அத்தியாயம் 59: பாட்டியுடன் பர்வத விஜயம்

பரீட்சைகள் முடிந்ததும் மிருதுளா தினமும் அவள் அம்மா சொல்படி குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கு வேண்டிய அனைத்து சத்தான சாப்பாடு வகைகளையும், ஜுஸ், பழங்கள், மோர், பால் இடையிடையே அன்பான தம்பி ஆசையாக வாங்கி வந்த, அவளுக்கு மிகவும் பிடித்த சமோசா, கட்லெட், கேக் என அனைத்தையும் உட்கொண்டாள். மாலையில் பக்கத்திலிருக்கும் கோவில் வரை ஒரு நடை. இரவில் நவீனுடன் ஃபோனில் பத்து நிமிடம் பேசிவிட்டு (அதற்கு மேல் பேசினால் பைசா கூட ஆகிவிடுமே என்ற பயம் நவீனுக்கும் மிருதுளாவும் இருந்தது) தாயம் கார்ட்ஸ் விளையாட்டு, நடுநடுவே சொந்த பந்தங்களின் வரவு, அவர்களுடனான அரட்டை, அவர்கள் கொண்டு வந்து கொடுத்த பழங்கள், சுவீட்கள், என மன நிம்மதியுடன் மகழ்ச்சியுடனும் நாட்கள் கடந்தன.

ஒரு நாள் மத்தியம் ராமானுஜம் வீட்டு வாசல் முன் ஆட்டோ வந்து நின்றது. யார் வந்திருக்கிறார்கள் என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் மிருதுளா. ஆட்டோவிலிருந்து இறங்கியது பர்வதமும் அவள் பக்கத்து வீட்டு பாட்டியும். பர்வதத்தைக் கண்டதும் மிருதுளா பதற்றம் ஆனாள்‌. முகம் வியர்க்கத் துவங்கியது. ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவளிடம் தரையில் படுத்திருந்த அம்புஜம்

“ஏய் மிருது நம்ம ஆத்துக்கா ஆட்டோ வந்திருக்கு? யாரு வந்திருக்கா மா?”

என்று கேட்டும் பதில் வராததால் தரையிலிருந்து எழுந்து மிருதுளா தோளைப் பிடித்து அவள் பக்கமாக திருப்பினாள் அம்புஜம். மிருதுளாவின் பதற்றம், முகத்தில் வியர்வையை கண்டு ..

“என்ன மிருதுமா ஏன் இப்படி பதற்றமா இருக்க? எப்படி வியர்க்கறது பாரு? இந்தா துண்டால முகத்தை தொடச்சுக்கோ. தள்ளு அப்படி நீ பார்த்து இவ்வளவு பதற்றம் ஆகுற மாதிரி யாரைப் பார்த்த இல்ல எதைப் பார்த்த? சித்த நகரு நான் பார்க்கட்டும்”

என்று மிருதுளாவை நகரச்செய்து அவர்கள் உள் ரூமின் சிறிய ஜன்னல் வழியாக பார்த்தாள் அம்புஜம். பர்வதம் ஆட்டோ காரருக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தைப் பார்த்ததும் மிருதுளாவின் பதற்றத்தின் காரணம் புரிந்தது. உடனே மிருதுளாவிடம்…

“நீ எதுக்கும் பயப்படாதே மா அம்மா நான்
இருக்கேன் சரியா. நம்ம வீடு தேடி வரவாகிட்ட நாம மரியாதையா தான் நடந்துப்போம்.. அப்படிங்கறதை உங்க மாமியார் புரிஞ்சுக்கட்டும். இரு நான் போய் கதவை திறக்கட்டும்”

என்று ஹாலுக்குச் சென்றாள். அதற்குள் பர்வதம் கதவருகில் வந்து அழைப்பு மணியை அழுத்த விரலை அதன் அருகே கொண்டு செல்லும் போது கதவு திறக்கப்பட்டது. உள்ளிருந்து அம்புஜம் அவ்விருவரையும்

“வாங்கோ வாங்கோ உள்ளே வாங்கோ. உட்காருங்கோ. குடிக்கத் தண்ணி கொண்டு வரேன்”

என்று அடுப்படிக்கு சென்று ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் ஐஸ் வாட்டர் எடுத்து இரண்டு எலும்மிச்சைப் பழத்தைப் பிழிந்து கொஞ்சம் சர்க்கரை ஒரு சிட்டிகை உப்புப் போட்டு சூப்பரான ஜுஸ் செய்து எடுத்து வந்து இருவரிடமும் கொடுத்து..

“இந்தாங்கோ வெயிலில் வந்திருக்கேங்கள் குடிங்கோ”

“பரவாயில்லையே தண்ணி கொண்டு வரேன்னு உள்ள போய் சட்டுன்னு ஜுஸ்ஸாவே கொண்டு வந்துட்டீங்களே”

என்றார் பர்வதம் கூட வந்த பாட்டி. அதற்கு அம்புஜம் பதிலளிப்பதற்கு முன் முந்திக் கொண்டு

“அவா ரெடிமேடா கிடைக்குமே தண்ணில கலந்துட்டா ஜுஸ் ஆகிடுமே அது மாதிரி ஏதாவது வச்சிருப்பா அது தான் சீக்கிரம் செய்து தந்துட்டா …இல்லையா மாமி”

என்று அம்புஜத்தைப் பாராட்டியதை விரும்பாமல் அவளாக ஒரு கதையை கட்ட நினைத்த பர்வதத்தைப் பார்த்து அம்புஜம்

“இல்ல மாமி இது ஃப்ரெஷ் லைம் ஜுஸ் தான். எங்காத்த தான் எலும்மிச்சை மரமே இருக்கே. நாங்க ஏன் ரெடிமேட் ஜுஸ்ஸெல்லாம் வாங்கணும்?”

“அது தானே நான் உள்ள வரும்போதே பார்த்தேன் வாசல்ல பெரிய எலும்மிச்சை மரம் முழுக்க காய்களோட இருக்கே”

என்றார் பாட்டி. இதற்கு மேல் இந்த பேச்சைத் தொடரக் கூடாது என்று எண்ணிய பர்வதம்

“ஆமாம் உங்க பொண்ணு எங்கே? அவளைப் பார்க்கணும்ன்னு பாட்டி ஆசைப் பட்டாங்க அது தான் கூட்டிண்டு வந்தேன்”

என்று தனக்கு அதில் விருப்பம் இல்லாதது போல கூற அதற்கு பாட்டி சும்மா இல்லாமல்

“ஏன் பர்வதம் மாமி அப்போ நீங்க உங்க மருமகள பார்க்க வரலையா? எனக்காக தான் வந்தீங்களா?”

“உங்களுக்காகவும் தான் வந்தேன்”

என்று இழுத்தாள் பர்வதம். அவள் எதை எண்ணி பாட்டியை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்பதில் தான் அவளின் சூட்சுமம் இருக்கிறது. பாட்டியும் பர்வதமும் பேசிக் கொண்டிருக்கையில் அம்புஜம் மிருதுளாவை ஹாலுக்கு வரச் சொல்லி கூப்பிட்டாள். மிருதுளா வந்ததும் பர்வதம் அவளிடம்…

“என்ன இப்படி இளைச்சு துறும்பா ஆகிருக்க?”

என்று கேட்டதும் அம்புஜத்துக்கும் மிருதுளாவுக்கும் கோபம் வந்தது. ஆனால் அமைதியாக பதிலளித்தாள் மிருதுளா…

“இல்லையே!!! எங்க அக்கம் பக்கத்துல எல்லாரும் நான் இங்க வரும்போது எலும்பும் தோலுமா இருந்தேன்னும்… அம்மா ஆத்துக்கு வந்ததுக் கப்பறம் தான் கொஞ்சம் பூசின மாதிரி ஆகிருக்கேன்னு சொல்லறாளே. எப்பப்பாரு எதையாவது சாப்பிட அல்லது குடிக்கன்னு கொடுத்துண்டே இருக்கா எங்க அம்மா ஏன்னா நானும் என் குழந்தையும் ஆரோக்கியமா இருக்கணும்ன்னு இவ்வளவு மெனக்கடறா”

“அது தாம்மா அம்மாங்கறது. அம்மான்னா சும்மாவா?”

என்றாள் வீட்டுக்கு வந்த பாட்டி. பர்வதம் இப்படி ஒரு பதிலை மிருதுளாவிடமிருந்து எதிர்பார்க்காததால் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் உடனே சுதாரித்துக் கொண்டு…

“பின்ன அம்மான்னா இதெல்லாம் செய்யத் தான் வேணும்” என்றவளிடம் மிருதுளா..

“எல்லா அம்மாக்களும் அப்படி இருப்பதில்லை என்ன செய்ய?” என்று அலுத்துக் கொண்டே சொன்னாள்.

மாமியாரும் மருமகளும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டே போக, அதற்கு எப்படியாவது முற்றுப் புள்ளி வைக்க நினைத்த அம்புஜம் பாட்டியைப் பார்த்து

“உங்களுக்கு எத்தனை குழந்தைகள் அதைப் பற்றி சொல்லுங்கோ”

“எனக்கு ஒரு பிள்ளை ஒரு பொண்ணுமா. இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. புள்ளைக்கு இரண்டு பசங்க அதுல ஒண்ணு தான் பர்வதம் மாமி வீடே கதின்னு கிடக்கும். பொண்ணுக்கு ஒரு புள்ள.”

“ஓ அப்படியா!! பையனும் மாப்பிள்ளையும் என்ன செய்யறாங்க?”

“ரெண்டு பேரும் ஒரு ஹார்ட்வேர் கம்பெனியில வேலைப் பார்க்கிறாங்க மா. பையனும் மாப்பிள்ளையும் மட்டுமில்லமா என் மகளும் மருமகளும் ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. இந்த காலத்துல ஒருத்தர் சம்பாத்தியத்துல குடும்பம் ஓட்டறதுங்கறது கஷ்டம்ன்னு சொல்ல மாட்டேன் ஆனா பொண்ணுங்க படிச்சிட்டு எதுக்கு வீட்டில சும்மா சமையல், வீட்டுவேலைன்னு உட்கார்ந்திருக்கணும் அதுனால நான் தான் ரெண்டு பேரையுமே வேலைக்கு போங்கன்னு சொன்னேன்”

“பரவாயில்லைப் பாட்டி நீங்க சூப்பர். நீங்க சொல்லறதும் கரெக்ட் தான். அப்பா அம்மா கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க அப்புறம் ஏன் சும்மா வீட்டில இருக்கணும்? நல்ல வேலை கிடைத்தால் போகறது நல்லது தான் பாட்டி. நீங்க சொல்லறது மிகவும் சரியான விஷயம். ஆனா அதுக்கு வீட்டில இருக்கறவங்களோட ஒத்துழைப்பும் வேணுமே பாட்டி. இப்போ நீங்க என்கரேஜ் பண்ணுற மாதிரி எல்லா மாமியார் மாமனார்களும் செய்தா நல்லா தான் இருக்கும்.”

என்று பர்வதத்தைப் பார்த்துக் கொண்டே கூறினாள் மிருதுளா. மீண்டும் ஆரம்பித்தால் மிகவும் தர்மசங்கடம் ஆகிவிடும் என்று அம்புஜம் பாட்டியிடம்

“அப்போ உங்க பேரப் பசங்கள யாரு பார்த்துப் பாங்க?”

“நானும் என் புருஷனும் தான். எங்களுக்கு என்ன வேற வேலை இருக்கு. நான் காலையில எழுந்து காலை டிபன், மத்திய சாப்பாடு எல்லாம் செய்து வச்சிடுவேன் பையன், மருமக, பொண்ணு, மாப்பிள்ளை எல்லாரும் சாப்பிட்டு மத்தியத்துக்கு கட்டிக்கிட்டு கிளம்பிடுவாங்க அதுக்கப்புறம் நானும் என் கணவரும் குழந்தைகளுக்கு டிபன் ஊட்டிவிட்டுட்டு நாங்களும் சாப்பிடுவோம். பையனோட பெரிய பையனை ஸ்கூல் விட்டுட்டு வந்திடு வாரு என் வீட்டுக் காரர். அப்பறம் வேலை செய்ய ஒரு பொண்ணு வரும் அது வந்து வீட்டை எல்லாம் சுத்தம் செய்து பாத்திரத்தை எல்லாம் தேய்ச்சு, துணிகளை எல்லாம் அவங்க அவங்க ஊறப் போட்டுட்டு போயிடுவாங்க இந்த பொண்ணு எல்லாத்தையும் தோச்சு காய வச்சிட்டு கிளம்பிடும். அதுவரை பேரப்பசங்களோட விளையாடிட்டு மத்திய சாப்பாடு ஊட்டிவிட்டுட்டு எல்லாருமா கொஞ்ச நேரம் படுத்துக்குவோம். மூன்றரை மணிக்கு என் வீட்டுக் காரர் புறப்பட்டிருவாரு ஸ்கூலுக்கு பேரனை கூட்டிக்கிட்டு வரத்துக்கு. அந்த நேரத்துல நான் எழுந்து சாயந்திரம் லைட்டா டிபன் மற்றும் ராத்திரிக்கு ஏதாவது ஒரு கூட்டு மாதிரி பண்ணி சப்பாத்திக்கு மாவு பிசைந்து வச்சிடுவேன். பேரனை ஸ்கூலேந்து எங்க வீட்டுக்காரர் கூட்டிட்டு வந்ததும் அவனுக்கு டிரெஸ் மாத்திவிட்டுட்டு மத்த பேரன்களை எழுப்பி முகம் கை கால் எல்லாம் அலம்ப வைத்து பேரப்பிள்ளைகளோட நாங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து டிபன் சாப்பிட்டு பால் குடிச்சிட்டு கிளம்பி பக்கத்துல இருக்குற பார்க்ல போயி பசங்கள விளையாட விட்டுட்டு நாங்க ரெண்டு பேரும் அவங்களல பார்த்துக்கிட்டே அங்கேயே மெதுவா நடப்போம். ஒரு மணி நேரமானதும் வீட்டுக்கு வந்திடுவோம். பெரிய பேரன் தாத்தாவோட உட்கார்ந்துட்டு ஹோம்வர்க் செய்வான். நான் மற்ற மூணு பேரன்களோட கொஞ்ச நேரம் விளையாடுவேன். அதற்குள் அவங்க அவங்க அப்பா அம்மா வந்திடுவாங்க. பசங்களை அவங்க கிட்ட விட்டுட்டு நான் அவங்களுக்கு காபி போட்டு கொடுப்பேன் அப்புறம் சப்பாத்தி சுட்டு டப்பால போட்டு வச்சிடுவேன். நானும் அவரும் ஏழரை மணிக்கெல்லாம் சாப்பிட்ருவோம். ஒன்பது மணிக்கெல்லாம் படுத்திடுவோம். பசங்க அவங்களுக்கு இஷ்ட்டப்பட்ட நேரத்துல சாப்பிட்டுப்பாங்க தூங்கிப்பாங்க. இது தான் எங்க வீட்டுல தினசரி நடக்கறது. இதுக்கு எல்லாருமே பழகிட்டோம்”

“உங்க பொண்ணு உங்க வீட்டுல தான் இருக்காங்களா?”

“இல்ல மா அவ எங்க தெருவுக்கு அடுத்த தெருவுல குடியிருக்கா. தூங்கறதுக்கு மட்டும் தான் அவங்க வீட்டுக்கு போவாங்க மத்தப்படி பெரும்பாலும் எங்க வீட்டிலியே தான் இருப்பாங்க”

“அவங்க மாமியாரோ மாமனாரோ ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?”

“ஒண்ணும் சொல்ல மாட்டாங்க மா. தங்கமான மனுஷங்க. அவங்க ரெண்டு பேருமே ஊருல வயல் தோப்பு எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருக்காங்க. அவங்க தோட்டத்துல விளையும் அரிசி, பருப்பு, தேங்கா எல்லாம் எங்க வீட்டுக்கு வந்திடும். அவங்களும் அப்பப்போ வந்து பேரப் பிள்ளைகளோட இருந்துட்டு போவாங்க. ஏன்னா மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் அடிக்கடி லீவு கிடைக்காதில்ல….அப்படி லீவு கிடைக்கும் போதெல்லாம் அவங்க ஊருக்கு போயிடுவாங்க.”

இந்த பேச்சை இதற்கு மேல் வளர்க்க விருப்பமில்லாத பர்வதம் குறுக்கிட்டு

“இந்த வயசான காலத்துல உங்களை வேலை வாங்குறாங்க அது புரியாம நீங்க என்னடான்னா பெருமையா சொல்லிக்கறீங்க!”

“நம்ம புள்ளைங்கள நம்ம பார்த்துக்காம வேற யாரு பார்த்துப்பாங்க பர்வதம் மாமி. நம்ம புள்ளைங்களுக்குன்னா நமக்கு தெம்பு தானா வந்திடும். என்ன சமையல் வேலை மட்டும் தானே. மத்ததுக்கெல்லாம் ஆள் போட்டிருக்காங்களே அப்புறம் என்ன. நம்ம பேரப்பிள்ளைகளோட நேரம் செலவழிக்கறது அந்த ஆண்டவன் நமக்கு கொடுத்த பெரும் பாக்கியம் மாமி. நாளைக்கே மிருதுளா வேலைக்கு போனா நீங்களும் மாமாவும் உங்க புள்ள மருமகளுக்கு உதவ மாட்டீங்களா என்ன?”

“நீங்க ஏன் சொல்ல மாட்டீங்க!!! உங்களுக்கு ரெண்டு பசங்க தான் ஆனா எங்களுக்கு நாலு பச்ஙக இருக்காங்களே. சரி நீங்க எதுக்கு வந்தீங்க எதை பேசிகிட்டு இருக்கீங்க?”

“ஆமா ஆமா மறந்தே போயிட்டேன். மிருதுளா… நீ பர்வதம் மாமி வீட்டுல இருக்கும்போது நாங்க எல்லாரும் தீபாவளிக்கு ஊருக்கு போயிட்டோம் அப்புறம் பசங்க வேலைக்கு போகணும்ன்னு வந்துட்டாங்க ஆனா நானும் தாத்தாவும் ஊருலேயே பேரப்பசங்களோட கொஞ்ச நாள் இருந்துட்டோம். நேத்து தான் வந்தோம். அப்போ தான் தெரிஞ்சுது நீ மாசமாயிருக்கன்னு. அதுதான் கண்ணு உன்னை பாக்க ஓடி வந்தேன்.”

“ரொம்ப தாங்க்ஸ் பாட்டி. உங்களுக்கு தான் என் மேலே எவ்வளுவு பாசம்”

“அம்புஜம் மாமி உங்க பொண்ண நல்லா வளர்த்திருக்கீங்க. அவ பர்வதம் மாமி வீட்டுக்கு வந்ததிலிருந்து வீட்டு வாசலில் கூட நின்னு பார்த்ததில்லை. பர்வதம் மாமி விஷயத்தை சொன்னதுமே நானே உனக்காக அதிரசம் சுட்டேன் இந்தா வாங்கிக்கோ. இதுல பழம், பூ எல்லாம் நான் பஸ்டாண்ட்ல வாங்கினது இருக்கு இந்தா மா. உனக்கு என்ன பிடிக்கும்ன்னு மாமிகிட்ட கேட்டேன் அதுக்கு மாமி தெரியாதுன்னு சொன்னாங்க அதுனால எங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு பிடிச்சதை செய்து எடுத்து வந்தேன்”

“தாங்க்ஸ் பாட்டி. எதுவாயிருந்தா என்ன பாட்டி எனக்கு செய்து கொடுக்கணும்ன்னு உங்களுக்கு தோணிச்சே அதுவே எனக்கு சந்தோஷம் தான் பாட்டி”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அம்புஜம் அவர்களுக்கு ஆப்பிள் வெட்டிக் கொடுத்தாள். காபி வைக்க எழுந்ததும் பாட்டி அம்புஜத்திடம்..

“அதெல்லாம் வேண்டாமா நாங்க கிளம்பறோம். மணி ஆகிடுச்சு. அதுதான் சூப்பர் லெமன் ஜுஸும், ஆப்பிளும் தந்தீங்களே அதுவே போதும். என் வீட்டுக்காரர் தனியா பேரப் பசங்கள சமாளிச்சுட்டு இருப்பார் பாவம். ஆமாம் இப்போ எப்படி திரும்பி போவோம் பர்வதம் மாமி?”

“இருங்கோ நான் ஆட்டோக்கு கால் பண்ணறேன். அஞ்சு நிமிஷத்துல ஆட்டோ வந்திடும்.”

என்று ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஃபோன் போட்டு ஆட்டோவை வரவழைத்தாள் மிருதுளா. அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து வழியனுப்பி வைத்தாள் அம்புஜம்.

அவர்கள் ஆட்டோவில் ஏறிச் சென்றதும் வீட்டினுள் வந்தனர் அம்புஜமும், மிருதுளாவும். அப்போது மிருதுளா தன் தாயிடம்

“கேட்டயாமா நான் ரொம்ப மெலிஞ்சிட்டேனாம். கேட்டயா ….என்னமோ இவா ஆத்துல இருக்கும் போது அப்படியே வித விதமா சமைச்சு எனக்கு கொடுத்து தேத்தினா மாதிரியும், நான் இங்க வந்ததும் நீ ஒண்ணுமே தராம நான் இளைச்சுட்டா மாதிரியும் பேச்சப் பாரு பேச்ச….எனக்கு அப்படியே கோபம் கோபமா வந்தது மா”

“விடு மிருது அவாளைப் பற்றி நமக்கு தான் தெரியுமே. சொன்னா சொல்லிட்டுப் போறான்னு விட்டுத்தள்ளு. நீ இப்படி கோபப்பட்டேன்னா அப்புறம் உன் குழந்தையும் கோபக்காரனா பொறந்திடப் போறது. நிதானமா பொறுமையா அமைதியா இருமா.”

“நான் நிதானமா தானே பதில் சொன்னேன்”

“என்னத்துக்கு அந்த மாமிகிட்ட பேசப் போன. நீ பேசினாலும் விட்டாளா மேல மேல நம்மளை குத்தி குத்திதான் பேசினா. மூணாம் மனுஷா முன்னாடி தேவையா சொல்லு!!”

“போ மா ஒண்ணும் தப்பில்லைன்னு தான் எனக்கு தோணறது. பொறுமையா இரு பொறுமையா இருன்னு நீ சொன்னதால தான் நான் இவ்வளவு நாள் பொறுத்திருந்தேன் ஆனாலும் அவா அப்படியே தான் இருக்கா…. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் என்னை மட்டம் தட்டறதுலேயே இருக்கா”

“இருந்துட்டு போறா மா. விடு மிருது. நீ உன்னையும் உன் புருஷனையும் உனக்கு பொறக்கப் போற குழந்தையையும் நல்ல படியா பார்த்துக்கோ அது போதும். இவா எல்லாம் என்ன வேணும்னாலும் சொல்லிக்கட்டும் நீ உன் மனசாட்சிக்கு விரோதமா எதுவும் பண்ணாமல் அவாளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துண்டே இரு மீதியை அந்த அம்மன் பார்த்துப்பாள். ஆயிரம் கண்ணுடையாள் பார்வையிலிருந்து எவரும், எதுவும் தப்பாது மிருது. கவலையை விடு. வா நாம முகம் கை கால் அலம்பிட்டு கோவிலுக்கு அப்பாவும் வேனுவும் வரத்துக்குள்ள போயிட்டு வருவோம்.”

மாசமான மருமகள் குஜராத்திலிருந்து ஊருக்கு வந்ததிலிருந்து ஒன்றுமே செய்திடாத பர்வதம், இன்று வந்த போதும் ஒரு பூ கூட வாங்கிவரவில்லை. ஆனால் மிருதுளாவைப் பார்க்க வந்த பக்கத்து வீட்டு பாட்டி ஆசையாக அதிரசமும், பூவும் பழமும் வாங்கி வந்து கொடுத்துள்ளார். நாம் தினசரி பஸ்ஸில் பயணிக்கும் போதோ அல்லது ஏதாவது வாங்க க்யூவில் நிற்கும்போதோ ஒரு கர்ப்பிணி பெண் வந்தால் உடனே அவளுக்கு இடமளிப்போம் இல்லையா ? அது தானே மனிதாபிமானம். அப்படி செய்திடாதவர்களையும், இந்த பர்வதம் போன்றவர்களையும் எந்த இனத்தில் சேர்ப்பது? இந்த வருகைக்கு பின்னாலும் அவளின் திட்டம் நிச்சயம் இருக்கும். இது போன்றவர்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கு பின்னாலும் ஏதாவது ஒரு சூழ்ச்சி மறைந்திருக்கும். அது என்ன என்பதை காலம் காட்டிக் கொடுக்காமல் போய்விடுமா என்ன?

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s