அத்தியாயம் 66: தாய்மையை நோக்கி…

மிருதுளா சில நாட்கள் தொலைத்த சந்தோஷம் அவள் மனதில் மீண்டும் மலர ஆரம்பித்தது. அவள் அப்பா ராமானுஜத்திற்கு இரண்டு பெட்ரூம் உள்ள குவார்ட்ஸ் கிடைத்ததும் அவர்கள் அந்த வீட்டுக்கு குடிப்போனார்கள். அந்த வீட்டில் மிருதுளாவுக்கும் அவள் அம்மாவுக்கும் ஒரு அறை, வேனுவுக்கும் ராமானுஜத்துக்கும் ஒரு அறை என்று எடுத்துக் கொண்டனர்.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து மருமகளாக வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது அவள் கணவனும் அவன் உறவுகளும் அவளுக்கு நம்பிக்கைக் கொடுக்கும் வண்ணம் நடந்துக் கொள்ள வேண்டும். புதிதாக குடும்பத்தில் வரும் பெண்ணிற்கு ..அந்த குடும்பம் அவளுக்கு மகிழ்வைத் தரவேண்டும். எந்த பெண்ணும் தன்னைத் தலையில் தூக்கிவைத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணுவதில்லை. குறைந்த பட்சம் அவளை மனிதப் பிறவியாகவும், அவளை அவளாகவும் வாழவிட்டாலே எல்லா பெண்களும் புகுந்த வீட்டையும் தன் வீடாகத் தான் கருதுவாள். அதை விடுத்து… இந்த பர்வதீஸ்வரன் குடும்பம் போல் வீட்டுக்கு வந்த பெண்ணை ஏதோ தீண்டதகாதவள் போல் நடத்தியதால் மிருதுளா என்றில்லை அவள் இடத்தில் எந்த பெண் இருந்தாலும் அங்கிருந்து வெளியேற ஒரு சந்தர்ப் பத்துக்காக காத்துக் கொண்டு தான் இருப்பார்கள். நம்மால் சுதந்திரமாக சுவாசிக்க முடியாத ஒரு அறையிலிருந்து முதலில் வெளியேற நினைப்போமா? இல்லை மூச்சு முட்டினாலும் நமக்கு கிடைத்த இந்த அறைக்கு உள்ளேயே இருப்போம் என்று நினைப்போமா?

அந்த அறையில் ஒரு சிறிய ஜன்னல் இருந்தாலாவது அவள் சற்று நிம்மதி அடைவாள். அதற்குள்ளேயே எப்படியாவது வாழ்க்கையை ஓட்டிட எண்ணிடுவாள். ஆனால் எந்த வழியிலும் சுவாசிக்க முடியாமல் போனால்!! கிடைக்கும் முதல் வழியைத் தேர்ந்தெடுத்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தான் நினைபாள். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.

இங்கே பர்வதீஸ்வரன் மிருதுளாவை சுவாசிக்க விடாமல் செய்ததின் விளைவு தான் ஆட்டோவில் ஏறி அந்த தெருவைத் தாண்டியதும் அவள் மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் பர்வதீஸ்வரனிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? அவர்கள் என்றும் மிருதுளாவைத் தான் குறைக் கூறுவர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் இப்படியே மாறாமல் இருந்தார்களே என்றால் அவர்கள் உருவாக்கும் அந்த அறையிலேயே அவர்கள் இன்றில்லை என்றாலும் என்றாவது தள்ளப்படுவார்கள்.

மிருதுளா வழக்கம் போல சத்தான ஆகாரம், மனநிம்மதி என்று ஒரு மாதத்தைக் கடந்தாள். குழந்தைப் பிறப்பதற்கு டாக்டர் குறித்துக் கொடுத்தது மார்ச் ஆறாம் தேதி என்பதால் மார்ச் நான்காம் தேதி இரவு நவீன் ஊரிலிருந்து வந்தான். ஐந்தாம் தேதி காலை சீக்கிரம் எழுந்து மிருதுளா வீட்டிற்குச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஈஸ்வரன்

“நாளைக்கு தானே டேட் கொடுத்திருக்கா. குழந்தைப் பொறந்தா ஃபோன் பண்ணுவா அப்போ போனா போதும். அதுவுமில்லாம இன்னைக்கு மத்தியானம் நம்ம கவின் குவைத்துலேந்து வர்றான் அதுனால நீ எங்கேயும் போக வேண்டாம்”

“அவன் எப்படியும் ஒரு மாசம் இருப்பானே!! நான் அப்புறமா வந்து அவனைப் பார்த்துக்கறேன்னு சொல்லு. இப்போ நான் மிருது ஆத்துக்குப் போகணும். பை நான் வர்றேன்”

என்று கூறி அங்கிருந்து புறப்பட்டான் நவீன். மேலே கூறியது போல அவனும் ஜன்னல் கூட இல்லா சுவாசம் முட்டும் அறையிலிருந்து வெளியேறினான். எந்த ஒரு வீட்டில் மருமகளை மதிக்கவில்லையோ அந்த வீட்டில் அவள் கணவனையும் அதாவது அவர்கள் மகனையும் மதிக்கமாட்டார்கள். இங்கே அதுதான் ஆரம்பத்திலிருந்து நடந்து வருகிறது.

தங்கள் மகனை மதிக்கும் பெற்றவர்கள் அவன் மனைவியையும் மதிப்பார்கள். இங்கே பர்வதீஸ்வரன் தங்கள் மகனையே மதிக்கவில்லை என்பது தான் நவீன் திருமணம் நிச்சயமானதிலிருந்தே நமக்கெல்லாம் நன்றாக தெரிந்ததாயிற்றே.

காலை டிபன் கூட சாப்பிடாமல் மிருதுளா வீட்டுக்கு வந்தான் நவீன். அவன் உள்ளே நுழைந்தபோது மிருதுளாவும் அவள் அம்மாவும் காலை டிபனை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உடனே அம்புஜம் எழுந்துக் கொண்டாள். அதை பார்த்த நவீன்

“நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்கோ ப்ளீஸ். எங்க மிருது உன் அப்பாவையும் வேனுவையும் காணமே!!”

“அப்பாக்கு இன்னைக்கு டே ஷிஃப்ட் ஸோ அஞ்சு மணிக்கெல்லாம் போயிட்டா. வேனுக்கு லாப் இருக்குன்னு அவனும் ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிட்டான். சரி நீங்க எப்போ வந்தேங்கள்?”

“நான் நேத்து நைட் வந்தேன். காலையில எழுந்ததும் குளிச்சிட்டு நேரா இங்க வந்துட்டேன்”

“நீங்க ப்ரேக்ஃபாஸ்ட் சாப்டேளா?”

“ம்….”

“இந்தாங்கோ மாப்ள மிருதுவோட உட்கார்ந்து சாப்பிடுங்கோ.”

என்று ஒரு தட்டில் சுடச்சுட இட்டிலியும் சட்னியும் வைத்துக் கொடுத்தாள் அம்புஜம். நவீனுக்கும் நல்ல பசி. நன்றிச் சொல்லி அதை வாங்கி சாப்பிட்டான். அதற்கு அம்புஜம்

“எதுக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லறேங்கள். உங்க அம்மா கிட்டே தாங்க்ஸ் சொல்லுவேங்களா சொல்லுங்கோ”

“அதுக்கில்ல நான் சாப்பிடலைன்னு சொல்ல வர்றத்துக்குள்ளேயே நீங்க டிபனை கொண்டு வந்து தந்துட்டேங்களே அதுனால தான் சொன்னேன்.”

“காலையில எழுந்து குளிச்சதும் கிளம்பி வந்துட்டேன்னு சொன்னேங்களே அப்போ சாப்பிடலைன்னு தானே அர்த்தம். அதுனால தான் உடனே ஒரு ஏடு இட்டிலி வச்சுக் கொண்டு வந்தேன்.”

“ம்…நவீ இங்கே உனக்கு கேட்காமலே கிடைக்குது ஆனா அங்க எனக்கு கேட்டாலும் கிடைக்கலை கேட்கவும் முடியலை”

“ஏய் மிருது பேசாம சாப்பிடு டி”

“சரி மா சரி உன் மாப்ளயை ஒண்ணும் சொல்லலை”

இருவரும் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் உள்ரூமில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அம்புஜம் மத்திய உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். நவீன் நான்காம் தேதி சரியாக உறங்காததாலும், நன்றாக காலை உணவு உண்டதாலும் மிருதுளாவுடன் பேசிக்கொண்டே உறங்கிப் போனான். மிருதுளாவும் அவனை தொந்தரவு செய்யாமல் அந்த அறையின் கதவை சாத்திவிட்டு வெளியே வந்து தனது ஜூஸைக் குடித்து விட்டு அம்மாவுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தாள் அப்போது அம்புஜம்

“ஏய் மிருது நீ போய் உட்காருமா. உன் ஆத்துக்காரரோட போய் பேசிண்டிரு. இதோ சமையல் ரெடி ஆகிடுத்து‌. அப்பளம் மட்டும் தான் பொரிக்கணும்.”

“அம்மா மெதுவா பேசு நவீ தூங்கிண்டிருக்கார். அதுனால தான் அந்த ரூம் கதவை சாத்திட்டு இங்கே வந்தேன்”

“சரி நீ போய் டிவி பார்க்கவோ இல்ல புக்குப் படிக்கவோ செய் போ. இதோ இந்த அப்பளத்தைப் பொரித்துட்டு நானும் வர்றேன்”

மிருதுளா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் கிடுகிடுவென ஓடியது. மத்தியம் ஒன்றானது நவீன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அம்புஜம் மிருதுளாவிடம்

“அவர் தூங்கட்டும் மிருது. எழுப்பாதே. அவர் எழுந்திரிக்கும் போது சாப்பிட்டுக்கட்டும். நீ வா சாப்பிடு.”

என்று மிருதுளாவுக்கு சாப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் போது நவீன் எழுந்து வந்து கடிகாரத்தைப் பார்த்தவன்

“ஓ!! டைம் ஒன்றரை ஆச்சு!!ஏய் மிருது எழுப்பியிருக்கலாம் இல்லையா!!”

“ஒரு மணிக்கு எழுப்பினேன் நவீ. நீங்க நல்லா தூங்கிண்டிருந்தேங்களா அதுனால டிஸ்டர்ப் பண்ணாம நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டோம். நீங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வந்து சாப்பிடுங்கோ.”

நவீனும் சாப்பிட்டுவிட்டு டிவிப் பார்த்தான். மத்தியம் இரண்டு மணி ஆனதும் ராமானுஜம் வந்தார். அவர் நவீனைப் பார்த்ததும்

“வாங்கோ மாப்ள வாங்கோ”

அனைவரும் அமர்ந்துப் பேசிக்கொண்டிருக்கும் போது ஆட்டோ ஒன்று அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. யாரென்று எட்டிப் பார்த்த அம்புஜம்

“வாங்கோ வாங்கோ மாமி!! வா வா கவின்”

“கவினா?”

என்றால் மிருதுளா அதற்கு நவீன்

“ஆமாம் அவன் மத்தியானம் குவைத்திலிருந்து வரதா இருந்தது. நான் அதை உன்னிடம் சொல்ல மறந்துட்டேன்”

கவினை தனியாக அனுப்பாமல் கூடவே வந்தாள் பர்வதம். இருவரும் உள்ளே வந்ததும் கவின்

“நவீன் அன்ட் மன்னி கங்கிராஜுலேஷன்ஸ். நான் வர்றேன்னு சொல்லியும் ஒரு அரை நாள் வெயிட் பண்ணாம இங்கே உங்களைப் பார்க்க வரவச்சுட்டேங்களே எங்க நவீனை!!!”

என்று பர்வதீஸ்வரன் ஏற்றிக் கொடுத்தை அப்படியே சொன்னான் அவர்கள் புத்திரன் கவின். வந்தவர்களுக்கு சுவீட்டும் காரமும் காபியுடன் கொண்டு வந்துக் கொடுத்தாள் அம்புஜம். அதை அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு பேசிக்கொண்டிருக்கையில் மிருதுளா சட்டென்று

“ஆ!!! அம்மா!!! எனக்கு வயிறு வலிக்கறது மா”

என்று கத்தியதில் பதற்றமானாள் அம்புஜம். உடனே அவளிடம்

“சரி எழுந்துரு மிருது. ஏன்னா ஒரு ஆட்டோவை உடனே ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்கோ.”

ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் செல்ல வேண்டி தயாராக வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டாள் அம்புஜம் ஆட்டோ வந்தது மிருதுளாவும் அம்புஜமும் நவீனும் ஆட்டோவில் சென்றனர். ராமானுஜம் இன்னொரு ஆட்டோ வரவழைத்து அதில் கவினையும் பர்வதத்தையும் ஹாஸ்பிடல் அனுப்பி வைத்தார். பின் வீட்டுக் கதவைப் பூட்டிவிட்டு அவரது டி.வி.எஸ் 50 ல் அவரும் ஹாஸ்பிடல் சென்றார்.

மிருதுளாவை டாக்டர்ஸ் லேபர் வார்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வெளியே தவித்துக் கொண்டிருந்தனர் நவீனும் அம்புஜமும். கவினும் பர்வதமும் வந்து சேர்ந்தனர். கவினிடம் பர்வதம் ஏதோ முனுமுனுத்தாள். உடனே கவின் அவளிடம்

“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான்

சற்று நேரத்தில் டாக்டர் வெளியே வந்ததும் நவீன் சென்று மிருதுளாவைப் பற்றி விசாரித்தான் அதற்கு டாக்டர்

“கரெக்ட் டேட் தான். மிருதுளாவுக்கு வலி விட்டு விட்டு வருது. நாளைக்கு விடியற் காலைக்குள் குழந்தைப் பொறந்திடும். யாராவது ஒருத்தர் இங்கேயே இருக்கணும். ஏதாவது தேவைன்னா கூப்பிடுவதற்கு. மத்தவங்க எல்லாரும் வீட்டுக்குப் போயிடலாம்”

என்று சொல்லிவிட்டு சென்றார் டாக்டர். அவர் சொல்லி முடிக்கவும் ராமானுஜமும், பக்கத்துவீட்டு ராணியம்மா சொல்லி விவரமறிந்து வேனுவும் ஹாஸ்பிடல் வந்துச் சேர்ந்தனர். வேனு தன் அம்மாவிடம்

“அம்மா நம்ம மிருதுக்காவுக்கு குழந்தைப் பொறந்துடுத்தா?”

“இல்லை டா வேனு. நாளைக்கு விடியற் காலைக்குள்ள பொறந்திடும்னு சொல்லிட்டு டாக்டர் இப்போ தான் போனா”

“சரி நீங்க எல்லாரும் ஆத்துக்குப் போங்கோ நானும் அத்திம்ஸும் இருக்கோம்”

என்று வேனு சொன்னதும் பர்வதம் கவினிடம் கண்ணால் ஜாடைக்காட்ட உடனே நவீனை கவின் தனியாக அழைத்துச் சென்று

“நவீன் வா நாம ரெண்டு பேரும் டவுனுக்குப் போய் மன்னிக்கு கிஃப்ட் வாங்கிண்டு வருவோம்”

“இல்லை கவின் இந்த நேரத்துல எப்படி!!”

“அட அதுதான் மன்னியோட ஃபுல் ஃபேமிலியும் இருக்காளே ஒரு ரெண்டு மணி நேரத்துல நீ திரும்பி வந்துடலாமே!!! நாளைக்கு காலையில தானே டைம் கொடுத்திருக்கா”

“சரி இரு அவாகிட்ட சொல்லிட்டு வரேன்”

“அதெல்லாம் அம்மா சொல்லியாச்சு நீ வா”

என்று சொல்லி தன்னுடன் வெளியேக் கூட்டிச் சென்றான் கவின். பர்வதீஸவரனின் நரித்தனம் அனைத்தும் மிகுந்தவன் என்பதை நிரூபித்தான் கவின். நவீன் சொல்லிக்காமல் கவினுடன் சென்றதைப் பார்த்த மிருதுளா குடும்பத்தினர் அதிர்ந்துப் போனார்கள். அப்போது பர்வதம் மெல்ல அம்புஜத்திடம்

“சரி மாமி பசங்க வெளியே போயிட்டா நானும் கிளம்பறேன். குழந்தைப் பொறந்தா ஃபோன் போட்டுச் சொல்லுங்கோ வரோம்”

மாப்பிள்ளை தன் பொண்ணை விட்டுவிட்டு அக்கறையில்லாமல் தம்பியுடன் சென்றுவிட்டாரே என்ற கோபம் ஒருபுறமிருக்க இந்த பர்வதத்தின் பேச்சு அதை இன்னும் கிளறி விட… அந்த ஆத்திரத்தில் அம்புஜம்

“என்ன மாமி பேசறேங்கள்? அது என்ன குழந்தைப் பொறந்தான்னு இழுக்கறேங்கள்? உங்க புள்ளைய இந்த நேரத்துல் அவர் பொண்டாட்டியோட இருக்க சொல்லாம அனுப்பிட்டு இப்படி ஒரு பேச்சுப் பேச உங்களுக்கு எப்படி மனசு வர்றது?”

“அவன் போனா அதுக்கு நான் என்னப் பண்ணறது!! அவன் தம்பியை இத்தனை வருஷத்துக்கப்புறமா பார்க்கறான் அதுனால அவன்கூட பேசப் போயிருப்பான். நல்லா இருக்கே நீங்க சொல்லறது. உங்க பொண்ணுக்கு நாளைக்கு காலையில தான் டைம் கொடுத்திருக்கா அது வரைக்கு அவன் இங்க இருந்து என்னப் பண்ணப்போறான்?”

“மாமி நீங்க வேணும்னே எல்லாம் பண்ணறேங்கள்ன்னு எங்களுக்கு தெரியாம இல்ல.”

“சரி தெரிஞ்சா மட்டும் என்னவாம். சரி சரி நான் கிளம்பறேன்”

மிருதுளா பிரசவ நேரத்தில் நவீன் அவளருகில் இருக்கக் கூடாது என்று நினைத்தவள் தன் மகன் கவினை வைத்து நிறைவேற்றிக் கொண்ட பெருமிதத்தில் அங்கிருந்து சென்றாள் பர்வதம். அவள் சென்றதும் அம்புஜம்

“ச்சே என்ன ஜன்மமோ இந்த மாமி!!! சரி வேனு நீயும் அப்பாவும் இங்கேயே இருங்கோ நான் போயி டின்னர் பண்ணிட்டு வர்றேன்”

என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் அம்புஜம். பிரசவ நேரத்திலும் மிருதுளாவுக்கு அவள் குடும்பத்தினரே அவளுக்குப் பக்கத் துணையாக நின்றனர்.

மாலை நான்கு மணிக்கு ஹாஸ்பிடலில் மிருதுளாவை சேர்த்துவிட்டு கிளம்பிய நவீன் இரவு பத்து மணிக்குத் தான் மீண்டும் ஹாஸ்பிடல் வந்தான். அப்போது ஹாஸ்பிடலில் மிருதுளாவின் அப்பா, அம்மா, தம்பி மூவரும் இருந்தனர். நவீனைப் பார்த்ததும் அம்புஜம்

“ஏன் மாப்ள உங்க வைஃபை டெலிவரிக்காக அட்மிட் பண்ணிட்டு அவ கூட இந்த நேரத்துல இருக்காம நீங்க இப்படிப் போனது நல்லா இல்லை. மிருதுக்கு வலி நின்னுடுத்துன்னு நார்மல் வார்டுக்கு மாத்தினா அப்போ அவ உங்களைத் தான் தேடினா தெரியுமா? எங்களால அவளை சமாளிக்க முடியாமல் நீங்க கிளம்பிப் போயிட்டேங்கள்ன்னு சொல்ல வேண்டியதாயிடுத்து.அதைக் கேட்டதும் என் பொண்ணு முகம் அப்படியே வாடிடுத்து. அதுவுமில்லாம அவ கவலை ஆனதுல அவ பிபி அதிகமாயிடுத்து. மறுபடியும் வலி வந்தது… லேபர் வார்டுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டா”

“இல்ல கவின் தான் ஏதோ கிஃப்ட் வாங்கலாம்ன்னு சொன்னான் அதுதான் போனேன் ஆனா இவ்வளவு லேட் ஆகும்ன்னு நான் நினைக்கலை. அவா நாளைக்கு காலையில போனா போதும்ன்னு தான் சொன்னா ஆனா நான் தான் இங்கேயே வந்துட்டேன்.”

“யார் என்ன சொன்னா என்ன? எதுக்குக் கூப்பிட்டா என்ன? தப்பா எடுத்துக்காதீங்கோ….நீங்க போனது தப்புதான்”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நர்ஸ் அங்கே வந்து

“இதோ பாருங்க மா இங்கே இப்படி இவ்வளவு பேரெல்லாம் இருக்கக் கூடாது. யாராவது ஒரு ஆண் மட்டும் தான் இருக்கணும்”

“சரிங்க நர்ஸ் நாங்க இதோ கிளம்பிடறோம்”

என்று நர்ஸிடம் கூறிய அம்புஜம் வேனுவையும் ராமானுஜத்தையும் பார்த்து

“நீங்க ரெண்டு பேரும் இங்க இருங்கோ நான் ஆத்துக்குப் போறேன். காலையில நாளு மணிக்கெல்லாம் வந்துடறேன். சரியா”

என கூற அதைக் கேட்ட நவீன்

“இல்லை நானும் வேனுவும் இருக்கோம் நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குப் போங்கோ”

“இல்ல மாப்ள திடிர்னு உங்க ஆத்துலேந்து வந்து உங்களைக் கூட்டிண்டுப் போயிடுவா அப்புறம் பாவம் இந்த சின்னப் பையன் வேனு மட்டும் தனியா இருக்கணும். என்னத்துக்கு எங்க பொண்ணை நாங்களாவது பார்த்துக்கணுமில்லையா.”

“அதெல்லாம் எங்கேயும் போக மாட்டேன். கவலைப் படாதீங்கோ. நான் சாயந்தரம் போனது தப்புத் தான். மிருது என் ஃவைப். நான் பார்த்துக்கறேன் நீங்க கிளம்புங்கோ”

என்று ராமானுஜத்தையும் அம்புஜத்தையும் அங்கிருந்து கிளம்பச் செய்தான் நவீன். அம்புஜம் ராமானுஜத்துடன் வண்டியில் செல்லும் போது

“ஆமாம் ஆமாம் நம்ம மிருது இவர் ஃவைப்ன்னு இப்போ தான் தெரிஞ்சுதாக்கும். தம்பி கூப்பிட்டான்னா பொண்டாட்டிய விட்டுட்டு போயிடுவாரா? என்ன ஆளோ தெரியலை”

“விடு அம்புஜம் விடு. அவரை என்னச் சொல்லிக் கூடிண்டுப் போனாளோ அது நமக்குத் தெரியுமா?”

“என்ன சொன்னா என்ன? என்னைத் தான் நீங்க மிருது பொறக்கும் போது அம்போன்னு ஹாஸ்பிடல்ல விட்டுட்டு உங்க தங்கைய பார்க்க போனேங்கள்ன்னா என் பொண்ணுக்கும் அதே மாதிரி நடக்கறதேன்னு பார்க்கும் போது எனக்கு கோபம் கோபமா வர்றது.”

“இப்போ நம்ம கதை ரொம்ப அவசியம். விடு விடு. அதுதான் தப்புன்னு அவரே உணர்ந்துட்டார் இல்லையா.”

லேபர் வார்டில் மிருதுளாவுக்கு வலி விட்டு விட்டு வந்துக் கொண்டே இருந்தது. லேபர் வார்டுக்குள் செல்வதற்கு முன் ஒரு முறை நவீனைப் பார்க்க வேண்டும் என்ற அவளின் எண்ணம் நிறைவேறாமல் போனது அவளுக்கு மனவேதனையைக் கொடுத்ததில் அவளின் பிபி எகிறியது. உடனே நைட் டியூட்டி டாக்டர் நர்ஸிடம் மிருதுளாவை ஆப்பரேஷனுக்கும் தயாராக்கச் சொன்னார். மிருதுளாவுக்கு தலையை வாரி பின்னலிட்டு அதை முடிந்து விட்டு அவளை மீண்டும் லேபர் பெட்டில் படுக்க வைத்துவிட்டு

“இதோ பாருமா மிருதுளா பயப்படாதே!! உன் பயம் உன்னோட பிபியை ஏத்தி விடுது. அது உனக்கும் உன் குழந்தைக்கும் நல்லதில்லை. ரிலாக்ஸா இருமா ஒண்ணும் ஆகாது. லட்டு மாதிரி குழந்தைப் பொறக்க போவுது!! மனசை சந்தோஷமா வச்சுக்கோமா”

“சரி சிஸ்டர்”

என்று வெளியே கூறினாலும் அவள் மனதிற்குள் பெரிய போராட்டமே நடந்துக்கொண்டிருந்தது.

பர்வதத்தின் திட்டம் பலித்திருந்தாலும்…மிருதுளாவின் மனவலிமையை அதிகரிக்க உதவியாக இருக்கப் போகிறது என்பது தான் உண்மை.

பர்வதீஸ்வரன் திட்டம் தீட்டினாள்
மகனை அங்கிருக்க விடாமல் அழைத்துச் சென்றாள்
திரும்பி அனுப்பாமலிருக்க நினைத்தாள்
தீயவர்கள் தீட்டிடும் திட்டங்களின் ஆயுள் சில காலமே
அதில் வீழ்ந்தவர்கள் தெளிந்தால்
அனைத்திற்கும் முற்றுப்புள்ளியாகிடுமே.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s