ஈஸ்வரனும் பர்வதமும் ஆட்டோவில் ஏறிச் சென்றதும் மிருதுளா அம்புஜத்தை திரும்பிப் பார்த்து
“நான் தான் சொன்னேன் இல்லையா அவா இங்க வரவேண்டாம் நீங்களே போய் பத்திரிகையை கொடுத்துட்டு வாங்கோன்னு. இப்பப்பாரு நான் நினைச்சா மாதிரியே நடந்தது”
“இப்போ என்ன நடந்தது மிருது. நாங்க போய் குடுத்திருந்தாலும் அந்த மாமி நிச்சயம் இதை எல்லாம் பார்க்க நம்மாத்துக்கு வந்திருப்பா. அவா என்ன வேணும்னாலும் சொல்லட்டும் அந்த புடவையை அந்த மாமிக்கு கண்டிப்பா குடுக்கமாட்டேன். அது உனக்குத்தான். கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம தனக்கு தரச் சொல்லி கேட்டதோடு மட்டுமில்லாமல் வெடுக்கென புடவையை எடுத்து வச்சிண்டுட்டா பாரேன்…அப்போ எனக்கு சரி கோபம் வந்தது. வளைகாப்புக்குன்னு ஒரு புடவை தன் மாட்டுப்பொண்ணுக்கு எடுத்துக் குடுக்கத் துப்பில்லை இதுல எங்க பொண்ணு வளைகாப்புக்கு அவ மாமியாருக்கு.. சம்மந்தி கறுப்புப் புடவை குடுக்கணுமாக்கும். இதெல்லாம் வேற எந்த ஆத்துலையும் நடக்காதது. நமக்குன்னு வந்து வாச்சிருக்கற சம்மந்தி லட்சணத்தை எங்க போய் சொல்ல “
“அம்மா…. இப்போ என் சீமந்தத்துக்கும் எனக்கு பிடிச்சப் புடவையை கட்ட விடாம பண்ணிட்டா பாரு இதுக்குத்தான் அப்பவே சொன்னேன். நீ சும்மா இருந்திருந்தா கூட பேசாம போயிருப்பா”
“நான் என்னடி பண்ணினேன்”
“ம்…சும்மா இல்லாம இந்த புடவை எங்க மிருதுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சுன்னு எல்லாம் ஏன் சொன்ன? அதுதான் அதை எடுத்து வச்சிண்டுட்டா தெரியுமா!!! எனக்கு எந்த விதத்திலும் நல்லது நடக்கக்கூடாது நல்லது கிடைக்கக்கூடாதுங்கறதுல தெளிவா இருக்கா என் மாமியார். இப்போ அவ நினைச்சதை சாதிச்சிட்டா பாரு. ஏன் மா இப்படி இருக்க?”
“நீ ஏன் கவலை படறாய் மிருது. அவாளால இப்போ உனக்கு ரெண்டு புடவையாக போறது அவ்வளவு தானே!! நாளைக்கே போய் இன்னொரு கறுப்புப் புடவை வாங்கிண்டு வரேன்”
“அம்மா உனக்கு நான் சொல்லறது புரியலை!!! நீ இன்னொரு புடவை எடுத்துத்தந்தாலும் என்னால எனக்குப் பிடிச்ச இந்த புடவையை ஃபங்ஷனில் கட்டிக்க முடியாது இல்லையா!!! அதை சொல்லறேன்”
“எனக்கு அந்த மாமியோட கேரக்டர் புரியாம இல்லை மிருது. எங்கடா வம்பை கிளப்பி விடலாம்ன்னு அலையறா. அவாகிட்ட போய் மல்லுக்கு நிக்க நம்மளால முடியுமா சொல்லு. போனா போறது அப்போ கட்டிக்காட்டா என்ன வேறொரு நாள் கட்டிக்கோ இப்ப என்ன அதுனால!!”
“என்னமோ போ மா!!”
நடந்ததை அம்பஜம் ராமானுஜத்திடம் கூறினாள். அதைக் கேட்டதும் ராமானுஜம்
“செலவு இழுத்துண்டே போறது. பார்த்து எடுத்துண்டு வா. வேற வழி”
மறுநாள் விடிந்ததும் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அம்புஜம் கடைவீதிக்குச் சென்று காட்டனில் கறுப்பு நிறப்புடவையில் பழுப்பு நிற பார்டரில் ஜரிகை எம்ப்ராய்டரி போட்டப் புடவையை எடுத்துக் கொண்டு வந்தாள். அன்று மாலை டீ குடித்துக்கொண்டே அதைப் பார்த்ததும் மிருதுளா
“இதையும் உன் சம்மந்தியைக் கூப்பிட்டுக் காமிக்க வேண்டியது தானே..நானே ஃபோன் போட்டுக் குடுக்கவா”
“ஒரு தடவைப் பட்டாச்சு இனி அந்த தப்பைப் பண்ணவே மாட்டேன்டி மா”
என்று பேசிக்கொண்டிருக்கும் போதே ஃபோன் பெல் அடித்தது. அம்புஜம் ஃபோனை எடுத்து..
“ஹலோ நான் அம்புஜம் பேசறேன்”
“ஹலோ மாமி நான் தான் பர்வதம் பேசறேன்.”
“ம்..மாமி நீங்களா சொல்லுங்கோ என்ன திடீர்னு ஃபோன் பண்ணிருக்கேள்?”
“அது ஒண்ணுமில்லை நீங்க அந்த புடவையை மாத்தியாச்சான்னு கேட்க தான் ஃபோன் பண்ணினேன்”
“இல்ல மாமி மாத்தலை ஆனா அதுக்கு பதிலா இன்னொரு கறுப்புப் புடவையை எடுத்துண்டு வந்துட்டேன்.”
“அப்போ அந்த புடவையை என்னப் பண்ணப்போறேங்கள்?”
“அதை யாருக்கும் கொடுக்க வேண்டாம்ன்னு மிருதுளாவையே வச்சுக்கச் சொல்லிட்டார் அவ அப்பா. இப்போ பாருங்கோ மிருதுக்கு இரண்டு புடவை ஆகிடுத்து.”
“அப்படியா சரி நான் ஃபோனை வச்சுடறேன்”
என்று பட்டென்று வைத்துவிட்டாள் பர்வதம். ஃபோன் கட் ஆனதும் அம்புஜம் மிருதுளாவைப் பார்த்து
“எப்படி சமாளிச்சேன் பார்த்தயா!!”
“ஆமாம் !ஆமாம்! போமா!!”
நாட்கள் ஓடியது. எட்டாம் தேதி வரவிருந்த நவீன் ஏழாம் தேதி இரவே வந்துவிட்டான். அது மிருதுளாவுக்கு தெரியாது. அவளுக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டுமென்று ஒரு நாள் முன்னதாகவே வந்துள்ளான். நவீன் குளித்துவிட்டு டிரஸ் மாற்றிக் கொண்டு கீழே ஹாலுக்கு வந்ததும் அமைதி நிலவியது. உணவருந்தினான் பின் மாடிக்குச் சென்று படுத்துறங்கினான். அவனும் அவர்களுடன் ஒன்றுமே பேசவில்லை. மறுநாள் விடிந்தது குளித்துவிட்டு வேகவேகமாக மிருதுளாவைப் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தவனிடம்
“எங்களுக்கு உன்னுடன் பேசவேண்டும்”
என்று மூத்த தம்பதியர் கூற அதற்கு நவீன்
“நான் சாயந்தரம் வந்ததுக்கப்பறமா பேசினா போறாதா?”
“இல்லை இப்பவே பேச வேண்டும்”
சரி என்று பேசினான். பேசி முடித்ததும் குழப்பமும், கோபமும் கலந்த முகத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
மிருதுளா வீட்டுக்கு ஆட்டோவில் சென்று இறங்கினான். அம்புஜம் மாவுமில்லுக்கு செல்லவேண்டி வெளியே வந்தவள் நவீன் ஆட்டோவில் வந்திறங்குவதைப் பார்த்ததும்
“வாங்கோ வாங்கோ!! ஏய் மிருது உன் ஆத்துக் காரர் வந்திருக்கார் மா. உட்காருங்கோ. நான் காபிப் போட்டுக் கொண்டு வரேன்”
என்று கூறிவிட்டு காபி போட அடுப்படிக்குள் சென்றாள். மிருதுளா தன் பெருத்த வயிற்றுடன் நடந்து ஹாலுக்கு வந்தாள். நவீனை அன்று காலை எதிர்பாராத மிருதுளாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சந்தோஷத்தில் அவளுக்கு நவீனிடம் என்னப் பேசவேண்டும் என்றே தெரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்த நவீன் அவளிடம்
“ஏய் என்ன ஆச்சு மிருது? ஏன் இப்போ அழற?”
“ஒண்ணுமில்லை நவீ”
“இந்தாங்கோ காபி எடுத்துக் கோங்கோ. மிருது நான் இந்த அரிசியை மிஷின்ல போய் பொடிச்சிண்டு வர்றேன். சமையல் எல்லாம் ரெடி. உனக்கு ஜூஸ் அன்ட் ஃப்ரூட்ஸ் எல்லாம் ஃப்ரிட்ஜில் வச்சிருக்கேன் எடுத்துக் குடி. “
என கூறி அங்கிருந்துச் சென்றாள் அம்புஜம். பின் நவீன் மிருதுளாவிடம்
“என்ன மிருது உன் வயிறு நான் ஊருக்குப் போகும் போது கூட இவ்வளவு பெரிசா இல்லை இப்போ என்னடான்னா இப்படி இருக்கு!”
“ம்…நம்ம குழந்தை வளர்ந்திருக்கான் இல்லையா!! அது தான் வயிறும் பெரிசா ஆகிருக்கு. சரி நீங்க எப்போ வந்தேங்கள்? என்கிட்ட இன்னைக்கு நைட் வரதா தானே சொன்னேங்கள் அப்பறம் எப்படி காலையில வந்திருக்கேங்கள்?”
“உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத் தான். நான் நேத்து நைட்டே வந்துட்டேன். காலையில எழுந்ததுலேந்து உன்னைப் பார்க்கத்தான் வேக வேகமா கிளம்பி வந்தேன். ஆமா நீங்க எல்லாம் எங்க கிளம்பியிருக்கேங்கள்?”
“அம்மா மில்லுக்குப் போயிட்டு வந்ததும் சாப்டுட்டு ஹாஸ்பிடலுக்கு ரெகுலர் செக்கப்க்கு போகணும் அது தான் ரெண்டு பேரும் ரெடி ஆகியிருக்கோம்”
“ஓ!! அப்படியா அப்போ இன்னைக்கு செக்கப்க்கு நானே உன்னை கூட்டிண்டு போறேன்”
“ஓகே! அம்மாக்கும் கொஞ்சம் ரெஸ்ட் குடுத்தா மாதிரி இருக்கும். பாவம் எனக்காக என்னென்ன பண்ணறா தெரியுமா?சரி அதெல்லாம் விடுங்கோ. ஆமாம் நீங்க ஊருக்குப் போகும் போது உங்க அப்பாகிட்ட என்னைக் கொண்டு போய் எங்தாத்துல விடச் சொன்னேங்களா இல்லையா? உண்மையச் சொல்லுங்கோ”
“நான் சொன்னேன் மிருது. சொன்னதுக்கு சரின்னும் அப்பா சொன்னார். அதுக்கப்புறம் தான் உன்கிட்ட நான் தயாரா இருன்னு சொல்லிட்டுக் கிளம்பினேன் தெரியுமா”
“அப்பறம் ஏன் உங்க அப்பா நீங்க அப்படி எதுவுமே சொல்லிட்டு போகலைன்னு சொன்னா? நீங்க சொல்லறது உண்மையா இல்லை உங்க அப்பா சொல்லறது உண்மையா?”
“நான் சத்தியமா சொல்லிட்டுத்தான் கிளம்பினேன் அவா தான் தேவையில்லாம பிரச்சினை பண்ணனும்னு அப்படி செய்திருக்கா. அதுக்கு நான் நல்லா சொல்லி விட்டுட்டேன். அதை எல்லாம் விடு மிருது. இங்கே நீ நிம்மதியா இருக்கே இல்ல அது போறும்.”
“எங்க இருக்க விடறா உங்க அம்மா. நீங்க ஊருக்கு போனதுக்கப்புறம் இரண்டு தடவை வந்தா ஆனா என்னைப் பார்க்க வரலை அவா காரியத்துக்காக தான் வந்தா. சிறப்பா செஞ்சுட்டுப் போனா…சரி சரி அம்மா வந்துட்டா…இதைப் பத்தி அப்புறமா பேசலாம்..வா மா”
“இன்னைக்கு மாவு மில்லுல கூட்டம் ஜாஸ்தியா இருந்தது அது தான் லேட். சரி ஜூஸ் குடிச்சயா?”
“சாரி மா நவீ கூட பேசிண்டு இருந்ததுல மறந்துட்டேன்.”
“இரு எடுத்துண்டு வரேன்”
என்று கூறிக் கொண்டே உள்ளே சென்று ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வந்து தன் மகளிடம் கொடுத்தாள். பின் நவீனிடம்
“எப்படி இருக்கேங்கள்? சாரி… மில்லுல கூட்டம் அதிகமாயிடும்ன்னு தான் அப்போவே கிளம்பி போயிட்டேன். நீங்க இன்னைக்கு நைட் வரதா தானே மிருது சொன்னா.”
“இல்ல நான் நேத்து நைட்டே வந்துட்டேன். அது தான் காலையிலேயே கிளம்பி இங்கே வந்துட்டேன்”
“சரி சரி நீங்களும் ஜூஸ் குடிக்கறேங்களா தரட்டுமா?”
“இல்ல இல்ல இப்போ தானே காபி குடிச்சேன் ஜூஸ் எல்லாம் இப்போ வேண்டாம்”
“அம்மா இன்னைக்கு செக்கப்க்கு நவீன் கூட்டிண்டு போறேன்னு சொல்லறார்”
“பேஷா ரெண்டு பேரும் சாப்டுட்டு போயிட்டு வாங்கோ. நான் அதுக்குள்ள சாயந்தரத்துக்கு டிபன் ஏதாவது செய்து வைக்கிறேன். வாங்கோ சாப்பிடலாம்”
என்று கூறிக்கொண்டே சாப்பாடு பரிமாறினாள் அம்புஜம். நவீனும் மிருதுளாவும் சாப்பிட்டப் பின் ஹாஸ்பிடல் போக கிளம்பினர் அப்போது அம்புஜம்
“மிருது உன் ஃபைல் எடுத்துண்டுட்டயா மா.”
“ஓ !! இதோ எடுத்துண்டுட்டேன் மா. நாங்க போயிட்டு வரோம்”
என்று ஆட்டோவில் ஏறினர் நவீனும், மிருதுளாவும். ஹாஸ்பிடல் சென்றுக் கொண்டிருக்கும் போது நவீன்
“இது என்ன ஃபைல் மிருது?”
“இதுல தான் என்னோட ஃபர்ஸ்ட் டே செக்கப்லேந்து எல்லா டிட்டேய்ல்ஸும் இருக்கு அது மட்டுமில்லாமல் இன்னைக்கு பண்ணப்போற செக்கப் ரிசல்ட்டையும் இதுல அட்டாச் பண்ணித்தருவா. இதை எடுத்துண்டு போகலைன்னா டாக்டர் செக்கப் பண்ணமாட்டா. நானும் அம்மாவும் ஒரு தடவை மறந்து ஆத்துலேயே வச்சுட்டு ஹாஸ்பிடல் போயிட்டோம் அப்புறம் அம்மா மட்டும் மறுபடியும் வந்து ஃபைலை எடுத்துண்டு வந்தா. அப்புறம் தான் டாக்டர் செக்கப்பே பண்ணினா தெரியுமா?”
“மேடம் ஹாஸ்பிடல் வந்திருச்சு”
“அங் தாங்க்ஸ் அண்ணா. நவீ காசு கொடுங்கோ”
ஆட்டோ காரருக்கு காசு கொடுத்துட்டு ஹாஸ்பிடலுக்குள் சென்று ரெகுலர் செக்கப் முடிந்ததும் மிருதுளா கையிலிருந்த ஃபைலை நவீன் வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டான். மீண்டும் ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தனர். அம்புஜம் சுடச்சுட பஜ்ஜீ, அல்வா எல்லாம் செய்து வைத்திருந்தாள். வேனுவும், ராமானுஜமும் வந்தனர். அனைவரும் அமர்ந்து டிபனை சாப்பிட்டனர். அப்போது ராமானுஜம் நவீனிடம்
“இங்கே தானே இன்னைக்கு இருப்பேங்கள்?”
“இல்ல நான் கிளம்பணும் நாளைக்கு காலையில வந்து மிருதுவைக் கூட்டிண்டுப் போறேன்.”
“என்னத்துக்கு வீணா அங்கயும் இங்கயுமா அலைஞ்சிண்டு பேசாம இங்கயே இருந்துட்டு நாளைக்கு காலையில ரெண்டு பேருமா கிளம்புங்கோ”
“அது தானே!! அப்படியே செய்வோமே நவீ”
“இல்ல மிருது நான் என் ஃப்ரெண்டை பார்க்கப் போகணும் அதுதான்.”
“சரி சரி போயிட்டு வாங்கோ மாப்ள பரவாயில்லை”
“சரி நான் கிளம்பறேன். மிருது ஒரு கவரோ பேக்கோ தாயேன்”
“எதுக்கு நவீ”
“நீ தாயேன் ப்ளீஸ்”
மிருதுளா ஒரு பாலித்தீன் கவர் கொடுத்தாள். அதில் நவீன் ஹாஸ்பிடலில் இருந்தே தன் கையில் வைத்திருந்த ஃபைலைப் போட்டுக் கொண்டு கிளம்பினான். அதை கவனித்த மிருதுளா அவனிடம்
“என்னது அது என் மெடிக்ல் ஃபைலை எதுக்கு எடுத்துண்டு போறேங்கள்?”
“அது அது வந்து…”
“என்ன நவீ எனி ப்ராப்ளம் அகேயின்?”
“இல்ல மிருது நான் இதை இன்னிக்கு மட்டும் எடுத்துண்டு போயிட்டு நாளைக்கு வரும்போது கொண்டு வந்துடறேனே”
“நவீ இதை வச்சு என்னப் பண்ணப் போறேங்கள். அதுவுமில்லாமல் அதுல இருந்து ஏதாவது பேப்பர் தொலைஞ்சுதுன்னா டாக்டர் என்னைத் திட்டுவா.”
“நான் பத்திரமா திருப்பிக் கொண்டு வரேன். பை நான் கிளம்பறேன்”
என்று வேகவேகமாக அங்கிருந்து நவீன் கிளம்பிய விதம் மிருதுளாவிற்கு மனதில் ஏதோ தப்பா இருப்பதுப் போல தோன்றியது. நவீன் சென்றதும் கவலையாக இருந்த தன் மகளிடம் அம்புஜம்…
“மிருது ஏன் மா டல்லா இருக்க?”
“ஒண்ணுமில்லை மா”
“இல்ல நீ மாப்ள வந்துட்டுப் போனதிலிருந்து சரியில்லை. என்ன மறுபடியும் உன் மாமியார் காரி ஏதாவது பிரச்சினைக்கு வலை விரிச்சிட்டாளா?”
“இல்லமா.. அவர் என்னோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் இருக்குற ஃபைலை எடுத்துண்டு போயிருக்கார். அது ஏன்னு கேட்டதுக்கு …சம்மந்தமே இல்லாத பதில் சொல்லிட்டு அவசர அவசரமா புறப்பட்டுப் போயிட்டார்.”
“அது என்னத்துக்கு அவருக்கு? ஏதாவது ஆபிஸ்ல சப்மிட் பண்ணணுமா?”
“இல்லையே!!! அப்படி ஒண்ணும் எனக்குத் தெரிஞ்சு இல்லை. எனக்கென்னவோ இதுக்குப் பின்னாடி ஏதோ பெரிய பிரச்சினை இருக்கும்ன்னு தோணறது மா”
“இதோ பாரு மிருது பிரச்சினை வந்தா பார்த்துப்போம். அதுக்காக பிரச்சினை வந்திட போறதோன்னு நினைச்சுண்டு உன் உடம்பைக் கெடுத்துக்காதே. புரியறதா”
“ம்…ஓகே!”
என்று மிருதுளா தன் அம்மாவிடம் கூறினாலும் அவள் மனதில் ஏதோ தவறு நடக்கப் போகிறது என்ற எண்ணமே ஆக்கிரமித்திருந்தது.
அம்புஜம் அவர்கள் வீட்டில் மாட்டியிருந்த அம்மன் படத்தைப் பார்த்துக்கொண்டே தன் மனதில்
“அம்மா தாயே அந்த ஜெயேந்திரன் மாமா சொன்னது போலவே நடக்கறதே!! அந்த பர்வதம் மாமி எங்க பொண்ணை நிம்மதியா இருக்க விட மாட்டா போல இருக்கே!! அம்மா! தேவி! தாயே! நான் உன்னை நம்பித் தான் கள்ளம், கபடம், சூது, வாது இல்லாத என் பொண்ணை அந்த பையனுக்கு கட்டிக் கொடுத்தேன். என் பொண்ணு படற வேதனையை என்னால பார்க்க முடியலைமா!! ஏதாவது செய்து அவளுக்கு அமைதியான நிம்மதியான, வாழ்க்கையை குடும்மா தாயே.”
ராமானுஜத்தின் அலுவலகத்தில் வேலைப் பார்க்கும், பர்வதம் வாடகைக்கு இருந்த வீட்டின் பக்கத்து வீட்டில் குடியிருந்தவருமான நண்பர் ஜெயேந்திரன் மிருதுளா திருமணத்திற்கு முன் அவர்கள் வீட்டுக்கு வந்து சொன்னது இப்போது நடப்பவைகளுக்கு பொருத்தமாக உள்ளது. அவர் கூறியது போலவே பர்வதம் தன் மகன் மருமகளின் நிம்மதியை ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று செய்து குலைப்பதிலேயே குறியாக இருப்பது நடப்பதை எல்லாம் பார்த்தாலே புரிகிறதே!
தொடரும்……