அத்தியாயம் 52: நஞ்சான வஞ்சம்

அன்றிரவு மிருதுளா நவீனிடம் மத்தியம் வீட்டின் பின்புறம் நடந்ததைப் பார்த்ததில் தனக்கு குற்ற உணர்ச்சியாக இருப்பதாக கூறி, மாமியாரை தவறாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாள். நவீன் அவளிடம்

“விடு மிருது உன் மனசில் பட்டதை நீ சொன்ன அதுல தப்பு ஒன்றுமில்லை. வெளில சொல்லாம மனசுல வச்சுண்டு இருக்கறதுக்கு பதிலா உன்னை மாதிரி தோன்றதை வெளிய சொல்வது ஒரு வகையில் நல்லது தான். எனக்கு உன்னிடம் பிடித்தது எது தெரியுமா?”

“எது நவீ?”

“உன் எண்ணத்தை எதனால் மாத்திண்டேன்னு எனக்கு தெரியாது ஆனால் நீ நினைத்தது தவறாக இருக்குமோன்னு மன்னிப்பு கேட்ட பாரு அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மிருது”

“தாங்க் யூ நவீ. மத்தியானம் நான் தூங்கும்போது நீங்க மூணு பேரும் பின்னாடி பேசினது எனக்கு கேட்டு நான் எழுந்து பார்த்தேன். அப்போ அம்மா துணியை காயப் போட்டுண்டிருந்தா. அதப் பார்த்ததும் தான் எனக்கு உறுத்தலா இருந்தது.நான் தான் தப்பா நினைச்சுட்டேனோன்னு அதுதான் மன்னிப்புக் கேட்டேன்”

“குட் ஆல்வேஸ் பீ லைக் திஸ் மிருது என்னைக்கும் எதற்காகவும் மாறாதே சரியா”

“ஓகே இப்போ தூங்கலாமா! காலையில இருந்து செம வேலை. ரொம்ப டையர்டா இருக்கு”

“ஓகே ஓகே தூங்கலாம். யூ ஆர் ரைட்.”

என்று விளக்கை அனைத்துவிட்டு தூங்கப் படுத்துக் கொண்டார்கள். மிருதுளா படுத்ததும் தூங்கிவிட்டாள் ஆனால் நவீனால் தூங்க முடியவில்லை. அவன் மிருதுளா காலையில் தன்னிடம் சொன்னதையும் அதையே ஈஸ்வரன் கேட்டதையும் அதற்கான பதில் போல பர்வதம் செய்ததையும் எல்லாம் யோசித்துப் பார்த்ததில் அவனுக்கு எது உண்மை எது பொய், திட்டமா இல்லை எதேச்சையாக நடந்தேறியதா என்று குழப்பமாகவே இருந்ததால் தூக்கமின்றி புரண்டு புரண்டு படுத்தான் அப்போது அப்பாவியாக உறங்கும் தன் மனைவியைப் பார்த்துக் கொண்டே மனதில்

“இவளை அவா ஆத்துல கொண்டு போய் விட்டுட்டு வரச்சொல்லணும் அது தான் சரி. இங்கே இருந்தா…நானும் இல்லாமல் இவள் மிகவும் குழப்பத்திற்கு ஆளாவாள். நாளைக்கே அப்பாவிடம் சொல்லிடணும்…ம் அது தான் சரி”

என்று ஒரு முடிவு பிறந்ததும் தூக்கம் வருடியது, கண்களும் மூடியது. 

மறுநாள் விடிந்ததும் மிருதுளா அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து மெதுவாக கீழே இறங்கிச் சென்று வேலைகளை செய்யத் துவங்கினாள். அதைப் பார்த்த பர்வதம் சும்மா இருக்க முடியாமல்

“பரவாயில்லையே தானாவே எழுந்து வந்துட்டயே. நல்ல முன்னேற்றம் தான்”

என நக்கலடிக்க அதற்கு மிருதுளா

“என்னை குஜராத்துல யாரும் வந்து எழுப்பினதில்லையே நானே தான் எழுந்து எல்லா வேலைகளையும் செய்தேன். இங்கே நீங்க இருக்கேங்களேன்னு தான் கொஞ்சம் லதார்ஜிக்கா இருந்தேன் அதுதான் நேத்துலேந்து நீங்க இல்லன்னு ஆயிடுத்தில்லையா அதுதான் இன்னைக்கு நானே எழுந்து வந்தேன். தப்புன்னா சொல்லுங்கோ நான் மறுபடியும் போய் படுத்துக்கறேன். எனக்குத்தான் தூக்கம் எப்போ வேணும்னாலும் வருமே கரெக்ட் தானே மா”

என்று திருப்பி பேசாத மருமகள் இவ்வாறு நய்யாண்டி செய்ததும் பர்வதத்திற்கு பதில் சொல்ல முடியாமல் கோபம் தலைக்கேறியது. அந்த கோபத்தில்

“வர வர உனக்கு வாய் ரொம்ப நீளறது.”

“என்னம்மா நான் நடந்ததை தான் சொன்னேன் அதுக்கு ஏன் இப்படி சொல்லறேங்கள். சரி சரி காலங்காத்தால வேண்டாம் நாம அப்பறமா வச்சுப்போம். இருங்கோ சூடா காபி போட்டுத் தர்றேன்”

என்று பர்வதத்தின் கோபத்தையும் கையாள கற்றுக் கொண்டாள் மிருதுளா. முன் தினத்தைப் போலவே காலையில் அனைத்து வேலைகளையும் முடித்தவுடன் மாடிக்குச் சென்று படுத்துக் கொண்டதில் தூங்கிப் போனாள். மாலையில் மீண்டும் எல்லா வேலைகளையும் முடித்தப்பின் இரவு படுத்துறங்கச் சென்றாள் அங்கே நவீன் தனது துணிமணிகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் மிருதுளா

“என்ன நவீ? நீங்க பாட்டுக்கு நாளைக்கு ஊருக்கு கிளம்பிடுவேங்கள் அப்போ நான் எப்போ? எப்படி? எங்காத்துக்கு போவேன். என்னை எங்காத்துல விட்டுட்டு ஊருக்கு கிளம்புங்கோன்னு சொன்னேன் இல்லையா? நாளைக்கு காலையில எட்டு மணிக்கு தானே டிரெயின்? என்னை ஒரு ஆறு மணிக்கெல்லாம் கூட்டிண்டு போய் எங்காத்துல விட்டுட்டு கிளம்புங்கோளேன் ப்ளீஸ் பா”

“மிருது …மிருது… ஏன் நீ இவ்வுளோ பயப்படற?”

“எனக்கென்னவோ எதுவும் சரியா படலை நவீ. ஏதோ ஒரு பதற்றமாவே இருக்கு. பசிச்சிண்டே வேற இருக்கு. தூங்கவும் முடியலை”

“நான் ஊருக்கு போறதுனால உனக்கு அப்படி தோணறது அவ்வளவு தான். எதுக்கும் பதற்றம் ஆகாதே. பொறுமையா ஹாண்டில் பண்ணு சரியா”

“அப்போ நான் இங்கேயே தான் இருக்கணுமா?”

“இல்லமா நான் அப்பாட்ட சொல்லிருக்கேன். நான் ஊருக்கு கிளம்பியதும் நீ ரெடி ஆகி உன் திங்ஸோட கீழே போ. உன்னை பவின் கொண்டு போய் உங்காத்துல விட்டுட்டு வருவான். ஓகே வா. ஹாப்பி”

“அப்படியா அப்போ சரி. அப்பாடா நாளையிலிருந்து நல்ல சாப்பாடு அன்ட் தூக்கம் கிடைக்கப் போறது குட்டிமா”

என்று தன் வயிற்றை தடவிக்கொடுத்தாள் மிருதுளா. அதைப் பார்த்த நவீன்

“ஐ திங் யுவர் ப்ராப்ளம் ஈஸ் சால்வ்டு நவ். ஹாப்பி?”

“தாங்க்ஸ் நவீ. ஐ லவ் யூ”

“பத்திரமா இரு இனி நான் நம்ம சீமந்தத்துக்கு தான் வருவேன். அதுக்கு இன்னும் எக்ஸாக்ட்டா ஒரு மாசமிருக்கு”

“ஓகே நான் பத்திரமா இருக்கேன். நீங்களும் ஒழுங்கா டையத்துக்கு சாப்பிடுங்கோ சரியா”

“நான் பார்த்துக்கறேன் நீ அதை நினைச்சுண்டு கவலைப் படாதே. சரி நேரமாகிண்டே இருக்கு நீ படுத்து தூங்கு நான் இதோ இதை முடிச்சிட்டு படுத்துக்கறேன்” 

“உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கே”

“என்னதது?”

“இதோ பருப்புப் பொடியும், கொத்தமல்லிப் பொடியும், எள்ளுப் பொடியும் செய்தேன் இதையும் பெட்டில வச்சுக்கோங்கோ. உங்களுக்கு பேக் பண்ணியது போக மீதியை பாட்டில்ல போட்டு அடுப்படில வச்சிருக்கேன்”

“ஏய் மிருது இதுதான் மத்தியனம் செஞ்சயா வீடே வாசமா இருந்தது தெரியுமா”

“ஆமாம் நீங்க சாதம் மட்டும் வச்சா போறும் இந்த பொடிகள் போட்டு பிசைந்து சாப்பிடலாம். உடம்புக்கும் நல்லது. இட்ஸ்  ஃபார் வீக் என்ட் ஓகே”

“டன் மேடம் டன். இதோ வச்சுண்டுட்டேன் போதுமா இப்போ நிம்மதியா தூங்கு. இதோ என் வேலையும் ஆச்சு. குட் நைட், ஹாவ் எ நைஸ் ஸ்லீப் மிருது.”

“குட் நைட் நவீ.”

இருவரும் படுத்துறங்கினர். 

காலை விடிந்தது. மிருதுளாவும் நவீனும் எழுந்து கீழே சென்றனர். பர்வதம் குளித்து தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு அடுப்படி இன்சார்ஜை மீண்டும் எடுத்துக் கொண்டாள். நவீன் மிருதுளா இருவரும் ஃப்ரெஷ்ஷாகி வந்ததும் காபி கொடுத்தாள் பர்வதம். அதை கையில் வாங்கிக் கொண்டு இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஏனெனில் மிருதுளா அவர்கள் வீட்டுக்கு வந்த அடுத்த நாள் காலை மட்டுமே காபி போட்டுக் கொடுத்த பர்வதம் இத்தனை நாட்கள் கழித்து காபி போட்டுக் குடுத்தது அவர்களை ஆச்சர்யப்படச் செய்தது. இதிலிருந்து வெளிவருவதற்குள் அடுத்த ஆச்சர்யம் காத்திருந்தது. முதல் முறையாக பர்வதம் மிருதுளாவை பெயர் சொல்லி அழைத்தாள்

“மிருதுளா நீயும், நவீன் குளிச்சதும் குளிச்சிட்டு வந்துடு. அவன் கூடவே டிபன் சாப்டு சரியா” 

“சரிமா நானும் குளிச்சிட்டு வந்துடறேன்”

என்று கூறி மாற்றுத் துணியை எடுக்க மாடிக்குச் சென்றாள் மிருதுளா. அவள் பின்னாலேயே நவீனும் அவன் மாற்றுத் துணியையும் பெட்டியையும் எடுத்து வரச் சென்றான். மிருதுளா தன் வீட்டுக்கு எடுத்துச் செல்லவேண்டிய துணிமணிகளை ஒரு துணி பையில் போட்டுக் கொண்டிருந்தாள் அதைப் பார்த்த நவீன்

“என்ன மிருது இந்த பையில இருக்குற துணி போதுமா உனக்கு?”

“போதும் நவீ. என்னோட டிரஸ் நிறைய ஆத்துல இருக்கு. அதுவுமில்லாம என்னால இவ்வளவு தான் தூக்கிண்டு போக முடியும்”

“சரி சரி ஆமாம்!! என்ன இன்னைக்கு மேடம்க்கு காலையிலேந்து உபசரிப்பு பலம்மா இருக்கு?”

“ஆமாம் நவீ நீங்க கவனிச்சேங்களா? நானும் கவனிச்சேன். என்னை ஃபர்ஸ்ட் டைம் பெயர் சொல்லிக் கூப்பிட்டா தெரியுமா?”

“ஈஸ் இட்!! இதுவரைக்கும் உன்னை உன் பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லையா?”

“ம்.ஹூம்..இல்லவே இல்லை” 

“சரி எல்லாம் நல்லபடியா இருந்தா நல்லது தானே”

“எஸ் நவீ. எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவோம். சரி நீங்க குளிச்சிட்டு வாங்கோ இன்னுட்டு நான் வர்றேன். உங்களுக்கும் டைம் ஆகறதோன்னோ”

“ஓகே கீழே மெதுவா இறங்கி வா”

“சரி சரி நீங்க போங்கோ. நான் ஒரு பைவ் மினிட்ஸ் ல வந்துடறேன்”

இருவரும் குளித்ததும் ஒன்றாக அமர்ந்து டிபன் சாப்பிட்டனர். மணி ஏழானது. நவீன் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். மிருதுளாவிற்கு கண்களில் கண்ணீர் ததும்பியது. அதைப் பார்த்த நவீன் டோன்ட் வரி மிருது என்று கூறிவிட்டு ஆட்டோவில் ஏறிச் சென்றான். மிருதுளா வீட்டுக்கு அவளை அழைத்துச் செல்ல சொன்னதை ஒரு முறைகூட கீழே அவர்கள் முன் நவீன் சொல்லவில்லை. மிருதுளாவிற்கு செலவுக்கு பணமும் கொடுக்க மறந்தான் நவீன். 

அவன் ஆட்டோ சென்றதும் மிருதுளா சற்று நேரம் கீழே அமர்ந்திருந்தாள். எவருமே அவளிடம் பேசவில்லை. அப்படி ஒருத்தி வீட்டில் இருப்பதாகவே எவருக்கும் தெரியாததுப் போலவே நடந்துக் கொண்டனர். அவளாக பேச முற்பட்டப் போதும் பதிலளிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டனர். அவர்களின் இந்த செயல்களைப் பார்த்ததும் மிருதுளாவிற்கு குழப்பமானது. காலையில் நன்றாக பேசிய மாமியார்,  நவீன் ஊருக்கு ஆட்டோவில் சென்றதும், வீட்டில் மாமியார் உட்பட அனைவரின் நடவடிக்கைகளும் மாறியது மிருதுளாவிற்கு பயத்தை உண்டுப் பண்ணியது. அவளும் வேறு வழியின்றி மாடிக்குச் சென்று தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள்  என்று நவீன் சொன்னது படி தயாராகி பையை எடுத்துக் கொண்டு மாடி அறையைப் பூட்டிவிட்டு பையுடன் மெல்ல கீழே இறங்கி வந்தாள். 

ஹாலில் பையை வைத்துவிட்டு. ஆணியில் தங்கள் அறையின் சாவியை மாட்டிவிட்டு நேராக உள் ரூமில் சாமி வைத்திருக்கும் இடத்திற்கு சென்று சாமி கும்பிட்டு விபூதியை பூசிக் கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தவளிடம் பர்வதம்…

“என்னது இது பை? எங்க கிளம்பிட்ட?”

என்று கேட்டதும் மிருதுளாவிற்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. ஆனாலும் அதைக் காட்டிக் கொல்லாமல் 

“நவீன் தான்… அவர் ஊருக்கு கிளம்பினதும் என்னை கிளம்பி கீழே வரச் சொன்னார் மா அதுதான் வந்தேன். பவின் என்னை எங்காத்துக்கு கூட்டிண்டு போவான்னு நவீன் சொன்னார் அதுதான் கிளம்பி ரெடியா வந்திருக்கேன்”

“இப்போ என்னத்துக்கு உங்க ஆத்துக்கு போகணும்?”

“இல்லமா நவீன்ட்ட நான் சொன்னேன், அவர் தான் அப்பாட்ட பேசிருக்கேன், பவின் கொண்டு போய் விடுவான், நீ ரெடியாகி கீழே வந்தா போதும்ன்னு சொன்னார். இன்னைக்கு காலையில கூட சொன்னார் அதுதான் வந்தேன் மா”

“என்ன மறுபடியும் அதையே  சொல்லற!”

“நவீன் சொன்னதைத் தானே மா நான் சொல்ல முடியும்”

என்று மிருதுளா பர்வதம் இடையே நடந்துக் கொண்டிருந்த பேச்சு வார்த்தையை கேட்டுக் கொண்டே இருந்த ஈஸ்வரன் குரலை உயர்த்தி 

“நானும் பார்த்துண்டே இருக்கேன்… என்ன நவீன் சொன்னார் நவீன் சொன்னார்ன்னுட்டே இருக்க? எவனும் எதுவும் என் கிட்ட சொல்லலை. என்ன திமிரா?”

“இல்லப்பா அவர் உங்ககிட்ட சொல்லியதா….”

“வாயை மூடு!” என்று ஈஸ்வரன் அதட்டியதும் பயத்தில் அழலானாள் மிருதுளா

“என்ன அழுகை வேண்டியிருக்கு அழுகை? நவீன் சொன்னது  ஆட்டுக்குட்டி சொன்னதெல்லாம் இங்கே செல்லாது தெரிஞ்சுக்கோ. அவன் பேச்செல்லாம் குஜராத்தோட. இது என் வீடு டீ. இங்க நான் வச்சது தான் சட்டம் புரியறதா? புரியலைன்னா இனி புரிஞ்சுக்கோ”

“என்னப்பா என்னென்னவோ பேசறேங்கள்? என்னமோ மாதிரி பேசறேங்கள்?”

என்று பயத்துடனும், அழுகையுடனும் இருந்த மிருதுளா அங்கு நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பவினையும் ப்ரவினையும் பரிதாபமாக பார்த்தாள். அவர்களாவது ஈஸ்வரனை அவ்வாறு பேச வேண்டாமென்று சொல்வார்களா என்ற ஏக்கத்துடன் பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதைப் பார்த்த ஈஸ்வரன்

“என்னடி அங்க பார்வை. எவனும் வாயை தொறக்க மாட்டான். நான் தான் சொன்னேன் இல்லையா இது என் கோட்டை டி.  இங்கே நான் வச்சது தான் டி சட்டம்.  நான் சொல்லுற படிதான் இங்க எல்லாரும் நடப்பா நடக்கணும்.”

என்று மீண்டும் குரலை உயர்த்த நடுங்கினாள் மிருதளா. (வயிற்றில் குழந்தையுடன் இருப்பவளிடம் இப்படி கத்தி கூச்சலிட்டு மிரட்டினால் அது அந்த குழந்தையும் உள்ளேயிருந்து கேட்கும், அதையும் சேர்த்து துன்புறுத்துகிறார்கள் என்பது நான்கு பிள்ளைகளை பெற்றவயர்களுக்கு தெரியாதது இல்லை. வேண்டுமென்றே செய்பவர்களிடம் இதை எல்லாமா எதிர்பார்க்க முடியுமா!!!) அதே நடுக்கத்துடன் 

“சரி ப்பா இது உங்க வீடு தான். இங்க  நீங்க வச்சதே சட்டமாகவும் இருக்கட்டும். நான் இப்போ எங்காத்துக்கு போகணும். என்னை போக விடுங்கோளேன்”

இதைக் கேட்டதும் பர்வதம் 

“என்னடி அப்பாவையே எதிர்த்துப் பேசறயா. உனக்கு ரொம்ப தான்டி திமிரு. கல்யாணமானதும் இங்கயே மூணு மாசம் இருன்னு சொன்னதுக்கு இருக்காம ஓடின ல்ல  இப்போ இங்க தாண்டி இருந்தாகணும். இப்போ என்னடி பண்ணுவ?”

“நான் உங்க புள்ளக் கூட தானே போனேன் என்னமோ யார்கூடயோ போணா மாதிரி சொல்லறேங்களே இது நியாயமா?”

ஈஸ்வரன் குறுக்கிட்டு

“உனக்கு என்னடி அப்படி உன் அம்மாகாரிகிட்ட போணும்ன்னு? ஏன் இங்க இருக்க முடியாதோ? அப்படீன்னா என்னத்துக்குடி உன் அம்மாகாரி உன்னை கல்யாணம் பண்ணிக் குடுத்தா? அவ பக்கத்திலேயே படுத்துக்க வச்சுக்க வேண்டியது தானே?”

“ப்ளீஸ் என் அம்மாவ பத்தி இப்படி எல்லாம் பேசாதீங்கோ”

“ஆமா உன் அம்மா!!! நீ போடி! உன் அம்மாகிட்டயே போய் இருந்துடு. திரும்பி வராத. எங்க புள்ளைக்கு நூறு பேரு க்யூல இருக்காடி. நாங்க எங்க புள்ளைக்கு நல்லா வெள்ளையா இருக்கற பொண்ணா பார்த்து இன்னொரு கல்யாணம் பண்ணி வைச்சுக்கறோம். நீ போடி கருப்பி”

என்று விரல்களை சொடுக்கி பர்வதம் சொன்னதைக் கேட்டதும் மிருதுளாவிற்கு கோபம் வந்தது. வயிற்றில் பசியும் வந்தது.  அவர்கள் வேண்டுமென்றே பழிவாங்குகிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டாள்.  அவளுக்கு அப்போது அங்கிருந்து எப்படியாவது தப்பித்து சென்று விட வேண்டும் என்ற எண்ணமே தலையாயதாக இருந்ததால் உடனே பர்வதத்தைப் பார்த்து இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி

“நீங்க உங்க புள்ளைக்கு யாரை வேணும்னாலும் கட்டி வச்சுக் கோங்கோ ஆனா என்னை மட்டும் இப்போ எங்காத்துக்கு போக விடுங்கோ.”

“படிச்சவ தானே டி நீ? என்னத்துக்கு இப்போ அழுது சீன் போடற?” என்று கொஞ்சமும் மனசாட்சியின்றி கேட்ட ஈஸ்வரனைப் பார்த்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டே

“சரி நான் அழலை போதுமா. இப்போ நான் போகலாமா.”

என்றுதும் ஈஸ்வரன்

“உடம்பு ஃபுல்லா உனக்கு திமிரு டி. டேய் பவின் இத கொண்டு போய் அவா ஆத்துல தள்ளிட்டு வாடா.”

என்று ஏதையோ வீசி எரிந்துவிட்டு வரச்சொல்வதைப் போல ஈஸ்வரன் சொன்னதும் வேகமாக பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள் மிருதுளா. 

 வீட்டின் வாசற்படியை மிருதுளா தாண்டும் போது ஈஸ்வரன் 

“அப்படியே போய் தொல திரும்பி வந்திடாதே போ போ” 

 என்று எதையோ விரட்டி அடிப்பதைப் போல சொன்னார். தன் குடும்பத்தின் முதல் வாரிசை சுமந்துக் கொண்டிருக்கும் மருமகளிடம் சொல்ல வேண்டியவையா இவை. பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்து அனுப்பிவைக்கவேண்டியதை விடுத்து சாபம் கொடுத்து அனுப்புகிறார்களே!!!!  மனம் இருக்க வேண்டிய இடத்தில் இவர்களுக்கு எதை வைத்துப் படைத்துள்ளானோ ஆண்டவன் தெரியவில்லை. 

மிருதுளா நினைத்திருந்தால் அவர்கள் போட்ட பொய் முடிச்சுக்கள் அவிழ்ந்ததை பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கலாம். ஆனால் அவள் அப்படி எதுவுமே செய்யவில்லை ஏனென்றால் அவற்றை நவீன் இல்லாத நேரத்தில் கேட்டால் மூத்த தம்பதியர் எப்படி வேண்டுமானுலும் திரித்து விட்டுவிடுவார்கள் என்றும் அதைப் பற்றி பேசும் போது சம்பந்தப்பட்ட நவீன் இருக்க வேண்டும் என்றும் நியாயமாக எண்ணியதால் அவள் வாயைத் திறக்கவில்லை. துளியும் நியாமில்லாமல் நடந்துக் கொள்ளும் மூத்த தம்பதியர் போல அவள் நடந்துக் கொள்ளாதது அவளின் பொறுமையான குணத்தின் வெளிப்பாடே.

மிருதுளாவை நவீன் திருமணம் செய்துக் கொண்டதே பிடிக்காதவர்கள் அவளை ஆரம்பத்தில் தங்களுடன் வைத்து சிறப்பாக செய்ய திட்டமிட்டு, அதிலிருந்தும் தப்பிய மிருதுளா கடைசியில் சிக்கிக் கொண்டாள் என்பதற்காக அவர்கள் மனதிலிருந்த வஞ்சம் அனைத்தையும் நஞ்சாக கக்கி தீர்த்துக் கொண்டனர். 

அவர்களுக்கு மாசமான மருமகளைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. மிருதுளா வந்த நாளிலிருந்து இன்று வரை ஒரு பாயசம் கூட வைத்துக் கொடுக்க மனமில்லாத மாமியாரிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும். ஆமாம் பிள்ளைப் பெத்துக்க ஏன் அவசரப்பட்டாய் என்று கேட்ட உத்தமியாயிற்றே.  அப்பேர்ப்பட்டவளிடம் எதையுமே எதிர்பார்க்க முடியாதுதான். மேலும் அந்த பெண்ணிற்கு சரியான சாப்பாடும் குடுக்காமல், தூங்கவும் விடாமல் அலக்கழித்தார்கள். ஆனால் அவர்கள் சொன்னது அனைத்தையும் முகம் சுளிக்காமல் செய்தாள் மிருதுளா. 

நவீன் இல்லாத நேரத்தில் இப்படி இவர்கள் நடந்துக் கொண்டது சரியில்லை தான் ஆனால் ஏன் அப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? இதற்கு பின்னாலும் மூத்த தம்பதியர் ஏதாவது திட்டம் தீட்டிவைத்துள்ளார்களா? 

அந்த மிருகக் கூண்டிலிருந்து தப்பித்து பிழைத்தால் போதும் என்று தன் பையைத் தூக்கிக் கொண்டு, அழுது வீங்கிய முகத்துடனும், கண்ணில் கண்ணீருடன் வேகமாக வீட்டைவிட்டு வெளியேறினாள் மிருதுளா. அவர்கள் அவ்வளவு இழிவாக பேசியிருந்தாலும் மிருதுளா ஒரு வார்த்தைக் கூட தவறாகவோ மரியாதைக் குறைவாகவோ பேசவில்லை. அவளால் இதை மறக்க முடியுமா? எளிதில் மறக்கக்கூடியதா அவர்கள் பேசியவை?  அப்படிப்பட்ட பெண்ணையும் அவள் தாயையும் பழித்துப் பேசும் இவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை காலம் நிச்சயம் வெளிச்சமிட்டு காட்டத்தான் போகிறது. 

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s