
மிருதுளா வீட்டிற்கு வந்த அடுத்த நாள் விடிந்தும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். ராமானுஜமும், வேனுவும் மெதுவாக கப்போர்ட்டை திறந்து துணி எடுத்துக் கொண்டு அந்த அறையின் கதவை மூடிவிட்டு குளித்து, டிபன் சாப்பிட்டு ஆபீஸுக்கும், காலேஜுக்கும் சென்றனர். வீடே அமைதியாக இருந்தது. மிருதுளா சட்டென விழித்து கடிகாரத்தைப் பார்த்தாள் மணி எட்டு என்று காட்டியது. வேகமாக எழுந்து ஹாலுக்கு வந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன் அம்மாவிடம்
“என்ன மா மணி எட்டாச்சு ஏன் என்னை எழுப்பலை?”
“நீ நல்லா அசந்து தூங்கிண்டிருந்த மிருது அது தான் எழுப்பலை”
“சரி அப்பா, வேனு எல்லாரும் எங்க?”
“அப்பாக்கு இந்த வாரம் 6 டூ 2 ஷிப்ட் ஸோ காலை ல அஞ்சரைக்கு ஆபீஸ் போயிட்டா, வேனுக்கு இன்னைக்கு லாப் க்ளாஸ் இருக்குன்னு அவனும் ஏழு மணிக்கெல்லாம் காலேஜுக்கு கிளம்பி போயாச்சு.”
“ஓ!!! அப்படியா. சரி எப்படி பீரோவை திறந்து அவா டிரஸ் எடுத்தா நான் அங்கே தானே படுத்திருந்தேன்?”
“மெதுவா அவா அவா டிரஸை உன்னை தொந்தரவு செய்யாம எடுத்துண்டு வரச்சொன்னேன் அதே போல அவாளும் செய்தா. இன்னைக்கு அவா ரெண்டு பேரோட டிரஸ்ஸையும் ஹாலில் இருக்கும் இந்த ஷெல்ஃப் ல அடுக்கிக் கொடுக்கணும்”
“என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்ட்டமா மா?”
“கிடையவே கிடையாது மிருது மா. நான் அப்பா கிட்ட இரண்டு பெட்ரூம் குவார்ட்டர்ஸுக்கு அப்ளை பண்ண சொல்லிருக்கேன். அது கிடைச்சுதுன்னா நல்லா இருக்கும்.பார்ப்போம். சரி சரி அசடு மாதிரி எல்லாம் யோசிக்காம போய் ப்ரஷ் பண்ணிட்டு வா நான் உனக்கு டிபன் தர்றேன். என் பேரக் குழந்தை பாவமில்லையா”
“அம்மா நீ தான் ம்மா பேரக் குழந்தைன்னு முதன் முதல்ல சொல்லற. கேட்கவே நல்லா இருக்கு மா. சரி இரு நான் ஃப்ரெஷ் ஆகி வரேன்”
“வா வா மிருது வா உட்காரு இந்தா சூடான இட்டிலி, தேங்காய் சட்னி அன்ட் உன்னோட ஃபேவரைட் கொத்துமல்லி சட்னி. இதை சாப்பிட்டுண்டு இரு அம்மா உனக்கு காபி போட்டுண்டு வரேன். சரியா. நல்லா சாப்பிடணும். அம்மா தர்றதை எல்லாம் வேண்டாம்ன்னு சொல்லாம சமத்தா சாப்பிடணும் அப்போ தான் குழந்தை ஆரோக்கியமா பொறக்கும் புரிஞ்சுதா.”
“சரி மா முடிஞ்சதை சாப்பிடறேன்”
“இந்தா காபி. என்னது இது இரண்டு இட்லி தான் சாப்பிட்டிருக்க? இந்தா இன்னும் இரண்டு சாப்பிடு”
“அம்மா நான் அங்கே ஒரே ஒரு இட்லி தான் சாப்பிடுவேன். இங்கே இரண்டு சாப்பிட்டிருக்கேன். இன்னும் ஒண்ணு போதும் மா ப்ளீஸ் காபி வேற குடிக்கணும்”
“சரி இந்த ஒண்ணையும் சாப்பிடு. மிருது மா இன்னைக்கு மத்தியானம் லஞ்ச் சாப்பிட்டுட்டு நாம இரண்டு பேரும் ஹாஸ்பிடல் போய் உனக்கு ஃபுல் செக்கப் பண்ணிட்டு அப்படியே ப்ரெனென்ஸி அன்ட் டெலிவரி ஃபைல் ஓபன் பண்ணிட்டு வந்திடுவோம் சரியா. இதுவே லேட்டு இன்னும் டிலே பண்ண வேண்டாம் மா”
“சரி மா போகலாம். ஆனா நாம எப்படி போவோம்?”
“ஆட்டோ ல போயிட்டு வந்திடுவோம்”
“ஓகே மா. அப்பாடா சூப்பர் டிபன் மா. இந்த கொத்தமல்லி சட்னி நீ குஜராத்த ல செஞ்சு தந்து சாப்பிட்டது அதுக்கப்பறம் இன்னைக்கு தான் சாப்பிடறேன்.”
“திருப்தியா சாப்பிட்டயா? பேசாம காலை நீட்டிண்டு உன் பாட புஸ்தகத்தை எடுத்துப் படி இன்னும் இரண்டு நாள்ல எக்ஸாம் தொடங்க போறது ஞாபகம் இருக்கா?”
“ஓ !!!ஆமாம் மா!!! சரி சரி நான் படிச்சுக்கறேன்”
என்று கூறிவிட்டு மிருதுளா அவள் பரீட்சைக் கான பாடங்களை படிக்கலானால். படித்துக் கொண்டே தூங்கிப் போனாள் மிருதுளா. ஒரு பதினோரு மணி அளவில் விழித்து பாத்ரூம் சென்று வந்து மீண்டும் படிக்க அமர்ந்த மிருதுளாவுக்கு ஒரு க்ளாஸ் ஜுஸ் கொடுத்தாள் அம்புஜம். அதை வாங்கி குடித்த மிருதுளா
“என்ன ஜுஸ் மா இது. இட்ஸ் டேஸ்டி.”
“இது காரட் ஜுஸ் வித் லமென் அன்ட் அ பின்ச் ஆஃப் சால்ட் அன்ட் சுகர்.”
“சூப்பரா இருக்குமா தாங்கயூ”
“என்னத்துக்கு தாங்க்ஸ் எல்லாம்? இந்தா இந்த ஒரு ஆப்பிளையும் சாப்பிடு”
மிருதுளா ஆப்பிளை சாப்பிட்டு ஒரு பதினைந்து நிமிடம் கழித்து குளித்துவிட்டு வந்தாள். ஒரு மணிக்கு சுட சுட சாதம் சாம்பார் மூன்று வகை பொறியல்கள் ஒரு க்ளாஸ் மோர் எல்லாம் கொடுத்து சாப்பிடச் சொன்னாள் அம்புஜம். அதைப் பார்த்ததும்
“அம்மா இவ்வளவு நாளா வெறும் ரசம் மட்டுமே சாப்பிட்ட எனக்கு இப்படி சடன்னா இவ்வளவு சாப்பிட முடியாதம்மா”
“எவ்வளவு முடியறதோ அவ்வளவு சாப்பிடு போறும்”
“மோர் குடிச்சே ஆகணுமா?”
“உனக்கு மோர் தயிர் பிடிக்காதுன்னு எனக்கு நன்னா தெரியும் ஆனா இந்த நேரத்துல மோர் குடிக்கவாவது செய்யணும் உன் குழந்தைக்காக. அதுல பெருங்காயம், உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை எல்லாம் போட்டிருக்கேன் ஒரே மடக்குல குடிச்சிடுமா பாப்பாக்காக”
“சரி சரி பாப்பா உனக்காக குடிக்கறேன்”
என்று தனக்கு பிடிக்காத மோரை தன் பிள்ளைக்காக குடிக்க ஆரம்பித்தாள் மிருதுளா. இருவரும் உணவருந்திய பின் ஹாஸ்பிடலுக்கு ஆட்டோவில் சென்றனர். அங்கே மிருதுளாவுக்கு எல்லா டெஸ்டுகளும் எடுக்கப்பட்டது. கடைசியாக அவளுக்கு மூன்றாவது மாதம் டெஸ்ட் எடுத்தது அதன் பின் அவள் டாக்டரிடம் செல்லவில்லை. ரிப்போர்ட்ஸ் வருவதற்காக ஒரு மணிநேரம் அங்கேயே அமர்ந்தனர் இருவரும் அப்போது அங்கே செக்கப்புக்கு வந்திருந்த மற்றப் கர்ப்பிணி பெண்களுடனும் அவரவர் அம்மாக்களுடனும் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியாமல் இருந்தது அம்புஜத்துக்கும், மிருதுளாவுக்கும். லாபில் இருந்து மிருதுளா பெயரை கூப்பிட்டதும் அவள் வேகமாக எழுந்திருக்க, அதைப் பார்த்த ஒரு அம்மா
“ஏம்மா பொண்ணு இப்படி எல்லாம் சடால் ன்னு எழுந்திரிக்கக் கூடாது மா. மெதுவா தான் எழுந்திரிக்கணும் உட்காரணும் புரியுதா”
“சரி ஆன்டி அப்படியே செய்யறேன்”
என்று கூறிவிட்டு மெல்ல நடந்துச் சென்று ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு டாக்டரை பார்க்க சென்றனர் இருவரும். டாக்டர் மிருதுளாவின் ரிப்போர்ட்ஸை பார்த்ததும்
“என்ன மா இது ஹெச் பி வெறும் ஒன்பது தான் இருக்கு. சத்தே இல்லாம இருக்க? நீங்க இந்த பொண்ணோட அம்மாவா ?”
“ஆமாம் டாக்டர்”
“வாங்க உட்காருங்க. ஏன்மா மிருதுளா இரண்டு மாசம் முன்னாடி குஜராத்ல எடுத்த ரிப்போர்ட்ஸையும் பார்த்தேன் இப்போ இங்கே எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்ஸையும் பார்த்தேன். மாஸிவ் டிஃப்ரென்ஸ் இருக்கே!!!! ஏன் மா உங்க பொண்ணு உடம்புல சத்தே இல்லாம இருக்கா? நல்லா… பழங்கள், காய்கறிகள் எல்லாம் குடுத்து சாப்பிட வைக்காம என்னமா பண்ணறீங்க? இப்படியே இந்த பொண்ணு இருந்தான்னா அப்பறம் டெலிவரி ரொம்ப சிக்கலாகிடும். நீங்களும் புள்ளைய பெத்தவங்க தானே?”
“இவ்வளவு நாளா அவ அவங்க மாமியார் வீட்டு ல இருந்தா டாக்டர். நேத்து தான் எங்க வீட்டுக்கு வந்திருக்கா. இனி நான் பத்திரமா நீங்க சொன்னா மாதிரியே பார்த்துக்கறேன் டாக்டர்.”
“ஏம்மா உங்க பொண்ணோட மாமியார் ரொம்ப கொடுமைகாரியோ?”
“ஏன் டாக்டர் அப்படி கேக்கறேங்கள்?”
“ஆமாம் மாசமா இருக்குற பொண்ணை இப்படியா உடம்புல ஒண்ணுமில்லாம பண்ணுவாங்க? ரெண்டு மாசம் முன்னாடி எல்லாமே சரியா இருந்திருக்கு ஆனா இப்போ எல்லாமே டவுனா இருக்குன்னா அப்படி தானே எடுத்துக்கணும்”
“இனி எங்க வீட்டில தான் இருக்கப் போறா டாக்டர் அவளை இனி நான் பர்த்துக்கறேன். அடுத்த தடவை வரும் போது நல்லா தெம்பா ஆகிருப்பா டாக்டர் அதுக்கு நான் கியாரன்டி.”
“நான் சில டாப்லெட்ஸ் ப்ரிஸ்க்ரைப் பண்ணறேன் அதையும் சாப்பிடணும். என்ன மிருதுளா உன் அம்மா சொல்லறபடி டூ வீக்ஸ் ல அடுத்த செக்கப்புக்கு வரும் போது ஹெச் பி பண்ணண்டு காட்டணும் புரியுதா. அதுக்கு நீ நல்லா சாப்பிடணும். ஓகே லெட் அஸ் மீட் ஆஃப்டர் டூ வீக்ஸ் சேம் டே பை டேக் கேர்”
இருவரும் டாக்டர் ரூமிலிருந்து வெளியே வந்ததும் வேறு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வீட்டுக்கு வந்ததும் அம்புஜம் மிருதுளாவுக்கு ஜுஸ் கொடுத்தாள். பின் அவளைப் பார்த்து…
“டாக்டர் சொன்னதைக் கேட்ட இல்ல மிருது. இனி தினமும் காலை ல டிபன் முடிஞ்சதும் ஒரு பதினோரு மணிக்கு ஒரு பழம் அன்ட் வெஜிடபுள் ஜுஸ், மத்தியம் ஒரு மணிக்கு சத்தான சாப்பாடு வித் ஒரு க்ளாஸ் மோர், மூணு மணி அளவில் ஒரு க்ளாஸ் ஃபுரூட் ஜுஸ் நாலரைக்கு ஏதாவது ஒரு பழம், அஞ்சரைக்கு காபி ஆர் டீ வித் உனக்கு இஷ்டமான ஸ்னாக்ஸ், ஏழரைக்கு டிபன் அன்ட் ஒன்பது மணிக்கு சூடான மசாலா பால். இது தான் உன்னோட ரெகுலர் டயட் இந்த அம்மா தர்றபோறது. ஒழுங்கா சாப்பிடணும் புரியறதா?”
“ஓகே டன். நான் மறுபடியும் அங்கே போக வேண்டாமில்லையா மா?”
“ஓண்ணும் வேண்டாம். உன்னை பார்த்துண்ட லட்சணம் தான் இன்னைக்கு ரிப்போர்ட்ஸ்லையும், டாக்டர் சொன்னதுலேந்தும் நல்லா புரியறதே அப்புறம் எப்படி உன்னை அங்கே அனுப்புவோம். நீ அந்த கவலை எல்லாம் இல்லாம நிம்மதியா சாப்பிட்டு, தூங்கி எக்ஸாம் எழுதி, எங்களோட ஜாலியா இரு அது போதும்.”
ஜுஸை குடித்துவிட்டு சற்று நேரம் படுத்துக் கொண்டாள் மிருதுளா. மணி நாலரை ஆனதும் ஒரு தட்டில் திராட்சை பழம் வைத்து சாப்பிடச் சொல்லிக் மிருதுளாவிடம் கொடுத்தாள் அம்புஜம். மிருதுளாவுக்கு டாக்டர் டெலிவரி கஷ்டமாகிடும் என்று சொன்னது அச்ரிரீ போல ஒலிக்க உடனே சாப்பிட்டாள்.
அப்போது வீட்டினுள் நுழைந்த ராமானுஜம் ஒரு கவரை மிருதுளாவிடம் கொடுத்து
“இந்தா மிருது உனக்கு பிடித்த பலாபழம் சாப்பிடு”
என்று கொடுத்தார்.
மாலை ஐந்தரை மணிக்கு வேனு தன் அக்காவிடம் முன்தினம் சொன்னது போலவே அவளுக்கு பிடித்த சமோசாவும் கேக்கும் கல்லூரியிலிருந்து வரும் வழியில் நின்று வாங்கி வந்தான். அம்புஜம் இருவருக்கும் டீ வைத்துக் கொடுத்தாள். இருவரும் அமர்ந்து சாப்பிட்டனர். பின் வேனு அவனது பாடங்களில் மூழ்கினான்.
இவர்களின் அன்பைப் பார்த்து உணர்ந்துக் கொண்டிருந்த மிருதுளா கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அதைப் பார்த்த அம்புஜம்
“ஏய் மிருது என்னத்துக்கு இப்போ அழறாய்?”
“இல்லமா…. என்னை துளியும் கண்டுக்காத, அசிங்க படுத்தி, தூங்க விடாம, பேச்சுக்கு பேச்சு விஷத்தைக் கக்கிய வீட்டிலிருந்து… இங்க வந்ததும்… இப்போ எனக்காக நீங்க ஒவ்வொருவரும் ஆசை ஆசையா ஒவ்வொன்று வாங்கித் தரும்போதும் செய்து தரும்போதும்…..அதை நினைத்தேன் அழுகை தானா வந்திடுத்து.”
“விடு விடு அதெல்லாம் மறந்துடு மிருது. இது பிடிச்சிருக்கா இதை அனுபவி அது போதும். நீ எவ்வளவுக்கெவ்வளவு சந்தோஷமா இருக்கயோ அவ்வளவுக்கவ்வளவு உன் குழந்தை ஆரோக்கியமா இருக்கும் தெரியுமா! சரி டிபன் சாப்பிட்டாச்சு…. இப்போ நாம ஒரு கேம் தாயம் போடுவோமா?”
“சரி வேனுவையும் அப்பாவையும் வரச்சொல்லு”
என்று பேசிக்கொண்டிருக்கும் போது டெலிபோன் மணி அடித்தது. அம்புஜம்
“யார் இந்த நேரத்துல் கால் பண்ணறா? எடுங்கோளேன் நீங்க தான் ஃபோன் பக்கத்துல இருக்கேங்கள்” என்று ராமானுஜத்திடம் சொல்ல அவரும் ரிசீவரை எடுத்து ஹலோ என்று சொன்னார்….பின்னாலிருந்து அம்புஜம்
“யாருப்பா?”
அதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் ராமானுஜம் மிருதுளாவை அழைத்தார். மிருதுளாவும் வந்தாள். ரிசீவரை மிருதுளாவிடம் கொடுத்து ….
“மாப்ள பேசறார் மிருது பேசு”
என்று சொன்னார். மிருதுளா ரிசீவரை வாங்கியதும் அங்கிருந்து நவீன்
“ஹாய் மிருது எப்படி இருக்க? நான் சொன்னா மாதிரி உன்னை பவின் கொண்டு வந்து விட்டானான்னு கன்பார்ம் பண்ணத்தான் கால் பண்ணினேன். என்ன ஹாப்பியா?”
என்றதும் மிருதுளா “ஓ” என்று அழ ஆரம்பித்தாள்.
தொடரும்…..