“நாங்கள் எங்க மாப்ள கிட்ட சொல்ல வேண்டாமா. அவர் கிட்ட சொல்லாம எப்படி உங்க கிட்ட வந்து நாங்க பேசறது? அவர் ஊருக்கு போய் சேர இரண்டு நாள் ஆனது அதுதான் நாங்க வர்றதுக்கும் இரண்டு நாள் எடுத்துண்டோம். அதுவுமில்லாமல் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாங்களாவது கொடுக்க வேண்டாமா. அது எங்க வீடா இருந்தாலும் சரி, உங்க கோட்டையா இருந்தாலும் சரி இல்ல அவர் வீடா இருந்தாலும் சரி எப்பவும் எங்க மாப்ளைக்கு நாங்க மரியாதை கொடுப்போம்.”
“என்ன ரொம்ப ஓவரா பேசிண்டே போற? அப்படி மரியாதை கொடுக்கற குடும்பத்துக்கு பொண்ண ஏன் ஒழுங்கா வளர்க்க தெரியலையாம்?”
“மறுபடியும் சொல்லறேன் மரியாதை கொடுத்து பேசுங்கோ. ஏன் எங்க பொண்ண வளத்தினது ல என்ன தப்பு பண்ணிட்டோம் நாங்க?”
“எப்ப பாரு உன் மாப்ள கூட மாடியில ரூம்லயே கிடக்கா? அசிங்கமா இல்லை? எங்க புள்ளையை நிம்மதியாவே இருக்க விடமாட்டேங்கறா உங்க பொண்ணு. எப்ப பாரு அவன்ட்ட ரூம்ல சண்டை போட்டுண்டு அவனை ஏத்தி விட்டுண்டே இருக்கா …ச்சீ!”
“என்ன பேசறேங்கள் நீங்கள்? இப்படி பேச உங்களுக்கு அசிங்கமா தோணலை? கேட்க எங்களுக்கு அறுவறுப்பா இருக்கு ஆனாலும் பதில் சொல்லித் தானே ஆகணும். அவள் உங்க புள்ளையோட தானே ரூம்ல இருக்கா? இதுல என்ன தப்பு? அதுவுமில்லாம அவ புருஷனோட அவா ரூம்ல சண்டை போடறது கீழே இருக்கற உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?”
“அதுதான் அவ கத்தற கத்தல் இந்த தெருவுக்கே கேட்கறதே இதுல கீழே இருக்குற எங்களுக்கு கேட்காதா என்ன”
“அப்படி உங்க புள்ளைய ஏத்தி விடறவளா எங்க பொண்ணு இருந்திருந்தா கத்தி ஊரைக்கூட்டியா பண்ணுவா? அதுவுமில்லாம அப்படி எங்க பொண்ணை நாங்க வளர்க்கலை. நாங்க கேட்டதுக்கு சரியான பதில் இன்னும் நீங்க சொல்லலையே!”
“சஷ்டியப்த பூர்த்தி விஷேசத்துக்கு கூட்டிண்டு போயிருக்கோமே!! போன இடத்துல மாமியாரோட இருக்காமா அது என்ன அவன் கூடவே ஒட்டிண்டு ஒட்டிண்டு இருக்கறது. அவன் கூடவே போறது வர்றது அப்புறம் மாமியாருக்கு என்ன மரியாதை?”
“என்ன பேசறேங்கள் நீங்கள்? தெரிஞ்சுதான் பேசறேங்களா? எங்க பொண்ணை உங்க புள்ளைக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சசோம்? மாமியாரோட இருக்கவா? சரி அப்படி அவ ஒண்ணும் உங்க கூட இருக்க மாட்டேன் சொல்லலியே. ஒரு மாசம் இருந்தா தானே!!! சின்னஞ் சிறிசுகள் ஏதோ சந்தோஷமா இருக்கட்டும்ன்னு விடாமா ஏன் இப்படி எல்லாம் தப்பு தப்பா கேவலமா பழி போடறேங்கள்? அப்படி அவா சந்தோஷமா இருக்கத் தானே நாம அவாளுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்? நீங்க நல்லா அவளை பார்த்திருந்தா எதுக்கு எங்காத்துக்கு வரப் போறாளாம்?”
“ஏன் உன் பொண்ணை நாங்க தலையிலயா வச்சுக்கணும்? என்னத்த பாத்துக்கலையாம்?”
“எங்க பொண்ணை மாசமானவன்னு கூட பார்க்காம பட்டினி போட்டிருக்கேங்கள். வெறும் ரசம் சாதம் மட்டும் கொடுத்து அவளை என்ன நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டேங்கள்ன்னு தெரியுமா? சத்தானதா சாப்பிட குடுக்கணும்ன்னு நாலு புள்ளகளை பெத்தவாளுக்கு தெரியாதா என்ன? அப்போ வேணும்ன்னே தானே அப்படி செய்திருக்கேங்கள்? அவளோட ஹெச் பி ரொம்ப கம்மியா இருக்காம். டாக்டர் என்னை திட்டறா!! இதுக்கு என்ன பதில் சொல்லப் போறேங்கள்?”
அதுவரை ஈஸ்வரனுக்கு கீ கொடுத்து ஆடவிட்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பர்வதம்
“என்ன பார்த்துக்கலையாம் உங்க பொண்ணை. எங்களால முடிஞ்சதை தான் செய்ய முடியும். உங்க பொண்ணு ஒண்ணும் மஹாராணி இல்லை. நானும் பார்த்துண்டே இருக்கேன் ரொம்ப ஓவரா தான் பேசறேங்கள். எங்காத்துக் காரரை நேத்து மாடு முட்டி கீழே விழுந்து அடிப்பட்டும் உட்கார முடியாமல் உட்கார்ந்து பொறுமையா பதில் ஞொல்லிண்டிருக்கார் நீங்க எண்ணமோ எகுறறேங்கள்!! என்ன நினைச்சிண்டிருக்கேங்கள்?”
அதை கேட்டதும் அம்புஜம் தன் மனதில்
“நல்லா வேணும் எங்க பொண்ணை படுத்தின பாடுக்கும் பேசின பேச்சுக்கும் ஆண்டவன் சும்மா விட்டு விடுவாரா. கை மேல தண்டனை கிடைத்துமா இப்படி பேசறதுகள்”
என்று எண்ணிக்கொண்டே முனுகினாள். அதைக் கேட்ட ஈஸ்வரன்
“என்ன முனுகல் வேண்டிருக்கு?”
“என்னத்த முனுகி எண்ண ஆக போறது. ஏழு மாசமான பொண்ணை வேன் ல கூட்டிண்டு போயிருக்கேங்களே இது நியாயமா? அதுவும் அந்த வண்டி ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கு. அந்த ஆக்ஸிடென்ட் ல மிருதுக்கு ஏதாவது ஆகிருந்தா நீங்களா பதில் சொல்வேங்கள்?”
“அது தான் ஒண்ணும் ஆகலையே அப்புறம் ஏன் அந்த பேச்சு இப்போ”
என்று அலுத்துக் கொண்டே கூறினாள் பர்வதம். அதைக் கேட்டதும் அம்புஜத்துக்கு கோபம் வர
“நல்லா இருக்கு நீங்க பேசறது ரொம்ப நல்லா இருக்கு மாமி. எதுவுமே ஆகலைன்னு ரொம்ப கவலைப் படறா மாதிரி இருக்கு நீங்க சொன்னது.”
“ம்…ம்…உங்க பொண்ணை கல்யாணம் ஆனதும் ஒரு நாலு மாசம் இங்கேயே இருந்துட்டு அப்புறமா போனால் போதும்ன்னு சொன்னோம் கேட்டாளா அவ!! அவனோடவே ஒட்டிண்டு கிளம்பிட்டாளே!! இது தான் நீ பொண்ணு வளர்த்த லட்சணமா?”
ஒரு வயசு பையன் உட்கார்ந்திருக்கான் என்ற உருத்தலே இல்லாமல் அசிங்க அசிங்கமா பேசிய ஈஸ்வரனின் பேச்சை அது வரை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த வேனுக்கு மீண்டும் தன் அக்காவை கேவலமாக பேச ஆரம்பித்ததும் கோபம் வந்தது. உடனே எழுந்து அம்புஜத்திடம்
“அம்மா எழுந்திரு. இவாகிட்ட ஒரு நியாயமும் கிடைக்க போறதில்லை நம்ம மிருதுக்காவை அசிங்கப்படுத்தணும்னே கங்கனம் கட்டிண்டு பேசரவாகிட்ட இனியும் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை கிளம்பு நாம போகலாம். உன்னையும் தான் பா ரெண்டு பேரும் எழுந்துருங்கோ”
“ஆமாம் வந்துட்டான் பெரிய மனுஷன். போ போ ரெண்டையும் கூட்டிண்டு இடத்தை காலி பண்ணு”
என்று திமிராக ஈஸ்வரன் கூறிய படியே உள் ரூமுக்குள் சென்று விட்டார் அதைப் பார்த்ததும் உடைந்து போனாள் அம்புஜம். ஒரு பொண்ணை பெத்து வளர்த்து ஆளாக்கி ஊர் மெச்ச கல்யாணம் பண்ணிக்கொடுத்து அனுப்பியதுக்கு கிடைத்த மரியாதையைப் பார்த்ததும் உடைந்துப் போய்…
“என்னடா வேனு இப்படி எல்லாம் பேசறா…” என்று கூறிக்கொண்டே அவள் கண்களில் கண்ணீர் தானாக வழிந்தது.
“அம்மா நீ எதுக்கு அழற?கண்ணை தொட முதல்ல. நம்ம மிருது ரொம்ப நல்லவ அவ மேல எந்த தப்புமே இல்லை. அவ இவாகிட்ட என்னென்ன பேச்சு வாங்கிருப்பான்னு இவா நம்மகூட பேசியது வச்சே தெரியறது. இனியும் இங்க இருக்க வேண்டாம் … எவ்வளவுதான் நீ கேட்டாலும் …நீ கேட்கிறதுக்கு பதில் இவாகிட்ட கிடைக்காது ஏன்னா அவாகிட்ட நியாயமில்லை அதுனால ப்ளீஸ் எழுந்து வா நாம் இங்கேருந்து உடனே போயிடலாம்”
அம்புஜத்தின் கையைப் பிடித்துக் கொண்டு இருவரும் அங்கிருந்து கிளம்பும் போது அதுவரை வாயைத் திறக்காத ராமானுஜம் அப்படியே அம்புஜம் வேனு பின்னால் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் அதை விடுத்து பர்வதத்தைப் பார்த்து
“நாங்க மிருது கிட்ட பேசறோம்”
என்று சொன்னதுக்கு வேனுவுக்கும் அம்புஜத்துக்கும் கோபம் தலைக் கேறியது. உடனே வேனு ராமானுஜத்திடம்
“மிருதுக்கா கிட்ட பேச ஒண்ணுமில்லை நீ பேசாம வா”
என்று கூறி ஆட்டோவில் மூவருமாக ஏறி
“நேரா வீட்டுக்கு போங்க அண்ணா”
என்று வேனு ஆட்டோ டிரைவரிடம் சொல்ல அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் வீட்டைச் சென்றடைந்தனர்.
ஆட்டோவை காசு கொடுத்து கட் செய்து வீட்டிற்குள் சென்றதும் வேனு தன் தந்தையிடம்
“என்ன அப்பா நீ? என்ன புருஷன் நீ?? உன் பொண்டாட்டியையும் பொண்ணையும் அந்த கிழவன் மரியாதையே இல்லாம பேசறான்…நம்ம மிருதுக்காவை அசிங்கப் படுத்தி பேசறான் நீ வாயை மூடிண்டு உட்கார்ந்துண்டு இருக்க!!! உனக்கு கோபமே வரலையா? அடுமாண்டு பேசறான் அந்த ஆளு கேட்டுண்டு பேசாமா உட்கார்ந்துண்டு இருக்க!!! சரி பேசாம இருந்தல்ல அம்மா தானே அதுகளோட பேசினா அப்போ நீ என்ன பண்ணிருக்கணும் மூடிய வாயை மூடியப் படியே எங்களோட திரும்பி வந்திருக்கணும் அதை விட்டுட்டு அது என்ன கடைசியில ‘நாங்க மிருதுகிட்ட பேசறோம்ன்னு’ மிருதுக்காட்ட பேச என்ன இருக்கு. அதுகள் ரெண்டும் பேசின விதத்திலேந்தும் பேசின விஷயத்துலேந்துமா உனக்கு புரியலை தப்பு முழுசா அவா பக்கம் தான்னு!! அப்படியே தப்பு உன் பொண்ணுகிட்டயே இருந்தாலும் அவளை விட்டுக்கொடுக்காம பேசறவன் தான் நல்ல அப்பன். ஆனா நீ? உன் வைஃப்பை அவ இவன்னு பேசறான் அந்த ஆளு கேட்டுண்டு கல்லு மாதிரி எப்படி உன்னால இருக்க முடிஞ்சுது?”
“சரி உன் அம்மா பேசினாளே அவ கேட்டதுக்கு ஒழுங்கான பதில் வந்துதா அவாகிட்டேருந்து? வரலையில்ல… அதுகள் அப்படி தான் பேசும்ன்னு எனக்கு நல்லா தெரிஞ்சு போயிடுத்து. அதுகள்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லைன்னு தான் பேசாம இருந்தேன். நானும் பேசியிருந்தேன்னா அவா என்னையும் அசிங்க படுத்த தயங்க மாட்டா…அப்புறம் அங்க நம்ம குடும்பமே அசிங்கப் பட்டிருக்க வேண்டியது தான். சாரி கடைசியில நான் அப்படி சொல்லியிருக்க வேண்டியதில்லை தான் அது என் தப்பு தான்.”
“இப்போ மட்டும் என்ன நம்ம குடும்பம் அசிங்க படாம ரொம்ப மரியாதையாவா அவா நடத்தினா? சும்மா நீ பேசாததுக்கு சப்பக்கட்டு கட்டாதீங்கோ. நம்ம பொண்ணை எப்படி எல்லாம் பேசறா அதை கேட்டுண்டு எப்படி சும்மா இருக்க முடியும்?”
என்றாள் அம்புஜம்.
“சரி சும்மா இருக்காம நீ கேட்ட என்ன உனக்கு பதில் கிடைச்சுதா? அதில் திருப்தி ஆச்சா? கடைசியில செய்ததை நாம அந்த ஆளு மரியாதை குறைவா பேச ஆரம்பிச்சதுமே செய்திருக்கணும்”
“அப்பா அப்போ செய்திருக்க வேண்டியது தானே. நீ எழுந்து எங்களையும் கூட்டிண்டு வெளியே வந்திருக்கலாமே!! ஏன் செய்யலை?”
“அதுவும் என் தப்பு தான். இவ்வளவு செலவு செஞ்சு கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுக்கு நல்லா கேட்டோம் டா… போதும் இனி அதுகள் கிட்ட நான் பேசமாட்டேன்”
“ஆமாம் இப்போ மட்டும் எங்க பேசினேங்களாம்?”
இவ்வாறு மாறி மாறி வேனுவும், ராமானுஜமும், அம்புஜமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மிருதுளாவுக்கு அங்கு ஏதோ தவறாக நடந்திருப்பது புரிந்தது ஆனால் என்ன என்று கேட்கலாம் என்றால் அவர்கள் மூவரும் பேச்சை நிறுத்தினால் தான் முடியும் என அமைதியாக காத்திருந்தாள். சற்று நேரத்தில் மூவரும் அமைதி ஆகினர்.
“சரி என்னோட பாஸ் டைம் முடிஞ்சிடுத்து நான் வேலைக்கு கிளம்பறேன். வர்றேன்”
என்று கூறி சென்றார் ராமானுஜம்.
பின் மிருதுளா மெதுவாக தன் அம்மாவிடம்
“அம்மா என்ன தான் மா நடந்தது? நீங்க மூணு பேரும் ஏன் மா இப்படி சண்டை போட்டுக்கறேங்கள்?”
இதை கேட்டுக் கொண்டிருந்த வேனு மிருதுளாவிடம்
“ம்… உன் மாமனாரை மாடு முட்டி கீழே தள்ளிவிட்டு அடி பட்டிருக்காம்” என்று கடுப்போடு சொன்னான். அதைக் கேட்டதும் மிருதுளா
“அச்சசோ!!! இப்போ எப்படி இருக்கார் அவர். காயம் ஒண்ணும் பலமாக இல்லையே!” என்று பதறிப் போய் கேட்டவளைக் கைக் காட்டி தன் தாயிடம்
“பார்த்தயா இது தான் நம்ம மிருது. இந்த விஷயத்தை சொன்னதும் பதறறா பாரு இந்த பொண்ணை எப்படி அவாளால அப்படி எல்லாம் பேச முடிஞ்சுது. நாம போணோமே அவா ஒரு வார்த்தை மிருது எப்படி இருக்கான்னு கேட்டாளா? இலையே!!”
“அந்த ஆளை மாடு இல்லை …வேண்டாம் அப்பறம் நான் ஏதாவது சொல்லிடப் போறேன். எனக்கு இன்னமும் ஆத்திரமும் ஆதங்கமும் அடங்கலை டா வேனு”
என்றாள் அம்புஜம்.
“என்ன தான் மா நடந்தது? மூணு பேர்ல யாராவது ஒருத்தராவது சொல்லுங்கோளேன் ப்ளீஸ்”
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு நடந்தவற்றை கூறளானாள் அம்புஜம். அனைத்தையும் கூறி முடித்ததும் மிருதுளா
“இதுக்கு தான் நான் முன்னாடியே சொன்னேன் நீங்க அங்க போக வேண்டாம்ன்னு கேட்டேங்களா? அவா அப்படித் தான்”
“ஏன் மிருதுக்கா உன் கிட்டேயும் இப்படி தான் கீழ் தரமா பேசுவாளா?”
“என் மாமியார் எப்பவுமே என்னை குத்தம் சொல்லிண்டே மட்டம் தட்டிண்டே தான் இருப்பா ஆனா என் மாமனார் அப்படி எல்லாம் பேசுவார்ன்னு முந்தாநாள் தான் தெரிஞ்சுண்டேன்”
“சரி உன் மாமியார் அப்படி பேசும் போது நீ அப்படி எல்லாம் பேசாதீங்கோன்னு சொல்ல வேண்டியது தானே”
“ஒரு ரெண்டு தடவை சொல்லிருக்கேன் ஆனாலும் அப்படி தான் பேசுவா. அது அவாளோட சுபாவம்ன்னு விட்டுட்டேன்”
“சரி அவா அப்படி பேசியபோதெல்லாம் அத்திபேர் ஒண்ணுமே சொன்னதில்லையா?”
“சிலதை தான் அவர் முன்னாடி சொல்லுவா பலதை அவர் இல்லாத போது தான் சொல்லுவா. அவர் முன்னாடி அப்படி பேசினதுக்கு சில சமயம் நவீ திருப்பி சொல்லிருக்கார் ஆனா பல நேரம் கண்டுக்காம இருந்துடுவார்.”
“நீயாவது அத்திம்பேர்ட்ட சொல்லி உனக்காக பேச சொல்ல வேண்டியது தானே”
“எனக்கு தோணலை வேனு அதுவுமில்லாமல் ஒரே ஒரு தடவை அவராவே அப்படி அவர் அப்பாட்ட சொன்னதுக்கு எங்க மாமனார் அவர்ட்ட குதிச்சிருக்கார்.”
தொடரும்…