மூன்று நாட்கள் கடந்தது. அன்று மாலை ஐந்து மணிக்கு மிருதுளாவையும் குழந்தையையும் நார்மல் வார்டுக்கு மாற்றப் போவதாக டாக்டர் காலையிலேயே சொல்லியிருந்தார். நவீன், அம்புஜம், ராமானுஜம் மூவரும் நான்கு மணிக்கெல்லாம் ஹாஸ்பிடல் சென்று காத்திருந்தனர். ஏனெனில் விஸிடிங் அவர்ஸ் ஐந்து மணிக்கு தான் ஆரம்பமாகும். மணி ஐந்தடித்ததும் மூவரும் வேகமாக மிருதுளாவைக் காணச் சென்றனர். அவர்கள் அங்கே மிருதுளா குழந்தையுடன் படுத்திருந்ததைப் பார்த்து அவளருகில் சென்றனர். மிருதுளாவும் அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் வாங்கோ வாங்கோ என்றழைத்தாள். அம்புஜம் மிருதுளாவிடம் நலன் விசாரித்து விட்டு குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தாள். நவீன் மிருதுளா அருகில் சென்று அவளின் வலது கையைப் பிடித்துக் கொண்டு தடவிக் கொடுத்து
“ரொம்ப பேயின் இருக்கா மிருது”
“பின்ன வலி இல்லாம குழந்தைப் பெத்துக்க முடியுமா நவீ. இட்ஸ் ஓகே கொஞ்ச நாள்ல இந்த வலி எல்லாம் காணாம போயிடும். நீங்க எப்படி இருக்கேங்கள்? மொதோ நாள் ஏன் என்னை விட்டுட்டுப் போனேங்கள்? நான் உங்களைப் பார்க்காம எவ்வளவு தவிச்சேன் தெரியுமா!!! அப்படி என்ன என் டெலிவரியை விட முக்கியமான வேலையாம்?”
“ஹேய் சாரி மிருது. ஏதோ புத்திக் கெட்டுப் போய் அப்படி நடந்துண்டுட்டேன். ஆனா நைட் பத்து மணிக்கெல்லாம் இங்கேயே வந்துட்டேன் தெரியுமா!!! நானும் உன்னை பார்க்க வெளியே தவிச்சுண்டு இருந்தேன். டாக்டர் கிட்ட உன்னைப் பார்க்கலாமான்னு கேட்டேன் அவங்க உன்னை ஆப்ரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டுப் போகும்போது பார்த்துக்க சொல்லிட்டாங்க. ஆப்ரேஷன் முடிஞ்சு நம்ம குழந்தைய காட்டியதும் மனசுக்கு சந்தோஷமாச்சு ஆனா அதுக்கப்புறம் ஆடாம அசையாம கிடந்த உன்னைப் பார்த்ததும் நான் பயந்துட்டேன். இப்போ தான் என் உயிர் வந்தா மாதிரி இருக்கு தெரியுமா!!!!”
“ஆமாம் அப்போ போயிட்டு!!! இப்போ வந்து சூப்பரா கதைச் சொல்லறேங்களே”
“ஏய் உண்மைப் பா”
“சும்மா விளையாண்டேன் நவீ. ஏய் வேனு வா வா வா”
“ஹாய் மிருதுக்கா!! ஹாய் அத்திம்ஸ்!!! அம்மா குழந்தையை என் கிட்ட தாமா”
“முதல்ல இங்க உட்காரு. இந்தா குழந்தை. பத்திரம் வேனு. கழுத்துக்கு அடியில் ஒரு கையை வச்சுக்கோ”
“ஓகே மா!!!”
“டேய் வேனு நானே என் குழந்தையை தூக்க பயந்துண்டு சும்மா பார்த்துண்டு இருக்கேன்!!! நீ வந்ததும் ஏதோ பத்து குழந்தைகளைத் தூக்கிய அனுபவசாலி போல டபக்ன்னு தூக்கிண்டுட்டயே”
“அதெல்லாம் அப்படி தான் அத்திம்ஸ்...ஹேய் குட்டிப் பாப்பா”
“எங்கே என்கிட்ட தா நான் கொஞ்சம் தூக்கிப் பார்க்கட்டும்”
என்று நவீன் சொன்னதும் அம்புஜம் வேனுவிடமிருந்து குழந்தையை வாங்கி நவீனிடம் கொடுத்தாள். வேனு அன்று காலேஜ் முடிந்ததும் நேராக ஹாஸ்பிடலுக்கு குழந்தையைக் காண வந்துவிட்டான். சற்று நேரம் நவீன் வைத்துக் கொண்டதும் அம்புஜம்
“குழந்தையை மிருதுளா பக்கத்துல படுக்க வச்சிடுங்கோ ஏன்னா ரொம்ப நேரம் கையில வச்சிண்டோம்னா பிஞ்சு உடம்பில்லையா அதுனால குழந்தைக்கு வலிக்கும்”
நவீனும் தன் குழந்தையை மிருதுளா அருகில் படுக்க வைத்து பார்த்து மகிழ்ந்துக் கொண்டிருந்தான். அப்போது வேனு வீட்டுக்குச் செல்வதாக கூறி வீட்டுச் சாவியை ராமானுஜத்திடமிருந்து வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் வெளியே சைக்கிளை எடுக்கச் சென்றுக்கொண்டிருக்கும் போது மிருதுளாவின் மாமனார் மாமியார் ஆட்டோவில் வந்திறங்குவதைப் பார்த்தான். உடனே
“வாங்கோ மாமா. வாங்கோ மாமி”
“என்ன வேனு உங்க அக்காவையும் அவள் குழந்தையையும் நார்மல் வார்டுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டாளா?”
“ஆங் பண்ணிட்டா மாமா.”
“எங்க இருக்கு அந்த வார்டு?”
“வாங்கோ நான் கூட்டிண்டுப் போறேன்.”
என்று இருவரையும் மிருதுளாவிடம் அழைத்துச் சென்றான். அவர்களைப் பார்த்ததும் மிருதுளா மெல்லிய புன்னகையுடன் வரவேற்றாள். வந்தவர்கள் அவளிடம் நலன் விசாரிக்கவில்லை. ஈஸ்வரன் குழந்தையை ஒரு முறைப் பார்த்துவிட்டு வெளியேச் சென்று அங்கிருந்த பென்ச்சில் அமர்ந்துக் கொண்டார். பர்வதம் குழந்தையை ரொம்ப அசால்டாக தூக்கினாள் அதைப் பார்த்த அம்புஜம்
“மாமி..மாமி…அது பிஞ்சுக் குழந்தை மாமி..மெதுவா தூக்குங்கோ”
“நான் நாலு புள்ளைகளைப் பெத்தவள். எனக்கு தெரியும்”
“மாமி ஆனா என் அக்காவுக்கு இது தான் மொதோ குழந்தை அதனால ப்ளீஸ் மெதுவா பார்த்து”
“ம்…ம்… எல்லாம் எனக்கும் தெரியும்”
என் பேரப்பிள்ளையை கவனமாக தூக்க எனக்குத் தெரியாதா என்று பர்வதம் கேட்டிருந்தா அதில் நியாயம் கடுகளவாவது இருந்திருக்கும் ஆனால் பிள்ளைகளைப் பெற்றதும்… பால் மணம் மாறாத குழந்தையை தன் மாமியாரிடம் விட்டுச் சென்று விட்டு இப்போ நான்கு பிள்ளைகளை வளர்த்தவள் என்று அவள் சொன்னதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள். உடனே நவீன்
“நீ நாலு புள்ளகள் பெத்தவள் தான் அதை யாரும் இங்கே மறுக்கலை அதுக்காக எங்க குழந்தையை இப்படி ரஃப்பா ஹாண்டில் பண்ணாதே”
என நவீன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குழந்தையின் இடது காதை மடித்தாள், வலது காலை சடாரென தூக்கிப் பார்த்தாள். அதைப் பார்த்த வேனு
“மாமி ப்ளீஸ் குழந்தையை என்கிட்ட தந்திடுங்கோ. அது பச்சக் குழந்தை மாமி நீங்க பாட்டுக்கு காத பிடிச்சு திறுவறேங்கள், காலை படக்குன்னு தூக்கறேங்கள்”
“எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்க வேண்டாமா?”
“ஐய்யோ மாமி அதெல்லாம் டாக்டர்ஸ் பார்த்துட்டு தான் நார்மல் வார்டுக்கே அனுப்புவா. அப்படியே ஏதாவது இருந்தா டாக்டர்ஸ் சொல்லியிருப்பா. அம்மா நீ மாமிகிட்ட இருந்து பாப்பாவை வாங்கு”
என்று வேனு பேசியதைப் பார்த்த மிருதுளாவின் மனதில் சந்தோஷம் தாண்டவமாடியது. அம்புஜம் குழந்தையை பர்வதத்திடமிருந்து வாங்கி மிருதுளா அருகில் படுக்க வைத்தாள். குழந்தை வீல் வீல் என அழ ஆரம்பித்தது. பர்வதம் காதைத் திறுவியதில் வலித்ததோ என்னவோ பாவம் அந்த பிஞ்சுக் குழந்தைக்கு!!! அதன் அழுகை நர்ஸ் ரூம் வரை கேட்க உடனே நர்ஸ் ஓடி வந்து குழந்தையைத் தூக்கிப் பார்த்தாள். பின் மிருதுளாவைப் பார்த்து
“மிருதுளா விஸிடர்ஸ் வந்தாலும் குழந்தையை தூக்க விடாதே. ஏன் பாப்பா காது சிவந்திருக்கு?”
“அதுவா சிஸ்டர் இதோ இந்த மாமி தான் எல்லாம் சரியா இருக்கான்னு காதைத் திறுவி டெஸ்ட் பண்ணினாங்க”
“யாரு இவங்க? ஏன் அப்படி செய்ய விட்டிங்க?”
“சிஸ்டர் அவங்க என் அக்காவோட மாமியார்”
“ஏன்மா நீங்களும் புள்ளப் பெத்தவங்க தானே இப்படியா பிஞ்சுக் குழந்தையை காயப்படுத்துவீங்க? நாங்க அதெல்லாம் டெஸ்ட் பண்ணாமயா இப்படி நார்மல் வார்டுக்கு ஷிஃப்ட் பண்ணினோம். மிருதுளா இது மாதிரி எல்லாம் இனி நடக்காம பார்த்துக்கோ இது உன் குழந்தை புரியுதா”
என்று நர்ஸ் கூறிவிட்டுச் சென்றதும், பர்வதம் விருட்டென எழுந்து வெளியே அமர்ந்திருந்து ராமானுஜத்துடன் பேசிக்கொண்டிருந்த ஈஸ்வரனிடம்
“ம்…வாங்கோ நாம போகலாம். எனக்கே புள்ளையப் பார்த்துக்கறதைப் பத்தி மாறி மாறி கிளாஸ் எடுக்கறா!! அவாளாச்சு அவா புள்ளையாச்சு”
என தான் செய்த தவறை சொல்லாமல் அவர்கள் பேசியதைத் தவறென்று சொல்லி கோபித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர் பர்வதீஸ்வரன். பர்வதம் அப்படி சொல்லும் போது, ஈஸ்வரன் அவளிடம் அவர்கள் ஏன் அப்படி பேசினார்கள் என்று கேட்காமல் ஏதோ தன் மனைவிக்கு பெருத்த அவமானம் நேர்ததைப் போல் ராமானுஜத்தைப் பார்த்து முறைத்து விட்டு பர்வதம் பின்னாலேயே சென்றார். உடனே ராமானுஜம் உள்ளேச் சென்று
“ஏய் அம்புஜம் என்ன நடந்தது? ஏன் பர்வதம் மாமி கோபமா வெளியே போறா? அந்த மாமாவும் என்னைப் பார்த்து மொறச்சுட்டுப் போறார்!!! அப்படி என்னதான் நடந்தது?”
வேனு தன் அப்பாவிடம் விவரமாக நடந்தவைகளைக் கூறினான். அம்புஜம் நவீனிடம்
“இதோ பாருங்கோ மாப்ள இங்க நடந்தது எல்லாம் நீங்களும் பார்த்துண்டு தானே இருந்தேங்கள். நீங்க சொல்லுங்கோ எங்க மேல ஏதாவது தப்பிருக்கா?”
“நீங்க கவலைப் படாதீங்கோ. நீங்களும் வேனுவும் பேசியது தப்பேயில்லை. ஜஸ்ட் லீவ் இட்.”
நடந்தவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவுக்கு…. இதை வைத்து இனி என்ன பூகம்பத்தை உருவாக்கப் போகிறாளோ தன் மாமியார் என்ற எண்ணம் பயத்தை உண்டு பண்ணியது. அவளின் முகத்தில் பயம் பளிச்சிட்டது அதை கவனித்த அம்புஜம்
“மிருது நீ இதெல்லாம் மனசுல போட்டு உழப்பிக்காதே. நீ சந்தோஷமா இருக்க வேண்டியத் தருணம் இது. ஏன் உன் முகம் இப்படி இருக்கு? கவலைப் படாதே உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்”
என்று மிருதுளா கையைப்பிடித்துக் கொண்டாள். வேனு உடனே ஒரு ஜோக் சொல்லி தன் அக்காவின் பயத்தைப் போக்கினான். அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர் அப்போ நர்ஸ் வந்து
“உங்க விஸிட்டிங் அவர்ஸ் முடிஞ்சிரிச்சு ப்ளீஸ் எல்லாரும் கிளம்புங்க.”
என்றதும் அனைவரும் எழுந்து புறப்பட்டனர். அம்புஜம், ராமானுஜம், வேனு மூவரும் வெளியே சென்றதும் நவீன் மிருதுளா கையைப் பிடித்துக் கொண்டு
“எதுக்கும் பயப்படாதே நான் இருக்கிறேன். நாளைக்கு வந்து பார்க்கறேன். வரட்டுமா”
என சொல்லிவிட்டு குழந்தையை சற்று நேரம் பார்த்து பின் அங்கிருந்து செல்ல மனமில்லாமல் சென்றான். ஒன்பது நாட்களும் இது தொடர்ந்தது. ஒன்பதாவது நாள் மிருதுளாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். புண்ணியாஜனம் செய்ய வேண்டி அதற்கான வேலைகளில் மும்முரமானார்கள் ராமானுஜமும் அம்புஜமும். நவீன் ஊருக்கு கிளம்ப ஐந்தே நாட்கள் இருந்ததால் புண்ணியாஜனத்தோடு தொட்டில்லிட்டு பெயரும் சூட்டிவிட எல்லா ஏற்பாடுகளும் செய்தனர் மிருதுளா பெற்றோர். அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர்.
இதற்கிடையில் நவீன் தன் துணிமணிகளை எடுத்து வர அவன் வீட்டுக்குச் சென்றான். அங்கே அவனிடம் பர்வதீஸ்வரன்… குழந்தைக்கு பாட்டிப் பெயர் தான் வைக்க வேண்டும் என்று கட்டளையிட அதற்கு நவீன் தன் மனைவியிடம் கலந்தாலோசிக்காமல் சொல்லமுடியாது என்று கூற!!! பெரிய போர்களமானது நவீன் வீடு. அதுவுமில்லாமல் குழந்தைக்கு கிஃப்ட் கொடுப்பதற்காக சில பொருட்கள் எல்லாம் வாங்கித் தரும்படியும் வற்புறுத்தினர். நவீனும் அவர்கள் கொடுத்த லிஸ்ட் படி எல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டு அங்கிருந்து மீண்டும் மிருதுளா வீட்டுக்கு வந்தான். அவனின் முகம் வாடியிருந்ததைப் பார்த்த மிருதுளா
“என்ன நவீன் ரொம்ப டையர்டா இருக்கா?”
“ம்… ஒண்ணுமில்லை மிருது. பாப்பாவைக் குடு”
தன் கோபம், வருத்தம் எல்லாவற்றையும் தன் குழந்தையைக் கொஞ்சியதில் பஞ்சாய் பறந்தது நவீனுக்கு. அன்று மாலை மிருதுளாவிடம் மெல்ல அந்த பெயர் பிரச்சினையைப் பற்றிச் சொன்னான். அதைக் கேட்டதும் மிருதுளா
“என்ன நவீன் நான் தான் பொண்ணு பொறந்தா இந்த பெயர் புள்ள பொறந்தா இந்த பெயர்ன்னு சொன்னேனில்லையா!!! அப்புறம் என்ன இது புதுஸா!!”
“இங்க பாரு மிருது அவா சொன்னதைச் சொன்னேன் அவ்வளவு தான். இட்ஸ் யுவர் விஷ்… ராதர் அவர் விஷ் தான் ஸோ நாம நம்ம குழந்தைக்கு நாம டிசைட் பண்ணி வச்சிருக்கறப் பெயரை தான் வைப்போம் சரியா”
“இது சரியான தீப்பு நாட்டாமை அவர்களே”
பதினோராவது நாள் புண்ணியாஜனம் வந்தது. ராமானுஜம், அம்புஜம் அழைப்புவிடுத்திருந்த அனைவரும் வந்தனர். அன்று நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்திருந்தனர். மறுநாள் குழந்தைக்கு நாமகரணம் செய்து தொட்டிலிட்டனர். அதற்கு அம்புஜமும் ராமானுஜமும் அனைவரையும் அழைத்திருந்தனர் . பர்வதம் தன் பக்கத்து வீட்டு சிறுவனைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தாள். அவள் அனைவர் முன்னிலையில் மிருதுளா கையில் ஒரு பையைக் கொடுத்து
“இந்தா இதில் குழந்தைக்கு வேண்டிய பவுடர், ஆயில் என எல்லாப் பொருட்களும் இருக்கு. குழந்தைக்காக நாங்க வாங்கிண்டு வந்தோம் உள்ளே வச்சுக்கோ”
என்று கொடுத்தாள். மிருதுளா நவீனிடம் கண்ணால் அது தான் அவன் வாங்கியதா என்று கேட்க அவனும் ஆம் என்று கண்ணசைத்தான். மிருதுளா அதை வாங்கி உள்ளே வைத்தாள். பர்வதமும் மிருதுளா பின்னாலேயே சென்று
“என்ன !! குழந்தைக்கு என் பெயர் தானே வைக்கப் போறேங்கள்?”
“மா. நானும் நவீனுமா பல நாட்கள் யோசித்து ஒரு பெயரை செலக்ட் பண்ணி வச்சிருக்கோம். அதைத் தான் வைக்கப் போறோம்”
“அப்போ என் பெயர் வைக்கப் போறதில்லை தானே….ம்…ம்..உன் இஷ்டத்துக்கு ஆடு”
என்று கூறி மிருதுளாவை சங்கடப்படுத்தினாள் பர்வதம். பெண் பார்க்கும் விசேஷத்திலிருந்து ஒவ்வொரு நல்ல நாட்களிலும் மிருதுளாவை நிம்மதி இழக்கச் செய்வதே குறிக்கோளாக கொண்டு அதை சிறப்பாக செயல்படுத்தியும் வந்தாள் பர்வதம்.
பூஜைகள் துவங்கின. குழந்தைக்கு என்ன பெயரோ அதை மூன்று முறை குழந்தைக்காதில் சொல்லும் படி சாஸ்த்திரிகள் சொல்ல நவீனும் மிருதுளாவுமாக சேர்ந்து சக்தி ஸ்ரீ, சக்தி ஸ்ரீ, சக்தி ஸ்ரீ என்று மூன்று முறை சொன்னார்கள். அதைக் கேட்டதும் பர்வதம் தன் சொந்தங்களிடம்
“பாருங்கோளேன் பொண் குழந்தைக்கு ஆம்பள பெயரை வைக்கிறா? நாம சொன்னா கேட்டாதானே!!!”
என்று சம்மந்தமே இல்லாமல் மெல்ல முனுமுத்துக் கொண்டே இருந்தாள். பின் குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்தனர் அப்போது பரவதம் குழந்தைக் கையில் தங்க வளையலை மாட்டிவிட்டாள். ஃபங்ஷன் நல்ல படியா முடிந்ததும். சாப்பாடு பந்தி ஆரம்பமானது. முதல் இரண்டு பந்தியிலேயே நவீனின் குடும்பத்தினர் சாப்பிட்டு எழுந்தனர். அதன் பின் மிருதுளா குடும்பத்தினர் சாப்பிட அமர்ந்தார்கள். அது தான் கடைசிப் பந்தி என்பதால் அம்புஜத்தையும் மிருதுளாவையும் அமரச்சொன்னார்கள் சொந்தங்கள். நவீன், வேனு, ராமானுஜமும் அந்த பந்தியில் அமர்ந்திருந்தனர். அதனால் குழந்தையைப் பார்த்துக்க வேண்டுமென்று மிருதுளாவை முதலில் சாப்பிட்டு வரும்படிச் சொன்னாள் அம்புஜம். அதைக் கேட்ட அம்புஜத்தின் ஓர்பிடி
“என்ன மன்னி? மிருதுளா மாமியார் சாப்டாச்சே அவாகிட்ட குழந்தையைப் பார்த்துக்கச் சொல்லிட்டு நீங்களும் எங்க கூடவே உட்கார்ந்து சாப்பிடுங்கோ வாங்கோ. மணி இப்பவே மூணாச்சு”
என்றாள். அதுவும் நல்ல யோசனை தான் என்று பர்வதத்திடம் சென்று
“மாமி குழந்தையைப் பார்த்துக்கோங்கோ நானும் மிருதுவும் சாப்பிட்டுட்டு வந்திடறோம். இப்பவே ரொம்ப நாழி ஆயிடுத்து”
“ம் ….ம்..”
என்று பர்வதம் சொன்னதும் அவளருகில் குழந்தையை படுக்க வைத்து விட்டு சாப்பிடச் சென்றாள் அம்புஜம். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் பர்வதம் தன் பக்கத்து வீட்டு சிறுவனுடன் மாடிக்கு வந்து “கொஞ்சம் பாயசம் தாங்கோ” என்று வாங்கி அதை அந்த பையனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் மிருதுளா
“அம்மா இவா இங்க வந்துட்டா? அப்போ நம்ம சக்திக்கிட்ட யாரிருக்கா?”
என்று பதறியப் படி பாதி சாப்பாட்டிலிருந்து எழுந்து ஓடினார்கள் மிருதுளாவும் அம்புஜமும். அங்கு மற்ற அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். சக்தி மட்டும் தனியாக படுத்திருந்ததைப் பார்த்ததும் அவளைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு வந்தார்கள் அம்புஜமும் மிருதுளாவும். அங்கு பக்கத்து வீட்டுச் சிறுவனுக்கு பாயசம் ஊட்டிக்கொண்டிருந்த பர்வதத்திடம்
“ஏன் மாமி உங்களை நம்பி தானே குழந்தையை விட்டுட்டு நாங்க சாப்பிட வந்தோம். நீங்க என்னடான்னா குழந்தையை அம்போன்னு விட்டுட்டு இங்க வந்திருக்கேங்கள்?”
“எங்க பேரனாட்டாம் நாங்க வளர்க்கும் இவன் பாயசம் வேணும்ன்னு சொல்லும் போது நான் குடுக்க வேண்டாமா? அது தான் வந்தேன்”
“மாமி அங்க நீங்க விட்டுட்டு வந்தது உங்க பேத்தியை”
“அப்படியா!!! சரி சரி இதோ இவன் சாப்டுட்டான். வாடா கண்ணா நாம போவோம்”
என்று கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாமல் பர்வதம் நடந்துக் கொண்டதை அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் பார்த்து முகம் சுளித்தனர். நவீனுக்கு அவமானமாக இருந்தது. அம்புஜத்தின் ஓர்பிடி அவளிடம்
“என்ன மன்னி நம்ம மிருதுளா மாமியார் இப்படி இருக்கா? எப்படி மிருதுளா இவாகூட இருக்கா? சொந்த பேத்தியை பார்த்துக்காம பக்கத்து வீட்டுப் பையனை பேரன்னு சொல்லிண்டிருக்கா? இதெல்லாம் நீங்க தட்டிக் கேக்கறதில்லையா? இப்படியே இவாளை விட்டா அப்புறம் நம்ம மிருதுளாவை பாடா படுத்துவா மன்னி”
“விடு விடு…இன்னும் எத்தனை நாள்!! மிருதுளா பாட்டுக்கு அவ ஆத்துக்காரரோட குழந்தையைக் கூட்டிண்டு போயிடுவா. இவா கூடயா இருக்கப் போறா!!! பிரச்சினை வரணும்ன்னே பண்ணறவாகிட்ட இருந்து நாம பத்தடி விலகிப் போறது தான் நமக்கு நல்லது. இதைப் பத்தி இனி நீயும் பேசாத விட்டு விடு என்னமோ பண்ணிக்கட்டும் என்னவேணுமோ சொல்லிக்கட்டும்”
என்று கூறி தன் ஓர்பிடி வாயை அடைத்தாள் அம்புஜம். அனைவரும் மாலை காபி மற்றும் டிபன் அருந்தியதும் அவரவர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். அன்றிரவு மிருதுளாவுக்கும் குழந்தைக்கும் த்ருஷ்டிச் சுற்றிப் போட்டாள் அம்புஜம்.
நான்கு நாட்கள் ஓடின. நவீன் தன் குழந்தையையும் மனைவியையும் பிரிய மனமில்லாமல் குஜராத்துக்குக் கிளம்பிச் சென்றான்.
தொடரும்……