நிச்சயதார்த்தம் முடிந்து நண்பர்களையும் சொந்தங்களையும் அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு ராமானுஜம் குடும்பத்தினர் வீடு வந்து சேரும்போது இரவு பதினோரு மணியானது. அனைவரும் அசதியாக இருந்தார்கள். அம்புஜம் கவலையாகவும் இருந்தாள். இதை கவனித்த வேனு
“என்ன மா சந்தோஷப்படாமல் கவலையா இருக்க?”
“அது ஒன்னுமில்லடா கொஞ்சம் அசதி இனி இருக்கற வேலைகள் எல்லாம் நினைச்சா மலப்பா இருக்குடா. அதத்தான் யோசிண்டு வரேன்“
அனைவரும் உறங்கினார்கள். அம்புஜம் நன்றாக தூங்கும் மிருதுளாவையே சற்று நேரம் பார்த்து …
“கள்ளம் கபடமில்லாத வெகுளியான என் பொன்னை நீ தாம்மா காப்பாத்தனும் தாயே”
என்று வேண்டிக்கொண்டு பின் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
மறுநாள் விடிந்தது. கல்யாண தேதி குறிப்பதற்கு நல்ல நாள் பார்க்கப்பட்டது. ஐப்பசி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை வரச்சொல்லிருந்தார் ஜோதிடர்.
இந்த கல்யாண ஏற்பாடுகள் நடப்பது மொபைல் ஃபோன்கள் இல்லாத காலக்கட்டமாகும். சுமார் ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னாள். அப்பொழுது வீட்டில் லாண்ட் லைன் ஃபோன் வைத்திருப்பதே ஆடம்பரமாக கருதப்பட்ட காலம்.
நவீன் ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது. ரெயில்வே ஸ்டேஷனில் பவின் மற்றும் ஈஸ்வரன் நவீனை வழியனுப்ப வந்திருந்தனர். ரெயில் கிளம்ப அரைமணி நேரம் இருந்தது. நவீனின் மனது அவள் வருவாளா என்று ஏங்கியது. சுற்றும் முற்றும் பார்த்தான் தூரத்தில் அழகான சுடிதார் அணிந்து மிருதுளா தனது பெற்றோர்களுடன் நடந்து வருவது தெரிந்தது. அவர்கள் அருகே வந்ததும்
“வாங்கோ வாங்கோ” என்று நவீனும் ஈஸ்வரனும் சொன்னார்கள்.
பின் அனைவருமாக உரையாடினார்கள். நவீனும் மிருதுளாவும் தனியாக பேச தயங்கினர். ரெயில் கிளம்ப ஐந்தே நிமிடங்கள் இருந்தது. ரெயிலில் நவீன் ஏறியப்பின் தனது இருக்கையில் அமர்ந்தான். ரெயில் கிளம்ப தயாரானதை சப்தம் எழுப்பி அறிவித்தது. நவீன் தனது கைகளை அசைத்து பை பை மிருது என்று முதல்முறை அவளிடம் சொன்னான். மிருதுளாவும் பை என்றாள். இதுதான் அவர்கள் நிச்சயதார்த்திற்கு பின் பேசியவை. ரெயில் புறப்பட்டு சென்றதும் ஈஸ்வரன், பவின், ராமானுஜம், அம்புஜம் மற்றும் மிருதுளா அவரவர் பஸ்ஸில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.
ஐப்பசி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை வந்தது ராமானுஜமும் அம்புஜமும் ஜோதிடர் வீட்டுக்கு சென்றனர். மாப்பிள்ளைப் பெண்ணின் ஜாதகப்படி மாசி மாதம் திருமணத்திற்கு உகந்தது என்று அந்த மாதத்தில் மூன்று தேதிகளைக் குறித்துக்கொடுத்ததை எடுத்துக்கொண்டு பர்வதம் வீட்டிற்கு சென்று அவர்களிடம் கொடுத்து மாப்பிள்ளைக்கு எந்த தேதி சரிவரும் என்று கேட்டு சொல்ல சொன்னார்கள்.
பர்வதமும் ஈஸ்வரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்….பின் பர்வதம் …
“கல்யாணமானதும் நவீன் பத்து நாளில் குஜராத் போயிடுவான். கல்யாணம் முடிந்ததுக்கப்பறம் தான் ஃபேமிலி குவார்ட்ஸ் தருவா. அவன் போய் தான் வீடு பார்க்கனும் அதனால மிருதுளா இங்க தான் இருக்கனும் ஒரு ரெண்டு மாசத்தில வீடு அலாட் ஆகிடும் அப்பறம் லீவு போட்டு வந்து அழைச்சிண்டு போவான். ஸோ நாளு மாசம் இங்கயே இருக்கட்டும் என்ன சொல்லறேங்கள்?”
இப்பொழுது ராமானுஜமும் அம்புஜமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் அம்புஜம்…
“என்ன மாமி கல்யாணம் ஆன உடனே நாளு மாசம் மிருதுளா மாப்பிள்ளையை பிரிஞ்சு இருக்கனுமான்னு யோசனையா இருக்கு!“
“ஏன் நாங்களெல்லாம் இல்லை என்ன?”
“அதுவும் சரிதான் ஆனாலும்……. மிருதுவோட எக்ஸாம் வேற மே மாசம் வரது. அதுதான் அவ எப்படியும் போயிட்டு ரெண்டு மாசத்தில திரும்பி வரத்தான் வேணும்….“
உடனே ஈஸ்வரன் குறுக்கிட்டு…
“என்னத்துக்கு அலஞ்சுண்டு கல்யாணம் முடிந்ததும் உங்க பொன்னு இங்கயே இருந்து எக்ஸாம் எல்லாம் முடிசிட்டு அப்பறம் ஜூன் ஆர் ஜூலைல போனா போரும். அதுக்குள்ள நவீனுக்கும் வீடு அலாட் ஆயிடும். இது தான் சரி அப்படியே இருக்கட்டும். நீங்களும் மிருது கிட்ட எடுத்து சொல்லிடுங்கோ“
அம்புஜத்திற்கு தற்மசங்கடமான நிலையானது. மனதிற்குள் ஒரு நெருடல்…அவள் மறுப்பு தெரிவிக்க முயல்வதற்குள் ராமானுஜம் குறுக்கிட்டு..
“சரி மாமா அப்படியே ஆகட்டும். நாங்க கிளம்பறோம். நாழி ஆயிடுத்து.“
என்று கூறி விடைப்பெற்றனர்.
வீடு வந்ததும் அம்புஜம் ராமானுஜத்தைப்பார்த்து ….
“ஏன் அவா சொன்னதுக்கு சரினு சொன்னேங்கள்? எனக்கென்னவோ இது சரியா படலை“
“ஆமாம் அவா ரெண்டு பேரும் டிசைட் பண்ணிட்டா மிருதுளாவ அனுப்பக்கூடாதுனு …அது அவா பேசர விதத்திலருந்தே நன்னா புரிஞ்சுது அதனால ஆர்க்யூ செய்து ஒரு யூஸும் இல்லை“
“நீங்க சொல்லறதும் சரிதான். நம்ம பொன்னுக்கு நல்ல வரன் தானே பார்த்திருக்கோம்? நாம ஏதும் விசாரிக்கலை…எல்லாம் பகவதி துணை“
மிருதுளாவுடன் ஜோதிடர் குறித்துக் குடுத்த தேதிகளை டிஸ்கஸ் செய்து பிப்பிரவரி இருப்பத்தி எட்டாம் தேதியை தேர்ந்தெடுத்தனர். அதை நவீன் வீட்டாரிடமும் தெரிவித்தனர். அவர்களும் சம்மதித்தனர்.
அடுத்து கல்யாண மண்டபம் புக் செய்யும் வேலையில் இறங்கினர் மிருதுளாவின் பெற்றோர். அவர்கள் ஒரு மண்டபம் செலக்ட் செய்து அதை நவீன் வீட்டாரிடம் தெரிவித்தப்போது அவர்கள் அதில் திருப்தி இல்லாததுபோல….பர்வதம் …
“நல்லாதான் இருக்கு ….எங்காத்து மனுஷா நிறைய பேர் வருவா அதனால இன்னும் கொஞ்சம் பெரிய மண்டபமா இருந்தா சௌகர்யமா இருக்கும்” என்றிழுக்க ….
“ஓகே மாமி இன்னொரு மண்டபம் பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்ணறோம்” என்றார் ராமானுஜம்.
ராமானுஜம் அம்புஜம் தம்பதியினர் நவீன் பெற்றொரை அந்த ஊரிலேயே உள்ள இரண்டாவது பெரிய மண்டபத்திற்கு அழைத்துச்சென்று இதை ஓகே பண்ணலாமா என்று கேட்டனர். ஈஸ்வரன் சூப்பரா இருக்கு என்றார் ஆனால் பர்வதம் “ரெண்டே ரெண்டு ஏசி ரூம் தானா” என்று கூறவும்….ராமானுஜம் சட்டென்று…
“மாமி இதுவே என் சக்திக்கு மீறினது இதுக்கு மேலே எங்களால முடியாது முடிவா என்ன சொல்லறேங்கள்?”
“சரி சரி நாங்க அட்ஜெஸ்ட் பண்ணிக்கறோம். பரவாயில்லை இதையே புக் பண்ணுங்கோ”
என்று பர்வதம் சொன்னதும் ராமானுஜத்திற்கும் அம்புஜத்திற்கும் பிடிக்கவில்லை. மண்டபத்தின் மேலாலரைப்பார்த்து முன்பணம் கட்டி பதிவு செய்தார்கள். சமையல், சீர் பட்சணங்கள், பூ, மாலை, நலங்கு என அனைத்தையும் மண்டபகாரர்களிடமே கான்ட்ராக்ட் போட்டார் ராமானுஜம். இல்லாவிட்டால் ஒவ்வொன்றுக்கும் குற்றப்பத்திரிகையை பர்வதம் வாசித்து விடுவாரோ என்ற அச்சம் போல பாவம். மணடபத்தை விட்டு வெளியே வந்ததும் பர்வதம்…
“எப்போ முகூர்த்த புடவை எடுக்க போறேங்கள். எங்களாண்ட ஒரு வார்த்தை சொன்னா நாங்களும் வருவோம். தாலி
எங்க செய்ய சொல்லப்போறேள்?” அம்புஜம் பதிலளித்தாள்..
“மாமி மண்டபம் பார்க்கவே உங்களைக்கூட்டிண்டு வந்திருக்கோம் பின்ன புடவை தாலி எடுக்கும் போது சொல்லாமல் இருப்போமா? தாலி எங்களுக்கு தெரிந்த ஆசாரியிடம் செய்ய சொல்லாம்னு இருக்கோம். ஒரு தாலி நீங்க தானே செய்யனும் அதையும் அவரே செய்து தருவார் ஒரு தாலிக்கு உண்டான பைசா மட்டும் நீங்க தந்தா போரும்.“
“இல்லை இல்லை அது சரிவராது எங்களுக்கு தெரிந்த நகைக்கடை ஒன்று இருக்கு அங்கத்தான் ஆர்டர் கொடுக்கனும்” என்றாள் பர்வதம் அதற்கு அம்புஜம்..
“சரி அதுவும் உங்கள் விருப்ப்படியே ஆகட்டும். நாளை மறுநாள் சுபமுகூர்த்த நாளா இருக்கு நீங்களும் இதே பஸ்டாப்பிற்கு வந்திடுங்கோ நாங்களும் வந்துடறோம் நாம எல்லாரும் சேர்ந்தே போய் புடவை தாலி எல்லாம் எடுத்துண்டு வரலாம்“
“சரி எங்களுக்கு பஸ் வந்துடுத்து நாங்க கிளம்பறோம். போயிட்டு வரோம்.”
என்று கூறி ஈஸ்வரனும் பர்வதமும் இடத்தைக் காலி செய்ததும் அம்புஜம் ராமானுஜத்திடம் …
“ஏன்னா இவா நாம என்ன சொன்னாலும் அதுல ஏதாவது குறைச்சொல்லிண்டே இருக்காளே இவாள திருப்திப் பட வைக்கறத்துக்கு நாம ரொம்ப சிறமப்படப்போறோம்னு நினைக்கறேன்.. எல்லாத்துக்கும் பகவதி துணை“
முகூர்த்த புடவை எடுக்கவும் தாலி ஆர்டர் குடுக்கவும் நவீன் மற்றும் மிருதுளாவின் பெற்றோருடன் மிருதுளாவும் சென்றாள்.. தாலி டிசைனிலும் பிரிச்சனை எழுப்பினாள் பர்வதம் அதையும் விட்டுக்கொடுத்தனர் மிருதுளாவின் பெற்றோர். அவர்கள் முறைப்படி பெண்வீட்டார் ஒரு தாலியும் மாப்பிள்ளைவீட்டார் ஒரு தாலியும் செய்வது வழக்கம் ஆனால் இங்கே தாலி ஆர்டர் கொடுத்ததும் பில் கட்டவேண்டிய நேரத்தில் ஈஸ்வரனும், பர்வதமும் பக்கத்துக்கடையில் ஏதோ வேலை இருப்பதாக கூறி சென்றனர். மொத்த பணத்தையும் ராமானுஜமே கட்டவேண்டியிருந்தது. உள்ளே கோபம் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் புடவை எடுக்க சென்றனர். புடவைக்கடையும் பர்வதம் சாய்ஸ் தான் கையோங்கியது பட்டில் ஒன்பது கஜம் கல்யாண முகூர்த்தப் புடவை காட்டச்சொல்ல பல ரகங்களில் பல வண்ணங்களில் விரித்துக்காட்டப்பட்டது. அதில் மிருதுளாவிற்கு ஆரஞ்சு நிறத்தில் பச்சைப்பார்டர் போட்டப்புடவை மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னாள். அதே கலரில் தான் நடிகை மீனா அவ்வைசண்முகி படத்தில் ருக்கு ருக்கு பாடலில் கட்டிக்கொண்டு வருவார். ராமானுஜமும் எடுத்துக்கொள்ளச்சொன்னார். விடுவாளா பர்வதம் !!!!….இடையில புகுந்து
“இந்த கலர்ல எல்லாம் கட்டிக்கக்கூடாது வெரும் மெரூன் இல்லாட்டி அரக்கு கலர்ல தான் எடுக்கனும்“
என்றதும் மிருதுளா….
“அம்மா எனக்கு இந்தக்கலர் தான் பிடிச்சிருக்கு என் அப்பா தானே காசு கொடுத்து எடுத்துத்தரா அப்போ நம்ம இஷ்ட்டத்துக்கு தானே எடுக்கனும்…ப்லீஸ் மா இதையே எடுக்கலாமா”
என்று அம்புஜம் காதில் கூறினாள். இதை கவனித்த பர்வதம்…
“என்ன அங்க உங்க பொன்னு என்னமோ முனுமுனுன்னு சொல்லறா?”
“அது ஒன்னும் இல்லை மாமி. நீ கட்டிண்டா அரக்கு கலரும் அழகாதான் இருக்கும்னு சொல்லிண்டிருக்கேன்” என்று அம்புஜம் கூறி சமாளிக்க…மிருதுளா அம்மா…என்று அம்புஜம் கையை இருக்கப்பிடித்தாள் உடனே அம்புஜம் …மகள் கைகளை தட்டிக்கொடுத்து பரவாயில்லை விடு என்று மெல்லச்சொன்னாள்.
ஆக அன்று எல்லாமே பர்வதத்தின் சாய்ஸ் படி தான் நடந்தது. ராமானுஜம் குடும்பத்தினர் பணம் கட்ட மட்டும் வந்தது போல் ஆக்கினாள் பர்வதம்.
அனைவரும் மத்திய உணவருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றனர். அனைவரும் மீல்ஸ் ஆர்டர் செய்தார்கள் அம்புஜம் வெளியே உணவு உட்கொள்ளாமாட்டாள் அதனால் ஒரு ஜூஸ் மட்டும் குடித்தாள். மிருதுளா பொரோட்டா ஆர்டர் செய்ய உடனே பர்வதம் அதெல்லாம் என்னத்துக்கு பேசாம மீல்ஸே ஆர்டர் பண்ணு என்று சொல்ல மிருதுளா அம்புஜத்தைப்பார்க்க அவளும் அவர்கள் சொல்படியே கேள் என்று கூற வேற வழியின்றி மீல்ஸே ஆர்டர் செய்தாள். அதன் பில்லும் ராமானுஜமே கட்டினார். பின் அனைவரும் பஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்த சமயத்தில் ஈஸ்வரன் மிருதுளாவிடம் ….
“மிருதுளா உனக்கு மே மாசம் எக்ஸாமாமே?”
“ஆமாம் அப்பா“
“அதனால நீ நவீன் கூட போக வேண்டாம் அவனே உன்ன கூப்பிட்டாலும் போகாதே. ஏன் வீனா அலைஞ்சுண்டு ஒன்னா பரீட்சை எல்லாம் நல்லப்படியா முடிச்சுட்டே கிளம்பு என்ன சரியா?”
“அதப்பத்தி இன்னும் நாங்க அவகிட்ட எதுவும் டிஸ்கஸ் பண்ணலை பண்ணிட்டு சொல்லறோமே” என்றாள் அம்புஜம்
“சரி நான் அடுத்தவாரம் ஃபோன் போட்டுகேட்டுக்கறேன் அதுக்குள்ள டிசைட் பண்ணுங்கோ. இன்னொரு விஷயம் நவீனுக்கு கோட் சூட், சர்ட், டை, ஷூ எல்லாம் அவன் அங்கேந்தே எடுத்துக்கறானாம் அதனால அவனுக்கு பணம் அனுப்பனும் ஸோ ஒரு பத்தாயிரம் ரூபா கொடுத்திடுங்கோ”
“அப்படியா சரி நான் நாளைக்கு இல்லாட்டி அடுத்த திங்கள் கிழமை வந்து தந்துடறேன்” என்றார் ராமானுஜம் அதற்கு ஈஸ்வரன்…
“இல்லை இல்லை நவீனுக்கு நாளைக்கே நான் அனுப்பனும் அதனால இப்பவே கொடுத்திடுங்கோ“
“இப்பவா!!! இங்கேயே வா!!! இது பஸ்டாப்!! மாமா நீங்க வயசானவா வேற. நாங்க இன்னைக்கு சாயந்தரம் ஆத்துக்கு வந்து தந்திடறோமே”
என்று ராமானுஜம் சொன்னதுக்கு பர்வதம் உடனே…
“இல்லை …பரவாயில்லை இங்கேயே தாங்கோ நாங்க பத்திரமா எடுத்துண்டு போயிடுவோம். நீங்க ஏன் இதுக்காக ரெண்டு தடவை அலையனும் பாவம்.“
என்று அடாவடியாக கூற வேற வழியில்லாமல் ரூபாய் பத்தாயிரத்தை எடுத்து ஈஸ்வரன் கையில் கொடுத்தார் ராமானுஜம். உடனே ஈஸ்வரன் அதை எண்ணிப்பார்த்து பின்…
“இந்தாங்கோ எங்க வகை தாளிக்கு உண்டான பணம் என்று ரூபாய் இரண்டாயிரத்தை ராமானுஜம் கொடுத்த பணத்திலிருந்தே எடுத்துக்கொடுத்தார்“
அவர்கள் பஸ் வந்தது அதில் ஏறி புறப்பட்டுச் சென்றனர் நவீனின் பெற்றோர்.
ராமானுஜம் அம்புஜத்திடம்….
“என்ன இவா என்கிட்ட இருந்தே காச வாங்கி எனக்கே அவா தாளி காசுனுட்டு தந்துட்டுப்போறா!!!! அதுவும் இல்லாம நவீன் தான் சம்பாதிக்கிறானே அவனுக்கு டிரஸ் எடுக்க ஏன் இவா பணம் அனுப்பனும்!!!! ஒரே குழப்பமா இருக்கே“
“ஆமாம் அவாள்ட்ட எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிட்டு இப்போ என்னாண்ட கேட்டா நான் என்ன சொல்லறது. இதை எல்லாம் அவாக்கிட்ட கேட்டிருக்கனும்“
“ஆமாம் நீ உன் வாயில என்ன கொழுக்கட்டையவா வச்சுண்டிருந்த நீ கேட்டிருக்க வேண்டியது தானே“
என்று அவர்களுக்குள் சண்டை ஆரம்பிக்க…பஸ்ஸும் வந்தது அதில் ஏறி அமர்ந்தனர். மிருதுளாவுக்கு சங்கடமாக இருந்தது. தனது அப்பா கூறுவதும் சரிதானே என்று அவளுக்கும் தோன்றியது. ஈஸ்வரன் பர்வதம் அன்று காலையிலிருந்து அவர்களை எல்லாக்கடையிலும் பாடாய் படுத்தியது எல்லாம் அசைப்போட்டுப்பார்த்தாள் பின் வீடு சென்றதும் ….
“அம்மா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். ரொம்ப பயமா இருக்கு” என்றாள். உடனே அம்புஜம்…
“இதெல்லாம் ஒன்னுமில்லை மா. இதுக்கெல்லாமா பயப்படறது அசடு. நீ எப்போதும் பொறுப்பா நடந்துக்கனும், பொறுமையை எப்போதும் விட்டுடாதே. இதை ஞாபகத்துல வச்சுண்டா போரும் மிருது. அவா சொல்லரா மாதிரி கல்யாணத்துக்கப்பறம் உன் எக்ஸாம் எல்லாம் முடிச்சுட்டே மாப்பிள்ளையோட குஜராத்துக்கு கிளம்பு என்ன சரியா“
“சரிமா. அப்படியே செய்யரேன்“
அம்புஜத்தின் முதல் தங்கையான பரிமளம் கல்யாணம் விசாரிக்க அவர்கள் வீட்டிற்கு வந்தாள். அப்போது நடந்தவற்றை எல்லாம் அம்புஜம் அவளுடன் ஷேர் செய்துக்கொண்டாள். பரிமளம் மிருதுளாவைக்கூப்பிட்டாள்.
மிருதுளா வந்தாள்…
“என்ன சித்தி?”
“ஏன்டி நீ படிச்சவ தானே உங்க அப்பா காசு போடறார் உனக்கு பிடிச்ச புடவையையே எடுத்திருக்க வேண்டியது தானே ஏன் எடுக்கலை?”
“இதையேத்தான் நான் அம்மா கிட்ட சொன்னேன். அம்மா தான் பரவாயில்லைனா. நீ அம்மாட்ட கேளு.“
“உங்க அம்மா ஒரு இ.வா ஆனா நீ ஸ்டபேர்ன்னா இருந்திருக்கனும். அதுவும் இல்லாம ஏதோ எம்.காம் எக்ஸாமுக்காக நாளு மாசம் கழிச்சு போன்னு உன் மாமியாரும் அம்மாவும் சொன்னா உடனே தலையை ஆட்டுவியா? இதோ பருமா படிப்பும் இம்ப்பார்ட்டன்ட் தான் நான் இல்லனு சொல்லலை ஆனா எக்ஸாம் எப்ப வேனும்னாலும் எழுதிக்கலாம் வாழ்க்கை அப்படி இல்லை ஆரம்பத்திலேயே கோட்ட விட்டுட்டனா பின்ன அவ்வளவுதான் என்ன புரியரதா?”
“இப்போ நான் என்னப்பண்ணும் சித்தி?”
“அடுத்தத்தடவை இந்த பேச்சு வந்துதுனா நீ நவீன் கூட போவேன் எக்ஸாம் அப்பறம் எழுதிக்குவேன்னு சொல்லு அதுதான் உன் வாழ்க்கைக்கு சேஃப். உங்க மாமியார் என்னத்துக்கு உன்ன நாளு மாசம் பிடிச்சுவச்சுக்க பார்க்கரானு நினைக்கற…. கல்யாணமான முதல் வருடம் ஒருவரை ஒருவர் நன்னா புரிஞ்சுக்க வேண்டிய ரொம்ப முக்கியமான காலம் இந்த நேரத்துல உன்னை நவீனுடன் அனுப்பாமல் வீட்டில் வைத்துக்கொள்ள நினைக்கும் உன் புக்காத்து மனுஷாலோட எண்ணம் எனக்கு சரியாப்படலை“. உடனே அம்புஜம் …
“ஏன்டி பரி அவா ஆத்த பொன்னுகளே இல்லை அதனால கூட சொல்லிருக்கலாமோள்யோ!“
“அட போ அம்பு நீ சொன்னதெல்லாம் வச்சுப்பார்த்தா எனக்கென்னவோ இதுல ஏதோ அந்த பர்வதத்திற்கு உள்நோக்கம் இருக்குனு தோனறது“
இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போது பங்கஜமும் அம்புஜம் வீட்டிற்கு விஜயித்தாள். அவளும் விஷயங்களை சொல்லக்கேட்டதும் பரிமளம் சொல்வதுதான் சரி என்றாள். அப்பொழுது ஃபோன் அடித்தது. அம்புஜம் எடுத்தாள் …
“ஹலோ நான் அம்புஜம் பேசறேன்“
“ஹலோ. நல்லாருக்கேளா நான் நவீன் பேசறேன். அங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”
“ஓ மாப்ள நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம் நீங்க நல்லாருக்கேளா? நாங்க நேத்துதான் தாளிக்கு ஆர்டர் கொடுதுட்டு வந்திருக்கோம்.“
“நான் நன்னா இருக்கேன். ஹோ! ஈஸ் இட்!. குட். மிருதுட்ட பேசலாமா“
“ஓ தாராளமா. சாரி… இதோ குடுக்கறேன்”
என்று மிருதுளாவிடம் ரிசீவரை கொடுத்துவிட்டு அனைவரும் உள் ரூமிர்க்குள் சென்று பேசத்தொடங்கினார்கள். அனைவரும் சென்றபின் மிருதுளா…
“ஹலோ“
“ஹாய். எப்படி இருக்க?”
“நல்லாருக்கேன் நீங்க எப்படி இருக்கேங்கள்?”
“நன்னாருக்கேன் நான் பிப்பிரவரி பதினைந்தாம் தேதி ஊருக்கு வந்திடுவேன். இருபது நாள் தான் லீவு ஸோ மார்ச் ஏழு அங்கிருந்து கிளம்பனும். புடவை தாளி எல்லாம் எடுத்தாச்சாமே!“
“ஆமாம் நேத்து தான் எடுத்துண்டு வந்தோம்“
“எங்க அம்மா சொன்னா ஏதோ உனக்கு மே மாசம் எம்.காம் எக்ஸாம் இருக்காமே அதனால நீ அத முடிச்சிட்டு தான் என் கூட வருவயாமே அப்படியா?”
“இல்லை நான் அப்படி எதுவுமே சொல்லலை. நான் கல்யாணம் முடிஞ்சதும் உங்க கூடவே வந்துடறேன்“
“ஈஸ் இட்!! அப்போ எக்ஸாம்?”
“பரவாயில்லை நான் அதை டிசம்பரில் எழுதிக்கறேன்”
“ஓகே நான் அப்போ வீடுப்பார்க்கட்டுமா?”
“எஸ் தாராளமா பாருங்கோ“
“ஓகே தென் டேக் கேர் பை மிருது.“
“ஓகே பை பை“
நவீனுடன் ஓப்பனாக பேசியது ஏதோ பெரிய விஷயம் சாதித்ததுப்போல இருந்தது மிருதுளாவிற்கு. அவள் தன் சித்திகளிடம் தான் திருமணம் முடிந்ததும் நவீனுடன் போவதாக கூறி மகிழ்ந்தாள். அதற்கு பரிமளம்…
“நீ இன்னைக்கு நவீனிடம் சொன்னதுக்கு உன் மாமியார் ஆர் மாமனாரிடமிருந்து நாளை ரியாக்ஷன் வந்தால் தென் அவா ஏதோ காரணமா தான் உன்னை அனுப்பாமலிருக்க பார்க்கரானு கன்ஃபார்ம் ஆகிடும்“
“அப்போ அவா நாளைக்கு எங்கள்ட்ட மறுப்படியும் இதப்பத்திப்பேசுவாளா?” என்றாள் அப்பாவி மிருதுளா.
“நிச்சயமா பேசுவா பாறேன்” என்றால் பங்கஜம்.
பரிமளத்திற்கும் , பங்கஜத்திற்கும் கூறப்புடவையை காண்பித்தாள் அம்புஜம். பரிமளம்… அம்புஜத்திடம் ஏமாறாமல் இருங்கோ என்று எச்சரித்து பின் பங்கஜத்துடன் சேர்ந்து அவள் வீட்டுக்கு இருவரும் சென்றனர்.
அடுத்தநாள் பரிமளமும் பங்கஜமும் சொன்னது போல ஈஸ்வரன் பர்வதம் ஃபோன் செய்தார்களா? இல்லையா? மேலும் என்னவெல்லாம் நடக்கவிருக்கிறது என்பதைப்பற்றி வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருந்து தெரிந்துக்கொள்வோம்.
தொடரும்……