அத்தியாயம் 51: சூழ்ச்சியா? சூழ்நிலையா?

டக் டக் டக் டக் டக்!!! என்று கதவைத் தட்டும் சப்தம் கேட்க மிருதுளா மெல்ல எழுந்து கதவைத் திறந்தாள். பவின் நின்றிருந்தான். 

“குட் மார்னிங் பவின். என்ன இவ்வளோ காத்தால வந்து கதவைத் தட்டுற?”

“மன்னி அப்பா உங்களை உடனே கூட்டிண்டு வரச்சொன்னா. அது தான் உங்களை எழுப்பி கூட்டிண்டு போக வந்தேன்”

“என்ன ஆச்சு? நீ போ நான் வர்றேன்”

“அதெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது ….கொஞ்சம் சீக்கிரம் கீழே வாங்கோ”

“இருப்பா நாங்க நைட் பண்ணண்டு மணிக்கு தான் வந்தோம். தூங்கும்போது ஒரு மணி ஆச்சு. கொஞ்ச நேரத்துல கீழே வர்றேன்னு அப்பாட்ட சொல்லு”

“இல்ல மன்னி உடனே வாங்கோ இல்லாட்டி அப்பா கோபப்படுவா”

“புரிஞ்சுக்க மாட்டேங்கறயே பவின். சரி வா “

நவீனாவது தூங்கட்டும் என்று கதவை சாத்திவிட்டு பவினுடன் கீழே போனாள் மிருதுளா. மாடிப்படி கீழேயே இருந்த பென்ச்சில் அமர்ந்திருந்தார் ஈஸ்வரன். பவினும் மிருதுளாவும் இறங்கி வருவதைப் பார்த்ததும்

“என்னடா இவ்வளவு நேரமா கீழே வர்றதுக்கு?”

“இல்லப்பா மன்னி தான் ….”

“என்னவாம் உன் மன்னிக்கு?”

“இதோ வந்துண்டே இருக்காப்பா”

“ஏன்ம்மா பெரியவா உடனே வான்னு சொல்லி அனுப்பினா கிடுகிடுவென வரண்டாமோ!!! அத விட்டுட்டு மசமசன்னு கேள்வி மேல கேள்வி கேட்டுண்டு இருக்க?”

“அதுக்கில்லப்பா நாங்க ஈரோட்டிலிருந்து வந்ததே ரொம்ப லேட்டு…”

“உங்கள யாரு லேட்டா வரச்சொன்னா? சரி சரி வந்து சட்டுபுட்டுன்னு எல்லாருக்கும் காபி போடு”

“ஏன் அம்மா இல்லையா? எங்கயாவது போயிருக்காளா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அவ ஆத்துக்கு தூரம் அதனால செய்யமாட்டா. இன்னும் இரண்டு நாளைக்கு நீதான் காலை காபிலேந்து நைட்டு டின்னர் வரைக்கும் செய்யணும். புரிஞ்சுதா. போ போ போய் சீக்கிரம் காபியைப் போடு”

“என்னது ஆத்துக்கு தூரமா?”

“ஆமாம் ஏன் ஏதோ சந்தேகத்தோட கேட்கிற?”

“இல்லை சந்தேகமெல்லாம் இல்லை. சரி இதோ ஃப்ரெஷ்ஷாகிட்டு வந்து காபி போட்டுத் தர்றேன். ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்”

என்று கூறிவிட்டு பாத்ரூமிற்குள் சென்று தன் மனதினுள்

“போச்சு அப்போ இன்னும் ரெண்டு நாளைக்கு நான் என் வீட்டுக்கு போக முடியாது. சூப்பர். இப்படி ஆச்சுன்னா யாரென்ன பண்ண? என்னமோ நவீ சொன்னாரே …எல்லாம் பேசியாச்சு நிச்சயம் இன்னைக்கு போவோம்ன்னு …எழுந்து வரட்டும் கேட்கறேன்”

“என்ன பாத்ரூமுக்குள்ள பேச்சு சத்தம் கேட்கறது!!! அங்க யார்கிட்ட பேசிண்டிருக்க?”

என்று ஈஸ்வரன் வெளியே இருந்து குரல் கொடுக்க அப்போதுதான் அது அவளின் மைன்ட் வாய்ஸ் இல்ல நிஜமாகவே பேசியிருக்கிறாள் என்று புரிந்தது மிருதுளாவிற்கு உடனே டவலை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்து 

“நான் பேசலை!!! உங்களுக்கு எப்படி பாத்ரூமிலிருந்து பேச்சு சத்தம் கேட்டிருக்கும்?”

“நீ பேசறா மாதிரி தான் கேட்டுது”

ஹாலுக்குள் சென்ற மிருதுளா பார்த்தது அவள் மாமியார் ஒரு மூலையில் அமர்ந்திருந்ததை. உடனே பர்வதத்திடம்

“நோ வரீஸ் மா. நான் பார்த்துக்கறேன். நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்கோ”

என கூறிக்கொண்டே அனைவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் மிருதுளா. தனது காபி தம்பளருடன் வந்து அமரும்போது நவீன் ஹாலினுள் நுழைந்தான். அவனுக்கு காபி போட எழமுயன்றாள் அப்போது நவீன்

“ஏய் மிருதுளா ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்துண்ட? எப்ப எழுந்த?”

“நான் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துண்டாச்சு”

“எதுக்கு அவ்வளவு சீக்கிரம்? அப்போ நீ ஒரு நாலு ஆர் அஞ்சு மணி நேரம் தான் தூங்கியிருக்க!!! அது எப்படி பத்தும்?”

அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் தனது காபியை நவீனுக்கு கொடுத்துவிட்டு தனக்கு மீண்டும் காபி போட்டுக் கொண்டு வந்து அமர்ந்ததும் ப்ரவின்

“மன்னி எனக்கு காலேஜ் போகணும் கொஞ்சம் சீக்கிரம் டிபன் பண்ணிடுங்கோ”

“சரி ப்ரவின். இதோ காபியை குடிச்சுட்டு பண்ணிடறேன்”

“ஏன் நீ பண்ணணும்?” 

அதற்கும் மிருதுளா பதில் கூறாமல் காபியை குடித்துவிட்டு இட்டிலியும் வெங்காய சட்டினியும் செய்தாள். டிபன் செய்துக் கொண்டே மத்திய சாப்பாடும் தயார் செய்தாள். அனைவருக்கும் ஏழரை மணிக்கெல்லாம் டிபன் பரிமாறப்பட்டது. பவினும் ப்ரவினும் டிபன் சாப்பிட்டு விட்டு மத்தியத்திற்கு லஞ்சும் கட்டிக் கொண்டு காலேஜுக்கு கிளம்பினர். பின் அடுப்படியை சுத்தம் செய்து பாத்திரங்களை எல்லாம் தேய்த்து வைத்து விட்டு ஹாலுக்குள் வந்தவளிடம் பர்வதம்…

“மத்தியானத்துக்கு என்ன பண்ணிருக்க? லெமன் ரைஸ்ஸா இல்ல தேங்காய் சாதமா இல்ல தயிர் சாதமா?”

“ஏன் அப்படி கேட்கறேங்கள்?”

“இல்ல டிபனும் செஞ்சு சாப்பாடும் செய்திருக்க… அப்போ ஏதாவது கலவ சாதமா தான் இருக்கும் அது தான் கேட்டேன்”

“முட்டைக் கோஸ் கூட்டும் கொத்தமல்லி துவயலும் செய்திருக்கேன்.”

“ஓ!! அப்படியா அப்போ ப்ரவினும் பவினும் அதைத் தான் கட்டிண்டு போயிருக்காளா?”

“ஆமாம் கூட்டு சாதமும் துவயலும் தான் கட்டிக் கொடுத்திருக்கேன். நம்ம மூணு பேருக்கு ஒரு பண்ணண்டு மணி போல சாதம் வைக்கறேன். எல்லா வேலையும் ஆயாச்சு. பஸ்ஸில் டிராவல் பண்ணி வந்ததில் ஒரே டையர்டா இருக்கு அதுவுமில்லாம தூக்கமும் சரியாகலை அதுனால நான் போய் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வர்றேன்”

என்றுக் கூறிக் கொண்டே மெல்ல மாடிப்படி ஏறும் போது கொள்ளப்பக்கம் பார்த்தாள் அங்கே தூரத்துணி காய வைக்கும் கொடியில் ஒரு துணி கூட காயவைக்கப் படவில்லை. இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் சானிடரி நாப்கின் எல்லாம் புழக்கத்தில் இருக்கவில்லை. பெண்கள் காட்டன் துணிகளையே உபயோகப் படுத்தினார்கள். அதற்காக  தனி துணி காயப் போடும் கொடியையும் தங்கள் வீட்டின் பின்புறம் கட்டி வைத்திருப்பார்கள். மிருதுளா மாடிக்கு உறங்கச் செல்லும் போது மணி பத்தரை அதுவரை எந்த துணியும் தன் மாமியார் காய வைக்கவில்லை என்பது அவளின் மனதில் அதுவரை இல்லாத சந்தேகத்தை கிளப்பியது. அதை கேட்பதற்காக மீண்டும் கீழே போக வேண்டுமே, தூக்கம் வேற கண்ணை அசத்த அதுபற்றி தூங்கி எழுந்து விசாரித்துக் கொள்ளலாமென்று தங்கள் ரூமுக்குச் சென்று உறங்கினாள். 

மணி சரியாக பதினொன்றரை ஆனதும் நவீன் மிருதுளாவை எழுப்பினான். மிருதுளா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்ப மனமில்லாமல் கீழே வந்து அமர்ந்தான் அப்போது ஈஸ்வரன்..

“என்ன உன் பொண்டாட்டி எழுந்திரிக்கலையோ? அவ எப்ப எழுந்து எப்போ சாதம் வச்சு நாம சாப்பிடறதாம்?” 

என்று கேட்க அவரிடம் தன் மனைவிக்காக பேசாமல் மீண்டும் அவளை எழுப்புவதற்காக மாடிக்குச் சென்றான். அவன் சென்று கதவைத் திறந்ததும் மிருதுளா விழித்துக் கொண்டாள். அவளிடம் 

“கொஞ்சம் சீக்கிரமா கீழே வர்றியா சாதம் வைக்கலைன்னு கத்தறா”

அதற்கும் பதில் ஏதும் கூறாமல் மெல்ல எழுந்து படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது அவள் பின்னாலிருந்து நவீன்

“ஏய் மிருது ஏன் காலைலேந்தே என்னை அவாய்டு பண்ணற?”

அவன் கேள்விக்கும் பதில் சொல்லாமல் கீழே இறங்கிச் சென்று குக்கரில் சாதம் வைத்தாள். ஒரு மணி அளவில் நவீனுக்கும் ஈஸ்வரனுக்கும் சாப்பாடு போட்டுவிட்டு தன் மாமியாருக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டு தானும் அமர்ந்து சாப்பிட்டாள். மீண்டும் பாத்திரங்களை எல்லாம் தேய்த்து வைத்து விட்டு மாடிக்குச் செல்லும் போது கொள்ளப்பக்கம் அந்த கொடியைப் பார்த்தாள் அப்போதும் அதில் எந்த துணியும் காயவில்லை. அப்போது அவளின் சந்தேகம் ஊர்ஜிதமானது. ரூமில் நவீன் வரவுக்காக காத்திருந்தாள். 

நவீன் ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தான். வந்தவன்

“என்ன மிருது தூங்கலையா?”

“எனக்கு உங்ககூட கொஞ்சம் பேசணும்”

“என்ன சொல்லு மிருது”

“நாம எப்போ எங்காத்துக்கு போக போறோம்? என்னமோ நேத்து சொன்னேங்களே எல்லாம் க்ளியரா பேசியாச்சு ஈரோட்டுலேந்து வந்ததும் காலைல கிளம்பிடலாம்ன்னு இப்போ மத்தியானம் ஆயாச்சு!!”

“மிருதுளா ஐ டின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் சிட்டுவேஷன்!! நான் என்ன பண்ணறது?”

“நான் தான் நேத்தே சொன்னேன் இல்லையா நாம போகமுடியாதுன்னு! இப்போ அது தானே நடந்திருக்கு. இதுக்கு நீங்க தான் எனக்கு பதில் சொல்லணும். நாளன்னைக்கு நீங்க ஊருக்கு கிளம்பிடுவேங்கள் நான் என்ன பண்ணுவேன் இங்க வந்து இவ்வளவு நாள் ஆகறதே யாருக்காவது என்னை ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு கூட்டிண்டு போகணும்ன்னு தோனவாவது செஞ்சுதா? இப்படியே இங்கேயே இருந்தேன்னா நானும் என் குழந்தையும் ஒரு வழி ஆகிடுவோம் உங்களுக்கு பரவாயில்லையா?”

“என்ன மிருது இது? என்னவோ இன்னைக்கு வந்த சிட்டுவேஷன் ஏதோ ப்ளான் போட்டுருக்காங்கற மாதிரி இருக்கு நீ சொல்லறது”

“ஆமாம் இதுவும் உங்க பெத்தவாளோட அருமையான ப்ளான் தான்”

“என்ன ஆச்சு உனக்கு மிருது? நீயா பேசறது?”

“ஆமாம் நவீ நானே தான். என்னால இதுக்கு மேலேயும் பொறுமையா இருக்க  முடியலை!! உங்க அம்மா இன்னைக்கு சொல்லற ரீஸன் அப்பட்டமான பொய். சரி நான் ஒண்ணு கேட்கறேன். இதுக்கு முன்னாடி உங்க அம்மா ஆத்துக்கு தூரமாகும் போதெல்லாம் யார் காபி போட்டா? யார் சாப்பாடு சமைச்சா? அப்போ நான் இல்லாததால தெரிஞ்சுக்கறதுக்காக  கேட்கறேன்”

“அப்படி எல்லாம் எனக்கு தெரிந்து நான் இருந்த போதெல்லாம் இப்படி உட்கார்ந்ததில்லை”

“இல்லை ல இப்போ மட்டும் என்ன திடீர் மடி ஆச்சாரம் எல்லாம்? இதுலயே உங்களுக்கு புரியலை? இதை வச்சு மட்டும் நான் சொல்லலை இன்னும் ஒரு விஷயமிருக்கு அதை வச்சுத் தான் ஊர்ஜிதமா என்னால் சொல்ல முடியறது உங்க அம்மா பொய் சொல்லறான்னு”

“அது என்ன விஷயம்”

“உங்க அம்மா சானிடரி பேட்ஸ் யூஸ் பண்ணறவா இல்லை அப்போ துணி தான் யூஸ் பண்ணணும். ஆனா காலையிலேந்து இப்போ வரைக்கும் தூரத்துணி காய வைக்கிற கொடியில ஒரு துணிக் கூட காயறதை நான் பார்க்கலை. சரிப்பா  சானிடரி பேட் யூஸ் பண்ணினா கூட அதை போடும் பக்கட் வித் கவரும் “விச் ஐ வாஸ் யூஸிங் இம்மீடியட்லி ஆஃப்டர் அவர் மேரேஜ்” அதுவும் மூலையில் சும்மா தான் கிடக்கு. இதெல்லாம் வச்சுப் பார்த்தா எனக்கு இந்த வீட்ல ஏதோ பெரிசா நடக்கப்போறதுன்னு தான் தோன்றது. தயவுசெய்து என்னை எங்க ஆத்துல விட்டுட்டு நீங்க ஊருக்குப் போங்கோ ப்ளீஸ் நவீ”

“சரி சரி டென்ஷன் ஆகாதே அமைதியா இப்போ கொஞ்ச நேரம் தூங்கு.”

என்று மிருதுளாவைத் தூங்க சொல்லிவிட்டு நவீன் அவள் சொன்னதை எல்லாம் தன் மனதில் அசைப்போட்டுப் பார்த்தான். அப்போது மாடிப்படி கீழே இருந்து ஈஸ்வரன் 

“நவீன் நவீன்!! டேய் நவீன்”

என்று அழைக்கும் குரல் கேட்டது. எங்கடா மிருதுளாவை எழுப்பி விட்டுவிடுவார்களோ என்று எண்ணி வேகமாக ரூம் கதவை சாத்திவிட்டு கீழே சென்று

“ஏன் இப்படி கத்தறாய்”

“ஆமாம் நீ தான் பெல்லையும் கழட்டிட்ட பின்ன கத்தி தானே கூப்பிட முடியும்”

“சரி என்ன வேணும்? எதுக்காக கூப்பிட்ட?”

“என்னடா உன் பொண்டாட்டி ரொம்ப துள்ளறா? இதெல்லாம் தட்டி கேட்க மாட்டியா?”

“அவளை இன்னைக்கு அவா ஆத்துக்கு கூட்டிண்டு போறதா சொல்லியிருந்தோம் ஆனா போக முடியாம போயிடுத்து அதுதான் அவளுக்கு வருத்தம்.”

“அதுக்கு என்னெல்லாம் பேசறதுன்னு ஒரு வெவஸ்த்தை இல்ல?”

“ஆமாம் அவ என்னத்த பேசினான்னு நீ இப்போ இப்படி கேட்கிற?”

“ஆமாம் அவ பேசினது தான் இந்த தெருவுக்கே கேட்டிருக்குமே!! கீழே இருக்கற எங்களுக்கு கேட்காதா என்ன?”

“இல்லையே அவ அவ்வளவு சத்தமா எல்லாம் பேசலையே!!! மெதுவா தானே பேசினா அது எப்படி கீழே கேட்டிருக்கும்!!!”

” சரி சரி அத விடு பக்கத்தாத்து ரஞ்ஜனி மாமி இருக்கா இல்லையா அவாளுக்கு வாழையிலை வேணுமாம் கொஞ்சம் கொள்ளப்பக்கம் போய் ஒரு இரண்டு வாழையி லையை வெட்டிக் கொண்டு வந்து என்கிட்ட தாயேன். அதுக்குத்தான் உன்னை கூப்பிட்டேன்”

“லஞ்ச் எல்லாம் எல்லாரும் சாப்பிட்டிருப்பாளே இப்போ எதுக்கு வாழையிலை அவாளுக்கு?”

“ஏதோ கேட்டா தர்றேன்னுட்டேன் நீ போய் வெட்டிண்டு வா”

“சரி சரி இரு கத்தி எடுத்துண்டு போயிட்டு வர்றேன்”

“நானும் வரட்டுமா?”

“என்னத்துக்கு நானே போயிட்டு வர்றேன்”

“இல்ல இரு வர்றேன்”

அப்பாவும் பிள்ளையுமாக வீட்டின் பின்புறம் சென்றனர். நவீன் வாழையிலையை வெட்டிக் கொண்டிருக்கும் போது பர்வதம் அங்கே சென்று ஒரு துணியை அந்த கொடியில் காய வைத்தாள் அதை நவீன் கவனிக்காததால் தன் கணவரிடம்

“கொஞ்சம் நகந்துக் கோங்கோ மேல பட்டுடப் போறது” என்றாள் அதற்கு ஈஸ்வரன்

“சரி சரி ஓரமா போ” என்றார்

பர்வதம் குரல் கேட்டதும் நவீன் திரும்பிப் பார்த்தான் அவள் பின்னாலிருந்த கொடியில் திடிரென துணி இருந்தது. பர்வதம் ஈஸ்வரன் மற்றும் நவீனிடம்

“மாமி இலை வேண்டாம்ன்னுட்டா” 

“பின்ன ஏன் இப்போ இதை வெட்டினேனாம்? எப்ப சொன்னா?”

“நீங்க ரெண்டு பேரும் இலை வெட்ட வந்தப்போ தான் அவா புள்ளைய அனுப்பிச் சொன்னா”

“சரி இப்போ என்ன இந்த இலையை நாம நைட்டுக்கு யூஸ் பண்ணிண்டுட்டா போறது” என்று சமாளித்தார் ஈஸ்வரன்

நடந்தவைகளை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டே கீழே இறங்கி வந்தாள் மிருதுளா. இவர்கள் கொள்ளப்பக்கத்தில் செய்த பேச்சு சத்தம் மாடியில் உறங்கிக்கொண்டிருந்த மிருதுளாவை எழுப்பியது. அவள் கண்ட காட்சியை உண்மை என நம்பி தான் தவறாக எண்ணிவிட்டோமென மனதில் எண்ணி சங்கடப்பட்டாள். அதே நேரம் கீழே தன் தந்தையுடன் நடந்த பேச்சு வார்த்தைகளும் மற்றும் வீட்டின் பின்புறம் நடந்தேறியதையும் பார்த்த நவீன் மனதில் அப்போது தான் சந்தேகம் எழ ஆரம்பித்தது. 

மொத்தத்தில் நவீனையும் மிருதுளாவையும் நன்றாக குழப்பி அவர்களை ராமானுஜம், அம்புஜம் வீட்டிற்கு செல்ல விடாமல் செய்தனர் மூத்த தம்பதியர். மிருதுளாவும் நவீனும் இருவருமே சற்று சாந்தமான குணமும், சட்டென்று பெரியவர்களை எடுத்தெறிந்து பேசாத குணமும், மரியாதையுடன் நடந்துக் கொள்ளும் பாங்கும் இருந்ததால் இது பெரிதாகவில்லை. இதே இடத்தில் மிருதுளாவுக்கு பதில் ஒரு சமத்து சாமர்த்தியம் மிகுந்த பெண் இருந்திருந்தால் காட்சியே மாறியிருக்கும்.

மிருதுளாவின் வளர்ப்பு அப்படி. ஆனால் இந்த மாதிரியான வளர்ப்பு… சம்மந்தப் பட்ட பெண்ணை தான் மிகவும் பாதிக்கும் என்பதை புரிந்துக் கொள்ளாமல் தன் பெண் நல்லவளாக, பொறுமையில் பூமாதேவியாக, சமையலில் அன்னபூரணியாக இருக்க வேண்டும் என்று தான் அந்த காலத்தில் பெண் பிள்ளைகளை வளர்த்தனர் பெற்றோர்கள். 

நரிக்கூட்டத்தில் முயலாக இருந்தால் பிழைக்க முடியுமா? 

இந்த காலம் போலும் இல்லாமல் அந்த காலம் போலும் இல்லாமல் சுயமரியாதையின் முக்கியத்துவம் சொல்லி வளர்த்தல் வேண்டும். தேவையானதற்கு மட்டும் பொறுத்துப் போ எல்லாவற்றிற்கும் பொறுத்துப் போகாதே, எல்லாவற்றையும் குதர்க்கமாக எடுத்துக் கொண்டு வம்பு வளர்க்காதே, அதே நேரம் தப்பு உன்னிடமில்லை எனில் எதிர்க்கவும் தயங்காதே, குடும்பத்திற்கு என்றுமே முன்னுரிமைக் கொடு அதில் நீயும் அடங்குகிறாய் என்பதை மறவாதே என்று சொல்லி வளர்த்தல் வேண்டும். ஏனெனில் ஒரு பெண்ணின் வளர்ப்பு சரியாக இருந்தால் அடுத்த சந்ததி நன்றாக இருக்கும் என்பார்கள். 

ஆக இன்றும் நாளையும் மிருதுளாவால் அவள் வீட்டிற்கு போக முடியாமல் போனது… உண்மையிலேயே மிருதுளா முதலில் யூகித்ததுப் போல பர்வதத்தின் சூழ்ச்சியா இல்லை அவள் உறங்கும்போது வீட்டினுள் நடந்த பேச்சு வார்த்தை அறியாமல் இறுதியில் கண்ட காட்சியை வைத்து மட்டும் தன்னைத் தானே தவறிழைத்ததாக எண்ண வைத்த  சூழ்நிலையா?? 

தொடரும்….. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s