
கண்களை தனது துப்பட்டாவால் எத்தனை முறைத் துடைத்தாலும் கண்ணீரை நிறுத்த முடியாமல் தவித்தாள். பெருத்த வயிறுடனும் கையில் ஒரு பையுடனும் கண்களில் நிற்காமல் வழிந்துக் கொண்டே இருக்கும் கண்ணீருடனும் பவின் பின்னாலேயே நடந்துச் சென்றாள் மிருதுளா. பஸ் நிலையத்தில் இருவரும் நின்றனர். அந்த நேரம் பார்த்து பஸ் வருவதற்கு நேரமாக, தன் மனதில்
“ஆண்டவா என் மனம் முழுவதும் ரணமாகி, கண்களில் கண்ணீர் பெருக இப்படி என்னை நிறுத்தி வேடிக்கைப் பார்ப்பதில் உனக்கென்ன அவ்வளவு ஆனந்தம்? தயவுசெய்து நான் என் வீட்டுக்குப் போக நீயும் தடை செய்யாதே!!! என் மீது எந்த தவறுமில்லை எனில் பஸ்ஸை உடனே அனுப்பி வை கடவுளே”
என்று அவள் கண்களை மூடிக் கொண்டு வேண்டி முடிக்கவும் பஸ்ஸின் ஹாரன் சப்தம் கேட்கவும் சரியாக இருந்தது. உடனே கடவுளுக்கு நன்றி கூறி பஸ்ஸில் ஏறினாள் மிருதுளா. ஒரு இருக்கையின் ஜன்னல் ஓரமாக மடியில் பையை வைத்துக் கொண்டு அமர்ந்தாள். அந்த இருக்கையின் அருகே இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றான் பவின். மிருதுளா அருகே ஒரு பாட்டி அமர்ந்தாள். பஸ் கிளம்பியது.
அந்த பாட்டி மிருதுளாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் மிருதுளா தான் அமர்ந்திருப்பது பஸ் என்ற உணர்வு துளியுமின்றி நடந்ததை நினைத்தும், தன்னை இப்படி தனியாக தவிக்க விட்டுச் சென்ற நவீனை நினைத்தும் அழுதுக் கொண்டே வந்தாள். அன்று வரை அவளை அதுபோல இழிவாக எவருமே பேசியதில்லை என்பதால் அவள் அதிர்ச்சியிலும், வேதனையிலும் தவித்தாள். சீக்கிரம் வீடு சென்றுவிட மாட்டோமா என்று அவளின் மனம் படும் அவசரத்தில் அவளுக்கு அந்த பஸ் மிகவும் மெதுவாக செல்வதுப் போல தோன்றியது.
சற்று நேரம் பார்த்த பாட்டி மிருதுளாவிடம்..
“என்ன தாயி நானும் அப்போலேந்து பார்த்துட்டே வர்றேன் நீ அழுதுகிட்ட வர்ற!!”
என்றாள். ஆனால் அது எதுவும் மிருதுளா காதில் விழவில்லை என்பதை அவள் அசையாமல் கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வழிய அமர்ந்திருந்தது உணர்த்தியது. உடனே அந்த பாட்டி மிருதுளாவின் தோளைப் பிடித்தழுத்தினாள். அப்போது சுயநினைவுக்கு வந்தவள் ….
“இறங்கணுமா?? வந்தாச்சா??”
என்று கேட்க அதற்கு பாட்டி
“என்னமா என்ன ஆச்சு உனக்கு? நீ எங்க இறங்கணும்?”
“நான் எங்க வீட்டுக்கு போகணும் பாட்டி. இல்ல இல்ல இங்க நான் இறங்க வேண்டாம்”
“ஏன் இப்படி அழுதுகிட்டே வர்ற? புள்ளத்தாச்சி இப்படி அழலாமா? அது உன் குழந்தைய பாதிக்கும் இல்லையா? அழாத தாயி அழுகைய நிப்பாட்டு மா”
“தெரியும் பாட்டி ஆனா என்னால முடியலை அதுதான்”
“அட சொல்லிகிட்டே இருக்கேன் நீ அழுதுகிட்டே இருக்கயே”
“பாட்டி ப்ளீஸ் என்னை தொந்தரவு பண்ணாதீங்க.”
“அட என்னடா இது இந்த பொண்ணு அழுதுகிட்டே இருக்கு.”
மிருதுளா பவினைப் பார்த்து இறங்கணுமா என்று கேட்டதைப் பார்த்த பாட்டி பவின் பக்கம் திரும்பி…
“ஏன்ப்பா நீ இந்த புள்ளையோட தம்பியா? வயித்துல புள்ளைய வச்சுகிட்டு இப்படி அழக்கூடாதுன்னு சொல்லுப்பா. பார்க்கவே பாவமா இருக்கு”
என்றாள் அதற்கு பவின் வெடுக்கென
“நீங்க உங்க வேலையப் பாருங்க”
என்றான். அதைக் கேட்ட பாட்டி
“நான் என்ன இப்போ தப்பா சொல்லிப்புட்டேன் நீ இப்படி பேசுற?”
என்று கூறிக் கொண்டிருக்கும் போது முன்னாலிருந்து
“அத்தை வாங்க நாம இறங்கணும். சீக்கிரம் வாங்க”
என்று ஒரு பெண் அழைக்க.
“வந்துட்டேன் மருமவளே. இதோ வந்துட்டேன். பார்த்து கூட்டிட்டுப் போப்பா. இப்படி எல்லாம் கர்ப்பிணி பொண்ண அழவிடக்கூடாது. அழவிட்டவங்களுக்கு மஹா பாவம் தான் வந்து சேரும். நான் வர்றேன் மா”
“பாட்டிமா இறங்கறீங்களா பஸ்ஸ எடுக்க சொல்லட்டுமா”
என்றார் பஸ் கண்டக்டர். உடனே
“இதோ இறங்கிட்டேன்ப் பா நீ பஸ்ஸ எடுக்கலாம்”
“ரை ரைட்” என்று கன்டக்டர் சொன்னதும் பஸ் மீண்டும் கிளம்பியது.
வீட்டுக்கு வாழ வந்த மருமகளை பார்த்துக் கொள்ள வேண்டிய மூத்த தம்பதியர் அவளை பட்டினியிட்டு, அழவிட்டு, சாபமிட்டு, வீட்டை விட்டு துறத்தி விட்டுள்ள நிலையில், ஏதோ ஊர் பேர் தெரியாத ஒரு மூதாட்டி மிருதுளாவிற்கு ஆறுதல் சொல்லி பவினிடமும் அறிவுரைக் கூறிச் சென்றுள்ளார். இதிலிருந்து தெரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் வயதானால் மட்டும் பெரியவர்களாகி விட முடியாது. அவர்கள் நடந்துக் கொள்ளும் முறை அவர்கள் யார் என்பதை காட்டிவிடும்.
கர்ப்பிணி பெண்களுக்கு தங்கள் தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும், தாயுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுவது இயல்பானதாகும். தாய் வீட்டில் கிடைக்கும் அதே பாசம், அன்பு, அக்கறை எல்லாம் புகுந்த வீட்டில் கிடைத்தாலும் தன் தாய் வீடு என்பது அந்த நேரத்தில் எல்லாப் பெண்களும் செல்ல விரும்பும் ஓரே இடமாக இருக்கும். அந்த விருப்பத்தை சொன்னதற்கு ஈஸ்வரனும் பர்வதமும் நடந்துக் கொண்ட விதம், பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவர்களை அவர்களே சிறுமைப்படுத்திக் கொண்டனர் என்றால் மிகையாகாது.
பஸ் நின்றது மிருதுளா மெல்ல இறங்கினாள். பவின் ஒரு ஆட்டோ பிடித்தான் இருவரும் அதில் ஏறினார்கள். வீட்டிலிருந்து அதுவரை இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. ஆட்டோ ராமானுஜம் வீட்டு வாசலில் நின்றதும் மிருதுளா வேகமாக இறங்கி வீட்டினுள் சென்றாள். பவின் ஆட்டோ டிரைவரிடம் சற்று வெயிட் பண்ண சொல்லிவிட்டு அவள் பின் சென்றான்.
கதவைத் தட்டினாள் மிருதுளா. அம்புஜம் கதவைத் திறந்தாள்.
“வா வா மிருது. வாப்பா பவின் “
“அம்மா அம்மா…….. மா…..”
என்று அழுதுக்கொண்டே உள் ரூமிற்குள் சென்றாள் மிருதுளா அவள் பின்னாலேயே அம்புஜம்
“ஏய் மிருது என்னமா? என்ன ஆச்சு? ஏன் அழற? என்னடி ஆச்சு? இந்த நேரத்துல இப்படி அழப்டாது மா!! அம்மாவ பாரு. ஐயோ கடவுளே ஏன் இந்த பொண்ணு இப்படி அழறா. ஒண்ணும் சொல்லவும் மாட்டேங்கறாளே”
என்று பரிதவித்தாள் அம்புஜம். தன் மகள் அழுவதைப் பார்த்த அம்புஜத்திற்கும் அழுகை வந்தது. மகள் ஒன்றும் சொல்லாமல் அழுதுக் கொண்டே இருப்பதைப் பற்றி அவள் கூட வந்த பவினிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று கண்களைத் துடைத்துக் கொண்டே வேகமாக ஹாலுக்கு ஓடி வந்த அம்புஜம்..
“என்னப்பா பவின் என்ன ஆச்சு ஏன் என் பொண்ணு இப்படி அழறா? என்ன தான் நடந்தது? நீயாவது சொல்லுப்பா “
“ஆட்டோ வெயிடிங்கல இருக்கு. எனக்கொன்றும் தெரியாது. அப்பா தான் விட்டுட்டு வரச்சொன்னா. நான் போயிட்டு வர்றேன்”
என்று அவன் கிளம்ப முற்பட்ட போது அவனை வழிமறித்து
“என்னப்பா இது ஒண்ணுமே சொல்லாமா என் பொண்ணை இப்படி அழ அழ விட்டுட்டு மட்டும் வரச்சொன்னாரா உங்க அப்பா”
“நான் வர்றேன்”
என்று ஏதும் கூறாமல் வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றான் பவின். அம்புஜம் விஷயம் தெரியாமல் தவித்தாள். மீண்டும் மிருதுளாவிடம் சென்றாள். மிருதுளா அம்புஜம் மடியில் படுத்துக் கொண்டு அழுதால்.
“மிருது என்னதான்மா நடந்தது? ஏன்டா கண்ணு இப்படி அழற? அம்மாவுக்கு பயமா இருக்குமா. தயவுசெய்து அழுகையை நிப்பாட்டு மா. உன் வயித்துல இருக்குற பாப்பா பாவமில்லையா. நீ அழுதா அதுக்கும் வலிக்கும். அழுகையை நிப்பாட்டுமா.”
என்று அம்புஜம் சொன்னதும் சற்று அழுகையை நிப்பாட்டினாள் மிருதுளா ஆனால் அவ்வளவு நேரம் விக்கி விக்கி அழுததில் அவளுக்கு பேச்சு வரவில்லை. உடனே அம்புஜம் அடுப்படிச் சென்று ஜுஸ் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். நல்ல பசியிலிருந்த மிருதுளா அதை வாங்கிக் குடித்துவிட்டு இன்னுமொரு கிளாஸ் கிடைக்குமா என்றதும் அம்புஜம்
“என்னமா இப்படி இவ்வளவு பசியோட இருக்க. இந்தா குடி”
என்று இன்மொரு கிளாஸ் ஜுஸ் குடுத்து மிருதுளா குடித்ததும் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். அப்போது மிருதுளா மெல்ல விக்கி விக்கி தனக்கு நடந்தது அனைத்தையும் கூறினாள். அதைக் கேட்டதும் அம்புஜத்திற்கு கோபம் வந்தது. கோபத்தில்
“எவ்வளவு எல்லாம் உன்னை படுத்திருக்கா? பேசிருக்கா!!! நீ தலைதீபாவளிக்கு வந்தப்போ கூட ஒண்ணுமே சொல்லலை. அப்போ கூட ஏதோ விஷேஷத்துக்கு போறோம்ன்னு தானே சொன்ன ஆனா என்னெல்லாம் நடந்திருக்கு!!!..அந்த ஆக்ஸிடென்டில் உனக்கு ஏதாவது ஆகிருந்தா!!! பகவானே!!! இவ்வளவு பண்ணிட்டும் துளி கூட கூச்சமே இல்லாம உன்னை என்னெல்லாம் பேசியிருக்கா!!! உங்க ஆத்துக்காரர் செய்தது தப்பு. உன்னை கொண்டு வந்து விட்டுட்டுப் போயிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?”
“அவரைச் சொல்லாதே மா. அவர் சொல்லிட்டுத் தான் போயிருக்கார். இவா தான் இதை பயன்படுத்தி பழிவாங்கிட்டா. ஆனா அதுக்காக என்னை சாபம் கொடுத்து அனுப்பற மாதிரி நான் என்னமா தப்பு பண்ணிட்டேன்?”
என்று கேட்டு அழ ஆரம்பித்தாள். உடனே அவள் கண்களை அம்புஜம் துடைத்து விட்டு
“நீ எதையுமே மனசில போட்டு குழப்பிக்காதே. அவாளை நினைத்தோ இல்லை அவா பேசினதை நினைத்தோ நீ கவலையே படாதே. நான் பார்த்துக்கறேன். இனி நீ இங்கயே இரு அங்க இப்போதைக்கு போக வேண்டாம். நீ இங்க சந்தோஷமா இருக்கணும். உனக்கு பொறக்கப் போற பாப்பா ஆரோக்கியமா, அறிவாளியா, சமத்தா இருக்கணுமா வேண்டாமா?”
“ஆமாம் இருக்கணும் மா”
“அவா எல்லாரையும் தூக்கி பரண் ல போட்டுட்டு நிம்மதியா சந்தோஷமா இருக்கணும். அம்மா இருக்கேன் நான் உன்னை நல்லா பார்த்துக்கறேன். அப்பாவும் நானும் வேனுவும் அவாள பார்த்துக்கறோம். நீ இப்போ சாப்படறயா?”
இரண்டு கிளாஸ் ஜுஸ் குடித்தும் பசியிலிருந்த மிருதுளா
“சரி மா சாப்பிடறேன். எனக்கு பசிக்கிறது”
“இதோ எல்லாம் ரெடி மா. ஒரு நிமிஷம் குக்கர்ல ஆவி அடங்கட்டும் சாப்பாடு தர்றேன். நீ அதுவரைக்கும் படுத்துக்கோ.”
என்று சொல்லிக் கொண்டே அம்புஜம் அடுப்படிக்குள் சென்று குக்கரின் மேல் ஜில் தண்ணீரை ஊற்றி ஆவியை அடங்கச் செய்து ஒரு தட்டில் சுடச் சுட சாதத்தில் சாம்பார் ஊற்றி, பீன்ஸ் பொறியல் மற்றும் வெங்காய வடாம் வைத்து, ஒரு சொம்பு தண்ணீரும் எடுத்துக் கொண்டு ரூமிற்குள் படுத்திருந்த மிருதுளாவிற்கு கொடுத்தாள். மிருதுளா எழுந்து வேக வேகமாக சாப்பிட்டதைக் கண்ட அம்புஜத்திற்கு அவள் மகளின் பசிப் புரிந்தது. நிமிடத்தில் தட்டு காலியனதைப் பார்த்த அம்புஜம்
“ரசம் சாதம் கொஞ்சம் கொண்டு வர்றேன் அப்படியே உட்கார்ந்திரு மிருது”
“அம்மா ரசமா வேண்டாமா நான் அங்க அதைத் தவிர வேறெதுவுமே சாப்பிட்டதில்லை. அதையே சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்துப் போச்சு. எனக்கு மறுபடியும் சாம்பார் சாதமே தாம்மா”
“இதோ கொண்டு வர்றேன்”
என்று மீண்டும் சாம்பார் சாதமும் பொறியலும் வடாமும் கொண்டு வந்து கொடுத்தாள் அம்புஜம்.
நன்றாக வயிறு நிறைய சாப்பிட்டதும் மிருதுளாவிற்கு தூக்கம் வந்தது. தன் அம்மாவிடம்
“அம்மா நான் கொஞ்ச நேரம் தூங்கிக்கவா ப்ளீஸ்”
என்றாள். மிருதுளா நவீன் வீட்டில் தூங்கியதற்காக பல பேச்சுக்களுக்கும், ஏச்சுக்களுக்கும், கிண்டல்களுக்கும் ஆளானதில் அவள் மனம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் தான் தன் தாய் வீட்டிலிருந்தும் தூங்குவதற்கு அனுமதி கேட்டாள் மிருதுளா.
“என்னத்துக்கு பர்மிஷன் எல்லாம் கேட்டுண்டிருக்க மிருது நீ நிம்மதியா தூங்குமா”
என்று அந்த ரூமின் ஜன்னல்களின் திரைசீலையை போட்டுவிட்டாள் அம்புஜம். மிருதுளா தூங்கும் வரை அவளருகிலேயே இருந்துவிட்டு அவள் உறங்கியதும் மெல்ல எழுந்து அந்த அறையின் கதவை சாத்தி விட்டு ஹாலில் இருந்த பூஜை ஷெல்ஃப்பைப் பார்த்துக்கொண்டே அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தப் படி
“அம்மா தாயே நான் உன்னை நம்பி தானே என் பொண்ணை அந்த குடும்பத்திற்கு அனுப்பி வைத்தேன். இப்படி எங்க பொண்ண பட்டினிப் போட்டு, வாயிக்கு வந்தபடி எல்லாம் பேசி இந்த சின்னப் பொண்ண படாதபாடு படுத்திருக்காளே!! இதெல்லாமே உன் முன்னாடி தானே நடந்திருக்கு? இது அத்தனைக்கும் நீ தான் மா பொறுப்பு நீ தான் பொறுப்பு சொல்லிட்டேன்”
என்று அழுதுக் கொண்டிருக்கையில் வேனு வீட்டினுள் நுழைந்தான். தன் தாய் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தும்
“அம்மா ஏன்மா அழுதுண்டிருக்க? என்னமா ஆச்சு?”
“உஷ் ..உஷ் …மெதுவா பேசுடா வேனு”
“என்னமா ஏன் அழறன்னு கேட்டா!!! மெதுவா பேசுன்னு சொல்லற!!! சரி மெதுவா கேட்கறேன் என்னமா ஆச்சு”
“நம்ம மிருது அந்த ரூம்ல படுத்துத் தூங்கிண்டிருக்கா. அவளை தொந்தரவு செய்யாமல் டிரஸ் மாத்திண்டு வா. நாளைக்கு உன் டிரஸை எல்லாம் இங்கே அடுக்கித் தர்றேன் சரியா”
“மிருதுக்கா வந்திருக்காளா சூப்பர் சூப்பர். அது சரி அதுக்கு நீ ஏன் அழுதுண்டு இருக்க? ஏதாவது ப்ராப்ளமா?”
தொடரும்…..