அத்தியாயம் 65: கசப்பான இனிப்பு

சீமந்தம் வளைகாப்பு முடிந்து அனைவரும் வீட்டிற்கு வந்து சேர்வதற்கு இரவானது. அன்றிரவுக்கு சாப்பாடு கட்டிக்கொண்டு வந்திருந்தனர். அதை உண்டபின் அவரவர் உறங்கச் சென்றனர். பின் வழக்கம் போல பர்வதத்தின் குத்தல் பேச்சு, கல்லு இட்டிலி, ரசம் சாதம், பாத்திரம் தேய்க்கல் என மூன்று நாட்கள் நகர்ந்தது. பதிமூன்றாம் தேதி மத்தியம் வழக்கம் போல் செக்கப்புக்கு மிருதுளாவை அழைத்துச்சென்று வந்தான் நவீன். அன்று மாலை மிருதுளா திடீரென வயிறு வலிக்கிறது என்று நவீனிடம் சொன்னாள். நவீனுக்கோ என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் தவித்தான். சற்று நேரத்தில் மிருதுளா வலி வலி என்று தவிக்க ஆரம்பித்தாள். வலியில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வந்ததைப் பார்த்த நவீன் அவளின் வயிற்றில் எண்ணெய் ஊற்றி மெல்ல மசாஜ் செய்துக் கொடுத்துக் கொண்டிருக்கையில் மாடியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுக்க வந்தாள் பர்வதம். அவளைப் பார்த்ததும் நவீன்

“மிருதுளா வயிறு வலிக்கறதுன்னு துடிக்கறா கொஞ்சம் என்னன்னு பாரேன். டாக்டர்கிட்ட கூட்டிண்டு போகணுமான்னு சொல்லேன்”

என்று பதற்றத்தோடு கேட்டான். அதற்கு துளியும் பதற்றமில்லாமல், மிருதுளாவை அவள் அறையின் வாசலிலிருந்து எட்டிப் பார்த்த பர்வதம்

“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை ஏதாவது சூட்டு வலியா தான் இருக்கும் அதுக்காக ரொம்ப எல்லாம் காட்டிக்க வேண்டாம். கொஞ்சம் சுடு தண்ணி குடிக்கச் சொல்லு எல்லாம் தானா சரியாகிடும்”

என கூறிக்கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள். அவளின் இந்த அலட்சிய போக்கைக் கவனித்த நவீன் மிருதுளாவிடம்

“மிருது ஹாஸ்பிடல் போகலாம் வா.”

“இல்ல நவீ அம்மா தான் சுடு தண்ணி குடிச்சா சரியாகிடும்ன்னு சொல்லறாளே! ப்ளீஸ் எனக்கு ஒரு கிளாஸ் சுடு தண்ணி வச்சுக் கொண்டு வறேளா. நான் குடிச்சுப் பார்க்கறேன். அப்பவும் சரியாகலைன்னா அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் போவோம்”

“சரி இரு நான் போய் சுடுத் தண்ணி வச்சுக் கொண்டு வரேன்”

நவீன் கீழே வேகமாகச் சென்று அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்தான். அதிலிருந்து ஒரு கிளாஸ் எடுத்துக் கொண்டு மாடிக்கு போய் மிருதுளாவிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னான். அவளும் குடித்தாள். சற்று நேரம் பொறுத்துப் பார்த்தாள் மிருதுளா ஆனாலும் வலி குறைந்த பாடில்லை. நவீன் அவளை அருகிலிருந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றான். அந்த டாக்டர் மகப்பேறு மருத்துவர் அல்ல அவர் பொது மருத்துவர் ஆவார். அந்த டாக்டர் மிருதுளாவை சோதித்துப் பார்த்தார் பின் சில மருந்துகளை உடனே எடுத்துக் கொள்ளும்படி கூறினார். அப்போது நவீன் டாக்டரிடம்

“டாக்டர் மிருதுளாவுக்கு என்ன ஆச்சு? எதுவும் ப்ராப்ளம் இல்லையே!!”

“எனக்குத் தெரிந்து பெரிசா ஒன்றுமில்லை. இப்போ கொடுத்திருக்கும் மாத்திரையில் சரியாகிவிடும் அப்படி ஆகலைன்னா நீங்க அவங்க செக்கப் போற மகப்பேறு மருத்துவர் கிட்ட தாமதிக்காமல் கூட்டிட்டுப் போங்க சரியா.”

இருவரும் ஆட்டோவில் ஏறி மீண்டும் வீட்டிற்கு வந்தனர். மகனும் மருமகளும் ஹாஸ்பிடல் சென்று வந்துள்ளார்களே அவர்களிடம் என்ன ஆச்சு ஏதாச்சு என்று ஒன்றுமே விசாரிக்காமல் அவள் பாட்டுக்கு டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள் பர்வதம். அதைப் பார்த்த நவீன்

“ச்சே!! நீ வா மிருதுளா நாம மாடிக்குப் போகலாம்”

என அவளை மெல்ல மாடிக்கு அழைத்துச் சென்றான். அப்போது மிருதுளா நவீனிடம்

“நான் கொஞ்ச நேரம் படுத்துக்கவா. டையர்டா இருக்கு”

“ஓ எஸ்! படுத்துக்கோ. இரு பாயை விரிக்கறேன். ம்…. இதுல படு”

“தாங்க்ஸ் நவீ. எனக்குத் தூக்கம் வருது நான் தூங்கிட்டேன்னா விளக்கேத்த நேரமாச்சுன்னா எழுப்பிடுங்கோ”

“என்னத்துக்கு? நிம்மதியா தூங்கு மிருது. நாளைக்கு நான் ஊருக்கு போகணுமேன்னு இருக்கு. உன்னை நாளைக்கு உங்க அம்மா ஆத்துல கொண்டு போய் விட்டுட்டு நான் ஊருக்குக் கிளம்பறேன். ஏன்னா இங்கே உனக்கு இது மாதிரி ஏதாவது வலி வந்ததுன்னா பார்த்துக்க யாரும் இல்லைங்கறத தான் பார்த்தோமே.”

“பரவாயில்லை நவீ. நாளைக்கு நல்ல நாள் இல்லைன்னு தானே பொங்கல் அன்னைக்கு அழைச்சுண்டு போக முடிவெடுத்தா அப்புறம் ஏன் அவசரப் படணும்? கவலைப்படாம நீங்க ஊருக்குப் போயிட்டு உங்க ஜூனியரைப் பார்க்க வாங்கோ. ஒரு நாள் தானே நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். அப்படியே வலி வந்தாலும் என் அம்மாவுக்கு ஃபோன் போட்டு வரச்சொல்லி ஹாஸ்பிடல் போறேன் ஓகே வா!”

“நீ சொல்லற ஆனா எனக்கு டென்ஷனா இருக்கும்”

என்று கூறிக்கொண்டே மிருதுளாவைப் பார்த்தான். அவள் நன்றாக உறங்கிப் போனாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் அறையிலிருந்து வெளியே மொட்டைமாடியின் திட்டில் அமர்ந்துக் கொண்டே ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தான். மாலை விளக்கேற்றும் நேரமானதுக் கூட தெரியாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தான். பவின் நவீனை சத்தமாக அழைத்துக் கொண்டே மாடி ஏறி வந்தான். அவனின் குரல் கேட்டதும் மெல்ல விழித்தாள் மிருதுளா. தன் பெயரை ஏலம் விடுவதுப் போல கத்திக் கொண்டே வந்த பவினின் வால்யூமைக் குறைக்கச் சொன்னான் நவீன். உடனே அவனும் மெதுவாக

“விளக்கேத்தற நேரமாச்சாம் மன்னி தூங்கிண்டிருந்தான்னா எழுப்பி விடச் சொன்னா அம்மா”

“சரி சரி அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்னு போய் சொல்லு”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மிருதுளா எழுந்து தன் அறையை விட்டு வெளியே வந்து

“என்ன ஆச்சு ஏன் பவின் உங்க பேரை அப்படி கத்திக் கத்திக் கூப்பிட்டான்?”

“எழுந்துட்டயா மிருது? இவன் கத்தினதுல நீ எழுந்திடப் போறேன்னு தான் இவனை மெல்லப் பேசச் சொல்லிண்டிருந்தேன் நீயே எழுந்து வந்துட்ட!”

“நான் தான் விளக்கேற்ற நேரமானதும் என்னை எழுப்பிவிடச் சொல்லிட்டுத் தானே படுத்தேன். நீங்க செய்யலை ஆனா பவின் கரெக்டா எழுப்பிட்டான். தாங்கஸ் பவின்”

“பரவாயில்லை மன்னி. நான் கீழே போறேன்.”

அனைவரும் கீழே வந்தனர். மிருதுளா காபிப் போட்டு நவீனுக்கும் கொடுத்து தானும் குடித்தாள். பின் இருவரும் வாக்கிங் சென்று வந்து இரவு உணவான சாதத்தில் ரசத்தை ஊற்றி சாப்பிட்டதும் மாடிக்குச் சென்றனர். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு படுத்துறங்கினர்.

நான்காவது நாள் அதாவது பதிநான்காம் தேதி வந்தது. அன்று விடிந்ததும் எழுந்து குளித்துவிட்டு இருவரும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நவீனின் பெரியப்பா மகனான கிட்டுமணி நவீன் வீட்டுக்கு அனைவரையும் காண வந்திருந்தான். அவனை வரவேற்று காபிக் கொடுத்தாள் பர்வதம். கிட்டுமணி பர்வதத்திடம் ஒரு பையைக் கொடுத்து

“சித்தி இதில் எங்க ஊரு சாக்லெட்ஸ் இருக்கு இந்தாங்கோ ஃப்ரிட்ஜில் வச்சிடுங்கோ”

“ஓ!! அப்படியா! சரி சரி இதோ வச்சுடறேன்”

“என்ன நவீன் ஹவ் ஈஸ் யூவர் மேரேஜ் லைஃப்?”

“நல்லா போயிண்டிருக்கு கிட்டுமணி. இவ தான் என் தர்ம பத்தினி பேரு மிருதுளா.”

“ஹாய். ஆங் பத்திரிகையில பார்த்தேன்”

“நீ எப்படி இருக்க? உன் அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கு?”

“ஆல் இஸ் கோயிங் வெல் டில் நவ்”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஈஸ்வரன் ஹாலுக்கு வந்தார். உடனே கிட்டுமணி அவரிடம்

“என்ன சித்தப்பா எப்படி இருக்கேங்கள்?”

“நான் நல்லா இருக்கேன்டா அமெரிக்கா ரிட்டர்ன்”

“சரி நீ பேசிண்டிரு கிட்டுமணி நான் இன்னைக்கு மத்தியானம் குஜராத்துக்கு கிளம்பறேன் ஸோ போய் என் பெட்டியை பேக் பண்ணிட்டு வந்திடறேன். ஜஸ்ட் பத்து நிமிஷம்”

“நீ டில்லியில் அல்லவா இருந்த!!”

“இந்த வருஷம் தான் எனக்கு குஜராத் போஸ்டிங் ஆச்சு. ஸோ இன்னும் இரண்டு வருஷமாவது அங்க தான் இருப்போம்”

“ஓ! ஓகே ஓகே!! சரி டா நவீன் நீ போய் உன் வேலையைப் பாரு”

என்று அங்கிருந்து மிருதுளாவையும் அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான் நவீன். அங்கே அவன் பெட்டியில் துணிமணிகளை அடுக்கிக் கொண்டே

“கிட்டுமணி நம்ம ரமணி பெரியம்மா புள்ளை. பிட்ஸ் பிலானி ல படிச்சிட்டு அமெரிக்கா போயிட்டான். எனக்கும் மெடிசின் படிக்கணும்ன்னு ஆசை இருந்தது.”

“படிச்சிருக்க வேண்டியது தானே நவீன்”

“ஆமாம் எங்கேந்து. அட போ மிருதுளா. இந்த படிப்பையே நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில படிச்சிருக்கேன் தெரியுமா…இதுல எங்கேந்து மெடிசின் படிக்கறது? அந்த விஷயத்துல பெரியப்பா கிரேட் அவா பசங்களை எல்லாரையுமே நல்லா படிக்க வச்சிருக்கார். சரி சரி வா கீழே போகலாம்”

என்று கீழே வந்தவர்கள் சற்று நேரம் கிட்டுமணியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவன்

“சரி நான் கிளம்பறேன்”

“என்னடா கிட்டு வந்ததும் கிளம்பறாய்? இருந்து சாப்டுட்டுப் போடா”

“இல்ல சித்தி நான் பிச்சுமணி மாமா ஆத்துக்கு லஞ்ச் சாப்பிட வரேன்னு சொல்லிருக்கேன். மாமி சமைச்சு வச்சு காத்திண்டிருப்பா. மாமாவும் வந்திருப்பார் நான் லேட் பண்ணாம டையத்துக்கு போணா தான் மாமாவோட கொஞ்ச நேரமாவது பேச முடியும் இல்லாட்டி அவர் கிளம்பி ஆபீஸ் போயிடுவார். நான் வரேன் டா நவீன்”

என கிட்டுமணி கிளம்பிய கொஞ்ச நேரத்தில் எல்லாம் நவீனும் சாப்பிட்டு விட்டு ஊருக்குக் கிளம்பினான். இந்த முறை அனைவர் முன்னிலும்

“மிருது இன்னைக்கு நைட்டு நீ மாடில தூங்க வேண்டாம். இங்கே ஹாலில் தூங்கு. டேய் பவின் நீ உள் ரூமுல தூங்கு சரியா. நாளைக்கு உன் அப்பா அம்மா வந்ததும் நீ அவாளோட போயிட்டு வா மிருது. நான் குழந்தைப் பொறந்ததும் வந்துடறேன்”

“சரி நவீன்”

“நான் போயிட்டு வரேன்”

என்று பொதுவாக சொல்லிவிட்டுக் கியம்பிச் சென்றான் நவீன். அவன் சென்றதும் மிருதுளா தனித்து நின்றாள். ஹாலில் போடப்பட்டிருந்த இரும்பு கட்டிலில் அமர்ந்தாள். பர்வதம் கட்டிலுக்கு எதிராக ஈஸிச் சேரில் அமர்ந்திருந்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். பவின், ப்ரவின் வெளியே நண்பர்கள் வீட்டுக்குச் சென்றனர். ஈஸ்வரன் வழக்கம் போல மத்திய உணவருந்தியதும் உள்ரூமில் படுத்துக்கொண்டார்.

சற்று நேரம் உட்கார்ந்திருந்த மிருதுளா மெல்ல எழுந்து உள் ரூமிற்குச் சென்று ஃப்ரிட்ஜைத் திறந்து கிட்டுமணி கொடுத்த சாக்லேட்டிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் கட்டிலில் உட்கார்ந்து அதன் மேல் பேப்பரை உரித்தாள். அதைப் பார்த்த பர்வதம்

“என்னது அது? என்னப் பண்ணற?”

“கிட்டுமணிக் கொடுத்த சாக்லேட் எடுத்து சாப்பிட அதோட பேப்பரை உரிக்கறேன் மா”

“எங்க இப்படி குடு”

என்று மிருதுளா எடுத்து வந்த சாக்லெட்டை அவள் வாயில் போடப் போகும் போது கேட்டாள் பர்வதம். உடனே மிருதுளா அதை தன் மாமியாரிடம் கொடுத்தாள். அதை வாஙகிய பர்வதம் அவள் வாயிற்குள் போட்டுக் கொண்டு..

“ம்‌…. நல்லா தான் இருக்கு. அமெரிக்கா சாக்லெட் அமெரிக்கா சாக்லெட் தான். நீ போய் உங்க அம்மா உன் சீமந்தத்துக்கு கொடுத்த சீர் பட்சணங்கள் இருக்கு இல்லையா அதை எடுத்து சாப்பிடு போ”

என கூறியதும் மிருதுளாவுக்கு சங்கடமானது. அவள் உள்ளேச் சென்று சீர் பட்சணங்களை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து சாப்பிட்டாள். சாப்பிடும் போது

“ஆஹா !! நம்ம ஊரு பட்சணங்கள் நம்ம ஊரு பட்சணங்கள் தான் என்ன டேஸ்ட்டு என்ன டேஸ்ட்டு இதெல்லாம் வெளிநாட்டுல கிடைக்குமா?”

என பர்வதம் முன்னாலேயே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள். அதன் பின் மிருதுளா அந்த சாக்லெட்டில் இருந்து ஒரு பீஸ் கூட சாப்பிடவில்லை. மாசமான பெண்ணிற்கு அவள் கேட்டதை எல்லாம் செய்துக் கொடுக்க வேண்டும் என்பார்கள் …. கர்ப்பிணி சாப்பிடுவதை பார்க்கக் கூட சில வீடுகளில் அனுமதிக்க மாட்டார்கள்…ஆனால் இங்கே!!! ….செய்துக் கொடுக்க ஆளும் இல்லை அடுத்தவர் கொடுத்ததை சாப்பிட அனுமதிக்கவும் இல்லை!!! ஈஸ்வரன் பர்வதக் கோட்டையில் அந்த மாதிரியான நல்ல பழக்கவழக்கங்கள் எதுவும் கடைப்பிடிக்கப் படுவதில்லையே!!

அந்த அரை நாளை நல்லபடியாக எந்த வித பிரச்சினையுமின்றி கடத்தி அம்மா வீட்டுக்குச் சென்றிட வேண்டும் என்று மிருதுளா தன் மனதில் வேண்டிக்கொண்டாள். அவளிடம் எவரும் பேசவில்லை அவளும் அவர்களுடன் பேசவில்லை. மிருதுளாவிற்கு நவீன் இல்லாத அந்த அரை நாள் அந்த வீட்டில் ஏதோ ஒரு யுகத்தைக் கடப்பதுப் போல தோன்றியது. அன்றிரவு நவீன் சொன்னதுப் போலவே ஹாலில் படுப்பதற்காக அனைவரும் படுக்கும வரைக் காத்திருந்தாள். அனைவரும் அவரவர்கள் படுக்கும் இடத்தில் பாயை விரித்து படுக்கலானார்கள். அதைப் பார்த்த மிருதுளா பவினிடம்

“பவின் இன்னைக்கு மட்டும் உன் அண்ணா சொன்ன மாதிரி நீ உள்ரூமுல படுத்துக்கோயேன். ப்ளீஸ்.”

என்றதும் பவின் தன் பாயைச் சுருட்டிக் கொண்டு உள் ரூமிற்குச் சென்றுப் படுத்துக் கொண்டான். மிருதுளா மாடியிலிருந்து பாய் தலையணை எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு மெதுவாக படிகளில் இறங்கி வந்து ஹாலில் விரித்துப் படுத்துக் கொண்டாள். அப்போது பர்வதம்

“யாரு லைட்டை ஆஃப் பண்ணுவாளாம்”

என்று மனசாட்சியின்றி சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள். மிருதுளா ப்ரவினைப் பார்த்தாள் அவன் எழுந்திரிக்கவில்லை. வேறு வழியின்றி தானே மெல்ல எழுந்து லைட்டை ஆஃப் செய்துவிட்டுப் படுத்துக் கொண்டாள்.

மறுநாள் தைப் பிறந்தது. பொங்கல் விழா அனைவருது இல்லங்களிலும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. பர்வதமும் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், வடை, சட்னி எல்லாம் வைத்துப் பூஜை செய்து ஈஸ்வரன், பவின், ப்ரவினுக்குக் கொடுத்தாள். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் பர்வதம் அக்கா ரமணி ஆட்டோவில் வந்திறங்கினாள். வீட்டினுள் வந்தவளை வரவேற்றாள் பர்வதம்

“வா வா ரமணி ஹாப்பி பொங்கல். எங்க அத்திம்பேர் பசங்க எல்லாம்?”

“நான் காலையில பொங்கல் செய்து பூஜை எல்லாம் முடிச்சிட்டு எல்லாருக்கும் கொடுத்துட்டுதான் கிளம்பி வந்தேன். அவா எல்லாம் டிவி பார்த்துண்டிருக்கா. சாயந்தரமா வரோம்னு சொல்லிருக்கா. இங்கேயும பூஜை எல்லாம் ஆச்சுப் போலவே”

“ஆமாம் ரமணி இப்போ தான் ஆச்சு. இந்தா பொங்கல் சாப்பிடு”

“அச்சச்சோ பர்வதம் நான் நன்னா வயிறு முட்டச் சாப்டுட்டுத்தான் வந்திருக்கேன்”

“ப்ரசாதமா நினைச்சு சாப்பிடு இப்போ என்ன!”

“சரி ஒரே ஒரு ஸ்பூன் தா போதும். ஆங் அது போதும் தா…சூப்பரா இருக்குப் பர்வதம். என்னமா மிருது ஆத்துக்கு போற சந்தோஷம் உன் முகதுல பளிச்சிடறதே”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியம்மா”

“நவீன் ஊருக்கு நேத்து போயிருக்கான் இல்லையா!! இன்னைக்கு ஒரு நாள் கூட இருந்து பொங்கல் முடிஞ்சிட்டுப் போயிருக்கலாமே அவன்”

“இல்ல பெரியம்மா அப்புறம் குழந்தைப் பொறந்தா லீவு கிடைக்காது. அப்போ வேணுமேன்னு தான் கிளம்பிட்டார்.”

“ஓ!!! சரி சரி சரி”

சற்று நேரம் அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டே அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தும் கொண்டிருந்தாள் மிருதுளா. ஆட்டோ வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் அவள் மனதில் விவரிக்க முடியாத மகிழ்ச்சிப் பொங்கியது. அவள் மனம் போலவே ஆட்டோவில் வந்திறங்கினர் அம்புஜமும் ராமானுஜமும். ரமணி அவர்களை வரவேற்றாள். அவர்கள் உள்ளே சென்றதும் ஒப்புக்காக பர்வதமும் ஈஸ்வரனும்

“வாங்கோ” என சொன்னார்கள்.

அம்புஜமும், ராமானுஜமும் பொங்கல் சீருடன் வந்திருந்தனர். வெங்கலத்தில் பொங்கல் பானை, பழங்கள், பூக்கள், சுவீட்ஸ், காரம் என பர்வதம் வீட்டு ஹாலில் அடுக்கி வைத்து

“மாமா மாமி எங்க பொண்ணுக்கு கொடுக்க வேண்டிய பொங்கல் சீரும் கொண்டு வந்துட்டோம். எடுத்து வச்சுக்கோங்கோ. இப்போ எங்க பொண்ணை அவ பிரசவத்துக்காக எங்காத்துக்கு அழைச்சுண்டுப் போக வந்திருக்கோம்.”

என்று அம்புஜம் சொல்லி முடித்ததும் ரமணி பர்வதத்திடம்

“அடே அப்பா. பர்வதம் உன் சம்மந்தி சீரா எவ்வளவு கொண்டு வந்திருக்கா!!! நிச்சயதார்த்தத்துக்கு வைக்கற மாதிரி இல்ல பொங்கலுக்கு சிரு செஞ்சிருக்கா!!!”

“எங்களுக்கு இருக்கறது ஒரு பொண்ணு தானே ரமணி மாமி. அவளுக்குச் செய்யாம வேற யாருக்கு செய்யப்போறோம் சொல்லுங்கோ”

“அது சரி தான்”

“காபி போடட்டுமா”

“என்ன கேட்டுண்டு போட்டுண்டு வா பர்வதம்” என்றாள் ரமணி அதற்கு அமபுஜம்

“இல்ல இல்ல பரவாயில்லை மாமி நாங்களும் பூஜை முடிச்சிட்டு பொங்கல் எல்லாம் சாப்டுட்டு தான் கிளம்பினோம் அதுனால ஒண்ணும் வேண்டாம்”

“சரி சரி. மிருது நீ உங்காத்துக்குப் போக துணிமணி எல்லாம் எடுத்து வச்சிட்டையா?”

“ஆங் நேத்தே வச்சாச்சுப் பெரியம்மா”

“அப்போ சரி. பர்வதம் நீ மிருது கையில் ஒரு டிபன் பாக்ஸ்ல கொஞ்சம் பொங்கலாவது வைத்துக் கொடுத்து வத்தும் வசையுமா போயி நல்லபடியா பெத்துப் புள்ளையோட வான்னு சொல்லிக் கொடுத்துட்டு கொஞ்சம் வேப்பிலையை அவள் தலையில வச்சுக் கொடு”

“நான் வேப்பிலைக்கு எங்க போவேனாம்”

“ஏன்டி பர்வதம் வேப்பிலைக்கா பஞ்சம் உங்க பக்கத்தாத்த இருக்கே போய் பறிச்சுண்டு வந்தா போறது”

“ரமணி மாமி அதெல்லாம் வேண்டாம் நானே எங்காத்தேந்து வேப்பிலைக் கொண்டு வந்திருக்கேன். அதை வச்சு விடறேன். மிருது இங்க வா.. திரும்பு”

“சரி வேப்பிலை நீங்களே கொண்டு வந்துட்டேங்கள் சரி வத்து பர்வதம் தானே கொடுக்கணும்.”

“ஆமாம் மாமி”

அனைவரும் பர்வதம் மிருதுளாவிடம் டிபன் பாக்ஸ் கொடுக்கக் காத்திருந்தனர் ஆனால் பர்வதம் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமலிருந்ததைப் பார்த்த அம்புஜம் மிருதுளாவைப் பார்த்து

“உன் பெட்டியெல்லாம் எங்கே இருக்கு மிருது?”

“மாடில இருக்குமா இதோப் போய் எடுத்துண்டு வரேன்”

“இரு இரு அப்பாவும் வருவா நீ எந்தப் பெட்டின்னு காட்டு போதும் அப்பா எடுத்தேண்டு கீழே வந்திடுவா சரியா”

“சரி மா. அப்பா வா” என்று அவள் எழுந்துச் செல்ல முற்பட்டபோது பர்வதம் அவளிடம்

“இதோ உங்க அப்பா அம்மா கொண்டு வந்த இந்த பானை, கரண்டி எல்லாத்தையும் மேலயே வச்சிட்டு உன் பொட்டியை எடுத்துண்டு வா”

என்றதும் ராமானுஜம் அவர் கொண்டு வந்த சீர் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு மாடிக்கு மிருதுளாவுடன் சென்றார். அங்கே பரணில் பாத்திரங்களை நியூஸ் பேப்பர் கொண்டு பொதிந்து வைத்தார். பின் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கீழே சென்றார். மிருதுளா பெட்டை சுருட்டி வைத்து அதை ஒரு போர்வையால் மூடி வைத்துவிட்டு அவள் பீரோவைப் பூட்டி சாவியை ஹான்ட்பேக்கில் போட்டுக் கொண்டு மெல்ல படிகளில் இறங்கி வந்தாள்.

அவள் வந்ததும் ராமானுஜம்

“சரி ஈஸ்வரன் மாமா அன்ட் பர்வதம் மாமி அப்போ நாங்க எங்க பொண்ணையும் கூட்டிண்டு கிளம்பறோம்”

“என்ன வந்ததும் கிளம்பறேங்கள் இருந்து சாப்டுட்டுப் போப்டாதோ!! என்ன பர்வதம் சொல்லு…சும்மா நிக்கறாய்?”

“அவாளுக்கு என்ன வேலையிருக்கோ என்னமோ” என்று பர்வதம் முனுமுனுக்க

“கரெக்டா சொன்னேங்கள் பர்வதம் மாமி. எனக்கு மத்தியானம் மூணு மணிக்கு ஆபீஸ் போகணும் அது தான் அவசரப் படறேன் இல்லாட்டி இருந்து சாப்பிட்டுட்டே கிளம்புவோம். அதுவுமில்லாம ஆட்டோ வெயிட்டிங்கில் இருக்கு அது தான்.”

“சரி சரி நல்லபடியா போயிட்டு புள்ளையப் பெத்துண்டு வாம்மா மிருது”

என்று கூறினாள் ரமணி. ஆனால் ஈஸ்வரனும் பர்வதமும் ஒன்றுமே கூறவில்லை. ரமணி இரண்டு மூன்று முறை சொல்லியும் பர்வதம் வேண்டுமென்றே மிருதுளா கையில் எதுவும் கொடுத்தனுப்பவுமில்லை தலையில் வேப்பிலையும் வைத்தனுப்பவில்லை.

மிருதுளா அவள் மாமனார் மாமியாரிடம்

“நான் போயிட்டு வரேன் ப்பா, வரேன் ம்மா”

என்றாள். அதற்கு இருவரும் “ம்
..ம்” என்று மட்டுமே சொன்னார்கள்.

அங்கிருந்து அம்புஜம், ராமானுஜம், மிருதுளா மூவரும் கிளம்பி வெளியே வந்தனர் ஆனால் அந்த வீட்டில் எவருமே வாசல் வரை கூட வரவில்லை. ரமணி மட்டும் வந்தாள். மூவரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்தனர். மிருதுளா ஆட்டோவுள்ளிருந்து போய்வருகிறேன் என்று ரமணியிடம் கூறிக் கையசைத்தாள். ரமணியும் கையசைத்து பை என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள்.

ஆட்டோ பர்வதம் வீடிருந்தத் தெருவைத் தாண்டியதும் தான் ஏதோ தொலைத்தது மீண்டும் கிடைத்ததைப் போல உணர்ந்தாள் மிருதுளா.

தொடரும்…..




















Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s