கோவிலுக்கு சென்று வந்ததும் அம்புஜம் மிருதுளாவுக்கு ஃப்ரெஷ் ஆப்பிள் ஜுஸ் கொடுத்தாள். பின் இருவருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் வேனு தன் சைக்கிளை நிப்பாட்டிவிட்டு வீட்டினுள் நுழைந்தான் அவன் கூடவே ராணி பேக்கரியின் ஹனி கேக் மற்றும் சமோசாவின் வாசம் மிருதுளாவின் மூக்கினுள் நுழைந்தது. வேனு வாங்கிவந்ததை தன் அக்காவிடம் கொடுத்து விட்டு
“இரு மிருதுக்கா நான் அஞ்சே நிமிஷத்துல ஃப்ரெஷ் ஆகிட்டு வந்திடறேன் ரெண்டு பேருமா சாப்பிடலாம்”
என்று கூறி மாற்று துணி எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்றான். அம்புஜம் தன் மகனுக்கு ஹார்லிக்ஸ் போட்டு ஹாலுக்கு வந்து டேபிளில் வைத்து அதன் மேல் ஒரு தட்டை வைத்து விட்டு உள் ரூமுக்கு சென்று விட்டாள். ஏனெனில் அவளுக்கு சமோசா போன்ற மசாலா பொருட்களின் வாசம் பிடிக்காது.
வேனு வந்ததும் அக்காவும் தம்பியுமாக வாங்கி வந்ததை பிரிக்கும் போது ராமானுஜம் வந்தார். தன் ஹார்லிக்ஸ் தம்பளரை மூடியிருந்த தட்டில் தங்கள் அப்பாவுக்கு ஒரு கேக்கும் சமோசாவும் வைத்து விட்டு மீதத்தை இருவரும் உண்டு மகிழ்ந்தனர். அவர்கள் சாப்பிட்ட பின் ஹாலுக்கு வந்த அம்புஜம் வேனுவிடம்…
“டேய் வேனு இப்படி தினமும் இதெல்லாம் வாங்கிண்டு வராதேடா. உடம்புக்கு ஏதாவது வந்திட கின்திட போறது”
“அம்மா நான் எங்க தினமும் வாங்கிண்டு வரேன் இந்த வாரத்தில இது தான் ஃப்ர்ஸ்ட் டைம்”
“சரி சரி இனி வாரத்துல ஒரு நாள் மட்டும் வாங்கிண்டு வா. போதும்”
என்று அம்புஜம் சொன்னதுக்கு சரி என்று தலையசைத்த வேனு…ஈஸிசேரில் அமர்ந்து வயிற்றின் மேல் ரிமோட்டை வைத்து டிவி பார்த்துக் கொண்டிருந்த அக்காவின் வயிற்றையே உற்றுப் பார்த்தான். அதை கவனித்த அம்புஜம்
“டேய் வேனு என்னடா மிருது வயிறை வச்ச கண்ணு வாங்காம அப்படி பார்த்துண்டிருக்க..டேய் வேனு உன்னை தான்”
“ஹாங்!! ஹாங்!!! அம்மா உஷ்”
என்று தன் ஆள்காட்டி விரலை மூடிய தன் வாய் மீது வைத்து அமைதியாக இருக்கும் படி சொல்லிவிட்டு தன் அக்கா அமர்ந்திருந்த ஈஸிசேர் பக்கத்தில் அமர்ந்து ரிமோட்டை கையில் எடுத்தான் உடனே மிருதுளா எழுந்து நேராக அமர்ந்தாள் அதற்கு வேனு
“மிருதுக்கா எழுந்திரிக்காதே முன்னாடி உட்கார்ந்திருந்த மாதிரியே ரிலாக்ஸ்ஸா உட்காரு”
“ஏன் வேனு எதுக்கு?”
“உட்காரேன் ப்ளீஸ். அம்மா அன்ட் அப்பா இங்க வாங்கோ உங்க எல்லாருக்கும் ஒரு மேஜிக் செய்து காட்ட போறேன்”
என்று தன் அக்காவை ஈஸிசேரில் படுக்க வைத்து டிவி ரிமோட்டை அவள் வயிற்றின் மேல் வைத்தான்.
“எல்லாரும் கவனமா பாருங்கோ மாயமில்லே மந்திரமில்லே நான் மிருதுக்கா வயித்துல வச்சிருக்கும் இந்த டிவி ரிமோட் இன்னும் கொஞ்ச நேரத்துல அப்படியே ரவுண்ட் அடிக்கும் பாருங்கோ பாருங்கோ மக்களே நல்லா பாருங்கோ”
என்றதும் அம்புஜம் அவனிடம்
“ஆமாம் பெரிய வித்தை காட்டறான். டேய் குழந்தை வயத்துல நகரும் போது நீ வச்சு இருக்கும் ரிமோட்டும் நகரும் டா.”
“அம்மா அது எனக்கும் தெரியும் ஆனா அப்படி ஒரு அதிசயத்தை நான் இப்போ தானே பார்க்கறேன்”
“அது என்னமோ வாஸ்த்தவம் தான். சரி நீ பாரு நான் போய் டின்னர் ரெடி பண்ணட்டும். ரொம்ப நேரம் ரிமோட்டை வயத்து மேலே வைக்காதடா வேனு அப்புறம் பொறக்கப் போற குழந்தை எப்பப்பாரு டிவி பார்த்துண்டே இருக்கப் போறது”
“ஹா!ஹா! ஹா! அம்மா போ மா”
என்று டிவி ரிமோர்ட்டை தன் அக்கா வயிற்றில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த வேனுவைப் பார்த்து மிருதுளா சிரித்ததும் ரிமோட் கீழே விழுந்தது. அதை தன் கையால் கேட்ச் பிடித்தான் வேனு
“பார்த்தயா இது சூப்பர் கேம் மிருதுக்கா. ஐ லைக் இட்”
“போடா உனக்கு எது எதுல விளையாடணும்ன்னே இல்லையா”
“ப்ளீஸ் அக்கா உட்காறேன் இன்னும் ஒரு தடவை”
“டேய் வேனு எனக்கு டாய்லெட் போகணும்டா”
“ஓ!!! சாரி சாரி நீ போயிட்டு வா”
என்று மிருதுளாவுக்கு சந்தோஷமும் நிம்மதியுமாக டிசம்பர் மாதம் பறந்தது. ஜனவரியில் சீமந்தம் வளைகாப்பு செய்ய வேண்டும் ஆனால் அதைப் பற்றி நவீன் வீட்டார் ஒன்றுமே கூறாததால் அம்புஜம் தன் கணவரிடம்
“ஏன்னா அவா என்ன சீமந்தம் வளைகாப்பு நடத்தற எண்ணத்துல இருக்காளா இல்லையா. அதைப் பற்றி மூச்சு விட மாடேங்கறாளே. நாம போய் என்ன ஏதுன்னு கேட்டுட்டுட்டு வந்துடலாமா”
“என்னத்துக்கு நாம அங்க போய் அசிங்கப் படறத்துக்கா? போக எல்லாம் வேண்டாம் ஃபோன்ல கேளு போதும்”
“அது மரியாதையா இருக்காது”
“ஆமாம் அவா ரொம்ப மரியாதையா உங்கள நடத்தினாளாக்கும். போ மா மரியாதையாம் மரியாதை பேசாம அப்பா சொன்னா மாதிரி ஃபோன்ல கேளு போதும்.”
“அவா எப்படியோ இருந்துட்டு போகட்டும் மிருது. நாமும் அவாளை மாதிரியே செஞ்சா அப்புறம் அவாளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் சொல்லு! ஏன்னா பேசாமா நாம மாப்பிள்ளையிடம் ஒரு வார்த்தை கேட்டுண்டுட்டு அப்புறம் அவா ஆத்துக்கு போய் பேசிட்டு வரலாம் என்ன சொல்லறேங்கள்?”
“என்னமோ பண்ணு. அப்பறம் அங்க போயிட்டு அவா அப்படி பேசினா எங்களை இப்படி சொன்னான்னு எல்லாம் இங்க வந்து பிரச்சினை பண்ணக் கூடாது அப்படின்னா போகலாம்”
“சரி சரி …நீங்க உங்க சைட் க்ளியர் பண்ணிக்கறேங்கள். சுப்பர் போங்கோ. மிருது மா மாப்பிள்ளைக்கு ஃபோன் போட்டுக்குடேன்”
“அம்மா இப்போவே கேட்கணுமா? கொஞ்சம் பொறுமையா இரு. அவர் ஆபிஸ் வேலையில் பிஸியா இருப்பார். மத்தியானம் ஒரு இரண்டு மணிக்கு பண்ணலாம் அப்போ கொஞ்சம் ஃப்ரீயா இருப்பார்”
“சரி மா சரி மத்தியானமே பேசிக்கறேன். இப்போன்னா அப்பாவும் இருக்கா அதுனால சொன்னேன். மத்தியானம் அப்பா ஆபிஸ் போயிடுவா அது தான்…”
“நீ மட்டும் பேசினாலும் தப்பில்லை மா. அப்பா ஆபிஸ் போயிருக்கான்னு சொல்லு”
“ஓகே”
மத்தியம் இரண்டு மணி ஆனதும் நவீன் ஆபிஸ் நம்பருக்கு கால் செய்தாள் மிருதுளா. நவீன் அட்டெண்ட் செய்தான்
“ஹலோ ஆம் நவீன் ஹியர்”
“ஹலோ நவீ நான் மிருது பேசறேன்”
“ஹாய் மிருது எப்படி இருக்க? என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க?”
“அம்மா உங்ககிட்ட என் வளைகாப்பு பத்தி ஏதோ பேசணுமாம் அதுதான் கால் பண்ணினேன். இருங்கோ நான் அம்மா கிட்ட ஃபோனைக் குடுக்கறேன்”
“ஹலோ மாப்ள நன்னா இருக்கேளா?”
“நல்லா இருக்கேன் நீங்க எல்லாரும் அங்க எப்படி இருக்கேங்கள்?”
“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் மாப்ள. அப்பறம் நம்ம மிருது வோட சீமந்தம் வளைகாப்பு பத்தி உங்க ஆத்தேந்து ஒரு தகவலும் வரலை நாள் வேற நெருங்கிண்டே இருக்கு இந்த மாசம் பண்ணலைன்னா ஒன்பதாவது மாசம் ஆரம்பிச்சிடும் அப்புறம் எப்போ பண்ணறது? அது தான் என்ன பண்ண போறேங்கள்ன்னு கேட்க தான் காலையிலேயே ஃபோன் பண்ணச் சொன்னேன் மிருது அப்பாவும் இருந்தார். அவரும் பேசிருப்பார். மிருது தான் நீங்க இந்த டைம்ல ஃப்ரீயா இருப்பேங்கள் ன்னு சொன்னா அது தான் இப்போ பண்ணினேன் ஆனா பாருங்கோ மிருது அப்பாக்கு இன்னைக்கு ரெண்டு டூ பத்து ஷிப்ட் அதனால அவர் பேச முடியலை தப்பா எடுத்துக்காதீங்கோ.”
“பரவாயில்லை இதுல என்ன தப்பா எடுத்துக்க? அவர் சொன்னா! என்ன நீங்க சொன்னா! என்ன இரண்டும் ஒண்ணுதானே. சரி இந்த சீமந்தம் வளைகாப்பு பத்தி என் பேரெண்ட்ஸ் இதுவரைக்கும் என்கிட்ட ஒண்ணுமே சொல்லலை இப்போ நீங்க சொல்லித் தான் எனக்கே தெரியறது. அதுக்கு என்ன பண்ணணும்?”
“சீமந்தம் வளைகாப்பு உங்க ஆத்த தான் பண்ணணும். நாங்க சீர் செய்யணும். இது தான் நம்ம வழக்கம்”
“ஓ அப்படியா? எப்போ வச்சுக்கணும்”
“அடுத்த வாரம் பத்தாம் தேதி சீமந்தம் பண்ண நல்ல நாள்ன்னு குறிச்சுக் குடுத்திருக்கா. நேத்திக்கு தான் குறிச்சு வாங்கிண்டு வந்தேன்”
“ஓ அப்போ நான் லீவ் போடணுமே”
“ஆமாம் பின்ன நீங்க இல்லாம எப்படி சீமந்தம் பண்ணறது மாப்ள”
“சரி நீங்க ஒண்ணு பண்ணுங்கோ அதுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்திடுங்கோ எவ்வளவு ஆகறதோ அதை நான் வந்து கொடுத்துடறேன். நானும் ஒரு எட்டாந்தேதி போல வந்துட்டு பதினொன்றாம் தேதி கிளம்பறா மாதிரி வரேன்”
“மாப்ள நாங்க செய்றத பத்தி இல்ல. உங்க அப்பா அம்மா கிட்ட போய் பேசலாமான்னு?”
“அவாளுக்கு அக்கறை இருந்திருந்தா இதை அவாளே என்கிட்ட சொல்லிருப்பா ஆனா இது வரை ஒண்ணுமே சொல்லலை. நாங்க தான் பண்ணணும்ன்னு நீங்க சொல்லறேங்கள் அது அவாளுக்கும் தெறிஞ்சிருக்கும் இல்லையா!!! நீங்க வேணும்ன்னா போய் பேசிக்கோங்கோ. ஆனா தைவசெய்து எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிடுங்கோ ப்ளீஸ்”
“அச்சச்சோ என்னத்துக்கு ப்ளீஸ் எல்லாம் சொல்லறேங்கள் எங்க கொழந்தைகளுக்கு செய்யாமா வேற யாருக்கு செய்யப் போறோம். சரி மாப்ள நாங்க நாளைக்கே உங்க ஆத்துக்கு போய் பேசிட்டு உங்களுக்கு கால் பண்ணி சொல்லறோம். நீங்க மறந்திடாம லீவ் போட்டு வந்திடுங்கோ. வச்சுடவா”
“ஓகே. கொஞ்சம் மிருதுகிட்ட கொடுங்கோளேன்”
“ஓ!! சரி இதோ குடுக்கறேன். மிருது இந்தா உன் கிட்ட பேசணுமாம்”
“ஹலோ சொல்லுங்கோ நவீ”
“மிருது நான் இன்னைக்கே லீவ் அப்ளை பண்ணறேன். நான் எட்டாம் தேதி வந்துட்டு பதினொன்றாம் தேதி கிளம்பிடுவேன் ஏன்னா அப்போ தான் குழந்தை பிறந்ததுக்கப்புறமும் லீவு கிடைக்கும் சரியா. நீ உடம்ப பார்த்துக்கோ .”
“ஓகே நவீ. இன்னைக்கு செக்கப்க்கு போகணும். டாக்டர் என்ன சொல்லப் போறாளோ தெரியலை”
“ஓகே டேக் கேர். டாக்டர் என்ன சொன்னாங்கிறதை நான் நைட் பேசும்போது கேட்டுக்கறேன். பை மிருது. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்”
“சரிப்பா பை யூ டூ டேக் கேர். ஐ வில் பி வெயிட்டிங் ஃபார் யூ. பை..பை”
என்று ஃபோனை வைத்ததும் ஆட்டோ வரவழைத்து தாயும் மகளும் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கே மீண்டும் எல்லா டெஸ்ட்டும் மிருதுளாவுக்கு எடுக்கப்பட்டது. அம்புஜம் மிருதுளாவிடம்…
” இந்த தடவை டாக்டர் என்ன சொல்லப் போறாளோன்னு பக்கு பக்குன்னு இருக்குடி மிருது”
“என்னத்துக்கு மா பயப்படறாய். நீ கவனிச்சிண்டதுல நான் நல்லா இருக்கேன். நீ வேணும்னா பாரு நம்மளை டாக்டர் பாராட்டுவா”
“பாராட்டவெல்லாம் வேண்டாம் டி….உனக்கு எல்லாம் நார்மலா இருந்து நீயும் குழந்தையும் ஆரோகியமா இருக்கேங்கள்ன்னு சொன்னாலே போதும்”
இருவரும் பேசிக்கொண்டே இருக்கையில் நர்ஸ் மிருதுளா பெயரை சொல்லி டாக்டர் ரூமிற்கு அழைத்தார். மிருதுளாவும் எழுந்து சென்றாள். அவள் பின்னாலேயே அம்புஜமும் சென்றாள். டாக்டர் மிருதுளா சொன்னா மாதிரியே இருவரையும் பாராட்டினார். சிங்கிள் டிஜிட்டிலிருந்த ஹச். பி இப்போது 13.5 க்கு உயர்ந்துள்ளது மற்றும் அனைத்தும் நார்மலாக இருப்பதாகவும், தாயும் சேய்யும் ஆரோகியமாக இருக்கிறார்கள் என்று அவர் சொல்லி கேட்டதும் அம்புஜம் தன் மனதினுள்
“அம்மா தேவி தாயே ரொம்ப நன்றி மா”
ஹாஸ்பிடல் விசிட் முடிந்து வீட்டுக்கு வந்ததும் வழக்கம்போல அம்புஜம் தன் மகளை கவனிக்கத் துவங்கினாள். அன்றிரவு அம்புஜம் தன் கணவனிடம் மாப்பிள்ளை சொன்னவற்றை சொன்னாள். மறுநாள் விடிந்தது. ராமானுஜத்துக்கு மத்தியானம் தான் வேலைக்கு போக வேண்டியிருந்ததால் காலை ஒரு பத்து மணியளவில் நவீன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஈஸ்வரனும் பர்வதமும் சீமந்தம் வளைகாப்பிற்கு தேதி குறித்து மிருதுளாவின் பெற்றவர்களை வந்து அழைக்க வேண்டும் ஆனால் இங்கோ..ஈஸ்வரனும் பர்வதமும் செய்ய வேண்டியதை இப்போது ராமானுஜமும் அம்புஜமும் செய்கின்றனர்.
பொறுப்பற்ற பெற்றவர்கள் தங்கள் பிள்ளையை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார்கள் என்பதை விட அவமதித்துள்ளார்கள் என்பதே மிக பொருத்தமானதாகும்.
இதை சாக்காக வைத்து என்னென்ன செய்ய போகிறார்களோ மூத்த தம்பதியர்?
தொடரும்…….