அத்தியாயம் 63: மூன்றாம் பிரவேசம்

அம்புஜம் என்ன தான் சமாதானம் சொன்னாலும் அன்று இரவு முழுவதும் மிருதுளாவின் மனம் கலங்கியது. அவள் மனம் அவளிடம்…

ஏன் ஃபைலை எடுத்துச் சென்றார்? யாருக்கு காட்டுவதற்கு? அதை ஏன் மறைத்து எடுத்துச் செல்ல வேண்டும்? இதில் பர்வதம் ஈஸ்வரனின் சூழ்ச்சி ஏதாவது உள்ளதா? எதற்காக இருக்கும்?

என்று பல கேள்விகளை ஒன்றின் பின் ஒன்றாக கேட்டதில் அவளுக்கு உறக்கம் வரவில்லை. விடியலுக்காக காத்திருந்தாள். காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து தயாராகி நவீனின் வரவுக்காக காத்திருந்தாள். அப்படி அவள் காத்திருந்தபோது அம்புஜத்திடம்…

“அம்மா இப்போ நான் அங்க நவீன் கூட போனேன்னா மறுபடியும் இங்க வர்றதுக்கு அவா ரெண்டு பேரும் என்னை அசிங்கமா பேச மாட்டாளே!!”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது மிருது கவலைப் படாதே என்னதான் இருந்தாலும் அது உன் வீடு. என்னைக்கா இருந்தாலும் நீ அங்க தான் வாழ்ந்தாகணும். நீ நவீன் கூட போ வளைகாப்பு முடிஞ்சதும் உன்னை நாங்க எங்க கூடவே அழைச்சிண்டு வந்திடரோம் சரியா”

“இல்லம்மா எனக்கு அங்க போய் அவா முகத்தைப் பார்த்தாலே அவா பேசினதெல்லாம் ஞாபகம் வரும் அப்போ எப்படி அங்க சகஜமா இருக்க முடியும்?”

“அவா அப்படித் தான்னு மனசுல நினைச்சுக்கோ. நீ அவாளுக்காக அங்க போகலை உன் புருஷனுக்காக போறன்னு நெனச்சுண்டு போ. அதுவுமில்லாம தப்பு பண்ணினவா அவா நீயில்லையே!!! அவா பேசின பேச்சுக்கெல்லாம் அவா தான் உன்னை பார்க்க வெட்கப் படணும். ஆனால் அவா அப்படிப் பட்டவா கிடையாது அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதை விட்டுவிடுவோம். உன்னை உன் ஆத்துக் காரர் கூட்டிண்டுப் போறார் நீ போற அவ்வளவு தான். சீமந்தம் வளைகாப்பு முடிஞ்சதும் நாங்க உன்னை எங்களோட கூட்டிண்டு வந்திடறோம். கவலைப் படாதே சரியா.

“சரி மா. ஆனா மறுபடியும் என்னைக் குத்தி குத்திப் பேசினானா!!”

“நீ கண்டுக்காதே. இப்படிப்பட்டவாகிட்ட நாம திருப்பிப் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படியே பேசினாலும் அவா பேச்சைத் திசைத் திருப்பி நம்மளையே அசிங்கப் படுத்தறா மாதிரி கத்து கத்துன்னு கத்துவா!! அதனால என்ன வேணும்னாலும் பேசிட்டுப் போட்டும் நீ காதுக் குடுத்துக் கூட கேட்காதே அதே சமயம் அவா பெரியவா அதுனால அதுக்கு தகுந்த மரியாதையை குடு. மத்ததை எல்லாம் அந்த அம்பாள் பார்த்துப்பா. சரியா.”

“ம்…ஓகே மா”

என்று வெளியே சென்னாலும் உள்ளுக்குள் அவர்கள் மீண்டும் ஒரு சண்டை போட்டிடுவார்களோ என்ற பயம் மிருதுளாவுக்கு இருக்கத் தான் செய்தது.

காலை ஒரு பதினோரு மணி அளவில் நவீன் வந்தான். அவன் வந்ததும் அவன் கையைப் பார்த்தாள் மிருதுளா. அவன் கொண்டுச் சென்ற ஃபைல் பேக் திருப்பி எடுத்து வந்திருந்தான். அந்த பையை எடுத்துச் சென்ற இடத்திலேயே மீண்டும் வைத்தான் நவீன். ஏன் எடுத்துச் சென்றான்? என்ற விவரங்கள் ஏதும் சொல்லவில்லை. பின் மிருதுளாவிடம்

“மிருது ஆர் யூ ரெடி? நாம கிளம்பலாமா”

“கிளம்பலாம் நவீ ஆனா நான் மறுபடியும் இங்கே வர்றதுக்கு உங்க அப்பா அம்மா கிட்ட அனாவசியமா தேவையில்லாத பேச்சுகள் வாங்க எனக்கு இஷ்டமில்லை. அதனால வளைகாப்பு முடிஞ்சதும் நீங்களே என்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டு தான் ஊருக்கு கிளம்பணும் அப்படின்னா நான் வர்றேன் இல்லாட்டி எனக்கும் என் குழந்தைக்கும் எதுவும் வேண்டாம். நாங்க இங்கேயே எந்த வித ஏச்சும், குத்தல் பேச்சும் இல்லாம நிம்மதியா இருந்திடறோம்.”

“யூ டோன்ட் வரி மிருது. போன தடவை மாதிரி இந்த தடவை அவாளை நம்பி தப்பு பண்ண மாட்டேன்.இந்த தடவை அவா உன்னை ஒண்ணும் சொல்லவும் மாட்டா நீ தைரியமா வரலாம்”

“ஓகே அப்போ கிளம்பலாம்”

“மணி ஆயிடுத்து இரண்டு பேரும் சாப்டுட்டே கிளம்பலாமே”

“சரி நாங்க ரெண்டு பேரும் சாப்டுட்டே கிளம்பறோம்”

“இதோ அஞ்சே நிமிஷம் மாப்ள எல்லாம் ரெடி. நீங்க ரெண்டு பேரும் உட்காருங்கோ நான் பறிமாறறேன்.”

“அம்மா நீயும் எங்க கூட உட்கார்ந்து சாப்பிடு மா மூணு பேருமா சாப்பிடலாம். அப்புறம் நீ மட்டும் தனியா உட்கார்ந்து சாப்பிடணும்”

“பரவாயில்லை மிருது. நான் அப்புறம் சாப்டுக்கறேன் நீங்க சாப்பிடுங்கோ”

என்று அம்புஜம் சாப்பாடு பரிமாற நவீனும் மிருதுளாவும் சாப்பிட்டனர். பின் இருவரும் புறப்பட்டனர். அப்போது அம்புஜம் நவீனிடம்

“பண்ணெண்டாம் தேதி மிருதுக்கு செக்கப் இருக்கு.”

“கவலை படாதீங்கோ நான் பதினான்காம் தேதி வரை லீவு போட்டிருக்கேன். நானே அவளை செக்கப்புக்கு கூட்டிண்டு வந்துடறேன்”

“ஹேய் நவீ ரியலீ!! சொல்லவே இல்லை”

“லீவு கிடைச்சுது வந்துட்டேன். ஆனா அப்புறம் இவ்வளவு நாள் கிடைக்குமான்னு தெரியாது. அதை அப்போ பார்த்துக் கொள்வோம். சரி கிளம்பலாமா?”

“ஓ எஸ் கிளம்பலாம். அம்மா நாங்க போயிட்டு வறோம் மா”

“நாங்க வறோம். மிருது அப்பாகிட்டயும் சொல்லிடுங்கோ”

இருவரும் ஆட்டோவில் ஏறி சென்றனர். அம்புஜம் மறுபடியும் அம்மன் படம் முன் நின்று தன் மகள் எந்தவித சிரமமுமின்றி வீட்டுக்கு வந்திடவேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

ராமானுஜமும் அம்புஜமும் நவீனிடம்…தங்கள் மகளை அவன் பெற்றோர் பேசியதையும் அதைக் கேட்கப் போண அவர்களை ஈஸ்வரன் பேசியப் பேச்சைப் பற்றியும் ஒன்றுமே கேட்கவில்லை. இவர்களின் இந்த குணம் மிருதுளாவிற்கு பலவீனமாகாதா? நவீனை இவர்கள் தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா?

ஆட்டோ பர்வதம் வீட்டு வாசலில் சென்று நின்றது. நவீன் ஆட்டோவிலிருந்து இறங்கி காசுக் கொடுத்து விட்டு மிருதுளாவை இறங்கச் சொன்னான். அவளும் இறங்கினாள். அவளுக்கு பழைய நினைவுகள் வந்து அடுத்த அடி எடுத்து வைக்கத் தயங்கினாள். நவீன் வீட்டின் கேட்டைத் திறந்து

“வா மிருது. ஏன் அங்கயே நிக்கற உள்ள வா”

என கூறியதும் விருப்பமில்லாமல் உள்ளே சென்றாள். ஈஸ்வரப்பர்வத கோட்டையில் மிருதுளாவின் மூன்றாவது பிரவேசம் இது.

அவளைப் பார்த்ததும் ஈஸ்வரன்

“வா வா”

என்று சொல்லிவிட்டு உள் ரூமிற்குள் சென்றார். பர்வதம் அது கூட சொல்லாமல் யாரோ வந்திருப்பது போல கண்டுக் கொள்ளாமல் படுத்திருந்தாள். மிருதுளாவுக்கு என்னச் செய்வது என்றே புரியாமல் நின்றிருந்தாள். ஏதோ வரக்கூடாத இடத்துக்கு வந்து மாட்டிக் கொண்டது போல அவள் மனம் படக் படக் படக் என்று அடித்தது. நவீன் அவளை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான். அங்கே அவளிடம்

“இங்க பாரு மிருது நீ இவாளோட இந்த டிரமாட்டிக் ஆக்ஷன்ஸை எல்லாம் கண்டுக்காதே. இன்னும் ஒரு அஞ்சு நாள் தானே. ஓகே வா”

“ம் ….ஓகே ….ஆனா நீங்க இன்னும்… ஏன் என் மெடிக்கல் ஃபைலை அங்கேருந்து எடுத்துண்டு வந்தேங்கள்ங்கறதை என்கிட்ட சொல்லவேயில்லையே!!! இப்பவாவது சொல்லுவேங்களா இல்லை அது சிதம்பர ரிகசியத்தைப் போல வச்சுக்கப் போறேளா?”

“ஹேய் மிருது அதில் அப்படி பெரிய விஷயம் ஒண்ணுமில்லை.”

“அப்போ கேட்டதும் சொல்லியிருக்கலாமே!! ஏன் சொல்லாமல் வந்தேங்கள்?”

“அப்போ நான் இரிட்டேட்ட்டா இருந்தேன் அதுனால எதுவும் சொல்லத் தோணலை அதுனால சொல்லலை”

“சரி இப்போவாவது சொல்லலாமில்லையா”

“இவா என்கிட்ட உன்னைப் பத்தி தப்புத்தப்பா சொன்னா. நீ ஏதோ உங்க அம்மா ஆத்துலேயே இருக்கறதுக்காக செக்கப்ன்னு பொய் சொல்லறதாவும் அதுக்கு உன் அம்மாவும் சேர்ந்துண்டு ரெண்டு பேருமா டிராமா போடறேங்கள்ன்னும் இன்னும் என்னென்னவோ சொன்னா அதை எல்லாம் கேட்டு நான் ரொம்ப இரிட்டேட் ஆகிட்டேன். அதுதான் அவாகிட்ட உன் ஃபைலை காமிச்சு அவா மூஞ்சில கறியப் பூசினேன். இதுக்குத் தான் அந்த ஃபைலை எடுத்துண்டு வந்தேன்”

“அப்படியா சொன்னா? சொல்லுவா சொல்லுவா அதுக்கு மேலேயும் சொல்லுவா இவா. சரி அவாதான் அப்படிக் கேட்டான்னா நீங்க ஏன் இப்படி செஞ்சேங்கள்? கேட்டவா கிட்ட திருப்பிக் கேட்க வேண்டியது தானே? நீங்க ஓழுங்கா பார்த்துண்டா அவ ஏன் அவ அம்மா ஆத்துக்குப் போகப் போறான்னு கேட்டிருக்க வேண்டியது தானே. அவா ரெண்டு பேரும் நடு ரோட்டில நின்னு பத்தாயிரம் ரூபாய் வாங்கிண்டுட்டு அதை அப்படியே உங்ககிட்ட இருந்து மறச்சாளோ அது மாதிரி எங்களை நினைச்சுண்டுட்டாளா? அதைப் பத்தி ஊர்லேந்து வந்ததும் கேட்டிருக்கணும்”

“மிருது உனக்குத் தான் அவாளைப் பத்தித் தெரியுமே. எது கேட்டாலும் ஒக்கே ஒக்கேன்னு கத்த ஆரம்பிச்சிடுவா. நாம சொல்லறதுக்கோ பேசறதுக்கோ அனுமதிச்சா தானே கேட்கவோ பேசவோ முடியும். இப்படிப்பட்டவாட்ட எவிடென்ஸோட ப்ரூவ் பண்ணினா வாயடச்சுப் போவா”

“இது நல்லா இருக்கே! அப்போ அவா என்ன வேணும்னாலும் பேசிக்கலாம், அநியாயம் பண்ணலாம், பழிப்போடலாம், பொய் சொல்லலாம் அதெல்லாம் தப்பில்லை ஆனா நாம நியாயமா ஏதாவது செய்தா அதை எவிடேன்ஸ் காட்டி நிருபிக்கணுமா? சூப்பர் நவீ! சூப்பர் !! இந்த கேவலமான காரியத்துக்கு நீங்களும் உடந்தை! பேஷ்!”

“அய்யோ மிருது உனக்கு எப்படிப் புரிய வைக்கறதுன்னு எனக்குத் தெரியலை. அவா பேச்சில இரிடேட் ஆகி தான் அப்படி செஞ்சேன். ஆம் சாரி ஃபார் தட்.”

“நீங்க என்ன சொன்னாலும் சரி என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்க செஞ்சது தப்பு. அவ்வளவு தப்புப் பண்ணிட்டும் கொஞ்சம் கூட பயமில்லாம அவா இவ்வளவு பேசறான்னா அதுக்கு நீங்க இப்படி அவாளை தட்டிக் கேட்காமல் குடுக்கிற இடம் தான் காரணம். அவா இனி திருந்தவே போறதில்லை.”

“நானும் அதுதான் சொல்லறேன் மிருது அவா திருந்தவே மாட்டா.”

“அவா திருந்தறா திருந்தாம போறா ஆனா நீங்க ஏன் அவாகிட்ட அவா செஞ்ச அட்டூழியங்களை பத்திக் கேட்கலை?”

“கேட்கலைன்னு உனக்கு எப்படித் தெரியும்? நான் கேட்டேன். வழக்கம் போல கத்தினா. நான் கேட்டும் பிரயோஜனமில்லாமல் போச்சு. அதுனால நான் பேசறதையே குறைச்சுண்டுட்டேன்.”

“என்னமோ போங்கோ! என்னமோ பண்ணுங்கோ.”

என்று கூறிக்கொண்டே படுத்திருந்தவள் உறங்கிப் போனாள். மாலை ஐந்து மணி ஆனதும் எழுந்து கீழே வந்து முகம் கை கால் அலம்பி விட்டு காபிப் போட அடுப்படிக்குச் சென்று இரண்டு காபிப் போட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்து ஒன்றை நவீனிடம் கொடுத்து விட்டு தன் காபி தம்பளருடன் கட்டிலில் அமர்ந்து காபியை அருந்தினாள் மிருதுளா.

நவீனும், மிருதுளாவும் ஹாலில் அமர்ந்திருந்தனர். குறுக்கும் நெடுக்குமாக ஈஸ்வரன், பவின், ப்ரவின் நடந்தனர் ஆனால் எவருமே இவர்களை கண்டுக் கொள்ளவில்லை. அப்படி இருவர் அமர்ந்திருப்பதே தெரியாதது போல நடந்துக் கொண்டனர். பர்வதம் வழக்கம் போல வாசலில் அக்கம் பக்கத்தினருடன் அரட்டை அடிக்க சென்று விட்டாள். இதை எல்லாம் பார்த்த மிருதுளா நவீனிடம் மெதுவாக

“இதுக்குத் தான் என்னை இங்கே கூட்டிண்டு வந்தேங்களா? ஏதோ யாரோ வீட்டில இருக்குற மாதிரி எனக்கு இருக்கு. எதுக்குடா இவா வந்தாங்குற மாதிரி அவா எல்லாரும் நடந்துக்கறத பார்த்தா எனக்கு கோபம் தான் வர்றது. ப்ளீஸ் வறேங்களா நாம வெளிய வாக்கிங் போயிட்டு வருவோம்”

“சரி போகலாம் வா”

என்று மிருதுளா நவீனைக் கூட்டிக்கொண்டு அந்த இறுக்கமான சூழலில் இருந்து சற்று நேரம் வெளியே செல்ல கிளம்பினர். அப்போதும் மிருதுளா ஈஸ்வரனிடமும் பர்வதத்திடமும் தாங்கள் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டுத் தான் சென்றாள்.

மிருதுளா அந்த வீட்டுக்கு திரும்பி வரவேண்டிய அவசியமே இல்லை ஏனெனில் ஈஸ்வரனும் பர்வதமும் மாசமான பெண்ணிற்கு வேண்டிய உணவளிக்காமலும், தூங்கவிடாமலும் துன்புறுத்தி, அம்மா வீட்டுக்குப் போக ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக அவளை அசிங்கப் படுத்திப் பேசி துரத்திவிடாத குறையாக வீட்டைவிட்டு அனுப்பினர் அன்று. நவீனும் அவன் பெற்றவர்களின் குணமறிந்து மிருதுளாவுக்கு பக்கபலமாக இருக்கிறான். இப்படி ஒரு சந்தர்ப்பம் திருமணமான பெண்ணிற்கு கிடைத்தால் முதலில் தன் புருஷனைக் கூட்டிக் கொண்டு வெளியேறிடுவாள். இல்லையெனில் ஒரு தென்றல் புயலாகி வருமே என்று புறப்பட்டிடுவாள். ஆனால் மிருதுளா இவ்விரண்டையுமே செய்யாமல் அனைத்தையும் தன் மனம் என்னும் பெட்டகத்திற்குள் போட்டு பூட்டி வைத்துக் கொண்டு பொறுமையாக இருந்தாள்.

சில நேரங்களில் சிலவற்றைப் பொறுத்துப் போவது வாழ்க்கையில் பல மாற்றங்களுக்கு வித்தாக அமைந்திடும். எப்போதும் எல்லாவற்றிற்கும் சண்டைப் போட்டால் அல்லது எதிர்த்துப் பேசினால், அதற்கு மரியாதை இல்லாமல் போய்விடும். அதற்காக பேசாமல் இருந்தாலும் மரியாதை இருக்காது. ஆகையால்

சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டியவர்களிடம், சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய முறையில், சொன்னோமேயானால்

அதற்கு மரியாதை கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் நிச்சயம் அதற்கு பலன் கிடைக்கும்.

பொறுமைக்கு பூமாதேவியைச் சொல்வது வழக்கம் ஆனால் அந்த பூமா தேவியே தற்போது நாட்டிலும், வீட்டிலும் நடக்கும் அநியாயங்களைக் கண்டு பல ரூபங்களில் இயற்கைச் சீற்றங்களாக சீறவில்லையா? மிருதுளா சாதாரண பெண் அவளின் பொறுமைக்கும் எல்லை என்பது நிச்சயம் இருக்கும் ஆனால் அது எதுவரை? அவள் பொறுமையிழந்தால் என்ன நேர்ந்திடும்? எப்போது?

தொடரும்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s