆனா ரெண்டு பேரும் போன வாரம் தான் எங்க கிட்ட சொல்லிருக்கேங்கள்!!! இது என்ன பித்தலாட்டம்?”

“என் பர்ஸுலேந்து எல்லாத்தையும் திறந்து பார்த்தேயே அப்பவே கேட்கறதுக்கு என்னவாம் ஏன் கிளம்பும் போது கேட்கற?”

“ஆமாம் வந்துட்டான் சத்தியவான் கேள்விக் கேட்டுண்டு…போடா போடா!!! உன் பொண்டாட்டி உன்னை மதிக்கவேயில்லை அது தெரியுமா உனக்கு…அது தெரியாம வந்துட்டான் என்னைக் கேள்விக் கேட்க!!”

என்று கூறியதும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது உடனே அவள் தன் மாமனாரிடம்

“நான் என்ன உங்க புள்ளையை சாரி என் புருஷனை மதிக்காம நடந்துண்டேன். இது என்ன புது கதையா இருக்கு?”

“மிருது நீ சும்மா இரு. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு அப்புறம் இந்த விஷயத்தைப் பத்தி பேசலாம். நீ என் பர்ஸை எடுத்துப் பார்த்திருக்க ஏன் நீ அப்பவே கேட்கலை?”

ஆனால் நவீன் சொன்னதை காதில் வாங்காத மாதிரியே மிருதுளாவிடம் எகிறிக்கொண்டுப் போனார் ஈஸ்வரன்

“புது கதை இல்லமா…இது பல மாசத்தோட பழைய கதை. பர்வதம் பக்கத்து வீட்டுப் பாட்டியோட உன்னைப் பார்க்க வந்தப்போ நீ சொன்ன கதை”

“நான் என்ன அப்படி கதை சொன்னேன்?”

“ம்….நீ தான் சொன்னயேடி…..உன் புருஷனுக்கு சம்பாதிக்க வக்கில்லை அதுனால நீயும் வேலைக்கு போக தான் வேணும்ன்னு!!! பெரிசா அம்மையும் பொண்ணுமா அந்த பாட்டிக்கிட்ட அலுத்துக்கிண்டேங்களே டீ”

என்று பரவதம் நடக்காததை நடந்ததாக சொன்னதும் மிருதுளாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துப் போனாள். அவள் மீண்டும் சுயநினைவுக்கு வருவதற்குள் பர்வதம் இல்லாததையும் பொல்லாததையும் மிருதுளாவும் அவள் அம்மாவும் சொன்னதாக அடுக்கிக் கொண்டே செல்ல சட்டென சுயநினைவுக்கு வந்த மிருதுளா நவீனிடம்….

“நம்ம குழந்தை மேல சத்தியமா நானோ என் அம்மாவோ இவா ரெண்டு பேரும் சொல்லறது போல ஒரு வார்த்தைக்கூடச் சொல்லலை. என் புருஷனை நானே மூணாம் மனுஷாள்ட்ட விட்டுக் கொடுப்பேனா!!! இதை என்னால் நிரூபிக்க முடியும். இப்பவே நான் பக்கத்தாத்துப் பாட்டியை இங்கே கூட்டிண்டு வரேன் அவாகிட்ட நான் என்ன பேசினேன்…என் அம்மா என்ன பேசினா. அன்னைக்கு நாங்க மூணு பேருமா என்ன பேசினோம்ன்னு அவாகிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கோங்கோ!!!”

“இதோ பாரு டீ ரொம்ப நடிக்காத!!! இப்போ போய் அவாகிட்ட இங்க நடந்ததை எல்லாம் சொல்லி எங்களை கேவலப்பட வைக்கத் தானே இதை செய்ய துடிக்கற?”

என்று பர்வதம் சொன்னதும் மிருதுளா கண்களிலிருந்து கடகடவென கண்ணீர் உருண்டோடியது. பாட்டியுடன் பர்வதம் தன் வீட்டுக்கு வந்த வருகையின் காரணம் இப்போது தெளிவாக புரிந்தது. உடனே அவள்

“அம்மா நீங்க எங்க மேல போடறது அபாண்டமான பழி. அதை நானோ இல்லை என் அம்மாவோ ஏத்துக்கணம்ன்னு இல்லை அதுனால ப்ரூவ் பண்ணிட்டா எல்லாருக்கும் நல்லதில்லையா?”

“இதோ ஆரம்பிச்சுட்டா கண்ணீர் நாடகத்தை!!! ஆமாம் அம்மாவும் பொண்ணும் அன்னைக்கு பேசி எங்க மானத்தை வாங்கினது பத்தாதுன்னு இன்னைக்கும் கிளம்பிட்டயா?”

“அப்பா ப்ளீஸ் அன்னைக்கு நீங்க அங்க இருக்கலை அதுனால ரெண்டு பக்கமும் விசாரிச்சு யாரு பக்கம் தப்பிருக்குன்னு தெரிஞ்சிண்டுட்டு பேசுங்கோ அது தான் பெரியவாளுக்கு அழகு…இருங்கோ நான் போய் பாட்டியை அழைச்சுண்டு வரேன்”

“நீ ஒண்ணும் யாரையும் இங்கே கூட்டிண்டு வரண்டாம். டேய் இப்போ புரிஞ்சுதாடா உன் பொண்டாட்டி லட்சணம்”

குழந்தையுடன் ஊருக்கு சந்தோஷமாக சென்றுவாருங்கள் என்று ஆசிர்வதித்து அனுப்பவேண்டிய பெற்றவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினையை வரவழைத்து நிம்மியின்றி குழப்பியனுப்ப திட்டம் தீட்டி அதை செயல்படுத்தவும் செய்துள்ளனர். புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என்பார் அதுபோல மூன்று நாட்கள் உருமிக்கொண்டே இருந்த பர்வதமும் ஈஸ்வரனும் ஊருக்குக் கிளம்பியிருக்கும் மகனிடமும் மருமகளிடமும் மல்லுக்கு நின்று பொய்களை மூட்டையிலிருந்து அவிழ்த்து விட்டனர். இந்த பொய்களை நம்புவானா நவீன்? பாட்டியை அழைத்து வர மிருதுளாவை விட்டார்களா பர்வதீஸ்வரன்? மூத்த தம்பதியர் நினைத்தது பலிக்குமா?

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s