அத்தியாயம் 56: பேச்சுவார்த்தை

ஓவென்று அழுத மிருதுளாவை அம்புஜம் 

“ஏய் மிருது அழறதை நிப்பாட்டுமா. சொன்னா கேளுமா”

என்று சொல்ல ஃபோனிலிருந்த நவீனும்

“மிருது ஏன் அழற? என்ன ஆச்சு? ப்ளீஸ் ஸ்டாப் க்ரையிங் அன்ட் டெல் மீ வாட் ஹாப்பென்டு?”

உடனே கண்களை துடைத்துக் கொண்டு விக்கி விக்கி நடந்ததை தன் கணவனிடம் கூறினாள் மிருதுளா. அதை கேட்ட நவீன் 

“சரி விடு மிருது. நான் உன்னை உங்க அம்மா ஆத்துல விட்டுட்டு வந்திருக்கணும். அவாளை நம்பி தப்பு பண்ணிட்டேன். இனி நீ அங்கே போக வேண்டாம். நீ நிம்மதியா இங்கேயே இரு சரியா? நான் உனக்கு வாரத்துல சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஃபோன் பண்ணறேன்.”

“சரி நவீன். உங்களுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கப் போறான்னு உங்க அம்மா சொன்னாளே…நீங்க என்னை விட்டுட்டு அப்படி பண்ணிப்பேளா?”

என்று வெகுளிதனத்தோடு கேட்டவளிடம்

“அப்படி எதுவும் நடக்காது. நீ எதையும் நினைச்சுண்டு கவலை பட தேவையில்லை புரியறதா?”

“சரி நவீன் நீங்க எப்போ வீட்டுக்கு போய் சேர்ந்தேங்கள்? என்ன சாப்பிட்டேங்கள்?”

“நான் கொஞ்சம் முன்னாடி தான் வந்தேன். குளிச்சிட்டு டாபால சாப்டுட்டு தான் உனக்கு கால் பண்ணறேன்”

“சரி நவீன் என் அம்மா உங்ககிட்ட பேசணும்ன்னு சொல்லறா குடுக்கட்டுமா?”

“ம்…குடு மிருது”

“ஹலோ மாப்ள பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்துதா?”

“ஆங் இருந்தது. சொல்லுங்கோ”

“நடந்தது எல்லாம் மிருதுளா உங்கிட்ட சொல்லியிருப்பா. எங்க பொண்ணை உங்களை நம்பி தானே அனுப்பினோம் அவளை இப்படி எல்லாம் கேவலமா நடத்திருக்காளே இது நியாயமா. பெத்தவா எங்களுக்கு இதை எல்லாம் கேட்கும் போது எப்படி இருக்கும் சொல்லுங்கோ…அதுவும் ஒண்ணும் தெரியாத எங்க பொண்ணை கேட்க ஆளில்லைன்னு நினைச்சுண்டுட்டாளோ நாங்க இருக்கோம். இப்படி மனசாட்சி இல்லாம நடந்திண்டிருக்காளே உங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுக்கு என் பொண்ணோட நிலைமை இதுதானா? இதெல்லாம் எதுவுமே சரியில்லை. எங்க பொண்ணை பட்டினிப் போட்டு வெறும் ரசம் ரசம் ன்னு கொடுத்து நல்லா வேலையும் வாங்கி, மாசமான பொண்ணை தூங்கவும் விடாமா படுத்தின பாடெல்லாம் இன்னைக்கு ஹாஸ்பிடல் ல எடுத்த டெஸ்ட் ல தெரிஞ்சுது. டாக்டர் என்னை திட்டறா!! இப்படியா மாசமான பொண்ணை பாத்துப்பா?”

“நான் அவாளை கொண்டு வந்து விட்டுட்டு போக தான் சொன்னேன் ஆனா அவா இப்படி எல்லாம் நடந்துப்பா பேசுவான்னு எனக்கு தெரியாது, நான் என்ன செய்வேன்?”

“சரி இது தெரியாதுன்னு சொல்லறேங்கள் ஓகே. ஆனா நீங்க அவளோட இருக்கும் போதே நிறைய விஷயங்கள் நடந்திருக்கே அதெல்லாம் ஏன் நீங்க கண்டுக்கலை? உங்க பொண்டாட்டியை இப்படி படுத்தும் போதும், பட்டினி போட்ட போதும், ஏழு மாச கர்ப்பிணியை வேன் ல யாரோடோ விஷேஷத்துக்கு கூட்டிண்டு போய் ஆக்ஸிடென்ட் ஆனபோது எல்லாம் அவ கூட தானே இருந்தேங்கள்!!! ஏன் அப்போவும் ஒண்ணுமே கேட்கலை நீங்கள்? உங்களை நம்பினதுக்கு நல்லா எங்க பொண்ணுக்கு  செஞ்சிருக்கேங்கள் மாப்ள செஞ்சிருக்கேங்கள். மிருது வ பெத்த எங்களுக்கு மனசு நிறைஞ்சிருக்கு.”

“ஓகே கவலை படாதீங்கோ நான் பார்த்துக்கறேன். மிருது ரிப்போர்ட்ஸ் ல என்ன ப்ராப்ளம்?”

“நீங்க தான் எங்க பொண்ணுக்கு நடந்த அத்தனையையும் பார்த்துண்டு தானே இருந்திருக்கேங்கள்!! இன்னமும் பார்க்கத்தான் போறேங்கள். நல்லா பாருங்கோ ஆனா நாங்க அவாளை விடப் போறதில்லை நாளைக்கு நாங்க மூணு பேருமா உங்க ஆத்துக்கு போய் உங்க அப்பா அம்மாட்ட ஏன் இப்படி எல்லாம் செய்தேங்கள்ன்னு கேட்க தான் போறோம். அவாளை விட மாட்டோம். ஆசை ஆசையா வளர்த்த எங்க பொண்ணை என்னெல்லாம் செய்திருக்கா என்னெல்லாம் பேசியிருக்கா!!! உங்களுக்கு எங்க வலி புரியாது… நாளை உங்களுக்கு பொண்ணு பொறந்து அதை கட்டிக் கொடுத்த இடத்துல இப்படி பண்ணினா புரியும்…ஆனா வேண்டாம் உங்களுக்கும் என் பொண்ணுக்கும் இப்படிப்பட்ட மனவேதனை வரவேண்டாம்ன்னு ஆண்டவனை வேண்டிக்கறேன். மிருதுவோட ஹெச் பி லெவெல்  ஒன்பது தான் இருக்காம். உடம்புல சத்தே இல்லையாம். இப்படியே இருந்தா டெலிவரி ரொம்ப சிக்கல் ஆகிடும்ன்னு எங்களை திட்டினா. இதுதான் நீங்களும் உங்க குடும்பமும் எங்க மிருதுவை பார்த்துண்ட லட்சணம்.”

என்று அம்புஜமும் அழுதாள். அதை கேட்ட நவீன்

“ஓகே ஓகே எல்லா தப்பையும் சரி செய்யறேன் நீங்களும் அழாதீங்கோ. இனி இப்படி நடக்காமல் நான் பார்த்துக்கறேன். மிருதுவை பாத்துக்கோங்கோ. நீங்க போய் அவாகிட்ட பேசறதுன்னா பேசிக்கோங்கோ அதில் எனக்கொன்றும் சொல்வதற்கு இல்லை. தப்பு செஞ்சிருக்கா நீங்க தட்டிக் கேட்கிறதுல எந்த தவறுமில்லை. சரி நான் இப்போ ஃபோனை வைக்கிறேன் நாளைக்கு மறுபடியும் கூப்பிடறேன்னு மிருதுகிட்ட சொல்லிடுங்கோ. பை”

என்று ஃபோனை துண்டித்தான் நவீன். ரிசீவரை வைத்து விட்டும் அழுதுகொண்டே இருந்தாள் அம்புஜம். அதைப் பார்த்த மிருதுளா….

“அம்மா ஏன் அழற ஏதாவது நவீன் சொல்லிட்டாரா?”

“அதெல்லாம் அவர் ஒண்ணும் சொல்லலை டி”

“அப்பறம் எதுக்கு மா அழுதுண்டிருக்க?” 

“ஒண்ணுமில்லை டா வேனு. சரி சரி நாளைக்கு நாம மூணு பேரும் போய் மிருது மாமனார் மாமியாரை நல்லா கேட்டுட்டு வரணும். நான் மாப்ள கிட்ட சொல்லிட்டேன்”

“சரி சரி போகலாம் இப்போ விளையாட்டை ஆரம்பிப்போமா?”

“எப்பவும் விளையாட்டு தானா டா உனக்கு?”

“அம்மா அதுக்காக எப்பவுமே நடந்ததை நினைச்சிண்டு அழுதுண்டே இருக்கணுமா? வா மா ஒரு கேம் தாயம் போட்டா எல்லாம் சரியாகிடும்”

என்று வேனு கூறி தன் அம்மா மற்றும் அக்காவின் மனதை இலகுவாக்கினான். அனைவரும் விளையாட்டு முடிந்ததும் படுத்து உறங்கச் சென்றனர். வேனு வழக்கம் போல சிங்கள் பெட்டில் படுத்துக்கொண்டான், ராமானுஜம் ஹாலில் படுத்துறங்கினார், அம்புஜமும்,  மிருதுளாவும் தரையில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டனர். வீடு மிகவும் சிறியதாக இருந்ததால் மிருதுளா கஷ்ட்டப் படுவதைப் பார்த்த அம்புஜம் தன் கணவரிடம் டபுள் பெட் ரூம் குவார்டஸ் எப்போது அளாட் ஆகும் என்று மறுநாள் காலை விடிந்ததும் ராமானுஜம் வேலைக்கு புறப்படும் போது கேட்டாள். அவரும் அப்ளை செய்திருப்பதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் கிடைத்துவிடும் என்றும் கூறி பத்து மணிக்கு இரண்டு மணி நேரம் பாஸ் போட்டு வருவதாகவும் சம்மந்தி வீட்டுக்கு சென்று வரலாம் என்றும் கூறிவிட்டு காலை ஷிப்ட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். 

காலை விடிந்ததிலிருந்து அம்புஜம் மிருதுளாவிடம் சொன்னது போலவே காபி, டிபன், ஜுஸ் எல்லாம் கொடுத்தாள். அன்று காலேஜ் லீவ் என்பதால் வேனு ஒன்பது மணிக்கு தான் எழுந்தான். அவன் எழுந்ததும் அம்புஜம் அவனிடம்…

“டேய் வேனு குளிச்சு ரெடியாகுடா அப்பா பத்து மணிக்கு பாஸ் போட்டு வர்றேன்னு சொல்லிருக்கா. நாம மூணு பேரும் அவா ஆத்துக்கு போயிட்டு வந்துடலாம்”

“சரி மா இதோ இப்பவே ரெடியாகி வந்துடறேன்”

“அம்மா கட்டாயம் நீங்க அங்க போய் கேட்கணுமா?”

“ஏம்மா மிருது அப்படி கேட்கிற? இப்போ விட்டோம்ன்னா அப்பறம் அவா ரொம்ப ஆட ஆரம்பிப்பா மா. அதுனால ஒரு எட்டு போய் கேட்டுட்டு வந்தா தான் அடுத்த தடவை இது மாதிரி உன்னை பேச கொஞ்சமாவது யோசிப்பா. ஆமா ஏன் நீ இப்படி கேட்ட?”

“இல்லை அவா எப்படி வேணும்னாலும் பேசக் கூடியவா…அதுனால உங்களையும் ஏதாவது அசிங்க படுத்திடுவாளோன்னு தோணறது அதுதான் கேட்டேன்”

“நீ ஒண்ணும் கவலைப் படாதே நாங்க பாத்துக்கறோம். உனக்கு இதோ பதினொன்றறை மணிக்கு குடிக்க வேண்டிய ஜுஸை ஃப்ரிட்ஜில் வச்சிருக்கேன் மறக்காம எடுத்துக் குடி. சமையல் எல்லாம் ரெடியா இருக்கு. நாங்க வந்திடுவோம் சப்போஸ் வர லேட்டாச்சுன்னா டைமுக்கு சாப்பிட்டு விடு. நானும் போய் கிளம்பட்டும்”

என்று கூறிவிட்டு கிளம்பியதும் ஆட்டோவுடன் வந்தார் ராமானுஜம். வீட்டினுள் வந்து தண்ணீர் அருந்தி விட்டு மூவரும் ஈஸ்வரன் பர்வதம் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்றதும் மிருதுளா கடவுள் படங்களுக்கு முன் நின்றுக்கொண்டு..

“கடவுளே எனக்காக பேச போகும் என் அம்மா, அப்பா மற்றும் என் தம்பியை அவர்கள் அசிங்கப் படுத்தவோ, அவமானப் படுத்தவோ கூடாது நான் பட்ட அசிங்கங்களே போதும் சாமி. நீ தான் பார்த்துக்கணும்.”

என வேண்டிக்கொண்டு அங்கேயே அமர்ந்தாள். 

ஆட்டோ ஈஸ்வரன் வீட்டு வாசலில் சென்று நின்றது. மூவரும் இறங்கினர். ராமானுமஜம் ஆட்டோகாரரை அறை மணி நேரம் கழித்து அதே இடத்துக்கு வரும்படி சொல்லி அனுப்பினார். ஈஸ்வரன் வீட்டு கேட்டை திறந்தான் வேனு. கேட் திறக்கும் சப்தம் கேட்டு வீட்டினுள் இருந்து எட்டிப் பார்த்தாள் பர்வதம். அவர்கள் எதற்காக வந்திருப்பார்கள் என்பதை யூகித்து  உடனே தன் கணவரிடம் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி ஹாலுக்கு அழைத்து வந்து….வருபவர்களை வேண்டா வெறுப்புடன்

“வாங்கோ” என்று ஒற்றைச் சொல்லில் நிறுத்திக் கொண்டாள் பர்வதம். உள்ளே சென்றவர்களை அமரச் சொன்னார் ஈஸ்வரன். மூவரும் அமர்ந்தனர்.  ராமானுஜம் குடும்பம் எதற்கு வந்திருக்கிறார்கள் என்பது ஈஸ்வரன் தம்பதியருக்கு நன்கு தெரிந்ததே அதே சமயம் எப்படி பேச்சை துவங்குவது என்ற தயக்கத்திலிருந்தனர் ராமானுஜம் குடும்பத்தினர். தவறிழைத்தவர்கள் எந்தவித மன உறுத்தல்களின்றி திமிராகவும் தட்டிக் கேட்க வந்தவர்கள் அதை எப்படி கேட்பது என்று தயங்கியதாலும் சற்று நேரம் மௌனம் நிலவியது. நால்வரையும் கவனித்த வேனு பேச்சை ஆரம்பிக்க முடிவு செய்து …

“எங்க பவின் அன்ட் ப்ரவீனை காணம்? இன்னைக்கு காலேஜ் எல்லாம் லீவ் ஆச்சே?”

“அவா பக்கத்துல இருக்கிற கிரௌண்ட் ல கிரிக்கெட் விளையாட போயிருக்கா”

என்றாள் பர்வதம். வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் தண்ணீர் வேண்டுமா என்று கேட்டாள் பர்வதம். அதற்கு அம்புஜம் வேண்டாம் என கூற அங்கேயே நின்றபடி வேறேதும் பேசாமல் வந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஈஸ்வரனும் வந்தவர்கள் வாயை திறக்கட்டும் அப்புறம் வச்சுக்கலாம் என்பது போல அமர்ந்திருந்தார்.

ராமானுஜம் பேசுவார் என்று காத்திருந்த அம்புஜத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருந்தார்.  தன் மகளுக்காக தான் பேசினால் தான் ஆச்சு என்ற முடிவுக்கு வந்து பேச துங்கினாள் அம்புஜம்….

“மிருதுளா முந்தாநாள் அழுதுண்டே ஆத்துக்கு வந்தா. அதைப் பார்த்ததும் நான் பதறிப் போயிட்டேன். கொண்டு வந்து விட்ட பவின் கிட்ட கேட்டேன் அவனும் ஒழுங்கான பதில் சொல்லலை.  மிருதுளா ரொம்ப நேரம் அழுது முடிச்சதுக்கப்பறமா நடந்ததைச் சொன்னா?  மாசமான பொண்ணு தன் அம்மா வீட்டுக்கு போக நினைச்சது தப்பா? அம்மா கையால சாப்பிடணும்ன்னு தோணறது குற்றமா? எங்க பொண்ண உங்க புள்ளைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்த நாள்லேந்து முந்தாநாள் வரை அவ ஏதாவது மரியாதைக் குறைவாவோ, உங்க புள்ளையோட சரியா குடும்பம் நடத்தாமலோ, இல்லை உங்க வீட்டு வேலைகளை செய்ய மாட்டேன் என அடம்பிடிக்கவோ? இப்படி ஏதாவது தவறு அவ செஞ்சிருந்தா நீங்க சொல்லுங்கோ நாங்க அவளை கண்டிக்கறோம். நீங்க ஏன் அப்படி எல்லாம் பேசி எங்க பொண்ணை அழ வச்சு அனுப்பகயிருக்கேங்கள்? இதுக்காகவா எங்க பொண்ணை உங்க புள்ளைக்கு கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சோம்?”

என்று அம்புஜம் கேட்டு முடித்ததும் ஈஸ்வரன்

“என்ன? விட்டா கேள்வி மேல கேள்வி கேட்ப போல.”

“தயவுசெய்து செய்து மரியாதை கொடுத்து பேசுங்கோ இந்த ஒருமை ல பேசறதெல்லாம் சரியில்லை. நான் உங்க சம்மந்தி” என்றாள் அம்புஜம் 

“சம்….மந்தி பெரிய சம்…ம்..மந்தி உலகத்துல இல்லாத சம்மந்தி. சரி இதை கேட்கணும்ன்னா முந்தாநாளைக்கே வந்து கேட்டிருக்க வேண்டியது தானே எதுக்கு இரண்டு நாள் வெயிட் பண்ணி வந்து கேட்கிறேங்கள்?”

என்று மீண்டும் திமிருடன் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் ஈஸ்வரன் கேட்க…அதற்கு அம்புஜம்….

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s