அத்தியாயம் 64: சீமந்தம் வளைகாப்பு

வெளியே சென்ற மிருதுளாவும் நவீனும் ஒரு மணி நேரம் நடந்தனர் அப்போது நவீனிடம்

“எனக்கு ஏதோ தெரியாதவா ஆத்துல வந்து தங்கறா மாதிரி இருக்கு நவீ. என் வீடு என் மனுஷான்னு நான் மட்டும் நினைச்சா போதுமா? இங்கே இருக்கறவாளும் நினைச்சா தானே நல்லாயிருக்கும். நான் என்ன தப்பு செய்தேன் ஏன் அவா என்கிட்ட அப்படி நடந்துக்கறா?”

“அது ஒண்ணுமில்லை மிருது அவாளுக்கு நான் உன்னை கல்யாணம் பண்ணிண்டதுல இஷ்டமில்லை அதுதான் வேற ஒரு ரீஸனும் இல்லை”

“என்னது!!! என்ன சொல்லறேங்கள் நவீ? அவாளுக்குப் பிடிக்கலைன்னா அப்பறம் எப்படி என்னை கல்யாணம் பண்ணிண்டேங்கள்? நீங்க தான் அவா அவ்வளவு தப்பா பேசினபோதெல்லாம் ஒண்ணுமே திருப்பிப் பேசினது கூட கிடையாது அப்புறம் எப்படி அவா சொல் மீறி நம்ம கல்யாணம் நடந்தது? இட்ஸ் ஷாக்கிங் ஃபார் மீ!”

“எனக்கு உன்னைப் பிடிச்சிருந்தது கல்யாணம் பண்ணிண்டுட்டேன். உன்னை பெண் பார்த்து வந்ததுமே உன்னை வேண்டாம்ன்னு சொன்னா ஆனா எனக்கு அவா சொன்ன ரீஸன்ஸ் திருப்தியா இருக்கலை அதுனால நான் பிச்சுமணி மாமா கிட்ட அபிப்பிராயம் கேட்டேன் ஏன்னா அவரும் உங்காத்துக்கு வந்திருந்தார் இல்லையா. அவர் என்னிடம் ப்ரோஸீட் பண்ணச் சொன்னார். அதுக்கப்புறம் நான் வந்து பார்த்தேன் ரொம்ப பிடிச்சதுனால கல்யாணம் பண்ணிண்டேன்.”

“என்னை வேண்டாம்ன்னு சொன்னதுக்கு ரீஸன் சொன்னா?”

“அது தான் சொன்னேன் இல்லையா அது ப்ராப்பர் ரீஸன் இல்லன்னு அப்புறம் ஏன் நான் அதை உன்கிட்ட சொல்லணும். லீவ் இட்… எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கு இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு!! இனி நம்ம ஜுனியர் பத்தி மட்டும் யோசிப்போம் மிருது. இவாளோட இந்த டிராமா எல்லாம் நாம மூணு பேரும் குஜராத்துக்கு போயிட்டா முடிஞ்சிடும்.”

“மூணு பேரா? அது யாரு மூணாவது ஆள்?”

“நம்ம ஜுனியர் தான். வேற யாரு?”

“ஹா! ஹா! ஹா! தெரியும் சும்மா கேட்டேன்”

என்றுக் கூறிக்கொண்டே நவீனின் கையோடு தன் கை கோர்த்து நடக்கலானாள் மிருதுளா. நவீன் கூறிய விஷயங்களில்.. அவள் மனம் சந்தோஷத்தில் துள்ளியது. என்ன தான் மாமனார் மாமியார் கொடுமைகள் ஒரு பெண்ணிற்கு இருந்தாலும் தன் கணவன் தனக்காக இருக்கிறான் என்பதே அவள் அதனைத்தையும் கடந்துச் செல்ல ஓர் ஊன்றுகோல் போல் இருக்கும்.

மிருதுளாவின் மனம் நவீனின் ஆதரவான பேச்சின் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது சட்டென அவள் நவீனிடம்

“இப்போ புரியறது உங்க பேரன்ட்ஸ் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறான்னு!!! அதுனால தான் அனைக்கு என்னை அப்படியே போயிடு எங்க புள்ளைக்கு நாங்க வேற கல்யாணம் பண்ணி வச்சுக்கறோம்ன்னு சொன்னாளா!!! ஓகே! ஓகே! நான் ஏதோ உங்க மேலே உள்ள பொஸஸிவ்னஸ் என்று நினைச்சேன்.”

“பொஸஸிவ் ஆ!!! யாரு அவாளா? என் மேலயா!!! நல்ல காமெடி. அதெல்லாம் அவாளுக்கு இல்லை மிருது.”

“இட்ஸ் ஓகே நவீ! ரீஸன் எதுவா இருந்தா என்ன? நீங்க இந்த மண்ணுல பிறப்பதற்கும், எனக்கு நீங்க கணவரா கிடைச்சதுக்கும் காரணமாக இருந்தவா அவா தானே!!! அதுனால் அவாளை நான் மன்னிச்சுடறேன். இங்க பாருங்கோ நவீ!! உங்களை அவாகிட்டே இருந்து பிரிச்சுக் கூட்டிண்டு போக நான் வரலை. நமக்கும் குடும்பம் வேணும். நம்ம குழந்தைக்கும் தாத்தா, பாட்டி, சித்தப்பா எல்லாரும் வேணும். அதுனால தான் இவா பேசறது, பண்ணறது எல்லாத்தையும் பொறுத்துக்கறேன். வில் கிவ் தெம் டைம் டூ டைஜஸ்ட் தி ஃபாக்ட் தட் ஐ ஆம் தெயர் டாட்டர் இன் லா அன்ட் இட் கெனாட் பீ சேஞ்சுடுன்னு. அதைப் புரிஞ்சுண்டுட்டான்னா மாற்றம் வரும்ன்னு நம்பறேன். நம்பிக்கைத் தானே வாழ்க்கை!.”

“ஹலோ மேடம்!! நான் பொறக்கறதுக்கு வேணும்னா அவா காரணமா இருக்கலாம் ஆனா உனக்கு கணவனானதுக்கு முழுக் காரணமும் நானே தான்.”

“ஓகே சார் ஜீ! ஓகே! ஒத்துக்கறேன். சரி சரி ஆத்துக்குப் போகலாம் நேரமாயாச்சு! போதும் நடந்தது.. வாங்கோ”

“ஓகே யுவர் ஆனர்”

“ஐய்யே!!! சரி சரி அப்படியே அந்த தெருவோட ட்ரன் பண்ணிடுவோம்”

இருவரும் பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். நவீனும் மிருதுளாவும் உள்ளே நுழையும் பொழுது அனைவரும் உணவருந்திவிட்டு அவரவர் சாப்பிட்ட தட்டுகளை அலம்பி வைத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் நவீன் பவினிடம்

“என்ன டா எல்லாரும் சாப்பிட்டாச்சா?”

“ஆங் சாப்டாச்சு”

“சரி மிருது நாமளும் சாப்பிட்டுட்டு மாடிக்கு போகலாம் வா. நீ ஏன் இப்போ ஒரு தடவை ஏறி, இறங்கி சாப்பிட வந்து மறுபடியும் ஏறணும்!! அதுக்கு சாப்டுட்டே போயிடலாம். உட்காரு வா”

என்றான். உடனே மிருதுளாவும் இரண்டு தட்டுகளை அலம்பி எடுத்து வந்து அமரும் போது

“அம்மா நீங்க சாப்ட்டாச்சா?”

“ம்..ம்..ஆச்சு ஆச்சு.”

“சரி மா. அப்போ நாங்க சாப்டுட்டு பாத்திரங்களை எல்லாம் ஒழிச்சுப் போட்டு தேய்ச்சு வச்சிடவா?”

“ம்…ம்”

என ம் வரிசையிலேயே பேசிவிட்டு உள் ரூமிற்குள் சென்றாள் பர்வதம். ஹாலில் பவினும், ப்ரவினும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். நவீனும் மிருதுளாவும் சாப்பிடுவதற்கு சாதத்தைப் பார்த்தனர்… குறைவாக இருந்தது. குழம்பு, பொறியலும் குறைவாக இருந்தது. இருப்பதை இருவரும் உண்டபின் மிருதுளா பாத்திரங்களை எல்லாம் போட்டு தேய்க்க ஆரம்பித்தாள். அப்போது நவீன் அவளுக்கு உதவி விட்டு உள்ரூமிற்குச் சென்று

“ரெண்டு பேர் எக்ஸ்ட்ரா இருக்கோம். கொஞ்சம் ஜாஸ்தி சமைச்சிருக்கலாம்.”

என்று கூறியதற்கு பர்வதம் ஈஸ்வரனைப் பார்த்தாள் அவ்வளவு தான் உடனே தன் தர்மபத்தினி மனமறிந்த அவர்…

“டையத்துக்கு சாப்பிட வரணும். அதுவுமில்லாம அவளும் சமைக்கலாமே”

இடையில் பர்வதம்

“வெளிய போனவா சாப்டுட்டு வந்தா எக்ஸ்ட்ரா செய்தது மிச்சமான வேஸ்ட் ஆகிடும். அதை கொட்டவா முடியும்?”

“இப்படி பத்தும் பத்தாம செய்றதுக்கு எக்ஸ்ட்ரா ஆச்சுன்னா கொட்ட வேண்டாம் ஆனா ஃப்ரிட்ஜில் வைக்கலாமே!”

“நாங்க பழையதெல்லாம் சாப்பிட மாட்டோம்”

இதற்குமேல் நவீன் பேச விரும்பவில்லை. இந்த பேச்சை வளர விட்டால் தேவையில்லாமல் பிரச்சினை பண்ணுவார்கள் என்பதை உணர்ந்தவன் சட்டென

“இன்னும் ஒரு அஞ்சு நாள் தான் அதுவரை கொஞ்சம் ஜாஸ்தி சமைக்க முடிஞ்சா பண்ணு இல்லாட்டி மிருதுவ பார்த்துக்கச் சொல்லிக்கறேன்”

என கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தான் மிருதுளாவும் பாத்திரங்களை எல்லாம் தேய்த்து வைத்து விட்டு வந்தாள். அவளிடம்

“வேலை ஆச்சா மிருது”

“ஆங் ஆச்சு நவீ”

“சரி வா நாம மேல போகலாம்”

இருவரும் மாடியில் அவர்கள் ரூமிற்குச் சென்றனர். அங்கே மிருதுளாவிடம்

“இத்தனைப் பேர் இருக்கோமே கொஞ்சம் ஜாஸ்தியா எல்லாம் செஞ்சா தான் என்னவாம்?”

“பரவாயில்லை நவீ ஜஸ்ட் லீவ் இட். இன்னும் ஒரு அஞ்சு நாள் தானே அட்ஜெஸ்ட் பண்ணிண்டுட்டா போறது. அவா இதை ஒரு இஷ்ஷுவா ஆக்கணும்ன்னு நினைச்சுப் பண்ணறாளோ என்னவோ அது நமக்குத் தெரியாது ஆனா நாம அதற்கு இடம் கொடுக்காமல் இருந்திடுவோம். இப்போ என்ன நமக்கு சாப்பாடு இல்லைன்னு அவா சொல்லலையே!!! இருக்கறதை சாப்பிடுவோம் அவ்வளவு தான். நாம என்ன வாழ்நாள் முழுவதும் இங்கேயே இருக்கப் போறோமா என்ன? விடுங்கோப்பா லைட்டை ஆஃப் பண்ணிட்டுப் படுங்கோ”

நவீன் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டுப் படுத்தான் ஆனாலும் அவனுக்கு பர்வதம் செய்ததுப் பிடிக்கவில்லை. மிருதுளா வீட்டில் அவனையும் மிருதுளாவையும் எப்படி கவனித்தார்கள் என்பதை யோசித்துப் பார்த்தான். ஆனால் அவன் வீட்டிலோ அவனுக்கும் அவன் மனைவிக்கும் துளிக் கூட மரியாதை என்பதில்லை என்று எண்ணி தனக்குத் தானே நொந்துக் கொண்டான். அதை நினைத்துக் கொண்டே சற்று நேரம் புரண்டு படுத்து விட்டு பின் உறங்கிப்போனான்.

காலை விடிந்தது வழக்கம் போல எல்லா வேலைகளும் நடந்தது. இறுக்கமான சூழல் தொடர்ந்தது. ஆனால் மத்தியத்திற்கு மேல் சீமந்தத்திற்கு சொந்த பந்தங்களின் வருகை வீட்டில் கொஞ்சம் கலகலப்பை ஏற்படுத்தியது. மாலை அனைவரும் இரண்டு வேனிலும் ஏறி மண்டபத்திற்குச் சென்றனர். இவர்கள் சென்ற கொஞ்ச நேரத்தில் எல்லாம் மிருதுளா வீட்டாரும் வந்தனர். அனைவரும் ஒன்றாக அமர்ந்து மாலைச் சிற்றுண்டி அருந்தினார்கள். பின் மறுநாள் காலை ஃப்ங்ஷனுக்கு வேண்டியவைகளை ஏற்பாடு செய்யத் துவங்கினர் நவீன், மிருதுளா, அம்புஜம் மற்றும் ராமானுஜம். பர்வதமும் ஈஸ்வரனும் எதிலும் பட்டுக்காததுப் போல அவர்கள் சொந்தங்களை மட்டும் வரவேற்று அவர்களுடன் ஊரையாடிக் கொண்டிருந்தனர்.

அன்றிரவு அனைவரும் மண்டபத்தில் உணவருந்தியப் பின் படுத்துறங்கினர். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வளைகாப்பு சீமந்தம் சடங்குகள் துங்கின. உள்ளே ஏதோ வேலையாக இருந்த அம்புஜம் வருவதற்குள் பர்வதமும் அவள் கூடப்பிறந்தவர்களும் வளைகாப்பைத் துவங்கிவிட்டனர் . அப்போது நவீனின் சித்திப் பையனின் மனைவி அம்புஜத்திடம்

“மாமி நீங்க இல்லாமயே அங்க தொடங்கிட்டா. அவா எல்லாரும் அப்படி தான். இதை இப்படியே போட்டுட்டு போய் அங்க உங்க பொண்ணு வளைகாப்புல அம்மா நீங்க வளை போடண்டாமா கலந்துக்கோங்கோ போங்கோ.”

என்று கூற அம்புஜம் ரூமிலிருந்து தன் வேலையை செய்துக்கொண்டே எட்டிப்பார்த்து

“இதை தொடங்க எப்படியும் அரைமணி நேரமாகும்ன்னு பர்வதம் மாமி சொன்னாளே!! அதுனால தான் நான் இங்கே இந்த வேலையை அதுக்குள்ள முடிச்சிடலாம்ன்னு வந்தேன். அதுக்குள்ள தொடங்கிட்டாளா. சரி இதோ போறேன்”

வளைகாப்பு சீமந்தம் எல்லாம் நல்லப்படியாக முடிந்ததும். அனைவரும் வந்தவர்களை வரவேற்று அவர்களை சாப்பிட அழைத்துச் சென்று பின் வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டுக் கிளம்பியதும் நெருங்கிய சொந்தங்கள் சிலரும் நவீன் வீட்டாரும் மிருதுளா வீட்டாரும் சேர்ந்து மத்திய உணவருந்தியதும் சற்று ஓய்வெடுத்தப் பின் மூன்று மணியளவில் பூச்சூடல் நடத்தி மிருதுளாவுக்கு த்ரிஷ்டி சுத்திப் போட்டனர். அத்துடன் அனைத்தும் முடிந்தது. மிருதுளா டையர்டாக இருப்பதாக கூறிப் படுத்துக்கொண்டாள் அப்போது அந்த அறையில் அம்புஜம் மிருதுளாவின் புடவைகள் ப்ளௌஸ் எல்லாவற்றையும் மடித்து அவள் பெட்டியில் அடுக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தாள், அங்கே பர்வதமும் அவள் பக்கத்து வீட்டு பர்வத ஜால்ராவும் அவர்கள் துணிமணிகளை மடித்துக் கொண்டிருந்தனர் அப்போது அந்த ஜால்ராவிடம் பர்வதம் ஏதோ கண்ஜாடைக் காட்ட உடனே ஜால்ரா இசைக்க ஆரம்பித்தது

“ஏன் அம்புஜம் மாமி உங்க பொண்ணுத் துணிகளை மட்டும் தான் மடிப்பீங்களா? உங்க மாப்பிள்ளை நவீனோட துணிகள் எல்லாம் இங்க கிடக்கே அதையும் சேர்த்து மடிச்சு வச்சுக்கோங்க”

“அதை பர்வதம் மாமி மடிப்பாங்கன்னு நினைச்சேன் அதுனால தான் மிருதுவோடத மட்டும் மடிச்சு வச்சேன்”

“நவீன் தான இப்போ உங்க மாப்பிள்ளையா மட்டும் தானே இருக்காரு அப்புறம் ஏன் பர்வதம் மாமி மடிச்சு வைக்கணும்?”

“இதெல்லாம் பேசறதுக்கு நீங்க யாருங்க? என் பொண்ணோட மாமியாரா? பக்கத்து வீட்டுக் காரங்கன்னா அந்த லிமிட்டோட இருந்துக்கோங்க அதுதான் உங்களுக்கு மரியாதை. ஏதோ நீங்க தான் நவீனோட அம்மா மாதிரி பேசரீங்க. என்ன பர்வதம் மாமி கண்டவாள பேச விட்டு வேடிக்கைப் பார்க்கறேளே நல்லாவாயிருக்கு?”

என்று ஆத்திரத்தில் பேச அதற்கு பர்வதம்..

“நான் ஒண்ணும் அவாகிட்ட எதுவும் கேட்கச் சொல்லலை. இங்கே நடக்தறதெல்லாம் அவாளும் பார்க்கறாயில்ல அது தான் கேட்கறா”

“அப்படியே கேட்டாலும் அதைப் பார்த்துண்டு நீங்க இப்படித் தான் சும்மா இருப்பேளா?”

“அம்மாடி என்ன பர்வதம் மாமி உங்க சம்மந்தி இப்படி எல்லாம் பேசுது!!! நீங்க ரொம்ப பாவம் மாமி. உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அம்மாகாரியே இப்படி பேசுதுன்னா அப்போ நீங்க சொன்னது சரிதான். இந்த மிருதுளா எப்படிப் பேசிருப்பா?”

“மறுபடியும் சொல்லறேன் என் பொண்ணைப் பத்தியோ இல்லை அவ குடும்பத்தைப் பத்தியோ பேச உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்லை. இதுக்கு மேல பேசினேங்கள் …”

என்று முடிப்பதற்குள் நவீன் உள்ளே வந்து

“என்ன என்ன சத்தம் இங்கே என்ன ஆச்சு”

“தம்பி நவீனு உன் மாமியார் காரி என்னமா பேசுதுப்பா உங்க அம்மா பாவம் ப்பா.”

“எதுவா இருந்தாலும் நாங்க பார்த்துக்கறோம். ஆமாம் நீங்க சாப்டாச்சா?”

“ஆங் சாப்டாச்சுப்பா ஏன் கேக்குற?”

“அப்போ இன்னும் அஞ்சு நிமிஷத்துல நம்ம ஊருக்கு பஸ் மண்டபம் வாசல்லேந்து இருக்கு. தாம்பூலம் வாங்கிட்டேங்களா இல்லைன்னா வாங்க நானே வாங்கித் தரேன்.”

“இங்கேந்து கிளம்புன்னு சொல்லற. பாவம் பர்வதம் மாமி நீங்க. இதுக்கு மேல நான் ஏன் இங்க இருக்கப் போறேன். கிளம்பறேன். வரேன் மாமி”

என்று அந்த அறையை விட்டு அவள் சென்றதும் அம்புஜம் நவீனைப் பார்த்து

“அவா தேவையில்லாம என்னையும் என் பொண்ணையும் அவமானப் படுத்தினா அதனால நானும்….”

“நீங்க எதுவும் எக்ஸ்ப்ளேயின் பண்ண வேண்டாம். எனக்கு அந்த லேடியைப் பத்தி நன்னாவே தெரியும். நீங்க உங்க வேலையைப் பாருங்கோ.”

என கூறி பர்வதத்தைப் பார்த்து ஒரு முறை முறைத்து விட்டுச் சென்றான் நவீன். அம்புஜத்திற்கு பர்வதம் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறாள் என்பது நன்றாக புரிந்தது. அவர்கள் அனைத்தையும் அடுக்கி வைத்ததும் வெளியே வட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அம்புஜம் அனைவர் முன்னிலையிலும் (என்னதான் இவர்களே ஏற்பாடு செய்திருந்தாலும் சம்மந்திகளை விட்டுக்கொடுக்காமல்)

“வளைகாப்பு சீமந்தம் எல்லாம் நல்லப்படியா நடந்தது. ரொம்ப சந்தோஷம். அப்புறம் நாங்க எங்க பொண்ணை எப்போ எங்காத்துக்கு அழைச்சிண்டுப் போறதுன்னும் சொல்லிட்டேங்கள்ன்னா நல்லா இருக்கும்”

என்று அனைவர் முன்னிலும் கேட்டது பர்வதத்திற்கு ஷாக் ஆனது. ஆமாம் தனியாக இதை கேட்டால் பிரச்சினை செய்வார்கள் என்பது நன்கறிந்ததே அது மிருதுளாவை மனதளவில் பாதிக்கும் அதை தவிர்ப்பதற்காகவே அம்புஜம் அப்படி கேட்டுதுப் போல தான் தோன்றுகிறது. சில நேரங்களில் சூட்சுமமாக நடக்கத் தெரியாதவர்கள் கூட ஒரு முறைப் பட்டால் தெரிந்துக் கொள்வதோடு அதற்கு ஏற்றார் போல் நடக்கவும் செய்கின்றனர். இந்த மாற்றம் பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி ஆகிறது. பர்வதம் அதற்கு அவள் சகோதரியான ரமணியிடம் ஏதோ முனு முனங்க உடனே அவள்

“இங்கே பாருங்கோ அம்புஜம் மாமி. எங்க பர்வதம் என்ன சொல்லறான்னா….இன்னைக்கு பத்து தேதி ஆச்சு, இன்னும் நாளு நாள்ல பொங்கல் வர்றது அதுனால அது முடிஞ்சிட்டு நல்ல நாள் பார்த்து நீங்க மிருதுளாவை உங்க ஆத்துக்கு பிரசவத்துக்கு கூட்டிண்டு போகலாம்”

“அதுக்கப்புறம் ஏன் நல்ல நாள் பார்க்கணும். பொங்கல் அன்னைக்கே மத்தியானம் வந்து கூட்டிண்டு வந்திடறோம்”

“அதுவும் சரிதான். என்ன பர்வதம் அவா சொல்லறதும் எனக்கு சரியா தான் படறது.. ஓகே தானே”

என்று சகோதரி கூறியது பர்வதத்திற்கு பிடிக்கவில்லை. அவள் மீண்டும் ஒரு டிராமாவுக்கு ஸ்க்ரிப்ட்டோடு காத்திருந்ததை அவளின் சகோதரியே கிழித்தெரிந்ததில் வருத்தம் கோபம் இருந்தாலும் சபையில் அவளால் காண்பிக்க முடியவில்லை ஆகையால் சரி என்று சம்மதித்தாள். உடனே அம்புஜம்

“அப்போ எல்லாம் நல்லபடியா பேசியாச்சு . அதுபடி நாங்க பொங்கல் அன்னைக்கு காலையில ராகு காலம் முடிஞ்சதும் வந்து எங்க மிருதுவ கூட்டுண்டு வந்திடறோம். ரமணிமாமி பேசாம நீங்களும் நாங்க மிருதுளாவை ஆத்துக்கு அழைச்சுண்டு வர வரும்போது பர்வதம் மாமி ஆத்துக்கே வந்திடுங்கோளேன்”

“ஓ! பேஷா வந்துடறேன். என்னடி பர்வதம் அப்போ இந்தப் பொங்கல் எங்களுக்கும் உங்காத்த தான் சரியா”

என்றதும் பர்வதத்திற்கு ஒன்றும் பேச முடியவில்லை. தலையை சரி என்று அசைத்தாள். அம்புஜம் மீண்டும் தாங்கள் கேவலப்படாமலிருக்க முன்னெச்சரிக்கையாக பர்வதத்தின் அக்கா ரமணியையும் அன்று வரச்சொல்லியிருக்கிறாள்.

மிருதுளா வீட்டார் அனைத்தையும் பேசி முடிவெடுத்ததும் மண்டபத்திலிருந்து கிளம்பி அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். நவீன் வீட்டாரும் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் வண்டியில் எடுத்து வைக்க வேண்டிய பெட்டியின் எண்ணிக்கை அதிகம் என்பதால் நவீன் மிருதுளாவை ரூமில் படுக்கச் சொல்லி பர்வதத்தையும் ஈஸ்வரனையும் அவளுக்கு துணையாக அமரச்சொல்லிவிட்டு தன் சகோதரன்களுடன் சேர்ந்து பெட்டிகளை எல்லாம் முதலில் மாடியிலிருந்து கீழே இறக்கிவைத்தான். பின் வண்டியில் ஏற்றினான். அந்த நேரத்தில் மிருதுளா சற்றுக் கண் அசந்தாள். அவளை அங்கேயே விட்டுவிட்டு நவீனுக்கே தெரியாமல் வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டனர் மூத்த தம்பதியர். இதற்கிடையில் மிருதுளா எழுந்துப் பார்த்தாள் மண்டபமே காலியாக இருந்தது. பதற்றமானாள். மெல்ல எழுந்து மாடியில் இருந்த எல்லா அறைகளிலும் பார்த்தாள். தன்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்களா என்று ஒரு நொடி யோசித்ததில் அவள் கண் கலங்கியது. உடனே

“மிருது மிருது” என நவீனின் குரல் கேட்டதும் கண்களைத் துடைத்துக் கொண்டு

“நவீ நான் இந்த ரூம்மில் இருக்கேன். இதோ வரேன்”

“உன்னை அங்க காணும்ன்னு பதறிப் போயிட்டேன்”

“நானும் தூங்கிட்டேன். எழுந்துப் பார்த்தா யாரையும் காணும் அதுதான் ஒவ்வொரு ரூமா தேடிண்டிருந்தேன். நீங்க வந்துட்டேங்கள். என்னை விட்டுட்டுப் போயிட்டேங்களோன்னு ஒரு செக்கனட் பயந்துட்டேன் தெரியுமா!”

“அது எப்படி நான் உன்னை விட்டுட்டுப் போவேன் மிருது. உன்னைப் பார்த்துக்கச் சொல்லி அவாளை உட்கார வச்சுட்டு வண்டியில பெட்டிகளை எல்லாம் ஏத்திட்டு சமையல் காராளுக்கு எக்ஸ்ட்ராவா ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்துட்டு வந்து பார்க்கறேன் அவா எல்லாரும் வண்டிக்குள்ள உட்கார்ந்திருக்கா!!! அப்போ உன்னை தேடினேன் நீ இருக்கலை!! எங்க நீன்னு கேட்டதுக்கு அவாளுக்கு தெரியாதுன்னு அலட்சியமா சொல்லிட்டு உட்கார்ந்திருந்தா!! அது தான் உடனே உன்னைத் தேடிண்டு வந்தேன். சரி படியில பார்த்து இறங்கு”

நவீனும் மிருதுளாவும் மெல்ல இறங்கி வந்து வண்டியில் ஏறினர். அப்போது பர்வதம்

“மேலேந்து கீழ வர்றதுக்கு இவ்வளவு நேரமா எடுத்துப்பா!! எவ்வளவு நேரம் வண்டிலயே காத்திருக்கறது”

அதை துளியும் பொருட்படுத்தவில்லை இளம் தம்பதியர். மாசமான பெண் என்று கூட பார்க்காமல் அவர்கள் இவ்வாறு செய்து அவர்களின் பாவ கணக்கில் இன்னுமொரு எண்ணைக் கூட்டிக் கொண்டனர் மூத்த தம்பதியர்.

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s