ராசாமணி வீட்டு வாசலில் இரண்டு வேன்கள் வந்து நின்றது. அனைவரும் சாப்பிட்டு வீட்டை சுத்தம் செய்து விட்டு கிளம்பினர். பெண்கள் எல்லாரும் ஒரு வேனிலும் ஆண்கள் எல்லாரும் ஒரு வேனிலும் என்று அமரச் சொன்னார்கள். அப்போது நவீன்
“பெரியப்பா லேடிஸ் மட்டும் ஒரு வண்டியில் வேண்டாம் நாம யாராவது ரெண்டு மூணு பேரும் அவா வண்டியில் போவோம். ஃபார் சேஃப்டி”
“ஓகே! ஓகே! நவீன் உனக்கு உன் ஆத்துக்காரிக் கூட போகணும் அவ்வளவு தானே சரி வா நாம ரெண்டு பேருமே இந்த வண்டில பொம்மனாட்டிகளுக்குத் துணையா போகலாம்”
“அச்சச்சோ பெரியப்பா அதுக்காக நான் சொல்லலை. நீங்க வேற யார வேணும்னாலும் உங்க கூட வரச் சொல்லிக்கோங்கோ நான் அந்த வண்டிலயே வந்துக்கறேன்”
என்று நவீன் சொன்னதைக் கேட்டதும் மிருதுளா தன் மனதில்
“எனக்கு இங்க இருக்கிறவாள்ல இரண்டு மூணு பேரை தான் தெரியும் உங்க அம்மாவும் எனக்கு மத்தவாள இன்ட்ரொ பண்ணி வைக்க மாட்டா. என் கூட உட்காரவும் மாட்டா. நீங்க வரேன்னு சொன்னதும் சந்தோஷமா இருந்தது ஆனா இப்போ இப்படி பல்டி அடிக்கறேளே நவீ. ப்ளீஸ் இந்த வேன்லயே வாங்கோளேன். கடவுளே நவீயை இந்த வேன்லயே வர வைப்பா”
என வேண்டிக் கொண்டிருக்கையில் சொர்ணம் அத்தை
“என்ன மிருது உன்ன விட்டு பிரிஞ்சிருக்க மனசில்லாம நம்ம கூடவே வந்துட்டான் உன் ஆத்துக் காரன்?”
“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை அத்தை.”
“அப்படியா? அடிப் பொண்ணே நாங்களும் உன் வயசைத் தாண்டி வந்தவா தான்”
நவீனும், ராசாமணியும் தங்கள் வீட்டுப் பெண்களின் பாதுகாப்புக்காக அவர்களுடன் அவர்கள் வேனிலே ஏறி அமர்ந்தனர். ஒருவழியாக இரண்டு வேன்களும் திருக்கடையூரை நோக்கி பயணிக்கத் துவங்கியது. வண்டி நகர்ந்து ஒரு ஒன்றரை மணி நேரமானதும் மிருதுளாவிற்கு வாந்தி வர அதை சொன்னால் வண்டியை நிறுத்த வேண்டி வரும் மேலும் அனைவருக்கும் நேரம் வீணாகி விடுமே என்று அடக்கிக் கொண்டிருந்தாள். இரண்டரை மணி நேரமானதும் வண்டியை ஒரு டிக்கடை முன் நிறுத்தினார் டிரைவர். பிரயாணம் செய்பவர்களில் பாதிப் பேர் வயதானவர்கள் என்பதால் மூன்று மணி நேரம் அமர்ந்தே வந்ததில் கை கால் எல்லாம் வலிக்க ஆரம்பித்தது. வண்டி நின்றதுமே எவ்லாரும் இறங்கி சற்று நேரம் நின்றிக் கொண்டிருந்தனர். மிருதுளாவும் வேகமாக இறங்கி வேனின் பின் பக்கமாகச் செல்வதைப் பார்த்த நவீன் அவளை கூப்பிட்டுக் கொண்டே பின்னால் சென்றான். அவள் ஒரு மரத்தின் கீழ் வாந்தி எடுத்ததைப் பார்த்த அத்தை லக்ஷ்மி நவீன் பின்னால் தண்ணீர் பாட்டிலுடன் சென்றார்.
நவீனும் அத்தையும் மிருதுளாவின் அருகில் சென்றதும் நவீன் அத்தையிடமிருந்த தண்ணீர் பாட்டிலை மிருதுளாவிடம் கொடுத்தான். அவளும் அதை வாங்கிக் கொண்டு வாயை நன்றாக கொப்பளித்து, முகத்தையும் அலம்பிக் கொண்டாள். மூவருமாக வேனிற்கு திரும்பி நடந்து வரும்போது
“ஏன்மா மிருது ஏழு மாசமாக போறதே நீ என்னத்துக்கு இப்படி வந்த? பேசாம ஆத்துலயே ரெஸ்ட் எடுத்துண்டிருக்க வேண்டியது தானே”
“இல்ல அத்தை பரவாயில்லை. பெரியவா ஆசிர்வாதம் கிடைக்க நானும் என் குழந்தையும் புண்ணியம் பண்ணிருக்கணும்.”
அவர்கள் வேன் அருகே வந்ததும் அனைத்துச் சொந்தங்களும் அத்தை சொன்னதையே சொன்னார்கள்.
தன் அதிகார வர்க புகுந்த வீட்டின் கட்டளைப்படி நடக்க வேண்டியதால் வந்தேன் என்பதை வெளியே யாரிடமும் ஏன் தன் தாயிடம் கூட சொல்லாமல் அவர்களை விட்டுக் கொடுக்காமல் பேசி சமாளித்தாள் மிருதுளா. அது அத்தனையையும் கேட்டுக் கொண்டு மட்டுமமே இருந்தனர் நவீனும் அவன் பெற்றோரும், தம்பிகளும்.
அனைவரும் வேனில் மீண்டும் ஏறினர். பயணம் தொடர்ந்தது. சொர்ணம் அத்தை சும்மா இல்லாமல்
“ஏய் பர்வதம் மிருதுளாவை ஆத்துலேயே விட்டுட்டு வந்திருக்கலாமோனோ!! பாவம் என்னத்துக்கு அவள இந்த மாதிரி நேரத்துல இப்படி அலக்கழிக்கணும்”
“என்னமோ நான் அவளை பஸ்ஸுல வர வெச்சா மாதிரின்னா சொல்லறேங்கள்?. ஜம்மன்னு சொகுசா நமக்குன்னு இருக்கற வேன்ல நம்ம கூட தானே வரா இதுல என்ன அலக்கழிப்பு இருக்குன்னு எனக்குப் புரியலை”
“ஆமா உன் கிட்ட போய்ச் சொன்னேன் பாரு என்ன சொல்லணும்.”
“ஆமாம் ஆமாம்”
“ஏன்டா நவீன் நீயாவது உன் ஆத்துக்காரியை ஆத்துலயே விட்டுட்டு வந்திருக்கலாமோனோ?”
“செஞ்சிருக்கலாம் அத்தை ஆனா அவ மட்டும் தனியா இருக்கணுமேன்னு தான் யோசிச்சோம்…”
“ஏன் அவ அம்மா ஆத்துல விட்டுட்டு வந்திருக்கலாமே டா!”
“அவ வந்ததுனாலன்னு இப்போ உங்களுக்கென்ன? மொதல்ல அதச் சொல்லுங்கோ”
“அவ வரதுனால எனக்கு ஒண்ணுமில்லை பர்வதம். பாவம் வயத்துல புள்ளைய வச்சுண்டு இப்படி கஷ்டப்பட்டு உட்கார்ந்துண்டு வரணுமேன்னு தான் சொன்னேன் மா”
“அத்தை ப்ளீஸ் விடுங்கோ. எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை இதோ இன்னுமொரு அரை மணி நேரத்துல திருகடையூர் வந்திடுமே அப்புறம் என்ன அங்கப் போய் ரெஸ்ட் எடுத்துண்ட்டா போச்சு”
“ஏதோ என் மனசுல பட்டதைச் சொன்னேன்டி மா”
என்று சொர்ணம் அத்தையும், கூட இருந்த சொந்தங்களின் குரல்களும் மிருதுளாவிற்காகவும் அவள் வயிற்றில் வளரும் சிசுவிற்காகவும் ஒலித்தும் அவர்கள் எவரின் குரலையும் துளிக் கூட மதிக்கவில்லை பர்வதம். ஆனால் மிருதுளாவிற்கு தனக்காக ஒலித்த அவர்களின் குரல் மகிழ்ச்சியைத் தந்தது. மிருதுளாவிற்காகவும் அவர்கள் வீட்டின் அடுத்தத் தலைமுறையின் முதல் வாரிசுக்காகவும் நவீன் வீட்டினர் இவைகளை எல்லாம் யோசித்திருக்க வேண்டும். என்னச் செய்ய மிருதுளா அவஸ்தைப் படட்டும் என்று நினைப்பவர்களிடம் வேறெதை எதிர்பார்க்கக்கூடும்.
திருகடையூரிலுள்ள ஒரு கல்யாண மண்டபத்தின் முன் இரண்டு வேன்களும் நின்றது. அனைவரும் இறங்கி அவரவர் சாமான்களைத் தூக்கிக் கொண்டு உள்ளேச் சென்றனர். ஈஸ்வரன் பர்வதம் மட்டும் ஜம்பமாக கை வீசிக் கொண்டுச் சென்றனர் ஏனெனில் அவர்கள் பைகளையும் சேர்த்துத் தூக்கி வந்தது நவீன், ப்ரவின் மற்றும் பவின்.
உள்ளேச் சென்றதும் அவரவர் ஒவ்வொரு அறைக்குள் சென்றனர். மிருதுளாவும் நவீன் பின்னாலேயேச் சென்றாள். அவர்கள் குடும்பத்திற்கு ஒரு அறைக் கொடுக்கப்பட்டிருந்தது. அதனுள் சென்றதும் நவீன் மற்றும் அவன் தம்பிகள் பைகளை எல்லாம் ஒரு மூலையில் வைத்து விட்டு வெளியேச் சென்றனர் அப்போது நவீன் மிருதுளாவிடம்
“மிருது நீ பேசமா இங்கயே ரெஸ்ட் எடுத்துக்கோ சரியா. இந்தா தண்ணி பாட்டில் வச்சுக்கோ”
“ஓகே நவீ நான் கொஞ்ச நேரம் படுத்துக்கறேன்”
“ஓகே. அவள பாத்துக்கோங்கோ”
என்று தன் பெற்றோரிடம் கூறிவிட்டு நவீன் வெளியேச் சென்றதும் மிருதுளா மெல்ல தரையில் ஒரு பெட்ஷிட் விரித்துப் படுத்துக் கொண்டாள். அவள் படுத்துக் கொள்ளும் வரை சும்மா இருந்துவிட்டு அவள் படுத்ததும்…
“என்னதிது வந்த இடத்தில் இப்படியா படக்குன்னு படுத்துக்கறது? என்ன படுத்துண்டு ரெஸ்ட் எடுக்கவா வந்திருக்கோம். எல்லாரும் அங்க அவாஅவா பெட்டியை எல்லாம் ரூம்ல வச்சுட்டு ஒண்ணா உட்கார்ந்து பேசிண்டிருக்கா அங்க வராம இங்க படுத்துண்டா எப்படி? அதுவும் அப்பா உட்கார்ந்திருக்காளேன்னு கூட மரியாதை இல்லாம இது என்ன பழக்கமோ? ஏன்னா வாங்கோ நாம போய் எல்லாரோடையும் உட்கார்ந்து பேசுவோம் இங்க நம்மள விட வயசுல மூத்தவா எல்லாம் இருக்கா அவா படுத்துக்கட்டும் நாம போவோம் வாங்கோ”
என்று கூறிவிட்டு பர்வதமும் ஈஸ்வரனும் மிருதுளாவின் பதிலுக்குக் கூட காத்திராமல் ரூமை விட்டு வெளியே சென்று அனைவருடன் பேசலானார்கள்.
பர்வதம் சொல்லிச் சென்றதை கேட்டதும் மிருதுளா தன் வயிற்றை தடவிக்கொண்டே தன் பிள்ளையுடன் பேசினாள்
“செல்லம் என்னாட இது அம்மா என்னமா தப்புப் பண்ணிட்டேன். படுத்தது தப்பா? பாப்பாக்காக தானே அம்மா படுத்துகிட்டேன். நாம வந்திருக்கவே கூடாது பேசாம வீட்டிலயே இருந்திருக்கலாம். அம்மாவும் கஷ்டபட்டு உன்னையும் கஷ்டப்படுத்தி ச்சே…பரவாயில்லை கண்ணு நாளைக்கு நம்மள ஒரு நல்ல தாத்தாவும் பாட்டியும் ஆசிர்வாதம் பண்ணுவா அது தான் நீ நல்லபடியா இந்த பூமில வாழறதுக்கு வேண்டியதில் முக்கியமானது அதுனால கொஞ்சம் பொறுத்துப்போம் கண்ணுக்குட்டி. சரியா. சமத்துப் பாப்பா”
“ஏய் மிருது யார் கிட்ட பேசிண்டிருக்க? அப்பா அம்மா எங்க?”
“அவா ரெண்டு பேரும் வெளில உட்கார்ந்து பேசிண்டிருப்பா..நீங்க பார்க்கலையா?”
“இல்லையே!!! வெளியே எல்லாரும் ஹோட்டல்ல மத்தியச் சாப்பாடு சாப்ட்டுட்டு அப்படியே கோவிலுக்கு நடந்துப் போகப்போறா . மே பி அந்தக் கூட்டத்துல இருந்திருக்கலாம் நான் பார்க்கலை. உன்னை காணலை அது தான் பார்க்க வந்தேன். நீ தனியா பேசிண்டிருக்க?”
“நான் தனியா எல்லாம் பேசலை என் குழந்தைக் கூடப் பேசிண்டிருந்தேன். நீங்க சாப்டலையா? கோவிலுக்கு போகலையா? கோவில் தூரமா இருக்கா என்ன?”
“ஓ!!! வயத்துக்குள்ள இருக்குற குட்டி இப்பவே அம்மாவோட பேச ஆரம்பிச்சாச்சா? இல்ல மிருது கிட்டக்க தான். உன்னால முடியும்னா வா போயிட்டு வருவோம் இல்லாட்டிப் பரவாயில்லை நான் உனக்கு சாப்பாடு எடுத்துண்டு வரேன் அன்ட் கோவிலுக்கு நாளைக்கு காலைல போகலாம்”
“இல்லப்பா நான் மெதுவா நடந்து வரேன். வாங்கோ போகலாம்”
இருவருமாக ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கே அனைவரும் வரிசையாக அமர்ந்திருந்தனர். நவீன் தன் அம்மாவிடம்…
“நீங்க எல்லாரும் சாப்பிட வரும்போது மிருதுவையும் கூட அழைச்சிண்டு வந்திருக்கலாமில்லையா? நான் போய் கூட்டிண்டு வரலைன்னா அவ பாட்டுக்கு தனியா அங்கேயே இருந்திருப்பா”
“அவதான் படுத்துக்கணும்ன்னு படுத்துண்டுட்டாளே அப்புறம் எப்படி வரச்சொல்லறது?”
“டேய் நவீன் நான் கூட உன் அம்மாட்ட கேட்டேன். உன் புள்ளையும் மாட்டுப் பொண்ணும் சாப்பிட வரலையான்னு. அதுக்கு மிருதுளா தூங்கிண்டிருக்கான்னும் அவளுக்கு துணைக்கு நீ உட்கார்ந்திருக்கன்னும் இல்லையா சொன்னா. ஏன் டி பர்வதம் அப்படித் தானே சொன்னாய் நீ”
“ஆமாம் நான் பார்க்கும் போது அவ தூங்கிண்டு தான் இருந்தா. அவ்வளவு தான் எனக்குத் தெரியும். எங்க கிட்ட ஏதாவது சொல்லிட்டுச் செஞ்சா தானே எங்களுக்கும் ஏதாவது தெரியும்”
“சரி சரி அத்தை சாப்பாடு எப்படி இருக்கு? சாப்ட்டதும் கோவிலுக்கு போறோமாமே?”
“ஆமாம் மிருது. ஆனா கோவில் நடை தொறக்க இன்னும் ஒன்றரை மணி நேரமிருக்கே”
“எல்லாரும் சாப்ட்டு போக நேரம் சரியா இருக்கும் அத்தை”
“சரி சரி இப்படியே பேசிண்டே இருக்காம போய் ரெண்டு பேரும் சாப்பிடுங்கோ. போங்கோ”
“ஓகே அத்தை”
இருவருமாக சாப்பிட்டு பின் மெதுவாக நடந்து கோவிலுக்குச் சென்று கடவுளை நன்றாக வேண்டிக்கொண்டு அனைவருடனும் பேசிக் கொண்டே திரும்பி மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.
மறுநாள் காலை அறுபதாம் கல்யாணம் பார்த்து தம்பதிகளிடம் வயதில் சிறியவர்கள் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்கள். பெரியவர்கள் தம்பதிகளை ஆசிர்வாதம் செய்தார்கள். நவீனும் மிருதுளாவும் அவர்கள் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். மதியம் கல்யாண சாப்பாடு ஆனதும் மீண்டும் அனைவரும் வேனில் ஏறினர். வேன் ராசாமணி வீட்டை நோக்கி புறப்பட்டது. அனைவரும் உண்ட மயக்கத்தில் கண் அசந்தனர். சற்று நேரத்தில் டமால் என்று பலத்த சத்தம் கேட்டு விழித்துக் கொண்டவர்களுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. பெண்களும், நவீனும், ராசாமணியும் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த கிராமத்திலிருந்த அனைவரும் வேனை சூழ்ந்தனர்.
தொடரும்….