மிருதுளா என்ன ஆனாள்? தொடர்கதை இன்று ஐம்பதாவது அத்தியாயத்தை எட்டியுள்ளது. இந்த தொடரைத் தொடர்ந்து படித்து ஆதரவு அளித்து வரும் வாசகர் நல்லுள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏 வாருங்கள் இப்பொழுது நமது மிருதுளாவின் ஈரோடு பயணம் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
ஈரோடு பஸ்டாண்ட் வந்ததும் நவீனும் மிருதுளாவும் பஸ்ஸிலிருந்து இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து லட்சுமி வீட்டைச் சென்றடைந்தனர். ஆட்டோகாரருக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே வீட்டினுள்ளேயிருந்து லட்சுமி
“வாங்கோ வாங்கோ நவீன் மிருதுளா. வாங்கோ”
என்று கூறிக்கொண்டே வாசலுக்கு வந்து அவர்களை வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.
“அத்தை எப்படி இருக்கேங்கள்?”
“இப்பத் தானே பார்த்துண்டோம் மிருதுளா. என்னமோ பார்த்து பல வருஷம் ஆனா மாதிரி கேட்கிற? நன்னா இருக்கேன். வா வா உள்ள வா. வாடா நவீன்”
“ஹாய் அத்திம்பேர் எப்படி இருக்கேங்கள்? எங்க? ஆத்துல யாரையுமே காணுமே!!”
“வாப்பா வா. நான் நன்னா இருக்கேன் நீ எப்படி இருக்க? வா மா மிருதுளா வா வா. எல்லாரும் அவா அவா வேலைய பார்க்கப் போயிருக்கா. நான் ரிட்டையர்டு அதனால வீட்டிலேயே இருக்கேன். எல்லாரும் சாயந்தரம் ஆறு மணிக்கு வந்துடுவா. இப்படி உட்காரு.”
என்று அத்திம்பேரும் நவீனும் அமர்ந்து வீட்டுக் கதை முதல் அரசியல் வரை அலச ஆரம்பித்தனர். மிருதுளா சற்று நேரம் அங்கு அமர்ந்திருந்து விட்டு மெல்ல எழுந்து லட்சுமியை அழைத்தவாரே அடுப்படிக்குள் சென்றாள்
“அத்தை அத்தை என்ன பண்ணறேங்கள். நான் வேணும்னா ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மா. எல்லாம் ஆயிடுத்து. அப்பளம் பொறிக்கறது மட்டும் பாக்கி இருந்தது அதையும் இதோ முடிச்சாச்சு. சாப்பிடறேங்களா ரெண்டு பேரும்?”
“டைம் ஆகலையே அத்தை. மணி பதினொன்னு தானே ஆகறது. நீங்க என்ன ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டேங்கள்?”
“நாங்க ப்ரேக் பாஸ்ட் எல்லாம் சாப்பிட மாட்டோம்”
“அப்படின்னா இன்னமும் சாப்பிடாமயா இருக்கேங்கள்?”
“எங்காத்துல காலை ல எழுந்து ஃபுல் சமையல் செய்திடுவேன். பசங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு டிபன் பாக்ஸ்ல எடுத்துண்டும் போயிடுவா நானும் அத்திம்பேரும் இரண்டு காபி குடிப்போம். அப்புறம் ஒரு பத்தரை மணிக்கு சாப்பாடு சாப்டுட்டுவோம். மதியம் ஒரு மூணு மணிக்கு ஏதாவது டிபன் செஞ்சு காபி கூட எடுத்துப்போம். எல்லாருக்கும் டிபனை செய்தும் வச்சுடுவேன். பசங்க எல்லாரும் ஆறு ஆறரைக்கு வருவா எல்லாம் முகம் கை கால் கழுவிட்டு ஒண்ணா உட்கார்ந்து ஏழு மணிக்கு டிபன் சாப்பிடுவோம். ராத்திரி எல்லாருக்கும் ஒரு க்ளாஸ் பால் அதோட அடுப்படி கடை மூடப்படும்”
“ஓ!! ஓகே ஓகே. அப்படின்னா நீங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடலை இல்லையா?”
“ஆமாம் ஆனா மூணு காபி ஆயாச்சு தெரியுமோ”
“அப்போ வாங்கோ எல்லாரும் சாப்ட்டிடலாம்”
“உங்களுக்கு டைம் ஆகலைன்னு சொன்னயே”
“இல்ல அத்தை பரவாயில்லை உங்க சமையல் வாசம் சாப்பிடு சாப்பிடுன்னு சொல்லறது. நான் எல்லாத்தையும் ஹால்ல கொண்டு போய் வைக்கட்டுமா?”
“சரி இந்தா இதெல்லாம் வரிசையா கொண்டுபோய் வை நானும் எடுத்துண்டு வரேன். ரெண்டு பேருமா செய்வோம்”
“என்ன அத்தை நிறைய ஐட்டம்ஸ் செய்திருக்கேங்கள் போல?”
“பின்ன நீங்க கல்யாணமானதுக்கப்பறம் மொதோ மொதோ வர்றேளே செய்யாமல் இருக்க முடியுமா! என்னத்த பெரிசா செய்துட்டேன் வழக்கமான சாம்பார், ரசம், பீன்ஸ் உசிலி, உருளை காரகறி, பூசணி கடலப்பருப்பு கூட்டு, பாயசம், வடை, அப்பளம், மோர் அவ்வளவு தான்.”
“சுப்பர் அத்தை. தாங்கஸ்”
“என்னத்துக்கு தாங்கஸ் எல்லாம் சொல்லிண்டிருக்க? சரி காலை ல உங்காத்துல என்ன டிபன் சாப்பிட்டேங்கள்? நேர்த்த சாப்பிட்டிருப்பேங்களே?”
“இட்டிலி தேங்காய் சட்னி. ஆமாம் அத்தை ஆறரை மணிக்கெல்லாம் சாப்பிட்டாச்சு”
“ஓ! பர்வதத்தோட வழக்கமான புளிக்காத கல்லு இட்டிலியா? அது கின்னுன்னு வயித்துல கிடக்குமே”
“நான் ஒண்ணு தான் சாப்பிட்டேன். அவ்வளவு தான் என்னால சாப்பிடவும் முடியும்”
“உங்க மாமியார் சுடற கல்லு இட்டிலில ஒண்ணு சாப்பிடறதே கஷ்டம் தான். பாவம் நீ. சரி இரு நான் போய் நவீனையும் அத்திம்பேரையும் சாப்பிட வரச்சொல்லறேன்”
நவீனும், அத்திம்பேரும் கை கால் கழுவிட்டு சாப்பிட வந்தமர்ந்தனர். அப்போது லட்சுமி
“மிருதுளா நீயும் நவீனோட சேர்ந்து உட்கார்ந்துக்கோ”
“பரவாயில்லை அத்தை அவா ரெண்டு பேரும் சாப்பிடட்டும் நாம ரெண்டு பேருமா சாப்ட்டுப்போம்”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நீ போய் அவன் பக்கத்துல உட்காரு போ”
“என்னத்துக்கு இப்படி பேசிண்டே இருக்கேங்கள் பேசாம நீங்களும் உட்காருங்கோ அத்தை அவா அவாளுக்கு வேண்டியதை அவா அவாளே போட்டுப்போம். எதுக்கு ஃபார்மாலிட்டிஸ் எல்லாம்.”
“அதுக்கில்லடா நவீன். சரி உங்களுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் பறிமாறிட்டு நானும் உட்காந்துக்கறேன் அதுக்கப்புறம் வேணுங்கறத அவா அவா எடுத்துக்கோங்கோ சரியா”
“ஓகே டன் அத்தை”
அனைவருமாக அமர்ந்து ரசித்து ருசித்து உண்டனர். சஷ்டியப்த பூர்த்தியில் சாப்பிட்டப் பின் அன்று தான் மீண்டும் நல்ல சாப்பாடு கிடைத்தது மிருதுளாவிற்கு. நிம்மதியாக சாப்பிட்டாள். அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் மிருதுளா எல்லா பாத்திரங்களையும் உள்ளே கொண்டு போய் வைக்க உதவினாள் பின் சாப்பிட்ட இடத்தை நீர் தெளித்து சுத்தம் செய்தாள். நவீனும் அத்திம்பேரும் சாப்பிட வருவதற்கு முன் விட்ட அரசியல் நாட்டு நடப்பு பேச்சை மீண்டும் தொடர்ந்தனர். லட்சுமி மிருதுளாவிடம்…
“அடியே பொண்ணே நீ வா. இந்தா தலைகாணி சித்த இப்படி படுத்துக்கோ. நாலு மணி நேரம் பஸ்ஸுல உட்கார்ந்துண்டே வந்திருக்க இடுப்பு வலிக்கும். இந்தா வா நானும் படுத்துக்கறேன்”
“தாங்கஸ் அத்தை எனக்கு வலிக்க ஆரம்பிச்சுது அது தான் சுவற்றில் சாய்ந்து உட்கார டிரைப் பண்ணிண்டிருந்தேன்”
என்று கூறிக் கொண்டே இருவரும் படுத்துக் கொண்டனர். அப்பொழுது மிருதுளா
“அத்தை நாங்க அடுத்த தடவை நவீன் ஊருக்கு வரும்போது உங்க ஆத்துக்கு வரலாம்ன்னு இருந்தோம் ஆனா நீங்க சொன்னதால உடனே கிளம்பி வந்தேட்டோம்”
“நானும் உங்களுக்கு டைம் கிடைக்கும் போது வருவேங்கள்ன்னு தான் வற்புறுத்தலை ஆனா உங்க மாமனார் தான் நான் அங்க வந்திருந்தப்போ நம்மாத்துல நான் மட்டும் தான் உங்களுக்கு விருந்து கொடுக்கலைன்னு சிரிச்சுண்டே சொன்னா. ஏன் அதை விட்டு வைக்கணும்ன்னு சரிப்பா ஈஸ்வரா உன் புள்ளையும் நாட்டுப்பொண்ணையும் எங்காத்துக்கு அவாளுக்கு எப்போ சௌகர்யமோ அப்போ வரச்சொல்லு விருந்து வச்சுட்டாப் போச்சுன்னு சொன்னதுக்கு நாளைக்கே அனுப்பி வச்சுட்டாப் போச்சுன்னு ஈஸ்வரன் சொல்லும்போது நான் எப்படி மறுத்து சொல்லறதுன்னு நானும் சரின்னு சொல்லிட்டேன் இதோ நீங்களும் வந்தாச்சு விருந்தும் ஆயாச்சு”
“ஓ!! அப்படியா ஓகே ஓகே. அத்தை சாரி அத்தை நீங்க அங்கிருந்து டிரால் பண்ணி வந்ததும் விருந்து தயார் செய்யறா மாதிரி ஆயிடுத்து”
“விடு விடு மிருதுளா. உன் மாமியார் உனக்கு விருந்து சாப்பாடு சமைச்சுத்தந்திருக்காளா? சொல்லு”
“ஆங்!!! செய்திருக்கா” என்று மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பேசினாள் மிருதுளா ஆனால் பர்வதத்தை அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து வைத்திருந்த லட்சுமிக்கு தெரியாதா என்ன?
“ஓ!! மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பேசறயாக்கும். பர்வதத்துக்கு இப்படி ஒரு நாட்டுப்பொண் அந்த கடவுளின் திருவிலையாடலே தனி தான் போ”
என்று கூறிக்கொண்டே திரும்பி மிருதுளாவைப் பார்த்தாள் லட்சுமி. அவள் நன்றாக உறக்கத்திலிருந்தாள். அவளை தொந்தரவு செய்யாமல் அத்துடன் பேச்சை நிப்பாட்டிவிட்டு லட்சுமியும் உறங்கினாள். அந்த நேரத்தில் தூங்குவது லட்சுமியின் வாடிக்கையான விஷயமே. மணி மூணு ஆனதும் எழுந்துக் கொண்டாள் லட்சுமி. மிருதுளா அப்பொழுதும் உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் உறங்கும் அறையின் கதவை மெல்ல சாத்திவிட்டு வெளியே வந்து பார்த்தாள் லட்சுமி. ஹாலில் நவீனும் தன் கணவனும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
முகம் கை கால் கழுவிக் கொண்டு தலையை வாரி பின்னலிட்டு, முகத்தில் பவுடர் பூசி குங்குமமிட்டு அடுப்படிக்குள் சென்றாள் லட்சுமி. அன்று மாலை டிபனுக்கு லெமன் சேவை, தேங்காய் சேவை, புளி சேவை செய்வதற்குண்டான சேவையை காலையிலேயே பிழிந்து வைத்திருந்தாள். தாளிக்க வேண்டியதை மட்டும் நறுக்கி தாளித்து மூன்று வகையான சேவைகளையும் தயார் செய்து தேங்காய் சட்னி அறைக்க மிக்ஸியை போட்டதும் ஹாலில் படுத்தகிருந்த ஆண்கள் இருவரும் எழுந்துக் கொண்டனர்.
இருவரும் ஃப்ரெஷ்ஷாகி வந்து அமர்ந்தனர். அப்போது நவீன்
“அத்தை மிருது எங்கே?”
“அவ தூங்கிண்டிருக்கா நவீன். நல்லா தூங்கட்டும்ன்னு நான் தான் அந்த ரூம் கதவை சாத்திட்டு வந்தேன்”
“சரி மணி ஆகிடுத்து நான் போய் அவள எழுப்பட்டும்”
“வேண்டாம் நவீன் எழுப்பாதே. மாசமான பொண்கள் தூங்கும் போது எழுப்பப்டாது. அவாளா எழுந்திரிக்க விட்டுடணும். அங்க தூங்கறது உன் ஆத்துக்காரி மட்டுமில்லை உன் கொழந்தையும் தான். நீ போய் இப்போ மிருதுளாவை எழுப்பினனா உன் குழந்தையும் சட்டுன்னு எழுந்திரிக்க வேண்டியிருக்கும். விட்டிடு அவளே எழுந்து வரட்டும்”
“ஓ!! சரி அத்தை. என்ன செய்யறேங்கள்? என்னன்னமோ செய்து வச்சிருக்கேங்கள்?”
“ஓ! இதுவா!! ஈவினிங் டிபன் தான். மூணு வகை சேவை, சட்னி, கொஞ்சமா சுண்டல் காபிக் கூட சாப்பிட. இதோ காபி போட்டுண்டிருக்கேன் ஆனதும் எடுத்துண்டு ஹாலுக்கு வர்றேன். நீ போய் உட்கார்ந்துக்கோ”
“சரி அத்தை” என்று நவீன் திரும்பினான் மிருதுளா தான் படுத்திருந்த அறைக் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள்.
“நவீன் நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன்னு நினைக்கறேன். இருங்கோ நான் போய் ஃப்ரெஷ்ஷாகிட்டு வர்றேன்”
“பரவாயில்லை மிருது மெதுவா வா”
அனைவரும் ஒன்றாக அமர்ந்து சுண்டல் சாப்பிட்டுக் கொண்டே காபியையும் அருந்தினர். மணி அஞ்சானது
“அத்தை அத்திம்பேர் மணி அஞ்சாச்சு நாங்க கிளம்பறோம்”
“என்னதிது நவீன்? இன்னும் நீங்க பசங்கள பார்க்கலையே? அதுக்குள்ள கிளம்பறேங்கள்? இருங்கோ இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லாரும் வந்திடுவா”
“அதுக்கில்ல அத்தை இப்போ கிளம்பினா தான் ஒன்பது மணிக்காவது வீடு போய் சேருவோம் அத யோசிச்சு தான் சொன்னேன் அதுவுமில்லாமல் இப்போ நடந்த ஃபக்ஷன்ல அவா எல்லாரையும் மீட் பண்ணினோமே”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சுந்தரேசனும் கஜேஷ்வரியும் வீட்டினுள் நுழைந்தனர்.
“வாங்கோ வாங்கோ நவீன் அண்ணா அன்ட் மன்னி”
என்று இருவரும் சற்று நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் லட்சுமியின் மூத்த மகன் நாராயணனும் வந்து ஜோதியில் ஐக்கியமாகி பேசிக்கொண்டிருந்ததில் நேரத்தை கவனிக்க தவறிவிட்டான் நவீன். அவர்களின் சுவாரஸ்யமான பேச்சுக்கிடையில் லட்சுமி..
“சரி சரி இப்படி பேசிண்டே இருந்தா எப்படி? எல்லாரும் போய் முகம் கல கால் கழுவிட்டு வாங்கோ டிபன் சாப்பிடலாம்”
என்றதும் தான் கைக் கடிகாரத்தைப் பார்த்தான் நவீன். மணி ஏழு காட்டியது. உடனே
“சரி அத்தை நாங்களும் கிளம்பறோம் மணி ரொம்ப ஆயிடுத்து”
“என்னடா நவீன் கிளம்ப வேண்டாம்ன்னு சொல்லலை எல்லாருமா உட்கார்ந்து டிபன் சாப்ட்டுட்டு கிளம்புங்கோ இல்லாட்டி பயணத்தப்போ மிருதுளாக்கு பசிக்கும் பா.”
“சரி அத்தை சாப்டுட்டே கிளம்பறோம்”
என்று அனைவரும் ஒன்றாக அமர, லட்சுமி பறிமாற பேசிக் கொண்டே சாப்பிட்டு எழுந்தனர். நவீனும் மிருதுளாவும் கிளம்புவதற்கு முன் அத்தை அத்திம்பேர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தனர். லட்சுமி அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுப்பிவைத்தாள். அவர்களும் ஆட்டோ பிடித்து பஸ்டாண்ட் வந்து பஸ்ஸில் ஏறினர். பஸ் சற்று தூரம் போனதும் மிருதுளா நவீனிடம்….
“எங்காத்துல தலைதீபாவளிக்கு நல்ல சாப்பாடு சாப்பிட்டதுக்கப்பறம் இன்னைக்குத் தான் நல்ல சாப்பாடு சாப்பிட்டேன். உங்க அத்தை நல்லா சமைக்கறா”
“ம்… ஆமாம் ஆமாம்”
“என்ன பதில் ஒரு மாதிரி வர்றது”
“ஒருமாதிரி எல்லாம் இல்லை அவா என்னைக்குமே நல்லா சமைப்பா. எங்க அப்பா சைட்ல எல்லாருமே நல்லா சமைப்பா”
“அப்போ அம்மா சைட்டுல …..ம் ..ம்..ம்..அன்டர்ஸ்ஸுட்டு”
“ஹலோ என்ன ஃபுல் கிண்டல் மூட்ல இருக்கப் போல தெரியறது”
“சரி அதை விடுங்கோ உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”
“என்னது அது?”
“உங்க அத்தை ஒண்ணும் நம்மள வரச்சொல்லலை. உங்க அப்பா தான் அவாள்ட்ட நக்கலா சொல்லி நம்மள ஈரோட்டுக்கு அனுப்பிருக்கா. அதை அத்தை சொல்லி தான் எனக்கு தெரிய வந்தது”
என்று லட்சுமி அவளிடம் சொன்னதை அப்படியே நவீனிடம் சொல்லி முடித்தாள் மிருதுளா. அதற்கு நவீன்
“அப்படியா!!! அதுதானே என்னடா என்கிட்ட அப்படி சொல்லிட்டு வீட்டுக்கு வான்னும் சொல்லிருக்காளேன்னு நினைச்சேன். இதுலயும் என் பெற்றோர் திருவிளையாடலா!!! இவாள்ட்ட என்ன சொன்னாலும் கேட்கமாடேங்கறாளே”
“நீங்க அவா கேட்கற மாதிரி எனக்கு தெரிஞ்சு ஒண்ணுமே சொன்னதில்லை சும்மா என்கிட்ட அப்படி பேசாதீங்கோ”
“உனக்கு தெரியாது மிருது. நான் அவாகிட்ட இந்த மாதிரியான கிறுக்குத் தனமான வேலைகள் எல்லாம் செய்யாதீங்கோன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன் தெரியுமா!”
“சரி சரி அதை விடுங்கோ. நாளைக்கு என்னை எங்காத்துல கொண்டு போய் விடறேங்கள் சரியா”
“ஷுவர் ஷுவர். நாம நாளைக்கு உங்க ஆத்துக்குப் போறோம். நான் உன்னை அங்கே விட்டுட்டு தான் ஊருக்கு கிளம்புவேன்”
“அது நடந்தா சந்தோஷம் தான். பார்ப்போம். எத்தனை மணிக்கு நாம வீட்டுக்கு போய் சேருவோம்?”
“எப்படியும் பதினொன்றரை ஆகிடும். நீ என் மேல் சாஞ்சுண்டு தூங்கிக்கோ மிருது”
“இல்ல நான் அத்தை ஆத்துல மதியானம் நல்லா தூங்கிருக்கேன்”
இவ்வாறு பேசிக் கொண்டே வந்ததில் நேரம் கிடுகிடுவென ஓடியது. இருவரும் வீட்டுக்கு வந்து, மாடிப்படி வீட்டின் வெளியே இர்ந்ததால் கீழே உறங்கிக் கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்யாமல் மாடிக்குச் சென்று படுத்துறங்கும் போது மணி பண்ணி ரெண்டு. விடியற்காலை அஞசு மணிக்கெல்லாம் அவர்கள் ரூம் கதவு
டக் டக் டக் டக் என்று சப்தம் எழுப்பியது. ஈரோட்டிலிருந்து பஸ்ஸில் டிராவல் செய்து வந்து ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்கிய மிருதுளாவிற்கு அவள் அறை கதவின் சப்தம் இனிமையாகப் போகிறதா இல்லை இம்சையாகப் போகிறதா என்பதை கதவு திறந்ததும் தெரிந்துக் கொள்வோம்.
தொடரும்….